தமிழ் இன ஆழிப்பை கண்டித்து பிரிட்டனில் போராட்டம்!

தமிழ் இனவழிப்பை கண்டித்து – பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள், பிரித்தானிய அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவரும் நோக்கிலேயே போராட்டம் நடாத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய உணர்வை எந்த சக்திகளாலும் அடக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழ் மக்கள் என்றும் உறுதியாகப் பயணிப்பார்கள் என்ற செய்தியை பிரித்தானிய அரசிற்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளதாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மக்களவை அமைப்பினர் ஆகியோர் ஆங்கில உரைகளை வழங்கியிருந்தார்கள்.

வணக்கம் தமிழினத்தின் உயிர் காப்புப் போராட்டத்திற்கான அழைப்பு அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராளி ஒருவன் அகிம்சை வழியில் உயிரீந்து, உலகிற்கு ஈகத்தின் குறியீடாக விளங்குகின்றான்.

தியாக தீபம் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை அடித்து உடைத்ததுடன் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கி இனவாதத்தின் கோர முகத்தை காட்டியமைக்காக இந்த போராட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்துவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரிட்டனில் இருந்து ஜெனிவாவரை ஈருருளிப் பயணம் முன்னெடுப்பு

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரிட்டனில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள சுவீஸ் தலைநகர் ஜெனிவாரைவரை செல்லும் ஈருருளிப் பயணம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பிரிட்டன், வொலிங்ரன் பகுதியில் ஆரம்பமான ஈருருளிப் பயணம் எழுச்சியோடு செல்கின்றது.

இப்பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான ஆளும், எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கும், உள்நாட்டு , வெளிநாட்டு அமைச்சு அலுவலகங்களுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.

இம்மனுக்களில், இலங்கை அரசினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்ப நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கைக்கு எதிராக உடனடியாகக் காத்திரமான நடவடிக்கையில்  பிரிட்டன் அரசு இறங்க வேண்டும் என்றும் தமிழின அழிப்பிற்கான நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் ஈழ மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வாக சுதந்திர தமிழீழமே அமைய வேண்டும் என்றும் இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் இளையோர் TYO-UK அமைப்பால் தயாரிக்கப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான ஆவணச் சிறு வெளியீடுகளும் பொது மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

இந்த ஈருருளிப் பயணம் ஐரோப்பிய நாடுகளூடாகப் பயணித்து, 18/09/2023 அன்று சுவிஸ் ஐ.நா திடலில் நடைபெறும் பேரணியில் பேரெழுச்சியோடு  இணையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்!

இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது.

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். எனினும், அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை வண்ண மிகு ஊர்வலம் நடந்தது.

மன்னர் சார்லசும், அவரது மனைவியும், ராணியுமான கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சாரட் வண்டி தங்க முலாம் பூசப்பட்டது சாலையோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது.

அதன்பின், மன்னர் 3-ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

” வளர்ப்பு நாயால் சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்”

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவிற்கு சென்றுள்ளார். இதன்போது, அவர் தனது வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பூங்காவிற்குள் நாளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து, நாய் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,300 அகதிகள் மீட்பு

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த சுமார் ஆயிரத்து 300 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான முறைகளில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது.

அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 குழந்தைகள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இத்தாலி கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இத்தாலிக்கு வந்து கொண்டிருந்த சில அகதிகள் நடுக்கடலில் சிக்கித்தவித்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கித்தவித்த அகதிகளை பத்திரமாக மீட்டனர்.
இதுவரை 1,300 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

யாழ்ப்பெண் குத்திக்கொலை – சுவிஸில் பட்டப்பகலில் பயங்கரம்

சுவிற்சர்லாந்தில் வாழும் இலங்கையர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார்.

ஆர்கெவ், கான்டன் பகுதியிலுள்ள , மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிற்றுண்டிக் கூடத்தில் வைத்தே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் ஒருவருக்காக குறித்த பெண் காத்திருந்தவேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ருமேனியா எல்லையில் இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது!

ருமேனியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் இரண்டு லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலிருந்து 17 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது மற்றுமொரு லொறியில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

” மண்டியிட்டு சரணடையமாட்டோம்” – அமெரிக்க நாடாளுமன்றில் உக்ரைன் ஜனாதிபதி சபதம்

” நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்.” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.

போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம் என்று சபதமிட்டார்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 300 நாட்களைக்கடந்து சென்று கொண்டிருப்பதால் அது உலகளவில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த போருக்கு மத்தியில் உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றது, உலகளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அவர் போலந்து நாட்டின் ரெஸ்சோவ் நகரில் இருந்து அமெரிக்காவின் போர் விமானத்தில்தான் அங்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஒரு மாபெரும் ஹீரோவுக்குரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைனிய ராணுவ பதக்கத்தை ஜோ பைடனிடம் வழங்கினார்.

இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன், “இந்த பயங்கரமான நெருக்கடியில் உங்கள் தலைமை, நீங்கள் செய்திருக்கும் செயல்கள் உக்ரைன் மக்களையும், அமெரிக்க ஜனாதிபதியையும், அமெரிக்க மக்களையும், ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது” என புகழாரம் சூட்டினார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த பெரும் உதவிகளுக்கு நன்றி கூறத்தான் அமெரிக்கா வந்துள்ளதாக ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெள்ளையர் அல்லாத சிறுபான்மை இனப் பிரதமர் தெரிவு!

பிரிட்டிஷ் பழமைவாதிகளது தலைவராகவும் நாட்டின் அடுத்த பிரதமராகவும் 42 வயதான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் வரலாற்றில் 1874 இல் பெஞ்சமின் டிஸ்ரேலி(Benjamin Disraeli) என்ற யூத இனத்தைச் சேர்ந்த பிரதமருக்குப் பின்னர் அங்கு பதவிக்கு வருகின்ற முதலாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனாக் என்று லண்டன் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் டவுணிங் வீதி அலுவலகம் செல்கின்ற வயதில் குறைந்த பிரதமர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கிறது.

கட்சித் தலைவர் தெரிவுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்த போது ரிஷி சுனாக் கட்சியின் தலைவராகப் போட்டி இன்றித் தெரிவாகும் வாய்ப்புக் கனிந்தது. அதன் மூலம் அவர் பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என நம்பப்பட்ட முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஏற்கனவே அதனைத் தவிர்த்துக் கொண்டார். மற்றொரு போட்டியாளரான முன்னாள் அமைச்சர் பென்னி மோர்டான்ட் அம்மையாரும் நூறு எம்பிக்களது ஆதரவைத் திரட்ட முடியாமற் போனதால் கடைசி நிமிடங்களில் போட்டியில் இருந்து ஒதுங்க நேர்ந்தது. இதனால் ரிஷி சுனாக் எதிர்ப்பின்றி முன்னேறிப் பதவிகளைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்சிக்குள் ஜோன்சனின் அணியைச் சேர்ந்தவர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இளம் பிரதமராகப் பதவியேற்கவுள்ள ரிஷி சுனாக்,
பிரிட்டனில் குடியேறிய செல்வச் செழிப்பு மிக்க இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இந்துமதப் பின்னணியைச்சேர்ந்தவர். அவ்வாறான ஒருவர் பிரதமராகத் தெரிவாகியிருப்பது-அதுவும் இந்துக்களது முக்கிய பண்டிகையான தீபாவளித் திருநாளில் அது நிகழந்திருப்பது – ஆசிய நாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் மிக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது.

பதவி விலகிய பிரதமர் லிஸ் ட்ரஸ் அம்மையார் மாளிகை சென்று அரசர் சார்ள்ஸைச் சந்தித்து தனது விலகலை முறைப்படி அறிவிப்பார். அதன் பிறகு
அரசர் சார்ள்ஸ் ரிஷி சுனாக்கை அழைத்துப் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோருவார்
என்று அறிவிக்கப்படுகிறது. மகாராணியின் மறைவை அடுத்து சார்ள்ஸ் மன்னராகப் பதவியேற்ற பிறகு அவரால் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுகின்ற முதலாவது
தலைவர் ரிஷி சுனாக் ஆகிறார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய ரிஷி சுனாக், 2015 இல் Yorkshire தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். முதலாவது அமைச்சுப் பதவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவருக்குக் கிடைத்திருந்தது. மிக முக்கிய அமைச்சான நிதி அமைச்சுப் பொறுப்பைத் தனது 39 ஆவது வயதில்
ஏற்றுக் கொண்ட ரிஷி, தனது 42 ஆவது வயதில் நாட்டின் பிரதமர் ஆகின்றார்.

இதன் மூலம் நவீன அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த காலம் அரசியலில் ஈடுபட்ட பிரதமர் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

இந்தியாவில் ஆறாவது இடத்தில் உள்ள தொழில்நுட்பத்துறைச் செல்வந்தர் என். ஆர் நாராயணமூர்த்தியின் (NR Narayana Murthy) மகளாகிய அக் ஷதா மூர்த்தியை (Akshata Murty) 2009 இல் மணம் புரிந்த ரிஷிக்கு, கிருஷ்ணா (Krishna) மற்றும் அனொஷ்க்கா (Anoushka) என்ற இரு புதல்விகள் உள்ளனர். ரிஷி சுனாக் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை முடித்தவர்.

இந்தியாவில் பல பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அவரது மனைவி பெயரில் உள்ளன. பெரும் கோடீஸ்வரச் செல்வந்தரது வாரிசான மகளை மணம் முடித்த காரணத்தால் வரி தொடர்பான சர்ச்சைகள் ரிஷியின் அரசியல் வாழ்வில் அடிக்கடிப் பின்னடைவுகளை ஏற்படுத்திவந்தன.

ரிஷி சுனாக்கை பிரிட்டிஷ் வரலாற்றில் பிரதமர் பதவிக்கு வந்திருக்கின்ற “மிகப் பெரிய செல்வந்தர்” என்று மேற்குலக ஊடகங்கள் சில வர்ணித்துள்ளன.

தாஸ்நியூஸ் – பாரிஸ். 

லிஸ் ட்ரஸ்ஸுக்கும் 1, 15 000 பவுண்ட்ஸ் கிடைக்கும்! முன்னாள் பிரதமர்களுக்கான நிதிச் சலுகை மீது விமர்சனம்

பிரிட்டனில் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ் நாள் நிதிச் சலுகைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. Public Duty Costs Allowance (PDCA) எனப்படும் பொதுப் பணிச் சேவைக்கான செலவுக் கொடுப்பனவாக முன்னாள் பிரதமர் ஒருவர் வருடாந்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பவுண்ட்ஸ் நிதியைப் பெற உரித்துடையவராகிறார்.

பத்து ஆண்டுகள் பதவியில் இருந்த ரொனி பிளேயர், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த மார்க்கிரேட் தட்சர் அம்மையார் போன்றோருக்குக் கிடைத்த அதே நிதிச் சலுகையை ஆக 44 நாட்கள் மட்டுமே பதவி வகித்துவிட்டு வெளியேறியுள்ளலிஸ் ட்ரஸ் அம்மையாரும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர் ஆகிறார்.

அதேசமயம் இந்தத் தொகைக்குப் புறம்பாக இதே தொகையில் பத்து சதவீதத்தை ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பும் உள்ளது. அவற்றை அவர் பெற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.

ஆனால் முன்னாள் பிரதமர் ஒருவர் இந்த நிதிக் கொடுப்பனவை முழுமையாக அனுபவிக்கவேண்டியவரல்லர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வேண்டுமானால் அதை ஏற்காதிருக்கவோ அல்லது நிதியில் ஒரு பங்கை மாத்திரம் பெற்றுக்கொள்ளவோ முடியும்.

45 நாட்கள் மட்டுமே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் அம்மையார் மக்கள் சேவைக்கான இந்த நிதியை அனுபவிக்கத் தகுதியற்றவர் என்று பிரதான எதிர்க் கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் கூறியிருக்கிறார்.

நாடு பெரும் பொருளாதார – நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பவுண்ட்ஸ் நாணயப் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பண வீக்கத்தின் விளைவுகள் நாட்டின் ஒவ்வொரு குடி மக்களையும் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளில் நான்கு பிரதமர்கள் பதவிக்கு வந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு முன்னாள் பிரதமர்களுக்கான நிதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.அவ்வாறான அரசியல் போக்கைக் கடுமையாக விமர்சிக்கின்ற கருத்துக்கள் நாட்டில் எழுந்துள்ளன.”நம்பர் 10, டவுணிங் வீதி இல்லம் என்ன குறுகிய காலம் தங்கிச் சலுகைகளை அனுபவித்துச் செல்லும் விடுமுறைக்கால வீடா? “என்றவாறும்

பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முன்னாள் பிரதமர்களில் ரொனி பிளேயர், ஜோன் மேயர் இருவரும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும், கோர்டன் பிறவுண் ஒரு லட்சத்துப் 14 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் டேவிற் கமரோன்

ஒரு லட்சத்துப் 13 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் திரேசா மே அம்மையார் இதுவரை 57 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் பொதுப் பணிச் சேவைக்கான நிதியாகப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவலை பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

பாரிஸ் ஒலிம்பிக் : தொண்டர்களாக பணிபுரிய 45 ஆயிரம் பேர் ஆட்சேர்ப்பு

பாரிஸில் 2024 கோடையில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது பல்வேறு நிலைகளில் இணைந்து பணியாற்றுவதற்காக 45 ஆயிரம் தொண்டர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளனர்.

பெரு விளையாட்டு விழா சீராக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொண்டர்களைச் சேவைக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரவேற்புப் பகுதி, விளையாட்டு வீரர்கள், குழுக்களுக்கான உதவி, போட்டிகள் நடைபெறும் இடங்களில் அதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்கு உதவுதல், நேர முகாமைத்துவம் மற்றும் தரவுகளைச் சேமித்தல் போன்ற பணிகளுக்கு உதவுதல், மருத்துவ, முதலுதவிப் பணியாளர்களுக்கு உதவுதல் உட்படப் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ளோர் தொண்டர்களாக இணைந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

வாராந்தம் ஆறு நாட்கள் சம்பளம், உணவு மற்றும் இலவச போக்குவரத்து வசதியுடன் எட்டு மணிநேர வேலை வழங்கப்படும். பிரெஞ்சு, ஆங்கிலம் இரு மொழிகளிலும் பேசக் கூடிய – 18 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கமுடியும்.விண்ணப்பதாரர்கள் 2024 ஜனவரி 1 ஆம் திகதி 18 வயதைக் கடந்தவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக்கொள்ளப்படும். தெரிவு செய்யப்படுவோர்

2024 ஜூலையில் போட்டிகள் ஆரம்பமாகுவதற்குப் 10 தினங்கள் முன்பாக அதற்காக நிறுவப்படும் ஒலிமபிக் கிராமங்களில் சமூகமளிக்க வேண்டியது கட்டாயமாகும்.இது தொடர்பான மேலதிக விவரங்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கான உத்தியோக பூர்வ இணையத் தளத்தில் வெளியாகியுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் வாழ்க்கையில் ஒரு தடவையே கிடைக்கக் கூடியதுமான ஒலிம்பிக் விழாவில் தொண்டர்களாக இணைந்து கொள்ளும் இந்தச் சந்தர்ப்பம் இல்-து-பிரான்ஸின் இளையோருக்கு ஒரு நல்வாய்ப்பாகும்.

20-10-2022 தாஸ்நியூஸ்

 

 

 

அணுத் தாக்குதல் நடத்தினால் ரஷ்ய இராணுவம் அடியோடு அழிக்கப்படும்!

ரஷ்யா நடத்தக் கூடிய அணு ஆயுதத் தாக்குதல்கள் – அவை சிறிதாக இருந்தாலும் கூட – நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டணி நாடுகளின் பதிலடி மிகப் பலமாக இருக்கும். ஆனால் அது அணு ஆயுதப் பதிலடியாக இருக்காது. மாறாக ஒட்டுமொத்த கூட்டணி நாடுகளினதும் சக்தி வாய்ந்த இராணுவப் பதிலடியாக இருக்கும். இதனை மொஸ்கோ தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய மற்றும் நேட்டோ கூட்டணி ராஜதந்திரிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேட்டோ கூட்டணி நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களது கூட்டம் பெல்ஜியம் நாட்டின் ப்ரூஜெஸில் (Bruges) அமைந்துள்ள ஐரோப்பியக் கல்லூரியில் (College of Europe) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ராஜதந்திரிகள் பலரும் ரஷ்யாவின் அணு ஆயுத மிரட்டலுக்கான பதிலடி குறித்துப் பிரஸ்தாபித்திருக்கின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதல் நடத்துமாகவிருந்தால் நேட்டோ கூட்டணி நாடுகளின் பதிலடி மிகத் தீவிரமாக இருக்கும். அது ரஷ்யப் படைகளை முற்றாகத் துடைத்தழித்துவிடும் என்று

ஐரோப்பியப் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரக் கொள்கைகளுக்கான பொறுப்பாளர் ஜோசப் பொரெல்(Josep Borrell) அங்கு எச்சரிக்கை விடுத்தார்.

எதுவாக இருந்தாலும் உக்ரைனுக்கு எதிராக மொஸ்கோ நடத்தக் கூடிய அணு ஆயுதத் தாக்குதல் பாரதூரமான பதில் விளைவுகளை ஏற்படுத்தும். போரின் போக்கை அது அடியோடு மாற்றிவிடும் என்று நேட்டோ வட அத்திலாந்திக் கூட்டணி நாடுகளது அமைப்பின் செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg) அங்கு குறிப்பிட்டார்.

நேட்டோ கூட்டணி ஓர் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் வெகு தொலைவு. உறுப்பு நாடு ஒன்றின் மீது அணு ஆயுதத் தாக்குதல் தொடுக்கப்பட்டால் மாத்திரமே ஒப்பந்த விதிப்படி (Article 5) அணு ஆயுதத் தாக்குதல் மூலம் நேட்டோ பதிலளிக்கும். உக்ரைன் விடயத்தில் இந்த விதி பொருந்தாது.

நேட்டோவின் அணு ஆயுத சாதனங்கள் (nuclear deterrent) உறுப்பு நாடு ஒன்று தாக்கப்பட்டால் மட்டுமே தொழிற்படும்.

-இவ்வாறு நேட்டோ செயலாளர் நாயகம் நிலைமையை விவரித்தார்.

கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் (Secretary of Defense Lloyd Austin) லொய்ட் ஒஸ்ரின் – ரஷ்யாவின் அச்சுறுத்தலை நேட்டோ அணி நாடுகள் தீவிர கவனத்தில் எடுத்துள்ளன. அவர்கள் (ரஷ்யா) ஆபத்தானவர்கள், பொறுப்பற்றவர்கள்.

ரஷ்ய அதன் அணு ஆயுதங்களை நகர்த்தியதாக இதுவரை தகவல் இல்லை. நாங்கள் வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணிநேரமும் அதனைக் கண்காணித்து வருகின்றோம். எங்களிடம் மிகச் சரியான தகவல்கள் உள்ளன – என்று தெரிவித்தார்.

உக்ரைனில் அண்மையில் ரஷ்யா ஆக்கிரமித்து இணைத்துக் கொண்ட நான்கு பிராந்தியங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமாக இருந்தால் மொஸ்கோ தந்திரோபாய அணு ஆயுதங்கள் உட்பட எல்லா வகையான பதிலடிகள் மூலம் அதனைத் தடுக்கும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் திமித்ரி மெட்வெடேவ் (Dmitry Medvedev) எச்சரித்திருக்கிறார். அந்த எச்சரிக்கையை அடுத்தே நேட்டோ ராஜதந்திரிகளது இத்தகைய கருத்துக்கள் வெளியாகி உள்ளன.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

ஜேர்மனியில் ரயில்களை முடக்கிய நாசவேலையின் பின்னணியில் வெளிநாட்டுச் சக்தி?

ஜேர்மனியின் தேசிய ரயில் சேவைகளில் (Deutsche Bahn) ஒரு பகுதி சனிக்கிழமை காலை சில மணி நேரம் முடங்கியது. அது ஒரு திட்டமிட்ட நாச வேலை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டின் வட பகுதியில் அயல் நாடுகளுக்கும் தூர இடங்களுக்கும் செல்கின்ற ரயில்கள் உட்படப் பல சேவைகள் திடீரெனக் காலையில் மூன்று மணி நேரம் செயலிழந்ததால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அந்தரிக்க நேர்ந்தது. ரயில் சேவைகள் சீராகத் தொழிற்பட உதவும் முக்கியமான டிஜிட்டல் தொலைத் தொடர்புக் கேபிள்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் வெட்டப்பட்டதை அடுத்தே

சேவைகள் திடீரென முடங்கிப் போயின. கிழக்கில் பேர்ளின் பகுதியிலும் அங்கிருந்து பல நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் மேற்கு மாநிலத்தில் ஹேர்ன்(Herne) என்ற இடத்திலும் கேபிள்களை வெட்டி நாச வேலை புரியப்பட்டுள்ளது.

விசாரணையாளர்கள் இந்தச் செயலில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான சான்றுகள் இல்லை என்றும் கூறியிருக்கின்றனர். ஆனால் ஜேர்மனியின் சமஷ்டிப் பொலீஸின் உள்ளக அறிக்கை ஒன்றில் இருந்து கசிந்த தகவல்கள் இந்த நாச வேலையில் வெளிநாடு ஒன்றின் தலையீடு இருப்பதை மறுப்பதற்கில்லை என்று தெரிவித்திருப்பதாக ‘பில்ட்’ (Bild) செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் பால்டிக் கடலின் ஆழத்தில் நோட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்கள் மீது நடத்தப்பட்ட மர்ம வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து

ஜேர்மனி அதன் முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் அண்மையில் புதிதாக நிறுவப்பட்ட நாட்டின் ஆள்புலக் கட்டளை மையத்துக்குப்( territorial command) பொறுப்பான தளபதி ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர்(Carsten Breuer), ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் நோட் ஸ்ட்ரீம் போன்ற நாச வேலைகள் ஜேர்மனியின் ரயில்வே போன்ற உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்படலாம் என்று எச்சரித்திருந்தார். சைபர் தாக்குதல்கள் மற்றும் நாச வேலைகள் உட்பட ஒரு கலப்புத் தாக்குதல் அச்சுறுத்தல் (hybrid threat) குறித்து அவர் அதில் பிரஸ்தாபித்திருந்தார்.

ரயில் தொலைத் தொடர்புக் கேபிள்கள் வெட்டப்பட்ட இரண்டு இடங்களுக்கும் இடையிலான பூகோளத் தொலைவு (geographical distance) மற்றும் அண்மையில் நடந்த நோட் ஸ்ட்ரீம் குழாய்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றின் கணிப்பில் இந்த நாச வேலைக்குப் பின்னால் வெளிநாடு ஒன்று இருக்கக் கூடும் என்று அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்கின்ற குற்றப் புலனாய்வுப் பொலீஸ் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜேர்மனியில் இதற்கு முன்னர் இது போன்ற சிறிய நாச வேலைகள் தீவிர இடதுசாரி குழுக்களால் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை ரயில்வே வலைப் பின்னலைச் ஸ்தம்பிக்கச் செய்த இந்த முயற்சி அவற்றில் இருந்து வேறுபடுகிறது.

இது போன்ற செயல்களைப் புரிவதற்கு ரயில்வேயின் டிஜிட்டல் வானொலி அமைப்புப் பற்றிய மிகத் துல்லியமான அறிவு அவசியம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பானமையை பெறாத வேட்பாளர்கள்!

பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் எவரும் பெரும்பான்மை பெறாத நிலையில் பதவியில் உள்ள ஜனாதிபதி ஜயிர் பொல்சொனாரோ மற்றும் இடதுசாரியான லுலா டி சில்வா இடையில் இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் லுௗலா 48 வீதமான வாக்குகளையும் பொல்சொனாரோ 43 வீதமான வாக்குகளையும் வென்றுள்ளனர். இது கருத்துக்கணிப்புகளை விடவும் நெருக்கமான போட்டியாக இருந்தது.

இதன்படி இரண்டாம் சுற்றுக்கு செல்லாமல் இருப்பதற்கு தேவையான 50 வீத வாக்குகளை பெற லுௗலா தவறியுள்ளார்.

இந்நிலையில் பிரேசிலின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிப்பதற்கு வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி இரண்டாம் சுற்று தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் ஊழல் குற்றச்சாட்டில் சிறை அனுபவித்ததால் 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல்போன லுௗலா, இந்தத் தேர்தலில் பெரும் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளார்.

எனினும் கருத்துக் கணிப்புகளில் லுௗலாவை விடவும் பின்தங்கியிருந்த பொல்சொனாரோ அவைகளை பொய்யாக்கி எதிர்பார்த்ததை விடவும் அதிக வாக்குகளை வென்றுள்ளார்.

பல ஆண்டுகளாக கடும் போட்டியாளர்களாக இருந்து வரும் இந்த இருவரும் தேர்தல் பிரசாரங்களில் ஒருவருக்கு ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே அதிகம் செய்தனர்.

தேர்தலுக்கு முன்னர் கடைசியாக நடந்த தொலைக்காட்சி விவாதத்திலும் ஜனாதிபதி பொல்சொனாரோ, லுௗலாவை திருடன் என்று அழைத்தார். லுௗலா ஊழல் குற்றச்சாட்டில் 580 நாட்கள் சிறை அனுபவித்ததை குறிப்பிட்டே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். எனினும் லுௗலா மீதாக குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறுபுறம் பொல்சொனாரோவை பைத்தியக்காரர் என்று லுௗலா அழைத்தார்.

உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் தீவிர வலதுசாரிகள் ஆட்சி

இத்தாலியில் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாகத் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் வென்றிருக்கிறது. நியோ-பாசிசவாதப் பின்னணி கொண்ட இத்தாலிய சகோதரர்கள்(Brothers of Italy) கட்சியின் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களுக்கு முன்னேறியிருப்பதைமுற்கொண்டு வெளியாகிய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இத்தாலிய சகோதரர்கள் கட்சி 26% வீத வாக்குகளைப் பெற்று முதனிலைக்கு வந்துள்ளது. அதன் தலைவியும் தீவிர வலதுசாரியுமாகிய ஜோர்ஜியா மெலோனி புதிய பிரதமராக-நாட்டின் முதலாவது பெண் பிரதமராகப்-பதவியேற்பார் என்று அறிவிக்கப்படுகிறது.

45 வயதான ஜோர்ஜியா மெலோனி ரோம் புறநகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். முசோலினி ஆதரவாளர்களின் இத்தாலிய சமூக இயக்கத்தின் (Italian Social Movement) மாணவர் பிரிவில் தனது 15 ஆவது வயதில் இணைந்து அரசியலில் பிரவேசித்தவர். சர்வாதிகாரி முசோலினிக்குப் பிறகு அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்ற முதலாவது தீவிர தேசியவாதியாக அவர் இடம்பிடிக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாகவும் ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகின்ற இத்தாலி

நாட்டில் ஐரோப்பிய எதிர்ப்புக் கொள்கை கொண்ட மெலோனியின் வெற்றி ஒரு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய அரசியலில் அவரது தாக்கம் எவ்வாறு அமையப் போகின்றது என்ற தீவிர எதிர்பார்ப்பு அயல் நாடுகளில் காணப்படுகிறது.

தனது 19 ஆவது வயதில் பிரான்ஸின் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டி அளிக்கையில்,மெலோனி இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியைப் (Benito Mussolini) புகழ்ந்து கருத்து வெளியிட்டிருந்தார். “முசோலினி ஒரு சிறந்த அரசியல்வாதி,இத்தாலி நாட்டுக்காக அவர் செய்தவை எல்லாம் நன்மைகளே” என்று கூறியிருந்தார்.

முசோலினி காலத்தின் கோஷங்களாகிய “கடவுள்-தந்தை நாடு மற்றும் குடும்பம்” (God, fatherland and family”) என்பவற்றையே தனது சுலோகமாகப் பயன்படுத்துகிறார்.

ஜோர்ஜியா மெலோனி குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர். இத்தாலிக்கு தினமும் வந்து குவிகின்றஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்காகநாட்டின் கடல் எல்லையை அவர் இறுக்கி மூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அவரோடு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஏனைய இரண்டு வலதுசாரிக் கட்சிகளும் ஐரோப்பிய வெறுப்புவாதம் கொண்டவை. அதனால் மெலோனியின் தலைமையில் இத்தாலி இனிமேல் ஐரோப்பிய ஐக்கியத்தைக் கட்டிக்காக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மத்தியோ சல்வினியின் (Matteo Salvini) லீக் கட்சி, சில்வியோ புறுல்ஸ்கோனியின்(Silvio Berlusconi) மைய வலது சாரி Forza Italia கட்சி ஆகிய இரு அணிகளும் மெலோனியின் இத்தாலிய சகோதரர்கள் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

ஜோர்ஜியா மெலோனியின் ரஷ்யா மற்றும் ஐரோப்பா தொடர்பான கொள்கைகளில் அண்மையில் மாற்றங்கள் வெளிப்பட்டன. உக்ரைனை ஆதரிக்கும் மேற்குலகின் பக்கம் சார்ந்து கருத்துக்களை அவர் வெளியிட்டுவந்தார். ஐரோப்பிய வெறுப்புவாதக் கொள்கையிலும் தளர்வுப் போக்குக் காணப்பட்டது.

எனினும் சுவீடனைத் தொடர்ந்து இத்தாலியிலும் தீவிர வலதுசாரிகளது கை ஓங்கி இருப்பது ஐரோப்பா எங்கும்இயங்கும் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளுக்குப் புது உற்சாகத்தைக்கொடுத்திருக்கிறது. பிரான்ஸின் மரின் லூ பென், எரிக் செமூர் போன்ற தீவிர தேசியவாதத் தலைவர்கள் மெலோனியின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றிருக்கின்றனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

ருமேனிய எல்லையில் ட்ரக் வாகனத்தில் ஒளிந்து பயணித்த 37 இலங்கையர்கள் சிக்கினர்!

பொருள்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டி ஒன்றின் உள்ளே ஒளிந்திருந்து எல்லை தாண்டி ஹங்கேரி நாட்டினுள் நுழைய முயன்ற 37 இலங்கையர்களை ருமேனிய பொலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை ருமேனியா-ஹங்கேரி இடையிலான நாட்லாக் – 2 (Nadlac II Border)) எல்லையில் இவர்கள் பிடிபட்டனர் என்று ருமேனிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ருமேனிய நாட்டவர் ஒருவர் தான் செலுத்தி வந்த ட்ரக் வாகனத்தைச் சோதனைக்காக எல்லை நுழைவிடத்தில் நிறுத்திவிட்டு ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

அச்சமயம் ருமேனியாவில் இருந்து இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற அந்த வாகனத்தின் உள்ளே மனிதர்கள் மறைந்திருப்பதை எல்லைக் காவல் படையின் மோப்ப நாய்கள் கண்டு பிடித்தன என்று தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து வாகனத்தைச் சோதனையிட்ட காவலர்கள் உள்ளே இருந்து 37 பேரை மீட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்று அதிகாரிகள் பின்னர் உறுதி செய்தனர். ஹங்கேரி வழியாக ஷெங்கன் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காகஇவர்கள் அவ்வாறு வாகனத்தின் உள்ளே ஒளிந்திருந்து பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் வேறு இரண்டு வாகனங்களில் இதே போன்று ஒளிந்து பயணித்த ஆசிய நாட்டவர்கள் உட்பட பல புகலிடக் கோரிக்கையாளர்களைருமேனிய எல்லைக் காவலர்கள் கண்டு பிடித்துக் கைது செய்துள்ளனர்.

இலங்கையர்களுடன் சேர்த்து மொத்தம் 70 பேர் எல்லையில் பிடிபட்டுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் பங்களாதேஷ் நாட்டவர்கள் ஆவர். பங்களாதேஷ் நாட்டவர்கள் ருமேனியாவில் தொழில் புரிவதற்காக விசேட தொழில் வீஸா வழங்கப்படுகிறது. ஆனால் அந்த வீஸாவுடன் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய ஷெங்கன் எல்லைக்குள் சட்டபூர்வமாகப் பிரவேசிக்க முடியாது.

தொழிலுக்காக என்று வீஸா பெற்று ருமேனியா வருகின்ற பலர் அங்கிருந்து சட்டவிரோதமான பயண வழிகள் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. அவர்களில் இலங்கையர்கள், துருக்கியர் எதியோப்பியர்கள், மற்றும் சிரிய நாட்டவர் ஆகியோரும்
அடங்குவர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

ரியூனியன் தீவுக்கு இலங்கை அகதிகள் 46 பேர் படகில் வருகை

இலங்கையில் இருந்து 46 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மற்றொரு படகு பிரான்ஸின் ரியூனியன் தீவை வந்தடைந்துள்ளது. ஆறு சிறுவர்கள், இரண்டு பெண்கள் அடங்கிய இக் குழுவினரை பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ஒன்று சனிக்கிழமை காலை மீட்டுக் கரைசேர்த்துள்ளது.

படகு இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்து புறப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. 46 பேரும் சுமார் 12 அடி நீளமான அந்தப் படகில் 4ஆயிரத்துக்கும் அதிக கிலோ மீற்றர்கள் தூரம் பயணம் செய்துள்ளனர். அதனால் அவர்கள் மிகவும் களைப்படைந்து காணப்பட்டனர் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாயன்று இந்தப் படகு இந்து சமுத்திரத்தின் மற்றொரு தீவாகிய மொரீசியஸ் அருகே அந்நாட்டின் கரையோரக் காவல் படையால் முதலில் வழிமறிக்கப்பட்டது. படகில் இருந்தோர் தாங்கள் ரியூனியன் தீவில் புகலிடம் கோரவுள்ள தகவலைத் தெரிவித்ததை அடுத்து மொரீசியஸ் படையினர் படகை விடுவித்தனர்.

அகதிகள் படகு வருகின்ற தகவல் ரியூனியன் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பொலீஸாரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் அகதிகளை அங்கு வரவேற்றுப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மருத்துவம் மற்றும் சுங்கப் பரிசோதனையின் பின்னர் அவர்கள் அனைவரும் தீவில்
உள்ள விடுதி ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

புகலிடக் கோரிக்கை தொடர்பாக சட்டவாளர்கள் அவர்களைச் சென்று சந்தித்துள்ளனர்.அகதிகள் மற்றும் நாடற்றவர்களைப் பாதுகாப்பதற்கான பிரான்ஸின் அலுவலகம் (French Office for the Protection of Refugees and Stateless Persons OFPRA) அவர்களது விண்ணப்பங்களை விரைவான நடைமுறையில் பரிசீலித்து வதிவிட உரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும்.

பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய ரியூனியன் தீவு நோக்கி இலங்கை அகதிகள் வருவது சமீப காலமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது. முன்னர் 2018-2019 ஆண்டு காலப் பகுதியில் பல தடவைகளில் சுமார் 300 பேர் படகுகளில் ரியூனியன் தீவின் துறைமுகங்களை வந்தடைந்திருந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் மீண்டும் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

கொரோனா பெருந் தொற்றுக் காரணமாக இடையில் தடைப்பட்டிருந்த அகதிகள் வருகை இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்று ரியூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

மகாராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கி.மீ, வரிசையில் மக்கள் காத்திருப்பு

எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் குவிந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்களது வரிசை 16 கிலோ மீட்டரளவில் நீண்டு காணப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வந்த மக்களைப் போலவே குழந்தைகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் இரவு பகல் பாராது மகா ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

மகாராணியின் உடல் லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்ட பின்னர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகலரும் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர். இதில் பலர் கண்ணீர் சிந்தியபடி மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

ராணி இறந்த செய்தி தேனீக்களுக்கும் தெரிவிப்பு!

எலிசபெத் மகாராணியின் மறைவுச் செய்தி பக்கிங்காம் அரண்மனைத் தோட்டத்தில் பெட்டிகளில் வளர்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான தேனீக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அரசராக சார்ள்ஸ் பதவியேற்ற தகவலும் தேனீக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

நூற்றாண்டுகளாகத் தொடருகின்ற இந்தப் பாரம்பரியம் ஒரு மூடநம்பிக்கை போலத் தோன்றினாலும் அது இன்றைக்கும் அரச குடும்பத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு வழக்கமாக உள்ளது. அரச தோட்டத்துத் தலைமைத் தேனீப் பராமரிப்பாளரான 79 வயதான ஜோன் சப்பல்(John Chapple) என்பவர் மகாராணி இறந்த செய்தியைப் பெட்டிகளில் தட்டி மெதுவான குரலில் தேனீக்களிடம் தெரிவித்ததுடன் பெட்டிகளில் துயரத்தின் அடையாளமாகக் கறுப்புப் பட்டிகளைக் கட்டினார் என்ற தகவலை லண்டன் ‘டெய்லி மெயில்’ பிரத்தியேகமாக வெளியிட்டிருக்கிறது.

அரச குடும்பத்தில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதனைத் தேனீக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற பாரம்பரியம் நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. தேனீக்கள் தேனை உற்பத்தி செய்வதாக மூடத்தனமாக நம்பப்பட்ட காலத்தில் இருந்தே இந்த வழக்கம் ஆரம்பித்தது என்றும் கூறப்படுகிறது. மரணச் செய்தியைத் தேனீக்களுக்குக் கூறாவிட்டால் அவை தேனை உற்பத்தி செய்யாமல் கூட்டை விட்டு வெளியேறிவிடலாம் அல்லது இறந்து போகலாம் என்ற மூட நம்பிக்கை இந்தப் பாரப்பரியத்தின் பின்னால் இருந்திருக்கிறது. அது இன்னமும் அப்படியே பின்பற்றப்பட்டும் வருகிறது.

இதேவேளை, மகாராணியின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbe) நடைபெறும் என்பதை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

அன்றைய நாள் பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உட்பட உலகெங்கும் இருந்து தலைவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளனர். பாரிஸ் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இறுதி நிகழ்வுக்காக உலகின் முக்கிய தலைவர்களும் மில்லியன் கணக்கான மக்களும் ஒரே சமயத்தில் லண்டனில் திரளவுள்ளதால் பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்வதில் அதிகாரிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.

மகாராணி எலிசபெத்தின் உடல் இன்னமும் அவர் உயிர் பிரிந்த பால்மோரல் தோட்ட மாளிகையிலேயே வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையே உடல் லண்டனுக்கு எடுத்துவரப்படும். இறுதி நாள் நிகழ்வுக்கு முன்பாக நான்கு தினங்கள் அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும். அத்துடன் லண்டன் வீதிகளிலும் உடல் பவனி இடம்பெறவுள்ளது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

மிரட்டுகின்றது பருவ நிலை – ஆலங்கட்டி மழையால் 50 பேர் காயம்! குழந்தை மரணம்!!

ஸ்பெயினில் கடும் வெப்பம், காட்டுத்தீ என்பவற்றைத் தொடர்ந்து சில பகுதிகளில் சடுதியான ஆலங்கட்டி (hailstones) மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

கட்டலோனியாவில் சில பகுதிகளைக் கடும் காற்றுடன் தாக்கிய ஆலங்கட்டி மழையினால் சுமார் ஐம்பது பேர் காயமடைந்துள்ளனர். குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. காயமடைந்த பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கட்டலோனியாவில் La Bisbal de l’Emporda,என்ற நகரத்தைத் திடீரெனக் கடும் காற்றுடன் தாக்கிய மழையின் போது ரெனிஸ் பந்தின் அளவில்-சுமார் நான்கு சென்ரி மீற்றர் விட்டளவு கொண்ட – ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் பலர் காயமடைந்தனர். ஆலங்கட்டியின் நேரடியான தாக்குதலுக்கு இலக்கான ஒன்றரை வயதுப் பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது என்ற துயரச் செய்தி அங்கு சமூக ஊடகத் தளங்களில் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த இயற்கை அனர்த்தத்தில் காயமடைந்த குழந்தை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிலையில் தலையில் ஏற்பட்ட கடும் காயம் காரணமாக அடுத்த நாள் உயிரிழந்தது என்ற தகவலை உள்ளூர்ப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.சுமார் பத்து நிமிடங்களுக்கு அதிரடியாகப் பொழிந்து தள்ளிய ஆலங்கட்டிகள் தாக்கியதில் நகரசபைக் கட்டடம் உட்பட பல கட்டடங்களின் கூரைகளும் கண்ணாடிகளும் சேதமடைந்தன.

பெரும் ஓசையுடன் கற்கள் வீழ்வது கண்டு பலரும் பதறி ஓடுகின்ற காட்சிகளும் கார்க் கண்ணாடிகளை ஆலங்கட்டிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. கட்டலோனியாவில் (Catalonia) கடந்த இரண்டு தசாப்த காலத்தில் பொழிந்த ஆலங்கட்டி மழைகளில் அளவில் பெரிய கட்டிகள் அவை என்று நாட்டின் வானிலை அவதான நிலையம் (Météocat) தெரிவித்துள்ளது. இயற்கையின் இந்த சீற்றத்தைப் பெரும் துயரச் சம்பவம் என்று கட்டலோனியா அதிபர் Pere Aragones வர்ணித்துள்ளார்.

ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளை மேலும் இது போன்ற ஆலங்கட்டி மழை தாக்கக் கூடும் என்று பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த சில வாரங்களாக நீடித்த வெப்ப அனலைத் தொடர்ந்து இப்போது திடீரெனப் புயல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. திடீர் திடீரென ஆலங்கட்டி மழைப் பொழிவுகளும் பதிவாகி வருகின்றன.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.