அடுத்து என்ன? ரணில் – மஹிந்த அவசர சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறும் மொட்டு கட்சியின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

அதேபோல ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் மொட்டு கட்சி இரு அணிகளாக பிளவுபட்டு நிற்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என நாமல் உள்ளிட்ட தரப்பினர் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தல் குறித்த மொட்டு கட்சியின் நிலைப்பாடு என்னவென்பது ஜனாதிபதிக்கு அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தப்படும் என அறியமுடிகின்றது.

சுதந்திரக் கட்சிக்குள் மோதல் உக்கிரம்: அதிகாரம் யார் வசம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான சுதந்திரக்கட்சியின் குழுவொன்று நிர்வாக சபைக்கூட்டத்தை கூட்டி, பதில் செயலாளர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமித்துள்ளது.

பதில் தலைவராக நிமல் சிறிபாலடி சில்வா தெரிவுசெய்யப்பட்டார். இக்கூட்டத்தில் கட்சியின் போஷகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எடுக்கப்பட்ட முடிவுகள் தேர்தல் ஆணைக்குழுவிடமும் கையளிக்கப்பட்டது. எனினும், இந்நியமனம் சட்டவிரோதம் என மைத்திரி தரப்பு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையிலேயே கட்சி யாப்பின் அடிப்படையில் புதிய நியமனம் செல்லுபடியாகுமா, தேர்தல் ஆணைக்குழு எந்த தரப்புடன் அதிகாரப்பூர்வமாக தொடர்புகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய தேர்தல் ஆணைக்குழு கூடவுள்ளது.

இலங்கையில் அரசியல் களம் புகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்?

அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் ஊடாகவே இவர்கள் தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

நடிகை ஒருவரும் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
அதேபோல தொழில்சார் நிபுணர்கள் சிலரும், முன்னாள் படை அதிகாரிகளும் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். முன்னாள் இராணுவ தளபதி தயாரத்னாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளார். மறுபுறத்தில் தேசிய மக்கள் சக்தியிலும் பல பிரபல ங்கள் களமிறங்கவுள்ளன.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்வு நலன்புரி நிலையங்களுக்கு பூட்டு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10. இதில் 9 குடும்பங்களுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஒரு குடும்பத்திற்கு மாத்திரமே தமது பூர்வீக காணிகளை வழங்குமாறு பலமாகக் கோரி வருகின்றனர்.

அவர்களுடன் கலந்து பேசி இணக்கப்பாட்டுக்கு வருமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கையளிக்கும் நிகழ்வில் நேற்று (7) அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் செலவநகர் நீர் சுத்திகரிப்பு நிலையம், உருதிபுரம் கிழக்கு நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா மாவட்டத்தில் கங்கன்குளம் நீர் சுத்திகரிப்பு நிலையம், வவுனியா தெற்கில் அவரந்தலாவ நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை அமைச்சர் மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களை அவர்களது பூர்வீக கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மீள்குடியேற்றப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படுகின்றன.

தற்போது 1502 குடும்பங்கள் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 212 குடும்பங்களுக்கு காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வீடுகள் வழங்கப்படும். காணி இல்லாத ஏனைய அனைவருக்கும் காணிகளை விரைவில் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான காணிகள் எதிர்காலத்தில் விடுவிக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணிலுக்கு 2025 இல் ஐ.நாவில் உயர் பதவி? – மஹிந்தவின் உறவினர் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு 2025 இல் ஐக்கிய நாடுகள் சபையில் உயர்பதவியொன்று கிடைக்கப்பெறவுள்ளது. இதற்கு இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரணிலுக்கு சர்வதேசத்தில் நல்லபெயர் வந்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் அவரின் பெயர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் 2025 இல் ஐ.நாவில் ரணிலின் பெயர் இருக்கும். அந்த பதவிமூலம் எமது நாட்டுக்கும் கௌரவம் கிட்டும்.

ஐ.நா. பொதுச்செயலாளர் பதவி அல்ல. அதற்கு அடுந்ந நிலையில் உள்ள பதவி. பிறகு ஐ.நா. பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டியிடலாம். இந்தியாவும் இணக்கம் தெரிவித்துள்ளது.” – என்றார்.

உதயங்கள் வீரதுங்க மஹிந்த ராஜபக்சவின் உறவினவாரார்.

பொதுவேட்பாளராக களமிறங்கும் சம்பிக்க?

அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளது எனவும், அதன்மூலம் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு தயார் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ஜனாதிபதி தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும். வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பை எதிர்வரும்  ஜுலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்.” – என்றார்.

இலங்கையில் இரு பிரதான தேர்தல்கள் ஒரே நாளில்?

ஜனாதிபதி தேர்தலும் பொதுத்தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது சிறப்பாக அமையும். செலவுகளையும் கட்டுப்படுத்தலாம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற  ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன கூறியவை வருமாறு,

“ இவ்வருடம் ஜனாதிபதி, பொதுத்தேர்தல்கள் என்பன நடத்தப்படும்.  இவ்விரு தேர்தல்களையும் முடிந்தால் ஒரே நாளில் நடத்துமாறு சபாநாயகர் கோரிக்கை விடுத்திருந்தார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டால் அதன்மூலம் மக்களுக்கு நிவாரணம் கிட்டும்.

ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் என்பன ஒரே நாளில் நடத்தப்பட்டால் அது நல்லம். அதன்மூலம் செலவுகளையும் குறைத்துக்கொள்ளலாம்.  எந்தவொரு கட்சிக்கும் அநீதியும் ஏற்படாது.” – என்றார்.

33 வருடங்களுக்கு பிறகு முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் குடும்பத்தாருடன் சங்கமம்

இந்தியாவில் இருந்து இன்று தாயகம் திரும்பிய முருகன் , ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகிய மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன் ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்தனர்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர். மூவரும் முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.

விமான நிலையத்தில் விசாரணைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை குடும்ப உறவினர்களும், அரசியல் பிரமுகர்களும் வரவேற்றனர். தற்போது தமது ஊர்களை நோக்கி புறப்படுகின்றனர்.

மைத்திரிக்கு அடுத்த அடி!

“ ஏதேச்சதிகாரமாகவே நாம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளோம். எனவே, கட்சி தலைவரின் முடிவை சட்டரீதியாக நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்.”

-இவ்வாறு அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளார்.

சுதந்திரக்கட்சியின் பதவிகளில் இருந்து இவர்கள் மூவரும் நீக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டாக ஊடக சந்திப்பொன்றை நடத்தி அது தொடர்பில் கருத்து வெளியிட்டனர்.

“ விசேட கூட்டம் என்றே கூறப்பட்டது. நிறைவேற்றுக்குழுவோ, மத்தியக்குழுவோ கூட்டப்படவில்லை. எனவே, நாம் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை ஏற்புடையது அல்ல. கருத்துகளை முன்வைப்பதற்கு எமக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நிமல் சிறிபாலடி சில்வா தொடர்பிலும் இவ்வாறு தீர்மானமொன்று எடுக்கப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றம் சென்று நீதியை பெற்றார். நாமும் நீதிமன்றத்தை நாடுவோம்.

மைத்திரிபால சிறிசேன அண்மைய நாட்களில் மனக்கவலையில் இருப்பது புரிகின்றது. நாம் கட்சியில்தான் இருக்கின்றோம். உறுப்புரிமை நீக்கப்படவில்லை. சுதந்திரக்கட்சி என்பது தனி நபருக்குரிய சொத்து அல்ல.” – எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தெற்கு அரசியலில் பரபரப்பு: இறுதி அஸ்திரத்தை ஏவ தயாராகும் பஸில்!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை பெறுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளதால் இறுதி அஸ்திரத்தை ஏவுவதற்கு பஸில் ராஜபக்ச தயாராகிவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எனினும், இதற்கான ஆதரவு தளம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே இந்நடவடிக்கையில் அவர் இறங்குவார் எனத் தெரியவருகின்றது.

முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கவில்லை. அரசமைப்பின் பிரகாரம் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல்வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்ந்துவருகின்றது.

அவ்வாறானதொரு யோசனை நிறைவேறுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம். சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போதுகூட 117 வாக்குகளே ஆளுங்கட்சிக்கு இருந்தது.

மொட்டு கட்சியில் சிலர் ரணில் பக்கம் நிற்கின்றனர். நிமல் லான்சா, அநுரயாப்பா உள்ளிட்ட குழுவினரும் ரணில் பக்கம் நிற்கின்றனர். சுதந்திரக்கட்சியினரும் ஜனாதிபதி பக்கமே உள்ளன.

எனவே, குறித்த பிரேரணைக்கு 113 பேரின் ஆதரவை பெறமுடியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. ஏனெனில் இதொகா உள்ளிட்ட பங்காளிக்கட்சிகள்கூட ரணில் ஆதரவு நிலைப்பாட்டிலேயே உள்ளன.

இந்நிலையில் 113 ஐ பெறமுடியுமா என ஆராயப்பட்டுவருகின்றது, அதற்கான வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஏப்ரல் இண்டாம்வார நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த யோசனை முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

13 மற்றும் புலிகள் குறித்து கனடாவில் அநுர கூறியது என்ன?

“ மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்பட வேண்டும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், வடக்கில் மீண்டுமொரு போர் ஏற்படாது, புலிகள் மீண்டெழுவார்கள் என தெற்கில் மாயை உருவாக்கப்படுகின்றது, அதற்கான சாத்தியமும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், 13 பிளஸ் என்றெல்லாம் கதைக்கப்படுகின்றது. மாகாணசபை முறைமை இதற்கு தீர்வு அல்ல என்றே நாம் கருதுகின்றோம். எனினும், மாகாணசபை முறைமை தற்போது அம்மக்களின் (தமிழ் மக்களின்) உரிமை. எனவே, அதனை தற்போது இல்லாது செய்ய முடியாது. அப்படியானால் தற்போது என்ன செய்ய வேண்டும்?

மாகாணசபை முறைமை தமது அரசியல் உரிமையென அம்மக்கள் (தமிழ்மக்கள்) ஏற்கின்றனர் எனில், அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதனை அம்மக்களின் உரிமையாக உறுதிப்படுத்த வேண்டும். நாம் அதைச் செய்வோம். இந்த முறைமை தீர்வா, இல்லையா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.

தமது அரசியல் உரிமைகளை பாதுகாக்கப்படும் வியூகம் மாகாணசபை முறைமையென மக்கள் கருதினால் அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

எமது நாட்டில் வடக்கில் மீண்டுமொருமுறை யுத்தம் ஏற்படவே ஏற்படாது. வடக்கில் உள்ள பெற்றோர், போருக்காகவே பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்ற மாiயை தெற்கில் தோற்றுவிக்க முற்படுகின்றனர்.

அதன்காரணமாகவே புலிகள் மீண்டெழுவார்கள் என்றெல்லாம் கதைகள் கூறப்படுகின்றனர். அவ்வாறு நடக்காது.

வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை போருக்கு அனுப்ப முற்படவில்லை. தெற்கில் உள்ள பெற்றோர்போலவே கல்வி வழங்கவும், சிறந்த தொழிலை பெற்றுக்கொடுக்கவும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்வுமே எதிர்பார்க்கின்றனர். அதற்கான கதவு மூடப்பட்டுள்ளது. தெற்கில்போன்று வடக்கிலும் பிரச்சினைகள் உள்ளன. 30 வருடகால போரால் வடக்குக்கான நிறைய வாய்ப்புகள் இல்லாமல்போயுள்ளன. எனவே, அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டம் அவசியம். ஏனெனில் 30 வருடங்கள் இழக்கப்பட்டுள்ளன.

அரசியல் பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினைகள் என இரண்டுக்கும் தீர்வுகள் அவசியம். வடக்குக்கு சென்றாலும், தெற்கில் இருந்தாலும் இதையே நாம் கூறிவருகின்றோம். வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களுடன் இது சம்பந்தமாக பேச்சு நடத்த தயார்.” – என்றார்.

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகே இன்று (28) 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிகைகள் இரண்டிலும் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டதால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 2 வருட சிறைத்தண்டனையும் வெவ்வேறாக விதித்த நீதிபதி, இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக 50,000 ரூபா அபராதம் விதித்தார்.

தேரர் என்ற வகையில் தேசிய மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

தனது கைகளை பிடித்து சம்பந்தன் கூறியது என்ன? கனடாவில் அம்பலப்படுத்திய அநுர

இலங்கை பிரஜை என்றபோதிலும் இலங்கையில் இரண்டாம்தர பிரஜைகளாக வாழ்வதற்கு தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்னிடம் கூறினார். அந்த கருத்து நியாயமானது – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கனடாவில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சம்பந்தன் நாடாளுமன்றத்தில் எனக்கு அருகில்தான் சில காலம் அமர்ந்திருந்தார். அவரின் சில அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் எமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒருநாள் எனது கைகளை பிடித்துக்கொண்டு சம்பந்தன் இவ்வாறு கூறினார்.

“அநுர நான் இலங்கையர் பிரஜை என உரத்தகுரலில் சர்வதேசத்திடம் கூற தயார். ஆனால் இலங்கையில் இரண்டாம் பிரஜையாக வாழத்தயாரில்லை.” – என்றார். இது நியாயமானது.
அதேபோல ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே என்னிடம் ஒருநாள், “ அநுர இந்த நாட்டில் என்னால் அமைச்சுபதவி மட்டுமேவர முடியும். அந்த இடத்துக்கு வந்துவிட்டேன்.” – எனக் கூறினார்.

தனது மொழி, மதம், இனத்தால் தன்னால் இந்நாட்டின் ஜனாதிபதியாக முடியாது என அவர் உணர்ந்திருந்தால் அவ்வாறானதொரு நிலை ஏற்புடையது அல்ல.

எனவே, இனம், மத, மொழி, கலாசாரம் சுதந்திரம்போல அரசியல் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதனை நாம் ஏற்கின்றோம்.” – என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தியது யார்? பிரதான சூத்திரதாரிகள் யார்? உண்மையான நோக்கம் என்ன என்பன தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்போம் என்ற உத்தரவாதத்தை வழங்குகின்றோம்.

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடக்கும்போது மைத்திரிபால  சிறிசேனதான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். எனவே, அவர் தற்போது வெளியிடும் தகவல் பாரதூரமானது. தாமதிக்காமல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்றார் விஜித ஹேரத்.

‘வாயால் வந்த வினை’ – விசாரணை பொறிக்குள் மைத்திரி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அறிவிப்பு தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன விசாரணைப் பொறிக்குள் சிக்கியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் மேற்படி கூற்று தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே நடாத்தியவர்கள் யார் என்பது குறித்து தனக்கு தெரியும் எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை வெளிப்படுத்துவதற்கு தயார் எனவும் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கண்டியில் வைத்து தெரிவித்திருந்தார்.

அவரின் அறிவிப்பு தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கைது செய்து விசாரணைகளை நடாத்துமாறு கோரி, பல தரப்பினரும் சிஐடியின் நேற்று முறைப்பாடு தாக்கல் செய்திருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மைத்திரி தொடர்பில் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. அவரிடம் சிஐடியினர் இது சம்பந்தமாக வாக்குமூலம் பெறுவார்கள் என தெரியவருகின்றது.

பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனமாக கருதாதீர்! சரத் வீரசேகர கொதிப்பு!

” இது பௌத்த நாடு என்பதால்தான் கொழும்புக்குவந்துகூட கூட்டமைப்பினருக்கு போராட்டம் நடத்திவிட்டு மீண்டும் செல்ல முடிகின்றது. எனவே, பௌத்தர்களின் பொறுமையை கையாலாதனமாக கருத வேண்டாம்.”

-இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில்  கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

“ வட்டுக்கானகலயில் (வெடுக்குநாறி மலை)யில் சட்டவிரோதமாக செயற்பட்டவர்களுக்காக கூட்டமைப்பு எம்.பிக்கள் பதாகைகளை தூக்கிக்கொண்டு குழப்பத்தில் ஈடுபட்டனர். அவ்வேளையில் நான் சபையில் இருக்கவில்லை. மத சுந்திரம் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றார். உண்மை என்னவென தெரியாமல் பேச வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

பௌத்த சின்னத்தை  அழித்துவிட்டு அதன்மேல் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்வதா மத சுதந்திரம்? என எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்கின்றேன். அப்படியானால் வெள்ளவத்தையில் உள்ள இந்து கோவிலொன்றை இடித்துதள்ளிவிட்டு அங்கு புத்தர் சிலையை வைத்து பூஜை நடந்துவம் மத சுதந்திரமா? எனவே, விடயம் தெரியாவிட்டால் பேசவேண்டாம்.

நான் வெடுக்குநாறிமலை சென்றுள்ளேன். 1500 வருடங்கள் பழமையான பௌத்த சின்னங்களை இல்லாது செய்தவிட்டு, சிவலிங்கம் வைத்துள்ளனர்.  சீமெந்தகூட காய்ந்து இருக்கவில்லை. அதாவது புதிதாகவே அதனை செய்துள்ளனர்.  இது தொடர்பில் கூட்டமைப்பினரே மக்களை குழப்புகின்றனர். அப்பகுதியில் உள்ள மக்கள் இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.” – என்றார்.

வெடுக்குநாறிமலையில் அத்துமீறினால் கைதுகள் தொடரும்!

வெடுக்குநாறி மலையில் கோவில் இல்லை. 2023 ஆம் ஆண்டிலேயே அங்கு சிவலிங்கமொன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அநுராதபுர யுகத்துக்குரிய விகாரையொன்று இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அறிவித்துள்ளது – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றால் கைதுகள் தொடரும் எனவும் அவர் கூறினார்.

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அதிகம் இங்கு பேசப்பட்டது. விவாதம் ஆரம்பமான நாளன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலில் வழிபட சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக்கூறியே போராட்டம் நடத்தப்பட்டது. கோவிலில் வழிபாட்டுக்கு சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டது தவறு என எதிரணியினர் கூறினர். அங்கு எந்தவொரு கோவிலும் இல்லை. தொல்லியல் திணைக்களத்துக்கு உரித்தான இடமொன்றே அங்குள்ளது. அநுராதபுரத்துக்குரிய பௌத்த விகாரையொன்றின் அடையாளங்கள் எனக் கருதப்படும் தொல்லியல் எச்சங்கள் இருந்துள்ளன என்று தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“ பௌத்த விகாரைக்குரிய அடையாளங்கள் உள்ள இடம் என தொல்லியல் திணைக்களளே கூறுகின்றது. இந்நிலையில் வேறு சிலர் அங்கு சென்று இது தமது வழிபாட்டு தளம் எனக் கூற முற்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டிலேயே சிவலிங்கம் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து பிக்குகள் பஸ்களில் சென்று தமது எதிர்ப்பை வெளியிட முற்பட்டனர். கடும் முயற்சிக்கு மத்தியில் ஏற்படவிருந்த பிரச்சினையை தடுத்து நிறுத்தினோம்.” எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“ மார்ச் 8 ஆம் திகதி 400 பேர்வரை அங்கு வந்து பூஜை நடத்தினர். 6 மணிக்கு பின்னர் 40 பேர்வரை அங்கு இருந்தனர். அந்த 40 பேரும் இரவு 8 மணியளவில் அடுப்புமூட்டி சமைக்க முற்பட்டுள்ளனர். மின்பிறப்பாக்கிமூலம் மின்சாரம் எடுக்க முயற்சித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது அங்கிருந்த தொல்லியல் அதிகாரிகள், வனபாதுகாப்பு அதிகாரிகள் என சகலரும், அதனை நிறுத்துமாறு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து 8 அல்லது 9 பேரை கைது செய்ய நேரிட்டது. கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2ஆவது தடவையும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தால் பௌத்த வழிபாட்டுதலம் எனக் கூறப்படும் பகுதிக்கு சென்று, பிரச்சினை விளைவித்து, சட்டத்தைமீறியுள்ளனர் என்பது இதன்மூலம் புலனாகின்றது. வடக்கு, கிழக்கில் இப்பிரச்சினை தொடர்ச்சியாக ஏற்படுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நிச்சயம் கைது செய்வோம
பௌத்த இடமாக இருந்தாலும் இந்து இடமாக இருந்தாலும் அத்துமீறல்கள் இடம்பெற்றால் சட்டம் செயற்படும்.

சட்டம் அனைவருக்கும் சமம். கோவிலில் வழிபட சென்றவர்களே கைது செய்யப்பட்டனர் என எதிரணி கூறியது. அங்கு கோவிலே இல்லை. எனவே, போலியான தகவல்களை முன்வைக்க வேண்டாம். வடக்கு வாக்குகளை இலக்குவைத்து போலி தகவல்களை விதைக்க வேண்டாம் என எதிரணியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பலத்தை காட்டியது ரணில் அரசு – சபாநாயகருக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்குகளும் 75, எதிராக 117 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஆளுங்கட்சியும், அதன் பங்காளிக்கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் ஆதரவாக வாக்களித்தன.

தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதொகாவினர் எதிராக வாக்களித்தனர்.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமாகி, 3 நாட்கள் விவாதம் நடத்தப்பட்டநிலையிலேயே இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

 

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

வடக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் இனவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்கமாட்டார்கள், எனவே, இனவாதிகள் இல்லாத கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கே ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் என தெரியவந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அலை இருக்கின்றது எனக் கூறப்பட்டாலும் தற்போதுள்ள வாக்குவங்கியைவிட சற்று கூடுதல் வாக்கு அக்கட்சிக்கு கிடைக்கும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வாக்குவங்கி 10 விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.

வடக்கிலும் எமக்கே ஆதரவு உள்ளது. இனவாத கட்சிகளுக்கு அம்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். எமது அணியில் இனவாதிகள் இல்லை. சஜித் இனவாதம் அற்ற தலைவர். அனைத்து இனத்தவர்களும் அங்கம்வகிக்ககூடிய கட்சி எமது கட்சியாகும்.

அதேவேளை, அடுத்து என்ன தேர்தல் நடத்தப்பட்டாலும் கூட்டணியாக எதிர்கொள்வதற்கு செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

சுமந்திரனைவிட கூட்டமைப்பில் எனக்கு செல்வாக்கு உள்ளது – மஹிந்தானந்த

” கொழும்பில் 07 இல் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் பேசுவதன்மூலம் யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது. கிளிநொச்சியில் இருந்து வந்த அப்பாவியிடம் தோற்றதால் சுமந்திரனுக்கு உள்ள கவலை புரிக்கின்றது.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவிக்கு நடந்த வாக்கு பற்றியும் கருத்து வெளியிட்டார். தமிழரசுக் கட்சியை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என விளித்தார்.

மஹிந்தானந்த இது தொடர்பில் கூறியவை வருமாறு,

“ கிளிநொச்சியில் இருந்துவந்த அப்பாவி ஒருவரிடம் தோற்றீர்கள்தானே? கொழும்பு 07 இல் இருந்துகொண்டு யாழ்ப்பாண மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது. ஆங்கிலத்தில் கதைத்து வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது. தலைமைப்பதவி வேண்டுமெனில் வேட்டி அணிந்து சபைக்கு வாருங்கள்.

சுமந்திரனுக்கு உள்ள கவலை எனக்கு புரிகின்றது. யாழ்ப்பாணத்துக்கு விமானத்தில் செல்கின்றீர்கள், பெரிய ஹோட்டலில் தங்குகின்றீர்கள். இவ்வாறு செய்தால் யாழ். மக்களின் வாக்குகளைப் பெறமுடியாது சுமந்திரன் அவர்களே…

நீங்கள் (சுமந்திரன்) எனது பாடசாலை நண்பர்தானே, நீங்கள் தலைமைப்பதவிக்கு வந்தால் நானும் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் எனக்கு சொல்லி இருந்தால் ரி.என்.ஏயில் நான் வாக்குகளை பெற்றுகொடுத்திருப்பேன். உங்களைவிட எனக்கு கூட்டமைப்பில் உள்ள வாக்குகளைப் பெறமுடியும்.” – என்றார்.