காலையில் கைதானவர்களுக்கு மாலையில் விளக்கமறியல்!

திருமலைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் எட்டுப் பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம். பீ. அன்பார் உத்தரவிட்டுள்ளார்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு மீனவர்களும், திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (31) மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஜீ. மரியசாதம் (வயது – 25), ஜீ. மரிய ரோஸ்டர் (வயது – 25), எஸ். ராஜூ (வயது – 33), எம். ஜான் (வயது – 35), அருள் தாஸ் (வயது – 48), பீ. கருணன் (வயது – 54), பீ. ஆர். சூசை (வயது – 60), எம்.ராமகிருஷ்ணன் (வயது – 64) ஆகியோர் எனத் தெரியவருகின்றது.

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகு, ரேடர் கருவி, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் திசைகாட்டிகள் என்பவற்றை கடற்படையினரின் பாதுகாப்பில் வைத்திருக்குமாறும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் கட்டளையிட்டார்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் இந்தியத் தூதரகத்துக்கு கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது என திருகோணமலை கடற்றொழில் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

(அப்துல்சலாம் யாசீம்)

அங்கஜனுக்கு எதிராக நெடுந்தீவில் ஆர்ப்பாட்டம்!

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் தன்னிச்சையான செயற்பாடுகளைக் கண்டித்து நெடுந்தீவு மக்கள் இன்று எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி ஏதும் வழங்கப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். இவர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை விடத் தனக்கு அதிக அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்து, பிரதேச செயலக அதிகாரிகளுக்குக் கடும் தொனியில் உத்தரவிட்டு, மக்கள் விரும்பித் தெரிவு செய்த திட்டங்களை எல்லாம் தமது சுயநலத்துக்காக மாற்றி அமைத்துத் தங்களைப் பழி வாங்குகிறார் எனத் தெரிவித்தே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் திட்டத்தை, நமது பிரதேசத்தின் நலன்களை மையமாகக் கொண்டு பிரதேசத்தின் கிராம சேவகர் – பொருளாதார உத்தியோகத்தர் – சமுர்த்தி உத்தியோகத்தர்- கிராமத்தின் பொது அமைப்புகள் – மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளை, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனது சுயநல அரசியலுக்காக மாற்றி, தேவையற்ற திட்டங்களை நமக்குத் திணிக்கின்றார்.

இது எமக்கு தேவையற்றது. நாம் முன்மொழிந்த திட்டங்களே எமக்குத் தேவை என வலியுறுத்தி மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கொரோனாவிலிருந்து இலங்கையர்களை மீட்க சீனா நோக்கிப் பறந்தது விசேட விமானம்!

சீனாவிலுள்ள இலங்கையர்களை மீட்டுவர இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்றுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், சீனாவில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளை தத்தமது நாடுகளுக்குத் திருப்பி அழைத்து வரும் ஒவ்வொரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் வுஹான் நகரில் உள்ள 284 இலங்கையர்களை அழைத்து வர இன்று மாலை இலங்கையிலிருந்து விசேட விமானம் ஒன்று சென்றுள்ளது.

யாழ். – கொழும்பு விமான சேவை நாளை ஆரம்பம்!

யாழ். – கொழும்பு இடையே விமான சேவை நாளை ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நாளை முதல் தினமும் காலை 8.30 க்கு யாழ்ப்பாணத்தை நோக்கி விமானம் புறப்பட்டு, யாழ். பலாலி விமான நிலையத்தை காலை 9.30க்கு வந்தடையும்.

பின்னர் பலாலியிலிருந்து காலை 9.30க்கு கொழும்பு நோக்கி விமானம் பயணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றிரவுடன் முடியும் உறவு!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து இன்று நள்ளிரவு வெளியேறவுள்ளது.

2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தது இங்கிலாந்து. பின்னர், இதுகுறித்து முன்வைக்கப்பட்ட பிரெக்‌ஷிட் ஒப்பந்தம் பிரிட்டன் நாடாளுமன்றத்தால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.

இதனால் அன்றைய பிரதமராக இருந்த கமரூனும் பின்னர் வந்த தெரசாவும் அடுத்தடுத்து ராஜிநாமாச் செய்தனர்.

அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜோன்சன், பிரெக்‌ஷிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்தி, தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார்.

இதனால், குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் தமது ஒப்புதலை அளித்தார்.

இந்நிலையில், இன்று நள்ளிரவுடன் இங்கிலாந்து வெளியேறவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றயத்திலிருந்து ஒரு நாடு வெளியேறுவது இதுவே முதன்முறையாகும். இதனால், இந்நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

இதை இங்கிலாந்து மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிக்பாஷ் தர்ஷன் மீது பொலிஸில் முறைப்பாடு!

பிக்பாஷ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்துக்கே போனவர்தான் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன்.

இவர் பிக்பாஷ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, அவரது காதலியான ஷனம் ஷெட்டி பல்வேறு பேட்டிகளைக் கொடுத்து, தானும் பிரபலமானார்.

பின்னர், பிக்பாஷ் நிகழ்ச்சியை விட்டு தர்ஷன் வெளியே வந்ததும் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், தர்ஷன் தம்மை நிச்சயதார்த்தம் செய்துவிட்டு, திருணம் செய்து கொள்ள மறுக்கிறார் என ஷனம் ஷெட்டி முறைப்பாடு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், சென்னை பொலிஸ் நிலையத்திலேயே முறைப்பாடு செய்துள்ளார் என தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் அடுத்த தலைவர் யார்? சீ.வீ.கே. சிவஞானம் வெளியிட்ட தகவல்!

“கூட்டமைப்புக்குள் தலைமைத்துவப் பிரச்சினை எதுவும் இல்லை. அடுத்த தலைமைத்துவம் தொடர்பான சந்தர்ப்பம் எழுமாயின் மாவை சேனாதிராஜாவே தலைவராவதற்குப் பொருத்தமானவராக இருப்பார்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வட மாகாண அவைத்தலைவருமான சீவீ.கே. சிவானம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறித்தான சர்ச்சை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு-

“கூட்டமைப்புக்குள் தலைமை குறித்து சர்ச்சையாக ஒன்றும் எழவில்லை. அரசல் புரசலாக ஒரு கதை ஊடகங்களில் வந்ததுதான். ஆனால் அந்த மாதிரியான தலைமைத்துவப் பிரச்சினைகள் எங்களுக்குள் ஏற்பட இல்லை.

மேலும், தற்போதைக்கு அந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சுகளோ அல்லது நகர்வுகளோ முன்னெடுக்கப்படவில்லை. அதற்கான சூழலும் எழவில்லை. சம்மந்தன் ஐயாதான் கூட்டமைப்பின் தலைவராக தொடர்வார். அதனுடய பிரதித் தலைவராக மாவை சேனாதிராஜா தொடர்வார்.

ஆனால், மாற்றம் ஒன்று வருமானால் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் கூட்டமைப்பின் தலைவராக இருக்கக் கூடிய எல்லாத் தகுதிகளும் மாவை சேனாதிராஜாவுக்கு உண்டு. எனவே, சம்பந்தருக்கு அடுத்ததாக மாவை சேனாதிராஜாதான் கூட்டமைப்பின்
தலைவராகத் தொடர்ந்து இருப்பார்.

அதேவேளை, அடுத்த தலைவராக சுமந்திரன் வரப்போகிறார் எனச் சொல்வது, ஒவ்வொருவரும் ஊகங்களின் அடிப்படையில் சொன்ன கருத்துகளே” என்றார்.

41 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதால் பரபரப்பு!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல சிங்கள வித்தியாலய மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆண், பெண் என 41 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை விளையாட்டுப் போட்டியின்போது பணிஸ் சாப்பிட்டுவிட்டு, மைதானத்திலுள்ள கிணற்று நீரைப் பருகியுள்ளனர்.

இதன்பின்னரே குறித்த மாவணர்கள் உணவு ஒவ்வாமைக்கு உள்ளாகியுள்ளனர்.

பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர்களில், 39 பேர் வரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனவும், இரண்டு மாணவிகள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து பொது சுகாதார உத்தியோகத்தர்களும், கினிகத்தேனை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட ரீதியாக பதிலளிப்பதை விடுத்து மரணச் சான்றிதழ் வழங்குவதா? கோட்டாவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு!

காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்துக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை, அவர்களின் உறவினர்களுக்கு அறிவிப்பதே அரசாங்கத்தின் கடமை என்பதையும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் குழுவொன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தது.

இதன்போது காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவர்களுக்கு மரணச் சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய கூறியிருந்தார்.

இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.

இதன்போது கருத்து வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பிராந்திய ஆய்வாளரான தியாகி ருவன் பத்திரண,

“காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருக்கும் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

‘வடக்கில் காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு என்ன ஆனது என்பதை அறிய தாய்மார்கள், கடந்த மூன்று வருடங்களாக போராட்டங்களை நடத்தி, நீதியைக் கோரி வருகின்றார்கள்.

ஆனாலும், இன்றுவரை அவர்களுக்கு சரியாக பதிலளிக்கப்படவில்லை.

கடந்த அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தின்படி, காணாமலாக்கப்பட்டோர் குறித்து விசாரிக்க ஆணைக்குழுவை அமைத்தது. அந்த விசாரணைக்குழுவே விசாரணைகளை நடத்திவந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் ஐ.நா. பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தபோது, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணை நடத்தி மரணச் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்துக்கு நாங்கள் இணங்கமுயாது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை அவர்களின் உறவினர்களுக்கும் பெற்றோருக்கும் கூறவேண்டும். சட்ட ரீதியாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியதைப்போல காணாமலாக்கப்பட்டோருக்கு மரணச்சான்றிதழ் அளிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

அதிகாலைவேளை திருமலைக் கடலில் நடந்த கைது!

திருகோணமலைக் கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் எட்டுப் பேர் இன்று அதிகாலை (31) கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை கடற்படையினர் திருகோணமலை கொட்பே பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனவும், அவர்களது சுகாதாரம் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த மீனவர்கள் தொடர்பில் சுகாதார திணைக்களம் மற்றும் மீன்பிடி திணைக்களம் இணைந்து நோய் தொற்று தொடர்பாக ஆராய்ந்து வருகின்றன. அத்துடன், அவர்களை திருகோணமலை மீன்பிடித் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கடற்படை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மீனவர்கள் கைது தொடர்பாக, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு கடற்படையினர் இடமளிக்கவில்லை. அதேவேளை, தேசிய பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என அவர்கள் ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

சஜித்தின் இரகசியத் திட்டங்கள் வெளியானதால் சலசலப்பு!

சிரச ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் கிலி மஹாராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவரான எம்.பி.சி – எம்.ரிவி குழு பணிப்பாளரான செவான் டானியலை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட வைப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு சஜித் பிரேமதாஸ செய்தால், அவருக்கு கட்சிக்குள் உள்ளக ரீதியில் வழங்கிவரும் ஆதரவு வாபஸ் பெறுப்படும் அச்சுறுத்தியிருக்கும் மத்தும பண்டார, செவான் டானியலை நாடாளுமன்றத்துக்குள் அழைத்துவருவதற்கு சஜித் பிரேமதாஸ தனது தேசியப்பட்டியல் சந்தர்ப்பத்தை வழங்க முன்வந்தால் சிறந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

செவான் டானியலுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை மற்றும் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கான இணக்கப்பாட்டை சஜித் பிரேமதாஸ, கிலி மகாராஜாவுக்கு வழங்கியுள்ளார் எனப் பேசப்படுகின்றது.

கடந்த 20ஆம் திகதி கொழும்பிலுள்ள கிலி மகாராஜாவின் இல்லத்தில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலில், சஜித் பிரேமதாஸ இந்த இணக்கத்தை வெளியிட்டிருக்கின்றார் என்பதுடன், இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண மற்றும் செவான் டானியல் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பொதுத் தேர்தலில் தாம் பெயரிடுகின்ற நால்வருக்குப் போட்டியிடுவதற்கான வேட்புமனு சந்தர்ப்பத்தையும், செவான் டானியல் உள்ளிட்ட தனது மூன்று உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியல் பதவிகளையும் செவான் டானியலுக்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியையும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை கிலி மகாராஜா, சஜித் பிரேமதாஸவுக்கு விடுத்துள்ளார் என ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான கலாநிதி சிறிமசிறி ஹப்பு ஆராச்சி தெரிவித்தார்.

சஜித் பிரேமதாஸவும், எரான் விக்கிரமரட்ணவும் தங்களது இணக்கத்தை வெளியிட்டிருப்பதுடன் அதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மாற்றியமைப்பதற்கான வழிமுறை மற்றும் ஆலோசனையை கிலிமஹாராஜாவினால் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரங்களால் ஐ.தே.கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா: அவசர நிலை பிரகடனம்; சீனாவில் இறப்பு 213ஐ எட்டியது!

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கிய நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய நாடுகளில் உயிரிழப்புகள் இல்லாத போதும், வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இவ்வைரஸ் தொற்றுக்கு இதுவரை உலகளவில் ஒன்பதாயிரத்து 700 பேர் இலக்காகியுள்ளனர் எனவும் அறிய முடிகின்றது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்: த.தே.கூ. எம்.பிமார் புறக்கணிப்பு; தவிசாளர்மார் பங்கேற்பு! டக்ளஸ், விஜயகலாவும் இல்லை!!

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கத்தனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஐன் இராமநாதன் தலைமையில் இன்று ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கான அழைப்பு மாவட்டச் செயலாளர் ஊடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தக் கூட்டத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அதேவேளை, கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 2015ஆம் ஆண்டு முதல் அந்த அரசில் அமைச்சராக இருந்த விஐயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றிருந்தது.

மேலும், முன்னர் அமைச்சராக இருந்த காலங்களில் கூட்டத்தை தலைமை தாங்கிய நடத்திய ஈபிடிபியின் செயலாளர் நாயகம் ஆட்சி மாற்றத்தின் பின்னராக நடைபெற்ற இக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் தற்போது புதிய அரசாங்கம் வந்திருக்கின்ற நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக அங்கஐன் இராமநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதற்கமைய மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது.

இதில், அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டாக புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் வைத்து இந்தியர்கள் கைது; காரணம் என்ன? வெளியானது தகவல்!

சட்டவிரோதமான முறையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் நால்வர், மன்னாரில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் சிலாபத்துறை கடற்பரப்புக்கு அண்மையிலுள்ள குதிரைமலை கடற்பரப்பில் வைத்தே இவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களின் படகில் நடத்திய சோதனையின்போது, 41 தங்கப் பாலங்களும், 4.2 கிலோ கிராம் எடைகொண்ட தங்கமும் மீட்கப்பட்டன. அத்துடன், அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், 30, 35, 36 மற்றும் 50 வயதுகளை உடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், இவர்களை நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீபாத கல்லூரிக்கு பூட்டு; வைரஸ் தொற்றின் எதிரொலி!

ஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்றுக் காரணமாக, குறித்த கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று (29) சுமார் 100 மாணவர்களும் இன்று (30) 75 மாணவர்களும் வைரஸ் நோய்க்குட்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொட்டகலை, டிக்கோயா கிளங்கள் போன்ற வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த மாணவர்கள் எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன எனவும் அறிய முடிகின்றது.

இந்நிலையில், நேற்று வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுள் பெரும்பாலானோர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை, ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன. கல்லூரி வளாகம் முழுமையாக பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸால் உயிரிழப்பு அதிகரிப்பு; சீனாவில் பெரும் சோகம்!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது.

வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால், சீனாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன்படி, நேற்றுவரை 132 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை 170ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் மாத்திரம் இதுவரை ஏழாயிரத்து 283 பேர் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் வேட்பாளராக நீங்களே போட்டியிடுங்கள்; ரணிலிடம் கோபத்துடன் சொன்ன சஜித்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.

கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து முடிவு எடுக்க நேற்று (29) இருவருக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதில், பொதுத்தேர்தலை இலக்கு வைத்து ஆரம்பிக்கவுள்ள கூட்டணியின் தலைமைத்துவம், செயலாளர் பதவி மற்றும் வேட்பு மனுக்களில் பெரும்பான்மை சஜித் அணியினருக்கே வழங்கப்பட வேண்டும் என கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கைகளுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் அளித்துள்ளார்.

கூட்டணியின் தலைவர் பதவியை மாத்திரமே வழங்க முடியும் என்ற தனது இறுதித் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திடம் கூறியுள்ளார்.

ஏனைய இரு கோரிக்கைகளையும் அவர் நிரகரித்துள்ளார் என அறியமுடிகிறது.

இருப்பினும், தேர்தலில் தனக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காதபோது பிரதமர் பதவிக்கு தாம் போட்டியிட முடியாது என்பதை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அதனால், பிரதமர் பதவிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை போட்டியிடுமாறு கோரியுள்ள சஜித், எதிர்வரும் பொதுத் தேர்தலையும் வழிநடத்திக்கொள்ளுமாறும் அதிருப்தியாக கூறிச்சென்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் இந்து – பௌத்த மாநாடு!

யாழ்பாணத்தில் இந்து – பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு நாள் மாநாடு இன்று நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு நல்லை திருஞான சம்பந்தர் ஆதினத்திலிருந்து பௌத்த துறவிகள் , இந்து குருமார்கள் மேளதாள நாதஸ்வர வாத்தியம் மற்றும் கண்டிய நடனத்துடன் நல்லூர் கந்த சுவாமி ஆலையத்துப்கு அழைத்து வரப்பட்டு பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து யாழ். நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் மாநாடு நடைபெறுகிறது.

முகக்கவசங்களுக்கு விலை நிர்ணயம்; மீறுவோர் மீது நடவடிக்கை!

உலகை அச்சுறுத்த ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் முகக் கவசங்களுக்கு விலைகளை நிர்ணயித்துள்ளது இலங்கை அரசு.

குறித்த வைரஸ் பரவும் நிலையில், முகக்கவசங்களின் விலைகள் அதிகமாகியுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.

அத்துடன், சாதாரண முகக் கவசத்தின் அதிகூடிய விலை 15 ரூபா எனவும், சுவாச வடிகட்டித் துகள்கள் நிரப்பப்பட்ட முக கவசத்தின் விலை 150 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறையில் மூச்சுத்திணறிய மாணவியை விடுப்புப் பார்த்த ஆசிரியர்கள்!

வகுப்பறையில் சுவாசிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்த மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு எவரும் முன்வராத சோகச் சம்பவம் ஒன்று கண்டியிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

13 வயதுடைய மாணவி, வகுப்பறையில் இருந்தபோது சுவாசிப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். அவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்காக அங்கிருந்தவர்கள் அம்புலன்ஸ் வாகனத்தை அழைத்துள்ளனர்.

அம்புலன்ஸ் வாகனம் பாடசாலைக்குள் வந்த பின்னர் குறித்த மாணவியை வாகனத்தில் ஏற்றி அமரவைப்பதற்கு, எந்தவொரு ஆசிரியரும் முன்வரவில்லை எனத் தெரயவருகின்றது.

பின்னர் அம்புலன்ஸ் வாகனத்தில் இருந்தவர்கள் மாணவியை ஏற்றியதோடு, மாணவியை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு பாடசாலையிலிருந்து ஆசிரியர் ஒருவரை வைத்தியசாலைக்கு வரும்படி கோரியுள்ளனர். அதற்கும் எந்தவொரு ஆசிரியரும் செல்லவில்லை.

இதனால், பாடசாலைக்கு முன்னால் காவலில் இருந்த பொலிஸாரே வைத்தியசாலைக்குச் சென்றனர் எனக் கூறப்படுகின்றது.

சுமார் 15 நிமிடங்களாக மாணவியை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல ஆசிரியர்களும் பாடசாலை குழாமும் யோசித்துக் கொண்டிருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.