தமிழ் இன ஆழிப்பை கண்டித்து பிரிட்டனில் போராட்டம்!

தமிழ் இனவழிப்பை கண்டித்து – பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பிரித்தானியா வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு அநீதிகளை இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள், பிரித்தானிய அரசின் கவனத்திற்கு இவற்றை கொண்டுவரும் நோக்கிலேயே போராட்டம் நடாத்தப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய உணர்வை எந்த சக்திகளாலும் அடக்க முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் அவசியம் மற்றும் தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் தமிழ் மக்கள் என்றும் உறுதியாகப் பயணிப்பார்கள் என்ற செய்தியை பிரித்தானிய அரசிற்கும் உலகிற்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளதாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் கூறுகின்றனர்.

போராட்டத்தில் தமிழ் இளையோர் அமைப்பினர், மக்களவை அமைப்பினர் ஆகியோர் ஆங்கில உரைகளை வழங்கியிருந்தார்கள்.

வணக்கம் தமிழினத்தின் உயிர் காப்புப் போராட்டத்திற்கான அழைப்பு அடக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தின் போராளி ஒருவன் அகிம்சை வழியில் உயிரீந்து, உலகிற்கு ஈகத்தின் குறியீடாக விளங்குகின்றான்.

தியாக தீபம் திலீபனின் திருவுருவம் தாங்கிய ஊர்தியை அடித்து உடைத்ததுடன் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களையும் தாக்கி இனவாதத்தின் கோர முகத்தை காட்டியமைக்காக இந்த போராட்டத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு இதனைத் தெரியப்படுத்துவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரிட்டனில் இருந்து ஜெனிவாவரை ஈருருளிப் பயணம் முன்னெடுப்பு

தமிழின அழிப்புக்கு நீதிகோரி பிரிட்டனில் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள சுவீஸ் தலைநகர் ஜெனிவாரைவரை செல்லும் ஈருருளிப் பயணம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பிரிட்டன், வொலிங்ரன் பகுதியில் ஆரம்பமான ஈருருளிப் பயணம் எழுச்சியோடு செல்கின்றது.

இப்பயணத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதான ஆளும், எதிர்க்கட்சி அலுவலகங்களுக்கும், உள்நாட்டு , வெளிநாட்டு அமைச்சு அலுவலகங்களுக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.

இம்மனுக்களில், இலங்கை அரசினால் தொடர்ச்சியாக நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்ப நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கைக்கு எதிராக உடனடியாகக் காத்திரமான நடவடிக்கையில்  பிரிட்டன் அரசு இறங்க வேண்டும் என்றும் தமிழின அழிப்பிற்கான நீதியை நிலை நாட்ட வேண்டும் என்றும் ஈழ மக்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வாக சுதந்திர தமிழீழமே அமைய வேண்டும் என்றும் இம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் இளையோர் TYO-UK அமைப்பால் தயாரிக்கப்பட்ட தமிழின அழிப்புத் தொடர்பான ஆவணச் சிறு வெளியீடுகளும் பொது மக்களுக்குக் கொடுக்கப்படுகின்றது.

இந்த ஈருருளிப் பயணம் ஐரோப்பிய நாடுகளூடாகப் பயணித்து, 18/09/2023 அன்று சுவிஸ் ஐ.நா திடலில் நடைபெறும் பேரணியில் பேரெழுச்சியோடு  இணையத் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்!

இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு முடிசூட்டும் நிகழ்வு இன்று கோலாகலமாமுறையில் நடைபெற்றது.

இங்கிலாந்து ராணி 2 ஆம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி காலமானார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். எனினும், அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை வண்ண மிகு ஊர்வலம் நடந்தது.

மன்னர் சார்லசும், அவரது மனைவியும், ராணியுமான கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சாரட் வண்டி தங்க முலாம் பூசப்பட்டது சாலையோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர். ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது.

அதன்பின், மன்னர் 3-ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

” வளர்ப்பு நாயால் சர்ச்சையில் சிக்கிய பிரிட்டன் பிரதமர்”

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்தினருடன் மத்திய லண்டனில் உள்ள ஹைட் பூங்காவிற்கு சென்றுள்ளார். இதன்போது, அவர் தனது வளர்ப்பு நாயையும் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த பூங்காவிற்குள் நாளை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை மீறி ரிஷி சுனக் தனது வளர்ப்பு நாயை பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், விதியை நினைவுபடுத்தியுள்ளார்.

இதையடுத்து, நாய் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் ரிஷி சுனக் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

ஏற்கனவே அவர் கொரோனா கட்டுப்பாட்டை மீறி விருந்தில் பங்கேற்றது, காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தது ஆகிய சர்ச்சையில் சிக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வெள்ளையர் அல்லாத சிறுபான்மை இனப் பிரதமர் தெரிவு!

பிரிட்டிஷ் பழமைவாதிகளது தலைவராகவும் நாட்டின் அடுத்த பிரதமராகவும் 42 வயதான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ் வரலாற்றில் 1874 இல் பெஞ்சமின் டிஸ்ரேலி(Benjamin Disraeli) என்ற யூத இனத்தைச் சேர்ந்த பிரதமருக்குப் பின்னர் அங்கு பதவிக்கு வருகின்ற முதலாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனாக் என்று லண்டன் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன் டவுணிங் வீதி அலுவலகம் செல்கின்ற வயதில் குறைந்த பிரதமர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கிறது.

கட்சித் தலைவர் தெரிவுக்கான வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்த போது ரிஷி சுனாக் கட்சியின் தலைவராகப் போட்டி இன்றித் தெரிவாகும் வாய்ப்புக் கனிந்தது. அதன் மூலம் அவர் பிரதமராக நியமிக்கப்படவுள்ளார்.

அவரை எதிர்த்துப் போட்டியிடுவார் என நம்பப்பட்ட முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஏற்கனவே அதனைத் தவிர்த்துக் கொண்டார். மற்றொரு போட்டியாளரான முன்னாள் அமைச்சர் பென்னி மோர்டான்ட் அம்மையாரும் நூறு எம்பிக்களது ஆதரவைத் திரட்ட முடியாமற் போனதால் கடைசி நிமிடங்களில் போட்டியில் இருந்து ஒதுங்க நேர்ந்தது. இதனால் ரிஷி சுனாக் எதிர்ப்பின்றி முன்னேறிப் பதவிகளைத் தனதாக்கிக் கொண்டார்.

கட்சிக்குள் ஜோன்சனின் அணியைச் சேர்ந்தவர்கள் உட்பட இருநூறுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது ஆதரவு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இளம் பிரதமராகப் பதவியேற்கவுள்ள ரிஷி சுனாக்,
பிரிட்டனில் குடியேறிய செல்வச் செழிப்பு மிக்க இந்திய வம்சாவளிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இந்துமதப் பின்னணியைச்சேர்ந்தவர். அவ்வாறான ஒருவர் பிரதமராகத் தெரிவாகியிருப்பது-அதுவும் இந்துக்களது முக்கிய பண்டிகையான தீபாவளித் திருநாளில் அது நிகழந்திருப்பது – ஆசிய நாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் மிக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது.

பதவி விலகிய பிரதமர் லிஸ் ட்ரஸ் அம்மையார் மாளிகை சென்று அரசர் சார்ள்ஸைச் சந்தித்து தனது விலகலை முறைப்படி அறிவிப்பார். அதன் பிறகு
அரசர் சார்ள்ஸ் ரிஷி சுனாக்கை அழைத்துப் புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு கோருவார்
என்று அறிவிக்கப்படுகிறது. மகாராணியின் மறைவை அடுத்து சார்ள்ஸ் மன்னராகப் பதவியேற்ற பிறகு அவரால் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்படுகின்ற முதலாவது
தலைவர் ரிஷி சுனாக் ஆகிறார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய ரிஷி சுனாக், 2015 இல் Yorkshire தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். முதலாவது அமைச்சுப் பதவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தான் அவருக்குக் கிடைத்திருந்தது. மிக முக்கிய அமைச்சான நிதி அமைச்சுப் பொறுப்பைத் தனது 39 ஆவது வயதில்
ஏற்றுக் கொண்ட ரிஷி, தனது 42 ஆவது வயதில் நாட்டின் பிரதமர் ஆகின்றார்.

இதன் மூலம் நவீன அரசியல் வரலாற்றில் மிகக் குறைந்த காலம் அரசியலில் ஈடுபட்ட பிரதமர் என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

இந்தியாவில் ஆறாவது இடத்தில் உள்ள தொழில்நுட்பத்துறைச் செல்வந்தர் என். ஆர் நாராயணமூர்த்தியின் (NR Narayana Murthy) மகளாகிய அக் ஷதா மூர்த்தியை (Akshata Murty) 2009 இல் மணம் புரிந்த ரிஷிக்கு, கிருஷ்ணா (Krishna) மற்றும் அனொஷ்க்கா (Anoushka) என்ற இரு புதல்விகள் உள்ளனர். ரிஷி சுனாக் இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளை முடித்தவர்.

இந்தியாவில் பல பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அவரது மனைவி பெயரில் உள்ளன. பெரும் கோடீஸ்வரச் செல்வந்தரது வாரிசான மகளை மணம் முடித்த காரணத்தால் வரி தொடர்பான சர்ச்சைகள் ரிஷியின் அரசியல் வாழ்வில் அடிக்கடிப் பின்னடைவுகளை ஏற்படுத்திவந்தன.

ரிஷி சுனாக்கை பிரிட்டிஷ் வரலாற்றில் பிரதமர் பதவிக்கு வந்திருக்கின்ற “மிகப் பெரிய செல்வந்தர்” என்று மேற்குலக ஊடகங்கள் சில வர்ணித்துள்ளன.

தாஸ்நியூஸ் – பாரிஸ். 

லிஸ் ட்ரஸ்ஸுக்கும் 1, 15 000 பவுண்ட்ஸ் கிடைக்கும்! முன்னாள் பிரதமர்களுக்கான நிதிச் சலுகை மீது விமர்சனம்

பிரிட்டனில் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படுகின்ற வாழ் நாள் நிதிச் சலுகைகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. Public Duty Costs Allowance (PDCA) எனப்படும் பொதுப் பணிச் சேவைக்கான செலவுக் கொடுப்பனவாக முன்னாள் பிரதமர் ஒருவர் வருடாந்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பவுண்ட்ஸ் நிதியைப் பெற உரித்துடையவராகிறார்.

பத்து ஆண்டுகள் பதவியில் இருந்த ரொனி பிளேயர், 11 ஆண்டுகள் பதவியில் இருந்த மார்க்கிரேட் தட்சர் அம்மையார் போன்றோருக்குக் கிடைத்த அதே நிதிச் சலுகையை ஆக 44 நாட்கள் மட்டுமே பதவி வகித்துவிட்டு வெளியேறியுள்ளலிஸ் ட்ரஸ் அம்மையாரும் பெற்றுக் கொள்ள உரித்துடையவர் ஆகிறார்.

அதேசமயம் இந்தத் தொகைக்குப் புறம்பாக இதே தொகையில் பத்து சதவீதத்தை ஓய்வூதியமாகவும் பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பும் உள்ளது. அவற்றை அவர் பெற்றுக் கொள்வாரா என்பது தெரியவில்லை.

ஆனால் முன்னாள் பிரதமர் ஒருவர் இந்த நிதிக் கொடுப்பனவை முழுமையாக அனுபவிக்கவேண்டியவரல்லர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் வேண்டுமானால் அதை ஏற்காதிருக்கவோ அல்லது நிதியில் ஒரு பங்கை மாத்திரம் பெற்றுக்கொள்ளவோ முடியும்.

45 நாட்கள் மட்டுமே பதவி வகித்த லிஸ் ட்ரஸ் அம்மையார் மக்கள் சேவைக்கான இந்த நிதியை அனுபவிக்கத் தகுதியற்றவர் என்று பிரதான எதிர்க் கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் கூறியிருக்கிறார்.

நாடு பெரும் பொருளாதார – நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. பவுண்ட்ஸ் நாணயப் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. பண வீக்கத்தின் விளைவுகள் நாட்டின் ஒவ்வொரு குடி மக்களையும் பாதித்துள்ளது. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளில் நான்கு பிரதமர்கள் பதவிக்கு வந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு முன்னாள் பிரதமர்களுக்கான நிதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.அவ்வாறான அரசியல் போக்கைக் கடுமையாக விமர்சிக்கின்ற கருத்துக்கள் நாட்டில் எழுந்துள்ளன.”நம்பர் 10, டவுணிங் வீதி இல்லம் என்ன குறுகிய காலம் தங்கிச் சலுகைகளை அனுபவித்துச் செல்லும் விடுமுறைக்கால வீடா? “என்றவாறும்

பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

முன்னாள் பிரதமர்களில் ரொனி பிளேயர், ஜோன் மேயர் இருவரும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும், கோர்டன் பிறவுண் ஒரு லட்சத்துப் 14 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் டேவிற் கமரோன்

ஒரு லட்சத்துப் 13 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் திரேசா மே அம்மையார் இதுவரை 57 ஆயிரம் பவுண்ட்ஸ்களையும் பொதுப் பணிச் சேவைக்கான நிதியாகப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்ற தகவலை பிரிட்டிஷ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

மகாராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கி.மீ, வரிசையில் மக்கள் காத்திருப்பு

எலிசபெத் மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்தொகையான மக்கள் குவிந்துள்ளனர். இவ்வாறு வந்த மக்களது வரிசை 16 கிலோ மீட்டரளவில் நீண்டு காணப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வந்த மக்களைப் போலவே குழந்தைகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளிகளும் இரவு பகல் பாராது மகா ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

மகாராணியின் உடல் லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்ட பின்னர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சகலரும் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர். இதில் பலர் கண்ணீர் சிந்தியபடி மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதையும் காணக்கூடியதாக இருந்தது.

ராணி இறந்த செய்தி தேனீக்களுக்கும் தெரிவிப்பு!

எலிசபெத் மகாராணியின் மறைவுச் செய்தி பக்கிங்காம் அரண்மனைத் தோட்டத்தில் பெட்டிகளில் வளர்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான தேனீக்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய அரசராக சார்ள்ஸ் பதவியேற்ற தகவலும் தேனீக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

நூற்றாண்டுகளாகத் தொடருகின்ற இந்தப் பாரம்பரியம் ஒரு மூடநம்பிக்கை போலத் தோன்றினாலும் அது இன்றைக்கும் அரச குடும்பத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு வழக்கமாக உள்ளது. அரச தோட்டத்துத் தலைமைத் தேனீப் பராமரிப்பாளரான 79 வயதான ஜோன் சப்பல்(John Chapple) என்பவர் மகாராணி இறந்த செய்தியைப் பெட்டிகளில் தட்டி மெதுவான குரலில் தேனீக்களிடம் தெரிவித்ததுடன் பெட்டிகளில் துயரத்தின் அடையாளமாகக் கறுப்புப் பட்டிகளைக் கட்டினார் என்ற தகவலை லண்டன் ‘டெய்லி மெயில்’ பிரத்தியேகமாக வெளியிட்டிருக்கிறது.

அரச குடும்பத்தில் நல்லது கெட்டது எது நடந்தாலும் அதனைத் தேனீக்களுக்கும் தெரியப்படுத்துகின்ற பாரம்பரியம் நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. தேனீக்கள் தேனை உற்பத்தி செய்வதாக மூடத்தனமாக நம்பப்பட்ட காலத்தில் இருந்தே இந்த வழக்கம் ஆரம்பித்தது என்றும் கூறப்படுகிறது. மரணச் செய்தியைத் தேனீக்களுக்குக் கூறாவிட்டால் அவை தேனை உற்பத்தி செய்யாமல் கூட்டை விட்டு வெளியேறிவிடலாம் அல்லது இறந்து போகலாம் என்ற மூட நம்பிக்கை இந்தப் பாரப்பரியத்தின் பின்னால் இருந்திருக்கிறது. அது இன்னமும் அப்படியே பின்பற்றப்பட்டும் வருகிறது.

இதேவேளை, மகாராணியின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbe) நடைபெறும் என்பதை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.

அன்றைய நாள் பொது விடுமுறை தினமாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் பைடன், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் உட்பட உலகெங்கும் இருந்து தலைவர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளனர். பாரிஸ் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு இறுதி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

இறுதி நிகழ்வுக்காக உலகின் முக்கிய தலைவர்களும் மில்லியன் கணக்கான மக்களும் ஒரே சமயத்தில் லண்டனில் திரளவுள்ளதால் பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்வதில் அதிகாரிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறப்படுகிறது.

மகாராணி எலிசபெத்தின் உடல் இன்னமும் அவர் உயிர் பிரிந்த பால்மோரல் தோட்ட மாளிகையிலேயே வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையே உடல் லண்டனுக்கு எடுத்துவரப்படும். இறுதி நாள் நிகழ்வுக்கு முன்பாக நான்கு தினங்கள் அவரது உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்களது அஞ்சலிக்காக வைக்கப்படும். அத்துடன் லண்டன் வீதிகளிலும் உடல் பவனி இடம்பெறவுள்ளது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

லண்டன், பாரிஸ் நகரங்களை வறுத்தெடுக்கும் வெப்ப அனல் – விமான சேவைகள் இடைநிறுத்தம்!

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் உருவாகியுள்ள மோசமான வெப்ப அனர்த்தம் இயல்பு வாழ்வைப் பாதித்திருக்கிறது. லண்டன், பாரிஸ் நகர வாசிகளை இன்று வெப்பமவறுத்தெடுத்திருக்கிறது. ரயில், விமான போக்குவரத்துகளையும் அது வெகுவாகப் பாதித்துள்ளது.

இங்கிலாந்தின் லூட்டன் விமானநிலையத்தின்(Luton Airport) ஓடு பாதையை வெப்பம் உருகச் செய்ததால் அங்கு இன்று விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

ஓடு பாதையின் தரை மேற்பரப்புபாதிக்கப்பட்டதால் (surface defect) சேவைகள் இடை நிறுத்தப்படுவதாகவிமான நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது. திருத்த வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அது முடிவடைந்ததும் சேவைகள் வழமைக்குத் திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லூட்டனில் வெப்பம் 36C என்ற அளவைக் கடந்துள்ளது. EasyJet, Wizz Air, Ryanair போன்ற விமான சேவை நிறுவனங்கள் லூட்டன் விமானநிலையத்தைப் பயன்படுத்துகின்றன.

அதேசமயம், பிரைஸ் நோர்ட்டனில் (Brize Norton) அமைந்துள்ள பிரிட்டிஷ் றோயல் விமானப்படையின் மிகப் பெரிய விமானத் தளமும் வெப்ப அனலினால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. அங்கு விமானங்கள் இறங்குவதும் ஏறுவதும் தடைப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதி உச்ச வெப்ப நாள் என்று கணிக்கப்பட்ட இன்றைய (திங்கள்) நாளில் இங்கிலாந்தின் சில இடங்களில் வெப்பநிலை 38.1C அளவாகப் பதிவாகியுள்ளது. அது 42 C வரை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லண்டன் அடங்கலாகப் பல பகுதிகள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. நாளைய தினமும் ஆகக் கூடிய வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது.

பாரிஸின் சில ரயில் சேவைகள் கடும் வெப்பம் காரணமாகத் தாமதமடைந்துள்ளன. நகரில் குழந்தைகள் பராமரிப்பகங்களைநேரகாலத்துடன் மூடுமாறு நகர நிர்வாகம் பணித்திருக்கிறது.

கோடை விடுமுறை கழிப்பதற்காகப் பாரிஸ் நகருக்கு வந்த வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வெப்பத்தில் தவிப்பதை ஆங்காங்கே காணமுடிகிறது.

பிரான்ஸின் தென் மேற்கு மாவட்டங்களை வெப்பம் மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அங்கு 15 மாவட்டங்களில் மக்கள் சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ளனர். 69 மாவட்டங்களுக்குச் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு காடுகளில் மூண்ட தீ ஐந்து நாட்களுக்கு மேலாகக் கட்டுக்கடங்காமல் பரவி 15 ஆயிரம் ஹெக்டேயர்வனப் பிரதேசத்தை அழித்துவிட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுத் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் தென்மேற்குப் பகுதி நிலைவரத்தைஊடகங்கள் வெப்பப் பேரழிவு(‘heat apocalypse’) என்று வர்ணிக்கின்றன.

பிரான்ஸில் ஆகக் கூடிய வெப்பம் 39.3°C Nantes மாவட்டத்தில் இன்று பதிவாகியுள்ளது.
ஸ்பெயின், போர்த்துக்கல், கிறீஸ் நாடுகளிலும் வெப்ப அனல் காற்று காட்டுத் தீக்களை உருவாக்கி உள்ளது. உல்லாசப் பயணிகள் தங்கியுள்ள பல முக்கிய இடங்களைதீ நெருங்கியுள்ளது. அவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்கு ஐரோப்பாவை வதைக்கும் இந்த வெப்ப அனல் பூமி வெப்பமடைவதால் ஏற்படுகின்ற பருவநிலை மாறுதல்களுடன் நேரடியாகத் தொடர்புபட்டதுஎன்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

பதவி துறந்நார் பிரிட்டிஷ் பிரதமர்!

பிரிட்டிஷ் பழமவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக பொறிஸ் ஜோன்சன் இன்று அறிவித்திருக்கிறார். அதன் மூலம் அவர் தனது பிரதமர் பதவியைத் துறக்கிறார். கட்சியின் புதிய தலைவரே அடுத்த பிரதமராக வரவிருக்கிறார்.

அவர் யார் என்பதை பழமைவாதிகள் எதிர்வரும் வாரங்களில் முடிவு செய்வர். புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டு அவர் பிரதமராகப் பொறுப்பேற்கும் வரை – எதிர்வரும் இலையுதிர் காலம் வரை- பொறிஸ் ஜோன்சன் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பார்.

நம்பர் 10, டவுணிங் வீதி அலுவலகம் முன்பாக இன்று மதியம் தனது பதவி விலகலை நாட்டுக்கு அறிவித்த ஜோன்சன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக அங்கு உரையாற்றினார்.

“உலகின் மிகச் சிறந்த தொழிலைக் கைவிடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆயினும் இவை எல்லாமே இடைவேளைகள்தான்” – என்று அங்கு அவர் கூறினார். வரலாற்று முக்கியத்துவம் மிக்க அவரது பதவி விலகல் உரையைக் கேட்பதற்காககப் பெரும் எண்ணிக்கையானோர் டவுணிங் வீதி அலுவலகத்துக்கு வெளியே கூடியிருந்தனர். ஜோன்சன் உரையாற்றிய வேளை அருகே சற்றுத் தள்ளி நின்றிருந்தவர்களில்

அவரது துணைவி கேரியும் (Carrie) ஒருவராவார். அவர் தனது ஆண் குழந்தையைக் கையில் வைத்திருந்தார். ஜோன்சன் தனது மனைவிக்கும், குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் உரையில் நன்றி தெரிவித்தார்.

பிரெக்ஸிட் தீர்மானத்தை முழுதாகநிறைவேற்றி முடித்தமை, பெரும் தொற்று நோய்க்குள் இருந்து நாட்டைப் பாதுகாப்பாக வெளியேற்றியமை, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக மேற்கு நாடுகளை வழிநடத்தியமை என்று

ஜோன்சன் தனது பதவிக்காலச் சாதனைகள் பலவற்றை உரையில் நினைவு படுத்தினார்.
பிரதமர் தனது பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்னராக சில பொறுப்புகளுக்கு அமைச்சர்களைநியமனம் செய்தார்.

2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தவர் ஜோன்சன். ஆனால் அடுத்து வந்த ஆண்டுகளில் அவரது தலைமைத்துவப் பலவீனம் கட்சிக்குளே பல முறைகேடுகளுக்கு வழிசமைத்தது. அவை பெரும் ஊழல் விவகாரங்களாக உருவெடுத்தன. இறுதியில் அவரது பதவிக்கே ஆப்பு வைத்துவிட்டன.

அவரது கட்சியில் பொறுப்புகளை வகித்த அமைச்சர்கள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் அவரை எதிர்த்துக்கொண்டு தங்கள் பதவிகளைத் துறந்து பெரும் அணியாக வெளியேறியதை அடுத்தே பதவி விலக வேண்டிய கட்டாயம் ஜோன்சனுக்கு ஏற்பட்டது.

தாஸ்நியுஸ்

பிரிட்டிஷ் பிரதமரின் தலை குறிவைப்பு!

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சிக்குள் அவருக்கு எதிராகப் பெரும் போர் வெடித்திருக்கிறது.

நிதி, சுகாதாரத் துறைகளுக்கான மூத்த அமைச்சர்கள் இருவர் நேற்று முன்தினம் பதவி விலகியதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேலும் ஆறு கபினட் அமைச்சர்கள் உட்பட 42 எம். பிகள் ஜோன்சனின் அரசில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதனால் அவரது அரசாங்கம் பெரும் ஆட்டம் கண்டுள்ளது. இன்று மேலும் பலர் பொறுப்புகளில் இருந்து விலகுவர் என்று எதிரபார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியால் –

பிரதமர் பதவி விலகுவாரா? பொதுத் தேர்தலை அறிவிப்பாரா? அல்லது கட்சியினரை எதிர்த்துக்
கொண்டே பதவியில் நீடிப்பாரா? இவ்வாறான கேள்விகள் லண்டன்அரசியல் களத்தைச் சூடுபிடிக்கச்செய்துள்ளன.

கட்சியில் இதுவரை ஜோன்சனை ஆதரித்து வந்தவர்கள் உட்பட நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் எனப் பெரும்பான்மையானவர்கள் அவரைப் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டிருக்கின்றனர்.

நேற்றுமுன்தினம் பதவி விலகிய நிதி அமைச்சரின் இடத்துக்குப் ஜோன்சனால் உடனடியாக நியமிக்கப்பட்ட புதிய அமைச்சர் நதீம் ஷஹாவியும் (Nadhim Zahawi) அவரைப் பதவிவிலகுமாறு கோருகின்ற அணியில் இணைந்துள்ளார்.

ஜோன்சனின் தீவிர ஆதரவாளரான உள்துறை அமைச்சர் பிரீதி பட்டேல் (Priti Patel) தலைமையில் சிரேஷ்ட அமைச்சர்கள் குழு ஒன்று நேற்று மாலை பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று ஜோன்சனைப் பதவி விலகுமாறு கேட்டுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

எனினும் அவர் அதற்கு மசியவில்லை. அமைச்சுப் பொறுப்புகளுக்குப் புதியவர்களை நியமித்துக் கொண்டு அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக கட்சிக்குள் தொடர்ந்தும் அரசியல் மோதலில் ஈடுபடுவதற்குத் தன்னைத் தயார்ப்படுத்தி வருவதையே அவரது செயல்கள் உணர்த்துகின்றன.

கட்சியின் விதிகள் அடுத்த ஓராண்டு காலத்துக்கு ஜோன்சன் தலைமைப் பதவியில் நீடித்திருப்பதைப் பாதுகாக்கின்றன. பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பு ஒன்றை எதிர்கொண்டு அதில் வென்றால் அடுத்த 12 மாத காலப்பகுதிக்குள் இரண்டாவது வாக்கெடுப்பை அவருக்கு எதிராக நடத்த முடியாது.

ஆனால் இந்த விதியைத் திருத்தி உடனடியாகவே அவர் மீது மற்றொருநம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்குக் கட்சியின் முக்கிய உயரமட்டங்கள் முயற்சித்து வருகின்றன.

ஒரே நாளில் 42 பேர் ஜோன்சனின் அரசிலிருந்து விலகி இருப்பது வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் தனது கட்சிக்குள் சந்தித்திருக்காத பெரும் அரசியல் நெருக்கடி என்று பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ‘பார்ட்டிகேற்’ (party gate) எனப்படுகின்ற பொது முடக்க கால மது விருந்துகள் விவகாரத்தில் தனது கட்சிக்குள்ளேயே நம்பிக்கையையும் செல்வாக்கையும் இழந்து பதவி கவிழும் நிலையைச் சந்தித்து மீண்டிருந்தார்.
முன்னுக்குப் பின் முரணான அவரது வாக்குமூலங்கள்

நம்பகத் தன்மையைச் சிதைத்து அவரது தலைமைத்துவம் மீது கேள்விகளை எழுப்பியிருந்தன.

பார்ட்டிகேற் முறைகேடு தொடர்பாக கடந்த மாதம் கட்சிக்குள் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் அவர் குறைந்த எண்ணிக்கையான கட்சி உறுப்பினர்களது ஆதரவுடன் ஒருவாறு தப்பிப் பிழைத்துப் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். ஆயினும் இந்த ஊழல் விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தினாரா? – பேய்க்காட்டினாரா-என்பது தொடர்பில் விசாரணைகள்நீடித்து வருகின்றன.

அதற்கிடையில் அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முன்பே “கிறிஸ் பின்சர்ஊழல் முறைகேடு” (Chris PincherScandal) என்னும் புதிய சிக்கலில் அவர் மாட்டுப்பட நேர்ந்ததுள்ளது. பாலியல் நடத்தைத் தவறுகள் புரிந்தவர் எனக்கட்சிக்குள் குற்றம் சாட்டப்பட்டிருந்தகிறிஸ் பின்சர் என்ற எம். பியிடம்கட்சியின் கொறடா பொறுப்புகளை
ஒப்படைத்த விவகாரத்தில் பிரதமர்ஜோன்சன் கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக
இழக்க நேர்ந்துள்ளது. தற்போது பெருவாரியாக அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பதவி விலகுவதற்கு பின்சர் விவகாரமே காரணமாகியிருக்கிறது.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

இங்கிலாந்தில் அரசியல் குழப்பம் – இரு அமைச்சர்கள் பதவி துறப்பு

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அரசின் முக்கிய கபினட் அமைச்சர்கள் இருவர் திடீரெனப் பதவி விலகியதை அடுத்து அங்கு பெரும் அரசியல் குழப்ப நிலை தோன்றியுள்ளது. பொறிஸ் ஜோன்சனின் தலைமைத்துவம் மீதான அதிருப்தியால் தாங்கள் பதவி விலக முடிவு செய்துள்ளனர் என்று நிதி அமைச்சர் ரிஷி சுனாக்

(Rishi Sunak), சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் (Sajid Javid) இருவரும் அறிவித்துள்ளனர்.

கொரோனா பொது முடக்க கால த்தில் விதிகளை மீறி நடத்தப்பட்ட மதுவிருந்துகள் தொடர்பான விவகாரத்தில் பொறிஸ் ஜோன்சன் மீது அண்மையில் அவரது கட்சிக்குள்ளேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அச்சமயத்தில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த சுகாதார அமைச்சரும் நிதி அமைச்சரும் இப்போது அவரது தலைமைத்துவத்தை எதிர்த்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஜோன்சனின் தலைமைத்துவம் தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

தவறான பாலியல் நடத்தைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த ஒருவரிடம் ஜோன்சன் அண்மையில் சில அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தார். அந்த விவகாரமே கட்சிக்குள் அவரது தலைமைத்துவம் தொடர்பில் மேலும் அதிருப்தியையும் நெருக்கடியையும் உருவாக்கியிருக்கிறது. தனது தவறுக்காக அவர் மன்னிப்புக் கோரியிருக்கிறார். ஆனால் அதற்கு முன்பாகவே சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரும் தங்கள் பதவிவிலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

பழமைவாதக் கட்சியின் பிரதமரான ஜோன்சனின் பதவிக்கு இருவரது பதவி விலகல்களும் உடனடியாகப்பெரும் சவாலை உருவாக்கக் கூடும்.

ஆயினும் கட்சிக்குள் அவர் மீது உடனடியாகவே மற்றொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை யைக் கொண்டுவருவதற்கு விதிகள் இடமளிக்கமாட்டாது. அதற்குக் குறைந்தது ஒரு வருடகாலம் காத்திருக்க வேண்டும். பதவி விலகிய இருவரது பொறுப்புகளுக்கும் புதியவர்களது பெயர்களை ஜோன்சன் அறிவித்துள்ளார். கல்வி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கின்ற ஈராக்கியப் பூர்வீகம் கொண்ட நதீம் ஷஹாவி (Nadim Zahawi) நிதி அமைச்சுப் பொறுப்புக் கு மாற்றப்படுகிறார். டவுணிங் வீதி பிரதமர் அலுவலகத்தின் தலைமை அதிகாரியாகிய ஸ்டீவ் பார்க்லே(Steve Barclay) புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுகின்றார்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்

ஆங்கிலக் கால்வாய் அகதிகளுக்கு றுவாண்டா நாட்டில் விசேட முகாம்!

தஞ்சம் கோருவோர் தொடர்பான புதிய திட்டத்தை பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டிருக்கிறார். அதன்படி படகுகளில் வந்து நாட்டுக்குள் புகுந்து புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவதற்கான நிலையம் ஒன்று ஆபிரிக்காவில் – றுவாண்டா நாட்டில்- திறக்கப்படவுள்ளது என்ற தகவலை அவர் வெளியிட்டிருக்கிறார்.

ஆட்களைக் கடத்துவோரிடம் இருந்து பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கு இந்தத் திட்டம் மிக அவ
சியமானது என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

தனிஆட்களாகப் படகுகளிலும் வேறு வழிகளிலும் பிரிட்டனுக்கு வருகின்றவர் களைப் பராமரிக்கவும் அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் றுவாண்டா அரசு இணங்கியுள்ளது. அதற்கான 120 மில்லியன் பவுண்ட்ஸ் செலவிலான திட்ட உடன்படிக்கை ஒன்றை அந்நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஏற்பாடுகளில்பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் (Priti Patel) ஈடுபட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.

திட்டம் முதற் கட்டமாக ஐந்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படும். முதலில் ஆங்கிலக் கால்வாய் தாண்டிவரும் குடியேறி
களில் ஆண்கள் மட்டுமே றுவாண்டாமுகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

அரசியல் அகதிகள் தவிர்ந்த பொருளாதார நோக்கங்களுடன் வருகின்றவர்களேஒரு வழி விமான ரிக்கெற் வழங்கப்பட்டு
-சுமார் ஆறாயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில்-கிழக்கு ஆபிரிக்காவில்உள்ள முகாமுக்குச் செல்ல நேரிடும்.
ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகள் எவ்வாறு கையாளப்படுவர் என்பது பற்றித் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை.

பிரிட்டனில் தஞ்சம் கோருவோரைத்வேறொரு நாட்டில் தங்க வைக்கவும் அவர்களது விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கவும் றுவாண்டா அரசுக்கு அனுமதி வழங்குவதில் பலவித சட்டச் சிக்கல்கள் எழக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்ட ரீதியிலும் மனித உரிமைகள் விடயத்திலும் இந்த பிரிட்டிஷ் – றுவாண்டா உடன்படிக்கை சவாலுக்கு உட்படலாம் என்று மனித உரிமைகள் இயக்கங்கள் தெரிவிக்கின்றன. பெரும் அவலங்களைத் தாண்டி ஆங்கிலக் கால்வாய் ஊடே வருகின்றவர் களை வெகு தொலைவுக்குத் திருப்பி அனுப்பும் ஜோன்சன் அரசின் திட்டத்தை எதிர்க் கட்சியும் மனித உரிமை அமைப்பு களும் கண்டித்துள்ளன.

டென்மார்க் நாடும் இதேபோன்று அங்கு புகலிடம் கோரி வருவோரை றுவாண்டாநாட்டில் வைத்துப் பராமரித்துத் தஞ்சக் கோரிக்கைகளை அங்கு வைத்தே முடிவு செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிந்ததே.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்-

தமிழர்கள் இல்லாவிட்டால் நாடு குறுகிக் குறைந்துவிடும் – வாழ்த்துச் செய்தியில் பிரிட்டிஷ் பிரதமர்

  • பிலிப்பின் மறைவுக்கு மத்தியிலும் டவுணிங் வீதியில் மது விருந்துகள்!
  • மகாராணியிடம் மன்னிப்புக் கோரியது பிரதமரின் அலுவலகம்!
  • ஜோன்சனின் அரசியல் வாழ்க்கையில் பெரும் புயல்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி பிரிட்டிஷ்; பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்திருக்கிறார்.”மிகவும் அருமையான தமிழ்ச் சமூகத்தைக் கொண்டாடுகின்ற தருணம் இது” என்று தனது வீடியோச் செய்தி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். “தமிழர்கள் மிக நீண்ட காலமாக பிரிட்டிஷ் வாழ்க்கைக் கட்டமைப்போடு மிக இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாவிட்டால் நமது நாடு குறுகிக் குறைந்துவிடும்”என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் அவரது உத்தியோகபூர்வ பணிமனையில் கொரோனா காலங்களில் – விதிகளை மீறி நடத்தப்பட்டவை எனக் கூறப்படுகின்ற மது விருந்துகள் அவரது அரசியல் வாழ்க்கையில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கின்றன. நம்பர் 10, டவுணிங் வீதியில் அமைந்துள்ள பொறிஸ் ஜோன்சனின் அலுவலக பூங்காவில் கடந்த 2020 மே மாதம் நடத்தப்பட்ட மது விருந்து தொடர்பான விவகாரத்தில் அவரைப் பதவி விலகுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் விதிகளை மீறி அங்கு மேலும் இரண்டு விருந்துகள் நடைபெற்றுள்ளமை பற்றிய தகவல்கள் புதிதாக வெளியாகியிருக்கின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் பொது முடக்கக்கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்றுள்ள அவ்விரு விருந்துகளிலும் பிரதமர் ஜோன்சன் கலந்துகொண்டாரா என்பதுஉறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவற்றில் ஒன்று இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குக்கு முதல் நாள் இரவு தொடங்கி விடிய விடிய நடந்துள்ளது என்ற”பகீர்” தகவலை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

மகாராணி எலிஸபெத்தின் கணவர் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடைபெற்றஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முதல் நாள் இரவு நடந்த பிரதமரின் அலுவலக விருந்தில் சுமார் 30 பேர் மது அருந்தி விடியும் வரை களியாட்டங்களில் ஈடுபட்டனர் என்று ‘ரெலிகிராப்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. மறுநாள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இளவரசரின் இறுதி நிகழ்வில் விதிகளைப் பின்பற்றி மகாராணி  எலிஸபெத் மாஸ்க் அணிந்தபடி ஓர் ஓரமாகப் போய்த் தன்னந்தனியாக அமர்ந்திருந்தார் என்பதை ஊடகங்கள் நினைவூட்டியுள்ளன.

மே , 2020 மது விருந்துக்காக நேற்றையதினம் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில் ஏப்பிரலில் நடந்த அடுத்த விருந்துகளுக்காக அவரது அலுவலகம் இன்று மகாராணிஷயிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.”இது மிகவும் வருந்தத்தக்க விடயம்” என்று பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவங்கள் பிரதமர் ஜோன்சனின் அரசியல் வாழ்வைப் பெரும் போராட்டத்

துக்குள் தள்ளிவிட்டிருக்கின்றன. அவரது பழமைவாதக் கட்சிக்குள் அவரை எதிர்ப்பவர்களும், எதிர்க் கட்சியாகிய தொழிற் கட்சியைச் சார்ந்தவர்களும் பதவி விலகுமாறு அவர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

“பார்ட்டிகேற்” (PartyGate) எனக் கூறப் படுகின்ற இந்த முறைகேடுகள் 57 வயதான ஜோன்சனின் அரசியல் வாழ்வில் நிச்சயமற்றதொரு நிலையை உருவாக்கிவிட்டிருக்கின்றன. அவருக்குப் பின்னால் அடுத்துப் பிரதமர் பதவிக்கு வரக்கூடிய செல்வாக்குமிகுந்த தலைவர்கள் எவரும் அவரது கட்சிக்குள் இல்லை. பிரிட்டிஷ் பிரதமராக 2019 இல் பொறுப்பேற்ற ஜோன்சன் தனது பதவியில் நீடிப்பாரா என்பது தற்போதைய நிலையில் மூத்த சிவில் சேவை அதிகாரியான சூ கிறே (Sue Gray) அம்மையாரின் கைகளிலேயே தங்கியுள்ளது. டவுணிங் வீதி அலுவலகத்தில் விதிகளை மீறி நடந்த விருந்துகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கின்ற பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பல ஊழல் விசாரணைகளில் அமைச்சர்கள் சிலரது தலைகள்உருண் டமைக்கு  அம்மையாரது அறிக்கைகளே காரணமாகின என்பது கவனிக்கத்தக்கது.

              (பாரிஸிலிருந்து குமாரதாஸன்)

நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து! பிரிட்டிஷ் பிரதமரின் பதவிக்கு ஆப்பு?

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது.

அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன் சன் முதல் முறையாகத் தனது மன்னிப்பை வெளியிட்டிருக்கிறார்.

உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே
பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப் புக்கொண்டிருக்கிறார். நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதற் காகவே தொழில் முறையான அந்தக் கூட்டத்துக்குத் தான் அழைப்பு விடுத்தி ருந்தார் எனவும், விருந்து நடைபெற்ற பூங்கா தனது பணியிடத்தின் ஒரு நீட்சியே என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் நாடு முதலாவது முடக்கத்தில் இருந்த சமயத்திலேயே “நம்பர் 10, டவுணிங் வீதி”அலுவலகத்தின் பூங்காவில் பலர் ஒன்று கூடிய குடிபான விருந்து நடந்தது. பிரதமர் ஜோன்சன் அவரது துணைவியார் உட்பட முப்பது
பேர் அதில் பங்குபற்றினர் என்பதைச் சாட்சிகள் உறுதி செய்துள்ளன.வெளி இடங்களில் ஒருவருக்கு மேல் ஆட்கள்
கூடுவதுகூடத் தடுக்கப்பட்டிருந்த- மிக இறுக்கமான- கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தனது அலுவலகத்துக்கு வருமாறு
பலரை அழைத்ததைப் பிரதமர் ஒப்புக் கொண்டிருப்பதால் அந்தத் தவறுக்காக அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் அவரது சொந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன.

எனினும் அவரது அமைச்சரவை அவருக்கு முழு ஆதரவை வெளியிட்டுள்ளது.பிரதமரது அலுவலகத்துக்கு வெளியே
சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகை களுடன் கூடியுள்ளனர். அங்கு விருந்து நடைபெற்ற மே மாதத்தில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் சிலரின் உறவினர்களது கருத்துக்களை பிபிசி ஒளி பரப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜோன்சன்”சட்டத்தை மீறிவிட்டார்,பொய் கூறி விட்டார், தனது அலுவலகத்தை இழிவுபடுத்திவிட்டார்” என்று கோஷம் எழுப்பினர்.

“நாங்கள் ஒக்சிஜன் கருவிகளைப் பொருத்திக் கொண்டிருந்த சமயத்தில் அவர்கள் கூடிக் குலவிக் குடிபானம் அருந்திக் கொண்டிருந்தனர்” என்று மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியதை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அலுவலகத்தில் விருந்து நடந்தது என்ற குற்றச்சாட்டு வெளியாகிய ஆரம்பத்தில் அதனைத் தொடர்ந்து மறுத்துவந்தவர் பொறிஸ் ஜோன்சன். ஏழு, எட்டு மாதங்கள் கடந்து இப்போது அவர் அதனை ஒப்புக்கொண்டிருப்பது அரசியலில் அவரது நிலையை மிகவும் பலவீனப்படுத்தியிருக்கிறது.

பொறிஸ் ஜோன்சன் அரசில் சுகாதார அமைச்சராக இருந்த மற் ஹான்கொக் (Matt Hancock) கொரோனா சுகாதார விதி களை மீறிப் பெண் ஒருவரை முத்தமிடு கின்ற கண்காணிப்புக் கமெரா காட்சி வெளியாகியதை அடுத்துக் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமாச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

46 வயது நபரைக்கொன்ற 13 வயது சிறுவன்!


46 வயது நபர் கொடூரமாக குத்திக் கொன்றான் என்ற சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
லண்டன் West Drayton , Yiewsley பிரதானவீதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவசர அழைப்பு வந்தது என்றும் அங்கு சென்ற போது ஒருவர் குத்தப்பட்டு கிடந்தார் எனவும் அவருக்கு அம்புலன்ஸில் வந்த துணை மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்பட்டது, ஆனால் அவரைக்காப்பற்ற முடியவில்லை.சம்பவ இடத்தில் இறந்துவிட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போலந்து நாட்டவர் டேரியஸ் என்பவரே கொல்லப்பட்டாவராவர். Yiewsley பிரதான வீதியில்; டேரியஸை குழுவாக சேர்ந்து சிலர் தாக்கினர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வருகிறது. இச்சடலத்தின் மீது நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இடுப்பு மற்றும் மார்பில் குத்தப்பட்ட காயங்களே மரணத்திற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

எலிசபெத் மகாராணிக்கு மருத்துவ ஆலோசனை

எலிசபெத் மகாராணி மருத்துவ ஆலோசனையின் பிரகாரம் அரண்மனையில் சில நாட்கள் ஓய்வெடுக்க தீர்மானித்து உள்ளார்.
இவர் புதன் அல்லது வியாழன் வட அயர்லாந்துக்கு செல்வதாக இருந்தது. ஆயினும் பயணத்தை தவிர்க்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
மிகவும் கஷ்டபட்டு இவ்வாலோசனையை விருப்பம் இல்லாமல் ஏற்று கொண்டார். ஆயினும் இத்தீர்மானம் கொரோனாவோடு தொடர்புடையது அல்ல என்று அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராணிக்கு வயது 95. 1952 ஆம் ஆண்டு 25 ஆவது வயதில் மகாராணி ஆனார். அதாவது சுமார் 07 தசாப்தங்களாக மகாராணியாக உள்ளார்.

ஆண் பேயை பிடித்து செல்கின்ற காதலி

பபிலோனியன் காலத்தை சேர்ந்த 3500 ஆண்டுகள் பழைமையான கல் ஓவியம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது லண்டன் தொல்பொருள் சாலையில் உள்ளது. மரணத்துக்கு பிந்திய வாழ்க்கைக்கு ஆண் பேயை பெண் பேய் பிடித்து கொண்டு செல்வதை காட்டுகின்றது.
உயரமான, மெலிந்த, தாடி வைத்த ஆண் பேய். ஆண் பேயின் கைகள் பிணைக்கப்பட்டு உள்ளன. பாதாள வழியாக அதன் காதலியால் கொண்டு செல்லப்படுகின்றது.  
உலகின் மிக பழைமையான பேய் ஓவியம் இதுவாகவே இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அந்த வகையில் இது கின்னஸ் சாதனைக்கு உரியது. 

பிரிட்டனால் கடத்தப்படும் நிலையில் தமிழ் குடும்பம்

பிரித்தானியாவில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றது.
டாக்டர் நடராஜா முகுந்தன் – வயது 44 ஒரு விஞ்ஞானி ஆவார். இவருடைய மனைவி சர்மிளா. மூன்று பிள்ளைகள். 
முகுந்தன் புலமை பரிசிலுக்காக 2018 இல் வந்தார். இவரின் மனைவி மருத்துவ பராமரிப்பாளர்.
நோயாளியான அம்மாவை பார்க்க 2019 இல் இலங்கைக்கு வந்த முகுந்தன் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார்.
ஆனால் இவர் ஒருவாறு தப்பி பிரிட்டனுக்கு திரும்பி சென்றார். இவருக்கான இரண்டு வருட கால புலமை பரிசில் 2020 முடிந்து விட்டது. 
அதன் பின் இவரோ மனைவியோ வேலை செய்ய அனுமதிக்கப்படாமல் உள்ளனர். 
இவருடைய அரசியல் புகலிட கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு அலுவலகம் கடந்த மாதம் 20 ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் அறிவித்தது.
ஆனால் இவரின் கோரிக்கையை நிராகரித்து உள்ளதாக ஒக்டோபர் 11 ஆம் திகதி இன்னொரு மின்னஞ்சல் அனுப்பினர்.
அதில் வேடிக்கை என்னவென்றால் இவரின் கோரிக்கை ஓகஸ்ட் 23 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதில் உள்ளது.

தெற்கு லண்டனில் சூட்டுச் சம்பவம் – சிறுமி உட்பட ஐவர் பலி!

தெற்கு லண்டன் பிளைமவுத் (Plymouth) பகுதியில் 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது
ஐவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.தாக்குதலாளியின் உடலும் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டு ள்ளது என்று பொலீஸார் தெரிவித்துள் ளனர்.

நீண்ட துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தனது குடும்பத்தவர்களை யும் எதிர்ப்பட்டவர்களையும் கண்டபடி
சுட்டுள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன. பாரம் தூக்கும் வாகனம் ஒன்றின் சாரதி எனக் கூறப் படும் அந்த இளைஞன், முதலில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர் களைச் சுட்டுவிட்டு வெளியே வந்து வழிப்போக்கர்களையும் தாக்கியுள்ளார்.

காயமடைந்த சிலர் அம்புலன்ஸ் ஹெலி மூலம் மீட்கப்பட்டனர். நேற்றிரவு பொலீ ஸார் சம்பவம் நடந்தபகுதியை மூடித் தேடுதல்களை மேற்கொண்டனர். இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று மறுத்துள்ள அதிகாரிகள்,பிரதேச மக்களை அமைதி பேணுமாறு கேட்டுள்ளனர்.

தனது அதிர்ச் சியை வெளியிட்டிருக்கின்ற உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் (Priti Patel), பாதிக்கப்பட்டவர்களது குடும்பங்களுக்கு
ஆறுதல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் அண்மைக் காலத்தில்
இடம்பெற்ற மிக மோசமான சூட்டுச் சம்பவம் இதுவாகும்.

குமாரதாஸன். பாரிஸ்.