மோட்டார் சைக்கிளில் சென்ற சிப்பாய் பலி!

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (31) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் கோமரங்கடவல-பக்மீகம-புலிக்கண்டி குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கபுறுபண்டாகே ரோஷன் சதுரங்க (வயது – 32) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

தீயுடன் சங்கமம்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இன்று (31) மாலை தீயுடன் சங்கமமானது.

அதன்போது, நோர்வூட் மைதான வளாகத்தில் இருந்த இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்கள், ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கதறி அழுதனர்.

இறுதிக்கிரியைகள் நடைபெற்ற நோர்வூட் மைதானத்துக்கு 300 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தமையால், மைதானத்துக்கு வெளியில் தேயிலை மலைகளில் இருந்தும், சமூகவலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடாக தோட்டங்களில் இருந்தும் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிப் பயணத்தைக் கண்ணுற்ற மக்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதமையால் மலையகம் சோகமயமானது.

மாரடைப்பால் கடந்த 26ஆம் திகதி காலமான ஆறுமுகன் தொண்டமானின், பூதவுடல் இரண்டு நாட்களாக கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் கம்பளை – நுவரெலியா வீதியூடாக வாகனப் பேரணியில் ரம்பொடை வேவண்டன் இல்லத்துக்கு எடுத்துவரப்பட்டது. அன்னாரின் பூர்வீக இல்லத்தில் வைத்து ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடுகளும், இந்துமத முறையிலான சடங்குகளும் இடம்பெற்றன.

அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்னற்றி அஞ்சலி செலுத்தினர். மக்கள் பெரியளவில் திரள ஆரம்பித்மையால், தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்புக் கருதி நுவரெலியா மாவட்டத்துக்கு இரண்டு நாட்கள் பொலிஸ் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர் ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சி.எல்.எப். வளாகத்துக்கு அன்னாரின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வீதிகளின் இரு மருங்குகளிலும் காத்திருந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் வைத்து சர்வமதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு இரு நாட்களாக அஞ்சலி செலுத்தினர். இவ்விரண்டு நாட்களும் நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் கொட்டகலையில் இருந்து நோர்வூட் மைதானத்தை நோக்கி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் எடுத்துவரப்பட்டது. மக்கள் வீதிகளில் இரு புறங்களிலும் இருந்து கதறி அழுது விடைகொடுத்தனர்.

நோர்வூட் மைதானத்தைச் சூழ பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு சூழல் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.

சர்வமதத் தலைவர்கள், மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவையின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேலும் சில பிரமுகர்களும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களும், தொண்டமானின் குடும்பத்தாரும் என 300 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றன. நிகழ்வின் ஆரம்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின்னர் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான மகாநாயக்க தேரர், இந்து மதகுரு, இஸ்லாம் மௌலவி, அருட்தந்தை ஆகியோர் ஆன்மீக உரை நிகழ்த்தி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வழிபட்டனர்.

பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுதாபச் செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆனுதாபச் செய்தி, மத்திய மாகாண ஆளுநரால் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.

அதன்பின்னர் அரசாங்கத்தின் சார்பில் மஹிந்த ராஜபக்சவின் அனுதாப உரை இடம்பெற்றது. ஆறுமுகன் தொண்டமானின் அரசியல் பயணத்தைப் பாராட்டிய பிரதமர், இறுதிச் சந்திப்பின்போது தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரையாற்றினார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள எதிர்க்கட்சிகளின் சார்பில் நவீன் திஸாநாயக்க அனுதாப உரையாற்றினார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் சார்பில் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தின் சார்பில் ஜீவன் தொண்டமான் நன்றியுரை ஆற்றினார்.

இரங்கல் உரைகள் முடிவடைந்த பின்னர் இந்துசமய முறைப்படி மகன் ஜீவன் தொண்டமான் மொட்டையடித்து, பூதவுடலுக்கு கொள்ளி வைத்தார்.

வீட்டுக்குள் புகுந்து யுவதியைக் கடத்திய கும்பல் ; பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரரும் உள்ளடங்குவதால் உண்மையை மறைக்க ஏற்பாடு!

யாழ். கொடிகாமம் பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தவேளை, வீடு ஒன்றுக்குள் புகுந்து தங்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என அடையாளப்படுத்திக் கொண்ட குழுவினர், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு 20 வயது யுவதியைக் கடத்திச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் நடந்த குறித்த கடத்தலை வாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் வந்த 7 பேர் கொண்ட குழுவே மேற்கொண்டுள்ளது.

குறித்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர், கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஒன்றுவிட்ட சகோதரன் என்பதால் குறித்த கடத்தல் சம்பவத்தை பெரிதாக்காமல், சமரசம் செய்து மூடி மறைக்கும் செயற்பாடுகள் பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரியவருகின்றது.

அதேவேளை, குறித்த யுவதி கடத்தப்பட்டு ஒரு மணித்தியாலங்களுக்குப் பின்னர் அருகில் உள்ள கோவிலில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.

ஊடகர் நடேசனுக்கு யாழில் நினைவேந்தல் ; குவிந்தது பொலிஸ்!

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசன், 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளது.

இந்நிலையில், யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, யாழ். ஊடக அமையத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் சீருடையிலும் , சிவில் உடையிலும் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன், பொலிஸ் அதிகாரியொருவரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் ஊடக அமையத்துக் வந்து ஊடகவியலாளர் ஒருவரிடம் நிகழ்வு தொடர்பில் கேட்டறிந்து விபரங்களைச் பதிவு செய்து சென்றுள்ளனர்.

ரணிலின் ஆட்கள் ராஜபக்சக்களுடன் டீல்! மோசடிக்காரர்கள் எனப் பெயர் எடுத்தவர்கள்!!

ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் எனக் கூறித்திரிபவர்கள் ராஜபக்சக்களுடன் டீல் வைத்துள்ளவர்கள், மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் தேசியப் பட்டியலை நம்பி உள்ளவர்கள்.” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களே உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிகாரர்கள்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று (31) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவுள்ளனர் என ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவே ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவும் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்கவும் அனுமதி வழங்கியது.

இது இவ்வாறிருக்க நேற்றுமுன்தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் என சிறு குழுவினர் கூடி எம்மை கட்சியைவிட்டு நீக்கிவிட்டனர் என அறிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 66 பேரில் 40 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளனர். எனவே, நாம்தான் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பையும் வெளிக்காட்டாமல் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிலர் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது அவர்களுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையில் டீல் அரசியல் உள்ளது என்பதுக்கு சிறந்த உதாரணம்.

இந்த செயற்பாடுகள் மூலம் அரசின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்புவதைத் தடுப்பதே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த சிறு குழுவின் நோக்கம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி எனக் கூறுபவர்கள் யார் எனப் பாருங்கள். ராஜபக்சக்களுடன் டீல் வைத்துள்ளவர்கள், மத்திய வங்கியை கொள்ளை அடித்தவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் தேசியப் பட்டியலை நம்பி உள்ளவர்கள்.

ஆனால், இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் போடியிடும் நாம் அனைவரும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள். டீல் அரசியல் செய்பவர்கள் எவரும் இங்கில்லை.

எனவே, விரைவில் இவ்வளவு காலமும் டீல் அரசியல் செய்து ஐக்கிய தேசியக் கட்சியை அழித்தவர்களிடமிருந்து எமது கட்சியைப் பாதுகாத்து ஆட்சியையும் கைப்பற்றி உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிகாரர்களாக நாம் சிறிகொத்தவுக்குள்ளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் நுழைவோம்” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் முடக்கம் நீடிப்பு!

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஜூன் 30 ஆம் திகதிவரை பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முற்றாக முடங்கியிருந்த பல நாடுகளும், தற்போது மெல்ல மெல்ல வெளியே தலை காட்ட ஆரம்பித்துள்ளன.

அதேபோலத்தான் இந்தியாவிலும் சில தளர்வுகளுடன், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்து வருகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தின் 4ஆவது கட்டம் இன்றுடன் (31) முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று (30) கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரம் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 30ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை தடைகள் அப்படியே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மேலோட்டமாக விசாரித்து ஓரிருவரைத் தண்டிப்பது நல்லதல்ல! ஆழமான விசாரணையே நடந்து வருகிறது!!

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த முழுமையான விசாரணைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன” பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களிலும் நடத்திய தாக்குதல்களில், 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன என கடந்த அரசாங்கமும், நடப்பு அதிகார வர்க்கமும் கூறிவருகின்றன.

இந்நிலையில், கண்டிக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த மகிந்த ராஜபக்ச, தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்துப்பீடங்களின் மகாநாயக்க தேரர்களைத் சந்தித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட சமகால விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார். அத்துடன், மகாநாயக்க தேரர்களின் ஆலோசனை மற்றும் ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்.

குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகி இந்த வருடத்துடன் 50 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் மகாநாயக்க தேரர்களின் விசேட ஆசிர்வாதம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து திரும்பிய மகிந்த, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

அங்கு அவர் கூறியவை வருமாறு-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்த முழுமையாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலோட்டமாக விசாரணை நடத்தி ஓரிருவரை தண்டிப்பதை விடவும், ஆழமான விசாரணை நடத்தி அதன் விடயங்களை அறிய வேண்டும். அண்மையில்கூட முகநூலில் தொலைபேசி இலக்கமொன்றை பதிவிட்டு மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளது எனக் கூறிய நபரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றோம். நாங்கள் இதன் பின்னணி குறித்து கண்காணித்து வருகின்றோம்.” என்றார்.

இதேவேளை, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பொதுத் தேர்தல் விவகாரம் குறித்தும் கருத்து கூறினார்.

அப்போது அவர்,

“நிச்சயமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவும் வேண்டும். தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு இருக்கின்றது. அது அவர்களுடைய கடமையாகும். வழக்கு விசாரணையின் தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தத் தயாராக வேண்டும்.

நாங்கள் எதிர்கட்சியாக இருந்த காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்திவந்தோம். முடிந்தவரை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கே முயற்சித்தோம். அதற்காக தேர்தலை கேட்டோம். ஆனால், இன்று தலைகீழாக மாறியுள்ளது. எதிரணியினர் இன்று தேர்தலை வேண்டாம் என்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றவர் வைத்தியசாலையில் சேர்ப்பு!

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முயற்சித்தவர் காப்பாற்றப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (30) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்டவர், திருகோணமலை – லிங்கநகர், திருச்செல்வம் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து வேலாயுதம்பிள்ளை (வயது -60) எனவும் தெரியவருகின்றது.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் ஓர் இடத்திலும் அவரது மனைவி தனது உறவினர் வீட்டிலும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர் மனைவியைத் தாக்குவதற்காக அங்கு சென்றபோதும் அவரால் தாக்க முடியவில்லை.

இந்நிலையில், கோபம் கொண்ட அவர் கையில் எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால், காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு, அம்புலன்ஸ் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

குறித்த வயோதிபர் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இதேவேளை, தற்கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தினங்கள் மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்!

நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தின உற்சவத்தையிட்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்பொருள் விற்பனை நிலையங்களில் மதுபான விற்பனை மற்றும் இறைச்சி விற்பனைகளையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுருக்குவலை மீன்பிடி: திருமலையில் காரசார விவாதம்!

திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை மீன்பிடியினால் சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

திருமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் 46 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தினர்.

இதன்போது திருமலை மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பவர்கள் அதற்காக கொடுக்கப்பட்ட வரையறைகளை மிறி செய்ற்படுகின்றனர் எனவும் இதனால் பலர் மீது வழக்குகள் கூட பதிவாகியுள்ளன எனவும் சுட்டிக்காட்டி அத்தொழிலை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அத்தொழிலை முன்னெடுக்க ஒரு தரப்பினர் தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில், இருதரப்பினரது நியாயங்களையும் கேட்டறிந்த டக்ளஸ் தேவானந்தா,

“மாவட்டத்துக்கு மாவட்டம் தொழிலின் தன்மைகள் மாறுபட்டு இருக்கின்றது. சுருக்குவலைத் தொழிலுக்கான சட்டங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது.

இதனால் இது தொடர்பில் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடக் கூடிய சட்டவரையறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இது தொடர்பான சட்டவரையறைகளை சீர்திருத்துவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றேன். அதுவரை அரசின் தொழில் சட்ட வரைமுறைகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை” என்றார்.

இச்சந்திப்பின்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திருமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்படையினர் துறைசார் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழில் அஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கு யாழ்ப்பாணத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்துக்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது அன்னாரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி, மறவன்புலவு க. சச்சிதானந்தன்,  வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, இந்து பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பு செயலாளர் சி.மோகன், இந்து மற்றும் பௌத்த குருமார்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்! பிரதேச மக்களால் மடக்கப்பட்ட சந்தேக நபர்!! இன்னொருவர் தப்பியோட்டம்!!!

வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் இன்று (30) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்களில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்தவர் மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அறியமுடிகின்றது. அவர் மாத்தறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்த வந்த சந்தேக நபர்களில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் அப்பிரதேச மக்களால் துரத்திப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை, மற்றைய சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தொண்டமானின் பூதவுடல் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (30) முற்பகல் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் எடுத்து வரபட்ட அன்னாரின் பூதலுடல் நேற்று (29) வேவண்டன் இல்லத்தில் வைக்கப்பட்டது. மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டு நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சர்வமத வழிபாடும், இந்து மத முறையிலான கிரியைகளும் இடம்பெற்றன. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகைதந்து அஞ்சலி செலுத்தினார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதலுடல் தாங்கிய பேழையுடன் நான்கு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ரம்பொடை வேவண்டன் இல்லத்திலிருந்து லபுகலை, நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சிஎல்எப் வளாகத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நாளை (31) மாலை 4 மணிக்கு நோர்வூட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

யுத்த காலத்தில் பாதித்த ஊடகர்களுக்கு இழப்பீடு!

“இலங்கையில் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருட்ங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இடையூறுகளுக்கும் அழுத்தத்துக்கும் உள்ளான தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நிவாரணங்கள் கிடைக்கவில்லை. இதனால் தமிழ் ஊடகவியலாளர்களும் அவர்களது குடும்பங்களும் இன்னமும் பல்வேறு அசௌகரியங்களுடனேயே உள்ளனர்.

இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது வாழ்வியல் நலன்கருதி நிவாரணங்களை துரிதகதியில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆறுமுகனுக்கு நல்லூரடியில் மலரஞ்சலி!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆறுமுகம் தொண்டமானுக்கு இன்று (30) காலை 10 மணியளவில் யாழ். நல்லை ஆதீன முன்றலில் மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இவ்வஞ்சலி நிகழ்வில், யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ். பல்கலைககழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை, யாழ் ஸ்ரீ நாகவிகாரை பிரதமகுரு, நல்லை ஆதீன சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று யாழ். மாவட்ட நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரம் மோகன் தெரிவித்துள்ளார்.

உறவினர் வீட்டுக்குச் சென்ற இளைஞர் குளத்தில் குளித்தபோது நடந்த விபரீதம்!

ஹொரவ்பொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கறவெவ பிரதேச குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (29) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா – அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த நஜிமுதீன் றிஷாத் முகம்மட் (வயது – 17) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு-

கிண்ணியாவிலிருந்து ஹொரவ்பொத்தான பிரதேசத்திலுள்ள முக்கறவெவ பகுதிக்கு அவரது உறவினரின் வீட்டுக்குசென்ற நிலையில், குறித்த இளைஞர் இன்று மாலை குளத்தில் குளிக்கச் சென்றபோதே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஹொரவ்பத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

நுவரெலியாவில் நள்ளிரவு முதல் ஊரடங்கு!

நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் நாளை (30) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நுவரெலியா மாவட்டத்தில் இரு நாட்களுக்கு ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோல், நாளைமறுதினம் (மே 31), ஜுன் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நண்பியைப் பார்க்கச் சென்ற இளைஞனுக்கு நடந்த கொடுமை!

பேஸ்புக் நண்பியைப் பார்க்கச் சென்ற இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று, அவரிடமிருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகைப் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் கொக்குவில் பொற்பதிப் பகுதியில் இன்று மதியம் நடந்துள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் இளைஞருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ். போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருபவை வருமாறு-

ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடிவந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மதியம் இருவரும் திருநெல்வேலி, இராமநாதன் வீதியில் உள்ள ஒரிடத்தில் சந்திப்பதெனப் பேசிக் கொண்டுள்ளனர்.

இதன்படி குறித்த இளைஞர், ஏற்கனவே இருவரும் பேசிவைத்த நேரத்துக்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண் அங்கு வரவில்லை.

இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டு, குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும் எனவும், அதனால் தங்களுடன் வருமாறும் கூறி மோட்டார் சைக்கிளில் இழுத்து ஏற்றியுள்ளனர்.

அங்கிருந்து கொக்குவில் பொற்பதி வீதிக்கு அவரைக் கொண்டு வந்த அந்தக் கும்பல், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்துக்குப் பின்னால் வைத்து குறித்த இளைஞரைத் தாக்கியுள்ளது.

அத்துடன், அவரிடமிருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தைப் பறித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார்.

சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் குழு, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சம்பவ குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாணவர்கள் கடத்தல் வழக்கு சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல்; சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

“ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகார வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் குறித்து சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஆரம்பத்திலேயே உடனடி நடவடிக்கையை எடுக்கத் தவறினால் இலங்கையில் மீண்டுமொரு கலவரம் ஏற்படுவதைத் தடுக்க முடியாமற் போய்விடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவருமான முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பிரதேசங்களில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகி வரும் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன பல தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்திருந்தார். அதேபோல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்தார்.

எனினும், இந்த முறைப்பாடு மற்றும் மனு குறித்த விசாரணை இதுவரை நடைபெறவில்லை என்ற விமர்சனம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சம்பிக்க ரணவக்க தெரிவித்தவை வருமாறு-

“அந்த சட்டத்தரணி பல தடவைகள் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார். இப்படியான பிரச்சினைகளில் தலையீடு செய்து குரல் கொடுப்பதற்காகவே சட்டத்தரணிகள் சங்கம் இருக்கின்றது. சட்டத்தரணிகளுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக முன்னிலையாவது சட்டத்தரணிகளின் அடிப்படை உரிமையாகும். உடனடியாக அந்த சட்டத்தரணிக்கு இருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படாமல் அநீதியே ஏற்படும். அத்துடன், இளைஞர்களிடையே ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்பட்டு மீண்டும் கலவரத்துக்கே அது வழிவகுக்கும். இளைஞர்கள் இந்த நாட்டில் சட்டம் மீது நம்பிக்கையிழந்த படியினால் கலவரங்கள் ஏற்பட்டதை அறிகிறோம். இன்று சட்டம் அரசியல்வாதிகளின் நோக்கத்துக்காகவே செயலாற்றுகின்றது. எனினும் மக்கள் இந்த தடைகளை தகர்ப்பதற்காக முன்னிலையாக வேண்டும்” என்றார்.

சுகாதாரமின்றி நடமாடிய 780 பேர் கைது! நேற்று மாத்திரம் 168 பேர் மாட்டினர்!!

நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 26ஆம் திகதி காலை 4 மணி முதல் ஊரடங்குச் சங்கம் தளர்த்தப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

அதேவேளை, நேற்று (28) அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும், முகக் கவசங்களை அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.