இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்திற்கொண்டு இலங்கையுடன் கலந்துரையாடி இருநாட்டு மீனவர் பிரச்சினைக்கான தீர்வினைக் காண வேண்டும் என மத்திய அரசை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் நல அமைப்பு சார்பில் அதன் தலைவரான பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்படுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது இல்லை எனவும் இதனால் தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் துயரங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகள் உள்ளிட்ட உடைமைகளை விடுவிக்கவும், இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்திய – இலங்கை மீனவர்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இருநாட்டு மீன்வளத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கூட்டு பணிக்குழுவின் 6 ஆவது கூட்டத்தை இந்தியா சார்பில் கூட்ட வேண்டும் என குறித்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

அதற்குள் தமிழக மீனவர்களின் அவல நிலையை மத்திய அரசு கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப்பணிக்குழு கூட்டத்தைக் கூட்டி, இலங்கையுடன் கலந்துரையாடி மிக விரைவாக பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “லண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன்.
அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி,
“முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்கவிட்டது.

மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசு நேற்று கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.” என்று கூறினார். இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சாந்தனின் பூதலுடலை இலங்கை அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனை இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது ஏன் என தமிழக அரசிடம் வினவியுள்ளது.

சாந்தனை கடந்த 27 ஆம் திகதி எயார் அம்பியூலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தன் திருச்சி முகாமில் உயிருடன் இருந்த போதே, இலங்கையில் உள்ள தனது தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதால், அவரை கவனிக்க இலங்கை செல்ல வேண்டும். எனவே இலங்கைக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

சில மாதங்களுக்கு முன் நடந்த இந்த வழக்கு விசாரணையில், மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. கடைசியாக நடந்த விசாரணையின்போது, மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. விரைவில் சாந்தன் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று நீதிபதிகளிடம் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தான் நேற்று சாந்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

 

சாந்தனின் பூதவுடலுக்கு சீமான், தொல். திருமாவளவன் அஞ்சலி!

சாந்தனின் பூதவுடலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைத்தியசாலை வளாகத்தில் வைத்தே இவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைத்தியிசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்த சாந்தனின் பூதவுடல், பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

 

சாந்தன் காலமானார் – உறுதிப்படுத்தியது வைத்தியசாலை நிர்வாகம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், விடுவிக்கப்பட்ட – இலங்கை வருகை தந்து தனது தாயை பார்வையிட காத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

வைத்தியசாலை நிர்வாகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்தார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்ற வந்த அவர், கோமா நிலைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

சாந்தன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் இலங்கை வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து இலங்கை வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசும் இதற்குரிய அனுமதியை வழங்கி, அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்தன. இந்நிலையிலேயே இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தந்த ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21-ம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக 1999-ம் ஆண்டு மே 11-ம் திகதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் சாந்தன், ராபர்ட் பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

“சீன உளவுப் புறா” – 8 மாதங்களுக்கு பிறகு விடுவித்தது இந்தியா!

சீனாவின் உளவு புறா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவால் பிடிக்கப்பட்ட புறா, எட்டு மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.

2023 மே மாதம் மும்பை புறநகர் பகுதியான செம்பூரில் உள்ள பிர் பாவ் ஜெட்டியில் பொலிஸாரால் குறித்த புறா பிடிக்கப்பட்டது.

புறாவின் காலில் இரண்டு மோதிரங்கள் கட்டப்பட்டிருந்ததாகவும், அதில் ஒன்று செம்பு மற்றும் மற்றொன்று அலுமினியம் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அதன் இரு இறக்கைகளுக்கும் கீழே, சீன மொழியைப் போன்ற மொழியில் தகவல் எழுதப்பட்டிருந்தது எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் நடத்திய விசாரணையில், அது உளவு புறா அல்லவெனவும், தைவானில் திறந்த நீர் பந்தயத்தில் பங்கேற்ற புறா என்பதும் தெரியவந்தது. வழிமாறி இந்த புறா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்துள்ளது.

உடல்நலன் சோதனையின் பின்னர் குறித்த புறா நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பவதாரிணியின் பூதவுடல் இன்று சென்னைக்கு…! கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!!

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியமான பவதாரிணி நேற்று வியாழக்கிழமை மாலை 530 மணியளவில் இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் . இறக்கும்போது அவருக்கு வயது 47.

கடந்த சில மாதங்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிட்சை பெறுவதற்காக இலங்கை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் பூதவுடல் இன்று மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சபரிராஜ் என்பவரை திருமணம் செய்திருந்த இவர் இயக்குனர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளியான பாரதி படத்தில், இளையராஜாவின் இசையில் ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்றவர். 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா போலவே இசைத்துறையில் பாடகியாக 1995 முதல் பயணித்தவர். தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தில் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலான ஹமஸ்தானா… மஸ்தானா…’ பெரிய அளவில் ஹிட்டும் ஆனது .

இவர் காலமான செய்தி திரையுலகத்தினர் மற்றும் அவருடைய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இலங்கையில் தங்கியுள்ள இசைஞானி இளையராஜாவின் இசைநிகழ்ச்சி வருகின்ற சனிக்கிழமை மாலை இலங்கையில் நடக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது.

 

சீன உளவாளிகள் இந்தியாவுக்குள் நுழைவு – வெளியான பகீர் தகவல்

நேபாளம் ஊடாக சீன உளவாளிகள் இந்தியாவுக்குள் நுழைவதாக இந்தியாவின் முன்னணி உளவு அமைப்பான RAW எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வெளியிடும் இந்திய இணையத்தளம் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு RAW அமைப்பு குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேபாள கடவுச்சீட்டை பயன்படுத்தி சீன உளவாளிகள் இந்தியாவின் புனே, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களுக்குள் ஊடுருவியுள்ளதாகவும் குறித்த சீன உளவாளிகள் சாமானியர்களைப் போன்று செயற்படுவதாகவும் RAW அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

ஹிந்தி, ஆங்கில மொழியை சரளமாக பேசும் திறமை கொண்ட சிறந்த பயிற்சிகளைப் பெற்றுள்ள குறித்த சீன உளவாளிகளை பிரித்தறிய முடியாதுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

சீன உளவாளிகளின் நோக்கம் உளவுத் தகவல்களை சேகரிப்பது அல்லவென தெரிவித்துள்ள RAW, பொருளாதார நெருக்கடி நிலைமையைத் தோற்றுவித்து, இந்திய கொள்கை வகுப்பில் தாக்கம் செலுத்துவதே அவர்களின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சீனாவை எதிர்கொள்ள போர்க்கப்பல் எண்ணிக்கையை அதிகரிக்க இந்தியா திட்டம்!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவை எதிர்கொள்ள, 2035 ஆம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 175 ஆக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வருகின்ற நிலையில், கம்போடியாவின் Ream என்ற இடத்திலும் கடற்படைத் தளத்தை அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது.

ஆப்பிரிக்காவின் Djibouti, பாகிஸ்தானில் கராச்சி, Gwadar ஆகிய பகுதிகளில் சீன கடற்படைத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனா 355 போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுடன் உலகின் மிகப்பெரிய கடற்படையாக உருவாகி வருகின்றது.

அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் சீனாவின் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 555-ஆக அதிகரிக்கும் எனவும் அந்த குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2 இலட்சம் கோடி செலவில் 68 போர்க்கப்பல்களை தயாரிப்பதற்கு இந்திய கடற்படை முன்பதிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2035 ஆம் ஆண்டளவில் இந்திய கடற்படையில் ஆகக்குறைந்தது 175 போர்க்கப்பல்கள் காணப்பட வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

‘சந்திரயான்-3’ மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியலின் வெற்றி

இந்திய நாட்டின் விண்வெளி அறிவியல் வெற்றியின் சின்னமான சந்திரயான்-3 நிலவில் நிலைகொண்ட திகதியில் உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினர் பஞ்சாங்கம் பார்க்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சந்திரயான்   விண்கலம் நிலவில் இறங்கியதை இந்தியாவே கொண்டாடியது.

எப்போதும் அதிகம் ஆட்டம் போடுகின்ற, மூடநம்பிக்கையின் முடைநாற்றம் வீசுகின்ற சனாதனிகள் இதை அடக்கித்தான் வாசிக்கிறார்கள். இந்தியாவில் மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஒன்றியஅரசு அமைந்த காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடம் மூடநம்பிக்கைகளை தக்க வைப்பதற்கும், வளர்ப்பதற்குமான முயற்சிகளில்தான் பா.ஜ.க.வும் ஒன்றிய அரசும் அதிகமாக ஈடுபட்டு வருகின்றன.

மும்பையில் ஒரு மருத்துவமனைத் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறை, சோதனைக் குழாய் குழந்தை பிறக்கிற முறை, குளோனிங் முறை புராணகாலத்திலே இருந்தது என்று புருடா விட்டார். இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க.வின் தலைவர்கள் குருஷேத்திரப் போரில் இன்டர்நெட் இருந்தது என்றும், விமானங்கள் பறந்தன என்றும், கட்டுக்கதைகளை மூடை மூடையாக அவிழ்த்து விட்டார்கள். மக்கள் நோயால் பாதிக்கப்பட்ட பொழுது மாட்டு மூத்திரத்தை குடிக்க சொல்லியும், மாட்டுச்சாணத்தை பூசிக்கொள்ளவும் மடமடவென்று ஆலோசனைகளை வணங்கினார்கள்.

மத்திய பிரதேசத்தில் ஒரு மருத்துவமனையில் ஜோசியம் பார்த்து விட்டு தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்ற அறிவுரை வழங்கினார்கள். இந்தியா முழுவதும் மூடநம்பிக்கைகளை முழுதாகக் குத்தகைக்கு எடுத்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சந்திரயான்-3 வெற்றி உள்ளூர அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். மறுபுறத்தில் இந்த வெற்றி  பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் சாரும் என்று மக்கள் பணத்தில் விளம்பரங்களை அள்ளி வீசி விஞ்ஞானிகளையும் சந்திரயானையும் பின்னுக்கு தள்ளி மோடியை முன் நிறுத்துவார்கள். தாங்கள் வந்த பிற்பாடு தான் இஸ்ரோவே உருவானது போல் வலைததளப் பொய்களை பொங்க விடுவார்கள்.

இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக இரவு பகலாக உழைத்து ரஷ்யா அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நான்காவதாக நிலவிற்கு விண்கலம் அனுப்பும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒரு நாடாக இந்தியா உயர்ந்திருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் தொடர் முயற்சி நாட்டில் விண்வெளி தொழில்நுட்பம் வளர்வதற்கும் முன்னேறுவதற்கும் முக்கியமான காரணமாக இருந்தது.

1920 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தாவில் சீசிர் குமார் மித்ரா என்ற விஞ்ஞானி கதிர் இயக்க செயல்பாடுகள் மூலம் விண்வெளி ஆய்வுகளில் நாட்டம் கொண்டார். சேர் சி.. வி ராமன் அவர்களும் அறிவியல் மேதை மேக்னா  போன்றவர்களும் விண்வெளி ஆய்வில் தங்களது பங்கை செலுத்தினார்கள். 1945 ஆம் ஆண்டு தான் ஒருங்கிணைந்த விண்வெளி ஆய்வுகளுக்கான முயற்சிகள் உருவாக்கப்பட்டன. இதே காலத்தில் அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய், மும்பையில் ஹோமி ஜஹாங்கீர் பாபா ஆகியவர்களின் முயற்சியால் விண்வெளி ஆய்வுக்கான அடித்தளம்  போடப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஹோமி பாபா அவர்களால் அணு ஆற்றல் துறை உருவாக்கப்பட்டம இந்த வளர்ச்சியை மேலும் துரிப்படுத்தியது.

1957ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வானாய்வு மையம் அமைக்கப்பட்டது. அமெரிக்க தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த வானாய்வு மையம் உருவாக்கப்பட்டது.
1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் முதன்முதலாக ஸ்புட்னிக் விண்கலத்தை செலுத்தி விண்வெளி ராஜ்யத்தை துவங்கி வைத்தது. இதன்பிறகு பல நாடுகளிலும் விண்வெளி ஆய்வை நடத்துவதற்காக ஆர்வமும் உந்து சக்தியும் ஏற்பட்டது.

1962 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் தலைமையில் இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி குழு(INCOSPAN) அமைக்கப்பட்டது. இந்த காலம் முழுவதும் நடைபெற்ற விண்வெளி ஆய்வு மைய கட்டமைப்பும் வளர்ச்சியும் ஜவஹர்லால் நேரு அவர்களுடைய அறிவியல் பார்வையின் மூலமாக முன்னெடுக்கப்பட்டது. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக விண்வெளி ஆய்வு மிக அவசியமானது என்பதை அவர் வலியுறுத்தி அதற்கான பணிகளில் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான  இஸ்ரோ உருவானது.

உலகில் புவி சார்ந்த அரசியல் அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் ஒவ்வொரு நாடும் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியது. இந்தியாவிற்கும் இந்த நிலைமை உருவான பொழுது 1960 முதல் 1970 ஆம் ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா தனது சொந்த தொழில்நுட்பங்களை வளர்த்துக் கொள்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெறவும் ஆரம்பித்தது. இதே காலத்தில் இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் அமெரிக்கா பல இடையூறுகளை செய்ய ஆரம்பித்தது.

இந்தப் பின்னணியில் 1975 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்கலமான ஆரியப்பட்டா சோவியத் சோசலிச ஐக்கிய குடியரசின் ஆதரவுடன் விண்ணில் ஏவப்பட்டது. விண்கலங்களை விண்ணில் ஏவுவதற்கு அமெரிக்கா பல நாடுகளை அனுமதிக்கவில்லை. அமெரிக்காவின் ஏவு தளங்களில் இருந்து அனுப்புவதற்கு அதிகபட்சமான கட்டணங்களை வசூல் செய்தது. இந்தப் பின்னணியில்தான் சோவியத் யூனியன் உதவியுடன் இந்தியா ஆரியபட்டாவை அனுப்பியது. மக்கள் சீன குடியரசு விண்வெளி துறையில் வளர்ச்சி பெற்ற பிறகு மிகக் குறைந்த கட்டணத்தில் வளரும் நாடுகளின் விண்கலங்களை அனுப்பியது.

விண்ணுலகம் தன்னுலகம் என்று அமெரிக்கா ஆதிக்கம் செய்ய எடுத்த முயற்சிகள் தகர்ந்து வருவதற்கான சான்றுகளில் ஒன்று தான் இந்திய விஞ்ஞானிகளின் சந்திரயான்-3 வெற்றி.

1980 ஆம் ஆண்டு இஸ்ரோ தனது சொந்த முயற்சியால் ஏவு தளங்களையும் ஏவுகணைகளையும் உருவாக்கி எஸ் எல் வி 3 ஏவுகணைகள் மூலமாக முதல் செயற்கை கோளான ரோகினி செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. 1979 முதல் 1983வரை நான்கு விண்கலங்களை அனுப்பி இரண்டில் வெற்றியும் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பி எஸ் எல் வி என்ற புதிய முறைகள் மூலமாக ஒரே முறையில் 10 துணை விண்கலங்களை அனுப்பி இந்தியா ரஷ்யாவின் சாதனையை முறியடித்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது  முதல் முயற்சியாக, 2008- ஆம் ஆண்டு ஒக்டோபர் 22-ம் திகதி பி.எஸ்.எல்.வி-சி11 ரொக்கெட் மூலம் ரூ.365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் 2009- ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் திகதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது.

தொடர்ந்து இஸ்ரோவின் விண்வெளி ஆய்வுகள் முன்னேறிக்கொண்டே இருந்தன. ரூ.604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்.வி.எம். ரொக்கெட் மூலம் 2019- ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. செப்ரெம்பர் 6-ஆம் திகதி நிலவின் மீது அதை இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது.
சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ஆம் திகதி எல்.வி.எம். மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம், 18 நாட்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த 7- ஆம் திகதி  லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், ஓகஸ்ட் 23 ஆம் திகதி (23-8-23) புதன்கிழமை மாலை

6.03 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
இந்த விண்கலம் மூலமாகவும் நிலவில் தரை இறங்கியுள்ள ரோவர் கருவி மூலமாகவும் நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து பூமிக்கு தகவல் தெரிவிக்கப்படும். நிலவில் ஆய்வை துவங்கி ரோவர் வெற்றிகரமாக செயற்படத் தொடங்கி விட்டது.

இந்த விண்கலம் வெற்றி பெற்றதன் மூலமாக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவும் தனது முக்கியமான பங்கைப் பெற ஆரம்பிக்கும்.

உலக விண்வெளி பொருளாதாரம் 550 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 10 முதல் 11 பில்லியன் டொலராக உள்ளது. சந்திரயான் 3 வெற்றியின் மூலம், மேலும் வளம் பெறும்.

2023-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் ஏற்கனவே 546 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்று விண்வெளி அறக்கட்டளை தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 91% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் 2025-க்குள் 13 பில்லியன் அமெரிக்க டொலரை  எட்டும். 2020ல் இது 9 பில்லியன் டொலராக இருந்தது. அதாவது விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் உலகளாவிய பங்கு தற்போது மிகவும் குறைவாக உள்ளது.

1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் நிலவிலும் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு அமெரிக்காவிற்கு அச்சம் ஏற்பட்டது. எனவே 1960 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம் (outer space treaty) போடப்பட்டது. பிறகு 1967,1968 ,1972 ,1975 ,1979 ஆகிய ஆண்டுகளில் பல துணை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் முக்கியமான சாராம்சம் விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுச்சொத்து என்று ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என சோவியத் யூனியன் நிபந்தனை வைத்ததின் பெயரில் அந்த சரத்து சேர்க்கப்பட்டது.

இதுவரை அப்படித்தான் இருந்தது. தற்போது அமெரிக்கா தனக்குத்தானே ஒரு சட்டத்தை இயற்றி விண்வெளியில் ஆய்வை மேற்கொள்ளலாம் என்று அறிவித்தது. நிலவில் தனியார் விண்கலங்களும் செல்லலாம் என்று தனியார் மயம் ஆக்கியது. நிலவில் இருக்கும் தாதுப் பொருட்களை (குறிப்பாக  ஹீலியம்) கொள்ளை அடிப்பதற்கான முயற்சிகளில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசுகள் முயற்சி செய்கின்றன. நிலவு வணிக மயத்திற்கும் தனியார் மயத்திற்கும் ஆளாகிறது.

Deloitte அறிக்கையின்படி, 2013லிருந்து 1,791 நிறுவனங்களில் 272 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் தனியார் பங்கு மூலம் திரட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் விண்வெளித் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் நிலைமை இந்தியாவில் தாராளமாக நடக்கும். ஏற்கனவே அதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு செய்திருக்கிறது.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு அமைப்பை துவங்குகிற பொழுது அதனுடைய நோக்கமாக விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் நாட்டு நலன்களுக்கு பயன்படுத்துவதற்குமான முறையில் செயல்படுவோம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் நாட்டு நலனை புறக்கணித்து தனியார்களின் வணிக மயத்தை நோக்கி தள்ளி விடுவதும் மக்கள் வஞ்சிக்கப்படுவதும் நடக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
இந்திய விஞ்ஞானிகளின் சரித்திர சாதனையை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் அதே நேரத்தில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அறிவியல் துறையை ஏதாவது ஒரு வடிவத்தில் மூட நம்பிக்கை அமைப்புக்குள் திணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.

விண்கலம் மாதிரிகளையும் ஏவுகணை மாதிரிகளையும் உருவாக்கி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் செல்லக்கூடிய செயல்களை எல்லாம் ஊக்குவிக்க கூடிய பணிகளும் நடைபெறுகிறது. எனவேதான் ஒன்றிய அரசின் மூட நம்பிக்கையில் இந்திய மக்களை மூழ்கடிப்பதற்காக எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய சவாலாகவும் வெற்றியாகவும் தான் சந்திரன்யான் விண்கலத்தில் பயணம் தொடங்கி இருக்கிறது. இது முற்போக்கு சக்திகளின் முன்னேற்றத்திற்கான பாதையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

அ.பாக்கியம்

ஆயுதக் கடத்தல் – இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது! சரத் குமாரின் மகளுக்கும் தொடர்பா?

போதைப்பொருள், ஆயுதக்கடத்தில் வழக்கில் நேரில் ஆஜராகும்படி நடிகை வரலட்சுமிக்கு புலனாய்வு ஏஜென்சி அழைப்பாணை விடுத்துள்ளது. எனினும தமக்கு அவ்வாறான அழைப்பாணை எதுவும் வரவில்லை என வரலட்சுமி சரத்குமார் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.

போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளர் எனக் கூறப்படும் ஆதிலிங்கம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆதிலிங்கம் குறித்த தகவல்களை பெற நடிகை வரலட்சுமிக்கு, நேரில் ஆஜராக கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியமை திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14-வது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார்.

என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அறிவிப்பு விடுத்துள்ளது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக இலங்கையைச் சேர்ந்த கும்பல் போதைப் பொருள், ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு யாரேனும் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா , எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைந்திருப்பதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வரலட்சுமி சரத்குமார் மறுப்பு

தமக்கும் புலான்ய்வு துறையினரால் விசாரணைக்காக எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றும் ஊடகங்கள் தவறான தகவலை பரப்புவதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், 4 வருடங்களுக்கு முன்னரே ஆதிலிங்கம் தன்னுடன் வேலை செய்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலவில் உலாவரும் சந்திரயான்-3!

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த ரோவர் பிரக்யான் (Rover Pragyan) தற்போது நிலவில் உலாவரத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நிலவின் தென் துருவத்தில் அரிய கனிமங்கள், ஐஸ் தொடர்பில் ரோவர் பிரக்யான் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நேற்று(23) நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சந்திரயான்-3 தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தமையின் ஊடாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர், நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு சாதனைகளைப் படைத்த உலகின் நான்காவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதலாவது நாடாக இந்தியா பதிவாகியுள்ளது.

நிலவை முத்திட்டது சந்திரயான்-3 – இந்தியா மகத்தான சாதனை!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (23) வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தரைப் பரப்பில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது.

லேண்டர்’ கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா நான்காவது இடத்தில் தடம் பதித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான் -1 கடந்த 2008 இல் 386 கோடி இந்திய ரூபா செலவில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான் – 2 திட்டத்திற்கு 978 கோடி இந்திய ரூபா செலவிடப்பட்டது. சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி இந்திய ரூபா.

சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்துகொண்டு LVM3 M4 ஏவுகணை கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி நண்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதன் பின்னர், சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரத்தை உயர்த்தும் (Orbit​ Raising) நடவடிக்கை 5 முறை மேற்கொள்ளப்பட்டது.

புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 1ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி இடையிலான நேரத்தில் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி சந்திரயான்-3 உந்து சக்தி கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.

ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் நிலப்பரப்பில் தரையிறங்கியது

விக்ரம் லேண்டர் நிலவில் என்ன செய்யப் போகிறது?

நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்கி, அங்கு சந்திரயான்-3 தனது ஆய்வுகளைச் செய்யவுள்ளது.

நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, அங்குள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பம் தாங்கும் தன்மை கொண்டதா போன்ற பல தரவுகளை சந்திரயான்-3 கண்டறியவுள்ளது.

தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகள் மேற்கொள்ளபடவுள்ளன. இதேபோல், பூமியைப் போலவே நிலாவிலும் நில அதிர்வுகள் உள்ளனவா, இப்போது இல்லையென்றால் முன்பு இருந்தனவா என்பன போன்ற தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன.

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் (Rover) எனப்படும் ஊர்திக்கலன் வெளியே வரும். இந்த ஊர்திக்கலன் நிலவின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து, தரைப்பரப்பின் தன்மை என்ன, வெப்பம் எந்த அளவிற்கு உள்ளது, தண்ணீர் உள்ளதா என்பன போன்ற தகவல்களை சேகரித்து அனுப்பும்.

இதயம் கவர்ந்த கள்வன்…!

நச்சினார்கினியன்

“அதிகாரம் ஊழல் செய்யவே முனையும், முழுமையான அதிகாரமோ முற்றிலும் ஊழலில் திளைக்கும்.”
– ஜான் டல்பெர்க்-ஆக்டன்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது . அது 2001 வருடம் ஜூன் மாதம் ” ஐயோ என்னைக் கொல்லப் பாக்குறாங்க ” என்ற மாபெரும் கைது நாடகச் சம்பவம் நடந்தேறியது. இது 2023 வருடம் ஜூன் மாதம் , அதே போன்று ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது சம்பவம் . இப்பொழுதோ நெஞ்சை பிடித்துகொண்டு கண்களை மறைத்து “நெஞ்சு வலிக்குதே ” என்ற மற்றுமொரு நாடகமும் பார்வையாளர்களின் பெருத்த வரவேற்பிற்கிடையே மிக நன்றாக நடந்தேறியது.

முன்னவர் நம் தமிழைக் காக்க வந்த தமிழினக்காவலர் . பின்னவர் இந்நாள் அமைச்சர் ( தற்பொழுது இலாகா இல்லாத ) . 22 வருடங்கள் கடந்தாலும், அரசாங்கங்கள் மாறினாலும் ஊழல் பேர்வழிகளும், நாடகங்களும் மாறவில்லை. இந்தக் கைதுச் சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்த ஊடக இரைச்சல்கள் , கழகக் கண்மணிகளின் ஒன்றியச் சவால்கள் மற்றும் சங்கிகளின் தொடர்ந்த ஊழலுக்கு எதிரான போர்முழக்கங்கள் எல்லாம் ஒருவாறு ஓய்ந்தபிறகு இந்தச் சம்பவத்தை பற்றியும் ,அது தொடர்பான காரண காரியங்கள் மற்றும் விளைவுகளும் என்னவாக இருக்கலாம் என்பது பற்றி நடுநிலையாக ( அல்லது சமன் நிலையில் ) எழுதவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

இந்த கைதுச் சம்பவத்தைப் பற்றி எழுதுவதற்கு முன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்து வந்த பாதை குறித்தும் , இந்த வழக்கினைப் பற்றியும் கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் கரூரில் பிறந்த செந்தில் பாலாஜி 1995ஆம் ஆண்டு தி.மு. க. வில் சேர்ந்தார் (பட்டப்படிப்பை முடிக்கவில்லை. ஒருவேளை கழகத்தில் சேர்வதற்கு எந்தப் படிப்பும் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம் ) . ஐந்து வருடங்கள் ஓயாமல் பொதுச்சேவை ( ?) செய்த பிறகு, தனக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது என்று தெரிந்த பிறகு 2000 ஆம் ஆண்டு அ.தி.மு.கழகத்தில் இணைகிறார் . ( இந்த இரண்டு கழகங்களுக்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் கேட்கலாம். முன்னது குடும்பச் சொத்து. அவ்வளவு மட்டுமே ) பின்னர் குறுகிய காலத்தில் படிப்படியாக முன்னேறி ,அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகிறார்.

இதன் பிறகு அமைச்சர் பொறுப்பிலிருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பிலிருந்தும் 2015 இல் நீக்கம் செய்யப்படுகிறார் . முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் டி. டி. வி. தினகரன் ஆதரவாளராக இருந்து எந்தப் பலனும் கிடைக்காத நிலையில் 2018 ல் மறுபடியும் திமுகவில் ( தி.மு.க -> அ. தி.மு.க -> அ.ம.மு.க -> தி.மு.க ) இணைகிறார். வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி என்பதை நாம் இதன்மூலம் அறிந்துகொள்ள முடியும் . பிறகு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று, திமுக அமைச்சரவையில் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பேற்றார்.

இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படத்தில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இருவர் அக்காமாலா, கப்சி குளிர்பானம் தயாரிப்புப் பற்றிய திட்டத்தை அரசரிடம் (வடிவேலு ) விளக்கிக் கொண்டிருப்பார்கள். அரசன் அவர்களை இடைமறித்து, “அது கிடக்கட்டும்; இதில் எனக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” என்று கேட்பான். இயக்குனர் சிம்புதேவன் மிக சாதுர்யமாக எல்லா அரசியல்வாதிகளையும் நக்கல் செய்திருப்பார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரத்தில் எல்லா அரசியல்வியாதிகளையும் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள் . கமிஷன் / லஞ்சம் வாங்குவது என்பது எங்கள் தார்மீக உரிமை என்று எப்போதும் கருதிய அமைச்சர் அவர்கள் , தான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில் ,அரசு வேலை வாங்கித் தருவதாக இடைத்தரகர்கள் மூலம் கையூட்டு பெற்றுக் கொண்டு பணிக்கு ஆட்களை சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கையூட்டு கொடுத்தும் வேலை கிடைக்காதவர்கள் எழுப்பிய புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு காவல்துறை தயாரித்த குற்றப்பத்திரிகையில் இவர் பெயரில்லை. பிறகு பணம் கொடுத்தும் வேலை கிடைக்காதவர்கள் அளித்த குற்றமனுவின்படி பல்வேறு இழுபறிகளுக்கிடையே, இறுதியாக 2021ல் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் 2021ல் பதவியேற்ற தி.மு.க .அரசு அமைச்சரவையில் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட செந்தில்பாலாஜி மறுபடியும் அமைச்சர் ஆகிறார். இரண்டே மாதங்களில் வழக்கில் தொடர்புடையவர்கள் சமரசம் செய்து கொண்டதால் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து ஜூலை 2021ல் தீர்ப்பு வழங்கியது.

இந்த மாதிரி கண்டிப்பாக நடக்கும் என்று முன்கூட்டிய கணித்த அமலாக்க இயக்குனரகம் இந்தத்தீர்ப்பு வெளியாவதற்கு ஒரு நாள் முன்னரே , சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்கிறது. பல்வேறு காலதாமத இழுபறிகளுக்குக்கிடையே இந்திய உச்ச நீதிமன்றம் தலையிட்டு ,அமலாக்க துறைக்கு விசாரணை அளிக்க ஒப்புதல் அளித்து உத்தரவிடுகிறது.

அமலாக்க அதிகாரிகள் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றிய பிறகு ,செந்தில் பாலாஜியைக் கைது செய்கையில் இதய வலியால் அவதியுறுவதாகஅவர் கூறியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் நலம் தேறிவருகிறார் . இதன்பிறகு தமிழக முதலமைச்சர் செந்தில்பாலாஜி துறைபொறுப்பற்ற (?) அமைச்சராக தொடர்வார் என அறிவித்ததன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆணை பிறப்பித்து பதவியைத் திரும்பப் பெற்றிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஆளுநரின் செயலை சட்டப்படி எதிர்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார் .

இதையொட்டி தமிழ்நாட்டில் எப்பொழுதும் போல எல்லாப் பக்கமும் கூச்சல் ,குழப்பங்கள் தொடர்ந்தன. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ,”வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று சூளுரைத்தார்.இதே முதல்வர்தான் 2016 தேர்தலில் செந்தில் பாலாஜி குறித்து வண்டிவண்டியாக ஊழல் குற்றம் சாட்டினார். ( அது வேற வாய் ) . இந்தக் கைது அப்பட்டமான அதிகார அத்துமீறல் என காங்கிரஸ் ,தி.மு.க ,கம்யூனிஸ்ட் ,நாம் தமிழர் சீமான் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டித்திருக்கின்றனர் .

அ.தி.மு.க இந்த விஷயத்தில் மிகவும் அடக்கியே வாசிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அவர்களின் எதிரணி ,குற்றம் நடந்ததோ செந்தில் பாலாஜி அ.தி.மு.க.அணியில் அமைச்சராக இருந்தபொழுது. மத்தியில் ஆளும் பா.ஜ.க வின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அவர்களின் அனைத்து ஊழல்களைப் பற்றியும் ( ரபேல் போர் விமானம் , அதானியின் வேதாந்த நிறுவனப் பங்கு மோசடி மற்றும் அவர்கள் ஆளும் மாநிலங்களில் நடந்த ஊழல்கள் ) அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகத்தை பற்றி பேசுகிறார்களே ஒழிய செந்தில் பாலாஜியின் ஊழல் குற்றச்சாட்டிற்கு எதிராக ஒரு சொல் இல்லை. இடதுசாரிகளும் ஊழலை விட மதவாதமே பெரிது என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டதால் அவர்களிடமும் அரசியல் சரிநிலையை எதிர்பார்க்கமுடியாது.

ஆளும் மத்திய அரசும் இவ்வளவு நாள் ( அதாவது 2016 – 2021 ஆண்டு காலத்தில் ) நடவடிக்கை எடுக்காமல் இப்போது ஏன் துரிதமாக நடவடிக்கை எடுக்கிறது? . தமிழ்நாட்டு அரசும் ஏன் வழக்கினை நீதிமன்றத்தில் சந்திக்காமல் அமைச்சரை பாதுகாக்க பகீரதப்பிரயத்தனம் செய்கிறது ? குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையில் இருக்கும்போது ஏன் துறையற்ற மந்திரியாக தொடரவேண்டும் ? செந்தில் பாலாஜி கைதினை தொடர்ந்து அண்ணாமலையும் ,பா.ஜ.க வும் ஆடப்போகும் சதுரங்க விளையாட்டின் அடுத்த நகர்த்தல் என்ன ? திரைமறைவில் நடக்கும் அதிகார / அரசியல் பேரங்கள் என்னென்ன நமக்கு தெரிய வருமா ? யாமறியேன் ,யாமறியேன் பராபரமே.

எழுத்தாளர் சுஜாதா இருபது வருடங்களுக்கு முன்பு இந்திய அரசியல் பற்றி எழுதியது . இது இன்றும் மாறாமல் பொருந்துகிறது . ” வேறு தேர்ந்தெடுப்பு இல்லாத அஜனநாயக சூழ்நிலை. மாறி மாறி பழைய ஊழல்காரர்களையே மீண்டும் பதவிக்குக் கொண்டுவரும் ஞாபகமறதி சார்ந்த அரசியல், மற்றவற்றையாவது ஓரளவுக்கு மாற்றமுடியும் என்று தோன்றுகிறது. இந்த நந்தி விலகவே இல்லை.” . இந்த நந்தி விலகவில்லை ,என்றும் விலகப்போவதில்லை . மக்களும் பயபக்தியோடு கும்பிட்டு , விலகிச் செல்லவும் பழகிவிட்டனர் என்றுதான் சொல்லவேண்டும்.

 

கள்ளக் காதலர்களை களமிறக்கி கணவனை கொலை செய்த மனைவி கைது!

தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி மாதூரி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ரக்சியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவா (28). சிவாவுக்கு மாதுரி அகிர்வார் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து உள்ளது. இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த் ரகுவர், குல்தீப் சதுர்வேதி, சோடூ பரிஹார், தீன்தயாள் ஆகிய நான்கு நபர்களுடன் மனைவி மாதுரிக்கு காதல் இருந்துள்ளது.

இந்த விஷயம் கணவர் சிவாவுக்கு தெரிய வரவே, மனைவி மாதுரியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. தனது காதல் வாழ்க்கைக்கு கணவர் தடையாக இருப்பதாக உணர்ந்த மனைவி மாதூரி, தனது கள்ளக்காதலர்கள் 4 பேரைக் கொண்டு கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதன்படி, சதித்திட்டம் தீட்டி கணவர் சிவாவை அழைத்து சென்று மது விருந்து கொடுத்து போதை தலைக்கேறியதும் அடித்தே கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் சிவாவின் சகோதரர் வினோத்திற்கு தெரியவந்துள்ளது. அவர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மனைவி மாதுரி மற்றும் அவரது காதலர்கள் 4 பேரையும் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

இலங்கை அகதியொருவர் தமிழக பொலிஸ் நிலையத்தில் தற்கொலை முயற்சி!

தமிழகம் தாபதி புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள 20 வயதுடைய இலங்கை அகதியொருவர், பொலிஸ் விசாரணையின்போது தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்தே கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓவியரான குறித்த இலங்கையர் (Dhushanth), 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் சிறுமியைப் பழனியிலுள்ள கோவிலொன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து எட்டயபுரம் பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும், அவர்களின் பெற்றோரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து, இது சம்பந்தமாக விசாரணை நடத்தியுள்ளனர். அவ்வேளையிலேயே Dhushanth தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலனுக்காக வீட்டில் களவாடிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சி…

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அக்காய பாலம், சங்கரமடம் பகுதியை சேர்ந்தவருக்கு ஒரு மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.

மகள் விசாகப்பட்டினத்தில் உள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வருகிறார். கல்லூரி அருகே உள்ள ஐ.டி.ஐ-யில் 17 வயது மாணவர் ஒருவர் படித்து வருகிறார்.

மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் அவர்களிடையே காதல் மலர்ந்தது. இருவரும் சினிமா, பூங்கா என சுற்றி வந்தனர். இந்த நிலையில் மாணவர் காதலியிடம் ஐடிஐ படித்து முடித்தவுடன் வேலைக்குச் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். தற்போது கடன் பிரச்சினை உள்ளதால் உன்னுடைய வீட்டில் இருந்து பணத்தை எடுத்து வந்து கொடு என கேட்டுள்ளார்.

இதையடுத்து தன்னுடைய வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தைக்கு தெரியாமலேயே ரூ.2 லட்சம் பணம் (இந்திய ரூபா) 8 பவுன் நகையை தன்னுடைய காதலனிடம் கொடுத்தார்.

பீரோவில் வைத்திருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்ட மாணவியின் தந்தை அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் நகை, பணத்தை தன்னுடைய காதலனுக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து மாணவிக்கும், அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்து மார்பு பகுதியில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மாணவியின் தந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதலனிடம் நகை, பணத்தை கொடுத்ததை பொலிஸாரிடம் தெரிவித்தார். பொலிஸார் மாணவியின் காதலனை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மாணவியிடம் வாங்கிய நகை, பணத்தை வேறு ஒரு காதலிக்கு செலவு செய்ததாக தெரியவந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி காதலன் மீது பொலிஸில் புகார் செய்தார். இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறார் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

“துணிவு” கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் பலி!

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தை காண நேற்று இரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளை சூழ்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் திரையரங்கின் முன்பு சென்ற லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது கீழே விழுந்து உயிரிழந்தார்.

முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த அஜித் ரசிகர் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த 19 வயது ஆன பரத்குமார் என தெரியவந்துள்ளது.

மனைவி கோபமாக இருக்கிறாள்…. விடுமுறை தாருங்கள் என கடிதம் எழுதிய காவலர்”

உத்தர பிரதேசம் மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ரங்கா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த உடன் விடுமுறை கிடைக்காததால் அவர் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், மனைவி கோபமாக இருக்கிறாள். பேச மாட்டேங்குறாள்… என்பதை கூறி விடுமுறை தாருங்கள் என காவலர் உயர் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவலர், காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

‘விடுமுறை கிடைக்காததால் எனது மனைவி கோபத்துடன் இருக்கிறார். போன் செய்யும்போது மனைவி பேசவில்லை. பலமுறை மனைவிக்கு போன் செய்தேன் ஆனால் அவர் என்னுடைய தாயிடம் போனை கொடுத்து விடுகிறார்’ என கூறியுள்ளார்.

மேலும், தனது மருமகனின் பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வருவேன் என்று மனைவியிடம் கூறியதாகவும் விடுமுறை தரவில்லை என்றால் வீட்டிற்கு செல்ல முடியாது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த கடிதத்தை படித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், காவலருக்கு 10 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

‘கொலை செய்வது எப்படி’ – கூகுளில் தேடுதல் வேட்டை நடத்தி மனைவியை கொன்ற கணவன்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் ‘கொலை செய்வது எப்படி’ என்று கூகுளில் தேடி மனைவியை கொலை செய்த நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காஜியாபாத்தில் உள்ள மோடிநகரில் வசிப்பவர் விகாஸ். இவரது மனைவி சோனியா. கடந்த வெள்ளிக்கிழமை ஹாபூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோனியாவிடம் கொள்ளையடிக்கப்பட்டதாக விகாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சோனியா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு, சந்தேகத்தின் பேரில் விகாசைக் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விகாசின் போனை பரிசோதித்ததில், அவர் கூகுளில் ‘கொலை செய்வது எப்படி’, ‘எங்கிருந்து துப்பாக்கி வாங்கலாம்’ என்பது போன்ற இணையத் தேடல்களை மேற்கொண்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இணைய வழி விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட்டில் இருந்து விஷம் வாங்க முயன்றதும் தெரிய வந்தது.

திருமணமான சில ஆண்டுகளுக்குப் பிறகு, விகாசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சோனியாவுக்கும் விகாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விகாஸ் சோனியாவை கொலை செய்ய அவரது பெண் தோழியுடன் இணைந்து திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில் விகாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது பெண் தோழியை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டுபிடித்த போலீஸ் குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.