கடலில் குழந்தை பிரசவித்த பெண்: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.

நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்பியூலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால் , பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.

அந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்தவேளை , பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து , படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

படகு குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்ததும் , அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின்அம்பியூலன்ஸ் வண்டியில் தாயையும் சேயையும் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘புத்தாண்டு பகைமை’ – யாழில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட இரு வாகனங்கள்…!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

இன்று திங்கட்கிழமை (15) அதிகாலை 12.30 இற்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பட்டா ரக வாகனம் ஒன்றும், ஆட்டோவொன்றும் இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற முறுகல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு நிலைவரத்தை கேட்டறிந்த ஆஸி. தூதுவர்!

ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் ஒத்துழைப்பு நலக வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் பவுல் ஸ்டீபன வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ளஸை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஆஸ்திரேலிய தூதரகம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது தூதுவர் ஆளுநருக்கு தெளிவுப்படுத்தினார். அத்துடன் வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் ஆளநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் இதன்போத தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆஸ்திரேலிய வாழ் இலங்கை புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்துமாறும் தூதுவரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். வடக்கு மாகாணத்தில் தொழிற்துறையை மேம்படுத்துவதனூடாக வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், பொருளாதார நிலையிலும் முன்னேற்றத்தை காண முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

வெடுக்குநாறிமலை அராஜகம்: நீதிகோரி பேரணி ஆரம்பம்!

வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி யாழிலிருந்து வவுனியா வரையான பேரணி இன்று காலை நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தொடச்சியா பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றையதினம் வவுனியாவிலும் பாரிய போராட்டம் நடைபெறவுள்ளது.

அப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழிலிருந்து வவுனியா வரையிலான வாகனப் பேரணியொன்று இன்று காலை யாழ்ப்பானம் நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விமானப்படை கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது சாந்தனின் வித்துடல்!

சாந்தனின் புகழுடல் யாழ். வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு விழிநீருடன் சாந்தனின் உடலை அடக்கம் செய்தனர்.

மறைந்த சாந்தனின் புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்றது.

உடுப்பிட்டி – இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன் இறுதிக்கிரியை நடைபெற்றது.

சாந்தனின் தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவுகளால் புகழுடலுக்கு வாய்க்கரிசி போடப்பட்டு ஊர் மக்களால் அருகில் உள்ள சனசமூக நிலையத்துக்குப் புகழுடல் தாங்கிச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரைகள் இடம்பெற்றன.

இறுதி ஊர்வலம் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிறைவுபெற்று. அங்கு புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாந்தனின் புகழுடல் தாங்கிய இறுதி ஊர்வலத்தில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

” எங்கள் தெய்வம் வீட்டுக்கு வருகிறது, அழாதீர்கள்” -சாந்தனின் தங்கை உருக்கம்!

சாந்தனின் புகழுடல் அவரின் சொந்த ஊரான யாழ். உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டபோது உறவினர்களும், ஊர் மக்களும் கதறி அழுததால் அப்பகுதியை சோக மேகம் சூழ்ந்துகொண்டது.

அத்துடன், நெஞ்சை பதற வைக்கும் வகையில் சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தி எடுத்தமை அங்கிருந்தவர்களின் விழிகளில் விழிநீரை பெருக்கெடுக்க வைத்தது.
“என் தெய்வம் வீட்டிற்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது“ என அவரது சகோதரி இதன்போது உருக்கத்துடன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அத்துடன், தன் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த தாய்க்கும் ஏமாற்றமே காத்திருந்தது. அவரும் கதறி அழும் காட்சி அனைவரினதும் கண்களை கண்ணீர் குளமாக்கியது.

 

சாந்தனின் புகழுடல் இன்று மக்கள் அஞ்சலிக்கு -நாளை இறுதிக்கிரியை….!

தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நிலையில் மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இதன்படி சாந்தனின் பூதவுடன் இன்று காலை 8மணிக்கு வவுனியாவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 9.00 மணிக்கு எடுத்துவரப்படவுள்ளது.அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழுடல் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள அஞ்சலி நிகழ்வுகளில் வேறுபாடுகளை களைந்து அனைவரையும் அணி திரண்டு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் , அனைத்து இடங்களிலும் நீதி கோரியும் துக்கதினத்தை நினைவு கூரும் வகையில் கறுப்பு கொடிகளை தொங்கவிடவும் கோரிக்கை விடுத்துள்ளன.

இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.

சாந்தனின் பூதவுடல் இன்று இலங்கைக்கு…! யாழில் இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு!!

சென்னையில் காலமான சாந்தனின் பூதவுடல் இன்று அங்கிருந்து முற்பகல் 9.45 மணிக்குக் கொழும்பு வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஈழத் தமிழன் சாந்தனை, 2022.11.11 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. அவர் தாயகம் திரும்பும் முயற்சியில் இருந்த வேளை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

நேற்றுமுன்தினம் இரவு அவர் தாயகம் திரும்பவிருந்த நிலையில், காலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

அவரின் பூதவுடல், இன்று முற்பகல் 9.45 மணிக்குக் கொழும்பு நோக்கி வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது. நண்பகல் 12 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரின் பூதவுடல் வெளியே எடுத்துவரப்படும்.

கொழும்பில் இருந்து பூதவுடலை உடனடியாக யாழ்ப்பாணம் எடுத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறுதி அஞ்சலி நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று தெரியவருகின்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்துள்ளார்.

சாந்தன் யாழில் உள்ள தமது சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தயாராகவிருந்தவேளை இப்பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாந்தன் காலமானார் – உறுதிப்படுத்தியது வைத்தியசாலை நிர்வாகம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட – இலங்கை வருகை தந்து தனது தாயை பார்வையிட காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

வைத்தியசாலை நிர்வாகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்ற வந்த அவர், கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

சாந்தன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் இலங்கை வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசும் இதற்குரிய அனுமதியை வழங்கி, அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்தன. இந்நிலையிலேயே இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21-ம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக 1999-ம் ஆண்டு மே 11-ம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சாந்தன், ராபர்ட் பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

“அமைச்சு பதவியை துறப்பேன்” – டக்ளஸ் அதிரடி

“எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து நியாயமான தீர்வுக்காக போராடுவேன்.”

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் இந்திய தூதருடனான சந்திப்பு போது கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகையை களவாடிய கணவன் கைது!

காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டது.

திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் யாழ்ப்பாண நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடும் விமர்சனத்துக்குள்ளாகிய யாழ். இசைக்கச்சேரி! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் , மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின் பற்றாக்குறை காரணமாகவும் கட்டுக்கடங்காத பார்வையாளர்கள் மேடைக்கு அருகில் கூடியதாலும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குழப்பம் ஏற்பட்டது.

மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்ட போதும் நிலைமை கட்டுங்கடங்காது சென்றது.
கதிரை, தண்ணீர் தாங்கி உள்ளிட்ட பல பொருட்கள் சேதமாகின. நேற்றிரவு நிகழ்ச்சியின்போது பலரும் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஒருவர் மயக்கமுற்றதுடன் பலரும் காயமடைந்தனர். தற்போதைய நிலையில் மூன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 25000 ரூபா அனுமதிச் சீட்டு, 7000 ரூபா அனுமதிச் சீட்டு, 3000 ரூபாய் அனுமதிச் சீட்டு என கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்நதும் அதன்பின்னே இலவசமாக நின்றவாறும் இசைநிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனாலும் கட்டணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் பெரும்பாலான கூட்டம் அனுமதிச் சீட்டுகளே இல்லாமல் நுழைந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

முதியவர்கள், கைக்குழந்தைகளோடு வந்த பலர் பணத்தை செலுத்தியும் ஆசனங்களின்றி நின்றபடி இசை நிகழ்ச்சியை பார்க்க வேண்டிய அவலம் காணப்பட்டதாக பலரும் விசனம் தெரிவித்தனர்.

பெருமளவு தென்னிந்திய நட்சத்திர கலைஞர்கள் இந் நிகழ்ச்சிக்கு வந்தபோதும் போதிய அளவு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தடுப்புகள் உடைக்கப்பட்டு பலர் குறுகிய இடத்திற்குள் நுழைந்ததுடன்,தடுப்புகளை உடைத்துக்கொண்டு வரும்போது பணம் செலுத்தியும் கதிரைகள் இல்லாமல் நின்றவர்களோடு மோதுப்பட்டு பலர் நிலைதடுமாறி கீழே விழுந்து நெருக்கடி ஏற்பட்டது.

பெருமெடுப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி சீரான ஒழுங்குபடுத்தல் இன்மை காரணமாக குழப்பத்தில் முடிந்தது.

பலாலியில் விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை மீளவும் கைப்பற்ற முயற்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். சுகிர்தன் தெரிவிக்கின்றார்.

“வலி வடக்கில் இன்னும் 3000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கென போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியும் இதனை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில், குறிப்பாக குரும்பசிட்டி, கட்டுவன், கட்டுவன் மேற்கு, குப்பிளான் வடக்கு ஆகிய பிரதேசங்களில் மேலும் 500 பரப்புகளை எடுக்க அளவீட்டுத் திணைக்களம் முயற்சிக்கிறது.

கிராம சேவகர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உடனடியாக இதனை நிறுத்த வேண்டும். பலாலி விமான நிலையத்தை சாட்டி மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கிறது. இதனையும் நிறுத்த வேண்டும்.”

ஜனவரி 30ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, இந்த காணியை சுவீகரிக்கும் முயற்சி தொடர்பில் பிரதேச சிவில் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பிரதேச செயலாளரிடம் வினவியபோது, அதுத் தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் தமது பிரதேசத்தில் நில அளவீடு செய்ததாக குரும்பசிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச கிராம உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளருக்கும் தெரியாமல் நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்கள் காணியை அளவீடு செயய, வருவதில்லை என சுட்டிக்காட்டும் எஸ். சுகிர்தன், பிரதேச செயலாளர் மக்களிடம் பொய்களை கூறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தை அண்டிய மக்களின் காணிகளில் விமான நிலையம் என்ற பெயரில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதுவும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ். சுகிர்தன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சாந்தனின் விடுதலை குறித்து டக்ளஸ் வழங்கியுள்ள உறுதிமொழி…!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

வழக்கின் தீர்ப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காலணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30.01.2024) சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

இதன்போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தாவினால் குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டது.

 

“சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுங்கள்” – தமிழக முதல்வருக்கு சிறிதரன் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப் பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந் துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சி களும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவை யாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவன செய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவன செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றுள்ளது.

யாழ்.- தமிழகம் கப்பல் சேவை 15 முதல் மீள ஆரம்பம்!

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் படகு சேவையை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ்.காங்சேன்துறையிலிருந்து தமிழகத்தின் நாகப்பட்டிணம் வரை இந்த படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

4 தசாப்தங்களின் பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, குறித்த கப்பல் சேவையை ஒக்டோபர் 20 ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பமாகின்றது.

“எனது மகனை என்னிடம் ஒப்படையுங்கள்” சாந்தனின் தயார் கண்ணீர் மல்க கோரிக்கை

“ என்னை அங்கு வா, இங்கு வா என அழைக்க வேண்டாம், என்னால் முடியாது, எனக்கு என்னுடைய பிள்ளை வேண்டும்.”

இவ்வாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார் சாந்தனின் தயார்.

அத்துடன், தனது பிள்ளையை விடுவிக்குமாறுகோரி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

54 வயதான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர ராஜா என்ற இயற்பெயர் கொண்ட சாந்தன், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும், இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால், அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் கிடைத்த பின் அனுப்புவதற்கான நடைமுறைகள் செயற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சாந்தனுக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் ஏற்பட்டு அவதியுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன், சொந்த நாடான இலங்கைக்கு செல்ல அனுமதிக்குமாறு பிரதமர் மோடி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை துணை தூதர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பலருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக தனது தாயாரைப் பார்க்கவில்லை எனவும் அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புவதாகவும் ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றம் விடிவித்தும், சித்திரவதைபடுத்தும் நோக்கி லேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழரசின் செயற்பாட்டு அரசியலில் இருந்து சுமந்திரன் விலகல்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கட்சியின் செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகவுள்ளார் என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் மற்றும் அமைப்பாளர் பதவிகளை அவர் அடுத்தமுறை ஏற்கமாட்டார் என தெரியவருகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின்போது தலைவர்பதவி தவிர ஏனைய பதவிகளுக்கான தேர்வு இடம்பெறும். இதன்போது எந்தவொரு பதவி நிலைக்கும் சுமந்திரன் போட்டியிடமாட்டார் எனவும், அவரின் பெயரை முன்மொழிய வேண்டாம் என தமது ஆதரவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு எதிர்வரும் 28 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டுக்கு பின்னர் சுமந்திரன் தனது எதிர்கால அரசியல் திட்டம் பற்றி விவரிப்பார் எனவும் அறியமுடிகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவிக்கு சுதந்திரன் போட்டியிட்டிருந்தார். அதில் அவர் பின்னடைவைச் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.