ICC U19 உலகக்கிண்ணத்தை வென்றது ஆஸி. அணி!

2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 4வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது ஆஸ்திரேலியா அணி.

தென்னாப்பிரிக்காவில் நடந்துவந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது பரபரப்பான மோதலுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

உலகக்கோப்பையை வெல்ல 16 அணிகள் போட்டிப்போட்ட நிலையில், சிறப்பாக செயல்பட்ட இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தின.

விறுவிறுப்பாக நடந்துமுடிந்த அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 2 விக்கெட்டுகள் மற்றும் 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.

கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியானது தென்னாப்பிரிக்காவின் பெனோனி, வில்லோமூர் பார்க்கில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 253 ஓட்டங்களை இந்திய அணிக்கு நிர் 50 ஓவர்கள் முடிவில் 253 ஓட்டங்களை எடுத்தது ஆஸ்திரேலியா அணி .

254 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு எதிராக சிறப்பான வேகப்பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இதனால் இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

 

ஆஸி. ஓபன் டென்னிஸ் – நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதல் நிலை வீரரும் 10 முறைசாம்பியன் பட்டம் வென்றவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னருடன் மோதினார். இதில் ஜன்னிக் ஷின்னர் 6-1, 6-2, 6-7(6-8), 6-3என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-5, 6-3, 6-7(4-7), 6-7(5-7), 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் டேனியல்மேத்வதேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சாம்பியன் பட்டம் வெல்வதற்கான இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஜிவெரேவ் – ஜன்னிக்ஷின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

 

விழிநீர் பெருக்கெடுப்பு – கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார் டேவிட் வார்னர்…!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னர் தனது கடைசி இன்னிங்ஸில் அரைசதம் விளாசிவிட்டு, கண்ணீருடன் நேர்காணல் வழங்கிய சம்பவம் இரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ஓட்டங்களுக்கு சுருண்ட நிலையில், ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 14 ஓட்டங்கள் முன்னிலையுடன் சேர்த்து 130 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

கடைசி முறையாக களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னருக்கு பாகிஸ்தான் வீரர்கள் தரப்பில் மரியாதை வழங்கப்பட்டது. இதன்பின் டேவிட் வார்னர் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரைசதம் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியின் 119 ஓட்டங்களை எட்டிய நிலையில், வார்னர் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதி போட்டி என்பதால் உணர்ச்சிப்பூர்வமாக காணப்பட்ட டேவிட் வார்னர், சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயர்த்தி பெவிலியன் நோக்கி நடந்து சென்றார். அதன்பின் பெவிலியன் அருகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு தனது ஹெல்மெட், கிளவுஸ் உள்ளிட்டவற்றை கழற்றி பரிசாக அளித்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

ஆஸி. மண்ணில் உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது ஸ்பெயின்

மகளிர் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இறுதி ஆட்டம் சிட்னியில் நேற்றிரவு 75 ஆயிரம் இரசிகர்களின் முன்னிலையில் அரங்கேறியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஸ்பெயினின் கையே சுற்று ஓங்கி இருந்தது. 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை லாரென் ஹெம்ப் அடித்த சூப்பரான ஷாட் கம்பத்தில் பட்டு நழுவியது.

18-வது நிமிடத்தில் ஸ்பெயினின் அல்பா ரிடோன்டோ அடித்த ஷாட்டை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் தடுத்து நிறுத்தினார். 29-வது நிமிடத்தில் ஸ்பெயின் தலைவர் ஒல்கா கர்மோனா, சக வீராங்கனை கால்டென்டி தட்டிக்கொடுத்த பந்தை அழகாக கோலுக்குள் திருப்பி அசத்தினார். பதிலடி கொடுக்க இங்கிலாந்து கடுமையாக போராடியது. ஆனால் கச்சிதமான வியூகங்களுடன் பிணைக்கப்பட்ட ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்தை இங்கிலாந்து வீராங்கனைகளால் உடைக்க முடியவில்லை.

49-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை கால்டென்டி இலக்கை நோக்கி அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் கேட்டா கால் பாய்ந்து விழுந்து வெளியே தள்ளினார்.

68-வது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு மேலும் ஒரு கோல் போட சந்தர்ப்பம் கனிந்தது. கோல் பகுதியில் வைத்து பந்தை இங்கிலாந்து வீராங்கனை கெய்ரா வால்ஷ் கையால் தடுத்ததால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த பொன்னான வாய்ப்பை ஸ்பெயின் வீராங்கனை ஜெனிபர் ஹெர்மோசா வீணடித்தார். அவர் பெனால்டியில் உதைத்த பந்தை இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி எர்ப்ஸ் துல்லியமாக தடுத்து தங்கள் அணியை காப்பாற்றினார்.

இதன் பின்னர் ஸ்பெயின் வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் கம்பத்தை முற்றுகையிட்டு இங்கிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கினர். பந்தை தங்களது கட்டுப்பாட்டில் அதிக நேரம் (58 சதவீதம்) வைத்திருந்த ஸ்பெயின் வீராங்கனைகள் இறுதி கட்டத்தில் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினர். கடைசி நிமிடத்தில் இங்கிலாந்தின் கார்னர் ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் பிடித்ததுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தின் கனவை சிதைத்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

கடந்த ஆண்டு 17 வயதுக்குட்பட்டோர், 20 வயதுக்குட்டோபர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய ஸ்பெயின் இப்போது சீனியர் பட்டத்தையும் வென்று விட்டது. ஒரே காலக்கட்டத்தில் இந்த பட்டத்தையும் சுவைத்த முதல் அணி ஸ்பெயின் தான்.

கால்பந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் உலகக் கோப்பை இரண்டையும் கைப்பற்றிய 2-வது அணி என்ற பெருமையை ஸ்பெயின் பெற்றது. ஏற்கனவே ஜெர்மனி இச்சாதனையை செய்துள்ளது. ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்தில் 2010-ம் ஆண்டு ஸ்பெயின் பட்டத்தை வென்று சாதித்தது. அப்போது ஸ்பெயின் அணி குரூப் பிரிவில் ஒரு ஆட்டத்தில் தோற்ற பிறகே எழுச்சியுடன் முன்னேறி இறுதி ஆட்டத்தில் ஒரு கோல் போட்டு கோப்பையை கையில் ஏந்தியது. இதே போல் தான் இப்போது பெண்கள் உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயினுக்கு நிகழ்ந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நாளை ஆரம்பம்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நாளை ஆரம்பமாகின்றது.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான 111-வது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் 29 ஆம்திகதி வரை நடக்கும் இந்த டென்னிஸ் திருவிழாவில் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி போடாத விவகாரத்தால் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாமல் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட முன்னாள் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), இந்த சீசனில் விளையாட உள்ளார்.

தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக கூறியுள்ள ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை ருசித்த வீரர் (9 முறை) என்ற பெருமைக்குரியவர் ஆவார். இந்த ஆண்டும் ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்த பிரகாசமான வாய்ப்புள்ளது. அவர் முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ராபர்ட்டோ கார்பல்லாஸ் பானாவுடன் மோதுகிறார். அவர் கோப்பையை வெல்லும் பட்சத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரபெல் நடாலை (22 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்து விடுவார்.

‘வைட் வோஷ்’ – தப்புமா தென்னாபிரிக்கா? ஆஸியுடன் நாளை பலப்பரீட்சை!

ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நாளை ஆரம்பமாகின்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை ஆரம்பமாகின்றது.

உள்ளூர் சூழலில் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. விரலில் ஏற்பட்ட காயத்தால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக ஹேசில்வுட், ஆஷ்டன் அகர் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த வயது 82 வயதுடைய பிரபல கால்பந்து வீரரான பீலே கடந்த வருடம் பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது.

எனினும், கடந்த சில நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்துள்ளது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள வைத்தியாலையில் கடந்த மாதம் இறுதியில் பீலே சேர்க்கப்பட்டார்.

எனினும், புற்றுநோய் வேகமாக பரவியதால், நுரையீரல், இதய செயல் இழப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கான அதிநவீன பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதயம் மற்றும் சிறுநீரகம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சிகிச்சை பலனின்றி கால்பந்து ஜாம்பவான் பீலே உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

21 வருட வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்தார், இதில் 92 போட்டிகளில் 77 கோல்கள் அடங்கும்.

1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர், பீலே 2000 ஆம் ஆண்டில் ஃபிஃபாவின் நூற்றாண்டின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அனறு மரடோனா…இன்று மெஸி….!

1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் கோப்பையை வென்றுள்ளார்.

2002 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து கோப்பையை வென்று வந்த ஐரோப்பிய நாடுகளின் வீறுநடைக்கு அர்ஜென்டினா முடிவு கட்டியது.

உலகக் கோப்பையில் அதிக ஆட்டங்களில் விளையாடியவர் (26 ஆட்டம்) என்ற சாதனையை மெஸ்சி படைத்தார்.

2010-ம் ஆண்டு ஸ்பெயின் அணி தொடக்க லீக்கில் தோற்று அதன் பிறகு மகுடத்துக்கு முத்தமிட்டது. இதே போல் இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா முதல் லீக்கில் சவுதிஅரேபியாவிடம் தோற்று விட்டு இப்போது சாம்பியனாக உருவெடுத்துள்ளது.

1962-ம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பையை அடுத்தடுத்து எந்த அணியும் வென்றதில்லை. அந்த பெருமையை பெறும் பிரான்சின் முயற்சி மயிரிழையில் நழுவிப்போனது.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின் முடிவு பெனால்டி ஷூட்-அவுட் மூலம் தீர்மானிக்கப்படுவது இது 3-வது முறையாகும். 1986-ம் ஆண்டில் மரடோனா தலைமையில் அர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் ‘மேஜிக்’ நிகழ்த்தியுள்ளார்.

36 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றது ஆர்ஜென்டினா!

1986 ஆம் ஆண்டில் மரடோனா தலைமையில் ஆர்ஜென்டினா அணி மகுடம் சூடியது. அவரது வழியில் மெஸ்சியும் ‘மேஜிக்’ நிகழ்த்தியுள்ளார். 2022 உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா அணி முத்தமிட்டுள்ளது.

22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20 ஆம் திகத கோலாகலமாக தொடங்கியது.

32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்றிரவு மோதின.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் அனல் பறந்தது. அதில் பிரான்ஸ் வீரர் பாக்சில், அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. இதனையடுத்டு ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி கோலாக மாற்றி அசத்தினார். இதனால் அர்ஜென்டினா ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆர்ஜென்டினா அணி அதிரடி ஆட்டத்தை அதிகப்படுத்தியது. இதற்கு பலனாக ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் டி மரியா தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார். இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பே, ஆட்டத்தின் 80 மற்றும் 81-வது நிமிடங்களில் தனது அணிக்கான அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து போட்டியை சமன் செய்து அசத்தினார். இதனை பிரான்ஸ் அணி வீரர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

போட்டி சமன் ஆனதால் ஆட்டத்தில் கடுமையாக அனல் பறந்தது. இரு அணி வீரர்களும் கூடுதல் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சியகள் தோல்வி அடைந்தன. 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் அர்ஜென்டினா அணி வீரர் மெஸ்சி போட்டியின் 108 நிமிடத்தில் கோல் அடிக்க அரங்கமே அதிர்ந்தது. இவரைத்தொடர்ந்து பிரான்ஸ் அணி வீரர் எம்பாப்பேவும் ஆட்டத்தின் 118-வது நிமிடத்தில் தனது அணிக்கான 3-வது கோலை அடிக்க ஆட்டத்தின் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களை உச்சகட்ட பரபரப்பில் உறைய வைத்தது.

ஆர்ஜென்டினா வீரர்களான டி மரியா (1), மெஸ்சி (2), மற்றும் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே (3) என்ற கணக்கில் கோல் அடிக்க 3-3 என்று இரு அணிகளும் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது. பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

ஆர்ஜென்டினா வென்ற மூன்றாவது உலக்கிண்ணம் இதுவாகும். 1978 இல் முதல் தடவையாக உலகக்கிண்ணத்தையும் 1986 இல் இரண்டாவது தடவையும் வென்றுள்ளது.

உலகக்கிண்ணம் யாருக்கு? ஆர்ஜென்டினா, பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை!

உலகக் கிண்ண கால்பந்தின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது.

32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்டியது. எதிர்பார்க்கப்பட்ட ‘நம்பர் ஒன்’ அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில், கால்இறுதியில் குரோஷியாவிடம் மண்ணை கவ்வியது.

லீக், நாக்-அவுட் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த நிலையில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், அர்ஜென்டினாவும் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மல்லுகட்டுகின்றன.

உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த இறுதி யுத்தத்தில் யார் வெற்றி பெற்றாலும் அது அவர்கள் வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக அமையும்.

 

குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்!

22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி, கட்டார் நாட்டில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பையின் இறுதி போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக 3-வது இடத்துக்கான போட்டி இன்று நடக்கிறது. இதில் அரை இறுதியில் தோல்வி அடைந்த குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

இப்போட்டி தோகாவில் உள்ள கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கிறது. அரை இறுதியில் குரோஷியா, அர்ஜென்டினாவிடமும், மொராக்கோ பிரான்சிடமும் தோல்வி அடைந்தன. லீக் போட்டியின் போது குரோஷியாவும், மொராக்கோவும் ‘எப்’ பிரிவில் இடம் பெற்று இருந்தன. இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

இரு அணிகளும் தங்களது முந்தைய ஆட்டங்களில் பலம் வாய்ந்த அணிகளை தோற்கடித்துள்ளதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு ஆரம்பமாகும்.

மொரோக்கோவின் கனவு தகர்வு – இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்!

மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4 ஆவது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின் 5-வது நிமிடத்திலே பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னண்டஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. இந்த சூழலில் ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டும் கோல் எதுவும் அடிக்காததால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வெளியேற்றியது.

இதன் மூலம் வரும் டிசம்பர் 18 ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே மகுடத்திற்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

முதன் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறி மொரோக்கோ சாதனை

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற 3-வது காலிறுதியில் போர்ச்சுக்கல், மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யூசுப் என் நெய்ஸிரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மொராக்கோ அணி முதல் முறையாக உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணி அரை இறுதிக்கு இதுவரை நுழைந்தது இல்லை என்ற குறையையும் தீர்த்துள்ளது.

5 முறைகள் உலகக்கிண்ணம் வென்ற பிரேசில் காலிறுதியுடன் ‘அவுட்’!

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது.

22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.

தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணியினரும் வரிந்து கட்டினர். ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த கோலை அடித்தார். ஆனால் வெற்றியை நெருங்கிய சமயத்தில் பிரேசில் கோட்டை விட்டது.

116-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.

கோப்பைபை வெல்லும் வாய்ப்பில் இருந்த 5 முறை சாம்பியனான பிரேசில் கால்இறுதியோடு மூட்டையை கட்டியது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி கோப்பையை வென்றதில்லை.

ஸ்பெயினை வீழ்த்தி முதன்முறையாக காலிறுதிக்குள் நுழைந்தது மொரோக்கோ

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2 ஆவது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அணியான ஸ்பெயின், 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ அணியை சந்தித்தது.

பந்து அதிக நேரம் ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும், மொராக்கோ அணியினர் அதிரடி தாக்குதல் ஆட்டம் மூலம் ஸ்பெயின் அணிக்கு அச்சுறுத்தல் அளித்தனர். 26-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்கோ அசென்சியோ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 33-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் மஸ்ராய் கோல் வலையை நோக்கி அடித்த வலுவான ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் சிமோன் தடுத்து நிறுத்தினார்.

இரு அணியினரும் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு அவ்வப்போது கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் கடைசி வரை தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு ‘பிரிகிக்’ வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பில் டேனி ஒல்மோ அடித்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாஸ்சின் தடுத்து வெளியேற்றினார்.

வழக்கமான நேரத்தில் (90 நிமிடம்) ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தினாலும் கோல் வலைக்குள் பந்தை அடிக்க முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கபட்டது. மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினார். 3-வது வாய்ப்பில் பாத் பினோன் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார்.

ஸ்பெயின் அணி தங்களது முதல் 3 வாய்ப்புகளிலும் கோல் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. அந்த அணியின் பாப்லோ சராபி பந்தை கோல் கம்பத்தில் அடித்து வீணடித்தார். கார்லோஸ் சோலெர், கேப்டன் செர்ஜியோ ஆகியோர் அடித்த பந்துகளை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார். பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது. கால்இறுதியில் மொராக்கோ அணி , போர்ச்சுகல் அல்லது சுவிட்சர்லாந்து அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

செனகல் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் செனகலை வீழ்த்தி இங்கிலாந்து காலிறுதிக்கு முன்னேறியது.

கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து, செனகல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். ஆட்டத்தின் 38-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் அந்த அணி 2-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயோ சகா ஒரு கோல் அடித்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியறது. செனகல் அணி வீரர்களால் ஒரு கோல் கூட முடியவில்லை.

ஆஸி. ஆர்ஜென்டினா இன்று பலப்பரீட்சை!

கால்பந்து உலகக்கிண்ண தொடரில், இரண்டாவது சுற்றுக்கு 16 நாடுகள் முன்னேறியுள்ள நிலையில், இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில், சுவிட்சர்லாந்து (ஜி), போர்ச்சுக்கல், தென் கொரியா (எச்) ஆகிய 16 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில், இரண்டாவது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து, பி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா இரவு 8.30 மணிக்கு மோதுகின்றன.

இதேபோல், சி பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா, டி பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா நள்ளிரவு 12.30 மணிக்கு மோதுகின்றன.

 

டென்மார்க்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஆஸி.!

உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் இன்று இரவு தோகாவில் உள்ள அல்ஜனூப் ஸ்டேடியத்தில் நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ லேக்கீ தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனை சமன் செய்வதற்காக டென்மார்க் அணியினர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இதனைத்தொடர்ந்து டென்மார்க் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றது.

நெதர்லாந்து ,செனகல் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி

கட்டாரில் 22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் செனகல் – ஈகுவடார் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் செனகல் 3 போட்டிகளில் 2 வெற்றி ,1 தோல்வி என ( ரவுண்ட் 16 ) அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெதர்லாந்து – கட்டார் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என வெற்றி பெற்றது.இதனால் 3 போட்டிகளில் 2 வெற்றி ,1 டிரா என்று நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

குரூப் ஏ பிரிவில் மற்ற 2 அணிகள் (கத்தார் ,ஈகுவடார்) தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

நடுவருடன் வாக்குவாதம் செய்த தென்கொரியா பயிற்சியாளருக்கு சிவப்பு அட்டை

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு ‘எச்’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் தென்கொரியா-கானா அணிகள் சந்தித்தன.

முதல் பாதியில் கானா வீரர்கள் முகமது சலிசு, முகமது குடுஸ் ஆகியோர் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தனர். பிற்பாதியில் சரிவில் இருந்து மீண்ட தென்கொரியா அணியில் சோ கியூ சங் 58 மற்றும் 61 நிமிடங்களில் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார். ஆனால் தென்கொரியாவின் உற்சாகம் நீடிக்கவில்லை. 68-வது நிமிடத்தில் கானாவின் முகமது குடுஸ் மறுபடியும் கோல் போட்டு அசத்தினார். கடைசி கட்டத்தில் தென்கொரியா அணியினர் ஒட்டுமொத்தமாக எதிரணியின் கோல் கம்பத்தை முற்றுகையிட்டு முயற்சித்தும் கோல் வாய்ப்பு கனியவில்லை. முடிவில் கானா 3-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.

ஆப்பிரிக்க நாடான கானா உலகக் கோப்பை கால்பந்தில் ஒரு ஆட்டத்தில் 3 கோல் அடிப்பது இதுவே முதல் முறையாகும். 3 புள்ளிகளுடன் உள்ள கானா அணி கடைசி லீக்கில் உருகுவேயை வீழ்த்தினால் அடுத்த சுற்றை அடையலாம். ஒரு புள்ளியுடன் உள்ள தென்கொரியா தனது கடைசி லீக்கில் போர்ச்சுகலை அதிக கோல் வித்தியாசத்தில் சாய்த்தால் மட்டுமே அடுத்த சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும். இதற்கிடையே, இந்த ஆட்டத்தில் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் சற்று முன்கூட்டியே நடுவர் அந்தோணி டெய்லர் விசில் ஊதி ஆட்டத்தை முடித்து விட்டதாக கூறி தென்கொரியாவின் தலைமை பயிற்சியாளர் பாலோ பென்டோ (போர்ச்சுகலை சேர்ந்தவர்) நடுவருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி எச்சரித்தார். இதன் மூலம் அடுத்த ஆட்டத்தில் பயிற்சியாளர் பாலோ பென்டோ வீரர்களின் பகுதியில் அமர முடியாது.