விடுமுறைக்காக வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றவருக்கு நேர்ந்த கதி!

டுபாயில் தொழில் புரிந்த நிலையில் இலங்கைக்கு சென்ற நபர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு மாத கால விடுமுறையில் இலங்கை திரும்பி தனது வீட்டில் பொழுதைக் கழித்தவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி, பிரதேசத்தைச் சேர்ந்த தவராசா தற்பரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேற்று 17 பிற்பகல் அவரது மனைவி சுகந்தினியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

இவர், செவ்வாய்க்கிழமை ஆயித்தியமலை, ஆறாம்கட்டையிலுள்ள தனது வயலுக்குச் சென்றுவிட்டு அன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் வவுணதீவு வீதியினூடாக தனது வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முற்பட்டுள்ளார்.

அவ்வேளையில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் சடுதியாகத் திரும்பியதால் அதில் மோதுண்டு பின்னர் வீதி மருங்கிலிருந்த கொங்கிறீட் கட்டு ஒன்றுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.

மரணித்தவர் கடந்த மாதம் 19ஆம் திகதியே துபாயிலிருந்து ஒரு மாத விடுமுறையில் நாடு திரும்பியிருந்தார் என்றும் அவர் மீண்டும் திங்கட்கிழமை துபாய் செல்லவிருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆயித்தியமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புரட்டிப்போட்ட கனமழை! மனதைக் கரைய வைத்த குழந்தையின் புகைப்படம்…!

பீகார் மாநிலத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம், வெள்ளத்தின் கோர முகத்தை காட்டியுள்ளது.

பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத பெரு மழை பெய்து வருகிறது. அசாமில் மட்டும் மழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

30 மாவட்டங்களைச் சேர்ந்த 40 லட்சம் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

அசாமின் பிரசித்தி பெற்ற காசிரங்கா பூங்காவின் 90 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் அசாமில் உள்ள போபிதோரா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 அசாமில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது. (Image: PTI)

2004-ம் ஆண்டுக்கு பிறகு மிகமோசமான வெள்ளத்தை அந்த உயிரியல் பூங்கா சந்தித்துள்ளது. மாநிலம் முழுவதும் 26 தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 காசிரங்கா தேசிய பூங்காவில் பெய்த இடைவிடாத பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து  100-க்கணக்கான காண்டாமிருகங்கள் இடம் பெயர்ந்தன. (Image: PTI)

அசாமை விட பீகாரில் நிலமை கடும் மோசமாக உள்ளது. சமீபத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அம்மாநிலம் மீளாத நிலையில், தற்போது வெள்ளம் கடும் பாதிப்புகளை கொடுத்துள்ளது.

 பிரம்மபுத்ரா ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. (Image: PTI)

மழை வெள்ளத்திற்கு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் 13 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மேலும் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 அசாமிற்கு நிவாரண நிதியாக முதற்கட்டமாக 251 கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது. (Image: AP)

மழை வெள்ளத்தின் கோர முகத்தை காட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகி கல் மனதையும் கரைய வைத்துள்ளது. முசாபர்பூர் பகுதியில் உள்ள ஷீடால்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரானி தேவி, தனது 4 குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் வழக்கத்தைவிட அதிகமான தண்ணீர் சென்றுள்ளது.

 கவுகாதியில் வெள்ள நீரில் தனது துணிகளை துவைக்கும் ஒருவர். (Image: AP)

அப்போது, எதிர்பாராத விதமாக 3 வயது அர்ஜுன் என்ற குழந்தை ஆற்றில் தவறவே, காப்பாற்றும் நோக்கத்தில் பதறிப்போய் தாயும் ஆற்றில் குதித்துள்ளார். தாய் குதித்ததைப் பார்த்த மற்ற 3 குழந்தைகளும் ஆற்றில் குதித்துள்ளன.

 பிரம்மபுத்ரா ஆற்றின் குறுக்கே படகு மூலமாக செல்லும் கிராம மக்கள். (Image: PTI)

உடனே, சுதாரித்துக்கொண்ட அருகில் இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி ரானி தேவி மற்றும் 1 குழந்தையை காப்பாற்றினர். எனினும், 3 குழந்தைகளை தண்ணீர் அடித்துச் சென்றது. இந்நிலையில், குழந்தை அர்ஜுனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது.

 அகர்தலாவில் இருந்து வெளியேறும் மக்கள். (Image: PTI)

அர்ஜுனின் சடலத்தின் புகைப்படம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் அர்ஜுனின் புகைப்படத்தை பதிவிட்டு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் கடலில் கடிதத்துடன் மிதந்து வந்த போத்தல்! சிறுவன் எடுத்த அதிரடி நடவடிக்கை

அவுஸ்திரேலியாவில் கடலில் கடிதத்துடன் மிதந்து வந்த போத்தல் சிக்கிய கடிதம் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜியா எலியட் என்கிற சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய அப்பா பால் உடன் மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்து வந்துள்ளது. அந்த பாட்டிலுக்குள் ஒரு குறிப்புடன் கூடிய கடிதம் எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் பிரித்தானியாவை சேர்ந்த 13 வயது சிறுவனால் 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

மேற்கில் ஃப்ரீமாண்டில் இருந்து கிழக்கில் மெல்போர்ன் வரை தெற்கு அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒரு கப்பல் பயணத்தில் இருந்த 13 வயது சிறுவனின் பயணத்தை பற்றி அந்த குறிப்பு விவரிக்கிறது.

இப்போது ஜியா, பால் கில்மோர் எனப்படும் கடிதத்தின் உரிமையாளரான 63 வயது பிரித்தானியரை பேஸ்புக் மூலம் தீவிரமாக தேடி வருகிறார்.

இதுகுறித்து அவுஸ்திரேலிய அரசாங்க கடல்சார் ஆய்வாளரான டேவிட் கிரிஃபின் கூறுகையில், தென் கடற்கரையிலிருந்து 50 ஆண்டுகளாக இந்த பாட்டில் மிதந்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் “கடல் ஒருபோதும் நிலைத்திருக்காது”. நிச்சயமாக இந்த பாட்டில் கடற்கரை மணலில் புதைந்திருக்கும். பின்னர் மீண்டும் ஏற்பட்ட புயலால் கடலில் மிதக்க ஆரம்பித்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடலில் அதிகபட்சமாக 2 வருடங்கள் மட்டுமே எந்த பொருளாக இருந்தாலும் மிதக்கும். அதன்பிறகு கரையில் ஒதுங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 1960களில் லட்சக்கணக்கான பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தனர். அவுஸ்திரேலியா அரசாங்கம் அவர்களின் கட்டணங்களுக்கு மானியம் வழங்கியது. குழந்தைகள் இலவசமாக பயணம் செய்தனர்.

ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பை அவுஸ்திரேலியா பூர்த்தி செய்யாததால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்களில் பாதிபேர் பிரித்தானியாவிற்கே மீண்டும் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

பெராரி கார் இவ்வளவு தானா? வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்

மெக்ஸிகோவில் பெராரி, லம்போகினி போன்ற உயர் ரக கார்களை மிக குறைவான விலைக்கு விற்ற நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் இளைஞர்களால் மிகவும் விரும்பப்படுகிற, அதே நேரத்தில் சாதரன ஆட்களால் வாங்க முடியாத விலைக்கு விற்கப்படுபவை பெராரி மற்றும் லம்போகினி நிறுவன கார்கள்.

அமெரிக்க இளைஞர்களுக்கே அது கனவு என்னும்போது மெக்ஸிகோவில் சொல்லவும் வேண்டுமா. மில்லியன்களில் விற்கப்படும் இந்த கார்களை தொட்டு பார்ப்பதே அதிசயம்.

அப்படிப்பட்ட கார்களை குறைவான விலைக்கு விற்றால் யார்தான் வாங்காமல் இருப்பார்கள். மெக்ஸிகோவில் க்ளாண்டஸ்டைன் பேக்டரி என்ற இடத்தில் குறைவான விலையில் (உண்மை விலையிலிருந்து 25%) ஃபெராரி, லம்போகினி ரக கார்களின் புதிய மாடல்கள் விற்கப்பட்டிருக்கின்றன.

நிறைய பேர் அதை வாங்கி ஆசை ஆசையாய் ஓட்டி சென்றுள்ளனர். அதை தனது நண்பர்களிடம் காட்ட அவர்களும் ஆர்வமாய் அந்த கார்களை அந்த பேக்டரியில் இருந்து வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வளவு குறைந்த விலையில் கார்கள் விறகப்படுவது தெரிந்த மெக்ஸிகன் பொலிஸார் உடனடியாக அந்த பேக்டரியை சோதனையிட்டனர். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. அந்த கார்கள் ஃபெராரி, லம்போகினி கார்களே இல்லை. மெக்கானிக்கான தந்தை, மகன் இரண்டு பேர் சேர்ந்து கார் பாகங்களை கொண்டு தாங்களாக உருவாக்கியது.

உண்மையான கார்களுக்கும், இவர்கள் உருவாக்கிய கார்களுக்கும் இடையே 10 சதவீதம்தான் வித்தியாசம் தெரியும் என்கிற அளவுக்கு பக்காவாக செய்திருக்கிறார்கள். அவர்களிடம் கார்கள் வாங்கிய யாருக்கும் இது உண்மையான ஃபெராரி இல்லை என்ற சந்தேகமே வரவில்லையாம். அவர்களை கைது செய்த போலீஸார் அங்கு கிட்டதட்ட முடிக்கப்பட்டிருந்த 8 போலி கார்களையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இந்து ஆலயங்கள் உள்ள இடத்தில் விகாரைகள்! ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் உறுப்பினர்கள்

இந்து ஆலயங்கள் இருக்கும் இடங்களில் பலவந்தமாக பௌத்த விகாரைகளை அமைக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்து ஜனாதிபதியுடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவசர சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கின்றனர்.

அமைச்சர் மனோகணேசனின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்த விபரங்களை அமைச்சர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்கு வழங்கினார்.

அதேநேரம், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே நேற்றையதினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இதுதொடர்பாக கலந்துரையாடி இருந்தனர்.

இதன்அடிப்படையில் இன்றையதினம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தில் இனி படங்கள் எடுக்கலாம்! வெளியாகிய மகிழ்ச்சியான அறிவிப்பு

Garuda Airlines நிறுவனம் தனது விமானத்தினுள் படமெடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மீட்டுக்கொண்டுள்ளது.

விமானத்தினுள் பயணி ஒருவர் நிறுவனத்தைக் கேலி செய்யும் விதத்தில் படங்கள் எடுத்து இணையத்தில் பதிவிட்டார். நிறுவனம் அதைத் தொடர்ந்து விமானத்துக்குள் படமெடுக்கத் தடை விதித்தது.

தடை குறித்த விவரம் இணையத்தில் வேகமாகப் பரவியது. அதை எதிர்த்து இணையவாசிகள் குரல் எழுப்பினர்.

சமூக ஊடகத்தில் செல்வாக்குக் கொண்ட ரியுஸ் வெர்னாண்டஸ் (Rius Vernandes) என்ற நபர் Garuda விமானத்தின் முதல் பிரிவில் சொகுசுப் பயணம் செய்தார். அப்போது, கையால் எழுதப்பட்ட, என்னென்ன உணவு வழங்கப்படும் எனக் கூறும் பட்டியலை விமானச் சிப்பந்தி கொடுத்ததாகக் கூறினார்.

அது இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, விமான நிறுவனம் அதற்கு விளக்கமளித்தது.

பின்னர், விமானத்தில் படங்கள் எடுக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கை சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

விமானப் பயணங்களில் ‘selfie’ எடுத்துப் பதிவு செய்வது பரவலாக பிரபலமாகிவருகிறது. இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு உலகளவில் மக்களின் எதிர்ப்பு வலுத்தது.

அதனைத் தொடர்ந்து, ‘படம் எடுக்கலாம்; ஆனால் சக பயணிகள், சிப்பந்திகள் ஆகியோரின் தனியுரிமையை மதிக்கும் அளவில் படங்களை எடுக்கவேண்டும்’
என்ற கொள்கைக்கு Garuda நிறுவனம் மாற்றியது.

விமானப் பயணங்களில் படங்கள் எடுப்பது குறித்த கொள்கை, நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகிறது.

 

இயர்போன் பயன்படுத்திக் கொண்டு உறங்கிய இலங்கையருக்கு நேர்ந்த கதி!

கையடக்க தொலைபேசிக்கு இயர்போன் அணிந்துக் கொண்டு உறங்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் களுத்துறை, பன்னிவல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆனந்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாழும் அவர் உறங்கிக் கொண்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக வெளியாகிய தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

களுத்துறை பொலிஸார் மரணம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த நபர் கையடக்க தொலைபேசிக்கு இயர்போன் அணிந்துக் கொண்டு உறங்கியமையே இந்த மரணத்திற்கு காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 9 பேர் பரிதாபமாக பலி

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற மினி வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் உள்ள ஏமப்பேர் என்கிற இடத்தில், இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதவிர, விழுப்புரம், சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்குக்கு 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

உத்திரமேரூரில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், காங்கேயத்தில் மின் கம்பம் நடும் பணிகளுக்காக சென்றபோது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. மேலும் பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரன் தென்காசியைச் சேர்ந்தவர் என்பதும், மினி வேன் ஓட்டுநர் மணிகண்டன் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றிய அடையாளம் இதுவரை எதுவும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த விபத்து வேன் ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

காரிலிருந்து திடீரென இறங்கிய 15 அடி நீளப்பாம்பினால் ஏற்பட்ட பரபரப்பு!

அமெரிக்காவில், சாலையோரம் நின்றிருந்த காரிலிருந்து ஜன்னல் வழியாக வெளியேறிய 15 அடி நீளம் பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

கொலரடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகர் சாலையில், கார் ஒன்றில் அதன் உரிமையாளராக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, கார் கண்ணாடி வழியாக 15 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று காரிலிருந்து வெளியேறியது.

இதனை கண்டு அதிர்ச்சியுடன் காருக்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் குடிபோதையில் உறங்கிக்கொண்டிருந்தார். இதையடுத்து காரில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக டுவிட்டரில், பாம்பின் புகைப்படத்துடன் டுவிட் செய்திருந்த தீயணைப்பு துறையினர், வாகனஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும், குறிப்பாக செல்லபிராணியான பாம்பு உள்ளிட்ட விலங்குகளுடன் பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைய சென்றவர்களின் பரிதாப நிலைமை!

அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் சுமார் 7500க்கும் மேற்பட்டவர்களின் அகதி விண்ணப்பங்கள், குறித்து தகவல்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த விணக்கப்பங்கள் தொடர்பில் ஐந்து வருடங்களாக முடிவெடுக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாக,

“கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த சுமார் 30 ஆயிரம் அகதிகளின் மனித உரிமைகள் குறித்த தனது அறிக்கையிலேயே ஆணைக்குழு மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளது.

குறித்த 30 ஆயிரம் பேரில் 22,280 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கான பதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய 7526 பேரின் விண்ணப்பங்களே இவ்வாறு முடிவெடுக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக அகதி விண்ணப்பங்கள் குறித்து முடிவெடுக்கப்படாமலும் வதிவிட உரிமைக்கான விசா அனுமதிகள் வழங்கப்படாமலும் வாழ்ந்துவருகின்ற மக்கள் குறித்து பொதுமக்களின் கரிசனை மிகக்குறைவாக உள்ளது.

இந்த அகதிகளுக்கான அரச உதவிகள் மற்றும் மருத்துவ அனுசரணைகளும்கூட குறைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது விசா நிலை காரணமாக வேலை எடுத்துக்கொள்வதும் கடினமாக இருக்கிறது.

இவர்களிடையே காணப்படும் மொழிப்பிரச்சினையும்கூட தொழில் முனைப்புக்கு தடையாக உள்ளது. இத்தகையதொரு வறிய நிலையில் இந்த அகதிகளின் மன உளைச்சல் மேலும் அதிகமாகியிருக்கின்றது.

இதன் விளைவாக இந்த அகதிகள் தற்கொலை ஆபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் இவ்வாறான ஒன்பது அகதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது இந்த அகதிகளின் நம்பிக்கையீனத்தின் உச்சமாகும்.

ஆனால், குறிப்பிட்ட அகதிகளின் தாய்நாட்டில் நிலவும் சூழல் முன்பைவிட தற்போது மாற்றமடைந்திருப்பதால், இவர்களது விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருப்பதாக உள்துறை அமைச்சு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

15 கோரிக்கைகளை முன்வைத்த முஸ்லிம் எம்.பிக்கள்! ரணில் வழங்கிய ஒருவார அவகாசம்

தங்களால் முன்வைக்கப்பட்ட 15 கோரிக்கைகளுக்கும் பதில் வழங்கும்வரை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லை என்று உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களை அடுத்து பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின்படி நேற்று முன்தினம் 07 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிகளை ஏற்கவிருந்தனர். இதற்கான ஏற்பாடுகளையும் ஜனாதிபதி செயலகம் செய்திருந்தது.

எனினும் இறுதிநேரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள், அவர்களிடம் 15 விதமாக கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக, குருநாகலை போதனா வைத்தியசாலை மருத்துவர் மொஹமட் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் திரிபுபடுத்தப்பட்டு வேறு வழிகளில் இடம்பெற்று வருவதை இந்த சந்திப்பின்போது அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த வைத்தியர் பௌத்த சிங்களத் தாய்மார்களுக்கு சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்காக அவர் கைது செய்யப்படாமல், மாறாக சொத்துக்களை வைத்திருந்தமைக்கான ஆதாரங்களை நிரூபிக்கத்தவறிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் பலவிதத்திலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாக இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மருத்துவர் ஷாபி விடயம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினருடைய கேள்விக்குறியாக உள்ள பாதுகாப்பு விவகாரம் மற்றும் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் உள்ளிட்ட 15 விதமாக கோரிக்கைகளை பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வைத்திருக்கின்றனர்.

இந்த கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட்டால்தான் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கப்போவதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அழுத்தமாக கூறியதாக முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனின் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

எனினும் முதலில் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் இந்தக் கோரிக்கைகளை ஆராய்ந்து தீர்வு பெறுவோம் என்ற பிரதமரின் கோரிக்கையையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை தொடர்புகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குறித்த கோரிக்கைகளுக்கு இன்னும் ஒருவாரத்தில் தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட மகனை 30 வருடங்களாக தேடியலைந்த தாய் பரிதாபமாக மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தாயார் ஒருவர், மகனைக் காணாமலேயே மரணமடைந்துள்ளார்.

1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே உயிரிழந்தார். முதுமை காரணமாக இவர் உயிரிழந்தார்.

இவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார். எனினும், தனது மகனைக் காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கேப்பாப்பிலவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் வியாழம்மாவுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கழிப்பறைத் தொட்டியில் புதிய சாதனை படைத்த நபர்!

சாதனை படைக்கும் முயற்சியில் சுமார் 5 நாட்கள் இடைவிடாமல் கழிப்பறைத் தொட்டியில் செலவிட்டார் பெல்ஜிய நபர் ஒருவர்.

மதுபானக் கூடத்தில் கழிப்பறைத் தொட்டியை வைத்து அங்கேயே தொடர்ந்து அமர்ந்திருந்தார். 116 மணிநேரத்துக்குப்பின் சாதனை முயற்சியைக் கைவிட்டார் 48 வயது ஜிம்மி டி ஃப்ரென் (Jimmy De Frenne).

165 மணிநேரம் அவர் கழிப்பறைத் தொட்டிமீது அமர்ந்து சாதனை படைக்கத் திட்டமிட்டார்.

அதிகநேரம் அமர்ந்திருந்ததால் அசதியாக இருந்ததுடன் கால்களும் வலித்ததாகக் கூறினார் டி ஃப்ரென்.

ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை அவர் ஐந்து நிமிடம் ஒய்வெடுத்தார்.

இதற்குமுன் 100 மணி நேரம் கழிப்பறைத் தொட்டியில் அமர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. டி ஃப்ரென்னின் முயற்சியை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் முதலையை உயிரோடு விழுங்கி பரபரப்பை ஏற்படுத்திய மலைப்பாம்பு..!

அவுஸ்திரேலியாவில், ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று, பெரிய அளவிலான முதலையை கடித்து விழுங்கும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள இஸா (isa) மலையில், மார்டின் முல்லர் என்பவர், வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தபோது இந்த அரிய வகை காட்சியை பதிவு செய்துள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலியா பகுதிகளில் அதிகளவு காணப்படும் ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று நீர்நிலையோரம் படுத்திருந்த முதலை ஒன்று, சத்தமின்றி நகர்ந்து வந்து சுற்றுவளைப்பதும், பின் முதலையின் உடலை இறுக்கி அதன் எலும்புகளை நொறுக்கி விட்டு, சகதியோடு அதனை அப்படியே வாய்க்குள் விழுங்கவும் முயற்சிக்கிறது.

இந்த காட்சிகளை தைரியமாக படம் பிடித்த மார்டின் முல்லர், இவ்வகை மலைப்பாம்புகள் 13 அடி நீளம் வரை வளரக்கூடியது என்றும், மனிதர்கள், மான்கள் என எதையும் விழுங்கும் அளவிற்கு அதன் தாடைகள் ரப்பர் போல் நெகிழும் தன்மையயுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=Sj1V_GkRiCQ

 

https://www.facebook.com/GGwildliferescueinc/photos/a.1031779743612140/2105205379602899/?type=3&theater

ஆணுக்கு நடந்த ’கருப்பை” அறுவை சிகிச்சை! மருத்துவ உலகில் நடந்த விசித்திரம்

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் நபருக்கு, பெண்பால் இனவிருத்திக்கான கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத்தன்மையுடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நபரின், அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புகள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. இந்த அரிதான நோயின் பெயர் ”பெர்சிஸ்டண்ட்முல்லெரியன் டக்ட் சிண்ட்ரோம்’” (Persistent Mullerin Duct Syndrome) .

இந்த சிகிச்சையை குறித்து பேசிய மருத்துவர்கள், இந்த அரிதான நோயுடன் கூடிய 200 நபர்களை பார்த்துள்ளதாகவும், அதை தொடர்ந்து இந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் உதவி கோரி வியக்க வைத்த மீன்! வைரலாகும் வீடியோ

தனது கண்ணுக்குக் கீழ் சிக்கிக் கொண்ட கொக்கிகளை அகற்ற, மீன் ஒன்று மனிதர்களிடம் உதவி கோரும் அபூர்வ வீடியோ ஒன்று வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் Ningaloo வளைகுடாவுக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்லும் Jake Wilton, தண்ணீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரும் கூட. அப்படி அவர் தண்ணிருக்குள் செல்லும்போது manta ray என்னும் ஒருவகை மீன் ஒன்று மீண்டும் மீண்டும் அவரருகே வந்திருக்கிறது.

வழக்கமாக அப்பகுதியில் புகைப்படம் எடுப்பவர் என்பதால், Wiltonக்கு அந்த மீன் அவருக்கு பழக்கமான Freckles என்ற பெயர் கொண்ட மீன் என்பது தெரியவந்துள்ளது.

Freckles மீண்டும் மீண்டும் அவரருகே வரவே, அதற்கு ஏதோ பிரச்சினை என்பதை அறிந்து கொண்ட Wilton அதன் அருகில் சென்று பார்த்திருக்கிறார்.

அப்போதுதான் அதன் கண்ணுக்கடியில் கொக்கிகள் மாட்டிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார் Wilton.

வெளியாகியுள்ள, மகாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றுடன் முடியும் அந்த வீடியோவில், Freckles, Wilton மற்றும் அவரது சகாக்களிடம் உதவி கோருவதைக் காணலாம்.

அந்த கொக்கிகள் அகற்றப்படாவிட்டால் அந்த மீன், நோய்த்தொற்று ஏற்பட்டு இறந்து விடலாம் என்பதால் அந்த கொக்கிகளை அகற்ற முயன்றிருக்கிறார் Wilton.

ஆனால் ஆழ் கடல் நீந்துபவர்களால் அதிக நேரம் தண்ணீருக்குள் இருக்க முடியாது என்பதால், Wilton அடிக்கடி தண்ணீர்ப்பரப்புக்கு மேலே வந்திருக்கிறார்.

Wiltonஉடன் வந்த படகிலிருந்த Halls என்பவர் கூறும்போது, Wilton தனக்கு உதவப்போகிறார் என்பது அந்த மீனுக்கு தெரிந்திருக்கிறது, அதனால்தான், அவர் பல முறை தண்ணீர் மட்டத்திற்கு மேல் வந்தும், அந்த மீன் அதே இடத்திலேயே அசையாமல் நின்றுகொண்டிருந்திருக்கிறது என்கிறார்.

பல முறை முயன்றும் Frecklesஇன் கண்ணுக்கடியில் இருந்த கொக்கிகளை எடுக்க முடியாத நிலையில், கடைசியாக ஒரு முறை தண்ணீரில் குதித்த Wilton, எப்படியோ அந்த கொக்கிகளை வெற்றிகரமாக அகற்றிவிட்டார்.

Wilton அகற்றப்பட்ட அந்த கொக்கிகளுடன் தண்ணீர் பரப்புக்கு மேலே வந்து மகிழ்ச்சியுடன் போஸ்கொடுக்கும் புகைப்படத்தையும் காணலாம்.

மீன் ஒன்று மனிதர்களிடம் உதவி கோரிய அந்த அபூர்வ சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.youtube.com/watch?v=35yTn-GWZqo

அவுஸ்திரேலியாவில் விச வாயு தாக்குதல்? செத்து மடியும் அரிய வகை பறவைகள்

அவுஸ்திரேலியாவில் பல பறவைகள் வீழ்ந்து மரணித்துள்ளமைக்கு விச வாயு தாக்குதல் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய மீட்பு பணியாளர்கள் குறித்த சந்தேகத்தினை வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான அடேலைட் நகரின் விளையாட்டு மைதானத்துக்கு அருகில் ஏறக்குறைய 57 இற்கும் அதிகமான கொரில் இன பறவைகள் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பறவை இனமானது பாதுகாக்கப்படும் அரியவகை இனங்களில் ஒன்றாக காணப்படுவதால் இது தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்தது.

குறித்த பறவைகள் பறக்க முடியாமல் மைதானத்தின் தரைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும், சில பறவைகள் வாய் வழியே இரத்தம் வெளியேறி இறந்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக அவுஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா சார்பான விசாரணைக்குழு இது பற்றி தெரிவிக்கையில் குறித்த பறவை இனங்களின் இறப்புக்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும், ஆனாலும் இவை நச்சுப்பரவல் காரணமாக இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா செல்லும் வழியில் உயிர்விட்ட யாழ் இளைஞனின் பரிதாப நிலைமை!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்க எல்லைப்பகுதியான பனாமா பிரதேசத்தில் சேற்றுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவர் ஊடாக அமெரிக்கா செல்ல முயற்சித்த இளைஞர்களில் ஒருவரே, பனாமாவின் ஏரி சேற்றுப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த பீ.சுதர்ஷன் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பனாமா ஏரி பிரதேசத்தில் நடை பயணத்தை மேற்கொண்ட இவர், சேற்றுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பனாமா வைத்தியசாலைக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதி பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிட்னியில் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்! பலமுறை கத்தியால் குத்தப்பட்ட கொடூரம்

சிட்னியின் மேற்கு பகுதியில் இளைஞர் ஒருவர் பல முறை மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

17 வயதான இளைஞர் ஒருவரே பாரிய காயங்களுடன் அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு வெளியே மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அவரது உடலின் மீது பல முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அவரது தலை, கழுத்து மற்றும் முதுகு பகுதியில் தொடர்ந்து பல முறை குத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் இளைஞனின் உடலில் இருந்து பாரிய அளவு இரத்தம் வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆபத்தான நிலையில் இளைஞன் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியா உட்பட நாடுகளில் இருந்து இலங்கை செல்வோருக்கு….!!

அவுஸ்திரேலியா, உட்பட 39 நாடுகளின் பயணிகளுக்கு வருகை தரும் விசாவை (On Arrival Visa) இலங்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது.

கடந்த மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவிருந்தது.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக அது பிற்போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கம்போடியா, ரஸ்யா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்ரோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிறிஸ், அங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லட்டிவியா, லித்வேனியா, லக்சம்பேக், மோல்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரொமேனியா, ஸ்லோபேனியா, ஸ்பெயின், சுவீடன், ஐக்கிய இராஜ்ஜியம், அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸ்லாந்து, மலேசியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கைக்கான வருகைத் தரும் விசா (on arrival visa) பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.