வன்முறை, பயங்கரவாதத்துக்கு ஆஸி. மண்ணில் இடமில்லை…!

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலை பயங்கரவாத செயலாக பொலிஸார் அறிவித்துள்ளனர் எனவும், பயங்கரவாத எதிர்ப்புப் பணிக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது எனவும் பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

மேற்படி தாக்குதல் சம்பவம் மத தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்திய நபர் அரசு மொழியில் பேசும் காணொளியும் வெளியாகியுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ள கிருஸ்தவ மதகுரு, தமது சொற்பொழிவுகளின்போது இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

“ எமது சமூகத்தின் வன்முறை மற்றும் தீவிரவாதத்துக்கு இடமில்லை.” என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடுத்து என்ன? ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறும் மொட்டு கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அதேபோல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சி இரு அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என நாமல் உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் குறித்த மொட்டு கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ஜனாதிபதிக்கு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

ஈரானின் பதிலடி தாக்குதல் பேரழிவுக்கு வழிவகுக்கும் – ஆஸி. எச்சரிக்கை!

இஸ்ரேல்மீதூன ஈரானின் பதிலடி தாக்குதல் மத்திய கிழக்கு முழுவதும் பேரழிவை அதிகரிக்கக்கூடும் – என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தாக்குதல் சம்பவத்தையும் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

“ இந்த பொறுப்பற்ற தாக்குதல்களைத் தொடர வேண்டாம் என்று ஈரானுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்திருந்தது. மேலும் பல நாடுகளும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தன. இந்நிலையில் இதனை புறக்கணித்து ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஏற்க முடியாது.” -எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

“ இந்த விரிவாக்கம் இஸ்ரேல் மற்றும் முழு பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இது மத்திய கிழக்கு முழுவதும் அதிக உறுதியற்ற தன்மை மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்.” எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைத்தேர்தலில் Cook தொகுதியை தக்கவைத்தது லிபரல் கட்சி

முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் தொகுதியான சிட்னி தெற்கில் உள்ள Cook தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வேட்பாளர் Simon Kennedy வெற்றிபெற்றுள்ளார்.

ஸ்கொட் மொரிசன் அரசியலில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விலகினார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரின் தொகுதியான Cookஇல் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

பசுமைவாதிகள், சுயேச்சைக்குழுக்கள் என்பன போட்டி இட்டிருந்தாலும் இத்தேர்தலில் லேபர் கட்சி களமிறங்கவில்லை.
1975 முதல் இத்தொகுதி லிபரல் கட்சி வசம் உள்ளது. எனவே, லிபரல் கட்சி வேட்பாளர் அமோக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அவர் வெற்றிபெற்றுள்ளார்.

 

 

 

 

வடகொரியாவை காக்கும் ரஷ்யாமீது ஐ.நாவில் ஆஸி. பாய்ச்சல்!

ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அப்பட்டமாமீறி செயற்பட்டு பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்படும் வடகொரியாவை பாதுகாக்கும் நோக்கில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவது தொடர்பில் ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஐ.நாவுக்கான ஆஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடப் பிரதானியான James Larsen இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

“ வடகொரியாமீது தடைகளை விதித்து நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களையும் ஆஸ்திரேலியா ஆதரிக்கின்றது.
வடகொரியாவின் செயற்பாடுகள் இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி, உலக அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகின்றது. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நடைமுறைகளையும் வடகொரியா அப்பட்டமாக மீறிவருகின்றது.

அந்நாட்டுடன் ரஷ்யா சட்டவிரோத கொடுக்கல் – வாங்கல்களில் ஈடுபட்டுவருகின்றது. இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – எனவும் ஆஸ்திரேலிய பிரதிநிதி James Larsen குறிப்பிட்டுள்ளார்.

Cook தொகுதியில் நாளை இடைத்தேர்தல்!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசனின் அரசியல் கோட்டையெனக் கருதப்படும் Cook தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. எனினும், முன்கூட்டிய வாக்கு பதிவில் குறைந்தளவான வாக்காளர்களே வாக்களித்துள்ளனர் என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இடைத்தேர்தலில் வாக்களிக்க Cook
தொகுதியில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் தகுதிபெற்றுள்ளனர்.

கூட்டாட்சி தேர்தலைவிடவும் இடைத்தேர்தலின்போது வாக்களிப்பு வீதம் குறைவாக காணப்படுவது இயல்பு என்றபோதிலும் இது மிகவும் குறைவாக உள்ளது எனவும் கண்காணிப்பு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஏப்ரல் 10 ஆம் திகதிவரை 18 ஆயிரத்து 447 பேரே முன்கூட்டிய வாக்கு பதிவில் ஈடுபட்டுள்ளனர். சரியான காரணங்கள் இன்றி இடைத்தேர்தலில் வாக்களிக்க தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Cook தொகுதியில் 16 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்கொட் மொரிசன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் பதவி விலகி, அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார்.

 

இஸ்ரேல்மீதான ஈரானின் பதிலடி தாக்குதலை தடுக்க ஆஸ்திரேலியா முயற்சி!

இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதலை தொடுக்கவுள்ளது எனக் கூறப்படும் நிலையில், அவ்வாறானதொரு நகர்வில் ஈடுபடவேண்டாம் என ஈரானிடம் வலியுறுத்தியுள்ளது ஆஸ்திரேலியா .

இவ்விவகாரம் தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசி ஊடாக உரையாற்றியுள்ளார்.

“ இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பதற்றநிலைமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படவேண்டாம். பிராந்தியத்தில் ஸ்தீரத்தன்மையை மேம்படுத்துவதற்கே தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்த வேண்டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம்மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்காவிட்டாலும் இஸ்ரேல்தான் இந்த செயலில் ஈடுபட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

அமைச்சு பதவியை துறந்தார் Geoff Brock! சபாநாயகரும் இராஜினாமா!!

தெற்கு ஆஸ்திரேலிய அரசின் அமைச்சரவையில் இருந்து Geoff Brock வெளியேறியுள்ளார். தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததுடன், இருதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே தனது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாக Geoff Brock இன்று அறிவித்தார்.

பதவி விலகல் தொடர்பான அறிவித்தலை அவர் வெளியிடும்போது அழுதுவிட்டார். அவரின் விலகலையடுத்து அமைச்சரவையை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

74 வயதான Geoff Brock அமைச்சரவையில் இருந்து விலகினாலும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார். அடுத்த தேர்தலிலும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிப்பார்.

அதேவேளை லிபரல் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் Dan Cregan ,லேபர் அரசின் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படுவார் என தெரியவருகின்றது. அமைச்சரவையில் இடம்பெறுவதற்காக அவர் சபாநாயகர் பதவியை துறக்கவுள்ளார்.

சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: அதிகாரம் யார் வசம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக்கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக்கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவுசெய்யப்பட்டார். இக்கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பால் ஆஸ்திரேலியா மகிழ்ச்சி…!

ஜூலியன் அசாஞ்சேமீதான வழக்கு கைவிடப்படலாம் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.

ஜூலியன் அசாஞ்சேவுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கு ஆஸ்திரேலியா சகல வழிகளிலும் முயற்சித்த நிலையில் தற்போது சாதகமான அறிகுறி தென்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அசாஞ்சேயின் விடுதலையை ஆஸ்திரேலியர்கள் விரும்புகின்றனர், அதற்கான இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலியன் அசாஞ்சேயை விடுவிக்க அமெரிக்கா பச்சைக்கொடி?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை கைவிடுமாறு ஆஸ்திரேலியா விடுத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுவருகின்றது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலியாவின் மேற்படி கோரிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜோ பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் அசாஞ்சே (52) கடந்த 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பொலிஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ இரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

“ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.” என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்” – வெளிவிவகார அமைச்சரின் பரிந்துரைக்கு எதிர்க்கட்சி தலைவர் போர்க்கொடி!

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க முடியும் என்ற ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong இன் கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

” வெளிவிவகார அமைச்சரின் மேற்படி கருத்து முற்றிலும் நியாயமற்றது. உள்நாட்டு அரசியல் வெற்றிக்காக எமது நட்பு நாடான இஸ்ரேலுடனான உறவை சீர்குலைக்க முற்படுவதை ஏற்கமுடியாது.” – என்வும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

” எனது 22 வருடகால நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில், வெளிவிவகார அமைச்சர் ஒருவரின் பொறுப்பற்ற செயற்பாடே இது.” – எனவும் மீது கடும் சீற்றத்தை பீட்டர் டட்டன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, லேபர் அரசு யூத விரோத போக்கை ஊக்குவித்துவருகின்றது எனவும் அவர் சாடியுள்ளார்.

Lakemba பள்ளிவாசலில் அரசியல்வாதிகளுக்கு கதவடைப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசலான Lakemba மசூதியில் இன்று விசேட ரமலான் தொழுகை இடம்பெற்ற நிலையில், அரசியல் பிரமுகர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

காசா போர் தொடர்பில் ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசு உரிய அணுகுமுறையை பின்பற்றவில்லை என முஸ்லிம் சமூகம் மத்தியில் அதிருப்தி அலை உருவாகியிருந்த நிலையில், பள்ளிவாசல் நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

Lakemba பள்ளிவாசலில் ரமலான் பண்டிகை காலை தொழுகை சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றுகூடுவார்கள். நிவ் சவூத் வேல்ஸ் மாநில பிரீமியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

எனினும், காசா போர் விவகாரத்தைக் கருத்திற்கொண்டு இம்முறை அரசியல் பிரமுகர்களை அழைப்பதில்லை என்ற முடிவை பள்ளிவாசல் நிர்வாகம் எடுத்திருந்தது. இதனால் இன்றைய தொழுகையில் இஸ்லாமியர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

பாலஸ்தீனத்தில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் போரில் இவ்வாறு பலியானவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
காசாவில் நடைபெறும் கொடூர போர் ஆஸ்திரேலியாவில் மட்டும் அல்ல உலகவாழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Tasmania மாநிலத்தில் லிபரல் கட்சி ஆட்சி மலர JLN கட்சி நேசக்கரம்!

Tasmania மாநிலத்தில் லிபரல் கட்சி ஆட்சியமைப்பதற்கு Jacqui Lambie Network (JLN) கட்சி நேசக்கரம் நீட்டியுள்ளது. இது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Tasmania மாநிலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு 15 ஆசனங்களே கிடைக்கப்பெற்றன. அறுதிப்பெறும்பான்மை பலத்துக்கு மேலும் 3 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அதற்கான பேச்சுகள் இடம்பெற்றன.

இந்நிலையிலேயே JLN கட்சியின் மூன்று உறுப்பினர்கள், அரசின் திட்டங்கள் மற்றும் சட்டமூலங்களுக்கு ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளனர் என்று மாநில premier Jeremy Rockliff தெரிவித்தார்.

‘அனைத்து தரப்பினரும் நல்லெண்ணத்துடனும் நம்பிக்கையுடனும் இந்த ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளனர், மேலும் இந்த ஒப்பந்தம் டாஸ்மேனிய மக்கள் எதிர்பார்க்கும் நீண்ட கால உறுதியையும் ஸ்திரத்தன்மையையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.” எனவும் கூறினார்.

மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி தேர்தலில் 10 ஆசனங்களைக் கைப்பற்றியது. தோல்வியின் பின்னர் மாநில தலைவரும் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் என்பது பயங்கரவாத அமைப்பு – பாலஸ்தீன நிர்வாகத்தில் ஒருபோதும் பங்காளியாகக்கூடாது!

ஹமாஸ் என்பது பயங்கரவாத அமைப்பாகும். பாலஸ்தீன நிர்வாகத்தில் அவர்கள் அங்கம் வகிக்க கூடாது – என்று ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனரத்தை ஆதரிப்பது தொடர்பில் கூட்டாட்சி அரசுக்குள் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றபோதிலும், இரு நாடுகள் தீர்வு முன்மொழிவு ஏற்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வாக இந்த முன்மொழியை ஆஸ்திரேலியா நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனர்களும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும். அதற்கு அரசியல் தீர்வே சிறந்த வழிb எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் என்பது ஒரு சட்டவிரோத அமைப்பு. எதிர்கால பாலஸ்தீனத்தில்கூட அந்த அமைப்பு அரசியல் கட்சியாக அங்கம் வகிக்ககூடாது எனவும் பிரதமர் இடித்துரைத்துள்ளார்.

சுயாதீன பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கலாம் – வெளிவிவகார அமைச்சர் கருத்து

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் Penny Wong தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிப்பதன்மூலம் அப்பகுதியில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரலாம்.” எனவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

” மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இது விடயத்தில் சர்வதேச வகிபாகம் அவசியம். உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதேபோல ஹமாஸால் பயணக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.” எனவும் Penny Wong
குறிப்பிட்டுள்ளார்.

12 ஆண்டுகளாக குடியேற்றக் காவலில் இருந்த எகிப்து நாட்டு அகதி விடுவிப்பு!

ஆஸ்திரேலியாவில் சுமார் 12 வருடங்களாக குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த எகிப்து நாட்டு அகதியொருவர் (Sayed Abdellatif ) விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த அகதிக்கு தற்காலிக பாதுகாப்பு விசா வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பு மையத்தில் இருந்து வெளியேறிய அவர் இன்று தனது குடும்பத்தாருடன் இணைந்தார்.

Sayed Abdellatif 2012 ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம்கோரி வந்துள்ளார்.

பாதுகாப்பு மதிப்பீட்டுகளின் அடிப்படையில் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இதனையடுத்து குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையிலேயே 12 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு விடிவு கிட்டியுள்ளது.

“ நானும் எனது குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருக்கிறோம். தேவையில்லாமல் பிரிந்து இருந்த எங்கள் குடும்பம் பல வருடங்கள் கழித்து மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது, நாங்கள் மிக நீகாலமாக இதற்காக காத்திருந்தோம்.” – என்று விடுவிக்கப்பட்டுள்ள
Sayed Abdellatif தெரிவித்தார்.

ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகின்ற நிலையில், இன்று
Sayed Abdellatif விடுவிக்கப்பட்டுள்ளமை அவரது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசியல் களம் புகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்?

அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் ஊடாகவே இவர்கள் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

நடிகை ஒருவரும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
அதேபோல தொழில்சார் நிபுணர்கள் சிலரும், முன்னாள் படை அதிகாரிகளும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். முன்னாள் இராணுவ தளபதி தயாரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளார். மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியிலும் பல பிரபல ங்கள் களமிறங்கவுள்ளன.

AUKUS கூட்டணியின் 2ஆம் கட்டத்தில் இணைய ஜப்பானுக்கு அழைப்பு: லிபரல் கட்சியும் ஆதரவு!

AUKUS பாதுகாப்பு கூட்டணியின் 2ஆம் கட்டத்தில் ஜப்பான் இணைய வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியும் அதனை ஆதரித்துள்ளது.

“ இக்கூட்டணியில் ஜப்பான் இணைவது சிறந்த முடிவாக அமையும்.” -என்று எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தெரிவித்தார்.

AUKUS கூட்டணியில் அணுசக்தி தொடர்பான திட்டங்களுக்கு ஜப்பான் இணக்கம் தெரியவில்லை. முதல்கட்டமாகவே அணு ஆயுத விவகாரம் உள்ளது. 2 ஆம் கட்டத்தில் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட விடயங்கள் இலக்கு வைக்கப்படவுள்ளன.

“ விண்வெளியில் நாம் செய்யும் வேலைகள், செயற்கை நுண்ணறிவு மூலம் நாம் செய்யும் வேலைகள், நிலத்தடி ஆய்வு என்பனவும் 2ஆம் கட்டத்தில் உள்ளன. எனவே, ஜப்பான் சிறந்த பங்காளியாக அமையும்.” -எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.

“ எமது பிராந்தியத்தில் அமைதியைக் காக்க முடியும் என்பதை உறுதிசெய்ய ஒருமித்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் இணைவதே சிறந்தது.” -எனவும் AUKUS சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஜப்பானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பலப்படுத்தப்படும்” – ஆஸி. பிரதமர்

AUKUS பாதுகாப்பு கூட்டமைப்பின் ஓர் அங்கமாக தொழில்நுட்ப பகிர்வுக்காக ஜப்பான் இணைந்திருப்பது முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் இயற்கையான பரிணாமம் என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார். ஜப்பானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் பலப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த உதவிமூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் நான்காவது நாடாக கூட்டணியின் ஜப்பான் இணைந்ததாக அர்த்தப்படாது எனவும் பிரதமர் Anthony Albanese கூறினார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் 2021 இல் அமைக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு வழங்க வழிசமைத்துள்ளது. மேலும் இரண்டாவது அங்கமாக தொழில் நுட்ப ஒத்துழைப்பு உள்ளது.

“ ஜப்பானுடனான எங்கள் பாதுகாப்பு உறவு பலமாகவே உள்ளது. நாங்கள் அந்த பாதுகாப்பு உறவை மேம்படுத்தியுள்ளோம், ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் இணைந்து குவாட் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.” ஏன ஆஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.