ஈரானுக்கு பதிலடி கொடுக்குமா இஸ்ரேல்? அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் துடித்துக்கொண்டிருந்த நிலையில், அமெரிக்கா இதற்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டது. எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதலை கைவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி யாரும் எதிர்பார்க்காத வகையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் உட்பட அறுவர் கொல்லப்பட்டனர்.

இதுதான் ஈரானின் தற்போதைய தாக்குதலுக்கு காரணம். இந்த தாக்குதல் குறித்த ஏற்கனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

சுமார் 200 இற்கு அதிகமான ஏவுகணைகளும், ட்ரோனும் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இதில் 99 வீதத்தை இஸ்ரேல் அழித்துவிட்டது. ஒரு சில ஏவுகணைகள் மட்டும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தளம் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படியான எந்த திட்டமும் இல்லையென இஸ்ரேல் அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கலந்துரையாடியுள்ளார். அப்போது, ஈரானுக்கு பதிலடி கொடுப்பது குறித்து நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் நாங்கள் உதவ மாட்டோம் என்று பைடன் தெளிவுப்படுத்திவிட்டார். இருவருக்குமான உரையாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தாலும், என்ன பேசினார்கள் என்பது குறித்து வெளிப்படையான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வெள்ளை மாளிகை மற்றும் டெல் அவிவின் நெருங்கிய வட்டாரங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவ முன்வரவில்லை என்கிற தகவலை தெரிவித்திருக்கின்றன.

ஏற்கெனவே ஹமாஸை அழிப்பதாக கூறி இஸ்ரேல் நடத்திய எல்லா தாக்குதலுக்கும் அமெரிக்கா துணை நின்றிருக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு நன்கு தெரியும். இந்த சூழலில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா உதவினால், அது நிச்சயம் 3ம் உலகப் போராக வெடிக்கும்.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, வடகொரியா ஆகியவை வரிசைகட்டி நிற்கும். எனவே இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஜோபைடன் கூறியுள்ளார். இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு ஈரான் ஏவிய ஏவுகணைகளை சமாளிக்க 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் செலவு செய்திருக்கிறது.

எனவே, இஸ்ரேல் பதில் தாக்குதல் என இறங்கினால் ஈரான் சும்மா இருக்காது. இவையெல்லாம் செலவுகளை இழுத்துவிட்டுவிடும் என்பதாலும், அமெரிக்கா இதில் மௌனம் காக்க இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது. எனவே இஸ்ரேல், ஈரான் மீதான பதிலடி தாக்குதலை கைவிட்டுள்ளது.

உலகப்போர் மூளுமா? அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேல்மீது ஈரான் நடத்தியுள்ள தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளதுடன், அவசர பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

“ ஈரானால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோதங்களை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்.” என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் மீது ஈரானின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரம்: இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது
சிரியாவில் உள்ள ஈரானின் தூதரகத்தின் மீது கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டு இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், கோபமடைந்த ஈரான் இந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேல் மீது தற்போது வெடிகுண்டுகளை சுமந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போர் பதற்றத்தை நிலவிவருகிறது. இந்நிலையில், ஈரானிய ட்ரோன்களை அமெரிக்கா இராணுவம் சுட்டு வீழ்த்தி வருகிறது. மேலும், சிரியாவிலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமெரிக்காவில் தனது கடற்கரை இல்லத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தை இத்தாக்குதல் காரணமாக இரத்து செய்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவசரமாக வெள்ளை மாளிகை திரும்பினார். இந்நிலையில், இத்தாக்குதலை தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்.

ஏற்கெனவே, இஸ்ரேல் – காசாவிற்கு இடையே போர் நிலவியபோது இஸ்ரேலுக்கு தேவையான போர் உதவிகள், ஆலோசனைகள் போன்றவற்றை அமெரிக்கா தொடர்ந்து வழங்கியது. இதேபோல தான், தற்போது ஈரான் நடத்திய தாக்குதலிலும் அமெரிக்கா எல்லவித உதவிகளையும் இஸ்ரேலுக்கு வழங்குவது குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன்காரணமாக, இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரோன்களை தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக 50 இற்கு மேற்பட்ட ஈரானிய ட்ரோன்கள் இஸ்ரேயலை நோக்கி ஏவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்கா கடற்படை கப்பல்கள் இத்தாக்குதலில் இஸ்ரேலுக்கு உதவி வருகிறது. இதனால், சிரியா , ஈரான் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்றும் கச்ச எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாது, இஸ்ரேலின் கப்பல் ஒன்று ஈரான் இராணுவத்தால் கைப்பற்ற நிலையில் போர் மேகங்கள் வளைக்குடாப் பகுதிகளை சூழந்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை ஈரானை எதிரி நாடாகவும் , இஸ்ரேயலை தனது நட்பு நாடாகவும் கருதுவதால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்மீது ஈரான் தாக்குதல் தொடுப்பதை தடுக்க அமெரிக்கா களத்தில்!

இஸ்ரேல்மீது ஈரான் பதிலடி தாக்குதல் தொடுப்பதையும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் உக்கிரமடைவதை தடுப்பதற்கும் அமெரிக்கா தீவிர இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுவருகின்றது.

சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதி ஒருவர் உட்பட ஆறுவர் பலியாகியுள்ளனர்.

இதற்கு ஈரான் பதிலடி கொடுக்கும் எனவும், இஸ்ரேல்மீது ஏவுகணை தாக்குதல் அல்லது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலில் உள்ள தமது நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மறுபுறத்தில் ஈரானின் தாக்குதலை தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது.

சிலவேளை ஈரான் தாக்குதலை நடத்தினால் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்கும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

‘காசா போர்’ – இஸ்ரேலை கை விடுமா அமெரிக்கா?

இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7, 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இஸ்ரேலிய தாக்குதல்களில் தற்போது வரை 33,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் 1,200 பேர் உயிரிழந்தனர்.

அதோடு, உள்ளூர் சுகாதார அமைச்சகத்தின்படி, கிட்டத்தட்ட 23 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடலோரப் பகுதியில் வாழும் மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இஸ்ரேல் – காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அணுகுமுறை தவறானது. அவருடைய அணுகுமுறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

” காசா மீதான போரை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென நான் அழைப்பு விடுக்கிறேன். காசாவுக்குள் 6 முதல் 8 வாரங்கள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். உணவு, மருந்து பொருட்கள் செல்ல முழு அனுமதி அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினர் இடையே போர் நிறுத்தம் தொடர்பான உடன்படிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படகு கவிழ்ந்ததில் 96 பேர் பலி: கிழக்கு ஆபிரிகாவில் சோகம்!

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர்.

தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு தப்பியோடுகையிலேயே இந்த பெருந்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

130 பேரை ஏற்றி கொண்டு படகொன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கியே குறித்த படகு நேற்றிரவு பயணித்தது.

மபுதோ,எரிவாயு வளம் அதிகம் கொண்ட மொசாம்பிக் நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையுடன் இருந்த அவர்களுக்கு எதிராக, 2017-ம் ஆண்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு தாக்குதல் நட த்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இதனால், ஏற்பட்ட மோதலில் இருந்து தப்பிக்க முடியாமல் இதுவரை 5 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். 10 லட்சம் பேர் சொந்த நாட்டை விட்டு தப்பி வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடகடலோர பகுதியில் 130 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று நம்புலா மாகாணத்தில் உள்ள தீவை நோக்கி நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், குழந்தைகள் உள்பட 96 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நாட்டில் காலரா பரவுகிறது என தவறான தகவல் பரவிய நிலையில், மக்கள் அச்சமடைந்தனர். அது புரளி என தெரியாமல், அதில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் படகில் ஏறியுள்ளனர். ஆனால், படகில் போதிய இடவசதி இல்லாத சூழலில், கூட்ட நெருக்கடியால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை!

தாய்வானில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

தாய்வான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 1999 ஆம் ஆண்டு 7.2 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தாய்வானில் அதிகபட்சமாக ஏற்பட்ட நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 2, 500 இற்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை தாய்வானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தாய்வான் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக இருந்ததாக தெரிவித்துள்ளது.

தாய்வான் நாடே மிகச்சிறிய தீவாக இருக்கும் சூழலில், பெரும்பாலான இடங்களில் இருக்கும் கட்டடங்கள் குலுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நாடு முழுவதிலும் ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தாய்வான் நிலநடுக்கம் எதிரொலியாக, ஜப்பானின் ஒகிராவில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 11 முறை வெவ்வேறு ரிக்டர் அளவுகோலில் தாய்வானில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தாய்வானின் வட பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டின் தெற்கிலுள்ள தீவுகள், பிலிப்பைன்ஸ், சீனாவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் உள்ள தீவுக்கூட்டங்களிலும் நில அதிர்வுகள் அதிகம் உணரப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ், தாய்வான் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்திற்கொண்டு இலங்கையுடன் கலந்துரையாடி இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும் என மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவரான பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது இல்லை எனவும் இதனால் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகள் உள்ளிட்ட உடைமைகளை விடுவிக்கவும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இருநாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டு பணிக்குழுவின் 6 ஆவது கூட்டத்தை இந்தியா சார்பில் கூட்ட வேண்டும் என குறித்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

அதற்குள் தமிழக மீனவர்களின் அவல நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப்பணிக்குழு கூட்டத்தைக் கூட்டி, இலங்கையுடன் கலந்துரையாடி மிக விரைவாக பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் செங்கம்பள வரவேற்புக்கு தடை!

அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்வுக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடியை காரணம் காட்டிபிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்படுவது முக்கிய சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது. இந்த நடவடிக்கை பிரதமருக்கு அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவற்றை பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை விதிக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சரவை பிரிவு கூறியுள்ளதாவது: மத்திய அமைச்சர்கள், அரசாங்க பிரதிநிதிகள், மூத்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் அலுவல்பூர்வ நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளம் பயன்படுத்தப்படக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், வெளிநாட்டு தூதர்கள் பாகிஸ்தானுக்கு வரும்பொழுது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிக்கும் வகையில் ஒரு நெறிமுறையாக சிவப்பு கம்பளங்களை பயன் படுத்தலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

தேவையற்ற செலவினங் களை குறைத்து, அந்த நிதியை முக்கிய நிர்வாக நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சூடானில் பட்டினி சாவு அபாயம்: 50 லட்சம் பேர் பாதிப்பு!

சூடானில் பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், உடனடி உதவிகள் அவசியமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக உணவுப் பொருட்களின் விநியோகம் தடைப்பட்டமையே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுடானில் சுமார் 5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வௌியிட்டுள்ளது.

அவர்கள் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3.6 மில்லியன் பேர் சிறுவர்கள் எனவும் 1.2 மில்லியன் பேர் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளே பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், சூடானில் எதிர்வரும் மாதங்களில் பட்டினி நிலை மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 பேரை பலியெடுத்த கோர பஸ் விபத்து……..!

தென்னாபிரிக்கா Limpopo மாகாணத்தில் 165 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகியுள்ளார்.

பஸ்ஸில் பயணித்தவர்களில் 8 வயது சிறுமியொருவர் மட்டுமே படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியிசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தையடுத்து பஸ் தீப்பிடித்து எரிந்துள்ளது என தெரியவருகின்றது.

யாத்திரிகள் பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது.

இதன் வழியே, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் மீது வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது.

அந்த கப்பல் நேற்று அதிகாலை திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன.

இந்த சம்பவத்தில், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து கொண்டது. பின்னர் அது நீரில் மூழ்கியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்பு பணி மேற்கொள்ள சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். வாகனங்கள் நீரில் விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர்.

பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் நீரில் விழுந்தனர்.இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன.

போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து கழகம் தெரிவித்தது.தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

இதுபற்றி மேரிலேண்ட் பொலிஸார் இன்று கூறும்போது, பால விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 6 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறினர்.

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன்.
அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி,
“முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்கவிட்டது.

மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.” என்று கூறினார். இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

ரமலான் மாதத்தில் போர் நிறுத்தம்கோரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு போர்நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தும் தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டு பலமுறை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் வீட்டோ மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரமலான் மாதத்தின்போது போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்திய தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 10 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டது.

போர் நிறுத்தத்துடன் தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடத்திய எதிர்பாராத தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான், ஏப்ரல் 9 ஆம் திகதி நிறைவடையும் நிலையில், காசாவில் போர் நிறுத்தம் செய்யக்கோரி ஐநா பாதுகாப்பு சபையில் முதல்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய தாக்குதலில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரிப்பு – விசாரணை வேட்டை தீவிரம்!

ரஷ்யாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிராஸ்னோகோர்க் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கு உள்ளது. இங்கு கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில் நேற்று முன் தினம் பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிமானோர் கலந்துகொண்டனர்.அப்போது அந்த இசை நிகழ்ச்சிக்குள் புகுந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

இந்த தாக்குதலில் இசை அரங்கு முழுவதும் தீ பற்றியது.இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலில் 115 பேர் உயிரிழந்திருந்த நிலையில் பலி மேலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகள் உள்பட 11 பேரை ரஷிய பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுடம் இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன? பின்னணியில் உள்ளது யார்? என்பது குறித்து ரஷிய அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதா ரஷ்யா?

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெய் வாட்சன் கூறுகையில், “இம்மாதத் தொடத்திலேயே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்த சதி செய்யப்படுவதாகவும், குறிப்பாக இசை நிகழ்ச்சியை குறிவைத்து சதி செய்யப்படுவதாகவும் ரஷ்ய அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு தகவல் அளித்தது.

தீவிரவாத சதிச் செயல்களைப் பற்றி தகவல் கிடைத்தால் அதை நாடுகளுடன் பகிர்வதை கடமையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்படி இத்தகையத் தகவல்களை அமெரிக்கா பகிர்ந்து வருகிறது. அதன்படியே ரஷ்ய அதிகாரிகளுக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்றார்.

அதேபோல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது நம்பகமானதுதான் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமையன்று இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூர தீவிரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

ராஜ குடும்பத்தை துரத்தும் சோகம்: இளவரசியும் புற்றுநோயால் பாதிப்பு!

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

42 வயதான அவர், பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி ஆவார். ஜனவரி மாதம் மருத்துவமனையில் இரண்டு வார காலம் அவர் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்துள்ளார்.

“எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்ஸ{க்கும் அதிர்ச்சி அளித்தது.

அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம்.

நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன்” என கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார்.

தனது தந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மனைவிக்கும் ஏற்பட்டுள்ளதால் இளவரசர் கவலையில் உள்ளார். அவருக்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவுக்குள் ஊடுருவி ஐ.ஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 60 பேர் பலி!

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது.

6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில், அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதலை நடத்தியது.

இதனால், உள்ளே இருந்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இந்த தீ விபத்தில், இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. புகை அரங்கம் முழுவதும் பரவியது. இதனால், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர்.

இதுபற்றி ரஷிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்து உள்ளது. 100-க்கும் கூடுதலானோர் காயமடைந்து உள்ளனர்.60 பேர் தீவிர சிகிச்சை பெறக்கூடிய நிலையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

.இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கும் என்றும் முதலில், கூறப்பட்டது. இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ்  என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்று கொண்டுள்ளது.

ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை!

பாரீஸில் நடைபெறும் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஆகஸ்டு 11 ஆம் திகதிவரை நடக்கிறன.

200 நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவை செயின் நதியில் நடத்த போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமான வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு படகில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் படகில் 6 கிலோமீட்டர் தூரம் ஈபிள் கோபுரம் நோக்கி பயணிக்க இருக்கிறார்கள்.

45 நிமிடங்கள் இந்த அணிவகுப்பு நடைபெற உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் தொடக்க விழா ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். தொடக்க விழாவில் பங்கேற்க ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுக்கு மேலாகியும் இன்னும் குண்டு சத்தம் ஓயவில்லை. ரஷியாவுக்கு பெலாரஸ் ஆதரவாக இருந்து வருகிறது. போர் குற்றத்துக்காக இவ்விரு நாட்டு வீரர்கள் தற்போது சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டு கொடியின் கீழ் இல்லாமல் பொதுவான நபர்கள் என்ற பெயரிலேயே விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து லாசானேவில் நேற்று நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் கலாசார சிறப்புமிக்க ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்புக்கு ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

அதே சமயம் இந்த அனுபவத்தை அவர்களும் பெறும் வகையில் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ரஷியாவில் இருந்து 36 பேரும், பெலாரசில் இருந்து 22 பேரும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள ஒலிம்பிக் கமிட்டி, அவர்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்ள அனுமதி உண்டா என்பது பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடிக்கும்: மேற்குலகுக்கு புடின் சிவப்பு எச்சரிக்கை!

“ அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் மூளும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என்று ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விளாடிமிர் புடின் தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றிருக்கும் புடின் ஆற்றிய முதல் உரையில், “ உக்ரைனில் நேட்டோ படைகள் உள்ளன. அவற்றில் ஏற்கனவே ஆங்கிலம் பேசும் சிப்பாய்களும், பிரெஞ்சு பேசும் சிப்பாய்களும் உள்ளனர். அவர்கள் அங்கே கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றனர்.

சம்மபந்தப்பட்ட நாடுகள் தங்கள் படையினரை திரும்பப் பெற்றுக் கொள்வது நலம். சிறையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவல்னியை நான் விடுதலை செய்யவே விரும்பினேன். ஆனால் அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். மேற்கத்திய நாடுகளின் சில சிறைகளில் இருக்கும் ரஷ்யக் கைதிகளுக்கு மாற்றாக நவல்னியை விடுவிக்க ஒப்புக் கொண்டிருந்தேன். அவரது மறைவு எதிர்பாராதது. ஆனால் அதை சிலர் விமர்சிக்கின்றனர்.” – எனவும் புடின் குறிப்பிட்டார்.