யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது!

யாழ். நகரப் பகுதியில் 4 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியகோவில் வீதிப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுகிறது என யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்தக் கைதுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடமிருந்து 4 கிராம் 680 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிந்தது; ஒருவர் சாவு!

திருகோணமலை-சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியிலுள்ள கடற்கரையில் கத்திக்குத்துக்கு இலக்கான ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் இன்று (30) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம்-காரியப்பர் வீதியைச் சேர்ந்த முஹம்மது ஹனிபா ஹாரிஸ் (வயது -60) எனத் தெரியவருகின்றது.

கல்லடி – மீன்வாடி கடற்கரைப் பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் குத்திய நபர் தாம் ஒருவரை கொலைசெய்துள்ளார் எனத் தெரிவித்து வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்குள் புகுந்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரை இராணுவத்தினர் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அப்துல்சலாம் யாசீம்)

சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவில் யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு பாரபட்சம்!

வடக்கில் உள்ள மாவட்டங்களிலேயே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் பெரும் வித்தியாசம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளர் உமாசந்திரா பிரகாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யுத்தத்தின் பின்னர் குறிப்பிடத்தக்களவானவர்கள் சிறுநீரக, இருதய மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (29) கிளிநொச்சியில் சிறுநீரக நோயாளியொருவரைச் சந்தித்தேன். அங்கு சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா உதவித் தொகை கிடைக்கிறது எனத் தெரிவித்தார். அது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் 5 ஆயிரம் ரூபாவாக வழங்கப்படுகிறது. அதை நாம் உறுதி செய்தோம். அதேவேளை யாழ்ப்பாணத்தில் ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.

மத்திய அரசிடமிருந்து ஐயரிரம் ரூபாவும், மாகாண அமைச்சிடமிருந்து ஆயிரம் ரூபாவையும் பெறுவதற்கு நோயாளிகள் உரித்துடையவர்கள். இந்த நடைமுறை மக்களைச் சென்று சேர்ந்தள்ளதா? முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் நோயாளர்கள் மத்திய, மாகாண அரசுகளின் கொடுப்பனவைப் பெற தகுதியுடையவர்கள் எனச் சொல்கிறார்கள். அப்படியானால், கிளிநொச்சி, யாழ்ப்பாண நோயாளர்கள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள்?

இது தொடர்பாக இரண்டு மாவட்ட அரசாங்க அதிபர்களுடனும் தொடர்பு கொள்ள முயன்றேன். முடியவில்லை.
முன்பள்ளி ஆசிரியர்களிற்கு 6 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. ஆரம்பக் கல்வி சிறப்பாக இருந்தால்தான், மாணவர்களை உயரத்துக்குக் கொண்டு செல்லலாம். அந்த ஆசிரியர்கள் சந்தோசமாக இருந்தால்தான் மாணவர்களின் கல்வி சிறக்கும்.

ஆனால், அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? முன்பள்ளி ஆசிரியர்கள் 6 ஆயிரம் ரூபாதான் சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு உள்ளிட்ட எந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுவதில்லை.

அதேநேரம், தேர்தல் சமயத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பாக பொய்யான வாக்குறுதியளிக்கிறார்கள். இவ்வாறு வாக்குறுதியளிப்பவர்கள், அதை எப்படி வழங்கப்பட வேண்டுமென பகிரங்கப்படுத்த வேண்டும். வெறுமனே ஆசரியர்களை ஏமாற்றும் விதமாக வாக்குறுதியளிப்பதைக் கண்டிக்கிறோம்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் கோட்டாபய, 8ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்றவர்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். தேர்தல் முடிந்து, நாடாளுமன்றத் தேர்தல் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெறுமனே சுயவிபர கோவைகள் பெறப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகள் வழங்குகின்றனர். இராணுவத்தினரும் இந்தச் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர். வீடுகளுக்குச் செல்லும் இராணுவம் உதவித்தொகை பெற்றீர்களா, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்தீர்களா என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இது தேர்தல் விதிமீறல்” என்றார்.

யாழ். வருகிறார் சஜித்; 3 நாட்கள் பிரசாரங்களில் பங்கேற்பார்!

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய பிரசார கூட்டங்கள் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாளை (01) முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன.

இதில் பங்கேற்பதற்காக சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் வரவுள்ளார்.

நாளை (01) பிற்பகல் 2 மணிக்கு சாவகச்சேரி தொகுதி கலாசார மண்டபத்தில் முதலாவது கூட்டம் நடைபெறும்.

பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நல்லூர் இலங்கை வேந்தர் கலைக் கல்லூரியிலும், தொடர்ந்து 4.30 மணிக்கு நீர்வேலி பொன் செல்வா மஹாலிலும் 5.30 மணிக்கு தாவடி வேதவிநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

இரண்டாம் திகதி காலை 8.45 மணிக்கு வடகம்பரை அம்மன் கோவில் திருமண மண்டபத்திலும் 9.45 மணிக்கு மானிப்பாய் பிரதேச சபை பொது மண்டபத்திலும் 10.45 மணிக்கு சாவற்காடு மகாத்மா சமூக மையத்திலும் 11.30க்கு தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபத்திலும், பிற்பகல் 2.15க்கு உடுப்பிட்டி சித்தி விநாயகர் திருமண மண்டபத்திலும், 3.10க்கு இராஜகிராமம் கரவைச்சுடர் விளையாட்டுக் கழக மைதானத்திலும் 3.30 க்கு பருத்தித்துறை தேவாலய பொது மண்டபத்திலும் 5 மணிக்கு ஊர்காவற்றுறை அனுசா திருமண மண்டபத்திலும் நடைபெறும்.

தொடர்ந்து மூன்றாம் திகதி காலை 9 மணிக்கு, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஒழுங்கமைப்புகள் யாழ். தேர்தல் மாவட்ட தலைமை வேட்பாளரான கணேஷ் வேலாயுதம் தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

கட்சிகளை விமர்சிப்பதை விடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்!

“கட்சிகளை விமர்சித்து அரசியலை முன்னெடுக்கலாம் என நினைப்பது அரசியல் ஆரோக்கியமற்றது. அதனை விடுத்து நாம் என்ன செய்யப் போகின்றோம் என மக்கள் மத்தியில் தெளிவாகத் தெளிவுபடுத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டும்” என யாழ். தேர்தல் மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான வேதநாயகம் தபேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“எனது அரசியல் பிரவேசமானது திடீரென ஏற்பட்டது. எனது தந்தை உட்பட குடும்பத்தினர் தொழிற்சங்கள், அரசியலில் ஈடுபட்டிருந்தவர்கள். இந்த நிலையில் புதுமுக வேட்பாளராக தமிழரசுக் கட்சி என்னை நாடாளுமன்றத் தேர்தலில் களமிளக்கியுள்ளது.

எனது தந்தை காலமாகும் வரை அரசியல் ஈடுபாட்டிலிருத்தார். அவர் காலமாகும் தருவாயில் ‘ நீ அரசியலில் ஈடுபட விரும்பின் தமிழரசுக் கட்சியுடன் இணைந்தே ஈடுபட வேண்டும்’ என என்னை வலியுறுத்தி இருந்தார். அதன் அடிப்படையிலையே நானும் தேர்தலில் போட்டியிட சம்மதித்தேன்.

நான் எழுத்துத்துறை சாரந்தவன் எனும் வகையில் நாம் அனுபவித்த ஊரடங்கு, சோதனை சாவடிகள், ஹர்த்தால்கள் என்பவை தொடர்பில் 14 ஆக்கங்களை சிங்கள மொழியில் மொழி பெயர்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றேன். எமது கஷ்டங்கள், பிரச்சினைகளை சிங்கள மக்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளேன்.

எனது இலக்கு அடித்தட்டு மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி, அபிவிருத்தியை முன்னெடுத்துத் செல்வதுடன், சிங்கள மக்களிடமிருந்து கௌரவமான தமிழ்த் தேசியத் தீர்வை பெற்றுக்கொள்வதாகும்.

தமிழ் மக்கள் மத்தியில் பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கக் காரணம் சந்தைத் தோல்வியாகும். அவர்களுக்கு உரிய தொழிற் பயிற்சி இல்லாமையும், குழு வேலைத்திட்டங்களில் ஒற்றுமையின்மை காரணமாகவுமே தோல்விகளைச் சந்திக்கின்றனர்.

அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி, அவர்களுக்கான திட்டங்களையும் அறிவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்க உள்ளோம். இதனூடாக சந்தைத் தோல்விகளில் இருந்து மக்களை மீட்க முடியும்.

போட்டிக் கட்சிகள் தாம் என்ன செய்யப் போகின்றோம் என சொல்லாது, கட்சிகளை விமர்சித்து தமது அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர். இது ஆரோக்கியமானதில்லை. அதனை அவர்கள் தவிர்க்க வேண்டும்” என்றார்.

தமிழருக்கான தீர்வை ஒருபோதும் சிங்களவர் வழங்கமாட்டார்கள்! விக்கிக்கு எதிராக மகிந்த தரப்பு நடவடிக்கை!!

“1978ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டு வந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ள வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வடக்கு முன்னாள் முதலமைச்சர் உட்பட பலரும் கோரிவரும் சமஸ்டித் தீர்வை சிங்கள மக்கள் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு வழங்கிவிடமாட்டார்கள் என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

ஜெனிவா உட்பட சர்வதேச அரங்கிலும், உள்நாட்டிலும் சிங்கள மற்றும் பௌத்த மக்களுக்காகவும், இலங்கைப் படையினருக்காகவும் குரல் கொடுத்துவரும் அட்மிரல் சரத் வீரசேகர, இம்முறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுகின்றார்.

இந்நிலையில், அவர் நேற்று (29) மாலை கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

அங்கு உரையாற்றிய அவர்,

“வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஆகியோர் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டார்.

“வடக்கில் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியமை குறித்த செய்தியை பத்திரிகையில் அவதானித்தேன். சுயநிர்ணயம் என்பது இந்த நாட்டை சமஸ்டி ஆட்சிக்கு உட்படுத்தும் நோக்கிலேயே அப்படியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் என்பவரும் இநத நாடு சமஸ்டி ஆட்சியாக வேண்டும் எனக் கூறியுள்ளார். எமது நாடு ஒற்றையாட்சி உடையது. கடந்த யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான படையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான படையினர் அங்கவீனமுற்றிருப்பது இந்த நாட்டைத் தொடர்ந்தும் ஒற்றையாட்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளும் தொடர்ந்தும் இலங்கையை சமஸ்டி ஆட்சிமுறைமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போராடினார்கள். எனினும் போரின்போது அவ்வளவு பெரிய தியாகம் செய்து ஒற்றையாட்சியைப் பாதுகாத்த நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமஸ்டியாட்சியாக மாற்றுவதற்கு இடமளிக்கமாட்டோம்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் ஒருமுறை மக்கள் மத்தியில் இனப்பிரச்சினை, கலவரத்தை ஏற்படுத்தவே இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் வடக்கு முதலமைச்சராக இருந்த காலத்தில் 27 யோசனைகளை நிறைவேற்றியிருந்தார். அவ்வளவும் சிங்கள இனத்துக்கு எதிரானவையாகும்.

1978ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டை ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தனவும், 1978ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ஆட்சிசெய்த சிங்களத் தலைவர்கள் தமிழ்ப் பெண்களை திட்டமிட்டபடி கருத்தடை செய்தனர் எனவும் யோசனை முன்வைத்து நிறைவேற்றியிருந்தார். இது முற்றிலும் பொய்யானதாகும்.

நல்லாட்சி அரசாங்கமானது இந்த யோசனைகளை நிராகரிக்கவே இல்லை. விக்னேஸ்வரன் மிக நீண்டகால திட்டமாகவே இப்படி செய்திருக்கின்றார். ஈழத்தைக் கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏதாவது ஒரு நாடு பிரிந்து செல்ல வேண்டுமென்றால் அதற்கான முதற்படியாக குறித்த மக்கள் ஏதாவதொரு காரணத்தில் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை முன்வைப்பதே யதார்த்தம்.
ஆகவேதான் 1978ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தமிழ் மக்களும் இன்னல்களை அனுபவித்தனர் என விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இப்படி கருத்தை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கையை எடுக்க உத்தேசித்துள்ளோம்” என்றார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் தபால் வாக்களிப்புக்கு 24 ஆயிரத்து 829 பேர் தகுதி!

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 829 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களைப் பொதியிடும் நடவடிக்கை இன்று (30) காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது.

இதுகுறித்து யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கி.அமல்ராஜ் தெரிவிக்கையில்,

யாழில் அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களைப் பொதியிடும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இந்தப் பணிகள் நாளையும் (31) இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 21 ஆயிரத்து 239 அஞ்சல் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதியிடும் பணி நடைபெற்று வருகின்றது. அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 590 ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களுக்கான பொதியிடும் பணிகள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை 22 நிலையங்களில் பொதியிடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறு பொதியிடப்பட்ட ஆவணங்கள் நாளை முதல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கபெறும்.

எனவே, நாளை முதல் கிடைக்கபெறும் பொதிகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வார்கள். எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான வாக்களிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 14,15ஆம் திகதிகளில் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறும்.16, 17ஆம் திகதிகளில் மாவட்ட செயலகம் முப்படையினர் பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்.” என்றார்.

தங்கையை ஏன் படம் எடுத்தாய் என மிரட்டி இளைஞர்களிடம் தொலைபேசிகளைப் பறித்த கும்பல்!

யாழ். மாநகர வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி கைத்தொலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை என பல இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் கைத்தொலைபேசிகளை பறித்துள்ளனர்.

வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், கைத்தொலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி கைத்தொலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வர்.

இத்தகைய சம்பவங்கள் யாழ். மாநகரில் அண்மைக்காலமாக அதிகரித்திருந்த நிலையில் முறைப்பாட்டாளர்களின் தகவலின் அடிப்படையில் அவர்களில் 3 பேரின் தொலைபேசிகள் ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அவருக்கு வழிப்பறிக் கும்பல் விற்பனை செய்துள்ளது.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அரியாலையைச் சேர்ந்த இருவரும் இராசாவின் தோட்டம் வீதியைச் சேர்ந்த ஒருவரும் என மூவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அண்மையில் முற்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் தொலைபேசிகளை வாங்கி வைத்திருந்தவருக்கு மன்றினால் பிணை வழங்கப்பட்டது.

ஏனைய மூவரையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர். எனினும், அடையாள அணிவகுப்பின்றி தம் மீதான குற்றச்சாட்டை சந்தேக நபர்கள் மூவரும் ஏற்றுக்கொண்டனர்

இதனால் சந்தேக நபர்கள் மூவருக்கும் எதிராக குற்றப்பத்திரத்தை இன்று (30) மன்றில் சமர்ப்பிக்க பொலிஸாருக்கும் அறிவுறுத்தல் வழங்கிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டிருந்தார்.

யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷா சமரக்கோனின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ரஞ்சி, சேனாரத்ன, கிங்ஸ்லி, மரியசிறி, கபில்தாஸ் ஆகியோர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர் என பொலிஸார்  தெரிவித்தனர்.

கூட்டமைப்புக்கு பத்து ஆசனங்கள் கூட கிடைக்காது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பத்து ஆசனங்களைக் கூட பெறமாட்டார்கள். அவர்களின் நினைப்புப்போல இருபது ஆசனங்கள் கிடைப்பதற்கு சந்தர்ப்பமே இல்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு இருக்கின்ற சாட்சிகள், உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தங்களது சாட்சியங்களை முன்வைத்து உள்ளன. எனினும், சிங்களப் பேரினவாத அரசு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பற்ற பதிலையே தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. அதிலும் மஹிந்த ராஜபக்சவாக இருக்கட்டும் ரணில் விக்கிரமசிங்கவாக இருக்கட்டும் மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும் விமல் வீரவன்சவாக இருக்கட்டும் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி வருகின்றனர். இவர்களின் கருத்து கண்டனத்துக்குரியதாகும்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது ஏராளமான தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு சாட்சிகள் இருக்கின்றன. அதேபோல இறுதி யுத்தத்தில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்ட நாம் வடக்கு மாகாண சபையில் இன அழிப்புத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருந்தோம். இதனாலேயே நாம் இன்றுவரை சர்வதேச விசாரணையை கோரி வருகின்றோம்.

மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே தங்களது ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். அவர்கள் எதிர்பார்ப்பது போல் இருபது ஆசனங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. எமக்கான பலத்தை மக்கள் இம்முறை தர வேண்டும். நாம் இம்முறை நாடாளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க தமிழ் மக்கள் எமக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

தமிழரசுக்குள் குழப்பம்; சுமந்திரன், சிறிதரனை சாடிய மகளிர் அணியினரை கட்சியை விட்டு துரத்த நடவடிக்கை!

தமிழரசுக் கட்சி மீதும், தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் மீதும் பகிரங்கமாகக் குற்றம் சுமத்திய தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் மீது உடன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளரான கி.துரைராஜசிங்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், நுண்கடனால் தற்கொலைக்குச் செல்வதைத் தவிர்க்கும் முகமாக, கனடாவில் உள்ள பல அமைப்புகள் மற்றும் நலன் விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரூடாக வழங்கப்பட்ட 20 கோடி 20 இலட்சம் ரூபாவுக்கு என்ன நடந்தது என தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் உட்பட சிலர், அண்மையில் ஊடகங்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது.

இதுகுறித்து தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளரான கி.துரைராஜசிங்கத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-

நேற்று முன்தினம் (27/06/2020) தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துகள் குற்றச்சாட்டுள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று (28/06/2020) காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள்.

1.’வடக்கு கிழக்கு பெண்களின் வாழ்வாதாரத்தை மீட்க என தமிழரசுக் கட்சிக்குக் கொடுத்த 212 மில்லியன் ரூபா எங்கே?’ என்று 28/6/2020 ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்;

  1. ‘சிறீதரன், சுமந்திரனை தேர்தலில் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்’ என்ற செய்திகள் (மேற்படி 28/06 வெளிவந்த பத்திரிகைச் செய்திகள்)

(அ). இச் செய்திகள் தொடர்பில் நேற்றும் (28) இன்றும் (29) தமிழரசு மகளிர் அணித் தலைவர் திருமதி. மதனி, செயலாளர் திருமதி வளர்மதி ஆகியோர் தொலைபேசி மூலம் முறையிட்டுள்ளனர்.

(ஆ) நேற்று (28/06) எம்.ஏ.சுமந்திரன் மற்றும் திரு.சி.சிறிதரன் இருவரும் மேற்படி செய்திகள் பற்றி என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவ்வாறு முறையிடப்பட்ட செய்திகளை யாழ். ஊடகத்துக்குத் தாமாகவே, தன்னிச்சையாகவே திருமதி.விமலேஸ்வரியும் ஏனைய நால்வரும் சென்று வெளியிட்டுள்ளனர். இச் செய்திகள் தொடர்பில் கட்சித் தலைமைக்கோ அன்றி கட்சித் தலைவருக்கோ, பொதுச் செயலாளருக்கோ நேரடியாகவோ, எழுத்து மூலமாகவேனும் தெரிவிக்கவில்லை.

வெளியிட்டுள்ள செய்திகள் குறிப்பாக நிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் இறுதியாக நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குக் கட்சியின் பொருளாளர், ‘அவ்வாறான நிதி வரவு பற்றி கட்சியின் வங்கிக் கணக்கில் வரவே இல்லை. குறிப்பிடப்பட்ட நிதி தொடர்பிலும் எந்த விபரங்களும் தனக்கோ, கட்சிக்கோ எதுவும் தெரியாது’ என்று பதிலளித்துள்ளார். மத்திய செயற்குழு அப்பதிலை ஏற்றுக் கொண்டது.

பத்திரிகைச் செய்தி வெளியிட்டவர்கள் செய்திகளில் குறிப்பிட்டவாறு, திருகோணமலை தமிழரசுக் கட்சியின் பொறுப்பிலுள்ளவரும், தற்போது தேர்தல் வேட்பாளரும், முன்பு கனடாவிலிருந்தவருமான குகதாஸிடமிருந்தோ, சுமந்திரனிடமிருந்தோ எந்தத் தகவலும் கட்சிக்குத் தரப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் பத்திரிகைக்கு இச் செய்திகள் வெளியிட்டவர்களும் எந்த ஆதாரத்தையோ, ஆவணத்தையோ, முறைப்பாட்டையோ கட்சித் தலைமையிடம் தெரிவித்திருக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் பொதுச் செயலாளர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து கனடாவில் இவ்வாறு தெரிவிக்கப்படும் நிதி பற்றி அங்குள்ள எமது கூட்டமைப்புக் கிளை மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்று தங்களிடம் நினைவூட்டியிருக்கிறேன். இது பற்றி எந்த ஒரு ஆதாரமோ, ஆவணமோ, தொடர்பான அறிக்கையோ இதுவரை கிடைக்கவில்லை.

27/06 அன்று ஊடகத்துக்குச் சென்ற திருமதி விமலேஸ்வரி மற்றும் நால்வரும் அதுவும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள காலத்தில் கட்சிக்கு அபகீர்த்தியையும், வேட்பாளர்களுக்குப் பங்கமேற்படும் வகையிலும் திட்டமிட்டு ஊடகங்களுக்குச் செய்தி பரப்பியது பாரதூரமான விடயங்களாகும். உண்மைக்கு மாறான செய்திகளுமாகும். இவ்விடயம் தொடர்பில் கட்சியும் ஒரு விசாரணை நடத்தி மக்களுக்குத தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறான ஆதாரமற்ற கட்சிக்குப் பங்கமேற்படுத்தக் கூடிய செய்திகளைப் பரப்பியவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.

2020 மார்ச் பகுதியில் பொதுத் தேர்தல் வேட்பு மனுக்கள் தயாரித்த காலத்தில் ஊடக மையத்தில் வெளியிட்ட செய்திகளுக்காக திருமதி விமலேஸ்வரி, திருமதி. மிதிலைச்செல்வி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வற்புறுத்தல்கள் இருந்தபோதும், அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டும்.

அடுத்து இப் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களாக சுமந்திரன், சிறீதரனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், அறிவிப்புக்கள் கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளாகும். கட்சித் தலைமைக்குத் தெரிவிக்காமல் இத்தகைய செய்திகளைப் பரப்பியமைக்கு எதிராகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமை, ‘உடன் கட்சியிலிருந்து இடைநிறுத்துவது’ முதலான ஒழுங்கு நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டும்.

எனவே, இக் குற்றச்சாட்டுக்கள் பற்றியும், குற்றஞ்சாட்டியவர்கள் பற்றியும் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு அறிவித்து ஒரு வாரத்தில் அறிக்கை பெற்று பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகளிர் அமைப்பையும் கூட்டி உடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையையும் எடுத்தாக வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அண்மைக் காலங்களில் தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியவர்கள், ஒழுங்கு நவடிக்கைக் கோவையின் படி விதிமுறைகளையும் மீறியவர்கள் மீதும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.” என்றுள்ளது.

மனைவி போடும் தேநீரில் இனிப்பு குறைவாக இருந்தாலும் சர்வதேசத்திடம் போகும் முன்னணியினரையும், மக்களை உசுப்பேத்தும் கூட்டமைப்பினரையும் நிராகரியுங்கள்!

யுத்தம் நடைபெற்றபோது இங்கிலாந்தில் இருந்த கஜேந்திரகுமாரையும் போலித்தேசியம் பேசி வருகின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் இம்முறை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும். கோத்தபய அரசுடன் இணைந்து வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய எம்மைப் பலப்படுத்தவேண்டும்” என யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் வேட்பாளருமான மு.றொமீடியஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் காரணமாக சொத்துக்களும் ஏராளமான உயிர்களும் இழக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தம் இடம்பெ்றற காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் ஏராளமான இளைஞர்கள் இராணுவத்தினரால் விசாரணை்குக் கூட்டிச் செல்லப்பட்ட போது, மனித உரிமை சட்டத்தரணியாக இருந்த நானே ஐந்நூறுகும் மேற்பட்ட இளைஞர்களைக் காப்பாற்றியிருந்தேன்.

ஆனால், இறுதிப்போர் நடைபெற்ற காலப்பகுதியில் இங்கிலாந்தில் சொகுசாக இருந்த கஜேந்திரகுமார் தரப்பினர் தற்போது போலித்தேசியம் பேசி வருகின்றனர் . அதனைக்கூட ஏற்றுக்கொண்டாலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே என்று அவருடன் இருப்பவர்கள் மேடைகளில் கூறிவருகின்றனர்.

போராட்டத்தின் வலி, போராட்டத்தில் பங்குபற்றாத ஒருவரை அரசியல் பிழைப்புக்காக இவ்வாறு கூறலாமா? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சர்வதேசம் – சர்வதேசம் என்று கொக்கரித்து வருகின்றனர். இவர்கள் சர்வதேசத்தின் ஊடாக இன்றுவரை எதுவும் கூறியதில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியில் இருப்பவர்கள் தங்களது மனைவிமார் தயாரிக்கும் தேநீருக்கு இனிப்பு குறைவாக இருந்தாலும் அதற்கும் சர்வதேசத்திடம் முறையிடுவோம் என்றே கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இதை விட்டால் வேறு அரசியல் இல்லை.

இதேபோல, தமித்தேசியக் கூட்டமைப்பினரும் போலித் தேசியம்பேசி மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் ரணில் அரசுக்கு முண்டுகொடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்து மாளிகைகளையும் சொத்துக்களையும் வாங்கி வைத்துள்ளனர். இவர்களை மக்கள் இனியும் ஏற்பார்களா? நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு மக்கள் தகுந்தபாடம் புகட்டவேண்டும்.

ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா, அரசுடன் மக்களுக்குத் தேவையான விடயங்களைப் பேசி துரித அபிவிருத்திகளை முன்னெடுத்துவருகின்றார். அவரது கரங்களை பலப்படுத்த இம்முறை எமக்கு அதிக ஆசனங்களை வழங்கி மக்கள் பலமிக்க அணியாக எம்மை நாடாளுமன்றம் அனுப்பி வைக்கவேண்டும்” என்றார்.

மரப் பிடி கொண்ட கோடரியே மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது! எமது அழிவுக்கு நாமே காரணமாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்!!

“மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். ” என தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இதுகுறித்து பேரவை விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு-

எமது மக்களின் நீண்ட கால அபிலாசைகள் நோக்கிய பயணம் பல இழப்புக்களினூடாகவும் தியாகங்களினூடாகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதிலே தன்னலமற்ற முகம் தெரியாத பலரின் பாரிய பங்களிப்புக்கள் இருக்கின்றன.

இந்த நிலையிலே இன்று தேர்தல் அரசியலினால் கட்சிகள் தமக்கிடையேயும் தமக்குள்ளேயும் குழுக்களாகப் பிரிந்து நின்று அநாகரிமான வார்த்தைப் பிரயோகங்களுடன் பேசிக்கொள்வது எமது நீண்டகால அபிலாசைகள் நோக்கிய பயணத்துக்கு ஆரோக்கியமானதாக அமையாது.

தேர்தலிலே கிடைக்கின்ற நாடாளுமன்ற அங்கத்தவர்களின் எண்ணிக்கை எமக்கு விடிவு எதனையும் தந்ததும் இல்லை, தரப்போவதும் இல்லை. எமது தெளிவான நிலைப்பாடுகளும் ஒற்றுமையான, துல்லியமான திட்டமிடல்களும் செயற்பாடுகளுமே எமது பயணத்துக்கு வளம் சேர்க்கும்.

ஒவ்வொருவரும் மற்றவரிலே சேறு பூசும் கீழ்த்தரமான அரசியலை விடுத்து தமது நிலைப்பாடுகளையும் திட்டங்களையும் கொள்கைகளையும் முன்வைப்பதிலே தமது சக்தியை செலவிடுவார்களானால் அது ஆரோக்கியமானதாக அமையும். நடக்கவிருக்கும் இந்தத் தேர்தலிலே மக்கள் முன் பல போதுமானளவு தெரிவுகள் இருக்கின்றன. எமது மக்கள் ஏனையவர்களுடன் ஒப்பிடும்பொழுது தெளிவான அரசியல் பார்வை கொண்டவர்கள். அவர்களால் சரியான தெரிவுகளை அடையாளப்படுத்த முடியும்.

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். பலர் சூழ்நிலைகளின் அழுத்தங்களினால் அல்லது வேறு காரணங்களினால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். அதற்காக அவர்கள் நம்மவர்கள் அல்ல என்று ஆகிவிடாது. அவர்களுக்கான தெளிவூட்டல்களை தொடரவேண்டிய தேவையிருக்கிறது.

அற்ப சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும் பதவிகளுக்காகவும் வெகுமானங்களுக்காகவும் எங்கள் வாக்குரிமையை வீணடிக்கப் போகின்றோமா? அல்லது எமது நீண்டகால அபிலாசைகளை மக்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்களுடன் வெளிப்படைத் தன்மையுடனும் முன்னெடுக்கும் வல்லமையும் பிறரால் கையகப்படுத்தப்படாமல் செல்லக்கூடிய திறனும் உடையவர்கள் தெரிவு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றோமா? என்பது சம்பந்தமான தெளிவு எமக்கு இருக்குமாயின் எம்மால் சரியான தீர்ப்பை எழுத முடியும்.

தேர்தல் அரசியலுக்காக கட்சிகளுக்குள்ளேயும் கட்சிகளுக்கிடையேயும் மக்களிடையேயும் பகை வளர்க்கும் பேச்சுக்களையும் பதிவுகளையும் தவிர்த்து தேர்தலில் நிற்கும் ஒவ்வொருவரும் தமது நிலைப்பாடுகளையும் திட்டங்களையும் கருத்துக்களையும் முன்வைத்து மக்களின் தீர்ப்புக்காக காத்திருந்து அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்வதே ஆரோக்கியமானதாக அமையும்.

தேர்தலின் பொழுதும் அதன் பின்பும் அரசியல் வேறுபாடுகள் கடந்து எமது அபிலாசைகளை வென்றெடுக்கும் பயணத்துக்காய் ஒன்றிணைவோம்.” என்றுள்ளது.

பாடசாலைகள் திறப்பு!

கொவிட்-19 தொற்று வைரஸ் பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் இன்று (29), முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாக ஊழியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இக்காலப் பகுதியில் பாடசாலைகளை சுத்தம் செய்தல், கிருமி நீக்கம் செய்தல், பாட அட்டவணைகளை திருத்தம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

வடக்கில்…

வட மாகாணத்தில் பொலிஸ், விசேட அதிரடிப்படையின் கிருமி தொற்று நீக்கி விசுறும் அணியினர் சகல பாடசாலைகளிலும் கிருமித் தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாணத்தில் உள்ள சகல பாடசலைகளையும் கண்காணிப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார் சென்றிருந்தனர்.

கிழக்கில்…

அதேபோல, கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகள் திறக்கப்பட்டன. அதன்படி கிண்ணியா வலய பாடசாலையான ரிபி ஜாயா மகளிர் மகாவித்தியாலய பாடசாலை ஆசிரியர்கள் சமூகமளித்து கடமைகளை செய்வதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது

பாடசாலைக்கு சமூகம் அளித்த ஆசிரியர்களினால் பாடசாலை வரவு இடாப்பில் ஒப்பமிடப்பட்டு, ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டமும் பாடசாலை அதிபர் எம்.எம்.முஸம்மிலால் நடாத்தப்பட்டது. (அப்துல்சலாம் யாசீம்)

மலையகத்தில்…

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கும் இன்று (29) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த அதிபர்களும், ஆசிரியர்களும் அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதார ஏற்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

முகக்கவசம் அணிந்து வந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஊழியர்களால் அவர்களின் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கிளி. வைத்தியசாலையிலிருந்து வழிந்தோடும் நீரால் மக்கள் அவதி!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் கழிவு நீர், வைத்தியசாலைக்கு வெளியே விடப்படுவதனால் இது தங்களது குடிநீர் நிலைகளை மாசுப்படுத்துகிறது எனவும், அதனால் துர்நாற்றம் வருகிறது எனவும் வைத்தியசாலை சூழலில் வசிக்கின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கழிவு நீர் ரை ஆற்றுக்குள் விடப்பட்டுவருகிறது. இந்த நீரானது ரை ஆறு ஊடாக கிளிநொச்சி குளத்தை வந்தடைகிறது. கிளிநொச்சிக் குளத்திலிருந்தே கிளிநொச்சிக்கான குடிநீருக்கு நீர் பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், வைத்தியசாலையிருந்து வெளியேறுகின்ற கழிவு நீரில் வைத்தியாசாலையின் இராசனங்கள் அடங்கியிருக்கலாம். எனவே, அவற்றை சுத்திகரிக்கின்ற வசதிகள் கிளிநொச்சி குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் காணப்படுகிறதா? அங்கிருந்து குழாய் வழியாக விநியோகிக்கப்படும் நீரை தாம் குடிநீராகப் பயன்படுத்தலாமா என்பதனை நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை, வைத்தியசாலையின் அயலில் உள்ள மக்கள் “கடந்த சிலமாதங்களாக வைத்தியசாலைக் கழிவு நீரானது தமது குடிநீர் நிலைகளை மாசடையச் செய்கிறது எனவும் அதிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அயலில் வசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது எனவும் முறையிட்டுள்ளனர்.

எனினும், இதுவரை அதனை நிவர்த்தி செய்வதற்கு எவ்வித நடவடிக்கைகளுயும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பில் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் ராகுலனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,

“வைத்தியசாலையின் நீர் சுத்திகரிப்பு நிலையம் முழுமையான இயங்கவில்லை. எனவே, இது தொடர்பில் நாம் உடனடி நடவடிக்கைக்கு மாகாண பணிப்பாளருக்கு அறிவித்திருகின்றோம். தற்போது கூறுவிலை கோரல் பெறப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விரையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அவர், வைத்தியசாலையின் நீர் வைத்தியசாலைக்கு வெளியே செல்லவில்லை எனவும் தெரிவித்தார்

ஆனால், நாம் மக்களுடன் நேரடியாக குறித்த பகுதிக்கு பிரதேச மக்களுடன் சென்று பார்வையிட்ட போது வைத்தியசாலைக்குள் இருந்து கழிவு நீரானது வெளியேறிக்கொண்டிப்பதை அவதானிக்க முடிந்தது.

நித்திரையிலிருந்து எழும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்., ஏழாலைப் பகுதியில் இன்று (28) அதிகாலை வீடொன்று உடைக்கப்பட்டு 14 பவுண் நகை திருடப்பட்டுள்ளது என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழாலை களவாடை அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை திருடர்களால் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் நித்திரையாக இருந்த சமயம், மர்மமான முறையில் வீட்டுக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த 14 பவுண் நகைகளை இதன்போது திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்து எழும்பிப் பார்த்தபோது வீடு உடைக்கப்பட்டு நகைகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இயற்கை எய்தினார் ஜானகி; பரவி வரும் வதந்திக்கு மகன் விளக்கம்!

தென்னிந்திய பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி நலமுடன் உள்ளார் எனவும் அவர்குறித்து பரவிவரும் வதந்தியை எவரும் நம்பவேண்டாம் எனவும் அவரின் மகன் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மூத்த பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி (வயது-82) ஹைதராபாத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

60 ஆண்டுகளுக்கு மேலாக இசைத்துறையுடன் கலந்துள்ள அவர், ஆங்கிலம், சைனீஸ், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 17 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் அவர் கால் தவறி கீழே விழுந்ததால் இடுப்பில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு கடந்த மே மாதம் அறுவைச் சிகிச்சையும் நடைபெற்றது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் உடல்நலக்குறைவால் இயற்கைசெய்திவிட்டார் என இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வரத்தொடங்கின.

இதையடுத்து, ஜானகியின் மகனான முரளி கிருஷ்ணா, “தனது தாயார் உடல்நலத்துடன் உள்ளார். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்பா இறந்ததும் துரைமார் ஆட ஆரம்பித்துவிட்டனர்; விரைவில் அனைவரையும் நடுங்க வைப்பேன்!

“ஆயிரம் ரூபாவை வைத்து அரசியல் நாடகம் நடத்தவேண்டிய தேவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு கிடையாது. அப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ” என்று அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்தையும், ஆறுமுகன் தொண்டமானின் வீரத்தையும் பின்பற்றியே எனது அணுகுமுறை அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனையில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் எனக் கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்தக் கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார்.

கம்பனிகள் வெள்ளையர் காலத்திதைப்போல்தான் தற்போது செயற்பட முற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.

ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பேச்சு என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யவேண்டிய தேவை இ.தொ.காவுக்கு கிடையாது. ஏனெனில் மக்கள் எம்பக்கமே உள்ளனர்.

அப்பா இறந்த பின்னர் சில தோட்டங்களில் துரைமார் ஆட ஆரம்பித்துள்ளனர். நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். இதனால், ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர். பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக் கருதவேண்டாம்.

மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ஆறுமுகன் தொண்டமான் போய்விட்டார். இ.தொ.காவின் கதை முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். யார் எதனை வேண்டுமானாலும் நினைத்துவிட்டுபோகட்டும். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் செயற்படும்.

கடந்த காலங்களில் கட்சி அடிப்படையிலேயே வீடுகள் பகிரப்பட்டன. கிராமங்களை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது திட்டமாகும். இளைஞர்களின் வேலையிண்மைப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டும். அதற்கான திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மலையக பல்கலைக்கழகம் வந்த பின்னர், ஹோட்டல் முகாமைத்துவ கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படும். அதன்பின்னர் சுற்றுலாத்துறையில் கூடுதல் வேலைகளைப்பெறலாம்.” – என்றார்.

திகா இருக்கும்வரை மலைய மக்களை எவரும் தொட முடியாது!

“திகாம்பரம் இருக்கும்வரை மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே வாக்குக் கேட்டுவந்துள்ளேன். மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பார்கள் என்பது உறுதி.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொத்மலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

” நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம்.

ஆனால், தேர்தல் காலத்தில் கண்டியில் இருந்து பரசூட் அரசியல்வாதிகள் இங்கு வந்துள்ளனர். மக்கள் மத்தியில் பொய்யுரைத்து வாக்குகளைப் பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். நாம் இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணில்தான் வாழ்கின்றோம். வென்றாலும் தோற்றாலும் இங்கிருந்து வெளியில் செல்லமாட்டோம்.

ஏற்கனவே ஒருவர் வந்தார். தேர்தலில் நின்றார். வென்றதும் ஓடிவிட்டார். ஆனால், எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டனர். அத்தகைய வேட்பாளர்களுக்கு இம்முறை தோல்வி உறுதி. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டினேன். 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுவந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிதி நிறுத்தப்பட்டது. ஆனால், கண்தெரியாத சிலர் 2 ஆயிரம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன எனக் கூறுகின்றனர்.

ஓகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வீடமைப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். வேலைகளை செய்துவிட்டு வந்துதான் நாம் வாக்கு கேட்கின்றோம். மக்களாகிய நீங்கள் எவருக்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கின்றேன்.

தோட்ட துரைமார் மதிக்கமாட்டார்கள், பொலிஸார் அடிப்பார்கள் என சிலர் இன்று கருத்து வெளியிடுகின்றனர். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த நான்கரை வருடங்களில் எமது மக்களை எவரும் சீண்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

எமது மக்களுக்கு 50 ரூபாவை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். துரோகி நவீன் அதற்கு இடமளிக்கவில்லை. எமது மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். விலைபோகமாட்டார்கள். நுவரெலியாவில் 5 பிரதிநிதித்துவத்தை கடந்தமுறை வென்றெடுத்தனர். இம்முறையும் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள். போலி வேட்பாளர்களை நம்பவேண்டாம்.” – என்றார்.

ஊரடங்கு முழுமையாக நீக்கம்!

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் படிப்படியாக நீக்கப்பட்டு வந்த நிலையில், இன்றுமுதல் (28) முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முழுமையாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் கடந்த 13ஆம் திகதி முதல் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை மாத்திரம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம் அவசரம்; ஜனாதிபதிக்கு கடிதம்!

யாழ். மாநகர சபை தீயணைப்பு படையின் தீயணைப்பு வாகனம் விபத்துக்குள்ளாகி முற்றாகச் சேதமடைந்துள்ளமையால், அவசர தேவையாகவுள்ள தீயணைப்பு வாகனத்தை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி செயலகத்திடம் யாழ். மாநரக சபை பதில் முதல்வர் து.ஈசன் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

அக்கோரிக்கைக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு-

“கடந்த 16 ஆம் திகதி கடமையின் நிமித்தம் அவசரகால சூழ்நிலைக்குப் பதிலளிக்க முயன்றபோது, விபத்துக்குள்ளாகி ஒரு தீயணைப்பு ஊழியர் பலியானார். அத்துடன், இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இது வருத்தப்பட வேண்டிய விடயம். இதனால் எமது தீயணைப்பு வாகனம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், தீயணைப்பு சேவையை வழங்குவதற்கு எங்களுக்கு மாற்று வசதிஇல்லை என்பதால், யாழ். மாநகர சபைக்கு அவசரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை பெறுவதற்கு தங்களிடம் கோரியுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.