அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள Francis Scott Key பாலம் உடைந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது.

இதன் வழியே, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் மீது வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது.

இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது.

அந்த கப்பல் நேற்று அதிகாலை திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து நீருக்குள் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் விழுந்தன.

இந்த சம்பவத்தில், பாலத்தின் மீது மோதிய வேகத்தில் கப்பல் தீப்பிடித்து கொண்டது. பின்னர் அது நீரில் மூழ்கியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் பால்டிமோர் நகர தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீட்பு பணி மேற்கொள்ள சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். வாகனங்கள் நீரில் விழுந்ததில் பலர் சிக்கி கொண்டனர்.

பாலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் நீரில் விழுந்தனர்.இந்த விபத்து எதிரொலியாக, பாலத்தின் இருபுறமும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளன.

போக்குவரத்து வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது என்று மேரிலேண்ட் போக்குவரத்து கழகம் தெரிவித்தது.தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

இதுபற்றி மேரிலேண்ட் பொலிஸார் இன்று கூறும்போது, பால விபத்தில் சிக்கிய தொழிலாளர்களில் 6 பேர் பலியாகி இருக்க கூடும் என கூறினர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் களமிறங்குவது உறுதியானது!

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களமிறங்கவுள்ளார்.

குடியரசு கட்சியின் சார்பில் டொனால்;ட் டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், நேற்று 15 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேச பகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 12 மாநிலங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

மேலும் குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஆதரவை டிரம்ப் பெற்றுள்ளார்.

இதனால் நிக்கி ஹேலி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிரான பிடியாணையை வரவேற்கிறது அமெரிக்கா

ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நியாயமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கைக்கான வலுவான காரணத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பினூடாக போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளமை தெளிவாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள யுத்தத்தில் பல்வேறு போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஐ.நா பரந்தளவிலான விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த விசாரணையின் அடிப்படையில், ஐ.நாவின் புலனாய்வு அமைப்பு கடந்த வியாழக்கிழமை அறிக்கையொன்றையும் வௌியிட்டது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ரஷ்யா, ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் மனிதாபிமான நோக்கத்திற்காக அவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துச்சென்றதாகக் கூறியுள்ளது.

அமெரிக்காவில் கடுங்குளிர் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவில் கடுங்குளிரிலும் பனியிலும் உயிரிழந்தர்வர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

நியூயோர்க் மாநிலத்தின் பபலோ நகரமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பனிப்புயல் தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.

பல்லாயிரம் விமானப் பயணங்கள் தடைப்பட்டதால் பலர் கிறிஸ்மஸ் தினத்தன்று குடும்பத்தைப் போய்ப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. 250,000க்கும் அதிகமான வீடுகளும் வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றன.

சில மாநிலங்களில் வெப்பநிலை பூஜ்யத்துக்குக் கீழ் 45 டிகிரி செல்சியஸைத் தொட்டது.

கனடாவில் ஒன்டாரியோ, கியூபெக் மாநிலங்கள் பனிப்புயலை எதிர்கொண்டன.

கியூபெக் மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று (25) 120,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன. சில வீடுகளுக்கு மின்சக்தி திரும்பச் சில நாட்கள் வரை பிடிக்கலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

செவ்வாய்க் கோளில் விண்கல் மோதிப் பெரும் வெடிப்பு! பனிக் கட்டிகள் தெறிப்பு!!

செவ்வாய்க் கிரகத்தில் நிகழ்ந்துள்ள பெரும் அதிர்வு பற்றிய முக்கிய அறிவிப்பை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா (Nasa) நேற்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறது. விண்கல் ஒன்று மோதியதால் நிகழ்ந்ததாக கூறப்படும்

பெரும் நில அதிர்வை அடுத்து எடுக்கப்பட்ட படங்கள் செவ்வாயின் பூமத்திய ரேகைப் (equator) பகுதியில் புதிதாகப் பெரும் பள்ளத்தாக்கு ஒன்று உருவாகி இருப்பதையும் உள்ளே இருந்து பனிக் கட்டிப் பாறைகள் தரைக்கு வெளியே சிதறி வீசப்பட்டுக் கிடப்பதையும் காட்டுகின்றன என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி செவ்வாயில் இந்த விண் கல் மோதல் இடம்பெற்றுள்ளது. செவ்வாயின் தரை ஆழத்தில் நில அதிர்வுகள் மற்றும் அசைவுகளை ஆய்வு செய்து வருகின்ற “இன்சைட்” என்ற கலமும் (InSight landing module) செவ்வாயின் புவியியல்தோற்றம், காலநிலை தொடர்பான ஆய்வுகளில் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் “Mars Reconnaissance Orbiter” செயற்கைக் கோளும் அனுப்பிய தரவுகள், படங்கள் மூலமே அங்கு நிகழ்ந்துள்ள இந்தப் பெரும் அதிர்வு பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன.

பூமி அதிர்வு போன்று செவ்வாயில் நில அதிர்வுகள் (Marsquake) அடிக்கடிப் பதிவாகுவது வழமை என்றாலும் அங்கு மனித ஆராய்ச்சிகள்தொடங்கிய பிறகு நிகழ்ந்துள்ள பெரும் அதிர்வு இது என்று நாசா பதிவு செய்துள்ளது. விண் பாறை மோதிய இடத்தில் சுமார் 150 மீற்றர்கள் அகலமும் 21 மீற்றர் ஆழமும் கொண்ட பெரும் பள்ளத்தாக்கு உருவாக்கியிருப்பதாக நாசா மதிப்பிட்டுள்ளது. தரையின் உள்ளே இருந்து தெறித்துப் பறந்துள்ள பொருள்களில் வெண் நிறத்தில் பனிக்கட்டிப் பாறைகளும் நாசா வெளியிட்ட படங்களில் காணப்படுகின்றன.

அதிக வெப்பம் நிலவுகின்ற துருவ – பூமத்திய ரேகைப் பகுதியில் தரையின் ஆழத்தில் இருந்து பனிக் கட்டிகள் வெளிவந்திருப்பது செவ்வாய்க் கோளின் தரைத் தோற்றம், காலநிலை தொடர்பான மர்மங்களில் இதுவரை அறியப்படாத பல புதிய தகவல்களை வெளிக்கொண்டுவர உதவும் என்று
நம்பப்படுகிறது.

மிகுந்த வெப்பமான பகுதியில் பனிக் கட்டி கண்டறியப்பட்டிருப்பது “ஆச்சரியம்” அளிக்கிறது என்றும் அது
செவ்வாயின் தரையமைப்பு பற்றிய ஆழமான ஆராய்ச்சிகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் நாசா அறிவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பனிக் கட்டி தண்ணீராகவும் ஒக்சிஜனாக(oxygen) அல்லது ஹைட்ரஜனாகவும் (hydrogen) மாற்றப்படக் கூடியது என்பதால்
செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நேரில் சென்று இறங்குவதற்கான முயற்சியில் இது முக்கியமான கண்டுபிடிப்பு என மற்றொரு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.

தாஸ்நியூஸ் – பாரிஸ்.

 

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் களமிறங்குவதை தடுக்க சதியா?

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான பல இரகசிய ஆவணங்களை எடுத்து சென்றாதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பில் அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் , கடந்த 8 ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் இரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கைப்பற்றப்பட்டவை ரகசிய ஆவணங்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் உரிய தகவல் தெரிவிக்காமல் தனது வீட்டில் சோதனை நடத்திய விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு எதிராக புளோரிடா நீதிமன்றத்தில் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் நோக்கங்களுக்கானது என்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தனது வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்கள் மீதான நீதித்துறையின் விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் அறுவர் பலி – 30 பேர் காயம்! சுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் பயங்கரம்!!

அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் சுதந்திர தின அணிவகுப்புகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹைலண்ட் பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு அந்நாட்டு நேரப்படி நேற்றுக் காலை 10 மணிக்கு தொடங்கியது.

அப்போது, சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்டிருந்த ஒருவர் கூட்டத்தினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திய கொலையாளியான 22 வயதான இளைஞன் ஒரு மணி நேரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்க உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை ரத்துச் செய்து தீர்ப்பளிப்பு

அமெரிக்காவில் கடந்த பல வாரங்களாக சூடுபிடித்திருந்த கருக்கலைப்பு உரிமை தொடர்பான விவகாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய தீர்ப்பு ஒன்றை நாட்டின் உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது.

கருக்கலைப்புக்கு அரசமைப்பு ரீதியாக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக்குள் தலையிட்டிருக்கின்ற நீதிமன்றம், சுமார் 50 ஆண்டுகள் சட்டரீதியாக்கப்பட்டிருந்த பெண்களது கருக்கலைப்பு உரிமைக்கு ஆப்பு வைக்கும் வகையில் அதனை ரத்துச் செய்து அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பின் படி மாநிலங்கள் விரும்பினால் இனிமேல் கருக்கலைப்பு உரிமையைத் தம் விருப்பப்படி தடைசெய்யலாம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் பல மில்லியன் கணக்கான பெண்களது கருக்கலைப்பு
உரிமையைப் பறித்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைவாசி மாநிலங்கள் தத்தமது கருக்கலைப்புச் சட்டங்களில் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் செய்வதற்குத் தயாராகிவருகின்றன.

13 மாநிலங்களில் கருக்கலைப்புச் சட்டங்கள் காலாவதியாகின்றன. தீர்ப்பை அடுத்து நாட்டில் கருக் கலைப்பு “சட்டவிரோதமானது” என்று அமெரிக்கச் சட்டமா அதிபர் அறிவித்திருக்கிறார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு 1973 இல் “Roe v. Wade” என்று அழைக்கப்படும் பிரபல கருக்கலைப்புத் தொடர்பான ஒரு வழக்கில் கருவுற்ற பெண்களுக்கு அதனைக் கலைக்கும் உரிமையை வழங்குவதை அரசமைப்பில் சேர்க்கும் விதமான வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதற்கு முன்பு அமெரிக்க அரசமைப்பில் தனி மனித உரிமைகள் தொடர்பான எந்தப் பிரிவுகளிலும் கருக்கலைப்பு உரிமை இடம்பெற்றிருக்கவில்லை.

கருக்கலைப்பு உரிமை அரசமைப்பில் பாதுகாக்கப்பட்டிருந்த நிலையிலும் அமெரிக்க சமூகத்தில் அது தொடர்பானபிளவுகளும் விவாதங்களும் நீடித்தேவந்தன. கருக் கலைப்பு வயது, கருவின்காலம், மதம், பாரம்பரியம் சார்ந்த நெறிகள் எனப் பல விதமான முரண்பாடுகளுடனேயே கருக்கலைப்புச் சட்டங்கள் அங்கு மாநிலத்துக்கு மாநிலம்வேறுபாடாக நடைமுறைப்படுத்தப்படு கின்றன.

ஐந்த தசாப்தங்கள் கழித்து இப்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு பெண்களின் கருக்கலைப்பு உரிமையை அரசமைப்புச்சட்ட ரீதியாக அன்றி மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகளால் தீர்மானிக்கப்படுகின்ற அரசியல் விவகாரம் போன்று மாற்றிவிட்டுள்ளது.

இதனால் நாட்டில் இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் பிளவுகள் மேலும் வலுப்பதற்கான வழி அகலத் திறக்கப்பட்டுள்ளது. நாடெங்கும்புதிதாகப் போராட்டங்களை நடத்த பெண் உரிமை இயக்கங்கள் தயாராகி வருகின்றன.

தீர்ப்பு நாடெங்கும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் உருவாகிவருகின்றன. தீர்ப்பு வெளியாகி சில மணிநேரங்களுக்குள்ளாகவே அதிபர் ஜோ பைடன் அது தொடர்பாக விசேட உரையாற்றவுள்ளார் என்ற அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து வெளிவந்துள்ளது.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

நிலைதடுமாறி கீழே விழுந்த அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார். தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன் சென்றுகொண்டிருந்த போது அங்கு நின்று கொண்டிருந்த மக்களைப் பார்த்ததும் பேசுவதற்காக சைக்கிளை நிறுத்தினார். அப்போது, நிலைதடுமாறி ஜோ பைடன் கீழே விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் உடனே எழுந்த ஜோ பைடன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் ஜோ பைடனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. எந்தவித மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என தெரிவித்துள்ளது.
…….

தரையிறக்க கட்டுப்பாட்டில் கோளாறு ஏயார் பிரான்ஸ் விமானம் அருந்தப்பு!

நியூயோர்க்கில் இருந்து பாரிஸ் வந்த ‘ஏயார் பிரான்ஸ்’ ‘போயிங்’ விமானம் ஒன்று பாரிஸ் விமான நிலையத்தில்
தரையிறங்கிய சமயத்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கும் சமயம் அதன் தரையிறக்கக் கட்டுப்பாடு செயலிழந்த தாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் ஜோன் எப் கென்னடி (John-Fitzgerald-Kennedy Airport) விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை பாரிஸ் றுவாஸி விமான நிலை யத்தில்(Roissy-Charles-de-Gaulle) இறங்கிய “போயிங் 777” (Boeing 777) விமானமே பெரும் விபத்தில் இருந்து தப்பியிருக்கிறது.

பொதுவாக விமானங்கள் தரையிறங்கும் சமயத்தில் ஏற்படுகின்ற கோளாறுகளின் போது விபத்துக்கான வாய்ப்புகள்
அதிகம்.

விமானிகளுக்கும் கட்டுப்பாட்டு நிலை யத்துக்கும் இடையிலான உரையாடல் களில் விமானி பதற்றமடைந்து பேசிய வீடியோக் காட்சி ‘யூரியூப்’ தளத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 200 அடி உயரத்தில் பறக்கையில் அதன் தரையிறங்கும் தொழிற்பாடு கட்டுப்பாட்டை இழந்ததில் விமானம் இறங்கவேண்டிய திசைக்கு எதிராக இடப்பக்கமாகத் திரும்பியுள்ளது.

விமானி தனது மிகையான முயற்சியால் (managed to overshoot) விமா னத்தை அது ஏனைய விமானங்களுடன் மோதுவதைத் தவிர்ப்பதற்காக விமான நிலையத்தின் மறு பக்கத்தில் உள்ள மற்றொரு ஓடு பாதையில் அவசரகட்டத்
தரையிறக்கத்தை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் சிவில் விமானப் பாதுகாப்புப் பகுப்பாய்வுப் பணியகம் (Bureau of Investigation and Civil Aviation Safety Analysis – BEA) விசாரணைகளைத் தொடக்கியுள் ளது.

ஏயார் பிரான்ஸ் நிறுவனத்தின் இந்தபோயிங் விமானம் 17 ஆண்டுகளுக்குமுன்பு சேவையில் சேர்க்கப்பட்டது என்றும் அது போன்ற விமானங்களுக்குப்பதிலாக தற்சமயம்”ஏயார் பஸ்-350″ ரக விமானங்கள் பதிலீடு செய்யப்பட்டு வரு
கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மான்களுக்குஒமெக்ரோன் வைரஸ் தொற்று

கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து உலகம் விடுபடத் தொடங்கியுள்ள போதிலும் புதிய வைரஸ் பிறழ்வுகள் பற்றிய அச்சம் இன்னமும் நீடிக்கவே செய்கிறது.

நியூயோர்க்கில் பரவலாகக் காணப்படுகின்ற வெள்ளை வால் மான் இனங்களில் ஒமெக்ரோன் தொற்றுக்கள் இருப்பதை ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மான்களும் ஏனைய காட்டு விலங்குகளும் புதிய திரிபுகளை உருவாக்கமுடியும் என்று நம்புவதற்கான ஒரு சான்று இது என்று நிபுணர்கள் அச்சம்கொண்டுள்ளனர்.

பென் பல்கலைக்கழக அறிவியலாளர்களும் (Penn State University), லோவா மாநில இயற்கை வளத் திணைக்கள ஆராய்ச்சியாளர்களும்(Iowa Department of Natural Resource) இணைந்து வெள்ளை வால் இன மான்களில் (white-tailed deer) வைரஸ் பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். அது தொடர்பான முதற்கட்ட பூர்வாங்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நூற்றுக் கணக்கான மான்களில் பரிசோதனை நடத்தப்பட்டது.அவற்றில் மூன்றில் ஒரு பங்கு மான்களின் உடல் திசுக்களில்ஒமெக்ரோன் வைரஸ் தொற்றுக்கான உடல் எதிர்ப்புத் தூண்டல்கள் அவதானிககப்பட்டுள்ளன.

‘நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையின்தகவலின் படி, மான்களில் வைரஸ் நீண்டகாலம் – பரந்துபட்ட அளவில் – பரவுவதுஅவற்றில் புதிய மாறுபாடுகள்(mutate)உருவாக அதிக வாய்ப்பாக அமையலாம்அதன் மூலம் தோன்றக் கூடிய புதிய வைரஸ் திரிபுகள் ஏனைய காட்டு விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது – என்று தெரிவிக்கப்படுகிறது.

விலங்குகள் மனிதர்களைப் போன்றுபரிசோதனைக்கு உள்ளாகுவதில்லை.அவற்றில் காணப்படுகின்ற திரிபுகள்சோதனைக்குள் பிடிபடாமல் (unchecked) நீண்டகாலம் மறைந்து பரவிப் புதிய மரபு மாற்றங்களை உருவாக்குவதற்கு அது வாய்ப்பாகும் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் முப்பது மில்லியன் வெள்ளை வால் மான்கள் உள்ளன.வீட்டு வளர்ப்பு விலங்குகளைப் போலஅன்றி அவை கூட்டமாக வாழ்வதால்அவற்றில் வைரஸ் வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன்அவை மனிதருக்கு நெருக்கமான பகுதிகளில் நடமாடுகின்றன. எதிர்காலத்தில் அவற்றில் தோன்றக்கூடிய புதிய ஆபத்தான திரிபுகள் மனிதருக்குத் தொற்றுவ தற்கான ஏதுநிலை அதிகமாக உள்ளது.

எலிகள், காட்டு அணில்கள், காட்டுப் பூனைகள், மிங் விலங்குகள் போன்றவற்றின் வரிசையில் மான்களும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகக் கூடிய தன்மை வாய்ந்த விலங்கினமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

குமாரதாஸன். பாரிஸ்

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் – இருவர் கைது!

அமெரிக்க ஜனாதிபதி பைடனுக்கு கொலை அச்சறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Ryan Matthew Conlon, 37, Ryan Merryman, 37, ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

Ryan Matthew மேரிலாண்டிலிருந்து வாஷிங்டனுக்கு செல்லும் வழியில் பொலிஸார் அவரை விசாரித்த போது தான் ஜனாதிபதியை சந்திப்பதற்காக வாஷிங்டனுக்கு செல்வதாக கூறியுள்ளார். அத்துடன் தான் கடவுளால் வழங்கப்பட்ட ஒரு புத்தகத்தை ஜனாதிபதியிடம் வழங்கப்போவதாக கூறியுள்ளார். முன்னதாக புலனாய்வாளர் ஒருவர் அவரை விசாரித்த போது “நாட்டின் இதயத்தில் உள்ள பாம்பின் தலையை அறுக்குமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஒரு உணவகத்தின் முன்னால் இவர் சிறிய ரக தொலைநோக்கி ஒன்றுடன் வெடிமருந்தையும் வைத்திருந்ததை புலனாய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

மற்றவர் வெள்ளை மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், தேசிய புலனாய்வு உத்தியோகத்தர்களை சுட்டுகொல்லப்போவதாகவும் தகவல் அனுப்பியிருந்தார்; இவர் நீதிமன்ற விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது தொலைபேசி இலக்கம் முகநூல் என்பவற்றை வைத்தே பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர். உரிய அதிகாரியின் அனுமதியின்றி இவர் இணையத்தை பாவிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.தான் ஆத்திரத்தில் அந்த மிரட்டலை விடுத்ததாக அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மற்றவரின் வழக்கு விசாரணை திங்கட்கிழமை நண்பகல் இடம்பெறவுள்ளது.

‘வாக்களிப்பு இயந்திரங்களை கையகப்படுத்துமாறு ட்ரம்ப் கட்டளை’ – அம்பலமானது அதிர்ச்சி தகவல்

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும் வாக்களிப்பு இயந்திரங்களை கையகப்படுத்துமாறு உயர் இராணுவ தளபதி ஒருவருக்கு உத்தரவிட்ட விடயம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான செய்தியை AFP வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணம் அமெரிக்க தேசிய சுவடிகள் காப்பகத்திலிருந்து சில அரசியல்வாதிகளால் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆவணத்தில் கையொப்பமிடப்படவில்லை.

2020ம் ஆண்டு டிசம்பர் 20ம் திகதி இந்த ஊழகல்களைப்பற்றி விசாரிப்பதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு இந்த ஆவணங்களை வெளியிட வேண்டாமென ட்ரம்ப் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்த பின்னர் அந்த குழு 750 ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

உடனடியாக வாக்களிப்பு இயந்திரங்களிலுள்ள சகல தகவல்களையும், இலத்திரனியல் வடிவில் உள்ளதையும் கையகப்படுத்தி தக்க வைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்புச்செயலருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டதாக அந்த மூன்று பக்க ஆவணம் கூறுகிறது.

வாக்களிப்பு இயந்திரங்களில் ட்ரம்பின் செல்வாக்கு செலுத்தப்பட்ட விடயம் அமெரிக்க காங்கிரஸ் புலனாய்வாளர்கள் மற்றும் வலதுசாரி சட்டத்தரணி சிட்னி பௌல் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

‘125 கொடிய விஷப் பாம்புகளுக்கு மத்தியிலிருந்து சடலம் மீட்பு’ – நடந்தது என்ன?

ந. பரமேஸ்வரன்

125 கொடிய விஷ பாம்புகளுக்கு மத்தியிலிருந்து நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தைச்சேர்ந்த சார்ள்ஸ் கண்டி என்ற 49 வயது நபரே இவ்வாறு 125 கொடிய விஷப்பாம்புகளின் மத்தியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்தவரின் அயல்வீட்டுக்காரர் கடந்த புதன்கிழமை இரவு இவரது நடமாட்டத்தை ஒரு நாள் முழுவதும் காணவில்லையென பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரது வீட்டுக்குச்சென்ற போது அவர் சுய நினைவற்ற நிலையில் நிலத்தில் கிடந்துள்ளார்.

பொலிஸ் தீயணைப்பு சேவையினர் வீட்டை அடைந்த போது 14 அடி நீளமான மலைப்பாம்பு, நாகம் உட்பட 125 விஷப்பாம்புகள் அவரைச்சுற்றியிருப்பதை அவதானித்தனர். இவரை கொலை செய்யும் நோக்குடன் இந்த சம்பவம் இடம்பெறவில்லையென தெரிவித்துள்ள பொலிஸார் ,சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தப்பிரதேசத்திற்குரிய விலங்கு கட்டுப்பட்டு அதிகாரிகள் அனைத்து பாம்புகளையும் பிடித்து பைகளில் போட்டுச்சென்றனர்.

ஆயிரக்கணக்கான பொதிகளை பதுக்கிய அமேஷன் ஊழியர்கள் மூவர் கைது!


வீட்டிற்குள் ஆயிரக்கணக்கான பொதிகளைப் பதுக்கிய அமேஷன் தொழிலாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் அமெரிக்காவின் ஓக்லஹோமா கவுண்டி (Oklahoma County) என்ற நகரில் இடம்பெற்றுள்ளது. அந் நகரின் ஷெரிப் அலுவலகம், கடந்த புதன்கிழமை இச்செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிடுள்ளது.
இப்பகுதியில் சட்டவிரோதமான பொருட்கள் பதுக்கப்படுவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் – நீதிமன்றத்தின் ஆணைபெறப்பட்டு இத்தேடுதல் நடத்தப்பட்டது.
தேடுதலின் போது சுமார் 600 வெற்று அமேஷன்; பொதிகள் வீட்டுக்கு வெளியே கொட்டப்பட்டிருந்தன. வீட்டின் விறாந்தப்பகுதியில் ஆயிரக்கணக்கான பிரிக்கப்படாத அமேஷன் பொதிகள் காணப்பட்டன. வீடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாத பொதிகளே காணப்பட்டன என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூன்று பேரில் இருவர் சட்டவிரோத குடியேறியவர்கள். இவர்களில் கியூபாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் அமேஷன் மூன்றாம் தரப்பு ஓட்டுநராக பணியாற்றிவர். ஆதாவது அமேஷனின் நேரடி ஊழியர் அல்லர்.கியூபாவில் இருந்து சட்டபூர்வமாக குடியேறிய மற்றையவர் டிரக்கை பயன்படுத்தி பொதிகளை விநியோகித்து வந்தார்.இவர்கள் மூவரும் பல இடங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியவற்றை ஒருமித்து இத்திருட்டில் ஈடுபட்டுள்ளமை அதிகாரிகளால கண்டுபிடிக்கப்பட்டது.
கிறிஸ்மஸ் தினத்திற்குக்குள் வழங்கப்படவேண்டிய பொருட்களையே இவர்கள் திருடியுள்ளனர் எனவும் கைப்பற்றப்பட்ட பொதிகளை அமேஷன் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் கையாடல் செய்தல் உட்பட 15 குற்றங்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்கை எதிர்கொள்ளவுள்ளனர்.

கடதாசிப்பெட்டிக்குள் இருந்து கைக்குழந்தை மீட்பு

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நான்கு நாட்களுக்கு முன்னர் கைகுழந்தையொன்று கடதாசிப்பெட்டிக்குள் உறைபனிக்குள்ளிருந்து ஆரோக்கியமான நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ துருப்புகள் அந்தப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது குழந்தையை கண்டெடுத்துள்ளனர். குழந்தை மீட்கப்பட்ட போது அப்பகுதியின் வெப்பநிலை -12 பாகைக்கும் குறைவகவே இருந்துள்ளது.

குழந்தையின் அருகில் எனது பெற்றோரிடமோ தாத்தா பாட்டியிடமோ பணம் இல்லை என்னை எடுத்துச்சென்று அன்பாக என்னை கவனிக்கக்கூடியவர்களிடம் ஒப்படையுங்கள் என்ற வாசகம் காணப்பட்டுள்ளது என ஒரு பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு பின்னர் அகற்றப்பட்டு விட்டது. ஆனால் குழந்தையை கண்டெடுத்த துருப்புகள் குழந்தையை கவனிப்பதற்கு ஒருவருமில்லை என்ற வாசகமே காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள Health Partners என்ற அறக்கட்டளை குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது. குழந்தையைப்பற்றிய தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ளுமாறு ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணுசக்திக் கப்பலை கட்டளையிடும் முதல் அமெரிக்க பெண்


அமெரிக்காவின் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலை கட்டளையிடும் அதிகாரியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கிக் கப்பலுக்கு கட்டளையிடும் அதிகாரியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டது.


கேப்டன் ஆமி பௌரன்ஷ்மிட், ஒன்பது மாத பயிற்சிகளுக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை மேற்கு பசிபிக் கடலில் கடமையில் ஈடுபட்டிருக்கும் யுஎஸ்ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கும் அணுசக்திக் கப்பலுக்கே கட்டளை அதிகாரியாக சென்றுள்ளார்.
சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், தென் சீனக் கடல் மற்றும் பசிபிக் முழுவதிலும் அமெரிக்கஇந்த போர்க்கப்பல் பயணித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் அசுர புயல் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

ந. பரமேஸ்வரன்

வெள்ளிக்கிழமை சூறாவளி தாக்கிய அமெரிக்காவின் ஆறு மாநிலங்களிலும் குறைந்தது 83 பேர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூறு வரை இருக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் 70 பேர் மெழுகுதிரி தொழிற்சாலையில் கடமையாற்றியவர்கள்.

மேபீல்ட் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஜேம்ஸ் கோமர் இவ்வளவு மோசமாக சூறாவளி தாக்கியது இதுவே முதல் முறை என கூறியுள்ளார். மாநிலத்திலுள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் இருந்து 60 பேர் மீட்கப்பட்டுள்ள அதே வேளை  60 பேர் காணாமல் போயுள்ளனர்.

மெழுகுவர்த்தி தொழிற்சாலை இடிபாடுகளுக்குள் சிக்கிய முனகியவாறு  முகநூல் ஊடாக அபயக்குரல் எழுப்பிய ஊழியர் ஒருவரை மீட்புக்குழுவினர் மீட்டெடுத்துள்ளனர். ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாகவே தங்கள் கருதியதாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். 365 கிலோமீட்டர் நீளத்திற்கு சூறாவளி தாக்கியுள்ளது. எனது பாட்டன் பாட்டியின் வீடு இருந்த இடம் தெரியாமல் காணப்படுகிறது; அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லையென ஒருவர் கூறியுள்ளார்.

காணாமல் போனவர்கள் எத்தனை பேர் என்பது இன்னமும் தெரிய வரவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமேசன் களஞ்சியசாலை ஊழியர்கள் ஆறு பேர் இறந்துள்ளனர்; தனது இதயமே நொருங்கி விட்டதாக .அமேசன் நிறுவுனர் தெரிவித்துள்ளார் அவசரகாலநிலை பிரகடனத்தில் ஒப்பமிட்ட பைடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் உட்பட தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேவையான நிதியையும் விடுத்துள்ளார்.

கருகலைப்பு தொடர்பான விவாதம் அமெரிக்காவில் சூடுபிடிப்பு

ந. பரமேஸ்வரன்

கருகலைப்பு தொடர்பான விவாதங்கள் அமெரிக்காவில் சூடு பிடித்துள்ளன.

15 வாரங்களான கருவை கலைப்பதற்கு தடை விதிக்குமாறு மிஸிஸிப்பி மாநில நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தினால் வருகிற ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இது கோடிக்கணக்கான பெண்களின் கருக்கலைக்கும் உரிமையை பாதிக்கும் என மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க சட்டப்படி ஒரு பெண்ணுக்கு முதல் மூன்று மாதங்களில் கருவை கலைப்பதற்கு பூரண உரிமையுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் கலைப்பதற்கு மட்டுப்படுத்தப்பட்ட உரிமையுள்ளது.
1973 முதல் இந்த சட்டம் அமுலில் உள்ளது.

இப்போது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களின் பின்னர் இந்த திருப்பகரமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தகவல்களின் படி மிஸிஸிப்பி மாநிலத்தில் இடம்பெறும் 15 வாரங்களான சட்டவிரோத கருக்கலைப்புகள் பாலியல் வல்லுறவின் மூலமும் குடும்ப உறவுகளின் துஷ்பிரயோகத்தாலுமே இடம்பெறுகின்றன.

2018ம் ஆண்டு மிஸிஸிப்பி மாநில நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு இப்போது உயர்நீதிமன்றத்தின் கைகளில் உள்ளது.

அமெரிக்காவில் மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது; மிஸிஸிப்பி மாநிலத்தைதொடர்ந்து ஏனைய மாநிலங்களும் கருக்கலைப்பு தொடர்பாக மிஸிஸிப்பி மாநில சட்டத்தை விட கூடுதலான சட்டங்களை இயற்றவுள்ளன.

சட்டமா அதிபர் இறுதித்தீமானம் அமெரிக்க மக்களினதும் அதிகாரிகளினதும் கைகளிலேயே உள்ளது என தெரிவித்துள்ளார்.
திட்டமிடப்பட்ட குடும்ப சுகாதார நலன் பேணும் அமைப்பு புதிய சட்டத்தின் மூலம் கருத்தரிக்கும் ஆற்றல் கொண்ட 18.49 வயதுடைய 36 மில்லியன் பெண்கள் தமது கருக்கலைக்கும் உரிமையை இழந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவையும் தாக்கியது ஒமிக்ரோன்

உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வான ‘ஒமிக்ரோன்’ வைரஸ் அமெரிக்காவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22 ஆம் திகதி அமெரிக்கா வந்தவருக்கே கடந்த 29 ஆம் திகதி இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர், கொரோனா தடுப்பூசிகளை முழுஐமயாக செலுத்திக்கொண்ட நபர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வு, தற்போது 28ற்கும் அதிகமான நாடுகளுக்குள் பிரவேசித்துள்ளது.