சிட்னி தாக்குதல் பயங்கரவாத செயல்: விசாரணை வேட்டை தீவிரம்!

சிட்னி மேற்கு பகுதியில் தேவாலயத்துக்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் பயங்கரவாத செயலாக இருக்கக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அந்த கோணத்தில் விசாரணை இடம்பெற்றுவருவதை நிவ் சவூத் வேல்ஸ் மாநில premier, Chris Minns உறுதிப்படுத்தியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பிஷப் உட்பட நால்வர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மக்கள் திரண்டதால் வன்முறையும் வெடித்தது. பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது.

தாக்குதல் நடத்திய 16 வயது இளைஞன் தேவாலயத்துக்குள்ளேயே வைக்கப்பட்டார். அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு மக்கள் கோரினர். பொலிஸ் வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

சிட்னி கத்திக்குத்து தாக்குதலில் சீன பல்கலைக்கழக மாணவரும் பலி!

சிட்னி கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் சீன பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த ஆறாவது நபர் சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 20 வயதுடைய Yixuan Cheng என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிட்னி வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கர கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அறுவர் பலியாகினர். அத்துடன், தாக்குதல் நடத்திய குயின்ஸ்லாந்து வாசியும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

கொல்லப்பட்டுள்ள அறுவரில் ஐந்து பெண்கள் உள்ளடங்குகின்றனர். எனவே, இது பெண்களை இலக்கு வைத்த தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கின்றது.

கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் கடந்த காலம் பற்றி தீவிர விசாரணை: பெண்களை இலக்கு வைத்தா தாக்குதல்?

சிட்னி நகரில் அருகே Bondi Junction இல் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த என்பவரே இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். 40 வயதான குறித்த நபருக்கு மனநலப் பிரச்சினை இருந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவரின் கடந்தகால தொடர்பாடுகள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.

சிட்னியில் அவர் தற்காலிகமாகவே குடியேறியுள்ளார், தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் இவருக்கு தெரிந்தவர்களா என்பது பற்றியும் ஆராயப்படுகின்றது.

உயிரிழந்த 6 பேரில் நான்கு பேர் பெண்கள், காயமடைந்த 12 பேரில் எட்டு பேர் பெண்கள், எனவே, இது பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்திலும் விசாரணை இடம்பெறுகின்றது.

 

காசாவில் போர் நிறுத்தம்கோரி ஆஸியில் இன்று பேரணிகள் முன்னெடுப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் வார இறுதியில் மீண்டும் வீதிகளில் இறங்கி, போராட ஆரம்பித்துள்ளனர். காசாவில் பொதுமக்களின் அவலநிலை குறித்து கவலைகள் அதிகரித்துவரும் நிலையில், சிட்னி, மெல்பேர்ண் மற்றும் கன்பராவில் இன்று பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் உட்பட ஐ.நா. தொண்டு நிறுவன பணியாளர்கள் எழுவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது விடயம் தொடர்பில் பொறுப்புகூறல் அவசியம் என இஸ்ரேலை ஆஸ்திரேலிய வலியுறுத்தியுள்ளதுடன், இஸ்ரேலின் நகர்வுகளைக் கண்காணிக்க விசேட ஆலோசகர் ஒருவரையும் நியமித்துள்ளது.

இந்நிலையில் மேலும் ஒரு மனிதாபிமான செயற்பாட்டாளர்மீது காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சற்று ஓய்ந்திருந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் மீண்டும் பழைய உத்வேகத்துடன் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இஸ்ரேல்மீதான ஈரானின் பதிலடி தாக்குதலை தடுக்க ஆஸ்திரேலியா முயற்சி!

இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதலை தொடுக்கவுள்ளது எனக் கூறப்படும் நிலையில், அவ்வாறானதொரு நகர்வில் ஈடுபடவேண்டாம் என ஈரானிடம் வலியுறுத்தியுள்ளது ஆஸ்திரேலியா .

இவ்விவகாரம் தொடர்பில் ஈரான் வெளிவிவகார அமைச்சருடன் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசி ஊடாக உரையாற்றியுள்ளார்.

“ இஸ்ரேலுக்கு எதிராக அதிகரித்துவரும் பதற்றநிலைமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படவேண்டாம். பிராந்தியத்தில் ஸ்தீரத்தன்மையை மேம்படுத்துவதற்கே தனது செல்வாக்கை ஈரான் பயன்படுத்த வேண்டும்.” – எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம்மீது நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஈரானின் மூத்த தளபதி உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்காவிட்டாலும் இஸ்ரேல்தான் இந்த செயலில் ஈடுபட்டது என ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

ஜூலியன் அசாஞ்சேயை விடுவிக்க அமெரிக்கா பச்சைக்கொடி?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கை கைவிடுமாறு ஆஸ்திரேலியா விடுத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட்டுவருகின்றது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலியாவின் மேற்படி கோரிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜோ பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் அசாஞ்சே (52) கடந்த 2006 ஆம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்ய கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பொலிஸார், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ இரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது.

இதுதொடர்பான வழக்கு லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

“ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அமெரிக்க குடிமகனுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உரிமைகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அசாஞ்சேவுக்கும் வழங்க வேண்டும். அவர் மீதான வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.” என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்கா விடுவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுயாதீன பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கலாம் – வெளிவிவகார அமைச்சர் கருத்து

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது தொடர்பில் பரிசீலிக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் Penny Wong தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” பாலஸ்தீனத்தை முறையாக அங்கீகரிப்பதன்மூலம் அப்பகுதியில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரலாம்.” எனவும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

” மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இது விடயத்தில் சர்வதேச வகிபாகம் அவசியம். உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதேபோல ஹமாஸால் பயணக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.” எனவும் Penny Wong
குறிப்பிட்டுள்ளார்.

ஆஸி. பாதுகாப்பு படை பிரதானியாக David Johnston நியமனம்!

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக வைஸ் அட்மிரல் David Johnston நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜுலை மாதம் அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ வைஸ் அட்மிரல் ஜான்சன், பாதுகாப்பின் பல்வேறு கூறுகள் ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதிசெய்யும் திறன் மூலம் தன்னைத் தொடர்ந்து வேறுபடுத்திக் கொண்டுள்ளார்.” என்று பிரதமர் Anthony Albanese தெரிவித்தார்.

“ ஒருங்கிணைந்த பாதுகாப்பு பற்றிய அவரது புரிதல், பாதுகாப்பு மூலோபாய மதிப்பாய்வின் முன்னுரிமைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கு முக்கியமானதாக இருக்கும், மேலும் பாதுகாப்புப் படைக்கு திறன்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் சவால்களை எதிர்கொள்ள சரியான தலைமை தெரிவுசெய்யப்பட்டுள்ளது.” எனவும் அவர் கூறினார்.

வைஸ் அட்மிரல் ஜான்ஸ்டன் 1978 இல் தனது 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார், மேலும் 2018 இல் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார், முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றினார்.

விமானப்படையின் தலைவராக பணியாற்றிய ஏர் மார்ஷல் ராபர்ட் சிப்மேன், ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் அடுத்த துணைத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.

இஸ்ரேல் விவகாரம்: விசேட ஆலோசகரை நியமித்தது ஆஸ்திரேலியா!

இஸ்ரேலால் முன்னெடுக்கப்படும் விசாரணையைக் கண்காணிக்கவும், அது தொடர்பில் கூட்டாட்சி அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்குமான விசேட ஆலோசகரை ஆஸ்திரேலியா நியமித்துள்ளது.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியான Mark Binskin என்பவரே குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

விசேட அறிக்கையொன்றின் ஊடாக இந்த தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்த வான்வழி தாக்குதலில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் உட்பட ஐ.நாவின் 7 மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ள விவகாரம் இஸ்ரேலுக்கு கடும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரு அதிகாரிகளை இஸ்ரேல் பணி நீக்கம் செய்துள்ளது. எனினும், பொறுப்புகூறல் முறையாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே இவ்விவகாரம் தொடர்பில் இஸ்ரேலின் நகர்வுகளைக் கண்காணிக்க விசேட ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இஸ்ரேல் இராணுவத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவார் என தெரியவருகின்றது.

Mark Binskin 2014 முதல் 2018வரை ஆஸி. பாதுகாப்பு படைகளின் பிரதானியாக செயற்பட்டுள்ளார்.

இஸ்ரேல் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும், தமது நாட்டின் நகர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஆஸி. பிரதமர் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச சட்டங்களைப் பின்பற்றுவதில் இஸ்ரேல் தோல்வி” – ஆஸி. அமைச்சர் விளாசல்

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை பின்பற்றுவதில் இஸ்ரேல் தோல்வி கண்டுள்ளது என்பதையே காசாவில் ஐ.நா. பணியாளர்கள்மீதான தாக்குதல் பிரதிபலிக்கின்றது – என்று ஆஸ்திரேலியாவின் தொழில்துறை அமைச்சரான Ed Husic சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் மனிதாபிமான செயற்பாட்டில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய பிரஜை உட்பட எழுவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கவலையளிக்கின்றது எனவும் அவர் கூறினார்.

” மற்றவர்களின் வாழ்வுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவள். அந்த லட்சியத்தை தொடர அவர் வாழ்ந்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அவளை இழந்துவிட்டோம்.

காசாவில் 200 மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு மனிதாபிமான சட்டம், சர்வதேச சட்டம் என்பன மீறப்படுகின்றன என்பதற்கு இதுவும் சான்றாகும்.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், மனிதாபிமான பணியாளர்கள்மீது குறிவைப்பது சர்வதேச சட்டத்தை அப்பட்டமாகமீறும் செயலாகும்.” எனவும் அமைச்சர் Ed Husic குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு அடுத்த அடி – விசாரணையை கண்காணிக்க சிறப்பு ஆலோசகரை நியமிக்கிறது ஆஸி.!

ஆஸ்திரேலிய பிரஜையொருவர் உட்பட காசாவில் ஏழு மனிதநேய பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இஸ்ரேலால் முன்னெடுக்கப்படும் விசாரணையை கண்காணிக்க சுயாதீன ஆலோசகர் ஒருவரை நியமிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

அத்துடன், விசாரணை தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் இஸ்ரேல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.

அதேபோல இது தொடர்பில் இஸ்ரேலால் வழங்கப்பட்டுள்ள ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொண்டு நிறுவன பணியாளர் மரணம்: விசாரணை அறிக்கையை ஆஸியிடம் கையளித்தது இஸ்ரேல்!

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் ஐ.நா. தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய ஆஸ்திரேலிய மனிதாபிமான செயற்பாட்டாளர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை கன்பராவிடம் கையளித்துள்ளது இஸ்ரேல்.

“ காசாவில் ஏழு தொண்டு நிறுவன பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.” – என்று இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேற்படி விசாரணை அறிக்கை உயிரிழந்த ஏழு ஐ.நா. பணியாளர்களின் நாடுகளுக்கு வழங்கப்படும் எனவும், அடுத்த 24 மணிநேரத்துக்குள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

“சுயாதீன விசாரணை அறிக்கை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
“தவறான இலக்கு, இதற்காக இராணுவம் வருந்துகின்றது.” – எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிரான பிடியை இறுக்கிறது ஆஸி.!

இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் ஆஸ்திரேலிய மனிதாபிமான செயற்பாட்டாளர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தையடுத்து, இஸ்ரேல்மீதான போர் நிறுத்த அஸ்திரங்களை ஆஸ்திரேலியா சரமாரியாக தொடுத்துவருகின்றது.

தாக்குதலில் உயிரிழந்த மனிதாபிமான செயற்பாட்டாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டுவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

“ காசா போரால் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பட்டினியால் வாடுகின்றனர் . 190 இற்கு மேற்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே, மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் முன்வர வேண்டும் என மீண்டும் அழைப்பு விடுக்கின்றோம். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.” – எனவும் வெளிவிவகார அமைச்சர் வலியுறுதியுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவின் 28 ஆவது ஆளுநராக Samantha Mostyn நியமனம்!

ஆஸ்திரேலியாவின் 28 ஆவது ஆளுநராக Samantha Mostyn பதவியேற்கவுள்ளார் என்று பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார்.

59 வயதான வணிக மற்றும் சமூகத்தலைவரான Samantha Mostyn அடுத்த ஆளுநராக நியமிக்கும் பிரதமரின் பரிந்துரையை மன்னர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆளுநர் பதவியில் பணியாற்றவுள்ள 2ஆவது பெண்மணி இவராவார்.

எதிர்வரும் ஜுலை மாதம் இவர் ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.

“ இதனை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். மேலும் அனைத்து ஆஸ்திரேலியர்களின் மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” – என்று Samantha Mostyn தெரிவித்துள்ளார்.

காசாவில் இடம்பெற்ற வான் வழி தாக்குதலில் ஆஸி. பிரஜை உட்பட நான்கு வெளிநாட்டவர்கள் பலி!

காசாவில் இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் ஆஸ்திரேலிய பிரஜையொருவர் உட்பட நான்கு மனிதாபிமான பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.

World Central Kitchen  என்ற தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜைகளே தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மனிதாபிமான குழு வடக்கு காசா வழியாக மத்திய காசா நோக்கி பயணித்தபோதே அவர்களின் கவச வாகனம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

உயிரிழந்த 44 வயதான ஆஸ்திரேலிய பெண் Lalzawmi “Zomi” Frankcom, தேசிய மற்றும் சர்வதேச மனிதாபிமான பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர். ஆஸியில் காட்டு தீ ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் களப்பணியாளராக சேவையாற்றியுள்ளார். அவர் மெல்பேர்ணை சேர்ந்தவர்.

தந்தையும், மகனும் பலி! சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

Gold Coast பகுதியில் நீச்சல் குளத்தில் மூழ்கி தந்தையும், மகனும் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில் இருந்து குழந்தையை மீட்க முயன்ற இருவரெ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விக்டோரியாவில் இருந்து ஈஸ்டர் விடுமுறை கொண்டாட்டத்துக்காக சென்ற குடும்பத்துக்கே இச்சோகம் ஏற்பட்டுள்ளது.

நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையை மீட்க முற்பட்ட குழந்தையின் தந்தையும் (30), தாத்தாவுமே (60) உயிரிழந்துள்ளனர்.

குழந்தை பாதுகாப்பாக உள்ளது .மரணத்தில் சந்தேகம் இல்லை. பொலிஸ் விசாரணை தொடர்கின்றது.

சமரசத்துக்கு இஸ்ரேல் பச்சைக்கொடி – ஆஸி. மகிழ்ச்சி

ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுகளை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த கலந்துரையாடலில் கட்டார் மத்தியஸ்தம் வகிக்கின்றது.

காஸா எல்லையில் போர் நிறுத்தத்தை அறிவித்தல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் என்பன இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக உள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த வாரத்தில் நிலையான போர் நிறுத்தத்திற்கான கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்திருந்தது.

எனினும்,இந்த பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிப்பதற்கு இஸ்ரேல் தற்போது தயாராகியுள்ளது.

அத்துடன், ஆஸ்திரேலியாவும் போர் நிறுத்தத்தை வலியுறுத்திவருகின்றது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தைக்கூட ஆஸ்திரேலியா வரவேற்றிருந்தது.

‘Drug cocktail’ அருந்திய பெண்களில் ஒருவர் பலி: மேலும் இருவர் ஆபத்தான நிலையில்!

குயின்ஸ்லாந்து Gold Coast பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் வைத்து ‘Drug cocktail’ அருந்திய ஏழு பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

‘Drug cocktail’ அதிகளவு அருந்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஹோட்டலுக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் அவசர சேவை பிரிவினர் அழைக்கப்பட்டனர். 7 பெண்கள் அங்கு சுவாசிக்க சிரமப்பட்டுகொண்டிருந்துள்ளனர்.

அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு பெண்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஏனைய நான்கு பெண்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

புதிய நாடு கடத்தல் சட்டத்தால் அகதிகளின் உரிமைகள் பறிப்பு!

லேபர் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள நாடு கடத்தல் சட்டமூலத்தின்கீழ் அகதிகளின் உரிமைகள், பாதுகாப்பு என்பன பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்று பசுமைவாதிகளும், சட்டத்தரணிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சட்டம் நிறைவேற்றப்படின் பலவந்தமான நாடு கடத்தலுக்கு கட்டாயம் ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மனித உரிமை இயக்குநர்  Alison Battisson சுட்டிக்காட்டியுள்ளார்.

லேபர் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய நாடு கடத்தல் சட்டமூலத்துக்கு கீழ்சபை அனுமதி வழங்கி இருந்தாலும் செனட்டின் ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

நாடு கடத்தலுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கவும், புதிய விசா விண்ணப்பங்களை தடுக்கவும் அச்சட்டம் ஊடாக குடிவரவு அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசா பாதுகாப்பு இல்லாத அகதிகளுக்கும் இச்சட்டமூலம் ஊடாக தாக்கம் ஏற்படும் என சுட்டிக்காட்டி, இதற்கான ஏற்பாடுகளை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்த்துள்ளனர்.

எனினும், இன்னும் 6 வாரங்களுக்கு பிறகு சட்டமூலம் செனட்சபையில் விவாதத்துக்கு வரவுள்ளது.

 

மெல்பேர்ண் மேயர் ஜுன் மாதம் பதவி விலகல்!

மெல்பேர்ணின் லார்ட் மேயர் Lord Mayor தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்குள் பதவி விலகவுள்ளார். இதன்படி எதிர்வரும் ஜுன் மாத இறுதியில் அவர் பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“ஒக்டோபரில் நடைபெறும் உள்ளாட்சிசபைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.” – என்று அறிக்கையொன்றின் ஊடாக இன்று தெரிவித்துள்ளார்.

தனது சேவை காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வெற்றிகரமான திட்டங்களை பட்டியலிட்டுள்ள Lord Mayor , கூட்டாட்சி அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு, அவ்வாறு இல்லை என பதிலளித்துள்ளார்.