குழந்தைகளைக் குடும்ப வன்முறை பாதிக்குமா?

மருத்துவர் ரைஸின் நேர்காணல்

கேள்வி: பெற்றோருக்கிடையில் நடக்கும் குடும்ப வன்முறை குழந்தைகளைப் பாதிக்குமா?

பதில்: ஆம், நிறைய வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம்

கேள்வி: என்னென்ன பாதிப்புகள் நேரலாம்?

பதில்: குடும்ப வன்முறையை அன்றாடம் பார்க்கும், அனுபவிக்கும் குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சியில் தடுமாற்றம் ஏற்படலாம். குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமிடையில் இயற்கையாக இருக்கும் பாசப் பிணைப்பு பாதிக்கப்படுவதால் அவர்கள் பள்ளித் தோழர்களிடமும் மற்ற மனிதர்களிடமும் உறவாடும் விதத்தில் தடுமாற்றம் ஏற்படலாம்.

பிரச்சினையில் பாதிக்கப்படும் ஒரு பெற்றோருக்குச் சாதகமாகக் குழந்தை பரிந்து பேசினால் , மற்ற பெற்றோரால் வெறுக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம். இது குழந்தையின் மனதில் ஒரு குழப்பத்தையும் பாதுகாப்பில்லாமை போன்று உணரும் தன்மையையும் ஏற்படுத்தும். இதனால் அவர்களின் கவனம் சிதறி பள்ளிப் படிப்பும் பாதிக்கப்படலாம்.

அவர்களின் சுயமதிப்பி்ல் சரிவு ஏற்படுவதோடு தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பற்றியும் உலகைப் பற்றியும் ஒரு எதிர்மறை எண்ணம் உருவாகலாம். அவர்கள் ‘எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள்’ எனும் மனநிலைக்குத் தள்ளப்படலாம். அதனால் மிகவும் அமைதியாகவும் யாருடனும் சேராமலும் ஒதுங்கியே இருப்பர்.

பிரச்சினைக்களுக்கிடையிலும் பிள்ளைகளை அரவணைக்கும் பெற்றோர் கூட குடும்ப வன்முறையின் பாதிப்பினால் குழந்தையைச் சரியாக கவனிக்க முடியாமல் போவதால் பல நேரங்களில் குழந்தை தனித்து விடப்பட்டது போன்று உணரலாம். இதை பாசப் புறக்கணிப்பு அல்லது ஒரு வகையான உணர்வு வன்முறை எனலாம். இதனால் சில குழந்தைகள் பள்ளிக் காலங்களிலேயே கூடா நட்பினில் நுழைந்து சில தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடலாம்.

அது மட்டுமல்ல, வன்முறையையே பார்த்து வளரும் குழந்தை ஒரு புறம் சுயபச்சாதாபம் கொண்ட பதற்றமான, தன்னம்பிக்கையற்ற மனிதனாக மாறவும் மறுபுறம் ஒரு வன்முறையான மனிதனாகவும் மாறவும் கூட வாய்ப்பிருக்கிறது. குழந்தையாக குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் வளர்ந்த பிறகு தங்களது குழந்தைகளையும் வன்முறைக்கு ஆளாக்குவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

குடும்ப வன்முறையால் , குழந்தைகளுக்கு சிறு வயதில் இயற்கையாக, தானாக கூடிவரக்கூடிய, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மனிதாபிமானம் மற்றும் தொடர்பாடல் திறன் போன்றவை வளராமல் , அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் மிகவும் சிரமப்படுவர்.

குடும்ப வன்முறையைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக மனஅழுத்தம், பதற்ற நோய் மற்றும் ஆளுமைக் கோளாறுகளும் வர வாய்ப்பிருக்கின்றன. பதின்ம வயதில், அவர்கள் பள்ளிப் படிப்பிலிருந்து முன்னமே விலகவும் வீட்டிலிருந்து வெளியேறவும் கூட வாய்ப்பிருக்கிறது. அது போல சில குழந்தைகள் தங்களது வயதை விட குறைவான வயதுடைய குழந்தைகள் போல நடந்துக் கொள்வார்கள். ஏனென்றால் தற்போதைய பருவத்தை விட அந்தச் சிறு இளம் பருவத்தில் அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்திருப்பதால் அவர்களின் மனம் அவர்களை அறியாமலே அதற்கு இழுத்துச் செல்கிறது.

ஏற்கனவே கற்றல் குறைபாடுகள் இருக்கும் குழந்தைகளின் குறைபாடுகள் கண்டறியப்படாமலே போக நேரிடலாம். அது மட்டுமல்ல, ADHD போன்ற கவனக் குறைவு நோய் இருக்கும் குழந்தைகளின் குறைபாடு அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அது மட்டுமல்ல, ஏற்கனவே பிரச்சினையின் மத்தியில் இருக்கும் பெற்றோர் இப்படிப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகளால் எளிதில் சீற்றம் கொண்டு அவர்களைத் தாக்கவும் செய்யலாம்.

மேலும் இது போன்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு விற்றமின் குறைபாடுகள், நோய் எதிர்ப்புத் தன்மையில் குறைபாடு, தலைவலி , நாட்பட்ட வயிற்று வலி, தூக்கமின்மை போன்ற உடல் உபாதைகளும் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. சில குழந்தைகள் வளர்ந்த பிறகும் இரவில் தூக்கத்தில் சிறு நீர் கழிக்க ஆரம்பிப்பர்.

கேள்வி: இந்தக்குழந்தைகளை இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து பாதுகாப்பது எப்படி?

பதில்: பெற்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல் அது முடியாது. முதலில் பெற்றோருக்கு குடும்ப வன்முறையால் குழந்தைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என உணர்த்த வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் உதவி கிடைக்கச் செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி மனநல ஆலோசகர்களுக்கும் இதில் முக்கிய பங்கு இருக்கிறது. குடும்பத்தில் வறுமை இருந்தால் அதைக் களைய உதவலாம். பெற்றோருக்கு மனநோயோ போதைப் பழக்கமோ இருந்தால் அவற்றுக்கான உதவிகளை நாட வழி காட்டலாம். பாட்டி-தாத்தாவோ,

மாமா- மாமியோ இருந்தால் அவர்களுக்கு விடயத்தைத் தெரிவித்து அவர்களால் முடிந்த அரவணைப்பை குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்யலாம். குழந்தைகளை விளையாட்டுக் குழுக்களில் அல்லது கலை வளர்க்கும் கூடங்களில் சேர்த்து விடலாம். அவர்களுக்குத் தேவையான மனநல ஆலோசனை கொடுக்கலாம். ஆரம்பத்திலேயே இதனைக் கவனித்தால் நிறையப் பாதிப்புகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றலாம். இது பற்றி மேலும் தகவல் அறிந்துக் கொள்ள, 1800RESPECT எனும் இனையத்தளத்தை நாடலாம். 180073732 எனும் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

இலங்கையில் மரணங்கள் அதிகரிக்கும் அபாயம்?

நாட்டில் மருந்து தட்டுப்பாடு தொடர்ந்து நிலவினால் மரணங்கள் அதிகரிப்பதை தடுக்க முடியாதென அகில இலங்கை வைத்திய அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அஸ்பிரின் மருந்து கூட இல்லாத காரணத்தால் தொற்றா நோயாளரின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது என மேற்படி சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் ஜயந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக சந்தையில் அநாவசியமான விட்டமின் வகைகள் பெருந்தொகை இருப்பதாகவும் இது குறித்து அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

“அஸ்பிரின் மருந்து கடந்த நான்கு மாதங்களாக இருக்கவில்லை. இரத்தம் கட்டியாவதை குறைப்பதற்குத்தான் நாங்கள் இந்த மருந்தை பாவிக்கின்றோம். இதய நோயாளிகள், பக்கவாதமுள்ள நோயாளிகள் நீரிழிவு நோயாளிகள் இந்த மருந்தை பாவிக்கின்றனர். அஸ்பிரின் தட்டுப்பாடு ஏற்பட்ட பின்னர் இது போன்ற நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது….. விசேடமாக தொற்றா நோயாளிகள்”

“அதேபோல் சிறுநீரக நோயாளிகள் மாதாந்தம் பாவிக்கும் மருந்து வகைக்கும் பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோபமெனும் பொல்லாப் பெருந்தீ!

மனிதர்கள் எல்லோருக்குமே கோபம் என்ற உணர்வு வராமல் இருக்காது. அப்படி அடிக்கடி மனிதர்களால் வெளிப்படுத்தப்படும் கோபம் தான் , உலகில் பல பிரச்சினைகளுக்கு , முக்கியமாக யுத்தங்களுக்கு வித்திடுகின்றது. கோபமென்ற உணர்வை இயல்பான ஒன்றாக நினைத்து சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. ஏனெனில் உளநோய்கள் பலவற்றுக்கும் கோபமே முன்னறிகுறியாகவும் கொள்ளப்படுகின்றது. அப்படிப்பட்ட கோபத்தை எப்படித் தவிர்க்கலாம், கோபத்தால் உண்டாகும் விளைவுகள் யாவை என்பன பற்றி எதிரொலி வாசகர்களுக்காக விரிவாக எடுத்துரைக்கிறார் மனோதத்துவ நிபுணர் ரைஸ்.

கோபம் என்பது என்ன? அது ஒரு உணர்வு , ஆற்றல். அது பெரும்பாலும் அழிக்கும் ஆற்றலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அறச்சீற்றம் என்பதும் கோபம் தான், அது சமுதாயத்தில் நடக்கும் தவறுகளைப் பார்த்து வருவது. அதனால் தான் பாரதியார் கூட ‘ரௌத்திரம் பழகு’ என்கிறார்.

ஆனால் சினம் எனும் கோபம் அடுத்தவர்களை தாக்க எறியப்படும் ஆயுதமானாலும் அது எய்தவனையே அதிகம் தாக்குகிறது. அதைத் தான் திருவள்ளுவர் சொல்கிறார்,

‘தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்’

அதாவது, ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்

சில பேர் சினத்தை மற்றவர்களிடம் காட்ட விரும்பாவிட்டாலும் அதை தம்மை நோக்கிச் செலுத்தி ,தம்மையே காயப்படுத்திக் கொள்வர். உதாரணமாக சங்க காலத்து புலவர் சீத்தலை சாத்தனாரைச் சொல்லலாம். அவர் பிற நூல்களில் ஏதாவது பிழைகள் காணப்பட்டால், அந்தப் பிழைகளை ஏற்படுத்தியோரை குற்றம் கூறுவதற்கு பதிலாக ‘இந்தப் பிழைகளைக் கேட்கும்படி நேரிட்டதே’ என்று வருந்தித் தமது தலையை தானேக் குத்திக் கொள்வாராம். அதனால் அவரது தலை புண்பட்டுச் சீழோடிருந்தமையால் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பட்டாராம்.

தன் மீதே திருப்பிவிடப்படும் கோபம் தான் தற்கொலை என மனநல இலக்கியத்தில் கூறப்படுகிறது.

கோபம் எதனால் ஏற்படுகிறது? கோபம் என்பது ஒரு மனிதனின் பதற்றம் மற்றும் இயலாமையின் வெளிப்பாடு தான். பெரும்பாலும் கோபம் அப்படி இயலாமையில் ஏற்பட்டாலும் சில மனநோய்களிலும் கோபம் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. பொதுவாக ஆளுமைக் கோளாறு கொண்டவர்களின் மனநிலையில் ஏற்படும் சடுதியான மாறுதல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற காரணங்களால் கோபம் ஏற்படுகிறது. மனஅழுத்தம் இருப்பவர்களுக்கும் பதற்ற நோய் இருப்பவர்களுக்கும் பருத்திக் கொட்டையிலிருந்து பட்டென பஞ்சு வெடிப்பது போல கோபம் வெளிப்படும். அது போல இருமுனைப் பிறழ்வு நோய் இருப்பவர்களுக்கு மனவெழுச்சி இருக்கும் போது கோபம் தான் ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கிறது. மனச்சிதைவு நோய் இருப்பவர்களுக்கு மாயக்குரல் கேட்பதாலோ, மாய எண்ணத்தினாலோ கோபம் வரலாம். அவர்கள் ஏன் கோபப்படுகிறார்கள் என மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அது போலத் தான் மனவளர்ச்சி குன்றியோரும் ’டிமன்ஷியா’ எனும் மறதி நோய் உள்ளவர்களுக்கும் இயலாமையாலும் உணர்ச்சியை வெளிப்படுத்த தெரியாததாலும் கோபம் வரலாம்.

கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழிகள் என்னென்ன?

முதலில் கோபம் என்பது மற்ற உணர்ச்சிகள் போல ஒரு உணர்ச்சி தான் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எப்படி சிரிப்பு வந்தாலும் நாகரிகம் கருதி சில இடங்களில் சிரிப்பை அடக்கிக் கொள்கிறோமோ அது போல கோபத்தையும் அடக்க முயற்சிக்கலாம். எதையும் சொல்லும் முன்னும் ,ஒரு சில நொடிகள் என்ன சொல்லப் போகிறோம்?,எதனால் அதை சொல்லப் போகிறோம்? என யோசிக்கலாம்.
யோசிக்கக் கிடைத்த அந்த சில நொடிகள் முடிந்தவுடன் தான் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக மற்றவருக்கு புரியும் படி எப்படி சொல்லலாம் என யோசிக்கலாம். சுற்றி வளைத்துப் பேசாமல் நேரடியாகச் சொல்ல வந்ததை மற்றவரின் மனம் புண்படாதவாறு சொல்லலாம்.

சொல்ல வந்ததை அந்தச் சூழ்நிலையில் நிதானமாக,தெளிவாகச் சொல்ல முடியாது என நினைக்கும் பட்சத்தில் அந்த இடத்தை விட்டு வெளியேறி ஒரு சிறு நடை போட்டுவிட்டு வரலாம்.

இன்னும் சொல்லப் போனால், சில சமயங்களில், சொல்ல வந்ததை உடனே சொல்ல வேண்டுமென அவசியமில்லை. இன்னும் சற்று நேரம் எடுத்து, சிந்தித்து அல்லது தெளிவாக ஒரு காகித்தில் எழுதிப் பார்த்து, அதைப் பயிற்சி செய்து பின் சொல்லலாம்.

கோபப்படுத்திய விடயத்தை மறந்து, அதற்கு காரணமாக இருந்த பிரச்சினைக்கு ஏதாவது மாற்று வழி இருக்கிறதா என யோசிக்கலாம். உங்களால் எதனை மாற்ற முடியும் எதனை மாற்ற முடியாது எனும் உண்மை நிலையை ஆராய்ந்து உணர முயற்சிக்கலாம். கோபம் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக அதிகப்படுத்தும் என்பதை மனதுக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளலாம்.

நமது கோபத்துக்கு நமது செயலுக்கு மற்றவர் மீது பழி போடுவதை விடுத்து முதலில் நம் செயலுக்கோ கோபத்துக்கோ நாம் பொறுப்பெடுத்து பழக வேண்டும். உதாரணமாக அலுவலகத்துக்கு தினம் நேரம் கழித்து போவதால் கடிந்துகொண்ட முகாமையாளர் மீது கோபப்படுவதை விடுத்து முதலில் உங்கள் செயலுக்கு பொறுப்பெடுத்தால் கோபத்தின் வீச்சு குறையும், தீர்வு பிறக்கும்.

கோபம் நம்மை நாமே காயப்படுத்தும் செயல் என நாம் அறிவோம். கோபப்படுவதால் நமது உடலில் ’கார்டிசால்’ எனும் இரசாயனம் அதிகம் சுரந்து உடல் உறுப்புகளைக் காயப்படுத்துகிறது. பலருக்கு கோபம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் நம்மை அழிக்கும் கோபத்தை விட்டு, மற்றவருக்கு விட்டுக் கொடுப்பதும் அவர்களை மன்னிப்பதும் தான் நமக்கு நல்லது அப்படித் தானே? அது உறவையும் மேம்படுத்துமல்லவா?

கோபத்தை சில நேரங்களில் நகைச்சுவையாக மாற்றி வெளிப்படுத்தலாம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்த மாதிரியும் இருக்கும், மனக்காயம் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். சார்லி சப்ளின் போன்ற நகைச்சுவை கலைஞர்கள் ஃபாசிசத்தின் மீது உள்ள கோபத்தை நகைச்சுவை மூலமே வெளிப்படுத்தினர். இன்றைய காலத்தில் பல மீம்ஸ் வகை நகைச்சுவைகள் இந்த வகையைச் சார்ந்தவை என சொல்லலாம். ஆனால் உருவக் கேலி செய்வதையோ எள்ளல் வகையில் கிண்டல் செய்வதையோ தவிர்க்க வேண்டும். அது பகையை அதிகரிக்கும்.

கோபம் வரும் போது சில பேருக்கு இசை கேட்பதோ, தியானம் செய்வதோ, ‘நான் அமைதியை விரும்புகிறேன்’ எனத் திரும்ப திரும்ப மனதுக்குள் சொல்வதோ, முறையான மூச்சுப் பயிற்சி செய்வதோ உதவும். சில பேருக்கு தனது எண்ணங்களை ஒரு டயரியில் எழுதுவதால் கோபம் குறையலாம். பொதுவாக உடல் நலத்தை பேணி, தூக்கத்தையும் பேணி, தினமும் தேவையான அளவு உடற்பயிற்சியும் செய்து ஆரோக்கியமான உணவு உண்டு வந்தாலும் நல்லது தான்.

கோபம் என்பது சில பேருக்கு கட்டுக்கடங்கா வெள்ளம் போல அல்லது ஒரு எரிமலை போல வெளிப்படும். தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை எனும் பட்சத்திலும் கோபத்தால் தனது அமைதியும் சுற்றி இருப்பவர்களின் அமைதியும் கெடுகிறது எனும் பட்சத்திலும் உதவியை நாடுங்கள். கோபம் என்பது எல்லா உணர்ச்சிகளையும் போல ஒரு உணர்ச்சி தான். அதை நல்ல முறையில் மடைமாற்றி அமைதியடைய எல்லோராலும் முடியும் எனும் உண்மையை நம்புவோம் .

மனிதா, பதவி மேல் உனக்கு தீராக்காதலோ?

மனிதர்களுக்கு உண்டாகும் பல உளநோய்கள் விசித்திரமானவை. சில உளநோய்களை நாம் அவை நோயென்ற நோக்கில் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அவையும் கூட , ஒருவகையான ஆளுமைச் சிதைவுகளே. அவ்வகையில் எம்மில் பலரிடத்தே உண்டாகும் பதவிமோகம் அல்லது தலைமைத்துவ ஆசை என்பதற்கான அடிப்படை உளவியல் காரணிகளையும் அவற்றை சரியான வழியில் திசைப்படுத்துவதற்கான வழிகளையும் ‘எதிரொலி’ வாசகர்களுக்காக இங்கே கேள்வி -பதிலாக தருகிறார் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் ரைஸ்.

கேள்வி: ஏன் சில பேர் பதவி மோகம் கொண்டுள்ளனர்?

பதில்: உணவு, உடை, இருப்பிடம் போல மனிதனின் இன்றியாமையாத தேவைகளில் ஒன்று, தான் சார்ந்த சமுதாயத்தில் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படுவது என்பது. அந்தத் தேவை இலகுவாகப் பூர்த்தியடைய வேண்டுமென்றால் பிறர் கவனத்தை ஈர்க்கும் வகையில் மற்றவர்கள் யாரும் செய்யாத ஏதாவது ஒன்றை விசேடமாகச் செய்துகாட்ட வேண்டும். அப்படி விசேடமாக எல்லோராலும் செய்ய முடியாதல்லவா. அப்படியென்றால் ஒரு கூட்டத்தில் வேறு எப்படியாவது தன்னை தனித்துக காட்ட வேண்டும். அதில் முதன்மையானதும் அதிக திருப்தி தருவதும் எது என்றால் தலைமைப் பதவி தான், அல்லது குறைந்தபட்சம் துணைத் தலைவர் பதவி. இது ஒரு மனிதன் தனது சுயத்தை, சுயமதிப்பை பாதுகாத்துக் கொள்ள செய்யும் முயற்சியாகவும் இருக்கலாம். மனிதன் வேட்டையாடி பிழைத்திருந்த காலத்தில், எங்கு வேட்டையாடுவது எனத் திட்டமிடுதலுக்கும், கூட்டத்தின் பாதுகாப்புக்கும், வேட்டையாடிய உணவைப் பகிர்வதற்கும் ஒரு தலைமை தேவையாக இருந்ததால், தலைவன் எனும் பதவி முதலில் உருவாகி இருக்க வேண்டும். அக்காலத்தில் தலைவன் இல்லாத கூட்டம் எதிரிகளால் இலகுவாக தாக்கப்படக் கூடியதாகவே இருந்திருக்கிறது.

ஆனால் பொதுவாக இக்காலத்தில் Narcissism எனும் தற்காதல் கொண்டவர்களும் attention seekers எனும் கவனஈர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்டவர்களும் எப்படியாவது தலைமைப் பதவிக்கு வர வேண்டும் எனத் துடிக்கின்றனர்.

ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் எனும் இடத்தில் தனது பெயர் இருப்பதை கூட பலர் சிலாகித்து ஆனந்தமடைவதை நாம் பார்த்திருப்போம். ஒரு தலைவனுக்குக் கீழ் இருக்கும் தொண்டனுக்குக் கூட அதில் தான் தான் தலைமைத் தொண்டனாக இருக்கத் தான் ஆசை. ஒரு நாள் தானும் தலைவனாவேன் எனும் உந்துதல் எந்த தொண்டனுக்கும் இருக்காமலிருக்காது. சிலர் அதை நோக்கி தன்னை செலுத்தி மெல்ல மெல்ல தலைமைப் பண்பை கற்று ஒரு நாள் தலைவராகிவிடுவர். ஆனால் பல பேர் அதற்கு முயற்சித்தே காலத்தை ஓட்டி விடுவர். அப்படி இயலாமல் இருப்பவர்கள் தலைவனிடத்திலேயே தனது பிம்பத்தை பார்க்கத் தொடங்குவதால், அவனை புகழ்வதன் மூலமும் ,தகுதிக்கு மீறி் போற்றுவது மூலமும் தம் நிறைவேறா ஆசையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இந்தப் புகழ்ச்சியும் போற்றுதலும் அந்த தலைவனுக்கு அந்த பதவியின் மேல் உள்ள மோகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. அதனால் அவன் தன்னைத் தவிர வேறு யாரும் தலைவனாக வந்துவிடக் கூடாது என நினைக்கிறான். பதவியை இழந்தால் சிலர் தனது அடையாளத்தையே இழந்ததாக நினைத்து எந்தக் கீழ் நிலையிலும் இறங்கிப் போய் அதனை மீண்டும் பற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

கேள்வி: எல்லோராலும் தலைவராக முடியாதல்லவா? அப்படியென்றால் அந்த உந்துதலை அல்லது தேவையை எப்படி மனிதன் பூர்த்தி செய்கிறான்?

பதில்: விளம்பரம் இல்லாமல் பிறருக்கு நல்லது செய்வது மூலமும் பிறர் நலன் பேணுவதின் மூலம் அந்த உந்துதலை நல்ல பண்புள்ள மனிதன் பூர்த்தி செய்கிறான். அவன் தலைமைப் பண்பை தன்னுள் கொண்டிருந்து, தொடர்ந்து மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருப்பான். பதவியில் இல்லாமலே அவன் தனது நல்ல செயல்களால் மற்றவர்களுக்கு உந்துதல் சக்தியாக இருப்பான். பதவியில் இல்லாவிட்டாலும் அவனும் தலைவன் தான். பிறரின் சந்தோசத்தில் தான் இவன் போன்றோரின் சந்தோசம் அடங்கி இருக்கிறது. ஒரு நல்ல தலைவன் என்பவன் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்துக் கூடியவனாக இருப்பவனே ஆவான்.

கேள்வி: சில பேரைப் பார்த்தால் ஏன் தான் இவன் எல்லாம் தலைவனாக இருக்கிறானோ எனத் தோன்றுகிறதே, அது ஏன்?

பதில்: இயற்கையாகவே உள்ள இந்த உந்துதலாலோ இல்லை மேலே சொன்ன தற்காதல், அதீத கவனம் விரும்புதல் போன்ற காரணங்களாலோ தலைமை குணம் எதுவுமே இல்லாமலே எப்படியாவது அடிச்சி பிடிச்சி பதவியை பலர் அடைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரும் நல்ல தலைவனாக இருப்பதில்லை.. இது போல தலைவர்களின் சந்தோசம் அவர்களின் சொந்த நலனில் மட்டும் தான் தொக்கி இருக்கும், மற்றவர்களின் நலனில் அல்ல. ஆனால் தன்னை மற்றவன் சிறந்த தலைவன் என புகழ வேண்டுமென மட்டும் எதிர்ப்பார்ப்பர். இது போல உள்ள தலைவர்களைப் பார்த்தால் தான் நமக்கு அப்படித் தோன்றும்

மனமே! காயமா?

 ஆஸ்திரேலியாவில் மன அழுத்ததினால் பாதிக்கப்படுவோரில் புலம்பெயர்ந்தவர்களே அதிகம். குறிப்பாக அகதிகளில் இளவயதினரின் சாவுகள் அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய மெல்லக்கொல்லும் மன அழுத்தம் குறித்து சிட்னிவாழ் பிரபல மன அழுத்த வைத்தியர் ரைஸ் , ‘எதிரொலிக்காக’ வழங்கிய பிரத்தியேக செவ்வி இது.

கேள்வி : புலம் பெயர்ந்தவர்களுக்கு பொதுவாக என்னென்ன வகையில் மனநலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு ?

பதில் : புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய மொழி மற்றும் புதிய கலாசாரத்துக்குள் நுழைவதால் புலம் பெயர்ந்தவர்களுக்கு பொதுவாக மனஅழுத்தம், பதற்ற நோய், மனச்சிதைவு போன்ற மனநலச் சோர்வுகள் சராசரி மனிதர்களை விட அதிக சதவிகிதத்தில் ஏற்படுகிறது. ஆனால் உள்நாட்டுப் போர், பேரினவாத ஒடுக்குதல் மற்றும் தாய் மண்ணின் மீது வெளி நாட்டினரின் ஆக்கிரமிப்பு என பல காரணங்களால் அகதிகளாகி, பின் புலம் பெயர்ந்தவர்களுக்கு மேலே சொன்ன பாதிப்புகள் தவிர்ந்து, Post Traumatic Stress Disorder (PTSD) எனச் சொல்லக் கூடிய மனக்காய நோயும் ஏற்படுகிறது.

கேள்வி : மனக்காயமா? அது ஏன் அப்படி? இந்த PTSD பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லுங்களேன் ?

பதில் : அகதியாக வருபவர்கள் புலம் பெயர்வதற்கு முன்பு அனுபவிக்கும் எண்ணிலடங்கா போர் மற்றும் பேரினவாத அடக்குமுறை போன்ற இன்னல்களின் விளைவுகள் , போரினால் அவர்கள் தங்களது வீடு சொத்து இழந்து மற்றும் சொந்த பந்தங்களையும் அப்படியே விட்டு விட்டு நிர்க்கதியாக வருதல், பல அகதிகள் தஞ்சம் புகுந்த நாட்டில் நீண்டகாலம் தடுப்பு முகாம்களி்ல் கடுமையான சூழ்நிலையில் வைக்கப்படுதல், குடி புகுந்த நாட்டில் எளிதில் வேலை கிடைக்காமல் திண்டாடுதல், இனப்பாகுபாடால் புறக்கணிக்கப்படல், தற்ப்போதைய சூழ்நிலை காரணமாக தான் பிறந்த நாட்டுக்கு எளிதில் பயணம் செய்யவோ இல்லை திரும்பிப்போக முடியாத நிலை போன்ற பலகாரணிகளால் இருப்பதாலும் இந்த மனக்காய நோய் அவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.

கேள்வி: மனக்காய நோயின் அறிகுறிகள் என்னென்ன?

பதில் : மனஅழுத்தம் மற்றும் மனப்பதற்றம் என்பவற்றோடு அவர்களுக்கு சில பிரத்யேகமான அறிகுறிகளும் இருக்கலாம். ஏற்கனவே அனுபவித்த கொடுமைகள் , விடாமல் கொடுங்கனவாக (nightmares) வருவதால் தூக்கம் பாதிக்கலாம், பழைய கொடுமையான சம்பவங்களின் ஞாபகம் (flash backs) திடீர் திடீரென ஏற்பட்டு அடிக்கடி மனப்பதற்றம் (panic attack) ஏற்படலாம், தன்னை சுற்றி ஏதாவது ஆபத்து நேரப் போகிறதோ எனும் பதற்றத்திலேயே எப்போதும் இருக்கலாம் (hyper vigilance) , தன்னைச் சுற்றி ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும் பதறும் நிலை இருக்கலாம் (startling response), போர், விமானம், துப்பாக்கிச் சூடு போன்ற செய்திகளை கேட்கவோ பார்க்கவே கடினமாக இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பர். இது போக அவர்களுக்கு மனஅழுத்தத்துக்குரிய மற்ற அறிகுறிகளும் சேர்ந்தே இருக்கலாம். இதனால் சிலர் தங்களது துன்பங்களுக்கு வடிகாலாக போதை மற்றும் சூதாட்டாத்துக்கும் அடிமையாகின்றனர்.

எனக்குத் தெரிந்த இலங்கையிலிருந்து அகதியாக வந்து குடிபெயர்ந்த ஒருவர் எப்பொழுதெல்லாம் தனது வீட்டின் மேல் பகுதியில் விமானம் பறக்கிறதோ அப்பொழுதெல்லாம் ‘செல் அடிக்கிறாங்கள்’ எனச் சொல்லிக் கொண்டே பதறி பயந்தடித்துக் கொண்டு தனது வீட்டின் மேசையின் கீழ் போய் ஒளிந்துக் கொள்வார்.

இதில் துயரமான விடயம் என்றவென்றால் போர் அகதிகளாக வந்த பல பேர் இந்நாட்டில் முறையான விசா கிடைக்காததால் பெரும் அவதியுறுகின்றனர். அவர்களில் சிலர் இந்த மனப் போராட்டத்தில் மனமுடைந்து தற்கொலை செய்தும் கொள்கின்றனர்.

அது போல அவர்களின் பொது உடல் நலனும் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது. இவ்வருடத்தின் முதல் கால் பகுதியில் மட்டும் குறைந்தது பத்து இலங்கை அகதிகள் திடீரென உடல் நல குறைவால் இறந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சியான தகவல்.

கேள்வி: இதற்கு தீர்வு உண்டா ?

பதில்: ஆம் நிச்சயமாக இருக்கிறது. பொதுவாக பதற்ற நோய்க்குரிய மருந்தும், கொடுங்கனவுக்கான பிரத்யேக மருந்து என்பவற்றைத் தவிர , மனக்காயத்துக்கென பிரத்யேகமான மனநல ஆலோசனைத் தேவைப்படும். இது போக Eye Movement Desensitization and Reprocessing (EMDR) எனும் ஒரு வகை மனநல ஆலோசனையும் சில பேருக்கு தேவைப்படலாம். மனக்காயம் ஏற்பட்டவர்களுக்கு ஆலோசனை கொடுக்கும் போது மனக்காயம் ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி விவாதிப்பது உண்டு. ஆனால் அவற்றைப் பற்றிய ஞாபகங்கள் ஆழ்மனதில் அமுக்கப்பட்டுக் கிடப்பதால் அவைப்பற்றிய விபரங்கள் அவர்களுக்கு எளிதில் வெளி மனதுக்கு வராது. அந்த சம்பவங்களின் ஞாபகத்தை தூண்டி அதை அலசி காயத்துக்கு தீர்வு காண்பது தான் இந்த EMDR எனுப்படும் சிகிச்சையின் சாராம்சம். இங்கு N(SERVICE FOR THE TREATMENT AND REHABILITATION OF TORTURE AND TRAUMA SURVIVORS) மனக்காயம் பட்ட அகதிகளுக்கு இலவசமாக மனநல ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கிறது.

நேர்காணல் : நேகா

இரட்டை சகோதரிகளுக்கு ஒரு நாளில் திருமணம் – ஒரே நாளில் பிரசவம்

கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயான ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ சிப்பாய் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள் ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர். அதாவது கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் திகதி, ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த வைத்தியசாலையிலேயே குழந்தைகளை பெற்று கொள்ள விரும்பினர். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு ஸ்ரீலெட்சுமிக்கும் வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ‘ஓ’ பாசிட்டிவ் ஆகும்.

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிய இங்கிலாந்து சுகாதார அமைச்சருக்கு பேரதிர்ச்சி

இங்கிலாந்தின் சுகாதார அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சஜிட் ஜாவிட் (Sajid Javid) வைரஸ் தொற்றுக்கு இலக்கா கியிருக்கிறார்.

மேலதிக பரிசோதனை களின் முடிவை எதிர்பார்த்துள்ள அவர் தன்னை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் ஜாவிட் கடந்த மார்ச்சிலும் பின்னர் மேயிலுமாக அஸ்ராஸெனகா தடுப்பூசிகளை இரு தடவை பெற்றிருந்தார்.

உடல் சோர்வை அடுத்தே அவர் தன்னை சுய வைரஸ் பரிசோதனைக்கு உட்பட்டுத் தினார் என்று அவரே கூறியுள்ளார். அவருக்குத் தொற்றின் அறிகுறிகள் மிக குறைவாக உள்ளன.

“இரண்டு தடுப்பூசி களையும் ஏற்றியுள்ளதால் தொற்றின் அறிகுறிகள் மோசமாக இருக்கவில்லை” என்று அவர் தனது ருவீற்றர் வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஊசி ஏற்றாதவர்களை விரைவாக அதனைப் போட்டுக்கொள்ளுமாறு அவர் வேண்டு கோள்விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் வைரஸ் திரிபுகளது தொற்றுக்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. கடந்த வெள்ளியன்று மட்டும் ஒருநாள் தொற்று எண்ணிக்கை 50 ஆயிரம் ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. பூரணமாகக் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகுகின்றனர். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்று நோயியலாளர்கள் கூறுகின்றனர்.தடுப்பூசி நூறு வீதம் தொற்றைத் தடுக்காது.

ஆனால் வைரஸின் மோசமான பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

பாரிஸிலிருந்து குமரதாசன்

இலங்கையில் மேலும் 47 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 47 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி இணைப்பில் இருந்தே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதன்படி ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கான விசேட அறிவித்தல்

அரச தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் (அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு) பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே, குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பான தகவல்களும், சுகாதார பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்படி ஊடகவியலாளருக்கு வைரஸ் தொற்றியுள்ளதா என்பது தொடர்பான பரிசோதனை அறிக்கை வெளிவரும்வரை, பொதுவெளியில் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற ஊடகவியலாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு – இதுவரை 348,909 பீசீஆர் பரிசோதனைகள்

இலங்கையில் இதுவரையில் 3 இலட்சத்து 48 ஆயிரத்து 909 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கொரோனா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்றுவரையில் 5 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 3 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர் .13 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரத்து 800 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. திவுலப்பட்டிய கொரோனா கொத்தணிமூலமே இதுவரையில் ஆயிரத்து 700 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்றும் பீசீஆர் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன.

‘இறுக்கமான சுகாதர நடைமுறை’ – இன்று வெளிவரும் வர்த்தமானி

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார எச்சரித்துள்ளார்.

குறித்த வர்த்தமானியின் பிரகாரம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 06 மாதங்கள் சிறைத் தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட விடயங்களை குறித்த வர்த்தமானியூடாக சட்டமாக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹரினுக்கு ‘கொவிட் -19’ தொற்றில்லை!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ பீசீஆர் பரிசோதனை தொடர்பான மருத்துவ அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். அதில் அவருக்கு வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹரின் பெர்ணான்டோ எம்.பி., கடந்த 7 ஆம் திகதி தன்னை பீசீஆர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். கொரோனா தொற்றியதாலேயே அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என தகவலும் பரப்பட்டது.

எனினும், சமூகநலன் கருதியே தான் சுயமாக முன்வந்து பீசீஆர் பரிசோதனை மேற்கொண்டதாக ஹரின் அறிவித்தார். அதுமட்டுமல்ல இன்று மருத்துவ அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, பீசீஆர் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் ஹரின் பெர்ணான்டோ நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றமை தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குளிர்கால உடல் பராமரிப்பு!

காலநிலைக்கேற்ப உடல் நிலைகளும் மாறும். அதற்கேற்றாற்போல் உடல் பராமரிப்பின் தன்மைகளையும் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் குறிப்பிட்ட சில வகைகளில் பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.

*சருமத்துக்குப் பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து ஜொலிப்பாக்கும்.

*குளிர்ந்த காற்று முகத்தில் படும்போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக்கூடும்.

*குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைவதால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் கிறீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

  • பேசியலைத் தவிர வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் விடும்.
  • அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும்போது பயன்படுத்தி வரலாம்.
  • நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றலாம். இது குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.

உடலை வலுப்படுத்தும் பயிற்சி!

உடல் வலுவாக இருந்தால்தான் ஆயுள் வலுவாக இருக்கும். அதற்கான பயிற்சி ஒன்றை இங்கு பார்ப்போம்.

உடற்பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின் தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்த நிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள் இழுத்து கீழே உட்கார்வது போன்ற நிலைக்குக் கால் முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.

சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலுக் கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.

தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

மாதுளம் பூவும் மருத்துவ குணமும்!

மாதுளம் பழத்தில் விட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல, மாதுளைப் பூவும் சத்துகளை கொண்டுள்ளதுடன் இது இரத்த மூலத்துக்கும், இரத்த பேதிக்கும் மிகச் சிறந்த மருந்துப் பொருளாகும்.

மாதுளம் பழத்தை விட மாதுளம் பூவுக்கு அதிக ஆற்றல் உண்டு. மாதுளம் பூவுக்கு வாய்ப்புண்கள், குடல் புண்களை ஆற்றுகிற தன்மை உண்டு.

இரும்பு, கல்சியம் சத்துகள் நிறைந்தது. இரத்த மூலத்தை குணப்படுத்துவதில் மாதுளம் பூக்கள் பெரிய பங்கு வகிக்கின்றன, இரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு நாள் மாதுளம் பூவைச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தி அடையும்.

உடல் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியைத் தரும் ஆற்றல் மாதுளம் பூவுக்கு இருப்பதால் உஷ்ண உடல் வாகு உள்ளவர்கள் சாப்பிடலாம்.

வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் மாதுளம் பூவுக்கு உள்ளது. வயதுக்கு வந்த பெண்களுக்கு தர, ஆரோக்கியம் மேம்பட்டு உடல் பலப்படும். மாதுளம் பூவைத் துவையல் செய்து சாப்பிட்டால் பல நன்மைகளை அடையலாம்.

உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொண்டால் கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டி அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் அடையும்.

உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். இரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும்.

கற்றாழையும் அதன் பயன்களும்!

இயற்கையாகவே எமக்குப் பல்வேறுபட்ட நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் கற்றாழையின் நன்மை என்றும் நமக்கு இலகுவாகக் கிடைக்கக்கூடியது. அதனால் ஏற்படக்கூடிய மருத்துவப் பலன்கள் குறித்துப் பார்ப்போம்.

fற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சினைகளை விரைவில் போக்கிவிடுகிறது. கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளில் கிடைக்கும் ஜெல்லைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

தேன், மஞ்சள் தூள், பால் மற்றும் கற்றாழை ஜெல்லை ஒன்றாகக் கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்துக் கழுவ வேண்டும். இப்படிச் செய்து வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.

வயதாவதால் ஏற்படும் புள்ளிகள், பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்க, கற்றாழை ஜெல்லில் ‘ரோஸ் வோட்டர்’ சேர்த்து கலந்து, தினமும் முகத்தை கழுவ வேண்டும்

வெயிலில் அதிகம் சுற்றித் திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே, அத்தகைய கருமையைப் போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.

தற்போதுள்ள மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால், பலருக்கு இளம் வயதிலேயே, சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமைத் தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்துக்குப் பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சினையைத் தடுக்கலாம்.