அப்பிள் பிளே ஸ்டோர் பக்கத்தின் முதல் பட்டியலில் இடம்பிடித்த கோத்தபாய!

அப்பிள் பிளே ஸ்டோர் பக்கத்தில் முதல் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச முதலிடத்தைப் பிடித்திருக்கின்றார்.

இலங்கையில் பிரபலம் வாய்ந்த தேடுபொருள் அல்லது அதிகமாக தேடப்பட்ட நபர்களின் பெயர் பட்டியலை அப்பிள் நிறுவனத்தின் அப்பிள் பிளே ஸ்டோர் வெளியிட்டுள்ளது.

யாழ். வேம்படி மகளீர் உயர் தரப் பாடசாலை அதிபருக்கு வெடிகுண்டு மிரட்டல்!

யாழ். வேம்படி மகளீர் உயர் தரப் பாடசாலை அதிபருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையின் முன்னாள் அதிபர் வேனுகா சண்முகரத்தினத்தின் பெயர் குறிப்பிட்டு குண்டு வெடிக்கும் எனக் தெரிவித்து இந்த அநாமதேயக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

வேம்படி மகளீர் உயர் தரப் பாடசாலையின் அதிபரான வேனுகா சண்முகரத்தினத்திற்கு விலாசமிடப்பட்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குறித்த அதிபர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் தற்பொது புதிய அதிபர் கடமையில் இருக்கின்றார்.

ஆகவே முன்னாள் அதிபர் ஓய்வு பெற்றுள்ளதை அறிந்திருந்த தபால் திணைக்கள உத்தியோகத்தர் முன்னாள் அதிபரின் வீடு அமைந்துள்ள கொக்குவில் பகுதிக்குச் செல்லும் தபால் உத்தியோகத்தரிடம் குறித்த கடிதத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இதற்கமைய அந்தப் பிரதேசம் செல்லும் தபால் உத்தியோகத்தரும் குறித்த கடிதத்தை முன்னாள் அதிபரின் வீட்டிற்குச் சென்று கொடுப்பதற்கு இன்று காலை முனைந்த போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் வீட்டின் முன்பக்கமாக வைத்துவிட்டு வந்துள்ளார்.

இதன் பின்னர் இன்று மதியம் தனது வீட்டிற்கு வந்த முன்னாள் அதிபர் தனது வீட்டின் முன்பக்கத்தில் இருந்த தனக்கு வந்த கடிதத்தை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் தனது பெயர் குறிப்பிட்டு வெடி குண்டு மிரட்டல் வந்திருப்பதை அறிந்து கொண்ட முன்னாள் அதிபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதீவு செய்துள்ளார்.

இதே வேளை இக் கடிதத்தில் திகதிகள் எவையுமோ அல்லது எங்கிருந்த யாரால் அனுப்பபட்டது என்ற விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. அதே நேரம் ஒரு அநாமதேயக் கடிதாமாகவே இக் கடிதம் அனுப்பட்டும் இருக்கின்றது. ஆகையினால் இக் கடிதம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் நால்வர் திடீர் கைது!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா வெந்நீரூற்று பகுதியில் ஸ்கேனர் இயந்திரத்துடன் நான்கு பேரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (30) இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு செல்ல முற்பட்ட கார் ஒன்றினை சோதனையிட்டபோது அதில் இருந்து பூமியின் தாழ்வை பரிசோதிக்கும் ஸ்கேனர் இயந்திரம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த காரில் பயணித்த சாரதி உட்பட 4 பேரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 மற்றும் 46 வயது உடையவர்கள் எனவும் மினுவாங்கொடை, அக்குரஸ்ஸ மற்றும் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 4 பேரையும் இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக தெரிவித்தனர்.

( அப்துல்சலாம் யாசீம்)

யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த மகேஸ் சேனாநாயக்கா!

இம்முறை ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்கா யாழில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கி உள்ள மகேஸ் சேனாநாயக்க தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய நேற்றைய தினம் பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாஜுடீனின் படுகொலை! நீதிமன்றத்தின் உத்தரவு

கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை அடுத்தவருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் இன்று முற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2012ஆம் ஆண்டில் கொழும்பு நாரஹேன்பிட்டி சாலிக்கா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கருகிய நிலையிலிருந்த காரிலிருந்து பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் சடலம் மீட்கப்பட்டது.

இதுவொரு விபத்து என்று அப்போது கூறப்பட்ட போதிலும், 2015ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கத்தினால் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது தாஜுடீனின் மரணம் ஒரு கொலை என்று தெரியவந்த நிலையில், விபத்திலேயே அவர் உயிரிழந்ததாக ஆவணப்படுத்திய கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர, சாட்சியங்களை மறைத்ததாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்றபோது, சந்தேக நபருக்கு எதிரான குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்றும், தாம் ஒரு நிரபராதி எனவும் பேராசிரியர் ஆனந்த சமரசேகர மன்றில் தெரிவித்தார்.
இதன்போது பேராசிரியர் ஆனந்த சமரசேகரவுக்காக முன்னிலையாகிய சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப் பத்திரிகையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்று வாதிட்டார்.

இருந்த போதிலும் பேராசிரியர் ஆனந்த சமரசேகர சார்பாக முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை நீதவான் நிராகரித்தார். குற்றப்பத்திரிகையில் உள்ளவற்றை திருத்தியமைக்க சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதவான் மஞ்சுல திலகரத்ன, குற்றச்சாட்டுக்கள் திருத்தியமைக்கப்படாவிட்டால் சந்தேக நபர் விடுதலைப் பெறுவார் என்றும் கூறினார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையாகிய பிரதி சொலிசிடர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க, முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை திருத்தியமைப்பதாக மன்றிற்குத் தெரியப்படுத்தினார்.

இதற்கமைய, திருத்தியமைக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை சந்தேக நபர் முன்னிலையில் மன்றில் வாசித்துக்காட்டப்பட்டது.
இதனையடுத்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வட, கிழக்கு தமிழர்களிடம் இராதாகிருஷ்ணன் விடுக்கும் கோரிக்கை!

வட, கிழக்கு தமிழர்கள் மீண்டும் வரலாற்று தவறை செய்து விட கூடாதென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணி ஆகியன ஏற்பாடு செய்த தேர்தல் கலந்துரையாடலின் பின்பு ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் வைத்தியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த வேலை நிறுத்தம் திட்டமிட்ட அடிப்படையில் அரசியல் நோக்கத்தை கொண்டதாக இருந்திருக்கின்றது. அதற்கு சிறந்த உதாரணம் அரச மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள் கோட்டபாய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு மேடையில் வீற்றிருந்தது. இது ஒரு அரசியல் போராட்டம் என்பதை உணர முடிகின்றது.

மக்களின் உயிர்களை பணயம் வைத்து இவ்வாறு நடந்து கொள்வது உண்மையான போராட்டங்களை இழிவுப்படுத்தும் ஒரு செயலாகவே கருத வேண்டியிருக்கின்றது. எனவே இதனை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் கீழ்மட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை புரிந்து கொள்ள கூடிய ஒரு ஜனாதிபதி உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

அந்த அடிப்படையில் நீண்ட காலத்திற்கு பின்பு ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு உட்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி வெற்றியின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கினால் சஜித் வெற்றி உறுதி செய்யப்படும். அந்த முடிவும் வெகுவிரைவில் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மலையக இளைஞர்கள் யுவதிகளுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு வெளிமாவட்டங்களில் தொழில் புரிகின்றவர்களுக்கு தங்களுடைய இடங்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு தேவையான விடுமுறைகளை பெற்றுக்கொடுக்க தேர்தல் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் அவரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 102 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 102 வாக்களிப்பு நிலையங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெற உள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் இராணுவம் விமானப்படை கடற்படை ஆகியோருக்கு 52 நிலையங்களில் வாக்களிப்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளையும்,

மாவட்டத்திலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு 50 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட உதவி தேர்தல் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கு கிளிநொச்சி மாவட்டம் 8 வளையங்களாக பிரிக்கப்பட்டு 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு 292 தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமையாற்றும் வகைகள் ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் (31,01) இடம்பெறும் என மாவட்ட உதவித் தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது.

எனக்கு வாக்களியுங்கள்! சிவாஜிலிங்கம் விடுக்கும் வேண்டுக்கோள்

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் உங்களுக்கு நாங்கள் வாக்களிக்க தயாாில்லை என்பதை காட்டுவதற்காகவே தமிழ் தேசிய சிந்தனையுடன் எனக்கு வாக்களியுங்கள் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத் து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

இன்று தபால்மூல வாக்களிப்பு தொடங்கின்றது. இந்த சந்தா்ப்பத்தில் நான் தமிழ் மக்களுக்கு கூற விரும்புவது ஒன்று மட்டுமே. ஒரு தமிழன் இலங்கையில் ஜனாதிபதி ஆவது கனவிலும் கூட நடக்காத ஒன்று. ஆனாலும் கூட நான் எதற்காக தோ்தலில் நிற்கிறேன்? என பலா் கேட்டுள்ளனா், கேட்ககூடும். வடக்கில் உள்ள அரசிய ல் தரப்புக்கள், சமூக செயற்பாட்டாளா்கள், சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளா்

ஒருவரை நிறுத்துவது தொடா்பாக பேசினாா்கள். ஆனாலும் அந்த முயற்சி இறுதியில் தோல்வியடைந்தது. அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே நான் இந்த தோ்தலில் போட்டியிடுகிறேன். இப்போது நான் ஒரு குறியீடு மட்டுமே. இன்று தோ்தலில் போட்டியிடும் இரு பிரதான வேட்பாளா்கள் தமிழ் மக்களின் அடிப்ப

டை அரசியல் அபிலைஷைகளையும், அடிப்படை கோாிக்கைகளையும் நிராகாித்துள்ள நிலையில் நாங் கள் அவா்களை நிராகாிக்கிறோம். என்பதை சிங்கள தேசத்திற்கும், சா்வதேச சமூகத்திற்கும் காட்டுவத ற்கான வரலாற்று வாய்ப்பாக எனக்கு அளிக்கும் வாக்கை நீங்கள் கருதுங்கள். தமிழ்தேசிய சிந்தனை

யுடன் அதற்காக எனக்கு வாக்களியுங்கள். நான் ஒரு குறியீடாக உங்கள் முன்னால் நிற்கிறேன். மேலும் சிவாஜிலிங்கம் தோ்தலில் இருந்து விலகிவிட்டாா் என பிரச்சாரம் செய்கிறாா்கள்.

மேலும் சஜித் பிறேமதாஸ மற்றும் கோட்டாபாய ராஜபக்சவின் ஆதரவாளா்கள் தங்களுடைய வேட்பாளருக்கும் சிவாஜிலிங்கத்திற்கும் வாக்களியுங்கள். என கூறுகிறாா்கள். இது மக்களை குழப்பும் செயல் என்பதுடன், மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கவேண்டும். 2ம் வாக்கு, 3ம் வாக்கு என்பது பயனற்ற ஒன்று. 1ம் வாக்கை எனக்கு வழங்குங்கள்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னா் ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாa ராஜபக்சவுக்கு ஜனாதிபதி, பிரதமருக்கு வழங்குவதை காட்டிலும் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

விசேடமாக யாழ்.மாநகரசபையின் தீயணைப்பு வாகனம், யாழ்.மாநகரசபை மற்றும் யாழ்.போத னா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிகள் பிரச்சார நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது? நாங்கள் கேட்டாலும் அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தருவீா்களா? எனவும் கேள்வி எழுப்பினாா்.

கிண்ணியாவில் றிஷாட் பதியுதீன் கூறியது என்ன?

இந்த நாட்டில் கடந்த காலங்களில் நமது நிம்மதியை இல்லாமல் செய்த கூட்டம் இன்று சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்காக வேறு தோரணையில், வேறு சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (30) அப்துல்லாஹ் மஹ்ரூபின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கிண்ணியா மற்றும் மூதூர் தொகுதி மக்களிடம் வேண்டுவது எங்களுடைய வாக்குகளை சீரழித்துவிடாதீர்கள் என்று.

இன்று ஒருவர் பள்ளி பள்ளியாக ஏறி அழைகிறார் ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் என்று அப்படி ஒரு வேட்பாளர் இந்த நாட்டுக்கு தேவை இல்லை. ஜனாதிபதி வேட்பாளர் இருவருக்கு இடையில் தான் போட்டி நிலவுகின்றது. சஜித் பிரேமதாசவா அல்லது கோட்டபாய ராஜபக்சவா என்று இந்த கோட்டபாய ராஜபக்சவுடன் நிற்பவர்கள் யார்? இனவாதிகளும் மதவாதிகளும் இந்த நாட்டில் எமது நிம்மதியை தொலைத்து கடந்த பத்துவருடமாக நிம்மதியாக வாழவிடாமல் எங்களுடைய நிம்மதியை தொலைத்த கூட்டம்தான் இன்று அவருடைய வெற்றிக்காக அலைந்து தெரிகிறார்கள்.

எனவே அவருக்கு வாக்கு சேர்ப்பதற்காக சஜித் பிரேமதாசவுடைய வாக்கை சிதறடிப்பதற்காக இவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக வேறு ஒரு தோரணையில் வேறு ஒரு சின்னத்தில் எமது சமூகத்தின் சீரழிப்பதற்கான சதி நடந்துகொண்டு இருக்கிறது இந்த சதியை நாங்கள் அறிந்துகொள்ளவேண்டும்..

பணத்திற்கு நாங்கள் சோரம்போய்விடக்கூடாது இன்று பள்ளி பள்ளியாக ஏறி வெளிநாட்டு அரபிகளின் பணம் இங்கு கொண்டுவரப்பட்டு நமது சமுதாயத்தை ஏமாற்றுகின்ற நாடகம் நடந்துகொண்டு இருக்கின்றது இந்த நாடகத்திற்கு நாங்கள் ஒருபோதும் துணைபோய்விடக்கூடாது..

அதேபோல் இன்னுமொரு அணி மூன்றாவது தரப்புக்கு வாக்குக்கேட்டு அழைகிறார்கள் அவர்கள் சொல்லுகிறார்கள் இவர் நல்லவர் அவருக்கு வாக்கு போடுங்கள் என்று அவருக்கும் இவருக்கும் போட்டியாக இருந்தால் அல்லது கோட்டாவுக்கும் அவருக்கும் போட்டியாக இருந்தால் பரவா இல்லை போட்டி சஜித் பிரேமதாசவுக்கும் கோட்டாவுக்கும் தான் எனவே சஜித் பிரேமதாசவுக்கு அளிக்காது வேறு எவருக்கும் அளிக்கும் வாக்குகளும் அது எமது வேட்பாளரை தோற்கடிப்பதற்கான சதி என்பதை இந்த சமூகம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சில உலமாக்கள், சில அறிவாளிகள்,சில புத்திஜீவிகள் என்று சொல்லுகின்றவர்கள் கூட இவ்வாறான சதியின் பின்னால் இருந்து செயற்படுகிறார்கள் எனவே அன்பு சகோதரர்களே இங்கு முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று எல்லோரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள் ஏன் இருக்கிறார்கள் சமுதாயத்திற்காக இருக்கிறார்கள்.பல கட்சிகள் பலகொள்கையோடு பல காரணங்களுக்காக பல மேடைபோட்டு பேசியவர்கள் இன்று ஒன்றாக இருக்கிறார்கள் என்றால் இந்த சமூகத்தின் மீது இருக்கின்ற பற்றினாள் இந்த சமுதாயத்திற்கு நாளை ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற கோட்பாட்டினால் தான் இன்று எல்லோரும் சஜித் பிரேமதாசவை இன்ஷா அல்லாஹ் வெல்ல வைப்பதற்காக ஒன்று பட்டு இருக்கிறோம்.

எனவே உங்களிடம் அன்பாக கேற்கிறோம். தயவு செய்து வீடுவீடாக சென்று பிரச்சாரத்தை முன்னெடுங்கள் யாராவது ஜாஹிலிய்யத்தில் இருப்பார்களாக இருந்தால்,யாராவது மூன்றாம் தரப்புக்கு நான்காம் தரப்புக்கு அல்லது இனவாதிகளின் தரப்புக்கு ஒருவர்,ஒரு குடும்பம்,சில நூறுபேர்கள் இருப்பார்களாக இருந்தால் அவர்களிடம் சொல்லி மாற்றுங்கள் இந்த வாக்குகள் சீரழிக்கப்படக்கூடாது இந்த வாக்குகள் ஒட்டுமொத்தமாக அளிக்கப்படவேண்டும்.

ஏன் இன்று சிங்கள பகுதிகளில் போய் துவேஷ வார்த்தைகளை,இனவாத கருத்துக்களை,நச்சு விசத்தை இன்று கக்குகிறார்கள் இன்று சிறுபான்மை தலைமைகளின் பெயரை சொல்லி வாக்கு கேற்கின்ற ஒரு ஆபத்தான நிலை பெரும்பான்மை மக்களிடம் வந்துள்ளது.

எனவே நாங்கள் ஒன்றுபட்டு இந்த தேர்தலிலே நமது சமுதாயம் சிறுபான்மை இனம் ஒன்றுபட்டு நாங்கள் நூற்றுக்கு நூரு வீதம் வாக்களிக்கின்றவர்களாக அத்தனை வாக்குகளையும் சஜித் பிரேமதாசவுக்கு செல்லும் வாக்காக அமையவேண்டும் என்றார்.

(அப்துல்சலாம் யாசீம்)

வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கிய சஜித்!

இலங்கையில் நீண்ட காலம் இடம்பெற்ற போரில் பாதிக்கபட்ட குடும்ப உறுப்பினர் என்ற ரீதியில் உங்களின் கவலைகள், கஸ்டங்கள், துயரங்கள் என்பவற்றை நான் அறிந்து கொண்டவனாக இருக்கிறேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற புதிய ஜனநாயாக முன்னணியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்….

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகின்றேன். வவுனியா பிரதேசத்திலே வாழும் அனைத்து மக்களிற்கும் ஒரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் உருவாக்கி தருவதற்கு நான் உங்களிடத்தில் உறுதி பூணுகின்றேன்.இங்கு போரால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் இருக்கிறார்கள். நானும் போரால் பாதிக்கபட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவனாக இருக்கிறேன். போரால் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பாதிக்கபட்ட உங்களின் கவலைகள், கஸ்டங்கள், துயரங்கள் என்பவற்றை நான் அறிந்து கொண்டவனாக இருக்கிறேன்.எனவே சஜித் பிரேமதாச ஆகிய நான் உங்களது கவலை கஸ்டங்களை தீர்த்து வளமிக்கதாக மாற்றுவதில் எப்பொழுதும் பின்னிற்க போவதில்லை. என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

உலக நாடுகளில் போருக்கு பின்னர் சமாதானம் வந்ததும், சர்வதேச ஆதரவாளர்களை அழைத்து சர்வதேச மற்றும் உள்ளக விடயங்கள் தொடர்பாக ஆராய்கின்றனர். உகண்டா போன்ற பல்வேறு நாடுகளில் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன. எமது ஆட்சி வந்ததும் சர்வதேச பிரதிநிதிகளை அழைத்து வடக்கு, கிழக்கு பகுதிகளிலே தனித்தனியாக நிகழ்வுகளை நடாத்தி, சர்வதேச ஆய்வுமையங்களை ஏற்படுத்தி அபிவிருத்தியின் கேந்திர நிலையமாக இந்த பிரதேசத்தை மாற்றியமைப்பேன்.

இந்த நாட்டில் தேர்தல் முடிந்த பின்னர் வாக்களிக்கும் மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத நிலைமை வழமையாகியுள்ளது. ஆனால் என்னுடைய ஆட்சியில் இது ஒழிக்கபடும்.நாட்டில் உள்ள 332 பிரதேச்செயலகங்களிலும் ஜனாதிபதி மையம் ஒன்று உருவாக்கப்படும்.இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் விதமான நிர்வாக கட்டமைப்பை உருவாக்கிதருவேன் என்று உறுதிபூணுகின்றேன்.

இன மத பேதங்களை கடந்து உங்களுடைய பாதுகாப்பு எனது ஆட்சியில் உறுதிப்படுத்தப்படும்.இப்பகுதியில் உள்ள சிறிய மற்றும் பாரிய நீர்த்தேங்கங்கள் புணரமைக்கபட்டு விவசாய உற்பத்தியை அதிகரித்து, உணவு உற்பத்தியை பெருக்குவேன். கிராமந்தோறும் உணவு உற்பத்தி அதிகரிக்கப்படும் போது தேசிய உற்பத்தி அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் அதிகரிக்கும். அந்த அதிகரிப்பின் மூலம் மகிந்த அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளபட்ட கடன்களை திருப்பிச்செலுத்தும் நடவடிக்கையை நாம் முன்னெடுப்பதுடன், இறக்குமதியையும் நிறுத்துவோம். சிறு கைத்தொழில், மீன்பிடி துறைகளை பெருக்கி மக்களது கைகளில் பணப்புளக்கம் உள்ள பொருளாதாரத்தை கட்டி எழுப்புவேன்.

இளைஞர் யுவதிகளிற்காக தொழில்நுட்ப ரீதியான வேலை திட்டம் ஒன்றையும் உருவாக்குவோம். வவுனியாவை உள்ளடக்கிய பாரிய வேலை திட்டம் ஒன்று எமது அரசில் நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும். இங்கு இருக்கும் ஜந்து உள்ளூராட்சி சபைகளையும் மையப்படுத்தி, தகவல் தொழில் நுட்ப வளர்சியை ஏற்படுத்தி டியிட்டல் யுகத்தை உருவாக்குவேன்.நாட்டில் பாரிய கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்படும் வியட்நாம், இந்தியா, கம்போடியா, பங்களாதேஸ் போன்ற நாடுகளில் உள்ள கைத்தொழில் பேட்டைகளை இங்கு நிறுவி அதன் மூலம் இளைஞர்களின் வேலை இல்லா பிரச்சினையை தீர்ப்பேன்.

சமுர்த்தி வேலைதிட்டம் எனது அரசாங்கத்தில் விரிவு படுத்தப்பட்டு.ஏழ்மையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.எனது தந்தையே பாடசாலை சீருடை மற்றும் மாணவர்களிற்கான பகல் போசனம் என்பவற்றை வழங்கினார். அதனை என்னுடைய எதிர்தரப்பு வாதிகள் இடைநிறுத்தினார்கள்.எதிர்வரும்16 ஆம் திகதி நாம் வெற்றிபெற்ற பின்னர் இரண்டு பாடசாலை சீருடைகளும், பாதணிகளும், பகல் போசனமும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

பாலர் பாடசாலை கட்டமைப்பு விரிவு படுத்தப்பட்டு அந்த ஆசிரியர்களிற்கு நிலையான ஒரு சம்பள கட்டமைப்பு அறிமுகப்படுத்தபடும்.பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் பகல் போசனம் வழங்கபடும்.சுகாதாரம்,மற்றும் குடும்ப சுகாதாரம், பாடசாலைகளின் அடிப்படை கட்டமைப்புகள் என்பவற்றை மாற்றி அமைப்போம்,. பெண்களின் உரிமைகளை பாதுகாத்து, இன மத பேதங்களை களைந்து சமூக நல்லிணக்கத்திற்கான விடயங்களை நாம் முன்கொண்டு செல்வதுடன்.ஒழுக்க விழுமியமுள்ள நாட்டை கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம்.

2025 ஆம் ஆண்டு ஆகும் போது நாட்டில் வீட்டுத் தேவை நிவர்த்திசெய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடுகளில் வாழும் யுகம் ஏற்படுத்தப்படும்.எனவே எதிர்வரும் தேர்தலில் எம்மை வெற்றிபெறச்செய்வதன் மூலம் புதிய யுகம் ஒன்றை உருவாக்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மறை மாவட்ட ஆயர் – கனேடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னனுக்கும் (Mr. Devoid McKinnon) இடையில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பின் போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலமை தொடர்பாகவும் குறிப்பாக கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவோயிட் மெக்கின்னு மன்னார் மறைமாவட்ட ஆயரிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.

சிறுபான்மையினருக்கு முக்கிய தகவலை வெளியிட்ட ரவூப் ஹக்கீம்!

இலங்கையில் பிரதான கட்சிகள் மீதான விரக்தியில் மூன்றாம் தரப்புக்கு வாக்களிப்பது பற்றி சிறுபான்மை சமூகம் சிந்திக்க முடியாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) திருகோணமலை, கிண்ணியாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஏப்ரல் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் அச்சுறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல், அவதூறு குற்றச்சாட்டுகள், முஸ்லிம் தலைமைகளுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள் என நாலாபுறங்களிலும் பலவிதமான நெருக்கடிகளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியது.

இத்தகைய இக்கட்டான சூழலுக்கு எமது சமூகத்தை ஆளாக்கிய தரப்பை வெற்றபெறச் செய்வதற்கு நீங்கள் வாக்களிக்கப் போகின்றீர்களா என்று சிந்தியுங்கள். இந்த ஜனாதிபதி தேர்தலானது முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய சவாலான தேர்தல் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

குருநாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளினால் பின்னணியிலிருந்த கும்பல்கள் இப்போது எந்த தரப்பில் சங்கமித்திருக்கின்ற என்று பாருங்கள். இந்த சூழலில் எங்கள் மத்தியில் வேறொரு தெரிவு இருக்கமுடியாது. ஆகவே, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நாங்கள் அனைவரும் ஒருமித்து தெரிவுசெய்த புதிய யுகத்தின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம்.

1988ஆம் ஆண்டு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியான பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தற்போது சஜித் பிரேமதாச களமிறங்கியிருக்கிறார். நாங்கள் இவரை வேட்பாளராக பெயரிட்டமை குறித்து சிறுபான்மை கட்சிகள் என்றவகையில் பெருமை கொள்கிறோம்.

கடந்த அரசாங்கம் தொட்டு இன்றுவரை சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் உத்தரவாதமளிக்கலாம் என்ற திடமான நம்பிக்கையில்தான் நாங்கள் அவருடன் இந்தப் பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.

பிரதான கட்சிகள் மீதான விரக்தியின் அடிப்படையில் சிலர் மாற்றுக்கட்சிக்கு வாக்களிப்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். பிரதான வேட்பாளர்களில் ஒருவர் 50% வாக்குகளை பெறாவிடின், மூன்றாவது வேட்பாளருக்கு அளிக்கப்படும் வாக்குகள் வீணாகிவிடும். சிறுபான்மை சமூகம் இவ்வாறானதொரு தவறை செய்யமுடியாது.

எமது விரக்தியை காட்டுவதற்காக மூன்றாவது வேட்பாளருக்கு வாக்களிப்பது தேர்தல் உக்தியல்ல. இத்தகைய செய்கையினால் தப்பித்தவறியாவது மாற்றுத் தரப்பு வென்றுவிட்டால், நாங்கள் இந்த மண்ணில் அடிமைகளாக வாழ்வதற்கு தயாரா என்பது குறித்து சிந்தித்துக்கொள்ளுங்கள்.

பிரேமதாஸ யுகத்தில் இடம்பெற்ற படுகொலைகள் – அம்பலப்படுத்திய மஹிந்த

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தந்தையின் காலத்தில் ஏழாயிரத்து 652 பேர் படுகொலை செய்யப்பட்டதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை பெற்றிபெறவைக்கும் நோக்கில் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்றைய தினம் மாலை கண்டி – ஹங்குரங்கெத்த பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்தவர்,

தந்தை செய்ததையே தானும் செய்வதாக சஜித் பிரேமதாஸ கூறுகின்றார். ஐயோ அப்படியென்றால் அவற்றை செய்ய வேண்டாம். 88,89களில் பிரேமதாஸவின் யுகத்தில் 7652 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 1416 பேர் கொலை செய்யப்பட்டனர். அங்குரங்கெத்த, வலப்பனை போன்ற பகுதிகளிலும் படுகொலை செய்யப்பட்டவர்கள் இந்தத் தொகையில் உள்ளடங்குகின்றனர். எமது பிரதேசத்திலும் டயர் எரிப்பு மூலம் பலர் கொலை செய்யப்பட்டனர். வெள்ளை வான் குறித்து பந்துல குணவர்தன நேற்று நூல் ஒன்றையும் இதுகுறித்து வெளியிட்டிருந்தார்.

பிரச்சினையை தீர்ப்பதற்காக கொலை செய்த யுகமே அது. அதனால் பிரேமதாஸ யுகத்திற்கு நாங்கள் பயப்படுகின்றோம். பிரேமதாஸவிடம் கேள்வி எழுப்பிய சுயாதீன ஊடகவியலாளரை தாக்கினார்கள். இன்றுவரை அவர் எங்கே என்று தெரியவில்லை. ஆகவே தந்தை செய்ததை விடவும் சஜித் என்ன செய்வார் என்றுதான் அஞ்சுகின்றோம். எனவே கோட்டாபய ராஜபக்சவை நாங்கள் வேட்பாளராக நிறுத்தியது எனது தனிப்பட்ட யோசனை அல்ல. மகாநாயக்க தேரர்கள், கட்சித் தலைவர்கள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலருடனும் பேச்சு நடத்தியே முன்நிறுத்தியிருக்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன முன்னணியுடன் இணைந்து இந்த தேர்தலை எதிர்கொண்டு 60 தொடக்கம் 65 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வோம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.

இதேவேளை, கடந்த காலங்களில் தலதா மாளிகை, ஸ்ரீமகா போதி விகாரை போன்ற தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிந்தாலும் மக்கள் அங்கு செல்வதை தவிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் இனங்களுக்கு இடையில் சந்தேகக் கண்ணோட்டம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.

(03:17- எமக்கு முதலில் நாடு அவசியம். நாடு இல்லாவிட்டால் அல்லது நாடு பிளவுகளுக்கு உட்பட்டிருந்தால் பாதுகாப்பு இல்லாவிட்டால் எமக்கு இருக்கும் பிரச்சினை என்ன? இன்று பாடசாலை, ஆலயங்கள் மட்டுமல்ல, கண்டி தலதா பெரஹரவுக்கும் செல்ல முடியாத நிலைமை உள்ளது. முதற்தடவையாக விகாரைகள், கோவில் மற்றும் ஆலயங்களுக்கு செல்ல அச்சமடைந்த யுகம் இதுதான். 30 வருடமாக போர் நிலவியது. அப்போது தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் அங்கு செல்ல மக்கள் அச்சமடையவில்லை. ஸ்ரீமா போதி மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் மக்கள் அங்கு சென்றனர்.

இருந்தாலும் சஹ்ரானின் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டு அச்சநிலை உருவாகியது. இதற்கு ரணில் – சஜித் தலைமையிலான அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும். அவர்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்பட்டன. தாக்குதல் நடத்தும் நபர்களின் தொலைபேசி இலக்கம், முகவரி, புகைப்படங்கள் கிடைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர் ஒருவருக்கு அவரது தந்தை கூறியிருந்தார் ஆலயம் செல்ல வேண்டாம் என்று. ஆனால் அந்த தகவல் கர்தினாலுக்கு வழங்கப்படவில்லை. 2015ஆம் ஆண்டில் மக்கள் எடுத்த பிழையான தீர்மானத்தினால் நாட்டின் ஸ்திரத்தன்மை, தேசிய பாதுகாப்பு என்பன இழக்கப்பட்டுவிட்டன. அச்சம், சந்தேகமற்ற சூழலை உருவாக்குவதற்காக மக்கள் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

யாழில் நடைபெறும் ஐந்து தமிழ்க் கட்சியின் கூட்டம்!

ஐந்து தமிழ்க் கட்சியின் கூட்டம் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாடாக 13 கோரிக்கைகளை முன்வைத்து இணங்கிச் செயற்பட்டு வருகின்ற கட்சிகளின் கூட்டமே ஆரம்பமாகியுள்ளது.

ஐனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி நிலைப்பாட்டை எடுப்பதற்காக கூடியுள்ள இந்தக் கூட்டத்தில் குறித்த ஐந்து கட்சிகளதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேஷ் சேனாநாயக்கவிற்கு தனேந்திரன் ஆதரவு!

ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் ஆதரவு வழங்கியுள்ளார்.

தேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்ச்சாரத்திற்காக இன்று வருகை தந்தார்.

கொழும்பில் இருந்து புகையிரதத்தில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகேஷ் ஸேநாயக்கவிற்கு புகையிரத நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட்து.

இந்த வரவேற்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் ரெலோ கடசியினை பிரதிநிதுத்துவப் படுத்தும் மாநகர சபை உறுப்பினர் நா.தனேந்திரன் முன்னாள் இராணுவ தளபதிக்கு பொன்னாடை போட்டு வரவேற்றார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்!

தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சேவையையும் மக்களுக்காக செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் வெற்றியின் பின்னர் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தின் கீழ் கல்முனை தெற்கு பிரதேச செயலகம் அதிகாரம் கொண்டதாக தரமுயர்த்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக மட்டக்களப்பு கல்முனை பல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவில் நேற்றைய தினம் மாலை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் ராஜபக்சவினரை சிறையில் அடைப்பது எப்படி என்று சிந்தனை செய்கிறதே தவிர, மக்களுக்கு எந்த விதத்திலும் சேவைகளை செய்வதில்லை என்று சாடினார்.

‘அரசியல் பழிவாங்கலினால் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகிய நாட்டைதான் இன்று நாங்கள் பார்க்கின்றோம். அரசியல் தலைவர்கள் சிறை தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு விதத்திலும் எங்கள் மீதும் பழிவாங்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. விடுதலை செய்யாமல் பல வருடங்களாக பலரும் சிறைதள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு அலையவிடுகிறார்கள்.

பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு செல்லவைக்கிறார்கள். இதோ மாதத்திற்கு ஒருமுறை ராஜபக்சவினரை சிறை தள்ளும்படி கூறியதாக அந்தப் பிரிவின் முன்னாள் பிரதானி கூறுகின்றார். இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் நாட்டிற்கோ மக்களுக்கோ, அல்லது கிராமங்களுக்கோ சேவை செய்யவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கத்தைப் பாதுகாத்து வருகின்றார்கள்.

ஆனாலும் வியாழேந்திரன் எம்முடன் இணைந்தமைக்கு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். விவசாயிகள் பலருக்கும் காணி உறுதிப்பத்திரம் இல்லாததினால் அதனையும் நாங்கள் வழங்குவோம். யுத்தத்தை செய்த நேரத்திலேயே நாட்டின் அபிவிருத்திகளையும் நாம் செய்தோம். இந்த பகுதியில் கல்லடி பாலமும் எங்களால் அமைக்கப்பட்டதாகும்” என்றார்.

தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தமிழ் மொழியிலும் கருத்து வெளியிட்டார். (06:55-08:10)

இதேவேளை இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுவரும் தன்மீதான போலிக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து தன் மீது நம்பிக்கை வைக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

‘இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து பல்வேறு அரச தலைவர்கள் ஆட்சிக்குவந்து பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தாலும் அவற்றை நிறைவேற்றவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கின்றார். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை தெரிவித்திருக்கின்றேன். கடந்த 04 வருடங்களாக தயார் செய்தே இதனை இறுதிப்படுத்தினோம். அனைத்துப் பிரதேசங்களிலும் மக்களின் கருத்துக்களைப் பெற்றே இதனை தயாரித்துள்ளோம். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மக்களை இலக்காகக் கொண்டே இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளோம்.

இப்படியாக மக்களை வாழ்க்கையில் கட்டியெழுப்ப பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. என்னைக் குறித்து எதிரணியினர் பல்வேறு பொய்ப் பிரசாரங்களை உரைத்து வருகின்றார்கள். என்மீது நம்பிக்கை வையுங்கள். இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியை நான் செய்வேன் என்கின்ற நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்கி வழங்குவேன். எனக்கு வழங்கப்பட்ட அனைத்து கடமைகளையும் நான் சரிவர நிறைவேற்றியுள்ளேன். அதேபோல நான் வழங்கிய உறுதிமொழிகளையும் சரிசர நிறைவேற்றியுள்ளேன். அதன்படியே நான் இன்று வழங்கிய உறுதிகளையும் நிறைவேற்றுவேன். நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றித்தாருங்கள். நான் எனது கடமையை சரியாக நிறைவேற்றிக் காண்பிப்பேன்” என்று கூறினார்.

ஆயுதப்போராட்டத்தில் ஆரம்பத்தில் ஈடுபட்ட போராளி நான்!

ஆயுதப்போராட்டத்தில் ஆரம்பத்தில் ஈடுபட்ட போராளிகளில் நானும் ஒருவன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று புதுக்குடியிருப்பில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப்போராட்டத்தில் ஆரம்பத்தில் ஈடுபட்ட போராளிகளில் நானும் ஒருவன் நான் அப்பவே வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம் மக்களுடன் இருக்கவேண்டும் நாங்களும் தமிழ்மக்களின் பிரச்சனைக்கு ஏதோஒரு காரணம் என்ற தார்மீகபொறுப்பு நாங்கள் ஆயுதம் தூக்கியது மக்களுக்கு ஒளிமயமான வாழ்வினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு.

எங்கள் வாழிமுறைகள்தான் தோற்றுப்போயுள்ளதே ஒளிய மக்கள் தோற்கவில்லை மக்களுக்கு நிகழ்காலம் எதிர்காலம் தொடர்பில் ஒரு நம்பிக்கையினை ஊட்டுவது சரியான வழியினை காட்டும் விதத்தில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

மக்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பு,வளமான வாழ்வாதாரம்,காணியில்லாதவர்களுக்கான காணிபிரச்சனை,காணி உரிமை இல்லாதவர்களுக்கு உரிமைத்தினை பெற்றுக்கொடுத்தல்,காணாமல் போனவர்களுக்கு பரிகாரம் தேடிக்கொடுத்தல்,சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவித்தல்,வடக்கு கிழக்கில் உள்ள ஒருஇலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுத்தல், இதுதான் எங்கள் கொள்ளை இலக்கு இதனை நாங்கள் அடைவோம் மக்கள் எந்தளவிற்கு நம்பி எங்களை பின்பற்றி அணிதிரண்டு வந்தால் அனைத்தும் நடக்கும்.

இன்று பலர் தேசியம் கதைக்கின்றார்கள் அவர்களுக்கும் எங்களுக்கும் வித்தியாலம் மனித உடலில் உள்ள கொழுப்பில் நல்லகொழும்பும் கொட்ட கொழும்பும் இருக்கின்றது அதுபோல்தான் எங்கள் தமிழ்தேசியத்திற்கும் ஏனைய தமிழ்தேசியத்திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் ஒரு தலைமை என்றால் மக்களையும் பாதுகாக்கவேண்டும் தன்னையும் பாதுகாக்கவேண்டும் அதுதான் சரியான தலைமையாக இருக்கமுடியும்

நாங்கள் என்னத்திற்கு மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம் ஜந்துபைக்கோ வாங்கவோ காணிகளை எடுக்கவோ இல்லை எங்கள் மக்களும் வெளிநாடுகளில் வாழ்கின்ற மக்களைப்போல் இங்கு வாழவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்

கார்திகை மாதம் 16 ஆம் திகதியினை மக்கள் சரியாக பயன்படுத்துவார்களாக இருந்தால் அதற்கு நாங்கள் பெறுப்பு யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்று சொல்லியுள்ளார் கோட்டபாஜறாஜபக்ச அவர்கள்.

தென்னிலங்கையில் கோட்டபாஜயறாஜபக்க வெல்வதற்குரிய நிலமைதான் இருக்கின்றது அந்த வெற்றியில் நாங்களும் பங்கெடுக்கவேண்டும் நாங்கள் வெல்லவேண்டும் அதன் ஊடாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும்.

கோட்டபாஜறாயபக்ச அவர்களுடன் கதைக்கும்போது வடக்கு கிழக்கில் உடனடியாக முப்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று சொல்லியுள்ளார்.

என்னுடைய வாழ்க்கை முழுக்க மக்களுக்கானது நான் சாந்தி மாரியோ அல்லது வைத்தியர் மாதிரியோ இல்லை வைத்தியர் புதிய மருத்துவ மனை கட்டியுள்ளார் மக்கள் மருத்துவத்திற்கு பணம் கொடுக்கமுடியவில்லை என்றால் ஒன்றில் காப்பினை கழட்டுகின்றார் அல்லது தோட்டினை கழட்டுவதாக கேள்வி உண்மையில் அவர் இலவசமாக வைத்தியம் செய்யவேணும் என்றும் தெரிவித்த அவர்.

சுயலாப அரசியல் வாதிகள் போலிதமிழ்தேசிய வாசிகள் ஜந்தாறு கட்சிகள் ஒன்றுகூடி நாட்டில் ஒரு இனவாத சூழலை தென்னிலங்கையில் ஏற்படுத்துவதற்கும் தமிழ்மக்கள் மத்தியில் அவர்கள் இழந்துவரும் செல்வாக்கினை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக மக்களை உசுப்பேற்றம் வகையில் 13 கோரிக்கைகள் என்று முன்வைத்துள்ளார்கள்.

அதே நேரத்தில் நாங்கள் ஏற்கனவே 13 என்று சொல்லிவந்தது இந்த 13 ஆவது திருத்தச்சட்டம் மாகாணசபை முறைமையினைதான் நாங்கள் சொல்லிவந்தோம் அதனை குழப்பும் வகையில் இதனை முன்வைத்துள்ளார்கள்.

ஜனாதிபதி வேட்பாளரும் கடந்தகால ஜனாதிபதியும் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்கள் அவர்கள் தெளிவாக சொல்லியுள்ளார்கள் தேர்தல் விஞ்ஞபனத்தில் தமிழ்மக்கள் பிரச்சனை குறித்து தெளிவாக சொல்லியுள்ளார்கள் அதில் சொல்லப்பட்ட விடையங்களுக்கு அப்பால் நாங்கள் சென்று மக்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என்று தெரிவித்துக்கொள்கின்றேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

யாழ் பல்கலைக்கழக கட்டிடத்தொகுதியை முற்றுகையிட்ட மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் தமது பரீட்சைகளை நிறுத்துமாறு கோரி நேற்று இரவு வவுனியா வளாக நிர்வாக கட்டிடத்தொகுதியை முற்றுகையிட்டனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் அனைத்து பீடங்களுக்கும் தற்போது பரீட்சை இடம்பெற்று வருகின்றது.

எனினும் வாளகத்தின் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் சுமார் 70 பேர் வரையில் காச்சல் மற்றும் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய நிலையிலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் உள்ளனர்.

இந் நிலையில் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு வாளாகத்தில் இடம்பெறும் பரீட்சைகளை பிற்போடுமாறு கோரி தொழில்நுட்பபீட மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் பரீட்சை நிறுத்தப்படாமையினால் நேற்று இரவு 8 மணியளவில் வவுனனியா வளாகத்தின் நிர்வாககட்டிடத்தொகுதி அமைந்துள்ள பூங்கா வீதிக்கு வருகை தந்த மாணவர்கள் நிர்வாக கட்டிடத்தொகுதியை முற்றுகையிட்டு தமக்கு நீதி வேண்டும் என்றனர்.

எனினும் வளாகத்தின் நிர்வாக அதிகாரிகள் எவரும் இல்லாததால் வளாக முதல்வருடன் அவர்கள் தொடர்புகொண்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

மாணவர்கள் தமது நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில் முதல்வருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலைமையை கேட்டறிந்தார்.

இதன்போது முதல்வரினால் பரீட்சை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி மாணவர்களிடம் பரீட்சை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே குறித்த இடத்தில் இருந்து செல்லுங்கள் என தெரிவித்தற்கு அமைய மாணவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

தேர்தலுக்குப் பின்னரும் நானே பிரதமர்! ரணில் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரும் இலங்கையின் பிரதமராக தனது பதவியைத் தொடர எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து செயற்படுகின்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்களை பிரதமர் இன்று காலை அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்படுகின்ற புதிய அரசாங்கத்திலும் தானே பிரதமராக தொடரவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவு அடுத்த வாரத்தில்…!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (29) மாலை இடம்பெற்ற கலந்துறையாடல் பற்றி கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் முக்கிய அரசியல் கட்சிகளுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத்திற் கொண்டும், எமது கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு அடுத்த வாரத்தில் கொழும்பில் வைத்து யாருக்கு ஆதரவளிப்பது பற்றி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்ட நிலையிலும் பாதுகாப்பு பிரிவினரையும் வெளியேற்றிய பின்னர் இரா சம்பந்தன் தலைமையில் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டுமெனவும் அதிகளவில் தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் வடக்கு கிழக்கில் அனைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டு எதிர்காலத்தில் வேட்பாளர் ஒருவனுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இக்கலந்துரையாடலில் இரா சம்பந்தன் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(அப்துல்சலாம் யாசீம்)