யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதால் தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் விடுவிப்பு!

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த 76 பேர் அவர்களது வீடுகளில்சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 63 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும் கிளிநொச்சி, வவுனியாவைச் சேர்ந்த தலா 2 பேரும் புத்தளம், பொலநறுவை, குருநாகல் மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருமாக 76 பேர் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருந்தனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொமும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட பீ.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் தொற்று நோய் தடுப்பு பிரிவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிதரன்மீது பாய்ந்தார் தமிழீழ முன்னாள் அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளர் மணியண்ணன்!

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர்” என முன்னாள் தமிழீழ அரசியல்துறை நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவரும் கேடயச் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற  வேட்பாளருமான மணியண்ணன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

“போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் மிக்க வாழ்வை நாம் பெற வேண்டும். கிளிநொச்சியில் அதற்கான அடித்தளத்தை இட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்காக நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

எங்களது தியாகத்தையும்,  அர்ப்பணிப்பையும் வைத்து அரசியல் செய்யும் இவர்கள் என்றும் முன்னாள் போராளிகளின் நலன்களில் – அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டது கிடையாது.

வாரத்தைக்கு வார்த்தை மாவீரர்களின் தியாகத்தையும், விடுதலைப்புலிகளின் வீரத்தையும்  வைத்து அரசியல் செய்யும் இவர்கள், ஒரு காலமும் எங்களை மதித்தது கிடையாது. எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டதும் கிடையாது. இதனால்தான் கிளிநொச்சியில் பலநூறு  முன்னாள்  போராளிகள், பொறுப்பாளர்கள் எல்லோரும் சமத்துவக் கட்சியோடு அணி சேர்ந்துள்ளோம்.

 சொற்களால் விபரிக்கமுடியாத தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த போராளிகளையும் மக்களையும் வியாபாரப் பொருளாக்கி, போலித்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் கடந்த பத்தாண்டுகளாக தம்மையும் சுற்றத்தையும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இழப்புக்களைச் சந்தித்த சமூகம் முடிவுறாத அவலத்துக்குள்ளும் துன்பத்துக்குள்ளும்தான் தவிக்கின்றது.

இந்த படுபாதக நிலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காகக் களத்தில் நின்று செயற்பட்ட முன்னாள் போராளிகள் பலநூறு பேரும் மருத்துவர்களும் ஒன்று சேர்ந்துள்ளோம். இதுவரை காலமும் எம்மை தமக்குத் தேவையான கச்சாப் பொருளாகப் பாவித்த அரசியல்வாதிகளை நிராகரித்து புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவோம்.

சுயேட்சைக் குழு -5இல் கேடயம் சின்னத்தில் போட்டியிடும் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகவே எமது இலக்கை அடைய முடியும்” என்றார்.

வெளியானது விக்கியின் சொத்து விபரம்!

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பார் எனக் கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.

இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா 44 லட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாவும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9 ஆயிரத்து 618.98 பவுண்டு பணமும் ஆயிரத்து 210.33 டொலர் பணமும் உள்ளன.

அத்துடன், யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டுக் காணியும் கொழும்பு 7இல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.

இவைதவிர, அவருக்கு வாகனங்களோ வேறு எந்த சொத்துக்களுமோ இல்லை.

நீதிபதியாகவும், நீதியரசராகவும் பணி புரிந்த காலத்தில் விக்கினேஸ்வரன் உழைத்த பணமும் முதலமைச்சராகப் பணி ஆற்றிய காலத்தில் அவருக்குக் கிடைத்த வேதனத்தில் சேமித்தவையும் இவற்றுள் அடங்கும்.

இதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும், இவற்றைப் பார்க்க விரும்புபவர்கள் தேர்தலின் பின்னர், முன்னனுமதியுடன் அவற்றைப் பார்வையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ள அதேவேளை, பாதுகாப்புக் காரணங்களுக்காக தேர்தலில் வெற்றி பெறுபவர்களின் சொத்து விபரங்கள் மாத்திரமே பகிரங்கப்படுத்தப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வெற்றி பெறும் ஒருவர் வேட்பாளராக இருந்தபோது எவ்வளவு சொத்துக்களை வைத்திருந்தார் என்பதை அறிவதன் மூலம், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக் காலத்தில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்தார் என்பதையும் பதவித் துஸ்பிரயோகம் அல்லது முறைகேடுகள் மூலம் சொத்துக்களை சேகரித்தாரா என்பதையும் அறிய முடியும்.

இதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் கூட்டுக் கட்சிகள் செய்துகொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி, நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தமது மாதாந்த கொடுப்பனவுகளின் 8 சத வீதத்தை பொதுமக்களின் நல்வாழ்வுத் திட்டங்களுக்காக இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட – அவர்கள் விரும்பிய ஒரு அறக்கட்டளை நிதியத்துக்கு வழங்க வேண்டும்.

அது தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியமாகவும் அமையலாம். ஆகக்குறைந்தது 2 சதவீதத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுவான செலவீனங்களுக்காகவும் அவர்கள் வழங்கவேண்டும் என்பதும் உடன்படிக்கையாகும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வாக்களிக்க முடியுமா?

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பொதுத் தேர்தலில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு இன்று (31) அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்தத் தகவலை வெளியிட்டார்.

அதேவேளை, சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பில் கலந்துகொள்ள அனுமதி வழங்குவதா, இல்லையா? என்ற முடிவு சுகாதாரத்துறையினர் வழங்கும் ஆலோசனையிலேயே இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

இராஜாங்கனை மற்றும் லங்காபுர ஆகிய கொரோனா வைரஸ் பரவிய பகுதிகளில் வாக்களிப்புக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

யாழ். வைத்தியசாலையில் கொரோனா நோயாளி; அவரறையில் சிகிச்சை பெற்றோர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயன்படுத்தியமை மற்றும் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்தமையை அடுத்து
வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 70 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவிலிருந்து கடந்த 7ஆம் திகதி நாடு திரும்பிய குறித்த நபர், விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்றார். அவர் கடந்த 25ஆம் திகதிவரை அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார் என்று சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்படிருந்தது.

அதன் பின்னர் அவர் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு மீள மாற்றப்பட்டிருந்தார்.

தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த திங்கட்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் பணியாற்றும் மருத்துவ சேவையாளர்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடக்கு மாகாண சுகாதாரக் குழு நேற்று கூடி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் விவகாரம் கலந்துரையாடியது.

இதன்போது, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம் விடுதியின் மலசல கூடத்தைப் பயத்தினார் என்பதும் வைத்தியசாலை சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றிருந்தார் என்பதும் அறியப்பட்டது.

இதனால், ஆபத்தை முன்கூட்டியே தடுக்கும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 7ஆம் விடுதியில் ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதிவரை சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று
வடக்கு மாகாண சுகாதார குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் குறித்த தனிமைப்படுத்தல் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் அவர்களைக் கண்டறிந்து சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் பணி நேற்று (30) மாலை ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு மாகாணம் மற்றும் பொலநறுவை, குருநாகல் என சுமார் 70 பேர் இவ்வாறு அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாலையில் வாளைக்காட்டித் திருட்டு! யாழ். உரும்பிராயில் சம்பவம்!!

யாழ். உரும்பிராய்ப் பகுதியில் வீட்டில் இருந்தவர்களைத் தாக்கி – வாளைக் காட்டி – அச்சுறுத்தி நகைகள் திருடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், உரும்பிராய் மேற்கு சோளம் தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த திருட்டுச் சம்பவம் இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் பின்பக்கமாகச் சென்ற நபர்கள் வீட்டின் கதவை உடைக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் வெளியில் வந்துள்ளார். இதன்போது அவரைக் கம்பியால் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்தவர்களை வாளைக் காட்டி அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வீட்டில் இருந்த நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீட்டில் இருந்தவர்களின் அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் ஓடி வந்தபோதும் குறித்த திருட்டுக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது!

குற்றப் புலனாய்வுப் பிரிவலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பணிப்பாளரான சாணி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை, 2015ஆம் ஆண்டுக்கு முன் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து அதிரடி விசாரணைகளை இவர் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சி காலத்தில் சாணி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமைபுரிந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத்துப்பாக்கி தொடர்பான விசாரணை ஒன்றில் சேகரிக்கப்பட்ட சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று அவரது இல்லத்திற்கு இன்று காலை சென்று அவரைக் கைது செய்துள்ளது.

கூட்டமைப்பு கோட்டா அரசுடன் டீல்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் டீல் ஒன்றைப் போட்டுள்ளார்கள். இவர்களின் இந்தச் செய்பாட்டால் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கவே முடியாது ” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றும்போதே, கஜேந்திரகுமார் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த கால அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருந்தபோதும் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. அவர்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

இவர்களால்  தமிழ் மக்களுக்கு எந்தவிதப் பிரயோசனமும் இல்லை. இவர்கள் தற்பொழுது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் ஒரு டீல் போட்டுள்ளார்கள். இவர்களின் இந்தச் செய்பாட்டால் தமிழ் மக்களுக்கு உரிய தீர்சைப் பெற்றுக் கொடுக்கவே முடியாது.

இவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை எவரும் வாக்களிக்கக்கூடாது. கூட்டமைப்புக்கு இம்முறை எவராவது வாக்களித்தீர்களாக இருந்தால் அது இனத்துக்குச் செய்யும் துரோகமாகும் “என்றார்.

அன்டன் பாலசிங்கம் என்ற பெரும் புலியோடு சுமந்திரன் என்ற சிறு எலியை ஒப்பிட்டு பேசுகிறது கிளிநொச்சியில் உள்ள நரி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரையர், தேசத்தின் குரல் அண்ணன் அன்டன் பாலசிங்கம் என்ற அந்தப் பெரும் புலியோடு, சுமந்திரன் என்ற இந்தச் சின்ன எலியை ஒப்பிட்டு, கிளிநொச்சியிலுள்ள நரி சிறிதரன் பேசுகிறார். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் கொச்சைப்படுத்தப்படுகின்றனர். ஆயுதப் போராட்டம் தவறு என்றும், ஆயுதம் ஏந்தியது பிழை என்றும் எங்கள் மாவீரர்களைக் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற வேட்பாளரான சுகாஷ் தெரிவித்துள்ளார்.

சுண்டுக்குளியில் நேற்று (31) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

தமிழ் மண்ணியில் பொலிஸ் பின்னால், எஸ்ரிஎவ் முன்னால் சுற்றுவளைத்துப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த மண்ணியில் யாரிடமிருந்து பாதுகாக்கப்படுகிறார்.

கடந்த வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரையர், தேசத்தின் குரல் அண்ணன் அன்டன் பாலசிங்கம் என்ற அந்தப் பெரும் புலியோடு, சுமந்திரன் என்ற இந்தச் சின்ன எலியோடு ஒப்பிட்டு, கிளிநொச்சியிலுள்ள நரி சிறிதரன் பேசுகிறார்.

இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் கொச்சைப்படுத்தப்படுகின்றனர். ஆயுதப் போராட்டம் தவறு என்றும், ஆயுதம் ஏந்தியது பிழை என்றும் எங்கள் மாவீரர்களைக் கொச்சைப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் தலைவன் ஆயுதம் ஏந்தியிருக்காவிட்டாம் தமிழினம் 40 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயிருக்கும்.

இன்று அனைவருக்கும் தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிழை என்று. இது தலைவர் பிரபாகரன் அமைத்த கூட்டமைப்பு அல்ல. ரணிலின் கூட்டமைப்பு. இன்று கோட்டாவுடன் டீல் போட்டுவிட்டார்கள். கோட்டாவின் கூட்டமைப்பாக மாறப்போகிறது.

எங்கள் மண்ணுக்கு பல சிங்களக் கட்சிகளின் அரசியல் கொரோனாக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்குகின்ற ஒவ்வொரு வாக்கும், விலை பேசி விக்கின்ற புள்ளடிகள்.

சிங்களப் பிரதேசங்களில் ஒரு தமிழ்க் கட்சியில் போட்டியிடுகின்ற சிங்களவர் வெற்றிபெற முடியுமா? ஆனால், தமிழர் பிரதேசத்தில் இந்த மண் எங்களின் சொந்த மண்ண என்று சொல்லுகின்ற நமது மண்ணில்  சிங்களக் கட்சிகளில் போட்டியிடுகின்ற தமிழர் வெற்றிபெறுகிறார். இது யார் செய்த தவறு. எனவே, இம்முறை சிந்தித்து வாக்களிக்கவேண்டும். ” என்றார்.

சரவணபவனின் தந்தை தமிழ் மக்களை அரச படைகளுக்குக் காட்டிக் கொடுத்ததற்காகவே கொல்லப்பட்டார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரான சரவணபவனின் தந்தை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவர். இவர் தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே கொலை செய்யப்பட்டார். சரவணபவனும் இன்று அதையே மேற்கொண்டுவருகின்றார் ” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான முடியப்பு ரெமிடியஸ் தெரிவித்தார்

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிரைகயாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

”தனது பத்திரிகை மூலம் தமிழ் மக்களை அதலபாதாளத்துக்குள் தள்ளி வரும் உதயன் பத்திரிகையின் முதலாளியான சரவணபவனின் தந்தை இலங்கை பொலிஸில் இருந்த காலத்தில் தமிழ் மக்களை அரச படைகளுக்குக் காட்டிக் கொடுத்ததற்காகவே கொலை செய்யப்பட்டார் .

அதுமட்டுமல்லாது யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த சரவணபவன், தான் நடத்திவரும் ஊடகம் வாயிலாக தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் காட்டிக் கொடுத்து வருகிறார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெறும் என்ற அச்சத்தில் 2002 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் வெளியேற்றப்பட்ட வரை தேடிக் கண்டுபிடித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எதிராக சரவணபவன் யாழ். ஊடக அமையத்தில் வைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தினர் .

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது ஆதாரம் உள்ள குற்றச்சாட்டுகள் இருந்தால் ஏன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யாமல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார் என்பதில் பல சந்தேகங்கள் உள்ளன .

தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி மீது தமிழ் மக்களை வெறுப்படைய வைக்கும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டுமன்றி மக்கள் தன்னையும் நிராகரிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத சரவணபவன் கீழ்த்தரமான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் .

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பிரச்சாரங்களுக்கு ஏழு வாகனங்களில் வேட்பாளர் வருகின்றனர். வருவோரின் எண்ணிக்கையை விடக் குறைவாகவே மக்கள் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர் .

ஆனால், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரசாரக் கூட்டங்கள் மக்கள் வெள்ளத்தினால் நிறைந்து காணப்படும் நிலையில் அதனைப் பொறுக்கமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சரவணபவன் போன்றோர் தமிழ் மக்களையும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியையும் பிரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபோதும் பலிக்காது” என்றார்.

பதுளை மக்களை அநாதைகளாக்க சதித்திட்டம்!

தமிழ் வாக்குகளை சிதறடித்து பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பதுளை லுணுகலை பிரதேசத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றன. பதுளை மாவட்டத்தில் அண்ணன் அரவிந்தகுமாரும், நானும் ஓருயிர் ஈருடல்போல இணைந்து களமிறங்கியுள்ளோம். எமக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தென்படுகின்றது.

இன்று இந்த நாட்டிலே இனவாதம் தலைதூக்கியுள்ளது.  சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எமது அரசியல் இருப்பை நாம் கட்டாயம் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், பதுளை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு பாரிய சதித்திட்டம் நடந்துக்கொண்டிருக்கின்றது. திட்டமிட்ட அடிப்படையில் சமூகவலை தளங்களில் சேறுபூசப்பட்டுவருகின்றன.

தமிழ் வாக்குகளை சிதறடிப்பதற்காக பல சுயேட்சைக்குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பான்மையினத்தவர்கள் சரியான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.  தமிழ் இளைஞர், யுவதிகளை தவறாக வழிநடத்தி ஓகஸ்ட் 5 ஆம் திகதிக்குப் பிறகு பதுளை மாவட்ட தமிழர்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கான சதிகள் நடக்கின்றன.

எனினும், எமது மக்கள் தெளிவாகவே இருக்கின்றனர். எமக்கே வாக்களிப்பார்கள். பொதுத்தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம்.” – என்றார்.

குட்டி இராணுவ ஆட்சியை நடத்தும் சுமந்திரன் அதனை எதிர்ப்பது நகைச்சுவை!

சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார் என முன்னாள் நாடாளுமன்ற மற்றும் வடமாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்  குற்றஞ்சுமத்தியுள்ளார். 

திருகோணமலை மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும்  ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் இராணுவ  ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கிறது எனக் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. அவர் 16 விசேட அதிரடிப்படையினரையும், நான்கு அமைச்சர்களின் பாதுகாப்புப் படையினரையும் ஐந்து பீல்ட் பைக்குகளையும் வைத்துக்கொண்டு இராணுவ ஆட்சியை நடத்துகிறார். அப்படிச் செய்துகொண்டு, இராணுவ ஆட்சியை சுமந்திரன் எதிர்ப்பது நகைச்சுவையானது “என்றார். 

(அப்துல்சலாம் யாசீம்)

முதல்முறையாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் பிறந்த மூன்று குழந்தைகள்!

யாழ். தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முதல் முறையாக (இன்று) சத்திரசிகிச்சை மூலம் மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளன. இதில், இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் அடஙகுகின்றன.

பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ்.ஜெயபாலன் ஆகியோரின் முயற்சியினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முதல்முறையாக மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்குத் தயாராகும் தாய்மார்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்மை வழமையாக இருந்துள்ளது.

இந்நிலையில், இன்று(30) காலை மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை மூலம் மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர் எனக் குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவர்கள் எனவும் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் கைவிட்டதால் சர்வதேச நீதி கோரி போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (30) காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,

“எமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்துமாறு கோரி ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அரசியல்வாதிகள் எமது பிரச்சினைகளை தீர்த்துவைக்கத் தவறியுள்ளனர். அந்த வகையில் சர்வதேசநீதியை கோரி நாம் போராடிவருகின்றோம். 

இன்று தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ்த்தேசியத்துக்கெதிராகவும் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசியத்துக்காகப் பாடுபடுகின்ற கட்சிகளில் ஒட்டுக்குழுக்களாக இருந்தவர்களும்  பயணிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்துவருகின்றனர்.

தமிழ்மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர்களாக இருப்பவர்களையே நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் 

இன்று வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்குக் கேட்க்கின்றார்கள். தமது பணிகளை சரியாகச் செய்திருந்தால் வீடுவீடாகச் செல்லவேண்டிய தேவை இல்லை.

எனவே, யாரை நாடாளுமன்றம் அனுப்பவேண்டும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். எனவே எமக்கான நீதிக்கான வலுவினைச் சேர்க்கவேண்டும் என்று மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.  “என்றனர்.

வாள்வெட்டுக்குத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தவர்கள் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு! சிலர் தப்பியோட்டம்!!

வாள் வெட்டுத் தாக்குதலுக்குத் தயாராக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களிடமிருந்து கூரிய ஆயுதங்களும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய்ப் பகுதியில் நேற்று இரவு சந்தேகத்துக்கு இடமான முறையில் இளைஞர் குழு ஒன்று கூடி உள்ளது எனப் பொலிஸாருக்கு அப் பகுதி மக்களால் தகவல் வழங்கப்பட்டு உள்ளது.

இதனையடுத்து கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்ற போது குறித்த இளைஞர் குழுவினர் அவ்விடத்தில் இருந்து தப்பித்து செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் துரத்தியதில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து இரும்புக் கம்பிகள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும்பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை, அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

தேர்தலில் வாக்களிக்க வருவோர் முகக்கவசம் அணிவதும் பேனா கொண்டு வருவதும் அவசியம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கிலும், நிராகரிக்கப்படும் வாக்குகளைக் குறைக்கும் நோக்கிலும், தெளிவூட்டும் கருத்துகளை ஊடகங்கள் ஊடாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நடவடிக்கையை, யாழ். உதவித் தேர்தல்கள் அலுவலகம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி, தேர்தல் நாளில் நடைமுறைப்படுத்தக்கூடிய சில விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில்,

வாக்களிப்பு நிலையங்களில் கொரோனா பரவும் அபாயத்தை தடுப்பதற்கு சகல விதமான கட்டுப்பாட்டு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கட்டாயமாக முகக் கவசம் அணிதல்

  • கை கழுவும் ஏற்பாடு
  • ஒரு மீற்றர் இடைவெளி
  • ஆளடையாள ஆவணங்களை தொடாமலேயே பரிசீலித்தல்
  • கிருமி நீக்கும் திரவம் பயன்படுத்தி கை சுத்தம் செய்தல்
  • மை பூசுவதற்கு ஒவ்வொருவருக்கும் தனித் தனியான தூரிகை
  • வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக கறுப்பு / நீல நிற பேனையை வாக்காளர்களே எடுத்துவரல்
  • வாக்களிக்கும் சிற்றறையை அடிக்கடி தொற்று நீக்கம் செய்தல்.
  • சுகாதாரம் தொடர்பான விடயங்களை கவனிப்பதற்கு என வாக்களிப்பு நிலையங்களில் விசேடமான அலுவலர்கள் நியமிக்கப்பட்டல்.

வாக்காளர்கள்; ஒவ்வொருவரும் தாம் விரும்பியவாறு இரகசியமாகவும் சுதந்திரமாகவும் வாக்கினை அளிக்கமுடியும். நீங்கள் இடும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்பதனை எவராலும் எச்சந்தர்ப்பத்திலும் அறிந்துகொள்ளமுடியாது.

வாக்களிப்பதனை போலவே வாக்குகளை செல்லுபடியான விதத்தில் அளிப்பதும் முக்கியமானது.
வாக்குச் சீட்டில் தாம் விரும்பும் கட்சியின் / சுயேச்சைக் குழுவின் பெயர் மற்றும் சின்னத்திற்கு அருகில் வலது பக்கத்தில் உள்ள வெற்றுக் கூட்டில் தெளிவாக புள்ளடி இடுவதன் மூலம் வாக்கினை அளிக்கமுடியும்.

ஒருவர் தான் விரும்பும் ஒரு கட்சிக்கு / சுயேச்சைக் குழுவிற்கு மாத்திரமே வாக்கினை அளிக்கமுடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கூடுகளில் அடையாளமிடுவதால் வாக்குகள் நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டின் அடியில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் குறித்து ஒதுக்கப்பட்டுள்ள இலக்கத்தின் மீது புள்ளடி இடுவதன் மூலம் குறித்த கட்சி/சுயேச்சைக்குழு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது விருப்பத்தெரிவுகளைக் குறிப்பிடலாம். இவ்வாறு ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்களுக்கே தமது விருப்பு வாக்கினை அளிக்க முடியும்.

வாக்களிக்காமல் இருப்பது ஒருவர் தன்னுடைய உரிமையை இழப்பதற்குச் சமனானதாகும்.

‘வாக்குரிமையை பாதுகாப்போம் பாதுகாப்பாக வாக்;களிப்போம்’ என்றுள்ளது.

தமிழனின் இருப்பைத் தக்க வைக்க மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!

தமிழினம் இம்முறை பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தமிழினத்தின் இருப்பையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டு பொருளாதார ரீதியாக மேம்பட முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும்,  யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி  வி. மணிவண்ணன் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற பிரசார கூட்டத்திலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கிராமங்களின் முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டு செயற்படுவோம். கிராமங்களுக்கு நேரில் சென்று இருக்கிறோம். அவர்களின் துன்பங்களை நான் நன்கறிவேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாலும் , கிராம மக்களைச் சந்திப்பேன். வசப்பு வார்த்தைகளைக் கூறி வாக்குகளை பெற்ற பின்னர் மக்களை மறப்பவர்கள் அல்லர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொள்கை முரண்பாடாக வெளியேறிய நாம் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இயங்கி வருகின்றோம்.

எமது பிரச்சினைகள் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்கின்றது. தந்தை செல்வநாயகம் அரசியல் ரீதியாக எம் மக்களுக்காக போராடினார். அவரின் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதனால் , 76ஆம் ஆண்டு சுதந்திர தமிழீழம் மலர வேண்டும் என பகிரங்க கோரிக்கை விடுத்தார். அதனால் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கினார்கள் எமது ஆயுத போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.

என்ன நோக்கத்துக்காக 70ஆம் ஆண்டு போராடத் தொடங்கினாரோ அது இன்றுவரை நீங்க வில்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் நாம் காந்தீய வழியில் சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

இன்று எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றன , கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன , கல்வி வீழ்ச்சியடைந்து செல்கின்றது , வேலை வாய்ப்புக்கள் இன்றி இளையோர் சவால்களை எதிர்நோக்கி உள்ளனர், பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்டு வருகின்றோம்.

இவ்வாறாக எமது இனம் ஒடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற போது  எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனிகளாக இருக்கின்றனர். தமிழ் மக்களின். அரசியல் தீர்வைப் பெற்று தரவும் இல்லை. எமது இனத்தை பொருளாதார ரீதியிலும் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கவுமில்லை.

நான் நாடாளுமன்றம் சென்றால் எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க போராடுவது மட்டுமின்றி , எம் இனத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் முயற்சிகளை முன்னெடுப்பேன்.

வெளிநாட்டு உறவுகளுடன் கை கோர்த்து  வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து எமது மண்ணிலே முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக எமது மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

எமக்கான மாற்றம் ஏற்படாதுவிடின் எமது மண் பறிபோவது மாத்திரமின்றி பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி எமது இருப்பை இல்லாது ஆக்கிவிடுவார்கள்.

எனவே, இம்முறை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே எமது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டு நாம் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.

எமது இனத்துக்காக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றோம். தமிழ் இனம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட போது நாமே போராடினோம். எமக்கான அங்கீகாரம் இல்லாமலே நாம் போராடினோம்.

இம்முறை நாடாளுமன்றத்துக்கு எம்மை அனுப்புவதன் மூலம் தமிழினத்தின் இருப்பை உறுதி செய்து கொள்வோம்” என்றார்.

நாளைமறுதினம் மேலும் பலர் ஐ.தே.கவிலிருந்து நீக்கப்படுவர்!

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த உறுப்பினர்கள் 115 பேர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான கடிதங்கள் இன்று (29) ஐக்கிய தேசியக் கட்சியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சஜித் பிரேமதாஸ, ரஞ்ஜித் மத்தும பண்டார உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பல பிரபலங்களும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் நாளைமறுதினம் (31) நீக்கப்படுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்ட மாகாண சபை, நகர சபை மற்றும் முன்னாள் நாடாளுன்ற உறுப்பினர்கள் என 115 பேரின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி அதிரடியாக நீக்கியது.

எனினும், சஜித் பிரேமதாஸ, ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இதுதொடர்பான இறுதி முடிவு ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று (28) கூடி எடுத்திருந்தது.

இதையடுத்து இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் ஒழுக்கமாக செயற்பட்டுள்ளது. இதனால்தான் ஏன் பலரும் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் அவர்களை நீக்கவில்லை என்று கேள்விகேட்டார்கள். சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க எமக்கு முடிந்தது. இதற்காக 5, 6 குழுக்களை நாங்கள் நியமித்திருந்தோம்.

இந்நிலையில் குழுவின் முடிவின் பிரதிபலன் நேற்று வெளியாகியது. அதற்கமைய கொழும்பு மாநகர சபை, கோட்டை மாநகர சபை, நாவலப்பிட்டி மற்றும் கம்பளை போன்ற உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதன் இரண்டாவது கட்ட நடவடிக்கை நாளைமறுதினம் (31) முன்னெடுக்கப்படும். இவ்வாறு உறுப்பினர்கள் நீக்கப்பட்டமை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படும் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால், இறுதியில் அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்நிலையில்தான் கட்சியை விட்டுச்சென்ற உறுப்பினர்கள் நீக்கப்பட்டு கடிதமும் இன்று அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

நாங்கள் அரசாங்கத்துடன் சங்கிமக்க விரும்பவில்லை. பொதுத் தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்போம். மக்கள் கைகளிலேயே அது தங்கியுள்ளது. ஆகவே தனி அரசாங்கத்தை அமைப்பதே எமது இலக்காகும்” என்றார்.

பிரிந்து வாழும் மனைவி மீது கத்திக் குத்து; கணவன் கைது!

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர்,  சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார்.

படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் குறித்த தாயார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவம் இன்று (29) முற்பகல் குப்பிளான் பகுதியில் இடம்பெற்றது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தார்.

ஊரெழுவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 34 வயதுடைய குடும்பப் பெண், கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் குப்பிளான் பகுதியில் வீடொன்றில் முதியவரை பராமரிக்கும் வேலையில் வாழ்வாதாரத்துக்காக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பணிபுரியும் வீட்டில் முதியவர் சுன்னாகம் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அந்தப் பெண் மாத்திரம் குறித்த வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அங்கு சென்ற கணவர், மனைவியின் தலைமுடியை வெட்டி எறிந்து அவரின் முகத்தில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். அத்துடன், கத்தியால் வெட்டியும் உள்ளார்.

சம்பவத்தில் குடும்பப் பெண் அதிகளவு குருதி வெளியேறி அவதிப்பட்ட நிலையில் அயலவர்களால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாகம் பொலிஸார், அந்தப் பெண்ணை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் அவரது கணவரைக் கைது செய்து தடுத்துவைத்துள்ளனர்.

சைக்கிளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இன்று (29) யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அத்துடன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமது பயணத்தை ஆரம்பித்தனர்.

வ்வுனாயாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களாலேயே குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நண்பகல் 12 மணியளவில் யாழ். தந்தை செல்வா நினைவுத் திடலுக்கு முன்னால் தேங்காய் அடித்து, தமது கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போதே தமது ஆதரவு சைக்கிள் சின்னத்துக்கே, மக்கள் அவர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.