மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்!

இலங்கையில் இன்று மாத்திரம் கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஏற்கனவே 20 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா உக்கிரம்; நாடாளுமன்றம் கூடும் சாத்தியம்!

கொரோனா வைரஸ் உக்கிரமடைந்து வரும் நிலையில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் அடுத்த வாரம் கூடும் சாத்தியம் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தை மீள் அழைப்பதற்காக எதிரணியினரால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைகளை, கோட்டா – மஹிந்த தலைமையிலான அரசாங்கம் நிராகரித்து வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோது இந்தத் தகவலை வெளியிட்டார்.

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை: கொரோனா அறிகுறிகளை மறைத்தால் கொலை முயற்சி வழக்கு! வெளிநாடுகளிலிருந்து வந்தோர் மறைந்திருந்தால் நாளைமுதல் கைது!!

கொரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் உதாசீனப்படுத்தும் செயற்பாட்டினால்தான் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன், தொற்றுக்கான அறிகுறிகளை இருந்தும் அதை மறைப்போர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்” பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு-

“கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளை மறைத்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற வேண்டாம். தைரியமாக பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

அத்துடன் மார்ச் 16ஆம் திகதிக்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்கள் அனைவரும் பொலிஸாரிம் தெரியப்படுத்தத் தவறினால் நாளை முதல் கைது செய்யப்படுவார்கள்.

மார்ச் 16 முதல் 19ஆம் திகதிவரை வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தப்படல் வேண்டும் என்பதை மீண்டும் அறிவிக்கின்றோம். எமது அவசர இலக்கத்தை அழைத்தோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ பதிவுசெய்துகொள்ளலாம்.

நாளைய நண்பகல் 12 மணிக்கு முன்னர் இவர்கள் பதிவுசெய்ய வேண்டும். பதிவுசெய்ய மறுத்தவர்கள் அனைவரையும் கைது செய்ய பொலிஸாருக்கு அதிகாரம் இருக்கிறது. அவர்கள் தங்கியிருக்கும் இடங்களையும் சீல் வைப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

தனிமைப்படுத்தல் விவகாரத்தில் மிகவும் கவலையான நிலைமையே ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறியை மறைத்ததால் களுபோவில வைத்தியசாலையில் ஒரு நோயாளர் அறையும், நீர்கொழும்பு பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையும் மூடப்பட்டுள்ளன.

நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடவேண்டாம். பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவ்வாறு மறைத்தால் கொலை முயற்சி குற்றச்சாட்டில் வழக்குப் போடுவதற்கான் சந்தர்ப்பம் உள்ளது.

கடந்த 10 நாட்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7 ஆயிரத்து 619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்து 664 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாத்திரம் 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் இன்று அதிகமானர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் ஆகியன நடத்தப்படுவதற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை செய்ய சட்டத்தரணிகளுக்குச் சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்படும். அவர்கள் தொழில்சார் சீருடையை அணிவது அவசியம்” ” என்றார்.

இலங்கையில் கொரோனா உக்கிரம்; இன்று மாத்திரம் 20 பேர் மீது தாவியது! வைத்தியசாலைகளை அவசர அவசரமாக தயார் செய்கிறது அரசு!!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், இலங்கையிலும் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த வைரஸைக் கட்டுப்படுத்தவும், வைரஸ் தோற்றுக்குள்ளாகியுள்ளனர் எனச் சந்தேகிக்கப்படுகின்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் இலங்கையின் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் அவசர அவசரமாகத் தயார்படுத்தி வருகின்றது.

மிகவும் அபாயமான காலகட்டமாக எதிர்வரும் இரண்டு வாரங்கள் சுகாதாரத் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைஅரசாங்கம் மும்முரமாக செய்துவருகின்றது.

இலங்கையில் இன்று பகல் 3 பேரும் மாலை 7 பேரும் தற்போது 10 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது.

“அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று சந்தேக நபர்களைச் சேர்ப்பதற்கான முன்னேற்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“தற்போது அடையாளம் காணப்படடவர்களில் மூவர் கண்டி அக்குறணைப் பிரதேசத்தையும், 06 பேர் களுத்துறைப் – பேருவளை பிரதேசத்தையும், மற்றையவர் கொழும்பு – தெஹிவளையைச் சேர்ந்தவர் ஆவார்.

கொரோனா வைரஸ் சந்தேக நபர்களுக்கு முதல் சிகிச்சை அளிப்பதற்காக மஹரகம வைத்தியசாலையைத் தெரிவுசெய்துள்ளோம்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அபாய வலயமாக தற்போதும் காணப்படுகின்றன. களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலும் இரண்டு வைத்தியசாலைகளை தெரிவுசெய்துள்ளோம். தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறவர்கள் இந்த வைத்தியசாலைகளில் மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள முடியும்” என்றார்.

ஊரடங்கு அறிவித்தல்!

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (01) காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளது.

பின்னர் மீண்டும் நாளை பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் அமுலில் இருக்கும்.

அத்துடன், அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய பயணிகளுக்கு மாவட்டம் விட்டு மாவடடம் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உணவு தேடி நகருக்குள் நடமாடும் மான்கள்!

திருகோணமலை கோட்டைப் பகுதியில் இருந்த மான்கள் அனைத்தும் உணவு தேடி மக்கள் நடமாட்ட அற்ற நிலையில் நகருக்குள் நடமாட ஆரம்பித்துள்ளன.

திருகோணமலைப் பகுதியில் கூட்டம் கூட்டமாக நின்ற மான்கள், தற்போது உணவின்றி பசியினால் திசை மாறி மக்களைத் தேடிச் செல்கின்றன.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து மரக்கறிக் கடைகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டிருப்பதால் மான்கள் உண்பதற்கு உணவின்றி வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே, மான்களுக்கு உண்பதற்கு உணவுகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

இன்று மாத்திரம் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் இன்று மாலை வரை மாத்திரம் 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பகல் 7 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் இலங்கையில் மொத்தமாக 132 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இறந்தவர் யாழில் சுற்றித்திரிந்த இடங்கள் முற்றுகை; பழகியவர்களின் பெயர்ப்பட்டியலும் தயார்!

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர், யாழ்ப்பாணத்தில் சுற்றித் திரிந்த இடங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ். நகரை அண்மித்த ஜந்து சந்திப் பகுதியே இவ்வாறு சுகாதார துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயால் நேற்று மாலை உயிரிழந்தவர், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்குச் சென்று கடந்த 7ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்துள்ளார்.

பின்னர் நீர்கொழும்புச் சென்ற அவர், கடந்த 16ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

நோய் தீவிரமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் நடமாடிய இடங்கள், பழகிய – சந்தித்த நபர்கள் குறித்த விசாரணைகளைக்
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன.

இதற்கமைய சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாகத் தயாரிக்கப்பட்டு, அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாவகச்சேரியில் மருந்து தெளிப்பு!

கொரோனோ வைரஸ் தாக்கத்தைக் கட்டப்படுத்தும் நோக்கில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை, சாவகச்சேரியில் இன்று மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பிலிருந்த வந்துள்ள விசேட குழுவினர் – விசேட அதிரடிப்படையினர் – பொலிஸார் – சுகாதாரதப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்ற இந்நடவடிக்கை, யாழ். நகரில் ஆரம்பித்து தொடர்ச்சியாக பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று சாவகச்சேரிப் பகுதியின் பல இடங்களில் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

குறிப்பாக சாவகச்சேரி பஸ் நிலையம், பொதுச் சந்தை, ரயில் நிலையம், பிரதேச செயலகம் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பல இடங்களில் கிருமி நீக்கி விசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல தொடர்ந்தும் ஏனைய இடங்களிலும் இச் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 பேர் குறித்த தகவல் வெளியானது!

கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட எட்டுப் பேர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வைத்தியசாலையில் கடைசியாகச் சேர்க்கப்பட்டிருந்த 8 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஏனைய 6 பேர் குறித்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரியவரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் ஊடக அலுவலகம் மீது தாக்குதல்; கண்டுகொள்ளாத பொலிஸ்!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், கிளிநொச்சியில் ஊடக அலுவலகம் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (30) மாலை 5.30 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் மேற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இணையதளம் ஒன்றின் ஊடக அலுவலகம் ஒன்றுக்குள் நேற்று (30) மாலை உள்நுழைந்த ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று, எவ்விதக் கேள்விகளும் இன்றி அங்கு கடமையில் இருந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீது போத்தல் ஒன்றை உடைத்து குத்தியுள்ளனர்.

இதன்போது அவர் தடுக்க முற்பட்ட போது அவரது கையில் காயம் ஏற்பட்டது. அத்துடன், அலுவலகத்தில் இருந்த மடிகணிணி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்நிலையில் கடமையில் இருந்த ஊடகவியலாளர்கள் உட்பட நான்கு பணியாளர்கள் அறை ஒன்றுக்குள் ஒளிந்து கதவைப் பூட்டிக்கொண்டனர். இதையடுத்து குறித்த குழுவினர் கதவை அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது உடனடியாக கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும் இன்று (31) காலை வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனவும், தாங்கள் இன்று காலை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யவுள்ளனர் எனவும் தெரிவித்த ஊடக அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள், தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களின் ஒருவரின் புகைப்படம் தங்களிடம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

திருமலைக் கிராமங்களில் அத்தியாவசியப் பொதிகள் வழங்கிய மக்கள் நலன்விரும்பிகள்!

திருகோணமலை என். சீ. வீதி மொஹிதீன்தீன் ஆண்டவர் ஜும்மா பள்ளி நிர்வாகமும், சென்ட்ரல் ரோட் மஸ்ஜிதுல் அலி ஜூம்மா பள்ளிவாயல் நிர்வாகமும் இணைந்து திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் உதவியுடன் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை நகரை அண்மித்த 10ஆம் குறிச்சி, திருக்கடலூர், பெரியகடை மற்றும் சோனகவாடி போன்ற இடங்களில் சமூர்த்தி உதவிகள் பெறாத வாழ்வாதாரத்தில் பின்தங்கிய 600 குடும்பங்களுக்கே இந்த அத்தியவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

திருகோணமலை இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் இணைத் தலைவர்களான எஸ்.எச். எம் நியாஸ் ஹாஜி, இல்யாஸ் ஹாஜி உபதலைவர்களான எம். எஸ். பீ. கணி, ஏ. ஜே. எம். ஹஸன் மற்றும் செயலாளர் எம். எப். வலீத் ஹாஜி, றிலா ஹாஜி ஆகியோர்கள் கலந்துகொண்டு இப்பொதிகளை வழங்கினர்.

(அப்துல்சலாம் யாசீம்)

10 பேருடன் நடக்கவுள்ள புளியம்பொக்கனை நாகதம்பிரான் பொங்கல்!

“வரலாற்று சிறப்புமிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இவ்வருடம் அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் மட்டுமே இடம்பெறும்” என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. நாட்டில் எந்தவிதமான மத வழிபாடுகளையும் மேற்கொள்ள வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொது மக்கள் இந்த நிலமையை புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மேலும் எதிர்வரும் ஆறாம் திகதி இடம்பெறவுள்ள புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் நிகழ்வில் பங்குகொள்கின்ற – அனுமதிக்கப்பட்ட 10 பேரும் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச மருத்துவ அதிகாரி ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் பொலிஸாரின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்!

கோரோனா வைரஸால் நேற்று உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் குறித்த நபர், தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டார்.

அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த நோயாளியின் விவரங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சேகரித்துள்ளது.

அதன்படி, உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். எனினும் அவர் நீண்ட காலமாக நீர்கொழும்பு கொச்சிக்கடையில் வசித்து வருகிறார். அத்துடன், அவர் கடந்த மார்ச் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்து திரும்பியுள்ளார்.

அவரது மகன்கள் இருவரும் வியாபார நோக்கங்களுக்கான கடந்த பெப்ரவரியில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்த நோயாளி நீர்கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டார். எனினும் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படாமலேயே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது” என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.

கிழக்கின் பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் ரெடி!

ஏப்ரல் மாதத்துக்கான பொதுசன மாதாந்த கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள – மாகாண பணிப்பாளர் என். மதிவண்ணன் தெரிவித்தார்.

அதன்படி, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களின் வங்கிக் கணக்குகளுக்கும் இன்று (30) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

கிழக்கு மாகாணத்தில் பொதுசன மாதாந்த உதவி கொடுப்பனவாக 72 ஆயிரத்து 536 குடும்பங்களுக்கு 20.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில், திருகோணமலை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 216 குடும்பங்களுக்கு 4 மில்லியன் ரூபா நிதியும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 31 ஆயிரத்து 443 குடும்பங்களுக்கு 8.7 மில்லியன் ரூபா நிதியும், அம்பாறை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 877 குடும்பங்களுக்கு 7.4 மில்லியன் ரூபா நிதியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காச நோய், சிறுநீரக நோய், புற்றுநோய், தொழுநோய் மற்றும் தலசீமியா நோய் போன்றவற்றுக்காக கிழக்கு மாகாணத்துக்கு 1.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனூடாக திருகோணமலை மாவட்டத்தில் 222 குடும்பங்களுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 746 குடும்பங்களுக்கும் அம்பாறை மாவட்டத்தில் ஆயிரத்து 103 குடும்பங்களுக்கும் இந்நிதி பகிர்ந்தளிக்கப்படும்.

அத்துடன், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத்தின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட 14 முதியோர் இல்லங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்காக அங்கு தங்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபா நிவாரணப் பொதி சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த காலங்களில் தபால் கந்தோர் ஊடாக வழங்கப்பட்ட இந்தக் கொடுப்பனவு, இம்முறை கொரோனா தொற்று காரணமாக கிராம சேவையாளர்களிடம் பெற்றுக் கொள்ளும்படியாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.. “என்றார்.

இலங்கையில் கொரோனாவால் இரண்டாவது மரணம்!

உலகளவில் பலியெடுப்பை நடத்திவரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ், இலங்கையில் இரண்டாவது நபரின் உயிரையும் இன்று மாலை பறித்துள்ளது.

கொரோனா வைரஸால் அண்மையில் முதலாவது நபர் இலங்கையில் உயிரிழந்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது நபர் பலியாகியுள்ளார்.

இவர் 64 வயதுடையவர் எனவும், நீர்க்கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.

யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட எழுவர்; பரிசோதனை முடிவு இன்று இரவு வரும் சாத்தியம்!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 7 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என யாழ். வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் நேற்றும், யாழ். பொலிஸ் அதிகாரி ஒருவர், தாவடிப் பகுதியைச் சேர்ந்த பெண், நெடுந்தீவில் வெளிநாட்டவர் ஒருவருடன் சென்று வந்த ஆனைக்கோட்டைப் பகுதியினைச் சேர்ந்த ஒருவர், உரும்பிராய்ப் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரி ஒருவர் மற்றும் மன்னார் மாவட்டத்திலிருந்து வந்த இருவர் என ஏழுபேர் கடந்த 24 மணி நேரத்துள் யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது, அவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதணைக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிசோதனைக்காக முடிவுகள் இன்று இரவு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்காய் உழைக்கும் சுகதார ஊழியர்களைக் கவனியுங்கள்!

“சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டும்” என திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் வைத்தியசாலை ஊழியர்களும் வைத்தியர்களும் இரவு பகலாக கடமையாற்றி வருகின்றனர். ஆனாலும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவுகள், போக்குவரத்துக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில்,

கடந்த காலங்களில் நோயாளர்களை ஒரு வைத்தியசாலையிலிருந்து இன்னுமொரு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் பட்சத்தில், அம்புலன்ஸில் செல்லும் ஊழியர்களுக்கு பிரயாணக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்திருந்தபோதிலும், தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் வைத்தியசாலை ஊழியர்கள் இரவு – பகலாக கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மேலதிகக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. நோயாளர்களின் நலன்கருதி ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் அனைத்து மக்களும் ஓடி ஒளிகின்ற சந்தர்ப்பத்தில் நோயாளர்களுடன் நேரடியாக வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் மாத்திரமே தங்களது உயிரையும் பொருட்படுத்தாது தங்களது கடமையை செய்து வருகின்றார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு மேலதிகமான கொடுப்பனவுகளை வழங்காமல் இருப்பது அரசாங்கம் அவர்களுக்கு செய்யும் பாரிய சதி. கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் கூடிய கவனம் எடுத்து சுகாதாரத்துறை ஊழியர்களின் மேலதிகக் கொடுப்பனவுகளை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றார்.

(அப்துல்சலாம் யாசீம்)

கொரோனா சந்தேகங்களைத் தீர்க்க 24 மணி நேர சேவை!

வடமாகாணத்தில் கொரோனா தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், இவை தொடர்பாக சுகாதார ரீதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான ஆலோசனைகளையும், தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் செயற்படும் வண்ணம் உதவி அழைப்பெண் சேவையொன்று இன்று (30) முதல் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 021-2217982 அல்லது 021-2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை மேற்கொள்வதனூடாக பொதுமக்கள் இந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் கொரோனா தொற்று அறிகுறியுடன் பொலிஸ் உத்தியோகத்தர்!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டமையால் அவர், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்காக கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தரப்புத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று முற்பகல் 10.30 மணிவரையான நிலவரத்தின்படி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 3 பேர் கோரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்காக கண்காணிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.