ஐ.பி.எல்.: ஐந்தாவது தடவையாக சம்பியனானது மும்பை இந்தியன்!

இந்தியன் பிரீமியர் லீக் இருபது-20 தொடரை ஐந்தாவது தடவையாகவும் தன்வசப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.

13ஆவது ஐ.பி.எல். தொடர் டுபாயில் நடைபெற்ற வந்த நிலையில், இதன் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெற்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கபிட்டல்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய டில்லி கபிட்டல்ஸ், ஷ்ரேயாஸ் அய்யர் (65), ரிஷ்ப் பண்ட் (56) ஆகியோரின் சிறப்பான ஆட்டம் கைகொடுக்க 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கிக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, ரோகித் சர்மாவின் அரைச்சதத்தின் (68) உதவியுடன், 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்களைச் சேர்த்து அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐ.பி.எல். கிண்ணத்தை ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றியது.

மரண பீதியில் எல்லைகளை மூடிய நாடுகளுக்கு “மரவள்ளிக்கிழங்கு” காலம்தான் இனி ஒரே வழி!

முருகபூபதி

கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேசங்களின் தன்னிறைவு மற்றும் தேசங்களை வழிநடத்தவேண்டிய அரசியல் தலைமையின் தீர்க்கதரிசனம் குறித்தும் உரத்துச்  சிந்திக்கவேண்டியிருக்கிறது.

சின்னஞ் சிறிய நாடாக கரிபியன் கடலை அண்மித்திருக்கும் கியூபாவை முன்னுதாரணமாகக்கொண்டுதான் இன்று உலக நாடுகள் கடந்த காலத்தையும் சமகாலத்தையும் எடைபோடவேண்டியிருக்கிறது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்று விதந்துரைக்கப்படும் சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000) பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர் அல்ல. அவரது கல்வித்தரம் ஒன்பதாம் வகுப்பிற்கும் கீழ்தான்.

அவரது கணவர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா லண்டனில் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். அவர் 1959 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரது அமைச்சரவையிலிருந்த கலாநிதி தகநாயக்கா காபந்து அரசின் பிரதமரானார்.


எனினும்,அவரால் உருவாக்கப்பட்ட கட்சி அடுத்துவந்த பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக்கட்சியை தனது கணவருக்குப்பின்னர் பாதுகாத்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தேர்தலில் வென்று பிரதமரானார்.

அதற்குப்பிறகு,மூன்று தடவைகள் பிரதமர் பதவியை அலங்கரித்துவிட்டு, 2000 ஆம் ஆண்டில் மறைந்தார். இவரது மகள் ஜனாதிபதியானபோது, அவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசியலில் அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது.

சிறிமாவோ பதவியிலிருந்த காலத்திலும் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்தது என்னவோ உண்மைதான். தமிழ்மொழி இரண்டாம் பட்சமாகிய புதிய அரசியல் அமைப்பு, பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்பனவும் நிகழ்ந்தன. மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆனால், அவரது காலப்பகுதியில் இனக்கலவரங்கள் நடைபெறவில்லை.

அனைத்து கலவரங்களும் அவரது கணவர் பிரதமராக பதவியிலிருந்த (1958) காலத்திலும் 1977 இற்குப்பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் யூ.என்.பி. கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்தவைதான். 1977 – 1981 – 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த கலவர காலங்களில் ஜே.ஆர்.தான் தேசத்தின் அதிபராக இருந்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்கா, பலாங்கொடையிலிருந்து ரத்வத்தை குடும்பத்தின் பரம்பரையில் வந்தவர். இலங்கை தேசியத்தில் தனது கணவருக்குப்பின்னர் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தவர். லண்டனில் படித்து பரிஸ்டரான பண்டாரநாயக்கா,  சிங்கள தேசிய உடையணிந்தவாறுதான் இலங்கை அரசியல் அரங்கில் ஏறினார். தூய வெள்ளை வேட்டி, நெஷனல்தான் அவரது உடை. முதலில் அவர் யூ.என். பி. யில்தான் இருந்தார். அதன் தலைவர் டி. எஸ். சேனாநாயக்காவின் மறைவுக்குப்பின்னர், தனக்குத்தான் பிரதமர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், சேர். ஜோன். கொத்தலாவலைக்கு அது கிடைத்தது. அவரும், டி.எஸ். சேனாநாயக்காவும் இவரது மகன் டட்லி சேனாநாயக்காவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு துதிபாடியவர்கள். அத்துடன்,ஆங்கிலேயர் பாணியில் கோர்ட் சூட் அணிந்துதான் மக்கள் மத்தியில் தோன்றினர்.

பௌத்த சிங்கள தேசியத்தை முன்னெடுக்கவேண்டுமானால் – அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பெறவேண்டுமானால் – அந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆடையைதான் முதலில் அணிந்து பெரும்பான்மையினத்தவரின் நாடித்துடிப்பினை காணவேண்டும் என்ற தீர்க்கதரிசனம் பண்டாரநாயக்காவுக்கு வந்தது.

அதனால் குறிப்பிட் சிங்கள தேசிய உடையை அணிந்தவாறு ஐம்பெரும் சக்திகளை (சிங்களத்தில்  பஞ்சமா பலவேகய ) திரட்டிக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றிபெற்றார்.

அந்த சக்திகள்: விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் – பௌத்த பிக்குகள் – வைத்தியர்கள்.

இத்தனைக்கும் அவர் பிறப்பால், அங்கிலிக்கன் கிறிஸ்தவர். அவரது மூதாதையர்கள் கண்டியை ஆட்சிபுரிந்த தெலுங்கு நாயக்கர்கள் ஆவர்.

ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியம் தேவையானவர்கள் விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஆசிரியர்கள் –வைத்தியர்கள்.

ஆனால், பௌத்த பிக்குகளையும் அவர் இணைத்துக்கொண்டமைக்கு அன்றிருந்த காரணம், பௌத்த மக்களின் வாக்கு வங்கியையும் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்வதற்குத்தான். அவரது அந்தக்கணிப்பு,பெருந்தவறு என்பது ஒரு பௌத்த பிக்குவால் (சோமராம தேரோ) அவர் சுடப்பட்டபோதுதான் அவருக்குத்  தெரியவந்தது. முதல்நாள் சுடப்பட்டு மறுநாள் அவர் இறந்தார்.

எனினும், கணவர் பண்டாரநாயக்காவிற்குப்பின்னர் பதவிக்கு வந்த சிறிமாவோ, 1961 ஆம் ஆண்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும்புகழுடன் பதவி ஏற்கச்செல்லவிருந்தவேளையில்,இவருக்கு வந்த ஆசை விசித்திரமாக அக்காலப்பகுதியில் பேசப்பட்டது.

இந்தியா – தமிழ்நாட்டிலிருந்தெல்லாம் காஞ்சிபுரம் சேலைகள் இலங்கையில் கோலோச்சிக்கொண்டிருந்த அக்காலத்திலேயே அவர், உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்துதான் நாடாளுமன்றம் செல்ல விரும்பினார்.

அதற்கான ஓவிய வடிவமைப்பினை செய்து தருமாறு சிறிமா கேட்டதையடுத்து, அச்சமயத்தில் சிறுகைத்தொழில் அமைச்சில் பணியாற்றியவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியரும் ஒளிப்படக்கலைஞருமான (அமரர்) கே.ரீ. செல்வத்துரை அவர்கள் சிறிமாவின் வேண்டுகோளை நிறைவேற்றிக்கொடுத்தார்.

தேசத்தின் தலைவியே உள்நாட்டு கைத்தறிச்சேலை அணிந்து பதவிப்பிரமாணம் எடுத்ததைப்பார்த்த இலங்கையின் கிராமப்புற மற்றும் நகரப்புற சிங்கள பெண்களுக்கும் அத்தகைய கைத்தறிச்சேலைகளை விரும்பும் ஆர்வம் அதிகரித்தது. அதனால் உள்நாட்டில் பல ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் பெருகின.

சிறிமாவோ முதல் முதலில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தபோது, உலகில் எந்தவொரு நாட்டிலும் அவ்வாறு ஒரு பெண்,பிரதமராகும் அதிசயம் நிகழவில்லை.
பல வளர்முக நாடுகளில் பெண்களுக்கான வாக்குரிமைகூட இல்லாதிருந்த பின்னணியில்,அவர் அந்தப்பதவிக்கு வந்ததை ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்தவர்களினால் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது.
அதனால், அவரை மிகவும் தரக்குறைவாகவும் மேடைகளில் அன்றைய எதிரணியினர் பேசினர்.

சிறிமா முதலில் பதவியிலிருந்த (1961 – 1965) காலப்பகுதியில் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கினார். உள்நாட்டில் புடவைக்கைத்தொழிலை வளர்ப்பதற்காக தனி அமைச்சும் உருவானது.

1970 இற்குப்பின்னர் இடதுசாரிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டரசாங்கம் அமைத்தவேளையில், பல முற்போக்கான திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதுவரையில் “மகாதேசாதிபதி”முறையிருந்த இலங்கை, சோஷலிஸ ஜனநாய குடியரசாக மாறியது. அணிசேரா நாடுகளின் உச்சிமகா நாட்டையும் நடத்தி, அந்த அமைப்பின் தலைவியாகவும் சிறிமாவோ தெரிவுசெய்யப்பட்டார்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தலைநகரம் வரையில்  கட்டுநாயக்கா – கொழும்பு வீதி அகலமாக்கப்பட்டது. அதற்காக முன்னைய  ஒடுக்கமான வீதிக்கு அருகிலிருந்த வீடுகள் – கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டபோது கடும் விமர்சனங்களையும் அவரது அரசு சந்தித்தது.அந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள்,  இராஜதந்திரிகள் ஆகியோரின் போக்குவரத்து வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அவ்வாறு அந்த வீதி அகலப்படுத்தப்பட்டது.

இச்செயலும் சிறிமாவின் தீர்க்கதரிசனம் மிக்க செயல். பின்னாளில்தான்  அதன் தேவை உணரப்பட்டது. அந்த மாநாட்டுக்கு இந்திராகாந்தி, கியூபா பிடல் கஸ்ட்ரோ, லிபியா கேர்ணல் கடாபி, யூகோஸ்லாவியா டிட்டோ உட்பட பல உலகத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அவ்வேளையிலும் யூ. என்.பி. யின் பச்சைக்கட்சியினர், அந்த மாநாட்டை சிறிமாவின்  “அணிசேரா கலியாணம்” என்று கேலிசெய்தனர். ஆனால்,இந்நாடுகளின் ஆதரவுடன் இலங்கையில் பல முற்போக்கான வேலைத்திட்டங்களை சிறிமா முன்னெடுத்தார்.

1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனாநாயக்காவும் இலங்கையில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக கூடுதல் நெற்செய்கையில் ஈடுபட்ட ஏழை விவசாயிகளுக்கு “விவசாய மன்னர்”பட்டம் வழங்கியும் பாராட்டி கௌரவித்தார். இத்தனைக்கும் அவர் அரிசிச்சோறு உண்ணாதவர். அவரைப்போன்று மற்றும் ஒருவர் அரிசி உணவு உண்ணாதவர். அவர்தான் சிறிமாவின் மருமகன் பீலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா.

1970 இல் மீண்டும் சிறிமா இடது சாரிகளுடன்  இணைந்து பதவிக்கு வந்தபோது,  அரசின் திறைசேரியில் நிதிவளம் முற்றாக குறைந்திருந்தது. எதற்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்து கையேந்தாமலிருப்பதற்கு உள்நாட்டில் உற்பத்தியை பெருக்கியே தீரவேண்டும் என்று திடசங்கர்ப்பம் பூண்டார்.

அரிசி, சீனி, மற்றும் அமெரிக்க கோதுமை மாவு முதலானவற்றுக்கு நேர்ந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக, இலங்கை மக்களுக்கு சீனியில்லாமல் தேநீர் அருந்தும் கலசாரத்தை அறிமுகப்படுத்தினார். அக்காலப்பகுதியில்,ஏழை முதல் செல்வந்தர்கள் வரையில் அவர்களின் வீடுகளில் அதுவரையில் இருந்த சீனி போத்தல்களில் பனங்கருப்பட்டியும் கித்துல் கருப்பட்டியும் இடம்பெறத்தொடங்கின.
பனங்கருப்பட்டி வடக்கிலிருந்தும் கித்துல் கருப்பட்டி தெற்கிலிருந்தும் உற்பத்தியாகின.

அத்துடன் சீனியை குறைவாகப்பாவிப்பதற்காக, உள்ளங்கையில் சொற்ப அளவில் சீனியை எடுத்து அதனை நக்கியவாறும் மக்கள் தேநீர் அருந்தினார்கள். 


அதனையும் அன்றைய  யூ.என்.பி. எதிரணியினர் எள்ளி நகையாடினர். உள்ளங்கையை நக்கி நக்கி கைரேகைகள் அழிந்துவிட்டதாகவும், முதல் பெண்பிரதமரின் படம் தாங்கிய அஞ்சல் முத்திரைகளின் பின்புறத்தை நாவால் நக்கித்தான் ஒட்டவேண்டியிருக்கிறது என்றும் ஏளனம் செய்தார்கள்.

கோதுமை மாவின் தட்டுப்பாட்டினால், மக்கள் தத்தம் வீட்டுக்காணிகளில் மரவள்ளிக்கிழங்கு பயிற்செய்கையில் ஈடுபட்டனர். அந்தச்செய்கையை வீட்டு முற்றத்திலும் மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் மூன்று வேளையும் சோறு சாப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள். ஆகவே,அரிசியை பதுக்கும் வர்த்தகர்கள் தண்டிக்கப்பட்டனர். ஒரு குடும்பத்தின்  தேவைக்கு அதிகமாக அரிசி எடுத்துச்செல்லப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
பாண் பேக்கரிகளுக்கும் கோதுமை மாவு கொள்வனவு செய்யும் வீதத்திலும் கட்டுப்பாடுகள் வந்தன. அதனால், அதிகாலையே பொதுமக்கள் பேக்கரிகளின் வாசல்களில் பாண் வாங்குவதற்கு வரிசையில் நிற்கநேர்ந்தது.

அதேசமயத்தில்,வடக்கில் கிளிநொச்சி, விசுவமடு, முல்லத்தீவு முதலான விவசாய பிரதேசங்களில் வெங்காயம், மிளகாய் பயிர்ச்செய்கை அபரிமிதமாக வளர்ச்சி கண்டது. வவுனியா முதலான பிரதேசங்களில் உழுந்து பயிர்ச்செய்கை வளம் கண்டது.

சிறிமாவோவின் அன்றைய தீர்க்கதரிசனம் மக்களுக்கு சில அசௌகரியங்களை தந்தபோதிலும் வடக்கினதும் தெற்கினதும் விவசாயிகளின் பொற்காலமாக கருதப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவிலிருந்து தோன்றி இன்று உலகெங்கும் அச்சுறுத்திவரும் கண்ணுக்குத் தெரியாத கொடிய வைரஸின் தாக்கத்திலிருந்து முழு உலகமும் படிப்படியாக நீங்கினாலும்,பொருளாதார ரீதியில் சந்தித்துக்கொண்டிருக்கும் பாரிய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு நீண்ட காலம் செல்லும்.

முக்கியமாக,இலங்கை போன்ற வளர்முக நாடுகள், மீண்டும் அரிசி, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்,கருப்பட்டி  முதலானவற்றின் உற்பத்தியை நோக்கி தனது பொருளாதார அபிவிருத்தியை  திசைதிருப்பவேண்டியும் வரலாம்.

தற்போது,கொழும்பு துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் உருளைக்கிழங்கு – வெங்காயம் சகிதம் அழுகிய நிலையில் தேங்கிக்கிடக்கின்றன. அவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

இலங்கையை சுற்றி இந்து சமுத்திரம் இருந்தபோதிலும் தகரத்தில் அடைக்கப்பட்ட மீன் இன்றும் இறக்குமதியாகிறது. தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவினால், அவையும் கொள்கலன்களில் தனிமைப்படுத்தப்பட்டு எவருக்கும் பயனற்றதாகிவிட்டன.

சிறிமாவோ காலத்தில்,அரிசித்தட்டுப்பாடு வந்தவேளையில்,“சந்திரனிலிருந்தாவது அரிசி தருவிப்போம்” – என்று பேச்சுக்குச்சொன்னாலும், உள்நாட்டில் விவசாய செய்கையை ஊக்குவித்தார்.

கிழங்கு நட்டு பயிர் செய்யுமாறு அவர் சொன்போது,யூ.என்.பி.யை சேர்ந்த பௌத்த பிக்கு, தேவமொட்டாவ அமரவண்ஸ தேரோ “அம்மையார் கிழங்கு நடு… கிழங்கு நடு…என்கிறாரே,  எங்கே நடுவது” – என்று இரட்டை அர்த்தத்தில் மேடைகள் தோறும் கேவலப்படுத்திப் பேசித்திரிந்தார்.எழுத்தில் பதியமுடியாத மிக மோசமான மேலும் பல வார்த்தைப் பிரயோகங்களை அந்த பிக்கு  உச்சரித்தார்.

சிறிமாவின் காலத்தில்தான், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் தோன்றியது. அதே காலப்பகுதியில் திரைப்படக்கூட்டுத்தாபனம் வந்தது, இந்தியாவின் தரமற்ற வணிக சஞ்சிகைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால் பல நன்மைகள் உள்நாட்டில் மலர்ந்தன.

ஆனால், அதன் தற்காலிக சுமைகளை தேசத்தின் நலன் கருதாமல், தமது அரசியல் நலன்கருதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் ஆர்.பிரேமதாசம் விஷமப்பிரசாரம் செய்து அந்த ஆட்சியை தோற்கடித்து, 1977 இல் பதவிக்கு வந்து,திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தினர்.

மீண்டும் சிறிலங்கா வெளிநாடுகளை கையேந்தத் தொடங்கியது. இன்று தோன்றியிருக்கும் வைரஸ் அனைத்து நாடுகளையும் பரஸ்பரம் கையேந்த வைத்துள்ளது.

ஒரு காலத்தில் கொடிய வைரஸினால் கியூபா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பலியாகிக்கொண்டிருந்தபோது,அமெரிக்கா அந்த சின்னஞ்சிறிய நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடையை ஏனைய சில ஐரோப்பிய நாடுகளும் ஆமோதித்தன. அமெரிக்க வல்லரசை மீறமுடியாமல் கியூபாவை புறக்கணித்தன.
நோயினால் பாதிப்புற்ற தனது மக்களை மீட்டெடுக்கவேண்டுமாயின், முதலில் மருத்துவத்துறையை வளர்த்து மேம்படுத்தவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டார் கியூபா அதிபர் பிடல் காஷ்ரோ. அந்த கர்மவீரனின் தீர்க்கதரிசனம்தான் சமகாலத்தில், இத்தாலி உட்பட பல நாடுகளுக்கும் மக்களின் உயிர்காக்க கியூபா மருத்துவர்களும் தாதியரும் விரைந்து எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்!

அணுவாயுதங்களுக்கும் ஆயுத உற்பத்திக்கும் வல்லரசுகள் செலவிட்ட காலம் மறைந்து மருத்துவமனைகளுக்கும் வெண்டிலேட்டர்களின் உற்பத்திகளுக்கும் அதிகம் செலவிடவேண்டிய காலம் உருவாகியிருக்கிறது.

ஆட்கொல்லிநோய் அறுவடைசெய்த அதிர்ச்சிதரும் நன்மைகள்


பொன்ராஜ் தங்கமணி

கொரோனா பற்றி செய்திகளையும் பதற்றங்களையும் ஏன் வதந்திகளையும்தான் இந்த உலகம் கடந்த சில வாரங்களாக சாப்பிட்டு செமித்து பிறகு மீண்டும் சாப்பிட்டபடியே இருக்கிறது. கொரோனா மனித குலத்தின் மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் அத்தகையது.

உணவுச் சங்கிலியின்  உயரத்துக்குச் சென்ற மனிதன் மிகக் கம்பீரத்துடனும் கர்வத்துடனும் மட்டுமல்லாமல் அடக்கு முறை எண்ணத்தோடும் இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் வளங்கள் மீதும் தனது ஆளுமையை – வெவ்வேறு வகைகளில் – ஆயிரமாயிரம் ஆண்டுகளாக செலுத்திவருகிறான்.

சூழலியல் சார்ந்த வாழ்க்கையை விட்டு மனிதன் அகந்தை சார்ந்த வாழ்க்கைக்கு மாறி சில நூறு வருடங்கள் ஆகிவிட்டன. மனித குலவரலாற்றில் அவ்வப்போதுவரும் பரந்துபட்ட பஞ்சம்,பட்டினி,போர் போன்ற காரணிகளைத் தவிர்த்து பெரும்பாலும் பெரிய இன்னலேதும் இல்லாமல் மனிதனின் வாழ்க்கை தொடர்ந்து வருகிறது.  

இருந்தாலும், அவ்வப்போது வைரஸ் என்னும் நுண்ணிய நோய்க்கிருமி தன் வலிமையை மனிதனிடம் காட்டிக் கொண்டுதானிருக்கிறது. எபோலா,எச்ஐவி, சார்ஸ், டெங்கு, மெர்ஸ் என மனிதனை அச்சுறுத்திய வைரஸ்களில் தற்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த நூறாண்டுகளில்,மனிதனின் செயல்பாடுகளை உலகளாவிய வகையில் முடக்கிய வைரஸ் என்று பார்த்தால் அது கொரோனாதான்.  

மனிதச் செயல்பாடுகளினால் இந்தப் புவியில் ‘கார்பன்’ வெளியீடு தொடர்ந்து அதிகரித்து வருவதும் அதன் விளைவாக புவி வெப்பமயமாதல் நடைபெறுவதும் நாம் அறிந்ததே. இதைக் குறைப்பதற்கு ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் சார்ந்த அமைப்புகளும் வெவ்வேறு வகைகளில் முயன்று வருகின்றன. இவ்வாறனதொரு நிலையில்,மனிதன் பூமியில் ஏற்படுத்துகின்ற வலிந்த மாற்றங்களையும் தாக்கங்களையும் கொரோனா குறைத்திருக்கிறது. அல்லது கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது.

நாம் நம் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சாரத்திலிருந்து போக்குவரத்து, பயன்படுத்தும் பொருட்கள் என்று ஒவ்வொரு நிலையிலும் கரிம வெளியீடு நிறைந்துள்ளது. தற்போது இவை அனைத்தும் ஒரு தேக்க நிலையை அடைந்துள்ள காரணத்தால் கரிமத்தின் வெளியீடு இயல்பான நிலையைவிட 5.5-5.7 சதவீதம் வரைகுறைந்துள்ளதாக உலக வானிலை அமைப்பின் தலைமைச் செயலர் பீட்டரிடல்லஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தச் செய்தி நமக்கு தற்காலிகமாக கிடைக்கும் நல்லசெய்திதானே தவிர இதனால் வானிலை மாற்றத்தை உடனடியாக மாற்றும் அளவுக்கு பங்களிக்க முடியாது எனவும் அவர் சேர்த்தே கூறுகிறார். இதேக் கருத்தை சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையமும் எதிரொலிக்கிறது.

இப்பொழுது குறைந்திருக்கும் கரிம வெளியீட்டின் அளவு என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெருந் தொகையாகும் என உலகளாவிய கரிம செயல்திட்ட குழு தெரிவிக்கிறது.

ஆகவே,கொரோனாவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மாற்றம் தற்காலிகமானது எனப் பார்க்கப்பட்டாலும் இந்த மாற்றத்தால் இந்தியா,சீனா போன்ற நாடுகளின் பெருநகரங்களில் சில நாட்களாக நல்ல காற்றை சுவாசிக்க 

முடிகிறது.  இதற்கு முக்கிய காரணம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலக்கரி சார்ந்த உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் குறைவான புகையும்,சாலைகளில் போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் புகையும் குறைந்ததுதான்.  

சுத்தமான காற்று மட்டுமன்றி,தண்ணீரின் மாசுபடும் அளவும் குறைந்து வருகிறது.  இந்தியாவின் கங்கை நதியிலிருந்து வெனிஸ் நகரத்தின் புகழ்பெற்ற கால்வாய் வரைதண்ணீர் சுத்தமாகும் புகைப்படங்கள் கடந்தசிலநாட்களாகவெளிவந்தவண்ணம் உள்ளன.  

இன்னொருபுறம் –

மனிதனின் செயற்பாட்டு வேகம் குறைந்ததினால் மிருகங்கள் சற்றே இலகுவாக நடமாட ஆரம்பித்திருக்கிறன. கேரளாவில் மலபார் புனுகுப்பூனையும், ஜப்பானில் மான்களும்,சிங்கப்பூரில் நீர் நாய்களும் தங்கள் முகங்களை இப்போதுவெளியேகாட்டியுள்ளன. இந்தியாவின் கரித்துவாரின் தெருக்களைகூட்டம் கூட்டமாக மான்கள் கடந்து செல்கின்றன. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவின் மையப் பகுதியில் காட்டுப் பன்றிகள் நடமாடுகின்றன. வேல்ஸ் நகரத்தில் மலை ஆடுகள் உலாவருகின்றன.  ரோண்டாவின் தெருக்களில் மயில்களும்,சான்டியாகோவில் பூமாவகைப் பூனைகளும் காட்சியளிக்கின்றன. இவற்றைப்பார்க்கும்,மக்களுக்கு இவை இத்தனைவருடங்கள் எங்கே இருந்தன என்ற ஆச்சரியமும் ஐயமும் எழுகிறது.

இவை அனைத்தும் இயற்கையை விரும்பும் மனிதர்களுக்கு ஒருவிதமன மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்த மகிழ்ச்சிதொடர வேண்டுமாயின்,இயற்கை மீதான மனிதனின் தாக்கம் குறையவேண்டும். நம்முடைய தேவைகள் என்ன,அந்தத் தேவைகள் ஆடம்பரமானதா அத்தியாவசியமானதா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள சரியான தருணம் இப்போது நமக்கு வாய்த்திருக்கிறது. நம் தேவைகளைக் குறைத்து நாம் நுகரும் பொருட்களைக் குறைக்கும்போது இயல்பாகவே அதை உற்பத்திசெய்யும் தேவை குறைந்து இயற்கைமீதான நம் தாக்கம் குறையும்.

இதற்கு மாறாக கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்புகிறோம் என்கிற பெயரில் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக அதிக நுகர்பொருள் கலாச்சாரத்திற்குள் உட்புகாமல் இருப்பதற்கு முயற்சிகள் எடுப்போம்.

இதிலும் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களின் தனிநபர் கரிம வெளியீட்டு தொகைமிகவும் அதிகம். உலக அளவில் ஒருசராசரி ஆஸ்திரேலியரின் கரிம வெளியீட்டு தொகை ஒரு இந்தியரைவிட ஒன்பது மடங்கும்,ஒருஉகாண்டாநாட்டவரைவிட 154 மடங்கும் அதிகமாகும். ஆஸ்திரேலியாபோன்றபணக்காரநாட்டில் வாழும் மக்களின் நுகர்பொருள் கலாச்சாரம் என்பதுபூமிக்குஒருபுற்றுநோய் போன்றதுஎன்பது இதன் மூலம் புரிந்து இருக்கும்.  

இயற்கை மீதான நம்முடைய தாக்கம் குறையும்போது,இந்தப்புவி இயல்பாகவே மனிதனுக்கு மட்டுமன்றிமற்ற உயிரினங்களும் வாழ்வதற்குஏ துவாக அமையும்.  இருப்பதை பகிர்ந்து உண்டு,பல உயிர்களைக் காத்து வாழ்தல் அறத்தில் சிறந்த அறம் என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.  


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை – குறள் 322

கொரோனாகாலத்தில் நாம் படிக்கும் சிறந்தபாடமாக இது அமையட்டும். 

இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா தொற்று!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கையர்கள் இருவர் உட்பட பதினைந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்த அறிவிக்கை அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாச அறிவித்துள்ளது.

இதன்படி, அங்குள்ள இத்தாலியர்கள் மூவரும், ஐக்கிய அரபு இராச்சியம், பிரிட்டன், இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தலா இருவரும் ஜேர்மன், தென்னாபிரிக்கா, தன்சானியா மற்றும் ஈரானைச் சேர்ந்த தலா ஒருவர் என 15 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த பதினைந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, கடும் கவனிப்பில் சோதனைக்குட்படுத்தப்பட்டள்ளனர்.

ஈரானில் விமானம் விழுந்து நொறுங்கியது; 170 பேர் பலி!இயந்திரக்கோளாறா, தாக்குதல் நடத்தப்பட்டதா? விசாரணைகள் ஆரம்பம்!

போர்ச் சூழல் நிறைந்த ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் 170 பேர் மரணமடைந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஈரான் – அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், 180 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியுள்ளது என ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த விமானமே இவ்விபத்தில் சிக்கியுள்ளது.

விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. தொழில்நுட்ப காரணங்களால் விமானம் விபத்தில் சிக்கியதா அல்லது தாக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஈராக் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 100 பேர் பலி; 5 ஆயிரம் பேர் காயம்!

ஈராக் அரசுக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாகப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும், 5 ஆயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வைத்தியத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் மேலும் வலிமையானதால், இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஈராக்கில், மிக முக்கிய பிரச்சினைகளான வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள் ஊழல் என்பனவற்றையே போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர். இதுதான் அந்நாட்டு மக்கள், அரசுக்கு எதிராகப் போராடுவதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

கடந்த செவ்வாய்கிழமை திடீரென வெடித்த இப்போராட்டம், இன்று ஆறாவது நாளாகவும் தொடர்ந்தது.

இந்நிலையில், அனைவரையும் அமைதி காக்கக் கோரி அந்நாட்டுப் பிரதமர் அழைப்பு விடுத்த போதிலும், நூற்றுக்கணக்கான ஈராக் மக்கள் வீதிகளில் வந்து போராடினார்கள். தலைநகர் பக்தாக்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், இணையச் சேவைளும் முடக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூடுவதைத் தடுக்க முடியவில்லை.

இதனால், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடக்கும் மோதல்களால் இதுவரை நூறு பேர் வரை பலியாகியுள்ளனர் எனவும் 5 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக்கில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஐ.நாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிச்சையாய் விழுந்த கோடிகள்!

லெபனானின் மூன்றாவது பெரிய நகரம் சிடான். அங்குள்ள வைத்தியசாலை வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாஃபா முகமது அவாத். வைத்தியசாலை ஊழியர்களுக்கு இவரை நன்கு தெரியும் என்பதால், தினமும் பிச்சை போட்டுச் செல்வார்கள். இவர், தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜேடிபி என்ற வங்கியில் தினமும் சேமித்து வந்துள்ளார்.

இந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது. இந்த வங்கியில் பணத்தை வைப்புச் செய்த வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உறுதி அளித்திருந்தார். அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை, ஹஜ் வாஃபா முகமது அவாத்துக்கு லெபனான் மத்திய வங்கியிலிருந்து வழங்கிய இரண்டு காசோலைகளின் போட்டோ பிரதிகள், சமூக வலை தளங்களில் வைரலானது. அதில் பணம், இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாவுக்கு மேலாகும்.

இது பிச்சைக்காரப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட காசோலை என்பது பிறகுதான் தெரிய வந்துள்ளது. வாஃபா கோடீஸ்வரி என்பது அவருக்குப் பிச்சை போடுபவர்களுக்குத் தெரிந்ததை அடுத்து, அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

சவுதிமன்னரின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை ; பதிலுக்கு கொலையாளியைச் சுட்டுக்கொன்ற பொலிஸ்!

சவுதி மன்னரின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர், அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உடனடியாகவே, சம்பவ இடத்தில் வைத்து கொலையாளியையும் பொலிஸார் சுட்டுக் கொன்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல் ஃபக்ம்.

அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 2015ஆம் ஆண்டு இறந்தபின்னர், அவரது மகனும் தற்போதைய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஜிஸ் சவுத்தின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளராக அப்துல் அஜிஸ் அல் பக்ம் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்றுமாலை ஜெத்தா நகரில் வசிக்கும் நண்பர் ஒருவரைச் சந்திக்க, அப்துல் அஜிஸ் அல்- பக்ம் சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்துல் அஜிஸ் அல் பக்மை நோக்கி அவரது நண்பர் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அப்துல் அஜிஸ் அல் பக்ம் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து அங்கு விரைந்த பொலிஸார், கொலையாளியை சம்பவ இடத்திலேயே வைத்து சுட்டுக் கொன்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 5 பொலிஸார் காயமடைந்துள்ளனர் என சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.