ரியூனியன் தீவுக்கு இலங்கை அகதிகள் 46 பேர் படகில் வருகை

இலங்கையில் இருந்து 46 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் மற்றொரு படகு பிரான்ஸின் ரியூனியன் தீவை வந்தடைந்துள்ளது. ஆறு சிறுவர்கள், இரண்டு பெண்கள் அடங்கிய இக் குழுவினரை பிரான்ஸின் கடற்படைக் கப்பல் ஒன்று சனிக்கிழமை காலை மீட்டுக் கரைசேர்த்துள்ளது.

படகு இலங்கையின் எந்தப் பகுதியில் இருந்து புறப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. 46 பேரும் சுமார் 12 அடி நீளமான அந்தப் படகில் 4ஆயிரத்துக்கும் அதிக கிலோ மீற்றர்கள் தூரம் பயணம் செய்துள்ளனர். அதனால் அவர்கள் மிகவும் களைப்படைந்து காணப்பட்டனர் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாயன்று இந்தப் படகு இந்து சமுத்திரத்தின் மற்றொரு தீவாகிய மொரீசியஸ் அருகே அந்நாட்டின் கரையோரக் காவல் படையால் முதலில் வழிமறிக்கப்பட்டது. படகில் இருந்தோர் தாங்கள் ரியூனியன் தீவில் புகலிடம் கோரவுள்ள தகவலைத் தெரிவித்ததை அடுத்து மொரீசியஸ் படையினர் படகை விடுவித்தனர்.

அகதிகள் படகு வருகின்ற தகவல் ரியூனியன் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது. அதனை அடுத்து பொலீஸாரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரும் அகதிகளை அங்கு வரவேற்றுப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். மருத்துவம் மற்றும் சுங்கப் பரிசோதனையின் பின்னர் அவர்கள் அனைவரும் தீவில்
உள்ள விடுதி ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

புகலிடக் கோரிக்கை தொடர்பாக சட்டவாளர்கள் அவர்களைச் சென்று சந்தித்துள்ளனர்.அகதிகள் மற்றும் நாடற்றவர்களைப் பாதுகாப்பதற்கான பிரான்ஸின் அலுவலகம் (French Office for the Protection of Refugees and Stateless Persons OFPRA) அவர்களது விண்ணப்பங்களை விரைவான நடைமுறையில் பரிசீலித்து வதிவிட உரிமை வழங்குவதைத் தீர்மானிக்கும்.

பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியங்களில் ஒன்றாகிய ரியூனியன் தீவு நோக்கி இலங்கை அகதிகள் வருவது சமீப காலமாக மீண்டும் ஆரம்பித்துள்ளது. முன்னர் 2018-2019 ஆண்டு காலப் பகுதியில் பல தடவைகளில் சுமார் 300 பேர் படகுகளில் ரியூனியன் தீவின் துறைமுகங்களை வந்தடைந்திருந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் மீண்டும் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

கொரோனா பெருந் தொற்றுக் காரணமாக இடையில் தடைப்பட்டிருந்த அகதிகள் வருகை இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்று ரியூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

மிரட்டுகின்றது பருவ நிலை – ஆலங்கட்டி மழையால் 50 பேர் காயம்! குழந்தை மரணம்!!

ஸ்பெயினில் கடும் வெப்பம், காட்டுத்தீ என்பவற்றைத் தொடர்ந்து சில பகுதிகளில் சடுதியான ஆலங்கட்டி (hailstones) மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

கட்டலோனியாவில் சில பகுதிகளைக் கடும் காற்றுடன் தாக்கிய ஆலங்கட்டி மழையினால் சுமார் ஐம்பது பேர் காயமடைந்துள்ளனர். குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. காயமடைந்த பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கட்டலோனியாவில் La Bisbal de l’Emporda,என்ற நகரத்தைத் திடீரெனக் கடும் காற்றுடன் தாக்கிய மழையின் போது ரெனிஸ் பந்தின் அளவில்-சுமார் நான்கு சென்ரி மீற்றர் விட்டளவு கொண்ட – ஆலங்கட்டிகள் வீழ்ந்ததால் பலர் காயமடைந்தனர். ஆலங்கட்டியின் நேரடியான தாக்குதலுக்கு இலக்கான ஒன்றரை வயதுப் பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்தது என்ற துயரச் செய்தி அங்கு சமூக ஊடகத் தளங்களில் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இந்த இயற்கை அனர்த்தத்தில் காயமடைந்த குழந்தை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நிலையில் தலையில் ஏற்பட்ட கடும் காயம் காரணமாக அடுத்த நாள் உயிரிழந்தது என்ற தகவலை உள்ளூர்ப் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.சுமார் பத்து நிமிடங்களுக்கு அதிரடியாகப் பொழிந்து தள்ளிய ஆலங்கட்டிகள் தாக்கியதில் நகரசபைக் கட்டடம் உட்பட பல கட்டடங்களின் கூரைகளும் கண்ணாடிகளும் சேதமடைந்தன.

பெரும் ஓசையுடன் கற்கள் வீழ்வது கண்டு பலரும் பதறி ஓடுகின்ற காட்சிகளும் கார்க் கண்ணாடிகளை ஆலங்கட்டிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்ற காட்சிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. கட்டலோனியாவில் (Catalonia) கடந்த இரண்டு தசாப்த காலத்தில் பொழிந்த ஆலங்கட்டி மழைகளில் அளவில் பெரிய கட்டிகள் அவை என்று நாட்டின் வானிலை அவதான நிலையம் (Météocat) தெரிவித்துள்ளது. இயற்கையின் இந்த சீற்றத்தைப் பெரும் துயரச் சம்பவம் என்று கட்டலோனியா அதிபர் Pere Aragones வர்ணித்துள்ளார்.

ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளை மேலும் இது போன்ற ஆலங்கட்டி மழை தாக்கக் கூடும் என்று பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் கடந்த சில வாரங்களாக நீடித்த வெப்ப அனலைத் தொடர்ந்து இப்போது திடீரெனப் புயல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. திடீர் திடீரென ஆலங்கட்டி மழைப் பொழிவுகளும் பதிவாகி வருகின்றன.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

இலங்கையர்கள் ஆறு பேர் ரியூனியன் தீவில் தஞ்சம்!

பிரான்ஸின் இந்து சமுத்திரத் தீவான ரியூனியனுக்கு சிறிலங்கா கொடியுடன் மீன்பிடிப்படகு ஒன்றில் வந்த ஆறுபேர் அங்கு தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிறு நண்பகல் தீவின் வடமேற்கே கடலில் தத்தளித்த அந்தப் படகை அவதானித்த கரையோரக் காவல் பொலீஸ் படையினர் அதனை அணுகி Pointe-des-Galets துறைமுகத்துக்கு கொண்டுவந்து கரை சேர்த்துள்ளனர். படகில் காணப்பட்ட

ஆறு ஆண்களும் மருத்துவப் பரிசோதனையின் பின்னர் அங்கு
தங்குவதற்கு அனுமதியின்றித் தரையிறக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கு புகலிடம் கோர விருப்பம் தெரிவித்ததை அடுத்து தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரியூனியன் தீவின் பொலீஸ் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களது நிலைவரங்களும் சுமார் 4 ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரம் தாண்டி எவ்வாறு அவர்கள் இலங்கையில் இருந்து அங்கு வந்து சேர்ந்தனர் என்பது குறித்தும் அவர்களிடம் செஞ்சிலுவைச் சங்கத்தினரது உதவியுடன் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

பாரிஸில் இயங்கும் அகதிகள் மற்றும் நாடற்றவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் அலுவலகம் (OFPRA) ஆறு பேருடைய விண்ணப்பங்களையும் பரிசீலிக்கும். சாதாரணமாக அதன்
தீர்மானம் 48 மணிநேரத்துக்குள் வழங்கப்படும். புகலிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஆறுபேரும் தீவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். நிராகரிக்கப்பட்டால் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆயினும் குடியேற்றவசிகளுக்குச் சட்ட உதவிகளை வழங்கிவருகின்ற அமைப்புகளின் உதவியுடன் அவர்கள் மேன்முறையீடு செய்ய முடியும்.

ரியூனியன் தீவுக்கு இதற்கு முன்னரும் இலங்கை அகதிகள் படகுகளில் வந்து புகலிடம் கோரியுள்ளனர். 2018-2019 காலப்பகுதியில் கப்பல்கள் மூலம் பெண்கள், குழந்தைகள் உட்பட 200 இலங்கையர்கள் அங்கு வந்து தஞ்சமடைந்தனர். அவர்களில் சில டசின் கணக்கானோர் மட்டுமே அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர். எஞ்சியோர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தற்சமயம் இலங்கையில் உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளால் அங்கிருந்து சட்டவிரோதமாகப் படகுகளில் வெளியேறுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. அவர்களில் பலரது படகுகள் இலங்கைக் கடற்படையினரால் கடலில் வைத்து இடைமறிக்கப்படுகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் வென்னப்புவ பகுதியில் இருந்து பிரான்ஸ் அழைத்துச் செல்வதாகக் கூறிப் பயண முகவர்களால் படகில் ஏற்றப்பட்ட 47 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

பிரான்ஸின் வரலாற்றிலே நேரிட்ட பெரும் காட்டுத் தீ!

பிரான்ஸின் தென் மேற்குப் பகுதியில் கடந்த சில நாட்களாகப்பெரும் காட்டுத் தீ பரவிய பிரதேசத்துக்கு நேரில் விஜயம் செய்த அதிபர் மக்ரோன், தீயை அணைப்பதற்காக இரவுபகலாகப்
போராடிய தீயணைப்பு வீரர்களை நாட்டின் “நாயகர்கள்” என்று புகழந்திருக்கிறார்.

La Teste-de-Buch என்ற இடத்தில் தீயணைப்புப் படையினரின் மத்திய நிலையத்தில் உரையாற்றிய அவர், நாட்டின் Arcachon basin வட்டகையில் பரவிய காட்டுத் தீயை வரலாற்றில் ஏற்பட்ட பெரும் தீ அனர்த்தம் என்று விவரித்தார். Gironde மாவட்டத்தில்
சுமார் 20 ஆயிரம் ஹெக்டேயர் பரப்பளவிலான காட்டைத் தீ முழுமையாகத் தின்றுவிட்டது. 37 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பெரும் வனப்பிரதேசத்தின் இழப்பை ஈடுசெய்வதற்காகத் தேசிய திட்டம் ஒன்றின் கீழ் மரங்கள் மீள நடப்படும் என்று மக்ரோன் அங்கு அறிவித்தார்.

மிக உச்ச அளவுகளைத் தொட்ட அனல் வெப்பத்தின் காரணமாக பெரும் தீ பரவிய சமயத்தில் நாடு அதனைக் கட்டுப்படுத்துவதற்கான போதிய தீயணைப்பு வளங்களைக் கொண்டிருக்கவில்லையா என்ற கேள்வி பல தரப்புகளிலும் எழுந்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்வது போன்று, காட்டுத் தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற நீர்த்தாரை

விமானங்களின் (Canadairs) எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும் என்றும் மக்ரோன் அங்குஅறிவித்திருக்கிறார்.

காட்டுத் தீ பரவிய இடங்களில் இன்று லேசாக மழை பொழிந்துள்ளது அதனால் தீயின் அசுர வேகம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. காட்டுப் பகுதியில் தீ தற்செயலாக பரவியதா அல்லது வேண்டும் என்றே மூட்டப்பட்டதா என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள்நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சந்தேக நபர் ஒருவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் தென்மேற்கில் பரவிய தீ காரணமாக எழுந்த புகை மூட்டம் நூற்றுக் கணக்கான மைல்கள் தாண்டிப் பாரிஸ் பிராந்தியத்தின் மீதும் லேசாகக் கவிந்துள்ளது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

பிரான்ஸின் பிரதமர் நம்பிக்கை வாக்கில் வென்றார்!

அதிபர் மக்ரோனின் சிறுபான்மை அரசின் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு எதிராக இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பிரேரணை தோல்வியடைந்துள்ளது.

பிரான்ஸில் “Motion de censure” எனப்படுகின்ற அரசு மீதான அதிருப்தியால் அதனைத் தோற்கடிக்கும் இந்தப் பிரேரணை கடந்த வாரம் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது முதலாவது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்குச் சிறிது முன்னராக இடதுசாரிக் குழுவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி பசுமைக் கட்சி என்பவற்றை இணைத்து தீவிர இடதுசாரியாகிய ஜோன் லூக் மெலன்சோன் நியூப்ஸ் (Nupes) என்ற பெயரில் அமைத்த இடதுசாரிக் கூட்டணி 151 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் மிகப் பலமான பெரிய குழுவாக உள்ளது. அந்தக் குழுவினால் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையேதோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

நியூப்ஸ் கூட்டணியின் 151 உறுப்பினர்களில் 146 பேரே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சி எம்பிக்கள் மற்றும் ரிப்பப்ளிக்கன் வலதுசாரி உறுப்பினர்கள், மக்ரோனின் பிரதான எதிராளியாகிய மரின் லூ பென்னின் தீவிர வலதுசாரிகள் உட்பட மிகப் பெரும்பான்மையாக 289 பேர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் ஆதரவில் நிறுவப்படாத அரசை வீழ்த்துவோம் என்று கங்கணம் கட்டி இந்தப் பிரேரணையை முன்மொழிந்த ஜோன் லூக் மெலன்சோன் தரப்பினருக்கு இன்றைய வாக்கெடுப்பு பெரும் தோல்வியாக அமைந்துள்ளது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்

2015 இல் பிரான்ஸை அதிர வைத்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு மரண தண்டனை!

2015 நவம்பர் 13 ஆம் திகதி பாரிஸை அதிரவைத்த பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிருடன் தப்பிப் பிடிபட்ட முக்கிய இஸ்லாமியத் தீவிரவாதக் கைதியாகிய சலா அப்தெஸ்லாமுக்கு (Salah Abdeslam) குறைக்க முடியாத ஆயுள் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பிரான்ஸின் நவீன வரலாற்றில் மிக நீண்டதும் – அதிக முக்கியத்துவம் வாய்ந்ததுமாகக் கருதப்படும் இந்த வழக்கு விசாரணை, தாக்குதல் நடந்து சுமார் ஆறு ஆண்டுகளின் பின்னர் கடந்த ஆண்டு செப்ரெம்பரில் தொடங்கியது. பாரிஸில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு நீதிமன்ற அறையில் கடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களது உறுப்பினர்கள்,செய்தியாளர்கள் மாத்திரமின்றி வெளிநாடுகளில் இருந்து வந்த பெரும்
எண்ணிக்கையானவர்களும் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சமயத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்தனர்.

சலா அப்தெஸ்லாமுடன் வேறு 19 பேருக்கும் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர் என நம்பப்படுகிறது.

ஐ. எஸ். இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கத்தினால் திட்டமிடப்பட்டு அதன் கொமாண்டோ அணி ஒன்றினால் பாரிஸ் நகரில் அருந்தகம், உணவகம், தேசிய உதை பந்தாட்ட அரங்கு, மற்றும் பிரபல இன்னிசை அரங்கம் (Bataclan music venue) ஆகிய இடங்களில் தொடராகப் பல தற்கொலைக் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. பிரான்ஷூவா ஹொலன்ட் ஆட்சியில் நடந்த அந்தத் தாக்குதல் சம்பவம் இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகு பிரான்ஸ் மீது நடத்தப்பட்ட ஒரு போராகக் கருதப்படுகிறது. சுமார் 130 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நூற்றுக் கணக்கானோர் காயங்களுக்குள்ளாகினர்.

அப்தெஸ்லாம் தன் மீதான வழக்கு விசாரணைகளின் தொடக்கத்தில் தன்னை ஐ. எஸ். இயக்கத்தின் ஒரு “போர் வீரன்” என்று பிரகடனப்படுத்தியிருந்தார். ஆனால் பின்னர் இடையில் தான் ஒரு கொலைகாரன் அல்லன் என்றும் கொலைகளைச் செய்வது
தன்னுடைய நோக்கம் அல்ல என்றும் சாட்சியமளித்திருந்தார். தனக்குக் கொலைத் தண்டனை வழங்குவது அநீதி என்றும் அவர் வாதிட்டிருந்தார்.

தாக்குதல் அணியில் ஏனையோர் கொல்லப்பட்டதும் உயிருடன் தப்பி ஓடிய சலா அப்தெஸ்லாம் தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியைப் பாரிஸின் புற நகர் ஒன்றில் கைவிட்டுச் சென்றிருந்தார். குண்டுத் தாக்குதலின் போது எவரையும் கொல்வதற்கு விரும்பாததால் தனது தற்கொலை அங்கியை வெடிக்க வைப்பதைத் தவிர்த்தார் என்ற அவரது கூற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. தற்கொலை அங்கி செயலிழந்த காரணத்தினாலேயே அது வெடிக்கவில்லை என்பதை விசாரணையாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர்.

அப்தெஸ்லாமுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை பிரான்ஸின் நீதிமன்றம் ஒன்றினால் குற்றச் செயல்களுக்காக வழங்கப்படுகின்ற அதி கூடிய உச்சத் தண்டனை ஆகும்.

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்-

பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!

பிரான்ஸின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் சட்டமன்றமாகிய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபைக்குத் தலைவராக-சபாநாயகராகப்- பெண் ஒருவர் தெரிவாகியிருக்கிறார்.

பிரான்ஸில் தேசிய சட்டமன்றத்தின் தலைவர்(National Assembly president) பதவி என்பது சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளின் சபாநாயகர்(Speaker) பதவியை ஒத்ததாகும்.

தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று நடைபெற்றது. அச்சமயம் அவையின் தலைவர் தெரிவுக்கான ரகசிய வாக்கெடுப்பில் அதிபர் மக்ரோனின் கட்சியின் (Ensemble) உறுப்பினராகிய ஜாயல் புறுன் பிவே (Yaël Braun-Pivet) புதிய நாடாளுமன்றத்தின் பல கட்சி உறுப்பினர்களால் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 238 வாக்குகளைப்
வென்று தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

51 வயதுடைய ஜாயல் புறுன் பிவே (Yaël Braun-Pivet) பிரான்ஸின் பெண் பிரதமர் எலிசபெத் போர்னின் அமைச்சரவையில் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களுக்கான அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.

பிரான்ஸின் Nancy இல் 1970 இல் பிறந்த அவர், 1930 இல் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்து பிரான்ஸில் குடியேறிய யூத இனப் பூர்வீகம் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.
திருமணமாகிய அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

ஒரு குற்றவியல் சட்டவாளராக விளங்கிய போதிலும் அவர் தன்னார்வ அடிப்படையில் வறியவர்களுக்கு உணவூட்டும்”Resto du Coeur” என்ற தொண்டு உணவக நிறுவனத்தில் இணைந்துசேவையாற்றிவந்தார். சோசலிஸக் கட்சியின் நீண்டகால ஆதரவாளரான அவர் பின்னர் 2017 இல் மக்ரோனின் En Marché இயக்கத்தில் இணைந்து அரசியலில் பிரவேசித்திருந்தார்.

அரசியலில் எவ்வித அனுபவமும்
இல்லாதவராக 2017 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட அவர் பாரிஸின் புறநகராகிய Yvelines தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். மக்ரோனின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்தில் சட்டக் குழுவின் தலைமைப் பதவி உட்படப்
பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அவர், மிகக் குறுகிய காலத்திலேயே சபாநாயகர் ஸ்தானத்துக்கு உயர்ந்துள்ளார்.

“நாடாளுமன்றம் நாட்டின் முகம் போன்றது. அது விவாதங்கள் புரியும் இடம். சண்டை செய்யும் களம் அல்ல. ஒன்றிணைந்து செயற்படவே நாட்டுமக்கள் எங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்” என்று
நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜாயல் புறுன் பிவே அவையில் கூறியிருக்கிறார்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

மூடிய இடங்கள், சனக் கூட்டங்களில் மாஸ்க் அணிய அறிவுரை

மூடிய இடங்கள் (“espaces clos”) மற்றும் சனக் கூட்டம் நிறைந்த பகுதிகளில் பொது மக்கள் மீண்டும் வைரஸ் தடுப்பு மாஸ்க் அணிவதை ஊக்கப்படுத்துமாறு பிரதமர் எலிசபெத் போர்ன் பொலீஸாருக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்திருக்கிறார்.

சமூக இடைவெளி, கைகளைத் தூய்மையாக்குதல் போன்றசுகாதாரப் பழக்கவழக்கங்களையும் விடாது பின்பற்றுமாறும் அவர் நாட்டு மக்களைக் கேட்டிருக்கிறார்.

அரசின் இந்த அறிவுரைகள் கட்டாயத்தின் பேரிலானவை (caractère obligatoire) அல்ல என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

போக்குவரத்துகள் மற்றும் பொது இடங்களில் மாஸ்க் அணிந்திருக்கவேண்டும் என்ற கட்டாய விதி கடந்த மே மாதம் 16 ஆம் திகதியுடன் சட்டரீதியாக நீக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

நோய் எதிர்ப்பை மீறித் தொற்றுகின்ற ஒமெக்ரோன் திரிபின் புதிய உப திரிபுகள் ஐரோப்பா எங்கும் ஏழாவது தொற்றலையை உருவாக்கிவருகின்றன என்று எச்சரிக்கப்படும் பின்னணியில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இன்று மாலை பொதுச் சுகாதாரத் துறை விடுத்துள்ள தொற்று விவரங்களின் படி147,248 புதிய தொற்றுக்கள் கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியிருப்பது நாட் டின் தொற்று நிலைமை உச்ச அளவில் எகிறிச் செல்வதைக் காட்டியிருக்கிறது.

குறிப்பாக பாரிஸ் பிராந்தியமே நாட்டில் அதி கூடிய ஒமெக்ரோன் திரிபு பரவும் பெரும் தொற்று மையமாக மாறியிருக்கிறது என்று பொதுச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொற்றாளர்கள் பலரும் மறு தொற்றுக்குள்ளானவர்கள் ஆவர். தீவிரமான நோய் அறிகுறிகள் நீடிக்காத போதிலும் தொற்றுக்குள்ளான பலரும் புதுவகையான பாதிப்புகளால் அவதியுற நேர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அறுபது வயதுக்கு மேற்பட்ட பிரிவினரை விரைவாக நான்காவது தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு அரசு கேட்டிருக்கிறது. ஊசி ஏற்றா தவர்களுக்கு விரைவில் நினைவூட்டும் கடிதங்கள் சுகாதாரத் துறையினரால் அனுப்பி வைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்-

பாரிஸில் முதல் குழந்தைக்கு குரங்கு அம்மை தொற்றியது

ஆரம்பப் பள்ளி (école Primaire) செல்லும் குழந்தை ஒன்றுக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாரிஸ் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு விடுத்துள்ள ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வளர்ந்தவர்களில் மட்டுமே அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் நோய் குழந்தைகளில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறை ஆகும். அம்மை தொற்றிய அந்தக் குழந்தைக்கு மிகச் சாதாரணமான அறிகுறிகளே வெளிப்பட்டுள்ளன என்றும் அவரோடு தொடர்புடைய ஏனைய குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அந்தக் குழந்தையின் குடும்ப உறவினர்களிடையே ஒருவர் ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி இருந்தார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகளுக்குக் காய்ச்சல், சொறி (fever, rash) அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரது ஆலோசனை பெறுமாறு பெற்றோர்கள் கேட்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் பாரிஸ் பிராந்தியத்திலேயே குரங்கு அம்மை (monkeypox) தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 330 தொற்றாளர்களில் 227 பேர் பாரிஸ் பிராந்தியத்தில் (Île-de-France) வசிப்பவர்கள் ஆவர். பெரியம்மை (smallpox) குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் தொற்று நோயாகிய குரங்கு அம்மை அதனை விட உயிர் ஆபத்தில் குறைவானது ஆகும். ஆபிரிக்காவின் சில பகுதிகளில் உள்ளூர் தொற்று நோயாக மாத்திரம் காணப்பட்டுவந்த குரங்கு அம்மை கடந்த மே மாதம் முதல் ஐரோப்பா, அமெரிக்கா அடங்கலாக உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

குரங்கு வைரஸின் இந்தத் திடீர்ப் பெருக்கம் மிகவும் கவலைக்குரியது என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், இந்தக் கட்டத்தில் அது இன்னமும் “ஓர் உலகளாவிய தொற்றுநோய்” என்ற நிலைமையை எட்டவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

நாடாளுமன்றம் செல்கிறார் சுத்திகரிப்புப் பணிப் பெண்

இம்முறை பிரான்ஸின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானோரில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ள போதிலும் அவர்களில் மிக முக்கியமானவர் ரஷெல் கேக்(Rachel Keke) என்ற 48 வயதான ஆபிரிக்க வம்சாவளிப் பெண்.

பாரிஸ் நகரின் Batignolles பகுதியில் உள்ள பிரபல இபிஸ் ஹொட்டேலில் (Ibis hotel) அறைகளைத் துப்புரவு செய்யும் ஊழியர்(la femme de ménage.). நாளாந்தம் நாற்பது என்ற கணக்கில் அறைகளைத் தூய்மைப்படுத்தும் பணியியில் மிக நீண்ட காலம் ஈடுபட்டுவந்த அவர், அதே பணியில் ஈடுபடுகின்ற நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராடியவர்.

ஹொட்டேல் பணிப் பெண்களின் சிறந்த ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் என்பவற்றுக்காக ஹொட்டேல் நிர்வாகத்துக்கு எதிராக 22 மாதங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர். பணிப் பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற் சங்கவாதியாகச் செயற்பட்ட அவர், மக்ரோன் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவந்த மஞ்சள் மேலங்கி இயக்கத்தின் ஆதரவாளராகவும் விளங்கினார்.

இந்த முறை தேர்தலில் ஜோன் லூக் மெலன்சோன் தலைமையிலான நியூப்ஸ் என்ற இடது சாரிகள் கூட்டணியில்(Nupes – Nouvelle Union Populaire Écologique et Sociale) பாரிஸின் புறநகரான Val-de-Marne ஏழாவது தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ரஷெல் கேக், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள்விளையாட்டுத் துறை அமைச்சரைத்
தோற்கடித்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் (Côte d’Ivoire-Ivory Coast) பிறந்தவர் ரஷெல். தனது 26 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் அங்கிருந்து பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தவர். ஐந்து குழந்தைகளின் தாயாகிய அவர் 2015 இல்தான் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றார்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

முதல் முறை ஜனாதிபதியின் கட்சி நாடாளும் பெரும்பான்மை இழந்தது

நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. முன்கூட்டிய மதிப்பீடுகளின் படிஅதிபர் மக்ரோன் தரப்பு 205 முதல் 235இடங்களை மட்டுமே கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையை எட்ட முடியாத தூரத்தில் உள்ளது.

577 உறுப்பினர்களைக்கொண்ட நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை வெல்வதாயின்
289 ஆசனங்களைக் கைப்பற்றியாக வேண்டும்.

ஆளும் கட்சிக் கூட்டணி பெரும்பான்மை பெறத் தவறியுள்ளதால் நாட்டின் அதிபர் நாடாளுமன்ற அதிகாரத்தை இழக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. தீவிர இடதுசாரி யாகிய மெலன்சோன் தலைமையில் உருவாகிய பசுமை + இடதுசாரிகள் கூட்டணி (Nupes) 170-190 ஆசனங்களைக்கைப்பற்றும் நிலையில் பிரதான எதிர்க் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தீவிர வலதுசாரியாகிய மரின் லூ பென் னின் கட்சி, நாட்டின் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக சுமார் 75 நாடாளுமன்ற ஆசனங்களை வெல்லும் நிலையில் உள்ளது. அதிரடியான இந்தப் பாய்ச்சல் அக் கட்சியை நாளுமன்றத்தில் மூன்றாவது அணியாக முன்னிறுத்தியுள்ளது. வலது சாரி Les Républicains கட்சியும் அதன் நேசக் கட்சியும் 50-75 இடங்களை வெல்லும் நிலையில் உள்ளன.

இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுவாக்களிப்பும் மிகவும் மந்தமாகவேநடந்தேறியுள்ளது. இன்று மாலை ஐந்து மணிவரை பதிவான மொத்த வாக்களிப்பு வீதம் 38.11 ஆகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதற்சுற்றில் பதிவாகிய மொத்த வாக்குவீதத்தை விட இது சற்றுக் குறைவாகும்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

தீ மிதித்த 25 பேர் காயம்!! சுவிஸ் சூரிச்சில் சம்பவம்!!

எரிந்து தணலாகிய நிலக்கரி மீது நடந்து சாதனை செய்ய முயன்றவர்களில் 25 பேர் கால்களில் படுகாயமடைந்தனர். அவர்களில் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுவிற்சர்லாந்தின் சூரிச் கன்ரனில் Au peninsular என்ற இடத்தில் செவ்வாய் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கால்கள் எரிந்து படுகாயங்களுக்குள்ளானவர்களை ஏற்றிச் செல்லப் பத்து அம்புலன்ஸ் வண்டிகள் அவசரமாக அங்கு அழைக்கப்பட்டன. தரையில் சில மீற்றர்கள் நீளத்துக்கு நிலக்கரி எரியூட்டப்பட்டுத் தணல் மேடை உருவாக்கப்பட்டுள்ளது. அதில் வெற்றுக் கால்களுடன் நடந்து சென்றவர்களே காயமடைய நேரிட்டுள்ளது.

மத அனுட்டானங்கள், நேர்த்திக்கடன் போன்றவற்றுக்காகத் தீ மிதிக்கின்ற பாரம்பரிய நிகழ்வுகள் இந்தியா உட்படபல நாடுகளில் காணப்படுகின்றன.

அவ்வாறன்றித் தற்சமயம் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பலரும் தீயில் நடக்கின்ற போட்டிகளை, சவால்களை ஏற்பாடு செய்து நடத்திவருகின்றனர்.

சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது துணிச்சல் மிக்க ஊழியர்களுக்காக இந்தத் தீ மிதிப்பை தனிப்பட்ட முறையில் ஒழுங்கு செய்திருந்தது என்ற தகவலை சூரிச் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. தீயில் நடப்பதற்குத் தனது ஊழியர்கள் எவரையும் நிர்ப்பந்தப்படுத்தவில்லை என்றும் விருப்பத்தின் அடிப்படையிலேயே அவர்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் எனவும் ‘Goldbach’ என்ற அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாகச் செய்தி ஊடகங்களில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகியிருப்பதை அடுத்து சூரிச் பொலீஸார் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

பிரான்ஸ் அதிபர் விரைவில் உக்ரைன் பயணம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நூறு நாள்களைத் தாண்டி நீடிக்கிறது. கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தின் முழுப் பகுதியையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

போரில் ஒரு கணிசமான வெற்றி தங்களுக்குக் கிடைத்திருப்பதாக மொஸ்கோ கூறுகிறது. ஆயினும் அங்குள்ள Severodonetsk என்னும் கேந்திர முக்கியத்துவம் மிக்க நகரில் கடும் சண்டை நீடித்துவருகிறது.

நாட்டின் இருபது சதவீத நிலப்பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்துவிட்டதாக உக்ரைன் கூறுகிறது. எனினும் இறுதி வெற்றி தங்களுடையதே என்று உக்ரைன் அதிபர் ஷெலான்ஸ்கி தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் விரைவில் தலைநகர்கீவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் தலைவர்கள் பலரும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் ஏற்கனவே அங்கு சென்றுதிரும்பியுள்ள நிலையில் மக்ரோனும் உக்ரைன் விஜயம் செய்ய வேண்டும் என்று அவர் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. தனது பயணத்தை மறுக்க முடியாது என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்: 20 ஆண்டுகளுக்குப் பின்தண்ணீர் போத்தல் விலை அதிகரிப்பு

ஐரோப்பாவில் அதிகரித்துவரும் பண வீக்கம் சாதாரணமாகக் கொள்முதல் செய்கின்ற நாளாந்தப் பொருள்கள் அனைத்தினது விலைகளிலும் தாக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

பிரெஞ்சு மக்களின் அபிமானம் பெற்ற கிறிஸ்டலின் (Cristaline) குடி தண்ணீர் போத்தல்களின் விலை கடந்த இருபது ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக 10 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பல்பொருள் அங்காடிகளில்மிக அதிக எண்ணிக்கையில் விற்பனை யாகின்ற தண்ணீர் போத்தல் என்ற பெரு மைக்குரிய “கிறிஸ்டலின்” வகைகளில் 1.5 லீற்றர் தண்ணீர் அடங்கிய ஆறு போத்தல்கள் கொண்ட பொதிகள் விற்பனையில் முதலிடத்தில் உள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் விற்பனையாகிய இந்தப் போத்தல்களின் மொத்தத் தொகை 233 மில்லியன்கள் ஆகும்.

புதிய விலை அதிகரிப்பின் படி ஆறு பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட கிறிஸ்டலின் தண்ணீருக்கு இனி மேல் அதன் விலையில் பத்து வீதத்தை மேலதிகமாகச் செலுத்த வேண்டி இருக்கும். எரிபொருள் விலை அதிகரிப்புக் காரணமாகப் போத்தல்களுக்கான பிளாஸ்ரிக்கின் விலை உலக சந்தையில் 39 வீதத்தால் உயர்ந்துள்ளது. தண்ணீர்ப் போத்தல் விலை அதிகரிப்புக்கு இதுவே பிரதான காரணமாகும்.

அத்துடன் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதால் தண்ணீர் போத்தல் விநியோகச் செலவுகளும் உயர்ந்துள்ளன.

இதேவேளை, பிரான்ஸில் கடந்த மே மாதம் பணவீக்கம் 5,2 %வீதமாக அதிகரித் துள்ளது. இவ்வாறு பணவீக்கம் ஐந்து வீதத்தைத் தாண்டி அதிகரிப்பது 1985 ஆம் ஆண்டின் பின்னர் இப்போதுதான் முதல் முறை ஆகும்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

ஸ்பெயின் – இங்கிலாந்து அணிகளது உதைபந்தாட்டத்தில் பெரும் குழப்பம்!

பாரிஸ் உதைபந்தாட்ட அரங்கில் ஏற்பட்ட குழப்பங்கள், முறைகேடுகளை அடையாளங் காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு தீர்மானித்துள்ளது.

திங்களன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இங்கிலாந்தின் லிவர்பூல் (Liverpool) ஸ்பெயினின் ரியல் மட்றிட்(Real Madrid) அணிகளுக்கு இடையே பாரிஸில் நடை பெற்ற சம்பியன் லீக் உதைபந்தாட்டத் திலேயே பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு பொலீஸார் தலையிடவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

வன்முறை மற்றும் குழப்பம் விளைவித்தவர்கள் எனக் கூறப்படும் 105 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் 39 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பாரிஸ் நகருக்கு வடக்கே அமைந்திருக்கின்ற தேசிய விளையாட்டு அரங்கில் (Stade de France) சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்டத்தின் போதே
இரண்டு அணிகளினதும் ரசிகர்கள் எனக் கூறப்படுவோர் குழப்பம் விளைவித்தனர்.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் ஆதரவாளர்களே முறைகேடாக அரங்கினுள் நுழைந்து ஒழுங்குகளைச் சீர்குலைத்தனர் என்று உள்துறை அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆயிரக்கணக்கான இங்கிலாந்து ஆதரவாளர்கள் அனுமதிச் சீட்டு இன்றியும் போலியான அனுமதிச் சீட்டுகளுடனும் அரங்கினுள் நுழைந்த அதேசமயம் அரங்கின் காவலர்களுடனும் வன்முறையில் ஈடுபட்டனர் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அனுமதிச் சீட்டு இன்றியும் போலியான அனுமதிச் சீட்டுக்களுடனும் அரங்கின் வெளிப் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ள செல்ல முயன்றனர் என்றும் அதன் போதே ஒழுங்குகள் சீர்குலைந்து பெரும் குழப்பமான நிலைவரம் ஏற்பட்டது எனவும் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஒரு கட்டத்தில் பொலீஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்ய வேண்டி ஏற்பட்டதால் உதைபந்தாட்டம் முப்பது நிமிடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆட்டத்தில்
ரியல் மட்றிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

பிரான்ஸில் வெளிநாட்டு அணிகள் பங்கு பற்றிய ஆட்டம் ஒன்றில் இவ்வளவு மோச மான விதத்தில் ஒழுங்குகள் சீர்குலைந் தமை குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் அதிருப்தியையும் தங்களது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய உதைபந்தாட்ட அதிகார அமைப்பான யூஈஎப்ஏ (UEFA), அரங்கில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் போலி அனுமதிச் சீட்டுகளே காரணம் என்று தெரிவித்துள்ளது. எனவே அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றும் பிரான்ஸ் அரசு மற்றும் பிரான்ஸ் உதைபந்தாட்ட சம்மேளனம் ஆகிய தரப்புகளும் போலி அனுமதிச் சீட்டுக்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்-

கல்வி அமைச்சராகிக் கவனத்தை ஈர்த்த கறுப்பின வரலாற்றாசிரியர்!

பிரான்ஸில் குடியேற்றம் மற்றும் காலனி ஆதிக்கம் தொடர்பான வரலாற்றாசிரியர் பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye)
கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஆபிரிக்க வம்சாவளியில் செனகல் நாட்டைச் சேர்ந்தவரான 56 வயதுடைய அவரது நியமனம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

செனகல் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும்பிரெஞ்சுத் தாய்க்கும் மகனாகப் பிறந்த வர் பேயாப்பே என்டியாய். சர்வதேச அளவில் அறியப்படுகின்ற ஒரு வரலாற்று ஆய்வாளரான அவர், ஐக்கிய அமெரிக்காவையும் அங்குள்ள சிறுபான்மையினர்களதும் சமூக வரலாற்றையும் ஆய்வுசெய்ததில் நிபுணத்துவம் பெற்றவர்.பாரிஸின் புகழ்பெற்ற “சயன்சஸ் போ”
(Sciences Po) பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.பாரிஸில் உள்ள வரலாறு மற்றும் குடியேற்றம் தொடர்பான அருங்காட்சியகத்தின் தலைமைப் பொறுப்பையும் வகித்தவர்.

அதிபர் மக்ரோன் அரசியலுக்கு வெளியே உள்ள துறைசார் புலமையும் திறமையும் வாய்ந்த பிரபலமானவர்களைஅமைச்சரவைக்குள் உள்வாங்குகின்ற கொள்கையைக் கொண்டுள்ளார். கடந்த தவணைக் காலத்தில் அவ்வாறு அரசியல் அனுபவம் ஏதுமற்ற பிரபல சட்டத்தரணி எரிக்-டுப்பொன்ட் மொரெட்டியை (Eric-Dupond Moretti) பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நீதி அமைச்சராக நியமித்தார்.

அதேபோன்று தான் இந்தத் தடவை சிறுபான்மைக் கறுப்பினத்தவரான பேயாப்பே என்டியாய் (Pap Ndiaye) அவர்களை கல்வி அமைச்சுக்குப் பொறுப்பாக்கியிருக்கிறார். அவரது நியமனத்துக்குத் தீவிர வலதுசாரிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர். அதேசமயம் பிரபல ஆசிரிய தொழிற்சங்கங்கள் அவரை வரவேற்றுள்ளன.

முன்னாள் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer அவர்களது பணிக்காலத்தில் கடந்த ஆண்டு நாட்டின் ஆசிரியர்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே சிக்கலான உறவு நிலை காணப்பட்டது. அதனைச் சீர்செய்யவேண்டிய பெரும் பொறுப்பு புதியவரான பேயாப்பே என்டியாய் மீது சுமத்தப்பட்டுள்ளது.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன் –

21 குண்டுகள் முழங்க மக்ரோன் பதவியேற்பு!

அதிபர் தேர்தலில் வெற்றியீட்டிய மக்ரோனின் உத்தியோகபூர்வ பதவியேற்பு வைபவம் எலிஸே மாளிகையில் இன்று நடைபெற்றிருக்கிறது.

எலிஸே மாளிகையின் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்ற அரசு வைபவத்தில் மக் ரோனின் துணைவி, குடும்பத்தினர், பிர தமர் ஜீன் காஸ்ரோ உட்பட அரசாங்கப் பிரதிநிதிகள், நாடாளுமன்றங்களின் இரு அவைகளினதும் பிரமுகர்கள், முன் னாள் அதிபர்களான நிக்கலஸ் சார்க் கோசி, பிரான்ஷூவா ஹொலன்ட், முன்னாள் பிரதமர் எத்துவா பிலிப் ஆகி யோர் உட்பட சுமார் ஐந்நூறு பேர் மட்டுமேகலந்து கொண்டனர்.

பதவியேற்பு நிகழ் வில் முன்னாள் அதிபர்கள் கலந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தவணைக்கு மீளத் தெரி வாகிய முதல் அதிபர் என்ற வகையில்அவரது உத்தியோக பூர்வ பதவியேற்பு நிகழ்வு புதிய அதிபர் ஒருவரது பதவி யேற்பில் காணப்படுவது போன்ற சில வழக்கமான நடைமுறைகளைக் கொண் டிருக்கவில்லை.1988 இல் பிரான்ஷூவா மித்ரோனும் 2002 இல் ஜக் சிராக்கும் இவ்வாறு இரண்டாவது தவணைக் காலத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.

நிகழ்வின் தொடக்கத்தில் 58.55%வீத வாக்குகள் பெற்று மக்ரோன் வெற்றி பெற்றிருப்பதை நாட்டின் அரசமைப்புச் சபையின் தலைவர் (President of the Constitutional Council) முறைப்படி அங்கு அறிவித்தார். அவருக்கு முன்பாகச் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார் மக்ரோன். அதன் பிறகு உரையாற்றிய அவர் “அதிக வலிமையான பிரான்ஸ் தேசத்தையும் மனிதர்கள் மேலும் சிறப்பாக வாழ்
வதற்கு உகந்த உலகத்தையும் உருவாக்குவதற்கு உறுதிகூறுகிறேன்-என்று பத்து நிமிட உரையில் தெரிவித்தார்.

எலிஸே வைபவத்தில்” நாட்டின் அதி பொறுப்பு மிக்க காவலர்” என்பதைக் குறிக்கின்ற தங்க மாலை (le collier de la Légion d’honneur) மக்ரோனுக்குச் சூட்டப்பட்டது. பின்னர் எலிஸே பூங்காவில் இரா
ணுவ அணிவகுப்பை ஏற்றுக்கொள்வ தற்கு முன்பாக அவர் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார். அச்சமயம் பாரிஸ் நகரில் Hôtel des Invalides பகுதியில் மரபு முறைப்படி 21 பீரங்கிக் குண்டுகள் தீர்க்கப்பட்டன.

மக்ரோன் பதவியேற்ற பின்பு முதல் வெளிநாட்டுப் பயணமாக திங்கட்கிழமை ஜேர்மனி செல்கிறார். அதற்கு முன்பாக அவர் நாளை ஞாயிற்றுக்கிழமை உலகப் போரின் நிறைவைக் குறிக்கும் நிகழ்வுக
ளில் கலந்துகொள்ளவுள்ளார்.

          -பாரிஸிலிருந்து குமாரதாஸன். 

பிரான்ஸிலும் “கோட்டாகோகம” கிராமம் உதயம்!

“கோட்டாகோகம” வெளிநாட்டுக் கிளை முதன்முதலாக பிரான்சில் எதிர்வரும் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

பிரான்சின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள ரிபப்ளிக் சதுக்கத்தில் “கோட்டா கோகம” கிளை இயங்கும்.

‘கோட்டாகோகம’வின் கிராமம் முதலில் காலி முகத்திடலில் உருவானது. அதன்பின்னர் நாட்டில் ஏனைய பகுதிகளிலும் கிளைகள் உருவாகின. இந்நிலையிலேயே சர்வதேச மட்டத்துக்கும் தற்போது அது சென்றுள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்ஸ் அதிபர் தேர்தலில் ஏற்பட்ட மாற்றம்!

44 வயதான எமானுவல் மக்ரோன் பிரான்ஸின் அதிபராக இரண்டாவது முறை வெற்றிவாகை சூடியுள்ளார்.

இரவு எட்டு மணிக்கு வெளியாகிய உத்தேச மதிப்பீடுகளின் படி இரண்டா வது சுற்றில் அவர் 57.6%வீத வாக்குகளால் வென்றிருக்கிறார்.

மரின் லூ பென் னுக்கு 42.4%வீத வாக்குகள் கிடைத்துள்ளன. மக்ரோன் 2017 தேர்தலில் பெற்ற 66.10 வீத வாக்குகளை விட 8.5 வீதம்குறைவான வாக்குகளையே வென்றிருக்கிறார்.

பதவியில் இருக்கின்ற அதிபர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெறுவது கடந்த இருபது ஆண்டு
களின் பின்னர் இது முதல் முறை ஆகும்.

🔵வாக்களிக்காதோர் வீதம் 1969 க்குப் பின் மிக உச்சம்!

இறுதிச் சுற்றில் வாக்களிக்காதோர் எண்ணிக்கை 26.31%வீதமாக அதிகரித் துள்ளது. தேர்தல் வரலாற்றில் 1969 ஆம்ஆண்டுக்குப் பின் இது மிக உச்ச எண்ணிக்கை என்று செய்திகள் தெரிவிக்
கின்றன.

கடந்த தேர்தல்களில் வாக்களிக்காதோர்
வீதம் ஆண்டு ரீதியாக வருமாறு :

*15.68% – 1965
*31.15% – 1969
*12.7% – 1974
*14.15% – 1981
*15.94% – 1988
*20.34% – 1995
*20.29% – 2002
*16.03% – 2007
*19.65% – 2012
*25.44% – 2017

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன் –

பிரான்ஸின் கணிப்புத் தோல்வியா? உளவுப் பணிப்பாளர் பதவி விலகல்!

பிரான்ஸில் இராணுவத்தின் புலனாய் வுப் பணிப்பாளர் பதவி விலகியுள்ளார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெனரல் எரிக் விடாட் (Eric Vidaud) கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே புலனாய்வுத் துறைப் பணியகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

“போதிய விளக்கம் அளித்தல் மற்றும் துறைசார் அனுபவக்குறைவு” போன்ற விமர்சனங்கள் அவர் மீது எழுந்துள்ளனஎன்று பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்று
தெரிவித்துள்ளது. ஆனால் அவரது பதவி விலகலை இராணுவத் தலைமை இன்ன மும் உறுதிப்படுத்தவில்லை.

எல்லையில் படைகளைக் குவிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கப் போகின்றது
என்பதை அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் புலனாய்வு சேவைகள் தொடர்ந்து எச்ச ரித்து வந்தன. ஆனால் பிரான்ஸின் உளவுத்துறை போர் மூளப் போகிறது என்பதற்கான சாத்தியங்களைக் குறை வாகவே மதிப்பிட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜெனரல் எரிக் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே ஆஸ்திரேலியா வுடனான நீர்மூழ்கி விவகாரத்தில் பாரிஸ் ஏமாற்றமடைய நேரிட்டது.பல பில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தில் ஆஸ்திரே லியா பிரான்ஸின் காலை வாரவுள்ளது என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவதில் பிரான்ஸின் உளவுத்துறை தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டை அவர் அச்சமயம் எதிர்கொள்ள நேரிட்டது.

ஆயினும் ஜெனரல் எரிக் விடாட்டின் பதவிக்குரிய பணி நாட்டின் படை நடவடிக் கைகள் சம்பந்தப்பட்டதே தவிர வெளிநா டுகளது போர்களை எதிர்வு கூறுவது அல்ல என்று வேறு சில இராணுவ வட்டாரங்கள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்புக்கு இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளர் மீது குறை சுமத்துவது இலகுவா னது. ஆனால் உண்மையில் அதற்கான பொறுப்பைச் சகல உளவு சேவைகளின் சமூகமே ஒட்டுமொத்தமாக ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்று இராணுவ ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிபர் மக்ரோன் புடினுடன் அடிக்கடித் தொடர்புகளைப் பேணி வருகின்ற ஐரோப்பியத் தலைவராக விளங்குகிறார். கடந்த பெப்ரவரி 24 அன்று ரஷ்யப்படை நடவடிக்கை தொடங்கிய பிறகு புடினுடன் ஒரு டசினுக்கும் அதிக தடவை
தொலைபேசியில் அவரோடு பேசியுள்ளார் மக்ரோன்.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்