இத்தாலியில் நடுக்கடலில் தவித்த 1,300 அகதிகள் மீட்பு

இத்தாலியில் நடுக்கடலில் தவித்த சுமார் ஆயிரத்து 300 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். கடல் மார்க்கமாக ஆபத்தான முறைகளில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது.

அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் 2 குழந்தைகள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து இத்தாலி கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இத்தாலிக்கு வந்து கொண்டிருந்த சில அகதிகள் நடுக்கடலில் சிக்கித்தவித்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கித்தவித்த அகதிகளை பத்திரமாக மீட்டனர்.
இதுவரை 1,300 இற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உலகப் போருக்குப் பிறகு இத்தாலியில் தீவிர வலதுசாரிகள் ஆட்சி

இத்தாலியில் உலகப் போருக்குப் பின்னர் முதல் முறையாகத் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி தேர்தலில் வென்றிருக்கிறது. நியோ-பாசிசவாதப் பின்னணி கொண்ட இத்தாலிய சகோதரர்கள்(Brothers of Italy) கட்சியின் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இடங்களுக்கு முன்னேறியிருப்பதைமுற்கொண்டு வெளியாகிய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இத்தாலிய சகோதரர்கள் கட்சி 26% வீத வாக்குகளைப் பெற்று முதனிலைக்கு வந்துள்ளது. அதன் தலைவியும் தீவிர வலதுசாரியுமாகிய ஜோர்ஜியா மெலோனி புதிய பிரதமராக-நாட்டின் முதலாவது பெண் பிரதமராகப்-பதவியேற்பார் என்று அறிவிக்கப்படுகிறது.

45 வயதான ஜோர்ஜியா மெலோனி ரோம் புறநகரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். முசோலினி ஆதரவாளர்களின் இத்தாலிய சமூக இயக்கத்தின் (Italian Social Movement) மாணவர் பிரிவில் தனது 15 ஆவது வயதில் இணைந்து அரசியலில் பிரவேசித்தவர். சர்வாதிகாரி முசோலினிக்குப் பிறகு அங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்ற முதலாவது தீவிர தேசியவாதியாக அவர் இடம்பிடிக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாகவும் ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகின்ற இத்தாலி

நாட்டில் ஐரோப்பிய எதிர்ப்புக் கொள்கை கொண்ட மெலோனியின் வெற்றி ஒரு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய அரசியலில் அவரது தாக்கம் எவ்வாறு அமையப் போகின்றது என்ற தீவிர எதிர்பார்ப்பு அயல் நாடுகளில் காணப்படுகிறது.

தனது 19 ஆவது வயதில் பிரான்ஸின் செய்தியாளர் ஒருவருக்குப் பேட்டி அளிக்கையில்,மெலோனி இத்தாலியின் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியைப் (Benito Mussolini) புகழ்ந்து கருத்து வெளியிட்டிருந்தார். “முசோலினி ஒரு சிறந்த அரசியல்வாதி,இத்தாலி நாட்டுக்காக அவர் செய்தவை எல்லாம் நன்மைகளே” என்று கூறியிருந்தார்.

முசோலினி காலத்தின் கோஷங்களாகிய “கடவுள்-தந்தை நாடு மற்றும் குடும்பம்” (God, fatherland and family”) என்பவற்றையே தனது சுலோகமாகப் பயன்படுத்துகிறார்.

ஜோர்ஜியா மெலோனி குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் கடும்போக்குக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர். இத்தாலிக்கு தினமும் வந்து குவிகின்றஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளைத் தடுத்து நிறுத்துவதற்காகநாட்டின் கடல் எல்லையை அவர் இறுக்கி மூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் அவரோடு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஏனைய இரண்டு வலதுசாரிக் கட்சிகளும் ஐரோப்பிய வெறுப்புவாதம் கொண்டவை. அதனால் மெலோனியின் தலைமையில் இத்தாலி இனிமேல் ஐரோப்பிய ஐக்கியத்தைக் கட்டிக்காக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மத்தியோ சல்வினியின் (Matteo Salvini) லீக் கட்சி, சில்வியோ புறுல்ஸ்கோனியின்(Silvio Berlusconi) மைய வலது சாரி Forza Italia கட்சி ஆகிய இரு அணிகளும் மெலோனியின் இத்தாலிய சகோதரர்கள் கட்சியுடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.

ஜோர்ஜியா மெலோனியின் ரஷ்யா மற்றும் ஐரோப்பா தொடர்பான கொள்கைகளில் அண்மையில் மாற்றங்கள் வெளிப்பட்டன. உக்ரைனை ஆதரிக்கும் மேற்குலகின் பக்கம் சார்ந்து கருத்துக்களை அவர் வெளியிட்டுவந்தார். ஐரோப்பிய வெறுப்புவாதக் கொள்கையிலும் தளர்வுப் போக்குக் காணப்பட்டது.

எனினும் சுவீடனைத் தொடர்ந்து இத்தாலியிலும் தீவிர வலதுசாரிகளது கை ஓங்கி இருப்பது ஐரோப்பா எங்கும்இயங்கும் தீவிர வலதுசாரி அரசியல் சக்திகளுக்குப் புது உற்சாகத்தைக்கொடுத்திருக்கிறது. பிரான்ஸின் மரின் லூ பென், எரிக் செமூர் போன்ற தீவிர தேசியவாதத் தலைவர்கள் மெலோனியின் வெற்றியை வாழ்த்தி வரவேற்றிருக்கின்றனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

இன்றும் நாளையும் பூமியை நெருங்கும் ராட்சத விண்கற்கள்!

ராட்சத விண்கற்கள் இன்றும் (05) நாளையும் (06) பூமிக்கு மிக அருகால் கடந்து செல்லும் என நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தில் மில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோக பாறைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் சில பூமியை நோக்கி வரும்போது ஈர்ப்பு விசை காரணமாக அதிவேகத்தில் வந்தடையும்.

இந்நிலையில் மைதானம் போன்ற ராட்சத விண்கற்கள் உட்பட 5 விண்கற்கள் இன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா அறிவித்துள்ளது.

இதில் 24 முதல் 54 விட்டம் உள்ள 2020 கே.என். 5 என பெயரிடப்பட்ட விண்கல் 62 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்கிறது. அதைத் தொடர்ந்து 2020 கே.ஏ.6 என்ற விண்கல் 44.7 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்திலும், 2020 என்.என்.4 என்ற ராட்சத விண்கல் சுமார் 50.9 இலட்சம் கிலோ மீற்றர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது என நாசா அறிவித்துள்ளது.

மரண பீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு “மரவள்ளிக்கிழங்கு” காலம்தான் இனி ஒரே வழி!

முருகபூபதி

கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.

சின்னஞ் சிறிய நாடாக கரிபியன் கடலை அண்மித்திருக்கும் கியூபாவை முன்னுதாரணமாகக்கொண்டுதான் இன்று உலக நாடுகள் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் எடைபோடவேண்டியிருக்கிறது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்று விதந்துரைக்கப்படும் சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000) பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அல்ல. அவரது கல்வித்தரம் ஒன்பதாம் வகுப்பிற்கும் கீழ்தான்.

அவரது கணவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவர் 1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது அமைச்சரவையிலிருந்த கலாநிதி தகநாயக்கா காபந்து அரசின் பிரதமரானார்.


எனினும்,அவரால் உருவாக்கப்பட்ட கட்சி அடுத்துவந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியை தனது கணவருக்குப்பின்னர் பாதுகாத்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தேர்தலில் வென்று பிரதமரானார்.

அதற்குப்பிறகு,மூன்று தடவைகள் பிரதமர் பதவியை அலங்கரித்துவிட்டு, 2000 ஆம் ஆண்டில் மறைந்தார். இவரது மகள் ஜனாதிபதியானபோது, அவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசியலில் அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

சிறிமாவோ பதவியிலிருந்த காலத்திலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்தது என்னவோ உண்மைதான். தமிழ்மொழி இரண்டாம் பட்சமாகிய புதிய அரசியல் அமைப்பு, பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்பனவும் நிகழ்ந்தன. மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆனால், அவரது காலப்பகுதியில் இனக்கலவரங்கள் நடைபெறவில்லை.

அனைத்து கலவரங்களும் அவரது கணவர் பிரதமராக பதவியிலிருந்த (1958) காலத்திலும் 1977 இற்குப்பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் யூ.என்.பி. கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்தவைதான். 1977 – 1981 – 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த கலவர காலங்களில் ஜே.ஆர்.தான் தேசத்தின் அதிபராக இருந்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்கா, பலாங்கொடையிலிருந்து ரத்வத்தை குடும்பத்தின் பரம்பரையில் வந்தவர். இலங்கை தேசியத்தில் தனது கணவருக்குப்பின்னர் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். லண்டனில் படித்து பரிஸ்டரான பண்டாரநாயக்கா,  சிங்கள தேசிய உடையணிந்தவாறுதான் இலங்கை அரசியல் அரங்கில் ஏறினார். தூய வெள்ளை வேட்டி, நெஷனல்தான் அவரது உடை. முதலில் அவர் யூ.என். பி. யில்தான் இருந்தார். அதன் தலைவர் டி. எஸ். சேனாநாயக்காவின் மறைவுக்குப்பின்னர், தனக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், சேர். ஜோன். கொத்தலாவலைக்கு அது கிடைத்தது. அவரும், டி.எஸ். சேனாநாயக்காவும் இவரது மகன் டட்லி சேனாநாயக்காவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு துதிபாடியவர்கள். அத்துடன்,ஆங்கிலேயர் பாணியில் கோர்ட் சூட் அணிந்துதான் மக்கள் மத்தியில் தோன்றினர்.

பௌத்த சிங்கள தேசியத்தை முன்னெடுக்கவேண்டுமானால் – அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டுமானால் – அந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடையைதான் முதலில் அணிந்து பெரும்பான்மையினத்தவரின் நாடித்துடிப்பினை காணவேண்டும் என்ற தீர்க்கதரிசனம் பண்டாரநாயக்காவுக்கு வந்தது.

அதனால் குறிப்பிட் சிங்கள தேசிய உடையை அணிந்தவாறு ஐம்பெரும் சக்திகளை (சிங்களத்தில்  பஞ்சமா பலவேகய ) திரட்டிக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றிபெற்றார்.

அந்த சக்திகள்: விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் – பௌத்த பிக்குகள் – வைத்தியர்கள்.

இத்தனைக்கும் அவர் பிறப்பால், அங்கிலிக்கன் கிறிஸ்தவர். அவரது மூதாதையர்கள் கண்டியை ஆட்சிபுரிந்த தெலுங்கு நாயக்கர்கள் ஆவர்.

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியம் தேவையானவர்கள் விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் –வைத்தியர்கள்.

ஆனால், பௌத்த பிக்குகளையும் அவர் இணைத்துக்கொண்டமைக்கு அன்றிருந்த காரணம், பௌத்த மக்களின் வாக்கு வங்கியையும் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்வதற்குத்தான். அவரது அந்தக்கணிப்பு,பெருந்தவறு என்பது ஒரு பௌத்த பிக்குவால் (சோமராம தேரோ) அவர் சுடப்பட்டபோதுதான் அவருக்குத்  தெரியவந்தது. முதல்நாள் சுடப்பட்டு மறுநாள் அவர் இறந்தார்.

எனினும், கணவர் பண்டாரநாயக்காவிற்குப்பின்னர் பதவிக்கு வந்த சிறிமாவோ, 1961 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும்புகழுடன் பதவி ஏற்கச்செல்லவிருந்தவேளையில்,இவருக்கு வந்த ஆசை விசித்திரமாக அக்காலப்பகுதியில் பேசப்பட்டது.

இந்தியா – தமிழ்நாட்டிலிருந்தெல்லாம் காஞ்சிபுரம் சேலைகள் இலங்கையில் கோலோச்சிக்கொண்டிருந்த அக்காலத்திலேயே அவர், உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்துதான் நாடாளுமன்றம் செல்ல விரும்பினார்.

அதற்கான ஓவிய வடிவமைப்பினை செய்து தருமாறு சிறிமா கேட்டதையடுத்து, அச்சமயத்தில் சிறுகைத்தொழில் அமைச்சில் பணியாற்றியவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியரும் ஒளிப்படக்கலைஞருமான (அமரர்) கே.ரீ. செல்வத்துரை அவர்கள் சிறிமாவின் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொடுத்தார்.

தேசத்தின் தலைவியே உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்து பதவிப்பிரமாணம் எடுத்ததைப்பார்த்த இலங்கையின் கிராமப்புற மற்றும் நகரப்புற சிங்கள பெண்களுக்கும் அத்தகைய கைத்தறிச்சேலைகளை விரும்பும் ஆர்வம் அதிகரித்தது. அதனால் உள்நாட்டில் பல ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் பெருகின.

சிறிமாவோ முதல் முதலில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தபோது, உலகில் எந்தவொரு நாட்டிலும் அவ்வாறு ஒரு பெண்,பிரதமராகும் அதிசயம் நிகழவில்லை.
பல வளர்முக நாடுகளில் பெண்களுக்கான வாக்குரிமைகூட இல்லாதிருந்த பின்னணியில்,அவர் அந்தப்பதவிக்கு வந்ததை ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்தவர்களினால் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது.
அதனால், அவரை மிகவும் தரக்குறைவாகவும் மேடைகளில் அன்றைய எதிரணியினர் பேசினர்.

சிறிமா முதலில் பதவியிலிருந்த (1961 – 1965) காலப்பகுதியில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கினார். உள்நாட்டில் புடவைக்கைத்தொழிலை வளர்ப்பதற்காக தனி அமைச்சும் உருவானது.

1970 இற்குப்பின்னர் இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டரசாங்கம் அமைத்தவேளையில், பல முற்போக்கான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதுவரையில் “மகாதேசாதிபதி”முறையிருந்த இலங்கை, சோஷலிஸ ஜனநாய குடியரசாக மாறியது. அணிசேரா நாடுகளின் உச்சிமகா நாட்டையும் நடத்தி, அந்த அமைப்பின் தலைவியாகவும் சிறிமாவோ தெரிவுசெய்யப்பட்டார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலைநகரம் வரையில்  கட்டுநாயக்கா – கொழும்பு வீதி அகலமாக்கப்பட்டது. அதற்காக முன்னைய  ஒடுக்கமான வீதிக்கு அருகிலிருந்த வீடுகள் – கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோது கடும் விமர்சனங்களையும் அவரது அரசு சந்தித்தது.அந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள்,  இராஜதந்திரிகள் ஆகியோரின் போக்குவரத்து வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவ்வாறு அந்த வீதி அகலப்படுத்தப்பட்டது.

இச்செயலும் சிறிமாவின் தீர்க்கதரிசனம் மிக்க செயல். பின்னாளில்தான்  அதன் தேவை உணரப்பட்டது. அந்த மாநாட்டுக்கு இந்திராகாந்தி, கியூபா பிடல் கஸ்ட்ரோ, லிபியா கேர்ணல் கடாபி, யூகோஸ்லாவியா டிட்டோ உட்பட பல உலகத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவ்வேளையிலும் யூ. என்.பி. யின் பச்சைக்கட்சியினர், அந்த மாநாட்டை சிறிமாவின்  “அணிசேரா கலியாணம்” என்று கேலிசெய்தனர். ஆனால்,இந்நாடுகளின் ஆதரவுடன் இலங்கையில் பல முற்போக்கான வேலைத்திட்டங்களை சிறிமா முன்னெடுத்தார்.

1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனாநாயக்காவும் இலங்கையில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நெற்செய்கையில் ஈடுபட்ட ஏழை விவசாயிகளுக்கு “விவசாய மன்னர்”பட்டம் வழங்கியும் பாராட்டி கௌரவித்தார். இத்தனைக்கும் அவர் அரிசிச்சோறு உண்ணாதவர். அவரைப்போன்று மற்றும் ஒருவர் அரிசி உணவு உண்ணாதவர். அவர்தான் சிறிமாவின் மருமகன் பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா.

1970 இல் மீண்டும் சிறிமா இடது சாரிகளுடன்  இணைந்து பதவிக்கு வந்தபோது,  அரசின் திறைசேரியில் நிதிவளம் முற்றாக குறைந்திருந்தது. எதற்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்து கையேந்தாமலிருப்பதற்கு உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கியே தீரவேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டார்.

அரிசி, சீனி, மற்றும் அமெரிக்க கோதுமை மாவு முதலானவற்றுக்கு நேர்ந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, இலங்கை மக்களுக்கு சீனியில்லாமல் தேநீர் அருந்தும் கலசாரத்தை அறிமுகப்படுத்தினார். அக்காலப்பகுதியில்,ஏழை முதல் செல்வந்தர்கள் வரையில் அவர்களின் வீடுகளில் அதுவரையில் இருந்த சீனி போத்தல்களில் பனங்கருப்பட்டியும் கித்துல் கருப்பட்டியும் இடம்பெறத்தொடங்கின.
பனங்கருப்பட்டி வடக்கிலிருந்தும் கித்துல் கருப்பட்டி தெற்கிலிருந்தும் உற்பத்தியாகின.

அத்துடன் சீனியை குறைவாகப்பாவிப்பதற்காக, உள்ளங்கையில் சொற்ப அளவில் சீனியை எடுத்து அதனை நக்கியவாறும் மக்கள் தேநீர் அருந்தினார்கள். 


அதனையும் அன்றைய  யூ.என்.பி. எதிரணியினர் எள்ளி நகையாடினர். உள்ளங்கையை நக்கி நக்கி கைரேகைகள் அழிந்துவிட்டதாகவும், முதல் பெண்பிரதமரின் படம் தாங்கிய அஞ்சல் முத்திரைகளின் பின்புறத்தை நாவால் நக்கித்தான் ஒட்டவேண்டியிருக்கிறது என்றும் ஏளனம் செய்தார்கள்.

கோதுமை மாவின் தட்டுப்பாட்டினால், மக்கள் தத்தம் வீட்டுக்காணிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபட்டனர். அந்தச்செய்கையை வீட்டு முற்றத்திலும் மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மூன்று வேளையும் சோறு சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள். ஆகவே,அரிசியை பதுக்கும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட்டனர். ஒரு குடும்பத்தின்  தேவைக்கு அதிகமாக அரிசி எடுத்துச்செல்லப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாண் பேக்கரிகளுக்கும் கோதுமை மாவு கொள்வனவு செய்யும் வீதத்திலும் கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், அதிகாலையே பொதுமக்கள் பேக்கரிகளின் வாசல்களில் பாண் வாங்குவதற்கு வரிசையில் நிற்கநேர்ந்தது.

அதேசமயத்தில்,வடக்கில் கிளிநொச்சி, விசுவமடு, முல்லத்தீவு முதலான விவசாய பிரதேசங்களில் வெங்காயம், மிளகாய் பயிர்ச்செய்கை அபரிமிதமாக வளர்ச்சி கண்டது. வவுனியா முதலான பிரதேசங்களில் உழுந்து பயிர்ச்செய்கை வளம் கண்டது.

சிறிமாவோவின் அன்றைய தீர்க்கதரிசனம் மக்களுக்கு சில அசௌகரியங்களை தந்தபோதிலும் வடக்கினதும் தெற்கினதும் விவசாயிகளின் பொற்காலமாக கருதப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து தோன்றி இன்று உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலகமும் படிப்படியாக நீங்கினாலும்,பொருளாதார ரீதியில் சந்தித்துக்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்ட காலம் செல்லும்.

முக்கியமாக,இலங்கை போன்ற வளர்முக நாடுகள், மீண்டும் அரிசி, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்,கருப்பட்டி  முதலானவற்றின் உற்பத்தியை நோக்கி தனது பொருளாதார அபிவிருத்தியை  திசைதிருப்பவேண்டியும் வரலாம்.

தற்போது,கொழும்பு துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் உருளைக்கிழங்கு – வெங்காயம் சகிதம் அழுகிய நிலையில் தேங்கிக்கிடக்கின்றன. அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இலங்கையை சுற்றி இந்து சமுத்திரம் இருந்தபோதிலும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் இன்றும் இறக்குமதியாகிறது. தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவினால், அவையும் கொள்கலன்களில் தனிமைப்படுத்தப்பட்டு எவருக்கும் பயனற்றதாகிவிட்டன.

சிறிமாவோ காலத்தில்,அரிசித்தட்டுப்பாடு வந்தவேளையில்,“சந்திரனிலிருந்தாவது அரிசி தருவிப்போம்” – என்று பேச்சுக்குச்சொன்னாலும், உள்நாட்டில் விவசாய செய்கையை ஊக்குவித்தார்.

கிழங்கு நட்டு பயிர் செய்யுமாறு அவர் சொன்போது,யூ.என்.பி.யை சேர்ந்த பௌத்த பிக்கு, தேவமொட்டாவ அமரவண்ஸ தேரோ “அம்மையார் கிழங்கு நடு… கிழங்கு நடு…என்கிறாரே,  எங்கே நடுவது” – என்று இரட்டை அர்த்தத்தில் மேடைகள் தோறும் கேவலப்படுத்திப் பேசித்திரிந்தார்.எழுத்தில் பதியமுடியாத மிக மோசமான மேலும் பல வார்த்தைப் பிரயோகங்களை அந்த பிக்கு  உச்சரித்தார்.

சிறிமாவின் காலத்தில்தான், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தோன்றியது. அதே காலப்பகுதியில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வந்தது, இந்தியாவின் தரமற்ற வணிக சஞ்சிகைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால் பல நன்மைகள் உள்நாட்டில் மலர்ந்தன.

ஆனால், அதன் தற்காலிக சுமைகளை தேசத்தின் நலன் கருதாமல், தமது அரசியல் நலன்கருதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஆர்.பிரேமதாசம் விஷமப்பிரசாரம் செய்து அந்த ஆட்சியை தோற்கடித்து, 1977 இல் பதவிக்கு வந்து,திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினர்.

மீண்டும் சிறிலங்கா வெளிநாடுகளை கையேந்தத் தொடங்கியது. இன்று தோன்றியிருக்கும் வைரஸ் அனைத்து நாடுகளையும் பரஸ்பரம் கையேந்த வைத்துள்ளது.

ஒரு காலத்தில் கொடிய வைரஸினால் கியூபா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பலியாகிக்கொண்டிருந்தபோது,அமெரிக்கா அந்த சின்னஞ்சிறிய நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடையை ஏனைய சில ஐரோப்பிய நாடுகளும் ஆமோதித்தன. அமெரிக்க வல்லரசை மீறமுடியாமல் கியூபாவை புறக்கணித்தன.
நோயினால் பாதிப்புற்ற தனது மக்களை மீட்டெடுக்கவேண்டுமாயின், முதலில் மருத்துவத்துறையை வளர்த்து மேம்படுத்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார் கியூபா அதிபர் பிடல் காஷ்ரோ. அந்த கர்மவீரனின் தீர்க்கதரிசனம்தான் சமகாலத்தில், இத்தாலி உட்பட பல நாடுகளுக்கும் மக்களின் உயிர்காக்க கியூபா மருத்துவர்களும் தாதியரும் விரைந்து எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்!

அணுவாயுதங்களுக்கும் ஆயுத உற்பத்திக்கும் வல்லரசுகள் செலவிட்ட காலம் மறைந்து மருத்துவமனைகளுக்கும் வெண்டிலேட்டர்களின் உற்பத்திகளுக்கும் அதிகம் செலவிடவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.

ஆட்கொல்லிநோய் அறுவடைசெய்த அதிர்ச்சிதரும் நன்மைகள்


பொன்ராஜ் தங்கமணி

கொரோனா பற்றி செய்திகளையும் பதற்றங்களையும் ஏன் வதந்திகளையும்தான் இந்த உலகம் கடந்த சில வாரங்களாக சாப்பிட்டு செமித்து பிறகு மீண்டும் சாப்பிட்டபடியே இருக்கிறது. கொரோனா மனித குலத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அத்தகையது.

உணவுச் சங்கிலியின்  உயரத்துக்குச் சென்ற மனிதன் மிகக் கம்பீரத்துடனும் கர்வத்துடனும் மட்டுமல்லாமல் அடக்கு முறை எண்ணத்தோடும் இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் வளங்கள் மீதும் தனது ஆளுமையை – வெவ்வேறு வகைகளில் – ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செலுத்திவருகிறான்.

சூழலியல் சார்ந்த வாழ்க்கையை விட்டு மனிதன் அகந்தை சார்ந்த வாழ்க்கைக்கு மாறி சில நூறு வருடங்கள் ஆகிவிட்டன. மனித குலவரலாற்றில் அவ்வப்போதுவரும் பரந்துபட்ட பஞ்சம்,பட்டினி,போர் போன்ற காரணிகளைத் தவிர்த்து பெரும்பாலும் பெரிய இன்னலேதும் இல்லாமல் மனிதனின் வாழ்க்கை தொடர்ந்து வருகிறது.  

இருந்தாலும், அவ்வப்போது வைரஸ் என்னும் நுண்ணிய நோய்க்கிருமி தன் வலிமையை மனிதனிடம் காட்டிக் கொண்டுதானிருக்கிறது. எபோலா,எச்ஐவி, சார்ஸ், டெங்கு, மெர்ஸ் என மனிதனை அச்சுறுத்திய வைரஸ்களில் தற்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த நூறாண்டுகளில்,மனிதனின் செயல்பாடுகளை உலகளாவிய வகையில் முடக்கிய வைரஸ் என்று பார்த்தால் அது கொரோனாதான்.  

மனிதச் செயல்பாடுகளினால் இந்தப் புவியில் ‘கார்பன்’ வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதும் அதன் விளைவாக புவி வெப்பமயமாதல் நடைபெறுவதும் நாம் அறிந்ததே. இதைக் குறைப்பதற்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் சார்ந்த அமைப்புகளும் வெவ்வேறு வகைகளில் முயன்று வருகின்றன. இவ்வாறனதொரு நிலையில்,மனிதன் பூமியில் ஏற்படுத்துகின்ற வலிந்த மாற்றங்களையும் தாக்கங்களையும் கொரோனா குறைத்திருக்கிறது. அல்லது கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

நாம் நம் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சாரத்திலிருந்து போக்குவரத்து, பயன்படுத்தும் பொருட்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் கரிம வெளியீடு நிறைந்துள்ளது. தற்போது இவை அனைத்தும் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ள காரணத்தால் கரிமத்தின் வெளியீடு இயல்பான நிலையைவிட 5.5-5.7 சதவீதம் வரைகுறைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலர் பீட்டரிடல்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் செய்தி நமக்கு தற்காலிகமாக கிடைக்கும் நல்லசெய்திதானே தவிர இதனால் வானிலை மாற்றத்தை உடனடியாக மாற்றும் அளவுக்கு பங்களிக்க முடியாது எனவும் அவர் சேர்த்தே கூறுகிறார். இதேக் கருத்தை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையமும் எதிரொலிக்கிறது.

இப்பொழுது குறைந்திருக்கும் கரிம வெளியீட்டின் அளவு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெருந் தொகையாகும் என உலகளாவிய கரிம செயல்திட்ட குழு தெரிவிக்கிறது.

ஆகவே,கொரோனாவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் தற்காலிகமானது எனப் பார்க்கப்பட்டாலும் இந்த மாற்றத்தால் இந்தியா,சீனா போன்ற நாடுகளின் பெருநகரங்களில் சில நாட்களாக நல்ல காற்றை சுவாசிக்க 

முடிகிறது.  இதற்கு முக்கிய காரணம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலக்கரி சார்ந்த உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் குறைவான புகையும்,சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையும் குறைந்ததுதான்.  

சுத்தமான காற்று மட்டுமன்றி,தண்ணீரின் மாசுபடும் அளவும் குறைந்து வருகிறது.  இந்தியாவின் கங்கை நதியிலிருந்து வெனிஸ் நகரத்தின் புகழ்பெற்ற கால்வாய் வரைதண்ணீர் சுத்தமாகும் புகைப்படங்கள் கடந்தசிலநாட்களாகவெளிவந்தவண்ணம் உள்ளன.  

இன்னொருபுறம் –

மனிதனின் செயற்பாட்டு வேகம் குறைந்ததினால் மிருகங்கள் சற்றே இலகுவாக நடமாட ஆரம்பித்திருக்கிறன. கேரளாவில் மலபார் புனுகுப்பூனையும், ஜப்பானில் மான்களும்,சிங்கப்பூரில் நீர் நாய்களும் தங்கள் முகங்களை இப்போதுவெளியேகாட்டியுள்ளன. இந்தியாவின் கரித்துவாரின் தெருக்களைகூட்டம் கூட்டமாக மான்கள் கடந்து செல்கின்றன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவின் மையப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாடுகின்றன. வேல்ஸ் நகரத்தில் மலை ஆடுகள் உலாவருகின்றன.  ரோண்டாவின் தெருக்களில் மயில்களும்,சான்டியாகோவில் பூமாவகைப் பூனைகளும் காட்சியளிக்கின்றன. இவற்றைப்பார்க்கும்,மக்களுக்கு இவை இத்தனைவருடங்கள் எங்கே இருந்தன என்ற ஆச்சரியமும் ஐயமும் எழுகிறது.

இவை அனைத்தும் இயற்கையை விரும்பும் மனிதர்களுக்கு ஒருவிதமன மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்த மகிழ்ச்சிதொடர வேண்டுமாயின்,இயற்கை மீதான மனிதனின் தாக்கம் குறையவேண்டும். நம்முடைய தேவைகள் என்ன,அந்தத் தேவைகள் ஆடம்பரமானதா அத்தியாவசியமானதா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள சரியான தருணம் இப்போது நமக்கு வாய்த்திருக்கிறது. நம் தேவைகளைக் குறைத்து நாம் நுகரும் பொருட்களைக் குறைக்கும்போது இயல்பாகவே அதை உற்பத்திசெய்யும் தேவை குறைந்து இயற்கைமீதான நம் தாக்கம் குறையும்.

இதற்கு மாறாக கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் என்கிற பெயரில் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக அதிக நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் உட்புகாமல் இருப்பதற்கு முயற்சிகள் எடுப்போம்.

இதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் தனிநபர் கரிம வெளியீட்டு தொகைமிகவும் அதிகம். உலக அளவில் ஒருசராசரி ஆஸ்திரேலியரின் கரிம வெளியீட்டு தொகை ஒரு இந்தியரைவிட ஒன்பது மடங்கும்,ஒருஉகாண்டாநாட்டவரைவிட 154 மடங்கும் அதிகமாகும். ஆஸ்திரேலியாபோன்றபணக்காரநாட்டில் வாழும் மக்களின் நுகர்பொருள் கலாச்சாரம் என்பதுபூமிக்குஒருபுற்றுநோய் போன்றதுஎன்பது இதன் மூலம் புரிந்து இருக்கும்.  

இயற்கை மீதான நம்முடைய தாக்கம் குறையும்போது,இந்தப்புவி இயல்பாகவே மனிதனுக்கு மட்டுமன்றிமற்ற உயிரினங்களும் வாழ்வதற்குஏ துவாக அமையும்.  இருப்பதை பகிர்ந்து உண்டு,பல உயிர்களைக் காத்து வாழ்தல் அறத்தில் சிறந்த அறம் என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள் 322

கொரோனாகாலத்தில் நாம் படிக்கும் சிறந்தபாடமாக இது அமையட்டும். 

கொரோனா சாவு ஒன்றரை லட்சம்; கட்டுக்கடங்காமல் போகும் அமெரிக்க நிலவரம்! மீண்டும் ஆட்டம் காணும் சீனா!!

கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக வல்லரசுகள் முதல் சிறிய நாடுகள் வரை பதறவைத்துள்ள கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் பெரும் உயிர்ச்சேதத்தை நடத்திக்கொண்டிருக்கின்றது.

இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதுவரை (இலங்கை நேரம் இரவு 10.30 – 17.04.2020) 22 இலட்சத்து 27 ஆயிரத்து 622 ஆக உள்ளது.

அதேவேளை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்து 623 பேராக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு இலட்சமாக இருந்த இப்பலியெடுப்பு ஒரு சில நாட்களில் ஒன்றரை இலட்சமாக மாறியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில்தான் இதன் பாதிப்பு பாரியளவில் உள்ளது.

அங்கு இதுவரை 6 இலட்சத்து 85 ஆயிரத்து 641 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் தொகையோ 35 ஆயிரத்து 500 ஆக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஸ்பெய்னில் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு ஒரு இலட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்து 478 பேர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டும், 22 ஆயிரத்து 745 பேர் பலியாகியும் உள்ளனர்.

பிரான்ஸில் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட அதேவேளை, 17 ஆயிரத்து 920 பேர் பலியாகியுள்ளர்.

அதேபோல ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 456 பேர் பாதிக்கப்பட்டும் 4 ஆயிரத்து 193 பேர் பலியாகியும் உள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 692 பேர் பாதிக்கப்பட்டும் 14 ஆயிரத்து 576 பேர் பலியாகியும் உள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று ஆரம்பித்த சீனாவில் முதலில் நூறுகள் – ஆயிரங்கள் எனக் கடந்து அண்மைய சில வாரங்களாக ஒற்றையெண்ணில் பலியெடுப்பு நிகழ்ந்தது.

இதனால் அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது எனக் கருதப்பட்ட அதேவேளை, ஏனைய நாடுகளிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், இன்று சீனாவில் சாவு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இதனால் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு இன்றுமாத்திரம் இதுவரை ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர் எனப் பதிவாகியுள்ளது. அங்கு மொத்தமாக இதுவரை காலமும் நான்காயிரத்து 632 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பிடியிலிருந்து மீண்ட 5 லட்சம் பேர்!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த நோயிலிருந்து சுகம்பெற்றுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி ( இலங்கை நேரப்படி மு.ப.9.30 – 16/04/2020) கொரோனா வைரஸால் 20 லட்சத்துத்து 83 ஆயிரத்து 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 616 பேர் பலியாகியுள்ளனர்.

14 லட்சத்து 38 ஆயிரத்து 360 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 லட்சத்து 10 ஆயிரத்து 350 பேர் வரை சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நோயின் உக்கிரம் அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மன் மற்றும் இங்கிலாந்தில்தான் தற்போதைய நிலவரப்படி அதிகமாகவுள்ளது.

கொரோனா தொற்று 20 இலட்சத்தைத் தாண்டியது! நேற்று மாத்திரம் 7 ஆயிரத்தை நெருங்கிய பலியெடுப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கின்றது. நேற்று மாத்திரம் உலகளவில் 6 ஆயிரத்து 982 பேர் பலியாகியுள்ளனர்.

உலகத்தையே தனது காலடியில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கின்றது கொரோனா வைரஸ்.

இது சீனாவில் ஆரம்பித்தபோதும், தற்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளையே தற்போது கொலைக்களமாக மாற்றியுள்ளது.

இலங்கை நேரப்படி தற்போதைய (15.04.2020 – பி.பகல் ஒரு மணி) நிலவரப்படி உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்து 943 ஆக உள்ளது.

இது அமெரிக்காவில் மாத்திரம் 6 இலட்சத்து 14 ஆயிரத்து 246 ஆக பதிவாகியுள்ளது.

அதேவேளை, இதனால் இறந்தோரின் எண்ணிக்கையும் அங்குதான் கூடுதலாக உள்ளது.

அங்கு இதுவரை 26 ஆயிரத்து 64 பேர் பலியாகியுள்ளனர்.

அடுத்து இத்தாலியில் 21 ஆயிரத்து 67 பேரும், ஸ்பெய்னில் 18 ஆயிரத்து 255 பேரும், பிரான்ஸில் 15 ஆயிரத்து 729 பேரும், இங்கிலாந்தில் 12 ஆயிரத்து 107 பேரும் பலியாகியுள்ளனர்.

சீனாவில் மூவாயிரத்து 342 பேர் பலியாகியுள்ளனர்.

நேற்று மாத்திரம் உலகளவில் 6 ஆயிரத்து 982 பேர் பலியாகியுள்ளனர்.

ஏனைய நாடுகளில் நூறுகள் – ஆயிரங்கள் தாண்டி பலியெடுப்பு நடந்து வருகின்றபோதும், ஆரம்பித்த சீனாவில் ஓரிருவரே பலியாகின்றனர்.

அங்கு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது என்பதை இது காட்டி நிற்கின்றது.

அமெரிக்காவில் நேற்று மாத்திரம் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இலட்சத்தைத் தாண்டியது கொரோனா பலியெடுப்பு!

(10.04.2018 இரவு 11 மணி வரையானது – இலங்கை நேரம்)

கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

அதன்படி உலகளவில் தற்போதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 469 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் அதிகப்படியாக 18 ஆயிரத்து 849 பேரும், அமெரிக்காவில் 17 ஆயிரத்து 995 பேரும், ஸ்பெய்னில் 15 ஆயிரத்து 970 பேரும், பிரான்ஸில் 13 ஆயிரத்து 197 பேரும், இங்கிலாந்தில் 8 ஆயிரத்து 958 பேரும் இதுவரை அதிகப்படியாக பலியாகியுள்ளனர்.

அதேவேளை, கடந்த 18 மணி நேரத்துக்குள் மாத்திரம், 5 ஆயிரத்து 777 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், அமெரிக்காவில் மாததிரம் ஆயிரத்து 304 பேரும் பலியாகியுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதுவரை 16 இலட்சத்து 74 ஆயிரத்து 854 ஆக உள்ளது.

இவர்களில் அமெரிக்காவில் மாத்திரம் 4 இலட்சத்து 88 ஆயிரத்து 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரொனா: பலியெடுப்பு 70 ஆயிரத்தையும் தொற்றியோர் தொகை 13 இலட்சத்தையும் நெருங்கியது!

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதேவேளை, பாதிக்கப்பட்டோரின் தொகை 13 இலட்சத்தை தொடும் நிலையில் உள்ளது.

இதன்படி உலகளில் தற்போதைய நிலவரப்படி 64 ஆயிரத்து 468 இறந்துள்ளனர்.

12 இலட்சத்து 74 ஆயிரத்து 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாத்திரம் 4 ஆயிரத்து 738 பேர் இறந்துள்ளனர். அதேவேளை, 71 ஆயிரத்து 409 பேர் மீது தாவியுள்ளது.

அதேவேளை, நேற்று அமெரிக்காவில் மாத்திரம் ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்னர்.

தற்போதைய நிலவரப்படி உலகளவில் 45 ஆயிரத்து 591 பேர் மரணப்படுக்கையில் உள்ளனர் என்பது பெரும் அதிர்சிக்குரிய விடயமாகும்.

ஒரே நாளில் ஆறாயிரத்தை நெருங்கிய மரணம்! பிரான்ஸில் மாத்திரம் ஆயிரத்தைக் கடந்தது!!

கொரோனா வைரஸ் காரணமாக நேற்று மாத்திரம் 5 ஆயிரத்து 974 பேர் உலகளவில் பலியாகியுள்ளனர்.

இதில், பிரான்ஸில் ஆயிரத்து 355 பேர், அமெரிக்காவில் 968 பேர், ஸ்பெய்னில் 961 பேர், இத்தாலியில் 760 பேர், பிரித்தானியாவில் 569 பேர் என மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவியமை பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

24 மணி நேரத்தில் 4ஆயிரத்து 500 பேரை பலியெடுத்தது கொரோனா! ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்தைக் கடந்தது!! 10 லட்சம் பேருக்குத் தொற்றியது!!!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், கடந்த 24 மணி நேரத்துக்குள் 4 ஆயிரத்து 521 பேரை பலியெடுத்துள்ளது. இதுவரை உலகளவில் ஒட்டு மொத்தமாக 51 ஆயிரத்து 704 பேர் வரை பலியெடுத்துள்ளது.

இத்தாலியில் மாத்திரம் 13 ஆயிரத்து 915 பேரையும் , ஸ்பெய்னில் 10 ஆயிரத்து 96 பேரையும் அமெரிக்காவில் 5 ஆயிரத்து 800 பேரையும் பலியெடுத்துள்ளது. (ஏனைய முக்கிய நாடுகளின் இறப்பு விபரம் அட்டவணையில்).

அதேவேளை, தொற்றுக்குள்ளாவோரின் தொகை அமெரிக்காவில்தான் படுவேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

அங்கு இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்து 64 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 61 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கும் இவ்வைரஸ், இதுவரை உலகளவில் 11 இலட்சத்து 7 ஆயிரத்து 128 பேர் மீது தாவியுள்ளது.

இவ்வைரஸின் பிடியில் சிக்கி, 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணப்படுக்கையில் உள்ளனர்.

(மேலதிகத் தகவல்களை மேலே உள்ள வரைவில் பார்க்கவும்)

கொரோனா: பலியெடுப்பு 45 ஆயிரத்தைக் கடந்தது! தொற்று 9 லட்சம்!! அமெரிக்காவில் மாத்திரம் 2 இலட்சம் பேர்மீது தாவியது!

உலகை அச்சுறுத்தி முடங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 45 ஆயிரத்து 507 பேர் வரை பலியெடுத்துள்ளது.

இதன் பலியெடுப்பில் அதிகமாக இத்தாலியில் 13 ஆயிரத்து 155 பேரையும் – ஸ்பெய்னில் 9 ஆயிரத்து 53 பேரையும் அமெரிக்காவில் 4 ஆயிரத்து 394 பேரையும் பலியெடுத்துள்ளது (ஏனைய முக்கிய நாடுகளின் இறப்பு விபரம் அட்டவணையில்).

அதேவேளை, தொற்றுக்குள்ளாவோரின் தொகை அமெரிக்காவில்தான் படுவேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

அங்கு இதுவரை 2 லட்சத்து 289 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 759 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கும் இவ்வைரஸ், இதுவரை உலகளவில் 9 இலட்சத்து 3 ஆயிரத்து 826 பேர் மீது தாவியுள்ளது.

இவ்வைரஸின் பிடியில் சிக்கி, தற்போது மரணப்படுக்கையில் இருப்போரின் எண்ணிக்கை 34 ஆயிரத்துக்கும் அதிகமானது என்பது மேலும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

(மேலதிகத் தகவல்களை மேலே உள்ள வரைபில் பார்க்கவும்)

அமெரிக்காவில் தீயாய் பரவும் கொரோனா; இத்தாலி, ஸ்பெய்னில் பலியெடுப்பு தீவிரம்!

கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலியெடுத்துள்ளது.

இதன் பலியெடுப்பு இத்தாலி – ஸ்பெய்னில் கூடுதலாக இருக்கின்றபோதும், தொற்றுக்குள்ளாவோரின் தொகை அமெரிக்காவில்தான் படு வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

அங்கு இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 403 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் ஏழாயிரத்து 825 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியிருக்கும் இவ்வைரஸ், இதுவரை உலகளவில் 7 இலட்சத்து இரண்டாயிரத்து 568 பேர் மீது தாவியுள்ளது.

இவ்வைரஸின் பிடியில் சிக்கி, தற்போது மரணப்படுக்கையில் இருப்போரின் எண்ணிக்கை 26 ஆயிரத்துக்கும் அதிகமானது என்பது மேலும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

(மேலதிகத் தகவல்களை மேலே உள்ள வரைவில் பார்க்கவும்)

கொரோனா பலியெடுப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது; இத்தாலியில் மாத்திரம் 10 ஆயிரம் பலியெடுப்புகள்!

முழு உலகையும் முடங்க வைத்துள்ள கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பலியெடுத்துள்ளது. இது இத்தாலியில் மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியாக்கியுள்ள அதேவேளை, ஸ்பெய்னில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலியெடுத்துள்ளது.

பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை 6 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது தாவியுள்ளது.

இவ்வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் தொகை அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வைரஸின் பிடியில் சிக்கி மரணப்படுக்கையில் இருப்போரின் எண்ணிக்கை 25 ஆயிரத்துக்கும் அதிகமானது என்பது மேலும் அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

தொடரும் உயிர்ப்பலியால் பதறும் உலக நாடுகள்!

உலகை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை 5 இலட்சத்து 72 ஆயிரத்து 758 பேர் மீது தாவியுள்ளது. இதனால், 26 ஆயிரத்து 348 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் மாத்திரம் 9 ஆயிரத்து 134 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மாத்திரம் இங்கு 919 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெய்னில் இதுவரை 4 ஆயிரத்து 934 பேர் பலியாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்துக்குள் 569 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இவ்விரு நாடுகளில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றமையால் இரு நாடுகளும் பெரும் அபாம் மிக்க நாடுகளாக உள்ளன.

இதேவேளை, சீனாவில் மூவாயிரத்து 292 பேர் பலியாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்துக்குள் வெறும் 5 பேர் மாத்திரமே பலியாகியுள்ளனர்.

இதேவேளை, மேற்குறித்த மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது வேகமாக பலியெடுப்பு நடந்து வரும் நாடாக ஈரான் உள்ளது. இங்கு இதுவரை இரண்டாயிரத்து 378 பேர் பலியாகியுள்ளனர். இங்கு கடந்த 24 மணி நேரத்துக்குள் 144 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இதேபோல பிரான்ஸில் இதுவரை ஆயிரத்து 696 பேரும், அமெரிக்காவில் இதுவரை ஆயிரத்து 384 பேரும், இங்கிலாந்தில் 759 பேரும், நெதர்லாந்தில் 546 பேரும், பெல்ஜியத்தில் 289 பேரும், சுவிட்ஸர்லாந்தில் 207 பேரும், தென் கொரியாவில் 139 பேரும் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இவ்வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 21 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் மரணப் படுக்கையில் உள்ளனர்.

இதேவேளை, குறித்த வைரஸால் இறந்தவர்களின் தொகை இத்தாலி முதலிடத்தில் உள்ளபோதும், தொற்றுக்குள்ளாவோரின் தொகை அமெரிக்காவில் அதிகமாகவுள்ளது.

அங்கு இதுவரை 93 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 86 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன அதேவேளை, கடந்த 24 மணி நேரத்துக்குள் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஸ்பெய்னில் கடந்த 24 மணி நேரத்துள் 6 ஆயிரம் பேரும், ஜேர்மனில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் 39 வைத்தியர்கள் பலி, 6,205 சுகாதார ஊழியர்கள் பாதிப்பு!

சீனாவில் ஆரம்பித்து இத்தாலியை துவம்சம் செய்துகொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அங்கு பணியாற்றிய 39 வைத்தியர்களைப் பலியெடுத்துள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 205 சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்றப் புறப்பட்ட வைத்தியத்துறையினரையும் பெரு வாரியாகத் தாக்கியுள்ளமையால், அங்கு மருத்துவ வசதிகள் கேள்விக்குறியாகிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 9 சதவிதம் பேர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

கொரோனா தொற்று 5 இலட்சத்தைக் கடந்தது; பலியெடுப்பு 23 ஆயிரம்! மரணப்படுக்கையில் 18 ஆயிரம் பேர்!!

உலகை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ், இதுவரை 5 இலட்சத்து பத்தாயிரத்து 18 பேர் மீது தாவியுள்ளது. இதனால், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இத்தாலியில் மாத்திரம் 8 ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மாத்திரம் இங்கு 662 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெய்னில் இதுவரை நான்காயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்துக்குள் 500 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இவ்வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் மூவாயிரத்து 287 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், அங்கு கடந்த 24 மணி நேரத்துக்குள் வெறும் 6 பேர் மாத்திரமே பலியாகியுள்ளனர்.

இதேவேளை, மேற்குறித்த மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக தற்போது வேகமாக பலியெடுப்பு நடந்து வரும் நாடாக ஈரான் உள்ளது. இங்கு இதுவரை இரண்டாயிரத்து 234 பேர் பலியாகியுள்ளனர். இங்கு கடந்த 24 மணி நேரத்துக்குள் 157 பேர் வரை பலியாகியுள்ளனர்.

இதேபோல பிரான்ஸில் இதுவரை ஆயிரத்து 133 பேரும், அமெரிக்காவில் இதுவரை ஆயிரத்து 82 பேரும், இங்கிலாந்தில் 477 பேரும், நெதர்லாந்தில் 434 பேரும், பெல்ஜியத்தில் 220 பேரும், சுவிட்ஸர்லாந்தில் 191 பேரும், தென் கொரியாவில் 131 பேரும் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, இவ்வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 18 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் மரணத்தைத் தழுவும் நிலையில் உள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய விடயமாகும்.

21 ஆயிரத்தை நெருங்குகிறது சாவு; இத்தாலி – ஸ்பெய்னில் கொத்துக் கொத்தாகப் பலியெடுப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி உலகளவில் இதுவரை 20 ஆயிரத்து 854 பேர் இறந்துள்ளனர்.

இந்நோயால் 4 இலட்சத்து 61 ஆயிரத்து 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணப்படுக்கையில் உள்ளனர்.

இத்தாலியில் மாத்திரம் இதுவரை 7 ஆயிரத்து 503 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 683 பேர் இறந்துள்ளனர்.

இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெய்னில் கடந்த 24 மணி நேரத்துக்குள் 454 பேர் பலியாகியுள்ளனர். இங்கு இதுவரை மூவாயிரத்து 445 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் இதுவரை மூவாயிரத்து 281 பேர் பலியாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் மாத்திரமே இறந்துள்ளனர்.

ஈரானில் இதுவரை 2 ஆயிரத்து 77 பேரும் பிரான்ஸில் ஆயிரத்து 331 பேரும் பலியாகியுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்காவில் 895 பேரும், இங்கிலாந்தில் 435 பேரும், நெதர்லாந்தில் 356 பேரும், ஜேர்மனியில் 206 பேரும், சுவிட்ஸர்லாந்தில் 253 பேரும், பெல்ஜியத்தில் தலா 178 பேரும், தென்கொரியாவில் 126 பேரும் பலியாகியுள்ளனர்.

ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் பலி; 12 ஆயிரம் பேர் மரணப்படுக்கையில்! 19ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை!!

கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மாத்திரம் இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

அதாவது, இரண்டாயிரத்து 45 பேரை பலியெடுத்துள்ளது கொரோனா.

இதேவேளை, ஒட்டுமொத்தமாக இதுவரை 18 ஆயிரத்து 552 பேர் இறந்துள்ளனர்.

இந்நோயால் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில், 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணப்படுக்கையில் உள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் மாத்திரம் கடந்த 24 மணி நேரத்துக்குள் 743 பேர் பலியாகியுள்ளனர்.

இங்கு மொத்தமாக 6 ஆயிரத்து 820 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன், இத்தாலிக்கு அடுத்தபடியாக நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கும் ஸ்பெய்னில் கடந்த 24 மணி நேரத்துக்கள் 489 பேர் பலியாகியுள்ளனர். இங்கு இதுவரை இரண்டாயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் இதுவரை மூவாயிரத்து 277 பேர் பலியாகியுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் ஏழு பேர் மாத்திரமே இறந்துள்ளனர்.

ஈரானில் இதுவரை ஆயிரத்து 934 பேரும் பிரான்ஸில் ஆயிரத்து 100 பேரும் பலியாகியுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்காவில் 667 பேரும், இங்கிலாந்தில் 422 பேரும், நெதர்லாந்தில் 276 பேரும், ஜேர்மனியில் 156 பேரும், சுவிட்ஸர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் தலா 122 பேரும், தென்கொரியாவில் 120 பேரும் பலியாகியுள்ளனர்.