அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் – திருவாய் மலர்ந்தார் பிள்ளையான்

” அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது, சர்வதேசத்திடம் முறையிடுவது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடல்ல. சிதைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்புக்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளர்.”

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற செழுமைமிக்க 100 நகரங்கள் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்து பெரிதாகப் பேசப்படுகின்றது. உண்மையில் நானும் சிறைச்சாலையில் இருந்தவன் என்ற அடிப்படையில் அவர்களின் உள்ளக் குழுறலை அறிவேன்.

சிறைச்சாலைக்குரிய ஒரு அமைச்சர் சென்று அவ்வாறான அசம்பாவிதத்தை நடத்தியிருந்தால் அது மிகப் பெரிய பிழை. கண்டிக்கப்பட வேண்டிய விடயம். நாங்களும் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால் எங்களில் சிலரின் நிலைப்பாடு என்னவென்றால் நாங்கள் இவற்றைக் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றோமென்று நினைக்கிறார்கள்.
நிச்சயமாக அரசாங்கம் அவ்வாறு இராது. அதற்கான விசாரணை நடக்கின்றது. அமைச்சர் தன் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நிச்சயமாக அந்த விசாரணை சரியாக நடைபெறும். இந்த விடயத்தை நாங்களும் வன்மையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்துக்குள்ளிருந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்.

ஆகையால் அந்த ஒரு விடயத்தை வைத்து இந்த நாட்டில் சிந்தனை ரீதியில் குழப்பம் விளைவிக்க எண்ணுபவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதும், சர்வதேசத்திடம் முறையிடுவதுமாக இருக்கின்றார்கள். அது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடல்ல.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *