மாறுகிறார் வடக்கின் ஆளுநர்?

வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரியுள்ளார் என்று அறிய முடிகிறது. இதனால், வேறொருவர் ஆளுநராக நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

 வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுப்புக் கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதன்படி அவர் நாளை (01) தொடக்கம் வரும் மூன்று மாதங்களுக்கு இந்த விடுப்பைக் கோரியுள்ளார்.

அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

இந்நிலையில் வேறொருவர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அண்மைக்காலமாக கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்தே பணிகளை முன்னெடுத்தார்.

அதேவேளை, தற்போதைய இடர்காலத்தில் அவரது செயற்பாடுகள் குறிப்பிடத்தக்களவுக்கு இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

யாழ்ப்பாணத்தில் நள்ளிரவுமுதல் பாணின் விலை அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலையை 3 ரூபாவால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவுக்கு பிறிமா நிறுவனத்தால் வழங்கப்பட்ட 3 ரூபா விலைக்கழிவு இடைநிறுத்தப்பட்ட நிலையில் இந்த அனுமதி யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 63 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

“இறக்குமதி செய்யப்படும் மாவின் விலை அதிகரித்தமையாலும் பாண் உற்பத்திக்கான உப மூலப்பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்தமையாலும் யாழ்ப்பாணத்தில் பாணின் விலையை அதிகரிக்க அனுமதியளிக்கவேண்டும்” என்று யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம், யாழ். மாவட்டச் செயலாளரிடம் கோரியிருந்தது.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் 450 கிராம் எடைகொண்ட பாண் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா: இன்று பதினொருவர்; ஒருவர் யாழ். வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டார்!

இலங்கையில் இன்று 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.30 மணியளவில் நான்கு பேரும் சற்றுமுன்னர் 7 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

இதன் அடிப்படையில் இன்று மாத்திரம் இதுவரை 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனோ தொற்றியவர்களின் எண்ணிக்கை 660 ஆக உயர்ந்துள்ளது.

இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்ட ஏழு பேரில் ஒருவர், முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஜாஎலயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த பெண் நேற்று யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இடைவெளி முக்கியம் மக்களே!

கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் நோக்கில், 10 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை சிவன் அறக்கட்டளை அமைப்பு, யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கே.குமாரவேலிடம் கையளித்துள்ளது.

இதேவேளை, வைத்தியசாலை ஊழியர்களுக்கு தேவையான கண்ணாடியிலான முகக் கவசங்களும் தயாராக உள்ளன எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஸ்தாபகரான கணேஸ்வேலாயுதம் இன்று (30) யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரவித்தவை வருமாறு-

“எமது அமைப்பு மக்கள் நலன் சார்ந்து செயற்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல்வேறுபட்ட மக்கள் நலன் பணிகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது கொரோனாவின் தாக்கம் நாட்டில் அதிகரித்து செல்கின்றது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவையான ஒன்றாகும். இதன் பிரகாரம் சமூக இடைவெளி குறித்து மக்களுக்குத் தெளிவூட்டும் வகையில் 10 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளர் கே.குமாரவேலிடம் கையளித்தோம்.

இந்தத் துண்டுப்பிரசுரங்களில் எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்கு சமூக இடைவெளி முக்கியமானது என்பதை படம்பிடித்து காட்டியுள்ளோம். அத்துடன், எப்போதும் ஒவ்வொருவருக்கும் இடையில் 3 அடி இடைவெளியைப் பேண வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப்பிரசுரங்களைக் கையளித்தபோது வடமாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களை மக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஒட்டுவதற்கு மேலும் 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்கள் தருமாறு எம்மிடம் சுகாதார துறையினரால் கோரிக்கை விடுகப்பட்டது.

இதனை நாம் தருகிறோம் என யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளரிடம் தெரிவித்தோம். இதற்கமைய மேலும் 5 ஆயிரம் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு விரைவில் வழங்கவுள்ளோம்.

இவ்வாறான நிலமையில் வைத்தியசாலை ஊழியர்களின் நலனைப் பேணும் வகையில் அவர்களுக்குத் தேவையான கண்ணாடியில் அமைந்த முகமூடிக் கவசங்களைப் பெற்றுக்கொடுக்கத் தயாராக உள்ளோம். இதை வடமாகாண சுகாதார பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளோம்.

முதல் முதலில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது மக்கள் சமூக இடைவெளியை பேணாதிருந்தையிட்டு நாம் கவலை அடைந்தோம். இதன் பிரகாரமே மேற்படி துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வழங்க முன்வந்தோம்.

மேலும் எம்மால் நெல்லியடி சந்தைப் பகுதியில் மக்கள் கைகளை கழுவி சுகாதரத்தை பேணும் வகையில் கால் அழுத்தத்தினால் செயற்படுத்தப்படும் குழாய் நீர் செயற்றிட்டத்தை அமைத்து மக்கள் பாவனைக்கு கையளித்தோம்.

கொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு மக்களின் பங்களிப்பு முக்கியமானது. சமூக இடைவெளியைப் பேணுவது மாத்திரமல்லாது முகக் கவசங்களை அணிவது உள்ளிட்ட சுகாதாரத்தைப் பேணும் செயற்பாட்டை மக்கள் பொறுப்புடன் செய்ய வேண்டும்” என்றார்.

யாழ். உரும்பிராயில் கசிப்புடன் ஒருவர் கைது!

யாழ். உரும்பிராய் – செல்வபுரப் பகுதியில் கசிப்புடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், கசிப்புடன் குறித்த இளைஞரைப் பிடித்துள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார் எனவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

Lock Down ஆகப்போகும் அரசு!

“நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி தேவையான நிதிக்கான அங்கீகாரத்தை இலங்கை அரசாங்கம் பெறாவிட்டால் ஒட்டுமொத்த அரச பொறிமுறைகளும் முடங்கிவிடும் அபாயம் ஏற்படும்” என்ற எச்சரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் செனட் சபைக்கும், அந்நாட்டு ஜனாதிபதி டொனால் ட்ரம்புக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டினால் நிதி அங்கீகாரம் வழங்கப்படாததினால் ஏற்பட்ட விளைவுகளை சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆரம்ப ஆட்சி நாட்களிலேயே அவர் ஒரு செல்லாக்காசாக போய்விடும் நிலைவை வரலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

இதன்போது அவர், நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் இன்றி அரச நிதியை கையாள ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கிறது என அரச தரப்பினர் கூறிவரும் தர்க்கத்தை அடியோடு நிராகரித்த அவர், அரசாங்கம் விரைவில் முடங்கிப்போகும் அபாயம் நெருங்கிவருகிறது எனவும் எச்சரித்தார்.

இந்த அரசாங்கம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணி முன்வைத்த கோரிக்கையை நிராகரித்து வருகிறது. எனினும் அரசியலமைப்பின் பிரகாரம் புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கு மூன்று மாதங்களுக்கான நிதி திரட்டலை செய்ய ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது.

ஆனால், தற்சமயம் இப்படியான நிலைமை இல்லை. எதிர்வரும் சில தினங்களில் நாடாளுமன்றத்தை கூட்டி தேவையான நிதிக்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறாவிட்டால் ஒட்டுமொத்த அரசாங்கமும் முடங்கிவிடும்.

அமெரிக்காவின் செனட் சபை அந்நாட்டு ஜனாதிபதி டொனால் ட்டிரம்புக்கான நிதி ஒதுக்கீட்டை தடுத்தது. அதற்கெதிராக அனைத்து அரச நிறுவனங்களையும் அவர் மூடினார். சிறிது நாட்களில் அனைத்து அரசாங்கத்தின் மேம்பாட்டு நலத்திட்டங்களும், செயற்பாடுகளும் முடங்கின. அதனையடுத்து செனட் சபை மக்களின் நலன்கருதி நிதி அனுமதியை வழங்கியது.

அதேபோல ஒரு நிலைமை இலங்கைக்கும் வரலாம். கொரோனா முடக்கம் அல்ல, அரசாங்கத்தின் முடக்கம் விரைவில் வரலாம். இன்று ஜனாதிபதி அவசர காலச் சட்டத்தையும், அவசர நிலையையும் குழப்பிக்கொண்டார். தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அவசர நிலையை அறிவித்து நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.

இப்போது அவரது மக்கள் ஆணையின் ஆரம்ப நாட்களாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரியைப் போல அரசியலமைப்புக்கு முரணான செயற்பாட்டைசட செய்தால் ஜனாதிபதி கோட்டாபயவும் செல்லாக்காசாகிவிடுவார். நாங்கள் 2018ஆம் ஆண்டு ஒக்டோபரில் பரிந்துரைத்த விடயங்களுக்கு முரணாக மைத்திரி அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டார். அதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினோம். மைத்திரி செல்லாக்காசாகிப் போனார்.

அப்படியான நிலைமை மக்கள் ஆணையின் ஆரம்ப நாட்களிலேயே கோட்டாபய எதிர்கொள்ளக்கூடாது. அதற்காக நாங்கள் கைகொடுக்கவும் விரும்புகின்றோம்” என்றார்.

த.தே.ம. முன்னணியின் மணிவண்ணனிடம் விசாரணை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று விhயழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பங்கரவாதப் விசாரணைப் பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பிரிவின் விசாரணை அதிகாரிகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள மணிவண்ணிண் இல்லத்துக்கு இன்று காலை சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டில் வைத்து சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மணிவண்ணணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரிடம் வாக்கு மூலங்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தை நடத்தியிருந்தார் என்பது தொடர்பில் மணிவண்ணணிடம் இந்த விசாரணைகளை பங்கரவாதப் பரிவினர் மேற்கொண்டிருந்தனர் எனத் தெரிய வருகின்றது.

இதேவேளை, இவ் விடயம் தொடர்பாக மணிவண்ணணைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவ்வாறு பங்கரவாத விசாரணை பிரிவினர் தனது வீட்டுக்கு வந்தனர் எனவும், மாவீரர் தினத்தில் பங்குபற்றியமை தொடர்பில் தன்னிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர் எனவும் கூறினார்.

கிளி பிடிக்க தென்னையில் ஏறிய சிறுவன் மரம் முறிந்து பரிதாபம்!

கிளி பிடிக்க தென்னை மரத்தில் ஏறிய 13 வயதுச் சிறுவன், மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

யாழ். கடலுக்குள் சரிந்த அரச பஸ்!

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று கடலுக்குள் பாய்ந்ததில் நடத்துநர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் – யாழ்ப்பாணம் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

காய்ந்து போய் கிடந்த யாழில் கொட்டித் தீர்க்கும் மழை!

கடும் வெயில் நிலவி வந்த நிலையில், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை தொடக்கம் கடும் மழை பெய்து வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியான கால நிலை நிலவிவந்த நிலையில் தற்பொது மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மகிந்த தலைமையில் கூடிக்கதைக்கவுள்ள முன்னாள் எம்.பிகள்!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் நான்காம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து மகிந்த ராஜபக்ச பேசவுள்ளார்.

தற்போதைய இடர்காலம் குறித்து பேச, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச, அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் நான்காம் திகதி கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இடர்கால சட்டங்களை மீறிய 45 பேருக்கு நீதிமன்றம் தண்டனை!

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நடந்தமையால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 பேருக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் தண்டம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் வீதியில் பயணித்தவர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறிச் செயற்பட்டமை மற்றும் தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொண்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் மீது முன்வைத்து பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் இன்று (30) முற்படுத்தப்பட்னர்ர்.

இதன்போது சந்தேக நபர்கள், தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார். அதனால் அவர்களைக் குற்றவாளிகளாக இனங்கண்ட மன்று, ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 100 ரூபா தண்டப் பணமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக 500 ரூபா தண்டப்பணமும் விதித்து உத்தரவிட்டது.

இதேவேளை, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 264ஆம் பிரிவின் கீழ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ள இடங்களில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை அறிந்திருந்தும் அதனை மதிக்காது நடந்துகொள்ளும் நபர் ஒருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது ஆயிரத்து 500 ரூபா விஞ்சாத தண்டம் அல்லது சிறை மற்றும் தண்டப்பணம் அறவீடு ஆகிய தண்டனைகளை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கந்தளாயில் கொரோனா; இழுத்துமூடப்பட்ட கடைகள்!

திருகோணமலை – கந்தளாய் நகரில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டயதையடுத்து, அங்குள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

வர்தக சங்கம் விடுத்த அறிவித்தலுக்கமையவே வியாபார நிலையங்கள் இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அப்பிரதேசத்தில் கிருமித் தொற்று நீக்கி விசுறப்பட்டு வருகின்றது.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் – ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

(அப்துல்சலாம் யாசீம்)

கொரோனா: திருமலையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆராய்வு!

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், நோயாளர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நிலையங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன” என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக் குறித்து இன்று கருத்துக் கூறும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“திருகோணமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 829 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்துக்கிடமான 47 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பதவிசிறிபுர பகுதியில் இரண்டு பேரும் மஹதிவுல்வெவ பகுதியில் ஒருவரும் இணங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2 ஆயிரத்து 101 பேருக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் முடிவடைந்துள்ள நிலையில், 728 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எட்டுப் பேரின் மாதிரிகளும், தம்பலகாமம் பிரதேசத்தில் 12 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் அவர்களை தனிமைப்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சுகாதாரத் திணைக்கள ஊழியர்கள் தமது உயிர்களைப் பணயம் வைத்து, நோயாளர்களின் விடயத்தில் இரவு – பகலாக சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்தும் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கத் தயாராக உள்ளனர்.” என்றார்.

(அப்துல்சலாம் யாசீம்)

குறை மாதச் சிசுவை முற்றத்தில் புதைத்த இருவர் கைது!

யாழ். இணுவில் – மருதனார்மடம் பகுதியில் விடுதி ஒன்றில் சில மாதங்கள் தங்கியிருந்த ஆணும் பெண்ணும் தமது சிசுவை மண்ணுக்குள் புதைத்தனர் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணின் கருவில் வளர்ந்த சிசு, குறை மாதத்திலேயே நாவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தச் சிசுவை அவர்கள் விடுதியின் முற்றத்தில் வெட்டிப் புதைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இணுவில் – மருதனார்மடத்தில் உள்ள குறித்த விடுதிக்குச் சென்ற பொலிஸார், இருவரையும் கைது செய்தனர்.

கொக்குவிலையைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணும் உடுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய ஆணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.

இதன்போது பெண் கருவுற்று சில மாதங்களாகிய நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவாலியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரால் சட்டத்துக்குப் புறம்பாக சிசு அகற்றப்பட்டுள்ளது. அந்தச் சிசு விடுதியின் முற்றத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

சிசு புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்ட நிலையில், மல்லாகம் நீதிவானின் உத்தரவைப் பெற்று அதனை மீட்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இன்று இரவு முதல் திங்கள் வரை ஊரடக்கம்!

நாட்டில் தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில், இன்று (30) இரவு 8 மணி முதல் எதிர்வரும் நான்காம் திகதி அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலிலேயே இருக்கும்.

இன்று 30 பேர் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (29) இரவு மேலும் 19 பேர் அடையாம் காணப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இன்று மாத்திரம் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு!

சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவரது மனைவி வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மறவன்புலவிலுள்ள குறித்த உறுப்பினரு வீட்டுக்கு இன்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தோரே வாள் வெட்டுச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான அரியகுட்டி நிமலறோகன் எனவும், அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை, குறித்த பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த உறுப்பினர் உரையாற்றியதன் பின்னணயிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு நிதியை அரசாங்கம் ஆட்டையைப் போட்டதா?

“முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தற்போதும் இருந்திருந்தால் கொவிட்-19 என்கிற கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையில் உச்சம் தொட்டிருக்கும்” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

எதிரணியினர் கூறுவதுபோல வெளிநாட்டு நிதியுதவிகளை வேறு தரப்பினர் ஏப்பமிடவில்லை என்று தெரிவித்துள்ள பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அரசாங்கத்துக்கு எண்ணமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகள் பலவற்றிலிருந்தும் இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைத்த கோடிக்கணக்கான நிதிகளை ஒருசிலர் முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கலாம் என்கிற குற்றச்சாட்டை முன்வைத்துவரும் ஜே.வி.பி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிரணியினர், உடனே நாடாளுமன்றத்தைக் கூட்டி அதுகுறித்து ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

எனினும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றார்.

இந்நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க, எதிரணி கூறுவதுபோல வெளிநாட்டு நிதியுதவிகள் எவரும் கொள்ளையிடவில்லை என்று தெரிவித்தார். அத்துடன், அரசாங்கத்துக்கு மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“இன்று ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் மக்களிடையே, பொருளாதார மட்டம் உட்பட பல பிரிவுகளிலும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே தேர்தலை நடத்துவதற்கும் அரசாங்கத்துக்கு எண்ணமில்லை.

முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது நோக்கமாக அரசாங்கத்துக்கு இருப்பது கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வழிகளை செய்வதே ஆகும்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் காலத்தில் பொய் கூறியபடி சுகாதார அமைச்சராக பணியாற்றிய ராஜித சேனாரத்ன, இன்றும் அப்பதவியில் இருந்திருந்தால் நாடு அதளபாதாளத்தை நோக்கியே சென்றிருக்கும்.

இராணுவத்தைக் கொண்டு அரசாங்கம் கொரோனா தொற்றை ஒடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கெதிராக அவர் கருத்து வெளியிட்டிருக்கின்றார். இருப்பினும், அவரே போலி மருந்து இறக்குமதியில் பாரிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர். வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தில் வெளிநாட்டுத் தூதரகப் பெண் பணியாளரை காப்பாற்றுவதற்காகப் பொய்க்கதைகளைத் திரித்தவர்.

அதேபோல முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகரால் முடியும் என்றுள்ளார். ஆனால், இன்று சபாநாயகர் என ஒருவர் இல்லை. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்திய பின்னரே புதிய சபாநாயகர் என ஒருவர் நியமிக்கப்படுவார்.

இறுதி நாடாளுமன்ற அமர்வின்போது கடந்த அரசாங்கத்தினால் மிகுதிப் பணமாக செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளை செலுத்தித் தீர்ப்பதற்காக அரசாங்கம் கொண்டுவந்த யோசனைக்கு எதிராக கொதித்தெழுந்தவர்களே இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டி கொவிட்-19 வைரஸை ஒழிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய கைகளை உயர்த்துவோம் என்று நாடகமாடுகின்றனர்.

மறுபுறத்தில் அரசாங்கத்துக்குக் கிடைத்த வெளிநாட்டு நிதியுதவிகளை சிலர் ஏப்பமிட்டுள்ளனர் எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்றார்.

கடற்படையினர் 226 பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 226 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று புதிதாக மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 622 பேராக அதிகரித்துள்ளது.

இவர்களுள் 226 கடற்படையினரும் அடங்குகின்றனர். அதில், வெலிசறை முகாமில் இருந்த 147 பேரும், விடுமுறையில் சென்ற 79 பேரும் அடங்குகின்றனர் என இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.