ஜப்பானில் தீவுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிப்பு

ஜப்பானில் தீவுகளின் எண்ணிக்கை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானின் புவிசார் தகவல் ஆணையம் (GSI), 7,273 புதிய தீவுகளை அடையாளம் கண்டுள்ளது. அதே நேரத்தில் தீவுக்கூட்டத்தில் 6,852 தீவுகள் இருப்பதாக ஜப்பான் கடலோர காவல்படையின் 1987 அறிக்கையின் அடிப்படையில் நம்பப்பட்டது.

GSI தொழில்நுட்ப ரீதியாக 100,000 தீவுகளைக் கண்டறிந்தது. ஆனால் குறைந்தபட்சம் 330 அடி சுற்றளவு கொண்ட தீவுகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டன. டோக்கியோவை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான கியோடோ நியூஸ் கருத்துப்படி, இந்த ஆச்சரியமான வெளிப்பாட்டிற்கு சில விளக்கங்கள் உள்ளன.

முதலாவதாக, கடந்த அறிக்கையிலிருந்து புவிசார் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது. இது முன்னர் ஒற்றை நிலப்பகுதிகள் என்று தவறாக அடையாளம் காணப்பட்ட தீவுகளின் சிறிய கொத்துகளை வரைபடமாக்குபவர்களை சரியாக அடையாளம் காண அனுமதிக்கிறது.

இயற்கை பேரழிவுகள் மற்றும் தீவிர வானிலை ஆகியவை நிலப்பரப்பை தொடர்ந்து மாற்றுகின்றன. ஸ்மித்சோனியன் இதழின்படி, கடல் மட்டத்திலிருந்து நான்கரை அடி உயரத்தில் இருந்த எசன்பே ஹனகிதா கோஜிமா என்ற ஜப்பானிய தீவு, காற்று மற்றும் பனிக்கட்டிகளால் அரிக்கப்பட்டு காணாமல் போனது.

2021 ஆம் ஆண்டில், டோக்கியோவிற்கு தெற்கே 750 மைல் தொலைவில் நீருக்கடியில் எரிமலை வெடிப்பு ஒரு பிறை வடிவ தீவை உருவாக்கியது என்று அந்த நேரத்தில் கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது. எரிமலை வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட தீவுகள் பெரும்பாலும் அரிப்பிலிருந்து மறைந்துவிடும் – இதேபோன்ற தீவுகள் 1904, 1914 மற்றும் 1986 இல் உருவாக்கப்பட்டு சிதைந்தன.

கடைசியாக, ஒரு தீவு உண்மையில் என்ன என்பதன் வரையறை மாறிவிட்டது. 1987 மதிப்பீட்டில் ஏரிகள் மற்றும் ஆறுகளில் காணப்படும் மணல் திட்டுகள் மற்றும் தீவுகள் விலக்கப்பட்டன. ஏனெனில் கடல் சட்டம் குறித்த ஐ.நா. மாநாடு அந்த நிலப்பகுதிகளை தீவுகளாக அங்கீகரிக்கவில்லை.

ஜப்பானின் நிலப்பரப்பு நான்கு பெரிய தீவுகளால் ஆனது: ஹோன்சு (ஜப்பானின் முக்கிய தீவு இது டோக்கியோ, கியோட்டோ மற்றும் ஒசாகா போன்ற நகரங்கள்) ஹொக்கைடோ (ஆறு தேசிய பூங்காக்களைக் கொண்ட ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள தீவு) ஷிகோகு; மற்றும் கியூஷு நவோஷிமா போன்ற பிற சிறிய தீவுகள் உள்ளன.

இலங்கை அகதியொருவர் தமிழக பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!

தமிழகம் தாபதி புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 20 வயதுடைய இலங்கை அகதியொருவர், பொலிஸ் விசாரணையின்போது தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓவியரான குறித்த இலங்கையர் (Dhushanth), 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியைப் பழனியிலுள்ள கோவிலொன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எட்டயபுரம் பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும், அவர்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே Dhushanth தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3ஆவது முறையாகவும் சீன ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் தெரிவு!

சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு தேசிய மக்கள் காங்கிரஸில் 3 ஆயிரம் உறுப்பினர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர்.

மேலும் சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சீன நாடாளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில், ஜி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார். இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுக்காக வீட்டில் களவாடிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி…

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.

மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார். கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது மாணவர் ஒருவர் படித்து வருகிறார்.

மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் சினிமா, பூங்கா என சுற்றி வந்தனர். இந்த நிலையில் மாணவர் காதலியிடம் ஐடிஐ படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். தற்போது கடன் பிரச்சினை உள்ளதால் உன்னுடைய வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடு என கேட்டுள்ளார்.

இதையடுத்து தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம் (இந்திய ரூபா) 8 பவுன் நகையை தன்னுடைய காதலனிடம் கொடுத்தார்.

பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் நகை, பணத்தை தன்னுடைய காதலனுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாணவிக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்து மார்பு பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலனிடம் நகை, பணத்தை கொடுத்ததை பொலிஸாரிடம் தெரிவித்தார். பொலிஸார் மாணவியின் காதலனை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவியிடம் வாங்கிய நகை, பணத்தை வேறு ஒரு காதலிக்கு செலவு செய்ததாக தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் மீது பொலிஸில் புகார் செய்தார். இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

தாய்வான்மீது சீனா தாக்குதல் – விமானங்கள் விரைவு! மூண்டது போர் பதற்றம்!!

தாய்வானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதால், அங்கு திடீரென போர்ப்பதற்றம் நிலவுகிறது.

தென்கிழக்கு சீனாவின் கடற்கரையில் இருந்து வெறும் 100 மைல் தொலைவில் உள்ள தீவு நாடு தாய்வான். அமெரிக்காவின் நட்பு நாடாக இது விளங்குகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நடந்த சண்டையைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தாய்வான் தனி நாடாக பிரிந்தது. அந்நாட தனி நாடாக இறையாண்மையுடன் விளங்கி வருகிறது. ஆனால் சீனா, தாய்வானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கிறது.

இதற்கு அமெரிக்கா, சீனப்பெருஞ்சுவர்போல பெரும் தடையாக நிற்கிறது. தாய்வானை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும், அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜின்பிங் கொக்கரித்து வருகிறார். அதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயார் என்னும் ரீதியில் ஏற்கனவே அவர் பேசி உள்ளார்.

தாய்வானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருவதும், சீனாவின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு தாய்வானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி உள்ளிட்ட தலைவர்கள் சென்று வந்ததும் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் சீன ராணுவம் பெரும்போர்ப்பயிற்சிகளை நடத்திக்காட்டியது. இப்படி தாய்வானை சீனா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. போர்ப்பதற்றம் இந்த நிலையில், கொரோனா எழுச்சி அலையால் அல்லலுற்று வருகிற சூழலில் தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் கடந்த 24 மணி நேரத்தில் அனுப்பி வைத்திருப்பதாக தாய்வான் ராணுவ அமைச்சகம் நேற்று தகவல் வெளியிட்டு, உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

தோல்வியை கொண்டாடியவர் சுட்டுக்கொலை – ஈரானில் பயங்கரம்!

உலகக்கிண்ண போட்டியில் ஈரானின் தோல்வியை கொண்டாடிய நபரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் விளையாடிய ஈரான் அணியை அமெரிக்கா தோற்கடித்தது. இதனை தொடர்ந்து, போட்டியில் இருந்து ஈரான் வெளியேறியது.

1979-ம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியில் இருந்து அமெரிக்காவும், ஈரானும் பகைமை நாடுகளாக உள்ளன. ஈரானின் தோல்வியை சொந்த நாட்டை சேர்ந்த மெஹ்ரான் சமக் (வயது 27) என்பவர் கொண்டாடியுள்ளார் என கூறப்படுகிறது. சமக் தனது காரில் ஒலிப்பானை உரக்க ஒலிக்க செய்து சென்றுள்ளார். இதனை கவனித்த ஈரான் பாதுகாப்பு படையினர், சமக்கின் தலையில் நேரிடையாக துப்பாக்கியால் சுட்டு அவரை கொன்றனர்.
இதனை ஓஸ்லோவை அடிப்படையாக கொண்ட ஈரான் மனித உரிமை அமைப்பு தெரிவித்து உள்ளது.

கொண்டாட்டத்தில் பெரும் களேபரம்! நெரிசலில் மூச்சிழந்து 146 பேர் பலி!!

தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டிய பெரும் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சன நெரிசலால் பல டசின் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் சியோலில் இரவு விடுதிகளுக்குப் பிரபலமான பகுதியில் சனிக்கிழமை இரவு இந்த அவலம் நேர்ந்துள்ளது. குறைந்தது 146 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. 150 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

பல நூற்றுக் கணக்கான அம்புலன்ஸ் வண்டி வாகனங்களுடன் மீட்புப் பணியாளர்கள் சம்பவம் நடந்த பகுதியில் நிறைந்து காணப்படுகின்றனர். அதிபர் யூன் சுக்-யோல் (Yoon Suk-yeol) அவசரகாலக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருக்கிறார்.

இடிபாடுகள் போன்ற சனக் கும்பலுக்கு அடியில் சிக்குண்டு கிடப்பவர்களை மீட்புப்பணியாளர்கள் வெளியே தூக்கி எடுத்துச் செயற்கைச் சுவாசம் அளிக்கின்ற காட்சிகள் சமூக இணைய ஊடகங்களில் பகிரப்பட்டு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூச்செடுக்க அவதிப்பட்ட நிலையில் பலர் வீதியோரங்களில் கிடந்து துடித்ததையும், சடலங்கள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டுப் பொதி செய்யப்படுவதையும் நேரில் காண முடிந்ததாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் விவரித்திருக்கிறார்.

கொரோனாத் தொற்று நோய்க்குப் பின்னர் மாஸ்க் இன்றி நடைபெற்ற முதலாவது பெரும் ஹாலோவீன் கொண்டாட்டம் இதுவாகும். சுமார் ஒரு லட்சம் பேர் அங்கு திரண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அங்குள்ள குறுகிய வழி ஒன்றின் ஊடாக இடித்துத் தள்ளியவாறு பெரும் கூட்டத்தினர் பிரவேசிக்க முயன்றபோது பெரும் நெரிசல் ஏற்பட்டுப் பலரும் நசியுண்டனர் என்று நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

உள்ளூர் பத்திரிகை ஒன்றின் தகவலின் படி பிரபலமான ஒருவர் அங்கு வருகை தந்துள்ளார் என்ற தகவலைக் கேள்விப்பட்டு அவரைக் காண்பதற்காகப் பெரும் எண்ணிக்கையானோர் அவ்விடத்தை நோக்கி ஓடிச் செல்ல முற்பட்டதாலேயே நெரிசல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

டசின் கணக்கானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

‘மீனவர் விவகாரம்’ – மத்திய அரசுக்கு பறந்த முதல்வரின் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக நடைபெறும் ஐந்தாவது நிகழ்வு இதுவாகும் எனவும் இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசமுள்ளதாக தெரிவித்த தமிழக முதல்வர், தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக தமிழக மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

அல் கெய்டா தலைவர் ட்ரோன் தாக்குதலில் பலி!

ஒஸாமா பின் லேடனுக்குப் பின்னர் அல் கெய்டா இயக்கத்தை வழிநடத்தி வந்த அதன் மூத்த தலைவர்களில் ஒருவரான அய்மன் அல்-ஜவாஹிரி (Ayman al-Zawahiri) ஆப்கானிஸ்தானில் சிஐஏ (CIA) தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் விசேட உரையாற்றவிருந்த அதிபர் ஜோ பைடன் காபூலில் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பரேஷன் குறித்த தகவல்களை நாட்டுக்கு அறிவிக்கவிருந்தார் .

நியூயோர்க்கில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட செப்டம்பர் 11 பேரழிவுத் தாக்குதல் உட்பட உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்காகத் தேடப்பட்டு வந்தவர் ஜவாஹிரி. 71 வயதான அல் – ஜவாஹிரி

தலைநகர் காபூலில் மிக முக்கிய இலக்கு ஒன்றின் மீது அமெரிக்க உளவு அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதலிலேயே சிக்குண்டு உயிரிழந்தார் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் முன்னராகத் தகவல் வெளியிட்டிருந்தன.

காபூலில் அல் – ஜவாஹிரி தங்கியிருந்த பாதுகாப்பான மறைவிடத்தின் மீது கடந்த சனிக்கிழமை இரவு 9.48 மணியளவில் இரண்டு ஹெல்ஃபயர் ஏவுகணைகளைப் (Hellfire missiles) பயன்படுத்தி மிகத் துல்லியமான வான் வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதிபர் ஜோ பைடனின் அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த ஒப்பரேஷன் குறித்த தகவல் எதுவும் தலிபான் நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தப்படவில்லை.

வீட்டின் பல்கனியில் தங்கியிருந்த சமயத்திலேயே அல் கெய்டா தலைவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் உட்பட வீட்டில் இருந்த ஏனைய எவருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் அந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

காபூலில் உள்ள வீடு ஒன்று தாக்கப்பட்டதை தலிபான் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அல் – ஜவாஹிரி அங்கிருந்தாரா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவரான அய்மன் அல்-ஜவாஹிரி, 2011 இல் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அல் கெய்டா தலைவர் ஒஸாமா பின் லேடனின் வலதுகரமாகச் செயற்பட்டு வந்தவர்.

ஒஸாமா கொல்லப்பட்ட பிறகு அந்த அமைப்பின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டவர். உலக இஸ்லாமியத் தீவிரவாத வலைப்பின்னலின் தலைமைச் சித்தாந்தவாதி(chief ideologue) என்று அவர் வர்ணிக்கப்பட்டுவந்தார்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் ஆட்சி அதிகாரம் ஏற்பட்டதை அடுத்து அல் கெய்டா இயக்கத்துடன் தலிபான் இணைந்து செயற்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அல் கெய்டா இயக்கத்துக்கு ஆப்கானில் இடமளிக்கப் போவதில்லை என்பதைத் தலிபான் அமைப்பு கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் செய்துகொண்டஅமைதி உடன்படிக்கையில் உத்தரவாதப்படுத்தியிருந்தது.

இந்த நிலையிலேயே அல் கெய்டா தலைவர் காபூலில் கொல்லப்பட்டிருக்கிறார். காபூலில் நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்று தலிபான் பேச்சாளர் கண்டித்திருக்கிறார். தலிபான் இயக்கத்துடன் அமெரிக்கா கடந்த ஆண்டு டோஹாவில் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு (Doha agreement) முரணான அத்துமீறல் இது என்றும் அந்த அமைப்பு சாடியுள்ளது.

ThasNews-Paris

பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு!

ஆப்கானிஸ்தானின் தென் கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 900 பேர் பலியாகியுள்ளனர். 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை உலுக்கிய 6.1 ரிக்டர் அளவிலான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

அத்துடன், பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பிற இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஆப்கானில் பூகம்பம் – 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பாரிய பூகம்பத்தால் குறைந்தபட்சம் 250பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், பலர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக நிலநடுக்கம் பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

மீட்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

சவூதியில் ஒரே நேரத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவூதி அரேபியாவில் குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. கொலை, தீவிரவாத செயல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் போதிலும், பயங்கரவாதம் உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சரி என்றே மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் அங்கு நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளை விட அதிகமாகும்.

தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் பல கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள். அவர்களில் பலர் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா, யேமனின் ஹுதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடைய மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றவாளிகள் என்று சவூதி அரசு தெரிவித்து உள்ளது.

சவூதியின் முக்கியமான பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள். சிலர் சவூதி பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள். சிலர் சட்ட விரோதமான ஆயுதங்களை நாட்டிற்குள் கடத்தினார்கள். இதுபோன்ற மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனத்தில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 81 பேரில் 73 பேர் சவூதி நாட்டை சேர்ந்தவர்கள், 7 பேர் ஏமன் நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றும் ஒருவர் சிரியா நாட்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. தூக்கிலிடப்பட்ட அனைவரும் சவூதி நீதிமன்றங்களில் முறையாக விசாரிக்கப்பட்டனர் என்றும் ஒவ்வொரு நபரின் வழக்குகளும் 3 தனித்தனி நிலைகளில் 13 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டது என்றும் சவூதி அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1979-ம் ஆண்டு மக்காவில் உள்ள பெரிய மசூதியைக் கைப்பற்றியதாக குற்றம்சாட்டப்பட்ட 63 பேருக்கு ஜனவரி 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2016-ம் ஆண்டு ஒரே நாளில் ஷியா முஸ்லிம் மதகுரு நிம்ர் அல்நிம்ர் உள்பட மொத்தம் 47 பேர் தூக்கிலிடப்பட்டனர். 1979-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே நேரத்தில் அதிக அளவிலான மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து சவூதி அரேபியா அரசு தொலைக்காட்சி செய்தியில் தண்டனை அடைந்தவர்கள் சாத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றியவர்கள் என்று குறிப்பிடப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போரில் பெட்ரோல், டீசல் விலைகள் கணிசமாக உயர்ந்து விட்டன. இந்த சூழலில் கச்சா எண்ணெய் விலை தொடர்பாக ஆலோசிக்க இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் அடுத்தவாரம் சவூதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த சூழ்நிலையில் சவூதி அரேபியாவில் ஒரே நேரத்தில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது உலக நாடுகளை உற்றுநோக்க செய்துள்ளது.

‘போர் பதற்றம் உக்கிரம்’ – உக்ரேனுக்கான விமான சேவைகள் இரத்து

விமானசேவை நிறுவனங்கள் சில உக்ரேனுக்கான விமானசேவைகளை இரத்துசெய்துள்ளன.  வேறு சில நிறுவனங்கள்  உக்ரேனுக்கான விமானசேவைகளை திசை திருப்பியுள்ளன. ரஷ்யா எந்நேரமும் உக்ரேனை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாலேயே விமானசேவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

டச்சு KLM விமானசேவை உக்ரேனுக்கான தனது சேவைகளை நிறுத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது. உக்ரேன் வான் பரப்பில் பறப்பது விமானங்கள் ஆபத்தானது என KLM விமானசேவை கருதுகிறது.

2014ம் ஆண்டு ரஷ்ய ஆதரவு உக்ரேன் தீவிரவாதிகள் மலேசிய விமானசேவை நிறுவனத்திற்குச்சொந்தமான விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மொத்தம் 298 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 198 பேர் டச்சு பிரஜைகள்.

 சனிக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்குமிடையே ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நீடித்த தொலைபேசி உரையாடலிலும் எதுவித சாதகமான முடிவுகளும் எட்டப்படவில்லை.

ரஷ்யா துருப்புகளை உக்ரேன் எல்லையில் நிறுத்தியுள்ளதுடன் பெலாரஸில் வைத்து பயிற்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. உக்ரேனை ஆக்கிரமிக்கும் நோக்க்கம் தனக்கு இல்லையென ரஷ்யா கூறுகிறது. ஆனால் அமெரிக்க உளவுச்சேவை ரஷ்யா குறுகிய கால அறிவித்தலில் உக்ரேன் மீது தாக்குதல் தொடுக்கும் என தெரிவித்துள்ளது.

‘ஊடகவியலாளர்களை தடுத்து வைத்துள்ள தலிபான்கள்’

ஆப்கானிஸ்தானில் இரு வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் தலிபான்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.ஒருவர் பி.பி.சி. நிருபர் Andrew North மற்றவர் ஐ.நாவுக்கான அகதிகள் அலுவலகத்தின் ஊடகவியலாளர். ஐ.நாவுக்கான அகதிகள் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பி.பி.சி. நிருபர் Andrew North கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார்.

நங்கள் இவர்களது பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம் என அகதிகளுக்கான ஐ,நா அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்களின் விடுதலைக்கு யாரவது உதவ முடியுமா என ஆராய்ந்து வருவதாகவும் அகதிகளுக்கான ஐ,நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

தலிபான்களின் பேச்சாளர் Zabihullah Mujahid இந்த விடயம் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயத்தின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர்களை தடுத்து வைப்பதற்கான தேவை எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். .

இந்து வர்த்தகர் சுட்டுக்கொலை – பாகிஸ்தானில் பயங்கரம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் சிந்து மாகாணத்தின் தகரி நகரத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்டவர் சதன்லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற அண்மைய வன்முறை சம்பவம் இது.
கடந்த ஜனவரி 4ம் திகதி சுனில்குமார் என்ற வர்த்தகரும் சிந்து மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவர் ஒரு தொழிலதிபர்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிராக நான்கு வன்முறைச்சமபவங்கள் அண்மையில் பதிவாகியுள்ளதாக செய்தி ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 30ம் திகதி கிறிஸ்தவ மதகுரு ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தார். முன்னதாக குருநானக்கின் பிறந்த நாளன்று ஐந்தாம் வகுப்பில் கல்வி பயிலும் 11 வயது சிறுவன் ஒருவன் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பின் கொலை செய்யப்பட்ட சம்பவமும் இதே பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.

‘ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி’

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை முதல் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் தனித்தனியாவே கல்வி கற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் ஆண்களும் பெண்களும் தனித்தனி வாயில்கள் ஊடாகவே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களை தனிமைப்படுத்துவதற்கு தமக்கு வெவ்வேறு தெரிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் குளிராக இருப்பதால் உஷ்ணவலய பல்கலைக்கழகங்கள் மட்டும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை இம்மாதம் 26ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கியதை ஐ.நா வரவேற்றுள்ளது. எனினும் உயர்தரப்பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்திருந்தனர். தற்போது சர்வதேச அழுத்தங்கள் காரணமாக தலிபான்கள் பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

‘பப்ஜி’ விளையாடியதை தட்டிக்கேட்டதால் குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன்

பப்ஜி விளையாடியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த 14வயது சிறுவன், தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொன்றது பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் மற்றும் இரு சகோதரிகளுடன் வசித்து வந்தார். சிறுவனின் தாயார் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், விவாகரத்து பெற்றவர்.

இந்நிலையில், தலைநகர் லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் கடந்த வாரம் நஹித் முபாரக், அவரது மகன் தைமூர் மற்றும் இரு மகள்களுடன் இறந்து கிடந்தார்.

தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில் அவரது மகன்தான் கொலையாளி என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில், பப்ஜி விளையாடியதைத் தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன் என தெரிவித்தார்.

உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தலிபான்களுக்கு எதிராக ஆப்கான். பெண்கள் களத்தில்’

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உடல் முழுவதையும் மூடும் புர்கா அல்லது ஹிஜாப் அணிய வேண்டுமென்ற தலிபான்களின் அறிவித்தலுக்கு எதிராக தலைநகர் காபூலில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. கடந்த வாரமும் உள்விவகார அமைச்சின் முன்னால் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் உடல் முழுவதையும் மூடும் புர்கா அல்லது ஹிஜாப் அணிய வேண்டுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஷரீ ஆ சட்டத்தை மேற்கோள் காட்டியே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முன்னாள் சமூக நலத்துறை மற்றும் தொழில் பிரதியமைச்சரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான ஜமீலா ஆப்கானி எமது சமய நம்பிக்கைகளைப்பற்றி எமக்குத்தெரியும் என கூறுகிறார். பெண்கள் என்ன மாதிரி உடை அணிய வேண்டும் என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமெனவும் அவர் கூறுகிறார்.

அறநிலையத்துறை அமைச்சர் கூறுகையில் பெண்கள் புர்கா அல்லது ஹிஜாப் அணியவேண்டுமென குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். 36 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான சோனியா அஹ்மதியார் இதை நான் முற்று முழுதாக எதிர்க்கிறேன். ஆடை விடயத்தில் பெண்களைவற்புறுத்த முடியாது என கூறுகிறார்.
பெண் ஒருவர் புர்காவை தூக்கி பின்புறமாக வீசி விட்டு இது பாகிஸ்தானிலிருந்து வந்த பிற்போக்குத்தனமான அரேபிய கலாசாரம் என்று கூறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கூண்டோடு வெளியேறும் ஓர் இனம்

ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது முன்னுரிமை அடிப்படையில் இந்தியா விசா வழங்கியது. 1970 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் சீக்கியர்கள் வசித்து வந்தனர்.

தற்போது 146 சீக்கியர்கள் மட்டுமே வைத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் எமது தாய்நாடு நாங்கள் ஆப்கானிஸ்தானை நேசிக்கிறோம் என ஆப்கானிஸ்தானில் தற்போதும் வசித்து வரும் சீக்கியர்கள் கூறுகின்றனர்.

ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கிய சமூகம் நீண்டகாலமாக ஒடுக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. 2020 ஆம் ஆண்டு IS பயங்கரவாதிகள் பல சீக்கியர்களை கொன்றனர்; தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் வேலையின்மை வறுமை என்பவற்றுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் எஞ்சியுள்ள குடும்பங்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளன.

‘எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்’ – உலக நாடுகளிடம் தலிபான்கள் கோரிக்கை

ந. பரமேஸ்வரன்

உலக நாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் தங்களை அங்கீகரிக்க வேண்டுமென ஆப்கான் பதில் பிரதமரும் தலிபான் தலைவருமான முகம்மது ஹஸன் அகுண்ட் புதன்கிழமை காபூலில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய இராணுவ குழுக்களுடன் வன்முறையில் ஈடுப்பட்டுக்கொண்டுள்ள அதே வேளை பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் இந்த ஊடக மகாநாடு நடத்தப்பட்டுள்ளது.

” குறுகிய கால உதவிகளால் பயனில்லை. நாங்கள் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம்.

பொருளாதார பிரச்னையும் பனிக்குளிரும் மக்களை மோசமான வறுமைக்குள் தள்ளியுள்ளது. முஸ்லிம் நாடுகளை எங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்குமாறு கோருகிறோம். அதன் பின்னர் நாம் விரைவாக நாட்டை அபிவிருத்தி செய்வோம்.

சர்வதேச உதவிகள் இப்போது நாட்டினுள் நுழைந்து கொண்டிருக்கின்றன; சர்வதேசம் தலிபான்களின் செயற்பாடுகளை அவதானித்து வருகிறது.” – என்றார்.