டிரெண்டாகும் ரஞ்சனின் பெறுபேறு!

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் க.பொ.த. உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் அவர் தோற்றியிருந்தார்.

இந்நிலையில், இன்று வெளியான பெறுபேறுகளை, அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், அவர் தனது சுட்டெண்ணையும் வெளியிட்டுள்ளமையால், அவரது பெறுபோறுகளை இணைத்தில் பெற்றும், அவர் பதிவிட்ட பெறுபேற்றையும் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அவரது பெறுபேறு:

அரசியல் – எஸ்
தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் – எஸ்
கிறிஸ்தவம் – எப்
பொது அறிவு – 50
ஆங்கிலம் – ஏ

தமிழீழ மாவீரர் நாள் வெறும் சடங்கல்ல ; பெரும் சரித்திரத்துக்கான சத்திய நாள்!

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாளை நீ நடத்துவதா நான் நடத்துவதா என்று போட்டியிடுகின்றனர். இவ்வாறு ஒரே அமைப் பில் இருந்துகொண்டு போட்டியிடுவதிலும் பார்க்க இவர்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்காமல்விடுவது மாவீரர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்’ – இவ்வாறு கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.
ஏதிரொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே கவிஞர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிரொலி: ஈழத்தில் அனுட்டிக்கப்பட்ட முதலாவது மாவீரர் தினத்தில் நீங்கள் பங்கு பற்றினீர்களே. இன்றைய கால கட்டத்தில், அந்த ஞாபங்கள் குறித்த உங்கள் மனப்பதிவுகள் என்ன?

பதில்: முதலாவது மாவீரர் நாள் நன்றாக நினைவிருக்கின்றது. தலைவர் அலம்பில் காட்டில் அவருடைய முகாமில் இருக்கின்றார். நான் வன்னிக்காட்டில் எங்களுடைய முகாமில் தங்கியிருக்கின்றேன். அந்த நேரத்தில்தான் மதிப்புக்குரிய தiலைவர் பிரபாகரனிடம் இருந்து ஒரு செய்தி தொலைத்தொடர்பு கருவியில் வருகின் றது.என்னுடன் யோகியும் இருந்தார்.


‘தமிழீழ போராட்டத்திற்காக மடிந்த போராளிகளை ஒவ்வொரு ஆண்டும் நன்றியுடன் நினைவு கூறவேண்டியிருக்கின்றது. அதை உனடியாக தொடங்கப்போகின்றோம். ஆகவே அந்த நாளுக்கு ‘தியாகிகள் தினம்’ என்று பெயர் வைக்கலாம் என்று கருதுகின்றேன். காசி அண்ணாவிடம் கேளுங்கள’ – என்று தம்பி தலைவர் அனுப்பிய செய்தியை யோகி என்னிடம் சொன்னார்.
‘தியாகி என்பது ஒரு தமிழ் சொல் அல்ல. அது ஒரு வடமொழி சொல். தினம் என்ற சொல்லும் அப்படித்தான். ஆகவே, தியாகி,தியாகம் என்பதை விட தியாகத்துக்கு அடிப்படையானது வீரம். வீரம் என்பது தமிழீழத்தில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. எந்த நாட்டிலும் நிகழாத வீரச்செயல்களை நமது போராளிகள் நம் மண்ணில் நிகழ்த்திக்காட்டியுள்ளனர். ஈடு இணையற்ற வீரம். அதுவே மாவீரம். ‘மாவீரர்கள் நாள்’ என்று பெயர் வையுங்கள்’ – இதுதான் நான் தலைவர் பிரபாகரனுக்கு அனுப்பிய என்னுடைய கருத்து. தலைவர் பிரபாகரனும் அதனை ஏற்றுக்கொண்டார். தலைவர் பிரபாகரன் முதலாவது மாவீரர் நாளை அறிவிக்கின்றார். அன்றிலிருந்து இன்றுவரை மாவீரர் நாள் அனுட்டிக்கபட்டுவருகின்றது.

எதிரொலி: எந்த இடத்தில் முதன் முதலாக மாவீரர் நாள் ஆரம்பிக்கப்பட்டது என்று கூற முடியுமா?

பதில்: எல்லா இடங்களிலுமே அனுஷ்டிக்கப்பட்டது. உலகம் முழுவதுமான அறிப்போடுதான்’மாவீரர் நாள்’ ஆரம்பமா னது.

எதிரொலி: மாவீரர் நாள் நிகழ்வுகளை 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் – பின்னர் என்று சிலர் வேறுபடுத்தி நோக்குகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அது தவறான பார்வை. மாவீரர் நாள் என்றால் மாவீரர் நாள்தான். அதற்கு ஆண்டுகளை வைத்து பிரித்துப்பார்ப்பது தவறான அனுகுமுறை. மாவீரர்கள் தமிழீழம் இருக்கும் வரை நினைவுகூரப்படவேண்டியவர்கள். காலம் கடந்தும் தமிழீழ மக்களின் போரட்டங்கள் இன்று முன்னெடுக்கப்படுக்கப்பட்டுக்கொண்டிருப்பது அவர்களின் வீரத்தாலும் ஈகத்தாலும்தான் என்பது என்னுடைய பணிவான கருத்து. மாவீரர்கள் எந்தக்காலத்துக்கும் உரியவர்கள். காலம் எப்போதும் அவர்களுக்கு வரையறை கிடையாது.

எதிரொலி: வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு தெற்கில் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில்: தெற்கில் எதிர்ப்பு தெரிவிக்கத்தான செய்வார்கள். ஏனெனில் அவர்கள் நம்முடைய எதிரிகள். ஏதிரிகள் நம்முடைய போராளிகளை மாவீரர்கள் என்று என்றைக்கும் கருதமாட்டார்கள். எங்களுடைய மக்களை கொன்ற சிங்கள வெறியர்கள் அவர்களுக்கு மாவீரர்கள். ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் நாளை கடைப்பிடிக்க அவர்கள் ஒருபோது இசைவு தரமாட்டார்கள்.

எதிரொலி;: தேசியக்கொடி, சின்னங்கள் மற்றும் பாடல்களை பயன்படுத்தாமல் மாவீரர்களை நினைவு கூர தடையில்லை என்ற இலங்கையின் நீதிமன்ற தீர்ப்பை எப்படிப்பார்க்கிறீர்கள்?

பதில்: சிங்கள அரசின் நீதிமன்றங்களில் எந்த பொருளும் இருப்பதாக தோன்ற வில்லை. நீதியே செத்துப்போன ஒரு மண்ணில் நீதிமன்றங்களை நம்பமுடியவில்லை. சிங்கள அரசு சில விளையாட்டுகள் விளையாடுவார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த நீதிமன்ற தீர்ப்பு. தேசியக்கொடி, சின்னங்கள் தவிர்த்து மாவீரர் நாளை அனுட்டியுங்கள் என்று சொல்லுவதெல்லாம் பச்சை நாடகங்கள். ‘மாவீரர்களை போற்றுங்கள்’ என்று சொன்னால் மாவீரர்களின் கல்ல றைகளை உழுது உடைந்தெறிந்திருக்க தேவை இல்லை. உடைத்தெறிந்திருக்கவும் மாட்டார்கள்.

எதிரொலி;: நடுகல் நமது வீரத்தின் அடையாளம். பழந்தமிழர்கள் நடுகல் வழிபாட்டின் மூலம் போரில் மாண்ட வீரர்களை போற்றினர். பழந்தமிழ் ஏடுகளிலும் நடுகல் குறித்து அறியமுடிகிறது. அதன் மீட்சியாகவே மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இலங்கை அரசு துயிலும் இல்லங்களை அழித்துள்ளது. இது குறித்து?

பதில்: விக்டர் என்ற மாவீரனின் கல்லறையை சிங்களப்படைகள் உடைத்து அதற்குள் இருந்த எலும்புகளைக்கூட எரித்தனர். எலும்பாகக்கூட அந்த மண்ணில் இருக்கமுடியவில்லை. அதுமட்டுமல்ல,சில இடங்களில் மாவீரர்களின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் இடித்தழித்தனர். சிலைகளாகக்கூட நம்மால் அங்கு நிற்க முடியவில்லை. கல்லறைகளை கூட உடைத்தெறிந்தனர்.

ஆகவே, மாவீரர்கள் எந்த வடிவில் நின்றாலும் அது சிங்களவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாகவும் அச்சம் ஊட்டுவதாகவும் இருக்கின்றனர் .எனக்கு நினைவு வருகின்றது, நான் காட்டில் வாழ்ந்த காலத்தில் கஸ்தூரி என்ற பெயருடைய போராளி ஒருவர் என்னுடன் இருந்தார். அவள் மிகபெரிய இலக்கியங்களை எல்லாம் செய்தவள். நாடகங் களை எழுதியவள். அவளும் களத்தில்தான் மடிந்தாள். அவள் எழுதிய ஒரு கவிதையில் ‘கருத்தரிக்கும் என் கல்லறை’ என்று சொன்னாள். மூன்றே மூன்று சொற்கள்தான். இதற்கிணையாக எந்தப்பெரிய பெரிய இலக்கியமும் இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. வழக்கத்தில் ஒரு தாயின் கருவறைதான் கருத்தரிக்கும். ஒரு கல்லறை கருத்தரிக்கும் என்ற கஸ்தூரியின் வரிகளுக்கு உயிர் உள்ள இடம் தமிழீழம்தான். அதைத்தான் உடைத்தெறிந்தார்கள்.

எதிரொலி: மிக முக்கியமான மாவீரர் துயிலுமில்லங்களை இராணுவ முகாம்களாக இலங்கை அரசு உருமாற்றியிருக்கிறது. இதன்மூலம் மாவீரர் பற்றிய நினைவுகளை மெல்ல மெல்ல சிதைக்க முடியுமென அவர்கள் நம்புகிறீர்களா?

பதில்: ஒருபோதும் நடக்காது. இராணுவ முகாங்களாக மாவீரர் துயிலும் இல்லங்கள் மாறலாம். மாற்றப்படலாம். ஆனால் மாவீரர்கள் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட முடியாதவர்கள். அகற்றப்படவும் முடியாதவர்கள். ஒவ்வொரு மாவீரனுடைய கதையும் காவியம். ஒரு சிலருடைய வரலாறுதான் எழுதப்பட்டுள்ளது. இன்னும் முழுமையாக எழுதப்படவில்லையே தவிர, எழுதினால் ஒவ்வொரு மாவீரனுடைய வரலாறும் பெரிய காவியமாகும். மாவீரர்களின் உயிர்கள் மிக பெறுமதியானவை. அவற்றை எப்படி மறக்க முடியும்.

எதிரொலி: நீங்கள் சொன்ன மாதிரியே மாவீரர்களுடைய வரலாறுகள் ஒரு சிலதுதான் உள்ளன. இன்னும் காலம் செல்ல செல்ல அவர்களுடைய வரலாறுகள் முற்றாக மறந்து போகலாம். அப்படியானால், ஆவண ரீதியாக அவற்றை எவ்வாறு எழுதலாம் அல்லது கோவைப்படுத்தலாம் என்று எண்ணுகிறீர்கள்?

பதில்: இது கட்டாயம் செய்யப்படவேண்டிய ஒன்று. மாவீரர்களின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் இன்று பல நாடு களிலும் உள்ளனர். அவர்கள் அக்கறை எடுக்கவேண்டும். அத்துடன் ஏதாவது ஓர் அமைப்பு இவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களின் ஊடாக தெரிந்தவற்றை எழுதவேண்டும். அவற்றை தொகுக்க வேண்டும். இதுதான ஒரே வழி. எழுத்து வடிவில் பதிவு செய்யப்படவேண்டும்.

ஏதிரொலி: ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ போல மாவீரர் நாளையும் தமிழகத்தில் நினைவேந்த பொது இடம் ஒன்றை நிரந்தரமாக அமைக்க முடியாதா?

பதில்: என்னைப்பொறுத்தவரை அது அவசியம் இல்லை என நினைக்கின்றேன்.

ஏதிரொலி;: இன்றைய சூழலில் தமிழ்த் தேசிய நெருப்பை தொடர்ந்து தக்கவைப்பதில் மாவீரர் நாளின் வகிபாகம் என்ன?

புதில்: மாவீரர் நாள் வெறுமனே ஆண்டுத்திவசம் கழிப்பது போல் இருந்துவிடக்கூடாது.
மாவீரர்கள் தங்களுடைய புகழை பரப்புவதற்காக களத்தில் நின்று போராடவில்லை. ‘நான் இறந்து இதுவரை இறந்த தோழர்களுடன் வானத்தில் இருந்து மலர்கின்ற தமிழீழத்தை கண்டுகளிப்பேன’ – என்று தீலிபன் சொன்னான். அவனு டய ஏக்கம், தாகம்,தவிப்பு எல்லாம் தமிழீழத்தை காணவேண்டும் என்பதுதான். ஆகவே, ஒவ்வொரு மாவீரனின் துடிப் பும் இதுதான். அவன் தமிழீழ விடுதலைக்காகத்தான் கண்களை மூடினான். மாவீரர் நாளை அனுட்டிக்கும் நாம், அதை பல வேளைகளில சடங்காக ஆக்கிவிட்டோமே தவிர, இந்;நாளை எப்படி விடுதலைக்கான நாளாக கட்டி எழுப்பமுடியும்,அதற்கு என்ன செய்யலாம் என்று திட்;டங்கள் வகுப்பதில் நாம் பின்தங்கியிருக்கின்றோம் என்பது என்னுடைய கருத்து

எதிரொலி: புலம்பெயர் நாடுகளில் சிலவற்றில் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதில் சில அமைப்புக்கள் குழு மனப்பான்மை யோடு பிரிந்து செயற்பட்டு குழப்பத்தை உண்டுபண்ணுவது பற்றி…?

பதில்: முள்ளிவாய்க்கல் பேரழிவு முடிவுற்று பத்தாண்டுகளின் பின்னர் மாவீரர் நாளை இரண்டு குழுக்களாகவா மூன்று குழுக்களாகவா நடத்துவது என்ற மோதல்களை எல்லாம் பார்க்கமுடிகிறதுதான். இந்த மோதல்கள் விடுதலைப்போரை எந்தக் காலத்திலும் முன்;னெடுக்காது. இச்செயல்கள் மாவீரர்களுக்கு செய்யும் பச்சை இரண்டகமாக இருக்கும். இரண்டு குழுக்கள் ‘மாவீரர் நாளை நீ நடத்துவதா, நான் நடத்துவதா’ என்று ஒரே அமைப்பில் இருந்து போட்டியிடுவதைக்காட்டிலும் மாவீரர் நாளை அனுட்டிக்காமல்விடுவது மாவீரர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும் என்பது என்;னுடைய பணிவான கருத்து.

எதிரொலி: கடந்த மூன்று வருடங்களாக மாவீரர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நடைபெறுவதை இலங்கை அரசு கண்டும் காணாதது போல இருக்கிறது. இதன் பின்னணி என்னவாக இருக்கும்?

பதில்: அவர்கள் கண்டும் காணமல் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. மாவீரர் நாள் நடப்பதற்கு முன்னரே மாணவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்றும் சில தடைகள் விதிக்கப்படுகின்றன. சட்டங்களைக் கொண்டு அவர்கள் மிரட்டிக்கொண்டுதானிருக்கிறார்கள். நீங்கள் சொல்வதைப்போல் கண்டும் காணததைப்போல் அரசு இருக்கிறதென்றால், லவேளைகளில்,ஐ.நாவில் போர்க்குற்றம் தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் தருணமாதலால், இலங்கையில் அரசு எப்படி நடந்து கொள்கிறார்கள் என உலகம் பார்த்துக்கொண்டிருக்கின்றது. அதை சமாளிப்பதற்காக இந்த கள்ள மௌனத்தைக் கடைப்பிடிப்பதாக இருக்கலாம். அல் லது தேர்தல் அரசியலுக்கான கள்ளத்தனமான – குள்ளத்தனமான – நோக்கமாகவும் இருக்கலாம். இந்த இரண்டில் ஒன்றாக இருக்கலாம்.

எதிரொலி: மாவீரர் நாளில் தமிழ் மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

புதில்: இந்த மாவீரர் நாளில் உலகம் எங்கும் பரவி வாழும் தமிழீழ மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நான் பணி வோடு தெரிவிக்க விரும்புவது, உலகத்தில் உள்ள தமிழினம் கருத்து வேறுபாடு, அணுகுமுறை வேறுபாடு என்பவற்றை மறந்து, உடனடியாக தமிழீழ விடுதலைக்கு என்ன வழி என விரைந்து செயலாற்ற முன் வரவேண்டும்.

தனித்தனியாக குழுக்களை உருவாக்கி சிந்தித்து அச்சிந்தனைகள் ஒன்றாக சேராமல் சிதறி சிதறி பத்தாண்டுகள் விரயமாகிவிட்டன. தாயகம்,தமிழ்நாடு மற்றும் புலத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இந்திய அரசின் அணுசரணையுடன் தமிழீழத்தை பெறுவதற்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.தலைவர் பிரபாகரனின் இறுதி மாவிரர் நாள் உரையிலும் அவர் தெளிவாக சொன்னது இதைத்தான்.

இலங்கையில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தியப்பிரதமர் சீனா பிரதமருடன் கைகுலுக்கிக் கொண்டாலும் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு சவாலே என்று பழ. நெடுமாறன்கூட அண்மையில் கருத் துத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொருதருணத்தில் எல்லோரும் சேர்ந்து இந்திய அரசை பங்களதேஸ் விடுதலையில் தலையிட்டதைப்போல் ஈழ விடுதலையிலும் துணை நிற்கவேண்டும் என்று கோரிக்கையை வைத்தாகவேண்டும். அந்தக்காலம் தள்ளிப்போகக்கூடாது என்பது என்னுடைய பணிவான கருத்து.இதை நான் சொல்வதற்கு காரணங்கள் நிறைய உள்ளன.

இந்திய அரசமைப்பில் சீக்கிய மதமும் சமண மதமும் பௌத்த மதமும் இந்து மதத்தின் கூறுகள் என கூறப்பட்டுள்ளது. இது ஒரு கொடுமையான நிலை. ஏனென்றால் கடவுள் உண்டு என்று சொல்வது இந்து சமயம். கடவுள் இல்லை என்று சொல்வது பௌத்த சமயம். அப்படியிருக்கும்போது,எப்படி பௌத்த சமயம் இந்து சமயத்தின் கூறாக இருக்க முடியும் என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால்,இலங்கை அரசமைப்பில் அப்படி அல்ல. பௌத்தமே இலங்கையின் மதம். அது இந்து மதத்தின் கூறு என்று அங்கு சொல்லப்படவில்லை. இந்து மதம் பௌத்த மதத்துக்கு எதிரான மதம் என்று சிங்களவன் கருதுகிறான். ஆகவே தமிழீழத்தில் உள்ள ஆலயங்களில் புத்த சிலைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் மத அடிப்படையிலும் எங்களை அழிக்கிறார்கள். இந்தியா இந்து மதம் தங்களது உயிர் என்று தலையில் வைத்து கொண்டாடுகிறது. ஆகவே இந்திய அரசு தலையிடுவதற்கான பல காரணங்கள் உள்ள காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

உலகில் வாழும் தமிழ் மக்கள் இம்மாவீரர் நாளில் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். பெரிய கவலை என்னவென் றால், இலங்கையில் இருக்கும் அமைப்புக்கள் ஒன்றாகக்கூடி இந்திய அரசிடம் இவ்வாறான ஒருகோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை.

அதேவேளை ‘இந்தியாதானே எங்களைஅழித்தது’என்று இன்னமும் வாதம் நடத்திக்கொண்டிருக்கும் கூட்டமும் இருக்கிறது. கர்நாடகத்தில் காவேரி பிரச்சினை என்றால் காங்கிரசும் பிஜேபிக்காரனும் ஒன்றாக சேர்கிறார்கள். சேர நாடு மலையாள மாக கேரளமாக எவ்வாறு மறியதோ அதைப்போல் தமிழீழமும் சிங்கள தேசமாக மாறும் நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் பிஜேபியும் காங்கிரசும் ஒரே மேடையில் நின்று ‘தமிழீழ விடுதலைக்காக இந்திய தலையிட வேண்டும்’ – என கோரிக்கை வைக்கவில்லை. அதை யாரும் உருவாக்க முனையவில்லை. இது ஒரு துயரம். ஆகவே உல கில் உள்ள தமிழர்கள் இதற்கான முயற்சியல் ஈடுபட வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

ஒன்றாய் நின்று எதிர்கொள்வோம்!

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை, ஒற்றுமையாக நின்று எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“பிளவுபடாமல் தமிழ் மக்களை ஒற்றுமைப்படுத்தி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும். அரசியல் தீர்வைப் பெறுவதற்கும், ஏனைய விடயங்களைக் கையாள்வதற்கும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக நின்று, தமக்காகத் தொடர்ந்து செயற்படக்கூடிய கட்சியின் பின்னால் நிற்க வேண்டியது அவசியம்.

விரைவில் மீண்டும் நாம் கூடி ஏனைய முடிவுகளை எடுத்த பின்னர், அவை குறித்து மக்களுக்கு அறிவிக்கப்படும்” என்றார்.

இன்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், ரொலொ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வலம்புரிச்சங்கு வைத்திருந்தோருக்கு விளக்கமறியல்!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வலம்புரி சங்குகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று (17) சந்தேக நபர்களை ஆஜர்படுத்தியபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சேருவில நகர் பகுதியில் உள்ள அரலிய கெஸ்ட் என்ற இடத்தில் வலம்புரி சங்குகள் வைத்துள்ளனர் என்ற தகவலறிந்து, சோதனை மேற்கொண்ட சேருநுவர பொலிஸார் இரண்டு வலம்புரி சங்குகளுடன் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் என்றும் மற்றொருவர் மொரவெவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவருகின்றது.

(அப்துல்சலாம் யாசீம்)

தமிழகம் தோள் கொடுக்கும் என நம்பிய ஈழத்தமிழரை கைவிடுவதா?

பாகிஸ்தான் இந்துக்களுக்கு கரிசனை காட்டும் அரசு, இலங்கை இந்துக்களை தூக்கி எறிவது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய குடியுரிமை மசோதா ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, இந்தியா முழுவதும் பெரும் போராட்டங்களாக வெடித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் கமல் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

பாகிஸ்தானின் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கையின் இந்துவுக்கும் ஏன் வழங்கவில்லை?

ஆண்டாண்டு காலம் தமிழகம் தோள்கொடுக்கும் என நம்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் சொல்லப்போகும் பதில் என்ன?

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்களின் நிலை என்ன?

நிறைவேற்றப்பட்ட இந்திய குடியுரிமை மசோதா தமிழினத்துக்கும் தேசத்துக்கும் செய்யப்பட்ட துரோகம்” என்றார்.

இலங்கையர் அறுவர் தமிழகத்தில் கைது!

தமிழக தனுஸ்கோடிக் கடற்கரை பகுதியில் நேற்று (15) கியூ பிரிவுப் பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது தனுஸ்கோடி அருகே எம்.ஆர் சத்திரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய முறையில் நின்ற ஆறு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் அவர்கள் திருகோணமலை மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களான சதீசன், டிலக்சனா, சுதாகரன், சந்திரமதி, ஹரீஸ்கரன், உதயகுமார் ஆகியோர் எனத் தெரியவருகின்றது. இவர்களுள் இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள் மற்றும் ஓர் ஆண் குழந்தையும் அடங்குகின்றது.

இவர்கள், 2012 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழகத்துக்குப் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எனவும், சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள முகாம்களில் வசித்து வந்தனர் எனவும், தனுஸ்கோடி கடல் வழியாக சட்ட விரோதமான முறையில் தோணியில் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முற்பட்டனர் எனவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சிறுதொகைப் பணம், கடவுச்சீட்டு, இலங்கை குடியுரிமை ஆவணங்கள் மற்றும் தமிழக வங்கிக் கணக்கு அட்டைகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கு அனுப்ப நினைத்தால் என்னைக் கொன்றே விடுங்கள்; இந்தியவாழ் ஈழத்தமிழர் குமுறல்!

‘என்னை இலங்கைக்கு அனுப்ப விரும்பினால், அங்கே அனுப்புவதை விட இங்கேயே கொலை செய்துவிடுங்கள் “என ஈழத்தமிழர் ஒருவர் மனு அளித்துள்ளார்.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் கலவர பூமியாக மாறி வருகிறது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பவளத்தானூர் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மூலம் என்னை இலங்கைக்கு அனுப்புவதைவிடக் கருணைக் கொலை செய்துவிடுமாறு ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியவை வருமாறு-

” இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக என் பெற்றோர்கள், 1990ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் பவளத்தானூர் அகதிகள் முகாமில் தங்கினார்கள். அவர்கள் இந்த முகாமுக்கு வந்த பிறகு, ஒரு வருடம் கழிந்த நிலையில் 1991இல் நான் பிறந்தேன்.

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் தமிழ்நாட்டில்தான் தவழ்ந்து – நடை பழகி வாழ்ந்து வருகிறேன். தற்போது எனக்கு 28 வயதாகிறது. நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தற்போது பெயின்ட் அடிக்கும் வேலைக்குச் சென்று வருகிறேன். எனக்குத் தமிழ்நாட்டுக் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் மட்டும்தான் தெரியும். இலங்கையின் கலாசாரத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

நான் இலங்கை அகதியாக இருந்தாலும் ஒருநாள் இந்தியக் குடியுரிமை பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால், தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம் எனக்கும் எங்கள் மக்களுக்கும் என்றைக்குமே குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறோம். என்னை இந்தியாவை விட்டு அனுப்புவதை விட இங்கேயே கருணைக் கொலை செய்து விடுங்கள். எங்களுக்கு நேர்ந்த கொடுமை எங்கள் சந்ததிகளுக்கும் ஏற்படக் கூடாது” என்றார்.

சுவிட்சர்லாந்து தூதர் – கோட்டா சந்திப்பு; தூதரக பெண் அதிகாரி குறித்து விரிவாகப் பேச்சு!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக், நேற்று கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தமை குறித்து, கோட்டா கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிந்துள்ளவை வருமாறு-

“தேர்தல் வெற்றிக்காக எனக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், “நான் இலங்கையர்கள் அனைவருக்குமான ஜனாதிபதி” என்ற எனது கருத்தைப் பாராட்டினார், மேலும் இலங்கையுடன் பரஸ்பரமான – பாரம்பரிய உறவை இரு நாடுகளுக்கும் பயன்தரும் வகையில் உறுதியாகப் பேணுவதில் சுவிட்சர்லாந்து மகிழ்ச்சி அடைகிறது எனவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கையைச் சேர்ந்த சுவிஸ் தூதரக பணியாளர் குறித்த விடயத்தில் இலங்கைக்கு எவ்வித தீங்குகளையும் ஏற்படுத்தும் நோக்கில் தாங்கள் தலையிடவில்லை என்றும் தெரிவித்தார்.

இரு நாட்டு நலன்களுக்காகவும் சேர்ந்து செயற்பட விரும்புவதாகவும், இந்தப் பதற்றமான சூழ்நிலையிலிருந்து வெளிவந்து நமக்குள் இருக்கும் தவறான புரிதலை களையவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இவற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் நான்,

“இதுவரை இடம்பெற்றிருக்கும் கடத்தல் சம்பந்தப்பட்ட விசாரணை விபரங்களை தெளிவுபடுத்தினேன். அத்துடன், இந்தச் சம்பவம் என்மீதும் எனது அரசாங்கத்தின் மீதும் சேறு பூசுவதற்கு சில குழுக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பதையும் தெளிவுபடுத்தினேன். அத்துடன், சுவிட்சர்லாந்து தூதுவரிடம் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி உண்மையை வெளிப்படுத்துவதற்கு உதவுமாறும் வேண்டினேன்.” என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதிக்கு தூக்கு!

தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இராணுவ தலைமைத் தளபதியாக இருந்தபோது, 1999ஆம் ஆண்டு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி 2008 வரை ஆட்சி செய்தவர் பர்வேஸ் முஷரப்.

இவர் தனது ஆட்சியின்போது 2007ஆம் ஆண்டு, நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், மூத்த நீதிபதிகளையும் சிறையில் அடைத்தார். 100ஆக்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவியிலிருந்து நீக்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டு, 2014ஆம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தன.

இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது முஷாரப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

தேசத்துரோக வழக்கு விசாரணை தொடங்கியபோது, மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் 201ஆம் ஆண்டு டுபாய் சென்ற முஷரப், அங்கேயே தங்கிவிட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்கால உடல் பராமரிப்பு!

காலநிலைக்கேற்ப உடல் நிலைகளும் மாறும். அதற்கேற்றாற்போல் உடல் பராமரிப்பின் தன்மைகளையும் நாம் மாற்றிக்கொள்ளவேண்டும். குளிர்காலத்தில் அடிக்கும் குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைய ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் குறிப்பிட்ட சில வகைகளில் பேஷியல் செய்யும்போது முகத்தில் ஏற்படும் முன்னேற்றத்தை அழகாக காண முடியும்.

*சருமத்துக்குப் பழங்களைக் கொண்டு பேஷியல் செய்து வரலாம். வாழை, தர்பூசணி, கிவி போன்றவை உங்கள் சருமத்துக்கு ஈரப்பதத்தை அளித்து ஜொலிப்பாக்கும்.

*குளிர்ந்த காற்று முகத்தில் படும்போது, சருமம் வறண்டு போய் ஈரப்பதமின்றி இருக்கும். இதனால் சருமத்தில் வெடிப்பு, வறட்சி நிலவக்கூடும்.

*குளிர்ந்த காற்றால் சரும ஈரப்பதம் குறைவதால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். எனவே இதற்கு பேஷியல் கிறீம், மாய்ஸ்சரைசர், சீரம், பேஸ் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்துங்கள்.

  • பேசியலைத் தவிர வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். சூடான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ குளித்தால் சருமம் மேலும் வறண்டு போய் விடும்.
  • அத்தியாவசிய எண்ணெய்களை குளிக்கும்போது பயன்படுத்தி வரலாம்.
  • நீராவி பிடிக்கும் முறையை பின்பற்றலாம். இது குளிருக்கு இதமாக இருப்பதோடு உங்கள் சருமமும் பொலிவாக இருக்க உதவும்.

அகதிகளின் வலிசுமந்த வாழ்க்கை!

*மனைவி, இரு பிள்ளைகளைக் கடலில் பலி கொடுத்த பரிதாபம்
*தனிமையில் மூத்த மகள்
*சிந்தனை கெட்டு வாழும் தந்தை இங்கே

தாயகத்தில் எதிர்கொண்ட அடக்குமுறைகளிலிருந்து தப்பித்து படகில் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அகதி அந்தஸ்து கோரிய பலர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னரும்கூட நிரந்த வாழ்கையை வாழமுடியாமல் அல்லல்படுகிறார்கள். அவர்களின் போராட்ட வாழ்க்கையை ‘அகதிகளின் வலிசுமந்த வாழ்க்கை” என்ற பகுதி ஊடாக எதிரொலியில் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

அந்தவகையில் இம்முறை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் – சேனையூர்பிரதேசத்தைசேர்ந்தசிவலிங்கம் காளிக்குட்டிஎன்றகுடும்பஸ்தரைசந்தித்தோம்.

‘நான் 2012 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறவேண்டிய நிலை, அங்கு இயங்கிய இனந்தெரியாத ஆயுதக்குழுவினரால் ஏற்படுத்தப்பட்டது. திருகோணமலை நகரில் சொந்தமாக நகைக்கடையை நடத்திவந்தேன். நல்லவசதியாகத்தான் வாழ்ந்தேன். எந்தவொரு பொருளாதார நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டதில்லை. இந்த குறுக்கால போனவர்கள் (இனந்தெரியாத ஆயுதக்குழுக்கள்) என்னை நிம்மதியாக வாழ விட்டிருந்தால் நான் இன்றும் என் மனைவி, பிள்ளைகளோடு; வாழ்ந்திருப்பேன’; – என்றுகண்களில் ஈரம் எட்டிபார்க்கும் வண்ணம் தனது வலியைச் சொல்லதொடங்கினார்.

‘நான் ஆஸ்திரேலியாவுக்கு தனியாகத்தான் வந்தனான். தடுப்புமுகாமில் இருந்தபோது எனது குடும்பத்துடன் பேசியிருக்கின்றேன். இடையில் குறிப்பிட்டகாலம் என்னால் அவர்களைத் தொடர்புகொள்ளமுடியவில்லை. சரிஎன்னதான் நடந்தது என்று அக்கம்பக்கம் விசாரித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் ஏதும் தெரியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுதெரியாமலே என் தடுப்பு காலம் முடிவுற்றது.

‘விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் – 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதிதான் – என் குடும்பம்; தொடர்பான தகவல் கிடைத்தது. அன்றையதினம் எனது மனைவியின் சகோதரியிடம் இருந்து தொலைபேசி அழைப்புவந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு படகில் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து மனைவியும் இரண்டு பிள்ளைகளும் செத்துப்போட்டார்கள் என்றும் எனது மூத்தமகள் மட்டும் தப்பிவிட்டார் என்றும் அவசொன்னார்” – எனக் கூறிய காளிக்குட்டி மீண்டும் பேச சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்.

ஏன் ஆபத்தான பயணத்தைத் தொடர அவர்கள் முடிவெடுத்தார்கள் என்றகேள்வியோடுஅவரிடம் பேச முனைந்தோம் –

‘இந்தக் கேள்வியைதான் நான் எனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் இழந்தபின்னர் என் மூத்த மகளிடமே வினாவினேன். ‘ஏனம்மா வந்தீர்கள்’ என்று கேட்டேன். அதற்குஅவள் ‘நான் பாடசாலை விட்டு வீடு செல்லும்போது யாரோ உங்களைப் பற்றிக் கேட்டு மிரட்டிவிட்டு பிறகு வீடு வரை வந்து அம்மாவிடம் சத்தமாக கதைத்தார்கள். அதன் பின்னரே, எங்களை அம்மா கூட்டிக் கொண்டுவெளிக்கிட்டா’ என்றுசொன்னாள்.

‘அப்போதுஎன் பிள்ளைக்கு 13 வயதுதான். அதன்பின்னர்,என் பிள்ளையிடம் இன்று வரை நான் அதைப்பற்றி விசாரித்தது கிடையாது. இப்போது என் பிள்ளைக்கு 19 வயது ஆகிவிட்டது. தனக்கு முன்பாகவே தன் சின்ன தம்பியையும் சின்ன தங்கையையும் அம்மாவையும் தொலைத்த வலி என் பிள்ளைக்கு இப்போதுதான் புரிகிறது. இவற்றை
யெல்லாம் யோசித்து துடிக்கும் என் பிள்ளையை அருகில் இருந்து தேற்றுவதற்கு நான் அவளுடன் இல்லை. தொலைபேசியில் பேசும்போது கலங்கும் என் பிள்ளையின் மனதை தேற்றுவதற்காகவே என்னென்னவோ பேசிச் சமாளிக்கின்றேன்.’

‘என் பிஞ்சுமகள் 6 வருடங்களுக்கு மேலாக அனாதையாக பிற நாட்டில் – இலங்கையில் இல்லை – வாழ்ந்துகொண்டிருக்கிறாள். இருந்த உறவுகளை தொலைத்த பின்னர், என்னுடைய பிள்ளையைக்கூட வளர்க்கமுடியவில்லை. நான் உயிரோடு இருந்தும் அனாதையாகவே என் பிள்ளைவாழுது. எங்களுக்குள் இருக்கும் இவ்வாறான கதைகளைக் கேட்கக்கூட யாரும் இல்லை”

‘படகில் வந்தவர்களுக்கு பணம் மட்டும்தான் குறிக்கோள் என்று இங்கிருக்கும் சிலர் கருதுகின்றனர். அதற்காகத்தான் படகேறிவந்தோம் என்றும் நினைக்கின்றனர். குடும்பத்தைத் தொலைத்தும் பிள்ளைகளைப்; பிரிந்தும் அனாதையாக வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மைப் போன்றவர்களின் வலிகளுக்குமுன்னால் பணமோ பகட்டான வாழ்க்கையோ பொருட்டாகாது’ ‘இந்தநாட்டில் நான் கோரிய உயிர்ப் பாதுகாப்பை அளித்துள்ளார்கள். அதுவும் தற்காலிமாகத்தான். அது முடிய என்ன நடக்கும் என்று தெரியாது. இனி நாட்டுக்கு அனுப்பினால் ஆயுததாரிகளின் துன்புறுத்தலைத் தாண்டி, நான் அங்கு வாழும்போது என்னோடிருந்;த மனைவி, பிள்ளைகளின் நினைவுகளே என்னைக் கொன்றுவிடும்’

‘இங்கு என்னதான் வேலை செய்தாலும் மனம் அவர்களைச் சுற்றிச்சுற்றியே வருகின்றது. காலையில் வேலைக்குப் போகும்போதும் அவர்களின் படங்களைத்தான் பார்த்து செல்கின்றேன். வேலையால் வரும்போதும் அவர்களையே பார்க்கிறேன். வலிகளைச் சொல்லியாற யாரும் இல்லை. பேச்சுத் துணைக்குக்கூட யாரும் இன்றிவாழ்கிறேன். என் மகளைப் பார்க்கவேண்டும். அவளுடன் சேர்ந்துவாழவேண்டும்; இதுவேஎன் தற்போதைய சிந்தனை. பிள்ளையுடன் சேர்ந்த பின்னர்தான் நித்திரைகூட ஒழுங்காகவரும்.
‘ஆஸ்திரேலியாவில் உயிரை மட்டும் பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம். ஆனால் நடைபிணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்’ – என்று சொல்லிப்பெரு மூச்செறிந்தார்.

சட்டம் காக்கப் புறப்பட்ட தலைகள்!

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்ற தீவகத்தின் மண்கும்பான் பகுதிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டனர். அத்துடன் மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதேவேளை, தீவகம் உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையைத் தாம் எடுக்கவுள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரதேச மக்களிடம் தெரிவித்தனர்.

இவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் சென்றிருந்தனர்.

வழித்தட அனுமதியை ஐனாதிபதி இரத்துச் செய்துள்ள நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்புலன்ஸ் – வான் மோதல்; அறுவர் படுகாயம்!

திருகோணமலை, கந்தளாய் – 94ஆம் கட்டைப் பகுதியில் இன்று இரவு அம்புலன்ஸ் – வான் மோதியதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான அம்புலன்ஸ், இன்று (16) இரவு நோயாளியொருவரை கந்தளாய் வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோது, திருகோணமலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வானொன்றுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் அம்புலன்ஸில் பயணித்த சாரதி, உதவியாளர், நோயாளி மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரும் வானில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்து ஆறு பேரும் கந்தளாய் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

உடலை வலுப்படுத்தும் பயிற்சி!

உடல் வலுவாக இருந்தால்தான் ஆயுள் வலுவாக இருக்கும். அதற்கான பயிற்சி ஒன்றை இங்கு பார்ப்போம்.

உடற்பயிற்சிகளின் அரசன் என்று புகழப்படும் பயிற்சி இது. இந்தப் பயிற்சிக்கு, பார்பெல் (Barbell)என்ற எடை தூக்கும் கருவி தேவை. பார்பெல் பிடியை பின் தோள்பட்டையில் தாங்கிப் பிடிக்க வேண்டும்.

கழுத்தில் தாங்கக்கூடாது. கால்கள் தோள்பட்டை அளவுக்குச் சற்று விரிந்த நிலையில் வைக்க வேண்டும். மூச்சை ஆழமாக உள் இழுத்து கீழே உட்கார்வது போன்ற நிலைக்குக் கால் முட்டியை மடக்கிச் செல்ல வேண்டும்.

சில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலுக் கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.

தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

மாஸ் காட்டும் தர்பார் ரெய்லர்!

முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் பட ரெய்லர் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

லைகா நிறுவனம் இயக்கும் இப்படம், எதிர்வரும் தைப்பொங்கலுக்கு வெளிவரவுள்ள நிலையில் அதன் ரெய்லர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கும் இப்படத்துக்கு அனுருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் பெண் அதிகாரி கைது; 30 வரை விளக்கமறியல்!

வெள்ளைவானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் எனக் கூறப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகப் பெண் பணியாளரை கைது செய்து நீதிமன்றில் முன்நிறுத்துமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான அவர் நீதிமன்றில ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சிங்களவர் ஏற்காததை தமிழருக்கு வழங்க முடியாது; அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை!

சிங்கள மக்கள் ஏற்காத ஒரு விடயத்தை, தமிழ் மக்களுக்காகச் செய்ய முடியாது. எனவே, தமிழர் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனக் கூறப்படும் அதிகாரப் பகிர்வை வழங்க முடியாது.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தார். இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒன்றை எவ்வாறு எம்மால் செய்யமுடியும்? எனவே, தமிழர் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனக் கூறப்படும் அதிகாரப் பகிர்வை வழங்க முடியாது. 70 வருடங்களாக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரப் பகிர்வைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு விடயம் மாத்திரமே.

இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். தேசிய பாதுகாப்பின் ஊடாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நாட்டில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாமல் நல்லிணக்கமும் ஏற்படாது. எனவே, நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த சிறந்த வேலைத்திட்டம் என்னிடத்தில் உள்ளது.

தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடிய டக்ளஸ் தேவானந்தாவை அவர்களுக்காக நியமித்துள்ளேன். அமைச்சரவை அந்தஸ்துப் பெற்ற அவரது நியமனத்தின் ஊடாக தமிழ் மக்களுடன் எனது அரசாங்கம் நெருக்கமாகச் செயற்படுகிறது என்பதை தமிழ் மக்கள் உணர்வார்கள்” என்றார்.

காணாமலாக்கப்பட்டோர் இறந்திருக்கலாம்; என்னிடம் எவரும் இல்லை!

யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம். எனவே அவர்களைத் தேடி அலையும் உறவினர்களுக்கு அவர்களுக்கான மரண சான்றிதழை வழங்குவதை விட வேறு சிறந்த வழி எதுவும் இல்லை ” என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் ஆசிரியர்களை இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தார். இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

‘போர்க் காலத்தில் பலர் காணாமலாக்கப்பட்டார்கள் என்பது அரசியல் மயப்படுத்தப்பட்ட விடயமாகும். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் மற்றும் அவர்களுடன் இணைந்தவர்கள் மட்டுமல்ல, எமது இராணுவத்தைச் சேர்ந்த பல சிப்பாய்களும் பலியானார்கள். காணாமலாக்கப்பட்டார்கள். இறுதியில் அவர்களது சடலங்கள் கூட உறவினர்களுக்கு வழங்கமுடியாமல் போன சந்தர்ப்பங்களும் ஏற்பட்டது.

போர்க்காலத்தில் அவ்வாறே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்த பலர் உயிரிழந்திருக்கலாம். அவர்களது உடல்கள் மீள அவர்களது உறவினர்கள், பெற்றோரால் கண்டுபிடிக்க முடியாமற் போனதால் உயிரிழந்துவிட்டார்கள் என்ற விடயத்தை அவர்களது மனங்களும் ஏற்கமறுக்கின்றன. இதனால்தான் அவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

காணாமலாக்கப்பட்டோரை நான் இரகசிய முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறேன் என என்மீதும் கடந்த காலங்களில் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. நான் எவரையும் அவ்வாறு அடைத்துவைக்கவில்லை. ஆகவே காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அவர்களது பெற்றோருக்கு சான்றிதழ் அளிப்பதை விட வேற சிறந்த வழி இல்லை.” என்றார்.

சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

வெள்ளைவானில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார் எனக் கூறப்படும் சுவிட்ஸர்லாந்து தூதரகப் பெண் பணியாளரை கைது செய்து நீதிமன்றில் முன்நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளைவான் சாரதிகளுக்கு விளக்கமறியல்!

வெள்ளைவான் கடத்தல் காலத்தில், தாம் சாரதிகளாக இருந்தனர் என்றும் புலிகளின் தங்கத்தை வன்னியிலிருந்து கொழும்புக்கு தாம் கடத்திவந்தனர் எனவும் தம்மை அடையாளப்படுத்தி ஊடக சந்திப்பை நடத்திய சந்தேக நபர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (16) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.