சுகாதார அமைச்சருக்கு ஏற்பட்டுள்ள நிலை….

சுகாதார  அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளாராம். தனக்கு ஏன் இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக் குமுறல்களை கொட்டி தீர்த்துள்ளாராம்.

“ எனது அரசியல் வாழ்வில் பல அமைச்சுகளை வகித்துள்ளேன், ஆனால் தற்போது வகிக்கும் சுகாதார அமைச்சால் நிம்மதியை இழந்துவிட்டேன்.

தொலைபேசிக்கு 24 மணிநேரமும் அழைப்பு வருகிறது. மருந்து இல்லை, நிதி இல்லையென ஆயிரம் முறைப்பாடுகள், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தே களைத்துபோய்விட்டேன். இரவில் நித்திரைகூட வருவதில்லை. நித்திரை மாத்திரையை எடுத்துவிட்டே உறங்க செல்கின்றேன்,” என்று அழுது புலம்பியுள்ளாராம்.

அரங்கு நிறைந்த ரசிகர்களுடன் ‘மாஸ்டர்’!

கொரோனா லாக்டவுன் முடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில், சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

இதேநிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் விஜய் மற்றும் சிம்புவின் படங்களும் வெளியாகவுள்ளமையால் ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாண்டியன் ஸ்டோர் நடிகை தற்கொலை!

தமிழ்ச் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனால், தமிழக சின்னத்திரை மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமான சித்ரா, பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர் என்ற பிரபலத் தொடரிலும் நடித்து வந்துள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் இன்று (09) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுத்தியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான சம்யுக்தாவுக்கு விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

அரசியலை மையப்படுத்தி உருவாகிவரும் இந்தப் படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர், கடந்த ஜூலை மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் துக்ளக் தர்பார் திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மொடலிங் துறையில் சிறந்து விளங்கிய சம்யுக்தா, துக்ளக் தர்பார் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகவுள்ளார்.

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது”

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது” என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளமை தமிழக அரசியல் தளத்தில் பெரும் பரபரப் ஏற்படுத்தியுள்ளது.

2021 ஜனவரியில் கட்சி தொடங்கவுள்ளார் என ரஜினிகாந்த் அறிவித்ததைதத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்,

“கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான். கொடுத்த வாக்கில் இருந்து என்றுமே தவறமாட்டேன். நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி. தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி.

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும்.” என்றார்.

சூரரைப்போற்று: சூர்யா இடத்தில் நடிக்க ஹிந்தியில் போட்டி!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘சூரரைப்போற்று’ படத்தின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்க்ள பலர் போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.

இப்படம் ஏர் டெக்கான் நிறுவநர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், சூரரைப்போற்று படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள நிலையில், அதில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களான அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது எனத் தகவ்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளியன்று ‘மாஸ்டர்’ விருந்து!

லோகேஸ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த, மாஸ்டர் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகிவருகின்றது.

இன்று மாலை 6 மணிக்கு உத்தியோகபூர்வமாக வெளியான அத்தகவலின்படி, மாஸ்டர் பட ரீசர் எதிர்வரும் 14ஆம் திகதி தீபாவளியன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இத்தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் இணையங்களில் தெறிக்கவிட்டுள்ளனர்.

தமிழ்ச் சினிமா ரசிகர்கள் குதூகலம்; தமிழக திரையரங்குகள் நாளை முதல் திறப்பு! புதுப்படங்கள் வெளியாகத் தயார்!!

கொரோனா அச்சம் காரணமாக பல நாடுகளிலும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளை (10) முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளமையால் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர். அதேவேளை, 50 சதவீத இருக்கைகளுடனே திரையரங்குகளை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் திறந்த பின்னர் வரும் தீபாவளிக்கு பெரிய நட்சத்திரங்களில் திரைப்படங்களைத் திரையிடப்படாது எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம், எம்.ஜி.ஆர் மகன், பிஸ்கோத், இருட்டு அறையில் முரட்டு குத்து – 2, களத்தில் சந்திப்போம் ஆகிய 4 படங்களே திரைக்கு வரத் தயாராக உள்ளன என்று கூறப்படுகிறது. 

ஆனால், வி.பி.எப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் திரையரங்குகளைத் திறந்தாலும் புதிய படங்களை வெளியிடமாட்டோம் என பாரதிராஜா அறிவித்திருப்பது புது படங்கள் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திரையரங்க அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுகள் இன்னும் சமரசம் ஏற்படவில்லை எனத் தெரியவருகின்றது. 

அதேவேளை, புதிய படங்களைக் கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்கள் திரையிடப்படும் என திரையரங்க அதிபர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் வீரம், விசுவாசம், தனுஸின் அசுரன் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்துள்ளனர் என திரையரங்க அதிபர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதன் மூலம், புதிய திரைப்படங்களை எதிர்பார்த்துள்ள உலகம் முழுவதும் உள்ள தமிழ்ச் சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூள் கிளப்பும் கமலின் விக்ரம் பட ரீஸர்!

மாநகரம், கைதி, மாஸ்டர் என படங்களை இயக்கியுள்ள லோகேஸ் கனகராஜ், தற்போது கமல்ஹாசனை வைத்து புதிய படமொன்றை இயக்க ஆரம்பித்துள்ளார்.

கமலின் ராஜ் கமல் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர் நேற்று (07) பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்து அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

படத்தின் இயக்குநர் லோகேஸ் மற்றும் இசையமைப்பாளர் அனுருத் ஆகியோர் பிக்பாஸ் மேடைக்கு வந்து கமலுடன் சிறிது நேரம் உரையாடிச் சென்றனர். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுக்குக் காண்பிக்கப்பட்டது.

நேற்று மாலை 5 மணியளவில் குறித்த படத்தின் பெயர் அறிமுகம் இடம்பெற்றது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒலிபரப்பானபோதும் காண்பிக்கப்பட்டது..

கிராமப் பின்னணியில் உருவாகும் படத்தின் பெயர் அறிமுகம் ரீஸராகவே வெளியாகி, அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

https://www.youtube.com/channel/UC_gXhnzeF5_XIFn4gx_bocg

பிக்பாஸ்: சம்யுக்தாவைக் கதறவிடும் சக போட்டியாளர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ள நிலையில், இன்று வெளியான ப்ரொமோக்களில் ஆரிக்கு எதிரான சம்யுக்தாவின் கதறல் வெளிப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் சிறப்பாக செயல்பட்டவர் மற்றும் மோசமாக செயல்பட்டவர் குறித்த கருத்துகணிப்பு எடுக்கப்படுவது வழமை. அதன்படி இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர் என்று ஆரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக ஆரியை மோசமான போட்டியாளர் என தேர்வு செய்து சிறைக்கு அனுப்பி வைத்த நிலையில் இம்முறை அவர் சிறப்பாக செயல்பட்டவர் என தேர்வு செய்யப்பட்டதை அறிந்த சம்யுக்தா பொறுத்துக்கொள்ளமுடியாமல் அழுகிறார்.

மேலும், போட்டியாளர்கள் எல்லோரும் இப்படி ஒன்று கூடிவிட்டார்களே எனவும் ஆதங்கப்பட்டுள்ளார்.

காரணம், சம்யுக்தா மற்றும் ஆரி இடையே கடுமையான பிரச்சினை நடந்தது. என்னை ஆரி அவ்வளவு மோசமாகப் பேசியும் எல்லோரும் அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார்களே என அவர் ஆதங்கப்படுகிறார்.

குறித்த ப்ரொமோக்களைப் பார்த்த ஆரி ரசிகர்கள், இதே போன்று சனம் ஷெட்டியை பாலா மோசமாகச் பெசியபோது, பாலாவுக்கு முழு ஆதரவு வழங்கினீர்களே! கடைசி வரை சொம்பு தூக்கினீரே. இப்போது உமக்கு என்றால் வயிறு எரியுதா…? சனத்துக்கு நடந்தபோது என்ன சாணி அள்ள போயிருந்தீரா சம்யுக்தா…? பொண்ணாமே பொண்ணு..!! என சம்யுக்தாவைத் திட்டுவதுடன் ஆரிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

தளபதி மக்கள் இயக்கம் ; விஜய் அதிரடி அறிக்கை!

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றப்பட்டுள்ளமை குறித்து நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது என விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறினார். மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்விதத் தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.

மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியாகிறது தளபதி மக்கள் இயக்கம்!

அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்விண்ணபத்தைத் தான்தான் விண்ணப்பித்தார் என நடிகர் விஜயின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

விஜயின் அரசியல் கட்சி தொடர்பாக பேசியுள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்,

“இது என்னுடைய முயற்சிதான். இது விஜயின் அரசியல் கட்சி அல்ல. அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான்தான் விண்ணப்பித்துள்ளேன். அவர் கட்சி அரசியலில் நுழைகிறாரா என்பது குறித்து என்னால் கருத்து சொல்ல முடியாது” என்றார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய, தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் விண்ணப்பித்துள்ளார் என முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என அந்தப் பதிவு விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையிலேயே எஸ்.ஏ.சந்திரசேகர் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

“போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” ; என்னிடம் கேட்டுவிட்டுத்தான் எஸ்.பி.பி. இலங்கைக்குப் போனார்!

மறைந்த பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இலங்கைக்கு கச்சேரிக்கு செல்லும் வாய்ப்பு வந்தபோது, அதற்கு எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, “போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம் கேட்டார் என சீமான் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்கள் 219ஆவது நினைவு தினம் நாம் தமிழர் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்போது பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

“முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படத்தை இலங்கை மொழியில் எடுத்துக் கொள்ளுங்கள் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் எங்கள் தமிழ் பிள்ளை விஜய் சேதுபதியை வைத்து தமிழில் எடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

“விஜய் சேதுபதியின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதால் எங்களது பேச்சில் அறிவுறுத்தல் இருந்ததே தவிர, அச்சுறுத்தல் இருக்கவில்லை.

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கைக்கு கச்சேரியில் பாட வாய்ப்பு வந்தபோது எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, “போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம் கேட்டார்” என்றார்.

சேதுபதியும் சேறடி சேனாபதிகளும்

முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்படாது என்று தொடங்கப்பட்ட புறக்கணிப்பு போராட்டம் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்த்தேசிய தரப்பினரால் சேறடிப்பு போராட்டமாக – சுய இருப்பிற்கு குழிதோண்டுவதாக – ஏனைய தரப்பின் எரிச்சலை அறுவடை செய்வதாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மொத்தத்தில், புறக்கணிப்பு போராட்டம் என்பதன் தாற்பரியம் குறித்து அறிவுபூர்வமாக தமக்கு எதுவும் தெரியாது என்பதை இந்தப்போராட்டக்காரர்கள் இரவு – பகலாக குஸ்திபோட்டு கூவிக்கொண்டிருக்கிறார்கள்.

புறக்கணிப்பு போராட்டங்கள் எனப்படுகின்ற வேர்ச்சுவல் சீற்றத்துக்கான ஆயுள் இப்போதெல்லாம் அண்ணளவாக ஒருவாரம். மிஞ்சி மிஞ்சிப்போனால் இரண்டு வாரங்கள். அவ்வளவுதான். ஒரு கோவில் திருவிழாபோல என்று வைத்துக்கொள்ளலாம். இந்தப்போராட்டங்களுக்கான ஆயுளும் அடர்த்தியும் அவ்வளவுதான். ஆனால், இப்படிப்பட்ட போராட்டங்களை மையத்தை நோக்கி எவ்வளவு கூர்மையாக பேணுகிறோம் என்பதில்தான் போராட்டத்தின் வெற்றி – தோல்விகள் தங்கியிருக்கின்றன.

வுpஜய் சேதுபதி விடயத்தில் அரிவாள் வீசிக்கொண்டிருப்பவர்களிடம் இதுபற்றி பேசிப்பயனில்லை.

ஓன்று இவர்களில் பலர், விஜய் சேதுபதி விடயத்தை தூக்கியாடுவதன் மூலம் தங்களின் தேசிய உணர்ச்சிகளை இலவசமாக விளம்பரப்படுத்த முண்டியடிக்கிறார்கள்.

இன்னொரு தரப்பினர், உண்மையிலேயே இந்த ‘800’ படத்தை நிறுத்துவதன் மூலம் முரளிதரனின் ஊடாக மகிந்த தரப்புக்கு பாடம் கற்பித்துவிடலாம் என்று பற்களை நறுநறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று உலகெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது கோப்ரேட் அரசியல். அமித்ஷா முதல் பசில் ராஜபக்ஷ வரைக்கும் அரசியலில் ‘டீல்’ என்றால் என்ன என்று வியாழேந்திரனையும் வாங்கி காட்டிவிட்டார்கள். குஷ்புவையும் வாங்கி காட்டிவிட்டார்கள். பாமர மக்களுக்கே புரிந்த அரசியல் பால பாடம் இது.

ஆனால், இந்த கொடிபிடி அடிபிடிகள்மாத்திரம் இன்னமும் இந்த உண்மையை உணராமல் வாழ்ந்துகொண்டிருப்பதுதான், முரளிதரன் நிலைநாட்டிய உலக சாதனைகளைவிட மிகப்பெரிய சாதனை.

அப்படியானால், விஜய் சேதுபதி விடயத்தில் நடைபெற்றிருக்கவேண்டியது என்ன?

இனப்படுகொலை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் – புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தவேண்டும் – என்பதெல்லாம் ஈழத்தமிழன் ஒவ்வொருவரினதும் தார்மீக கடமை. இவை பல காலமாக நடைபெற்றுவருகின்ற விடயங்கள். சிறிலங்கன் எயார் லைன்ஸிற்கு எதிரான போராட்டம், சிறிலங்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான போராட்டம், டில்மா தேயிலைக்கு எதிரான போராட்டம் என்று எத்தனையோ போராட்டங்கள் கடந்தகாலங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன.

அந்தப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதெல்லாம், போராட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் துயரம் மிக அடர்த்தியாக உலகின் காதுகளில் உரக்கக்கூறப்பட்டதே தவிர, குறுக்கே கொடியோடு போய் நின்றுவிட்டால், புறப்பதற்கு ஆயத்தமாக நின்ற சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானம் எழும்பாமல் நின்றுவிடும் என்று அர்த்தத்தில் சன்னதம் ஆடவில்லை.

விஜய் சேதுபதிக்கு தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்திலும் அந்த அணுகுமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கவேண்டும்.

போர் முடிவடைந்த பிறகு, போரை நடத்திய ஒரு தளபதியை ஆதரித்து வாக்களித்த தமிழ் மக்கள், ‘நான் முதலில் சிறிலங்கன், அதன்பிறகுதான் தமிழன்’ – என்று கூறுகின்ற முரளிதரனை – தார்மீகமாகப்பார்த்தால் – கேள்விக்கு உட்படுத்தமுடியாது. கூடவே, அது அவரது அரசியல் நிலைப்பாடு என்றால் அதனை விமர்சனத்துக்கும் உட்படுத்தமுடியாது.

அவரது அதே கொள்கையை உடைய தேசியக்கட்சியொன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட அங்கஜனைத்தான் தமிழ் மக்கள் இன்று ஏகோபித்த வாக்குகளுடன் தங்கள் பிரிதிநிதியாக தெரிவுசெய்திருக்கிறார்கள்.

ஆக, முரளிதரனின் அரசியலை கேள்விக்கு உட்படுத்துவதாக கொடியை தூக்கிக்கொண்டுபோனால், அந்த வாதம் செய்தவர்கள் குழியில் விழுவதைத்தவிர வேறு வழியில்லை.

ஆனால், காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முரளிதரன் கொச்சைப்படுத்தும் விதமாக தெரிவித்த கருத்துக்களையும் –

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களது வலியை கிஞ்சித்தும் உணராதவராக ‘மருந்து தருகிறேன்’ என்ற போக்கில் பேசுகின்ற விடயங்களையும் தர்க்கபூர்வமாக முன்னிலைப்படுத்தி அவரை கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும்.

அவரது இந்த முட்டாள்தனமான கருத்துக்காக கோத்தாவின் அரசியல் முகாமை அவர் தெரிவுசெய்திருக்கும் கபடத்தையும் தோலுரித்து காண்பித்திருக்கவேண்டும்.

இந்தப்பாதையின் வழியாக தமிழ் மக்களின் போராட்ட நியாயத்தை முன்னிலைப்படுத்தியிருக்கவேண்டும்.

இந்த அணுகுமுறையில் மேற்படி புறக்கணிப்புப்போராட்டம் இடம்பெற்றிருக்குமேயானால், ‘800’ படத்தை தமிழ் மக்கள் தமக்கான பிரச்சார கருவியாக உபயோகித்து, தங்களின் கருத்துக்களை எடுத்துச்செல்வதற்கு பயன்படுத்தியதாக அமைந்திருக்கும்.

போராட்டங்கள் அப்படித்தான் அமையப்பெறவேண்டும். அதாவது, போராட்டத்துக்கான நியாயங்கள் முன்னிலைப்படுத்தப்படவேண்டும். அது தீர்க்கப்படும்வரைக்கு எந்தக்காலத்திலும், கேட்பவர்களிடம் துயரம் குறையாமல் எடுத்துக்கொடுக்குமளவுக்கு அடர்த்தியோடு பேணப்படவேண்டும்.

இன்று இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி வரலாம், நாளை இன்னொருவர் வரலாம். ஆக, தனிமனிதர்களை இலக்குவைத்து சேறடிப்புக்களை நிகழ்த்துவதில் எந்தப்பயனும் இல்லை. போராட்ட நியாயங்களை முன்னிலைப்படுத்தி, அவற்றை இப்படியான காலப்பகுதியில் முன்னகர்த்தியிருக்கவேண்டும்.

ஆனால், நடைபெற்றது என்ன?

கவிஞர் தாமரை போன்ற கூழ்முட்டைகள் என்ன செய்தன?

‘முரளிதரன் நீயொரு வரலாற்று எச்சில்’ – என்று பதிவு எழுதி சமூகவலைத்தள சங்கிகளை உசுப்பேற்றிவிட, இரவு – பகலாக கூவிக்கொண்டு திரிந்த அந்தக் கூட்டங்களும் அதைத் தூக்கிக்கொண்டு, விஜய் சேதுபதியை எதிர்ப்பதன் மூலம் – முரளிதரனை தூற்றுவதன் மூலம் – தங்களுக்கும் தங்களது போராட்டத்துக்கும் முகவரிகளை சூடிக்கொள்வதற்கு திமிறிக்கொண்டன.

இந்தப்படத்தை நிறுத்தினால் ஈழம் கிடைத்துவிடும் என்பதுபோல ஒரு பழிவாங்கும் படலமாக இந்தப் போராட்டத்தை முன்னிறுத்தினார்கள்.

திருமாவளவன் கூறுவதைப்போல – பகைவனை ஜனநாயகப்படுத்துகின்ற போராட்டங்கள்தான் எப்போதும் நிரந்தர தீர்வுகளை தருமே தவிர, பழிவாங்கும் போராட்டங்களும் அச்சுறுத்தும் போராட்டங்களும் ஒருபோதும் நிரந்தர தீர்வை தராது. அது குறுகிய கால குதூகலங்களை தரலாம். ஒரு நாள் நித்திரைக்கான மாத்திரையாக அது அமையலாம்.

ஆக, இதிலிருந்து எங்கு நகரப்போகிறோம் என்பதை இனியாவது தீர்மானிக்கவேண்டும்.

விஜய் சேதுபதியின் மகளை வன்புணரவேண்டும் என்ற குழறியவனின் குரலுக்கு இந்த ஒட்டுமொத்த போராட்டக்காரர்களும் பொறுப்பேற்கவேண்டியவர்களாக உள்ளார்கள் என்ற உண்மையாவது கொஞ்சம் உணரவேண்டும்.

“எல்லாம் முடிந்துவிட்டது”; 800 பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

முரளியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானதிலிருந்து தமிழகத்தில் பெரும் சர்ச்சை உருவானது. அதிலிருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர்கள், இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி, சேரன், கவிஞர்களான வைரமுத்து மற்றும் தாமரை உள்ளிட்ட பலரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து முத்தையா முரளிதரன் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

அதில், தனது சுயசரிதைப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, அந்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி “நன்றி வணக்கம்” என்று குறிப்பிட்டார். இதனால், விஜய் சேதுபதி நடிக்கிறாரா, விலகிவிட்டாரா என்ற குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஜய் சேதுபதி இன்று சந்தித்தார்.

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமான நிலையில் அவரது மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வரின் தாயார் படத்துக்கு விஜய் சேதுபதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வரிடம் 2 நிமிடம் அமர்ந்து பேசி துக்கம் விசாரித்து தனது ஆறுதலைத் தெரிவித்துவிட்டுச் சென்றபோது, முதல்வரின் வீட்டுக்கு வெளியே காருக்காக காத்திருந்த விஜய் சேதுபதியிடம், செய்தியாளர்கள் ‘800’ படம் குறித்துக் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு விஜய் சேதுபதி, “நன்றி வணக்கம் என்ற பதிவு, முடிந்துவிட்டது என்று அர்த்தம். இனிமேல் அதைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்தார்.

‘800’ படத்திலிருந்து விலகிவிட்டீர்களா என்ற கேள்வியை மீண்டும் செய்தியாளர்கள் எழுப்பினார்கள். அப்போது விஜய் சேதுபதி, “அனைவருக்கும் புரிந்துவிட்டது தலைவா. எல்லாம் முடிந்துவிட்டது” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

முரளியின் வாழ்க்கை வரலாற்றுப் படம்; விஜய் சேதுபதி விலகினாரா, விலகவில்லையா?

“முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை” என இலங்கை ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

இந்தத் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,

இன்று முரளிதரன் தனது வாழ்க்கை வரலாற்றுப் படத்திலிருந்து விலகுமாறு விஜய் சேதுபதிக்கு விடுத்துள்ள அறிக்கையை தனது ருவிட்டர் பக்கத்தில் பதிலிட்டுள்ள விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் அவர் குறித்த படத்திலிருந்து விலகிவிட்டார் எனப் பலரும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

மொத்தத்தில் விஜய் சேதுபதி விலகிவிட்டாரா? விலகவில்லையா என்பதில் பெரும் குழப்ப நிலையே உள்ளது.

வி.சே. அவர்களே! தேசியத் தலைவரின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள்! முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்! அதை நாம்தான் துப்ப வேண்டும்!

முரளியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்குப் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுவரும் நிலையில், கவிஞார் தாமரையும் அவருக்காக திறந்த மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளவை வருமாறு-

விஜய்சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன். முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள்.

அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ”அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது.

அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ ! சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்தநாள் இனியநாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார்.

இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே ???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !?

ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?!

வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !.

அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா ?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா ? நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள் ! என்னது…நட்டமென்றா சொன்னேன் ??!

மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !. நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா ? போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா ?அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ??

இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ? ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன ‘நட்டம்’? நமக்குத் தெரிந்தவகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே ?? நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும். தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி,மூன்றுவேளை சோறு ????

தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது ! தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் !

உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள்.

பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் ! .தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள் ! – என்றுள்ளது.

வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி? நமக்கெதற்கு மாத்தையா?

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் சுயசரிதைக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள நிலையில், அதற்கான போஸ்டர் நேற்று வெளியாகியது.

சில தினங்களுக்கு முன்னர் இப்படம் குறித்த தகவல்கள் வெளியானபோது, விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 

விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்

நடிக்கும் யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா?

எனப் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/seenuramasamy/status/1314729917196558337

எனினும், குறித்த படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது.

இந்நிலையில், முரளியின் கதையில் விஜய் சேதுபதி நடிப்பதற்குப் பல தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். அதன்படி  #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. வெட்கமாக இல்லையா விஜய் சேதுபதி எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

முரளியாக மாறிய விஜய் சேதுபதி; வைரலாகிவரும் 800 பட போஸ்டர்!

முத்தையா முரளிதரனின் சுயசரிதைப் படமான 800இல் நடித்துவரும் விஜய் சேதுபதியின் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார். தார் மோ‌ஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா இப்படத்தை தயாரிக்கிறார்.

இது கிரிக்கெட் சம்பந்தமான படம் என்பதால், இன்று நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசரஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் போட்டியில் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள்.

இதில் முத்தையா முரளிதரன் தோற்றத்தில் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் இறுதியில் வருகிறது. இது ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=lI2b1FEEe7E&feature=emb_err_woyt

விஜய் சேதுபதி எனது பந்துவீச்சு முறையை அப்படியே செய்து காட்டுவார் – முரளி

விஜய் சேதுபதி மிகத் திறமையான ஒரு நடிகர். எனது பயோபிக்கான ‘800’ல் எனது பந்துவீச்சு முறையை அவர் அப்படியே சிறப்பாகச் செய்து காட்டுவார் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் ‘800’ என்கிற திரைப்படம் உருவாகிறது. விஜய் சேதுபதி இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கி வருடக் கடைசியில் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை எடுத்த ஒரே கிரிக்கெட் வீரர் முரளிதரன் தான். ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தத் திரைப்படம் தமிழில் எடுக்கப்படுகிறது. முரளிதரனின் புகழை மனதில் வைத்து ஹிந்தி, வங்காளம், சிங்களம் எனப் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது. ஆங்கில சப்டைட்டில்களோடு ஆங்கில வடிவமும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கும் முரளிதரன், “திரைக்கதை தயாரானவுடன், இதில் விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் சிறப்பாகப் பொருந்தமாட்டார்கள் என்று நினைத்தோம். அவர் மிகவும் திறமையான நடிகர் என நான் நினைக்கிறேன். எனது பந்துவீச்சு முறையை அவர் கண்டிப்பாக அப்படியே செய்து காட்டுவார். அவர் மிக உயர்ந்த நடிகர்களில் ஒருவர் என்பதால் அவரை நான் முழுமையாக நம்புகிறேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் அவர் அற்புதங்களைச் செய்வார்” என்று கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி பேசுகையில், “முரளிதரனின் கதையைக் கேட்டது, அவருடன் செலவிட்ட நேரம் எல்லாம் மிக நன்றாக இருந்தது. அவர் எங்கு சென்றாலும் அங்கு ஒரு முத்திரையை ஏற்படுத்தும் வசீகரமான ஆளுமை. அவரது வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் ரசிகர்கள் அவரைக் களத்தில், ஆட்டத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர்தான் களத்தைத் தாண்டி அவரது ஆளுமையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகவும் போற்றத்தகுந்த, நேசிக்கத்தகுந்த மனிதர். மிகவும் அழகான மனிதர், அவரது கதை கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியது” என்று கூறியுள்ளார்