சஜித் விடுக்கும் முக்கிய கோரிக்கை!

சுவிட்ஸர்லாந்து தூதரக பெண் அதிகாரி வெள்ளை வானில் கடத்தப்பட்டமை குறித்து உடனடி விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் பதிவாகிய இந்த சம்பவத்தினால் நாட்டின் நற்பெயரே சர்வதேச அரங்கிற்கு முன்பாக பாதிக்கப்படுவதாகவும் அதனைக் கருத்திற்கொண்டு உடனடி ஆழமான விசாரணை அவசியம் என்றும் சஜித் பிரேமதாஸ இன்று அறிக்கை வெளியிட்டுக் கூறியுள்ளார்.

துணைவேந்தர் தெரிவு குறித்து ஆராய்வதற்காக கூடும் பேரவை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் நாளைத் தீர்மானிப்பதற்கும், துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவை அமைப்பதற்காகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பேரவையின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த ஒக்ரோபர் மாதம் முடிவடைந்த நிலையில் இரண்டு புலம்பெயர் தமிழ்ப் பேராசிரியர்கள் உட்பட ஒன்பது பேர் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் துணைவேந்தர் தெரிவுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், முன்னாள் துணைவேந்தரும், தற்போதைய விண்ணப்பதாரிகளில் ஒருவருமான பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தததையடுத்து துணைவேந்தர் தெரிவுக்கான பணிகளை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்குமாறு பணிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் பல்கலைக்கழக நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன் முதற்கட்டமாக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ஒன்பது பேரினதும் தகுதி, தராதரங்களை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக் குழுவைத் தெரிவு செய்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் பேரவை இன்று கூடவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்படும் மதிப்பீட்டுக்குழுவின் பரிந்துரைகளின் பின் துணைவேந்தர் தெரிவுக்கான தேர்தல் திகதி நிர்ணயம் செய்யப்படும். பல்கலைக்கழக சட்ட ஏற்பாடுகளுக்கமைய குறித்த தினத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த அனைவரும் தத்தமது தூர நோக்குகள் குறித்து பேரவை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததன் பின் தேர்தல் இடம்பெறும்.

பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பின் முடிவில் அதிக வாக்குகளைப் பெறும் முதல் மூன்று பேரது விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்இ 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கமைய இலங்கையின் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படிஇ புதிய துணைவேந்தரை ஜனாதிபதியே நியமிப்பார்.

இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாயா ராஜபக்ஸ பதவியேற்றிருக்கும் நிலையில் – அரச கட்டமைப்புகளில் அதிரடி மாற்றங்கள் இடம்பெற்று வருகின்ற நேரத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவும் மிக முக்கியமானதொரு எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

மஹிந்தவுக்கு சுவிஸ் பதிலடி: நிஷாந்த சில்வா குறித்தும் அறிக்கை!

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி வெள்ளை வானில் கடத்தப்பட்டமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கொழும்பிலுள்ள அந்நாட்டுத் தூதரகம் முற்றாக நிராகரித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு சுவிஸ் தூதரகம் முறையான ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் மஹிந்த இன்று மாலை முன்வைத்திருந்தார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்கு இன்று இரவு பதிலளித்துள்ள சுவிட்சர்லாந்து கொழும்பு தூதரகம், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவே கூறியுள்ளது.

அதேபோல பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் விவகாரத்திலும் கரிசனை கொள்வதாக கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் இன்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் தற்போதைய உடல்நிலையானது, விசாரணைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த டி சில்வா தனது குடும்பத்துடன் சுவிட்ஸர்லாந்துக்கு அடைக்கலம் கோரி சென்றதாக முன்வைக்கப்படும் தகவல்கள் குறித்து சுவிஸ் தூதரகம் பதிலளித்துள்ளது.

இதற்கமைய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா அப்படியொரு எந்த கோரிக்கையையும் தங்களுக்கு முன்வைக்கவில்லை என்று அந்த தூதரகம் தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளது.

வெள்ளை வான் கலாசாரம் தூதரகத்தில் இருந்து ஆரம்பம்!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதும், வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் மீள ஆரம்பிக்கும் என்கிற அச்சுறுத்தல் காணப்பட்ட நிலையில், வெளிநாட்டு தூதரகத்திலிருந்து அது ஆரம்பிக்கப்பட்டமை கவலைக்குரியதாகும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு தலைமையகம் அமைந்துள்ள இராஜதந்திர நாட்டின் தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில், சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரிகின்ற பெண் அதிகாரி ஒருவர் கடந்த 25ஆம் திகதி மாலை இனந்தெரியாத நபர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சில மணிநேரத்தின் பின் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலைகள், கடத்தல்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து விசாரணை செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புகலிடம் தேடிச் சென்ற நிலையில், இந்தக் கடத்தல் சம்பவமும் இடம்பெற்றிருப்பது புதிய அரசாங்கம் சர்வதேச நாடுகளின் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து புதிய வெளிவிவகார அமைச்சரான தினேஸ் குணவர்தனவை விரைந்து சந்தித் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர், இதற்கான தெளிவுபடுத்தலைக் கோரியிருந்தார்.

அத்துடன் ஜேர்மன் நாட்டிற்கான ஸ்ரீலங்கா தூதுவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இன்றைய தினம் ஜெனீவாவுக்கு சென்று சம்பவம் குறித்து தெளிவுபடுத்தலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஜே.வி.பியின் ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநெத்தி, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களே இதற்குப் பொறுப்புகூற வேண்டும் என்றார்.

‘ஒரு வெளிநாட்டுத் தூதரக அதிகாரி ஒருவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றால், அந்த தூதரகத்திற்குப் பொறுப்பான தூதுவரிடம் இராஜதந்திர முறையில் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக வெளிவிவகார அமைச்சு இருக்கிறது. இப்போது என்ன? வெளிநாட்டுத் தூதரக அதிகாரியை வெள்ளை வான் கடத்திச்சென்று விசாரணை செய்கிறது. சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியை கடத்தி 06 மணிநேரம் குற்றப்புலனாய்வு அதிகாரி நிஷாந்த டி சில்வா குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் முறையா இது? அப்படியென்றால், வெள்ளை வான் ஊடாக விசாரணை செய்யப்படுவதே எமது முறை என்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்திருக்க வேண்டும்.

மனித உரிமைகள் பற்றி செயற்பாடுகளை நடத்திவரும் சுவிட்சர்லாந்து நாட்டின் தூதரக அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சிறிய நாடாக இந்த நாட்டிற்குள் உரிமைக்காகவும், சதந்திரத்திற்காகவும் குரல் எழுப்புகின்ற சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதையே உணர்த்தியிருக்கிறார்கள். வெள்ளை வானில் கடத்துவோம், கவனமாக இருங்கள் என்ற எச்சரிக்கைதான் இதனூடாக விடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்களிடம், இயக்கங்களிடமும் இதனைக் கேட்க விரும்புகின்றோம். இப்போது மகிழ்ச்சியா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்போது எதிர்கட்சியாக இருந்த இவர்கள், சம்பவமானது சுற்றுலாத்துறை, பொருளாதாரம் உட்பட நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் என்றார்கள். இப்போது இடம்பெற்ற சம்பவத்தின் பின் நாட்டிற்கு பங்கம் ஏற்படவில்லையா? ஜேர்மன் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சி உடனடியாக விரைந்து ஜெனீவா சென்று தெளிவுபடுத்தலை செய்துள்ளார். வெளிவிவகார அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்தனவின் முதல் இராஜதந்திர பணியாக சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இந்த விவகாரம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். ஆகவே இவ்வாறு அடக்கு முறைகளுக்கு எதிராக நாங்கள் எதிர்ப்பு வெளியிட வேண்டும். இந்த எதிர்ப்புகளை மக்களின் ஆணையை வைத்து சமாளிப்பார்கள். என்றாலும் எமது நாட்டு மக்கள் இந்த அடக்குமுறையை தோற்கடிக்க வேண்டும். வெள்ளைவான் கடத்தல் கலாசாரம் ஆரம்பிக்கப்படும் என்கிற சூழல் இருந்தது. ஆனால் அது இவ்வளவு விரைவாக அதுவும் வெளிநாட்டுத் தூதரகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதுதான் கவலை” என்றார்.

மன்னாரில் ஒருதொகை புகையிலை மீட்பு!

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பரப்பில் நடத்தி சோதனையின்போது ஒருதொகை புகையிலை மீட்கப்பட்டுள்ளது.

இலுப்பைக்கடவை கடற்கரைக்கு அண்மையில் மிதந்துகொண்டிருந்த 08 மர்மப் பொதிகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

இதில் மொத்தமாக சுமார் 303 கிலோ 800 கிராம் எடைகொண்ட புகையிலை காணப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இவைசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்று கடற்படை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் தூதுவருடன் சந்திப்பில் ஈடுபட்ட சுமந்திரன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனுக்கும், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்ஸ்டனுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

வளமான எதிர்காலத்திற்கான அனைத்து சமூகங்களிலும் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி இதன்போது ஆராயப்பட்டதாக சாரா ஹல்ஸ்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பதவி விலக தயாராகும் மஹிந்த தேசப்பிரிய!

பதவியிலிருந்து விலகுவதற்கான கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஜனாதிபதியிடம் முன்வைத்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது அறிக்கையையும் சபாநாயகர் இன்று வெளியிட்டார்.

இப்போதைக்கு பதவியிலிருந்து விலக வேண்டாம் என்பதே தனது கருத்து என்பதை சபாநாயகர் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தலை சரியான வழிநடத்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் எடுத்த முயற்சிகளை நினைவுப்படுத்திய சபாநாயகர், எதிர்வரும் தேர்தல்களையும் அவ்வாறே வழிநடத்துவதற்கு தற்போதைய ஆணைக்குழுவின் தலைவரது ஆளுமை அவசியம் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது!

திருகோணமலை மூதூர் பிரதேச சபைக்குரிய சம்பூர் கிராமம் மற்றும் பாரதிபுரம் கிராம மக்களுக்கும் மற்றும் திருகோணமலை பட்டிணமும் சூழல் பிரதேச சபைக்குரிய ஆனந்தபுரி கிராம மக்கள் உட்பட 250ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சமூக அபிவிருத்தி கட்சியினரால் 250முந்திரியம் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு சமூக அபிவிருத்தி கட்சியின் பொது செயலாளர் கே.பிரகாஸ் மற்றும் சமூக அபிவிருத்தி கட்சியினுடைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

மேலும் சம்பூர் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதின கர்த்தாவும் சம்பூர் கிராம சேவையாளர் உத்தியோகஸ்தர் மற்றும் கிராம தலைவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கையளித்து இருந்தனர்.

பயன் தரும் மரம் எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இவ் வேலை திட்டத்தின் முதற்கட்டமாக மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட 300 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது குறிப்பிடக்கது.

மேலும் இதனோடு மரம் வளர்ப்பதற்கான ஏதுவான காரணிகள் தொடர்பாகவும் சமூக அபிவிருத்தி கட்சியினரால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டு கன்றுகள் கையளிக்கப்பட்டது.

( அப்துல்சலாம் யாசீம்)

கொத்மலை நீர்த்தேக்கத்தில் சிறுமியின் சடலம் மீட்பு

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்தில் நேற்று மதியம் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா – ஹதூனுவாவ, வட்டாந்தர பகுதியை சேர்ந்த 18 வயதுடைய சிறுமி எனவும், 27.11.2019 அன்று காலை முதல் காணாமல் போய் இருந்ததாகவும், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 28.11.2019 அன்று மதியம் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சானிக்கா மதுஷானி ஏக்கநாயக்க (வயது – 18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பசில் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையை கொழும்பு மேல் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் தனக்கெதிரான திவிநெகும விவகார வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனக் கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்த மனுவும் இன்றைய தினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு வாழ்வின் எழுச்சி என்ற திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 இலட்சம் ரூபாய் நிதியில் தற்போதைய பிரதமரான முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் நிழற்படம் அடங்கிய 50 இலட்சம் கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுக செல்ல வேண்டும் என்பதனால் அனுமதி வழங்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தரப்பு மன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதன்படி குறித்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் டிசம்பர் 5 முதல் 2020 மார்ச் 7ஆம் திகதிவரை அவருக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

அத்தோடு குறித்த வழக்கை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி முன்னிலையில் தனக்கு எதிரான திவிநெகும விவகார வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என கோரி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

நான் பேசப்பட்ட விடயங்களை திரிபுப்படுத்தப்பட்டுள்ளது!

கடந்த காலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சி நான் பேசப்பட்ட விடயங்களை திரிபுப்படுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

இப்போது பல அமைச்சுக்கள் மாற்றம் பெற்றுள்ளது. கடந்த அமைச்சில் தொழில் செய்த பலருக்கு தற்போது தொழில் இல்லை. ஆகையால் அவர்கள் ஆர அமர்ந்து இதை அழகாக திரிபு செய்து வெளியிட்டுள்ளனர். இதனால் மலையக சமூகத்தினரிடத்தில் அண்மைக்காலமாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளது என ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞரணி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் கொட்டகலை ஹில்கூல் விடுதியில் இளைஞர்களூடான நேரடி கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொண்ட செந்தில் தொண்டமான் தனியார் தொலைகாட்சியில் வழங்கிய செவ்வி தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளித்தார்.

இதன் போது செந்தில் தொண்டமான் இளைஞர் யுவதிகள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். பின் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்களிக்கப்பட்டது. இதன் போது ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்ததாவது,

முன்னாள் கல்வி அமைச்சராக இருந்த நான் கல்வியை பற்றி தான் பேசமுடியும். கல்வியை பொருத்தவரையில் ஏனைய சமூதாயத்தை விட கூடுதலாக என்னுடைய மலையக சமூதாயம் அதிகளவாக முன்னேற்றமடைய வேண்டும் என்பதில் ஆசைப்படுவதில் தப்பு கிடையாது.

இன்று பட்டத்தாரிகளாக சென்றவர்களோடு, பட்டதாரிகளாக வேண்டும் என்ற கனவுகளுடன் வாழ்வோர் மலையகத்தில் ஏகப்பட்டோர் இருக்கின்றனர். அதேநேரத்தில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரத்தில் அதிகமானோர் பெறுபேறு பெற்றுள்ளனர்.

அவர்கள் எல்லோரையும் கொண்டு சென்று பட்டத்தாரிகளாக்குவது எங்களுடைய கடமையாகும். அதற்கான முக்கியத்துவத்தை கொடுத்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

தனியார் ஊடகம் ஒன்றில் வழங்கிய செவ்வியை திரிபுபடுத்தி சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மலையக மக்களை நாங்கள் முட்டாள்கள் என்று சொன்ன மாதிரியும், மலையக மக்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று சொன்ன மாதிரியும் திரித்து வெளியிட்டுள்ளனர்.

அதன் உண்மையான வீடியோவில் எந்த இடத்திலும் நான் இவ்வாறு சொன்னமாதிரி இல்லை. அதை இண்டர்நெட்டில் போனால் அந்த வீடியோவை பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதனால் வருகின்ற காலங்களில் இவர்கள் என்ன மாதிரி வீடியோக்களை செய்திருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.

மலையகத்திலிருந்து ஆயிரம் இளைஞர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்துக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றோம் என்பதை இவ்விடத்தில் பதிவு செய்கிறேன் என்றார்.

மீன் பிடிக்கச் சென்றவர் மரணம்!

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (28) காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருக்கோணமலை சல்லி-சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான டி. அகிலராஜ் (29 வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-சாம்பல்தீவு பகுதியில் இருந்து நேற்றிரவு மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று இன்று காலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கடல் கொந்தளிப்பு அதிகளவில் காணப்பட்டதால் படகு கவிழ்ந்ததையடுத்து மற்றைய படகுக்கு பாய்ந்த போது அவர் கீழே விழுந்ததில் படகில் பொருத்தப்பட்டிருந்த இன்ஜின் வெட்டியதால் இவ்வணர்த்தம் இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

யாழ் மாநகர சபையில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி!

யாழ் மாநகர சபையில் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது

மாநகர சபையின் அமர்வு முதல்வர் இபானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன் போது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவைத் திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை தெரிவுத்த போதும் ஈழ மக்கள் ஐனநாயக்க் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியோர் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதன் போது வரவு செலவுத்திட்டத்திறகு ஆதரவாக 16 பேரும் எதிராக 21 பேரும் வாக்களித்தனர். அதேநேரத்தில் 7 பேர் சபைக்கு வரவில்லை.

இதனையடுத்து ஐந்து மேலதிக வாக்குகளால் மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோறகடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலும் அனுஷ்ட்டிக்கப்பட்ட மாவீரர் தினம்!

மாவீரர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (27) மாலை 6.10 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆசா தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலையில் வழமையாக சிவன் கோயிலுக்கு அருகில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இந்த அனுஷ்டானம் இம்முறை அனுஷ்டிக்க படவில்லையெனவும், சிவன் கோயிலை சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்ட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை 2015ம் ஆண்டு தொடக்கம் சிவன் கோயிலுக்கு அருகில் இடம்பெற்று வந்த இந்த நினைவு தினம் இம்முறை நடாத்தினால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி நடாத்தப்படவில்லையெனவும் தெரியவருகின்றது.

ஆனாலும் தமிழ் உறவுகளுக்காக தம்மை வித்திட்டவர்களை நினைவு கூற பயந்து இருந்தபோதும் திருகோணமலையில் இவ்வாறான நினைவேந்தலை செய்ய வேண்டுமெனவும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தின் தலைவி பயமின்றி முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது

(அப்துல்சலாம் யாசீம்)

கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின நினைவேந்தல் கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும்
யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு
பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

சரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.

பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார்.

பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.

மாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று காலை தடைகளை மீறி – பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது.

அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.

மாவீரர் நினைவு தின அனுஸ்டிப்புக்கள்! விசாரணைகள் இல்லை

மாவீரர் நினைவு தின அனுஸ்டிப்புக்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் நிலையில், அது குறித்து எந்த விசாரணையும் நடத்த அவசியமில்லை என்று அமைச்சரவை பேச்சாளரான ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவப் பருவத்தில் தானும் இதுபோன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டதாகவும், அதனால் இதுபோன்ற செயற்பாடுகளை அவதானிக்காமல் விட்டாலே சிறந்தது என்றும் அவர் கூறினார்.

யாழ் பல்கலைக்கழகம் உட்பட தமிழர் தாயகப் பகுதிகளில் இன்றைய தினம் மாவீரர் நினைவுதினங்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அமைச்சரவை பேச்சாளராக இன்று நியமிக்கப்பட்ட ரமேஸ் பத்திரணவிடம் எமது எதிரொலி வினவியது.

இதற்கு பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தடம்புரண்ட யாழ்தேவி – ரயில் சேவை பாதிப்பு

யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையிலான யாழ் தேவி ரயில் தடம்புரண்ட காரணத்தினால் வடக்கிற்கான ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் கல்கமுவ என்கிற பகுதியில் இன்று பகல் யாழ்தேவி ரயில் தடம்புரண்டது.

தற்சமயம் ரயில் பாதையை திருத்தியமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கிற்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொடிகாமத்தில் நடந்த மாவீரர் நினைவேந்தல் அஞ்சலி!

கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர் நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாவீர்ர் தினமான இன்று மீவர்ர்களுக்கு பல இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய கொடிகாம்ம் மாவீர்ர்தினம் முன்பாக நடாத்த முற்பட்டபோது இராணுவத்தினர் தடையை ஏறபடுத்தியுள்ளனர்

ஆயினும் எதிர்ப்புகள் தடைகளைத் தாண்டி குறித்த இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது

யாழில் மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி!

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக இராச பாதை வீதியில் இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த காணியில் தற்போது படையினர் பாரிய இராணுவ முகாம் ஒன்றினை அமைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரர்களின் பெயர்களை அஞ்சலிக்காக வைப்பதை தடுக்க பொலிஸார் முயற்சி!

யாழ்.நல்லூரில் 25,000 மாவீரர்களின் பெயர்கள் அஞ்சலிக்காக வைப்பதை தடுக்க யாழ்.பொலிஸாரால் கடும் முனைப்பு காட்டிவருகின்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் திலீபனின் நினைவு தூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்க முடியாது என்று தடுத்துள்ளனர்.

அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படுபவர்கள் உயிரிழந்த எமது உறவினர்கள். அவர்களுடைய சொந்த பெயர்கள்தான் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்த போதும், அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

இருப்பினும் அஞ்சலி நிகழ்வு யார் தடுத்தாலும் நடாத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.