வடக்கின் பல பகுதிகளிலும் வாள்களுடன் நடமாடியோர் கைது!

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

“சந்தேக நபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் வட மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனர்” என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

“அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியுள்ளது எனக் கிடைத் தகவலையடுத்து, ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.

கொள்ளையிட்ட சுமார் 16 பவுண் நகைகளை நெல்லியடியிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர். கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர். ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தோர்.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று தொடக்கம் நான்கு பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூதூரில் காணி உறுதி வழங்கும் விழா!

திருகோணமலை – மூதுார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அரச காணிகளில் வசித்து வரும் கடற்கரைச்சேனை, ஷாபி நகர் ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த 84 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு மூதுார் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கலந்துகொண்டார். அவருடன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் டீ.ரவிராஜன், ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மூதூர் பிரதேச செயலக பிரிவில் காணி அனுமதிப்பத்திரமின்றி வசித்து வரும் பல குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன என மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தெரிவித்தார்.

(அப்துல்சலாம் யாசீம்)

சுமந்திரனின் ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’

‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன், வட மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அதிகாலையில் ஊருக்குள் புகுந்த யானைகளால் பெரும் சேதம்!

திருகோணமலை சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் கிராமத்துக்குள் இன்று (29) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரும் மரங்களை துவம்சம் செய்துள்ளன.

இதன்போது நான்கு குடுடும்பங்களுக்குச் சொந்தமான 40 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் துவம்சம் செய்யப்பட்டன.

அதேவேளை, தாம் கஷ்டப்பட்டு இந்தப் பயிர்களை உருவாக்கினர் எனவும், வீடுகளில் சிறு பிள்ளைகளை உள்ளமையால் அச்சமாக உள்ளது எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட தமக்கு அரசாங்கத்தால் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் யானைகள் ஊருக்குள் உட்புகாத வகையில் வேலிகளை அமைத்துத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

வேலை தேடிச் சென்ற இடத்தில் இருவர் செய்த வேலை; சி.சி.ரி.வியில் சிக்கினர்!

ஹோட்டலுக்கு வேலை தேடிவந்த இருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் கைத்தொலைபேசியைத் திருடிய சம்பவம் ஒன்று பதுளை நகரில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரும் வேலை தேடி குறித்த ஹோட்டலுக்குச் சென்றனர் எனவும், அவர்களுக்கு அங்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் தங்குவதற்கான வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஆடை மாற்றிவிட்டு வருகிறார்கள் எனக் கூறி, அறைக்குச் சென்ற இருவரும், திட்டமிட்ட அடிப்படையில் அங்கு தங்கியிருந்த வேறொருவரின் கைத்தொலைபேசியைத் திருடிச் சென்றுள்ளனர்.

சுமார் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவர் தொடர்பான காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவில் சிக்கியுள்ளன.

டிப்பரில் ஏற்றப்பட்ட 320 கிலோ கஞ்சா மீட்பு; சாரதியும் கைது!

கிளிநொச்சியில் 320 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து வலைப்பாடு பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின்போது, டிப்பர் வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. இதன்போது வாகன சாரதியும் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் வவுனியா- மரதன்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைதான சந்தேக நபரையும், மீட்கப்பட்ட கஞ்சாப் பொதிகள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஜெயபுரம் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் பாரிய நீர் சுத்திகரிப்பு நிலையம்!

“கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில், உலக வங்கியின் நிதி உதவியுடன் குடிநீர் விநியோகத் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளது. அதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது” என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியின் குடிநீர் விநியோகத் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் கூட்டம் கிளிநொச்சி மாவட்ட செயலத்தில் இடம்பெற்றது.

இதில், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுகளில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற குழாய் வழி குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராயப்பட்டது.
அதன்போது குறித்த பிரதேசங்களின் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்

பின்னர் இங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,

“கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்துக்கு அமைவாக உலக வங்கியின் நிதி உதவியுடன் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற குடிநீர்த் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் ஆராயப்பட்டன.

இம் மாவட்டத்தின் தென்மேற்கு கிராமங்கள், யாழ். பல்கலைக் கழகத்தின் கிளிநொச்சி வளாகமும் அதனை சூழவுள்ள பிரதேசங்களும், கோணாவில், காந்திகிராமம்,புதுமுறிப்பு, செல்வாநகர்,ஊற்றுப்புலம், பொன்னகர்,பாரதிபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், ஏனைய பிரதேசங்களான காஞ்சிபுரம், தட்டுவன்கொட்டி, கல்லாறு, உழவனூர் அதனை அண்டிய பிரேதேசங்கள், பூநகரியின் வலைப்பாடு, வேரவில், கரியாலைநாகபடுவான், சோலை, பல்லவராயன் கட்டு, ஜெயபுரம் உள்ளிட்டபெரும்பாலான கிராமங்கள், பளையில் கிளாலி, இயக்கச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன், குடிநீர் விநியோகத் திட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதால் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட நீர் தினமும் பெறவேண்டி இருப்பதால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் கிளிநொச்சியில் உருவாக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சில வாரங்களுக்கு முன் குடிநீர் விநியோகத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமரையும், இராஜாங்க அமைச்சர் வாசதேவ நாணயக்காரவையும் சந்தித்து கலந்ரையாடியிருந்தேன். என்னுடன் இங்குள்ள அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த மாவட்ட கூட்டமும் இடம்பெற்றது” என்றார்.

இக்கூட்டத்தின்போது, கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகத் திட்டத்தைத் தடையின்றி மேற்கொள்வதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சின்னம் என்ன? மீண்டும் ஞாயிறு கூட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் குறித்து முடிவு எடுக்க இன்று மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் தீர்மானம் இன்றி முடிவடைந்துள்ளது.

இதன்படி நாளைமறுதினம் (01) மாலை மீண்டும் கூடி முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இன்று கூடிய செயற்குழுவில் யானை சின்னமா அல்லது அன்னச் சின்னமா என்று இறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நாளைமறுதினம் வரை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட மறுக்கும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கஜேந்திரகுமார் வலியுறுத்து!

“நீதியை நிலைநாட்ட மறுக்கின்ற இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கையை மனித உரிமை பேரவை விடுக்கப்படவேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான பொது விவாதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று உரையாற்றினார். இதன்போது அவர் மேற்படி வலியுறுத்தலை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியவை வருமாறு-

30/1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடத்தை குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை கணிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது.

இந்தப் பிரேரணையின் உள்ளடக்கமானது, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தது. இதனால், தமிழர்களால் இப்பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்டது.

இருப்பினும், இந்த 30/1 பிரேரணையானது, இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, அது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அங்கத்துவர்கள் பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டும் இருந்தது.

இந்த 30/1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு (Hybrid) குற்றவியல் பொறிமுறையைக் கொண்டிருக்கும் என்று, தமிழர்களுக்கு சொல்லப்பட்டபோதும் அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக விசாரணைக்குள் மட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்தப் பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும் , தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு கொடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பரில் இலங்கையில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்திருக்கிறது.

இங்கு இழைக்கப்பட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவரே இப்போது புதிய ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

இந்த புதிய அரசாங்கமானது, எதிர்பார்க்கப்பட்டபடியே 30/1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக இந்த மன்றுக்கு அறிவித்திருக்கின்றதன் மூலம் இந்தப் பிரேரணையை நிராகரித்திருக்கின்றது .

நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கை விடுக்கப்படவேண்டும். என்றார்.

வெள்ளைவான் கடத்தல் வழக்கு: கரன்னாகொடவை நிரபராதி என விளித்த அமைச்சர்!

ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரை வெள்ளை வானில் கடத்தி காணாமல் போகச்செய்த வழக்கில், விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொடவை, நிராபராதி என்று அரசாங்கத்தின் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நான்கு தடவைகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத அட்மிரல் கரன்னாகொடவுக்கு நான்கு அழைப்பாணைகள் பிறப்பிக்கப்பட்டபோதும், போரை முடிவுக்குக் கொண்டுவர உதவிய படை அதிகாரி என்ற ரீதியில் மன்றில் முன்னிலையாகாமல் காரணம் முன்வைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008, 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேரது வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை மற்றும் பிரதான நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவரும் நிலையில், இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொட நான்கு தவணை விசாரணைகளிலும் முன்னிலையாகவில்லை.

முதலாவது விசாரணை அமர்வில் அவர் முன்னிலையாகாதபடியால் அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து அவர் முன்னிலையாகத் தவறியதால் 4 தடவைகள் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டன.

அவரது நீதிமன்ற அவமதிப்பு செயற்பாட்டுக்கு, வழக்கு விசாரணையின்போது நீதவான் அண்மையில் அதிருப்தியும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.

இதன்போது, அட்மிரல் வசந்த கரன்னாகொட பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன,

“வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத அட்மிரல் வசந்த கரன்னாகொட நிரபராதி.

நீதிமன்றத்தை அவர் அவமதிக்கிறார் எனக் கூறுவது முற்றிலும் பொய். மிகவும் பொய்யான குற்றச்சாட்டின்கீழ் நிரபராதி ஒருவரை கைது செய்வதாயின் அது சாதாரண விடயமல்ல. படையினருக்கெதிராக இந்த நாட்டில் பாரிய சூழ்ச்சிகள் இடம்பெற்றதை ஊடகவியலாளர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டுக்கு எதிராகவும் நாட்டுக்கு வெளியே ஜெனிவாவிலும் படையினர் இனப்படுகொலை செய்தனர் எனவும் போர்க் குற்றம் புரிந்தனர் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றபோதிலும், அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

தமது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற நிரபராதி ஒருவரை கைது செய்ய முனையும்போது, அதற்கெதிராக கருத்து முன்வைத்து நீதிமன்றத்துக்கு செல்லாமல் இருக்க முடியும் என்பது அவருக்கான உரிமையாகும்.

இது கவலைக்குரிய விடயமல்ல. நீதிமன்றத்துக்கு ரஞ்சன் ராமநாயக்க எவ்வளவு அவமதிப்பு செய்திருக்கின்றார். அதுவும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னரே அவர் கைது செய்யப்பட்டார். கைது இடம்பெறுகையில் அரசாங்கம் தலையீடு செய்து அந்தக் கைதைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. வசந்த கரன்னாகொட என்பவர் போரிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய படை அதிகாரி.

அவர் இந்த நாட்டுக்காக எவருமே செய்ய முடியாத அளப்பரிய அர்ப்பணிப்பைச் செய்தவராக உள்ளார். போலியான வழக்கு தொடரப்பட்டமை குறித்து நீதிமன்றத்துக்கு கருத்து முன்வைத்திருக்கலாம். வசந்த கரன்னாகொட நீதிமன்றத்துக்கு தாம் சார்பான கருத்துகளை முன்வைத்திருக்கின்றாரா, இல்லையா? என்பதை நான் கேட்டு சொல்கின்றேன்” என்றார்.

கிளிநொச்சியில் ஐவருக்கு டெங்கு; கொழும்பிலிருந்து காவி வந்தனரா?

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட ஐவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சுகாதார திணைக்கள சாரதி உட்பட ஐவருக்கே டெங்குக் காச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கொழும்புக்குச் சென்று வந்ததன் பின்னரே டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, டெங்குக் காச்சல் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டால், அவருக்கு டெங்குக் காய்ச்சல் தொற்றியுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக குறித்த நோயாளியின் வீட்டுக்குச் செல்லும் தொற்று நோய் தடுப்பு பிரிவினர், புகை அடித்து டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமை.

ஆனால், தற்போது அச்செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நியமனம் தந்துவிட்டார்கள் ஆனால் கடமை செய்ய விடுகிறார்கள் இல்லை!

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றியவர்கள் இன்று (28) காலை முதல் வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றிய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதார தொண்டர்களுக்கு, அண்மையில் நிரந்தர நியமனத்துக்கான கடிதங்கள் வழங்கப்பட்டன. எனினும், இன்றுவரை கடமையைப் பொறுப்பேற்க விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் – கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

சவேந்திர சில்வாவுக்காக அமெரிக்காவை எதிர்த்த சாய்ந்தமருது வாசி!

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இன்று (28) காலை நபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவினால் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அமெரிக்காவுடன் ஒப்பந்தம் வேண்டாம்; 480 மில்லியன் டொலர்களை இழந்தது இலங்கை!

அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தில் கைச்சாதிடாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

அமைச்சரவை இதற்கான அங்கீகாரம் அளித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதனூடாக இலங்கை அரசாங்கத்துக்கு எம்.சி.சி. ஒப்பந்தத்தின் ஊடாக பெறவேண்டியிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட்டுள்ளன.

அர்ஜூன மகேந்திரன்: சிங்கப்பூர் மெளனம்; இலங்கை கவலை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோசடியில் தேடப்பட்டுவரும் சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் தொடர்பான கோரிக்கைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரை பதிலளிக்காமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சாதகமான பதில் கிடைத்தவுடன் அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்து அழைத்து வருவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று தகவல், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலமான 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடி குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதில், வங்கியின் முன்னாள் ஆளுநரான சிங்கப்பூர் பிரஜை அர்ஜுன மகேந்திரன் தலைமறைவாகியிருப்பதால் அவருக்கெதிராக சிவப்பு எச்சரிக்கையுடனான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதேவேளை, அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான அனுமதியையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சரும், பொதுஜன முன்னணி உறுப்பினருமான லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன, சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரை பதிலளிக்காமையையிட்டு கவலை வெளியிட்டார்.

“எமக்கு நோக்கம் இருக்கின்றது. எமக்கு என்னதான் தேவை இருந்தாலும் வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து சட்ட செயற்பாடுகள் இருக்கின்றன. அந்த சட்டவிதிமுறைகளை மீறி ஒருவரை நாடு கடத்தி அழைத்துவர முடியாது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகளுக்குக்கூட இதுவரை பதில் இல்லாமல் காணப்படுகின்றது. எனவே, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. மாறாக கோரிக்கைகளை முன்வைக்க முடியும்.

அங்கிருந்து சாதகமான பதில் கிடைத்தால், அதன் பின்னர் அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அர்ஜுன மகேந்திரன் மட்டுமல்ல, இதற்குப் பின்னால் இருக்கின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

இன்று அலரிமாளிகையில் ஷாணி அபேகேகர இல்லை, வேறு தரப்பினரும் இல்லை. கோப்புகளும் இல்லை. அனைத்தையும் பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கும் ஒப்படைத்திருக்கின்றோம். அரசியல் ஊடாக இதனை நாங்கள் செய்வதில்லை. எனினும் கடந்த ஆட்சிக்காலத்தைப்போன்று அரசியல் ஊடாக இதனை செய்கிறார்கள் என்றே பலரும் நினைக்கின்றார்கள். அப்படி செய்யமாட்டோம் எனக்கூறிதான் நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். அரசியல் பழிவாங்கல் செய்யமாட்டோம்” என்றார்.

ரசிகர்கள் மீது இராணுவம் தடியடி; கவலை தெரிவித்தது இலங்கைக் கிரிக்கெட் சபை!

அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்துக்கு வந்த இலங்கை ரசிகர்கள் மீது இராணுவம் நடத்திய தடியடித் தாக்குதலுக்கு இலங்கைக் கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் – இலங்கை அணிள் மோதிய இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி அம்பாந்தோட்டை மைதானத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.

இப்போட்டியைப் பார்க்க வந்த இலங்கை ரசிகர்கள் பலருக்கு நுழைவுச் சீட்டு முடிந்துவிட்டது என்ற பதில் ஜீரணிக்கமுடியாதமையால் கூச்சலிட்டனர்.

இதனால், ஏற்பட்ட பதற்றத்தையடுத்து இராணுவத்தினர் தடியடித் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணை அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் நேற்று வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் சபை, இந்த சம்பவத்துக்குக் கவலையும் வெளியிட்டுள்ளது.

யானையா? அன்னமா? தீர்மானிக்க கூட்டம் போடுகிறார் ரணில்!

எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணியின் சின்னம் குறித்த நெருக்கடிக்கு தீர்வுகாண ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று (28) மாலை கூட்டம்போட்டுக் கலந்துரையாடவுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் சின்னம் யானையா அல்லது அன்னமா என்ற நெருக்கடி நிலை தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகத்தில் செயற்குழு கூட்டம் இன்று மாலை கூடவுள்ளது.

எதிர்வரும் இரண்டாம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையிலான கூட்டணியின் அறிவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

எனவே, பெரும்பாலும் இன்றைய கலந்துலையாடலில் சின்னம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் மீது இராணுவம் தடியடி; டுவிட்டரில் கண்டித்தார் நாமல்!

அம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்துக்குச் சென்ற இலங்கை அணி ரசிகர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்திலேயே இந்த வலியுறுதலை விடுத்துள்ளார்.

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது.

இதைப் பார்வையிடச் சென்ற ரசிகர்களுக்கு அனுமதிச்சீட்டு முடிந்ததாக வழங்கப்பட்ட பதிலையடுத்து பிரதான நுழைவாயில் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்க இராணுவம் களமிறக்கப்பட்டதுடன், ரசிகர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.

இதையடுத்து, ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்து நாமல் ராஜபக்ச நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

திருமலை பிராந்திய சுகாதார திணைக்கள ஊழியர்களுக்கு பதவி உயர்வு!

கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றிய 64 பேருக்கு நேற்று (27) பதவியுயர்வு வழங்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி, கிழக்கு மாகாண ஆளுநரினால் அனுமதிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு அமைவாக, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப் பரீட்சை முடிவுகளுக்கு அமைவாக, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் திகதி சுகாதார சேவை உதவியாளர் (சாதாரணம்) பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டவர்களுக்கே இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதாரத் துறையில் ஏற்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவும் எதிர்காலத்தில் புதியவர்களுக்கு வெற்றிடங்களை வழங்கும் நோக்கிலும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக வைத்திய நிபுணர் எஸ். அருள்குமரன் தெரிவித்தார்.

(அப்துல்சலாம் யாசீம்)

ரீலோட் கடைகளில் நூதனத் திருட்டு; மக்கள் அவதானம்!

திருகோணமலை – அனுராதபுரம் சந்தியிலுள்ள தொலைபேசி மீள் நிரப்பும் நிலையங்களில் மோசடிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கையடக்கத் தொலைபேசிகளுக்கு போடப்படும் மீள்நிரப்பு அட்டைக்குப் பதிலாக மீள்நிரப்பு முறையைப் (ரீலோட்) பயன்படுத்தி வருகின்றனர்.

அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வருகின்றவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான முக்கிய இடம் அனுராதபுர சந்தியாகும்.

இவ்வீதியினூடாக புத்தளம், அனுராதபுரம், வவுனியா மற்றும் ஹொரவ்பத்தான போன்ற பகுதிகளுக்குச் செல்பவர்கள் உணவகங்களில் சாப்பிட்டு விட்டு, தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்வது வழக்கமாகும்.

இருந்தபோதிலும் குறிப்பாக தூர இடங்களில் இருந்து அவசரமாக வருபவர்களுக்கு ரீலோட் போடுவதற்காக வழங்கப்படுகின்ற பணத்தை அவர்கள் ரீலோட் செய்யாமல் மோசடி செய்கின்றனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

தூர இடங்களிலிருந்து வருபவர்களை ஏமாற்றுவது போல், திருகோணமலை நகர்ப்பகுதிகளில் உள்ளவர்களையும் ஏமாற்றும் நடவடிக்கையும் நடந்து வருகின்றது. உரியவர்களுக்கு ரீலோட் வரவில்லையென்று சொன்னால் மாத்திரமே மீண்டும் அவர்களுக்குரிய ரீலோட் அனுப்பி வைக்கப்படுகிறது எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருகோணமலை நகர் மற்றும் அனுராதபுரம் சந்தி போன்ற இடங்களில் இவ்வாறான மோசடிகள் அதிகமாக இடம்பெற்று வருவதால் மிக அவதானமாக மீள் நிரப்பு விடயங்களை மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.