ரணிலிடம் 4 மணி நேரம் விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (31) முன்னிலையான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் 4 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது,

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது கடந்த வாரம் விடுத்த அழைப்பின்பேரிலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் 9.55 அளவில் முன்னிலையாகினார்.

விசாரணைக்கு வரும்படி இதற்கு முன்னர் இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் பிறிதொரு திகதியை ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் முன்னிலையாகி 4 மணிநேரம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமும் இன்றைய தினம் முற்பகல் முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.


இந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழு தெளிவுபடுத்தும் என்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கல்வி அமைச்சராக இருந்த தாம், அதற்கு பொறுப்பு கூற வேண்டியவரல்லர் என்றும் கூறினார்.

வடக்கின் விவசாயத்துக்குக் கைகொடுக்க இராணுவம் தயார்!

வடக்கில் விவசாயத்துக்கு இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றனர் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“வடக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரால் பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக நலநோன்புத் திட்டங்கள் பொதுமக்களுக்காக  முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்துடன், இராணுவத்தினரால் நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கைப் பொறுத்தவரை வடக்கு ஒரு விவசாய பூமி. தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கமும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என அறிவித்திருக்கின்றது.

அதேபோலவே, இராணுவத்தினரான நாங்களும் விவசாயிகளுக்கு உதவுவதற்குத் தயாராகவிருக்கின்றோம். எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான சகல விதமான உதவித் திட்டங்களையும் நாங்கள் வழங்கத் தயாராகவுள்ளோம்.

இன்று வட்டுக்கோட்டையில் விவசாய நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் ஒரு குளத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதுபோல வடக்கில் எதிர்வரும் காலங்களில் விவசாயப் பெருமக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் முன்னெடுப்பார்கள்” என்றார்

திருமலையில் அடித்த சைக்ளோன்; வீடுகள் பல சேதம்!

திருகோணமலை மாவட்டத்தில் வீசிய மினி சூறாவளியால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன என திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
 
திருகோணமலையில் நேற்று (30) மாலை வீசிய சூறாவளியினாலேயே இவ் வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.
 
சைக்ளோன் என்று அழைக்கப்படுகின்ற மினி சூறாவளியினால் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ, அத்தாபெந்திவெவ கிராமங்களில் 18 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. கிண்ணியா பிரதேசத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளும் கந்தளாய் பிரதேசத்தில் சில வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேச செயலகத்துக்குத் தெரியப்படுத்தியதையடுத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கள விஜயம் மேற்கொண்டு விபரங்களைத் திரட்டியுள்ளனர். அதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 


இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (31) மாலை காலமானார்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டில்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி வைத்தியசாலையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், மூளையில் கட்டியை அகற்ற சிகிச்சை இடம்பெற்றதையடுத்து, அவர் கோமா நிலையை அடைந்தார்.

இதேவேளை, அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது.

நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இன்று மாலை காலமானார்.

இதையடுத்து, அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் பயிர்ச்செய்த காணிகளை திடீரென தமதென வந்து தடுக்கும் வன இலாகா அதிகாரிகள்!

திருகோணமலை – ரொட்டவெவ மற்றும் அத்தாபெந்திவெவப் பகுதிகளில் சேனைப் பயிர்ச்செய்கை செய்வதற்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியும், வன இலாகா அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதி மக்கள், கடந்த யுத்த காலம் தொடக்கம் இன்று வரைக்கும் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர் எனவும், தற்போது வன இலாகா அதிகாரிகள் தங்களுக்கு சொந்தமான காணிகள் எனக்கூறி சேனைப் பயிர்ச்செய்கை முன்னெடுக்க வேண்டாமென தெரிவித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வருடா வருடம் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொண்டு வரும் பயிர்ச் செய்கையாளர்களுக்கு  எதிராக வன இலாகா அதிகாரிகள் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
சேனைப் பயிர்ச்செய்கையாளர்களின் நலன் கருதி அரசியல்வாதிகளும் அரசாங்க உத்தியோகத்தர்களும் சாதகமான ஒரு பதிலைத் தர வேண்டுமெனவும் தாங்கள் யுத்தகாலத்தில் முன்னெடுத்து வந்த சேனைப் பயிர்ச் செய்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுதொடர்பாக மொரவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஐயந்தவிடம் கேட்டபோது,

“பல வருடங்களாக அப்பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும், அக்காணி வன பரிபாலன திணைக்களத்துக்குச் சொந்தமான காணி என உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

(அப்துல்சலாம் யாசீம்)

கிளிநொச்சி கந்தசுவாமி தேர்!

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலின் தேர்த் திருவிழா இன்று (31) சிறப்பாக இடம்பெற்றது.

முதன் முதலாக செய்யப்பட்ட தேர் நேற்று(30) வெள்ளோட்டம் விடப்பட்டது.

மீள்குடியேற்றத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முதலாக இராஜகோபுரம் அமைக்கப்பட்டு, புதிதாக சித்திரைத் தேர்  செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று பொது மக்கள் ஒன்று கூடி வடம் பிடித்து  பக்தியோடு தேர் இழுத்தனர்.

நாளை தீர்த்தத் திரு விழாவும் இடம்பெறவுள்ளது.

பாடசாலையில் நிர்வாகச் சீர்கேடு; யாழில் கவனயீர்ப்பு!

யாழ்ப்பாணம், அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (31) நடைபெற்றது. அத்துடன் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் நிர்வாக சீர்கேட்டுக்கு எதிராக வலயக்கல்விப் பணிப்ப்ளர், மாகாண கல்வி அமைச்சு போன்றவை நடவடிக்கை எடுக்காததான் காரணமாகவே, இன்று ஆளுநர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “பாடசாலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்”, “தமிழர் ஆசிரியர் சங்கமே தவறான ஆசிரியர்களை தவறாக வழிநடத்தாதே”, “வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளே ஊழல் புரிவோரை பாதுகாக்காதே”, “வலயக்கல்விப் பணிப்பாளரே ஆசிரியர்களை தூண்டி அரசியல் செய்யாதே”, “மாணவர்களின் உணவுப் பொருட்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடு” போன்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அலுநர் செயலகத்தில் கையளித்தனர்.

மேலும் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து விரைவாக தீர்வினை வடக்கு மாகாண ஆளுநர் பெற்றுத்தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரின் சகோதரர் மற்றும் சகாக்கள் கைது!

இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் காரரான கிம்புலா ஹெலே குணா, இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவரின் சகோதரரான சுரேஷ் உட்பட அவருடன் நெருக்கமான 9 பேர் கைதாகியுள்ளனர்.

கொழும்பில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்ட அதேவேளை, அவர்களிடமிருந்து 70 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாடி வீடு அல்ல தனிவீடே!

” மாடிவீடு என்ற போலிக் கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார நிலையத்தில் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று (30) நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் ஐயாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு இவ்விடத்துக்கு வருவோம். அன்று எனது தந்தை எம்மை அழைத்துவந்தார். இன்று அவர் இல்லை. அது பெரும் துயரைத் தருகின்றது. இருந்தாலும் நல்லுள்ளங்களைத் தேடிவைத்துவிட்டே எனது தந்தை சென்றுள்ளார். அவர்கள் இன்று என்னை அரவணைக்கின்றனர்.

மலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம். எனினும், மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. கூரைக்குப் பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே, போலித்தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும் கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்.

அதேவேளை, கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மாத்திரமே கலைகள் வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம்.

நல்லூர் சந்திர சேகர பிள்ளையாரில் நிகழ்ந்த அற்புதம்!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக விளங்கும் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்த அற்புதம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசயச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறவிருந்த நிலையில் மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நேற்று (30) மாலை இடம்பெற்றது.

இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான், வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிந்தது. இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களைப் பார்வையிட்டு வணங்கினர்.

இது தொடர்பில் ஆலய ஸ்தபதி அராலியூர் ஈஸ்வரன் தெரிவிக்கையில், “விக்கிரகங்களின் வாயில் இருந்து இவ்வாறு திரவம் வருவது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செயற்பாடு” என்றார்.

ஹெரோயின் விற்ற நவகம்புர “மோல் சூடி” கைது! லட்சங்கள் புழங்கிய வங்கிக் கணக்கு!!

கொழும்பு – கிராண்ட்பாஸ் நவகம்புரவில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட “மோல் சூடி” என்று அழைக்கப்படும் தீபிகா குமார லக்ஷ்மி ரன்தெனிகே என்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

35 வயதுடைய குறித்த பெண்ணின் வீட்டைச் சோதனையிட்டபோது சுமார் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் பெயரில் உள்ள வங்கிக் கணக்குப் புத்தகம் ஒன்று மற்றும் வங்கி அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கில் கடந்த சில தினங்களில் மாத்திரம் சுமார் ஒரு கோடி ரூபா வரை பணம் புழக்கத்தில் இருந்துள்ளது எனவும் ​பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். வைத்தியசாலை ஊழியர் மாடியிலிருந்து வீழ்ந்து பலி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபடும் பெண் ஊழியர் ஒருவர் மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறுித்த ஊழியர் தவறி வீழ்ந்தாரா அல்லத தற்கொலை செய்துக் கொண்டாரா என விசாரணைகளின் பின்னரே தெரிய வரும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இன்று (30) பிற்பகல் இடம்பெற்றது.

பளையைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் பணியாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 17ஆம் நோயாளர் விடுதியிலிருந்தே அந்தப் பெண் நிலத்தில் வீழ்ந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்; யாழில் பேரணி!

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று (30) வலிந்து  காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்ற முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் ஆரம்பமாகி வைத்திசாலை வீதியின் ஊடாக சென்று  மாவட்ட செயலதை சென்றடைந்தது.

ஆர்ப்பாடத்தில் கலதுகொண்டவர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே?, உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?. கொலைகாரன் நீதி வழங்க முடியாது. சர்வதேசமே! எம் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்ட எமது உறவுகளைத்தேடி பத்தாண்டுகளாக கண்ணீரோடு நாம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும். இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே?. என கோசங்கள் எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் விபத்து; விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர் பலி!

கிளிநொச்சியில் நேற்று (28) மாலை 4 மணியளவில்  ஏ-9 வீதி, 155 கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விஷேட அதிரடிப்படையைச் சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி நகர்  பகுதியில் இருந்து இரண்டு டிப்பர் வாகனங்கள் 155 ஆம் கட்டை சந்தி பகுதியிருந்து பாரதிபுரம் திரும்பிய வேளையில் விசேட அதிரடிப்படையினர் முகாமிலிருந்துவந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாகனம் மோதுண்டதில்லே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது.

இல 55,படிநெகுடுவாவ, மயில்கஸ்வொவவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடைய தனபாலகே ரோஷன் பிரதீப் (பி.சி 87958) என்பவர் பலியாகியுள்ளார். 

சும்பவம் தொடர்பில்  டிப்பர் வாகன சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

சந்தேகம்; இருவர் கைதாகி விடுதலை!

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான முறையியில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் மானிப்பாயில் வைத்து இன்று கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவரும், ஆவா வாள்வெட்டுக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் அடிப்படையில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகளில் அவர்கள் இருவரும் ஒழுங்காக முற்படுவதால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட ஆவா வினோதன் உள்ளிட்ட ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்! யாழ். பஸ் நிலையம் முன் முன்னணியினர் போராட்டம்!!

இலங்கைச் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று (29) மாலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக ஒன்று திரண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷ்ங்களை எழுப்பினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “வன ஜீவராசிகள் திணைக்கள ஆக்கிரமிப்பை எதிர்ப்பது பயங்கரவாதமா?”, “கஞ்சா கடத்தலை தடுக்க முற்பட்ட உதயசிவம் பயங்கரவாதியா?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கடலால் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற மாதகல் வாசிகள் கடற்படையிடம் சிக்கினர்!

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பெருந்தொகை தங்கத்தைக் கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 6 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தைக் கடத்த முற்பட்டபோதே சந்தேக நபர்கள் இருவரும் இன்று (29) அதிகாலை அனலைதீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். 

மாதகலைச் சேர்ந்த இருவரே, தரகுப் பணத்துக்காக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறை கடற்படையினரால் சந்தேக நபர்கள் இருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை, இருவரும் நீதிமன்ற நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மீட்கப்பட்ட 5 கிலோ 500 கிராம் தங்கமும் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் கடற்படையினர் கூறினர்.

திருமலையில் மீனவர்கள் உண்ணாவிரதம்!

திருகோணமலை மீனவ மக்களின் நலன் கருதி உடனடியாக சுருக்குவலை, டைனமோட்டை  போன்ற சட்டவிரோதச் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரி இன்று (29) மீனவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருகோணமலை வீர நகர் சிறுவர் பூங்காவில் இந்தப் போராட்டம் இன்று (29) காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. 

கடந்த காலங்களில் உண்ணாவிரதப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி மீனவ மக்களுக்கான ஒரு தீர்வை கண்டதில்லை. ஆகையால் இம்முறை இரவில் சுருக்கும் சுளுக்கு மறையும் கோட்டையும் நிறுத்தக்கோரி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூடிய விரைவில் இதற்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பத்தாயிரம் மீனவர்கள் நன்மை பெறுகின்ற இக்காலகட்டத்தில் பத்துப் பேர் மாத்திரமே சிறப்பு வலைகளையும் தட்டுகளையும் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் மீன்கள் அழியக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் உடனடியாக இதற்குத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஜமாலியா, கிண்ணியா, புல்மோட்டை  மற்றும் இறக்ககண்டி போன்ற பகுதிகளிலேயே அதிகளவிலான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன எனவும் மீனவர்கள் தெரிவித்தனர்

எனவே திருகோணமலை மாவட்ட மீனவர்களின் நலன் கருதி உடனடியாக சுருக்கு வலை மற்றும் டைனமைட் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுபவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

(அப்துல்சலாம் யாசீம்)

பல்கலைக்கழகம் தனி நபர்களுக்கானது அல்ல! அனைவரும் சேர்ந்தே முடிவெடுப்போம் வாருங்கள்!!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளும் தனிப்பட்ட நபர்களுக்காக அல்லாமல், எமது பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்தி அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். வேறுபட்ட சிந்தனைகள், பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்வாங்கப்படும்” என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராகக் கடைமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு யாழ்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கிறேன். இக் கால  கட்டத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடைப்பாடு உள்ளது. உலகில் என்றும் இல்லாத ஒரு நிலைமை தற்போது காணப்படுகின்றது.

நாட்டில் உள்ள விமான நிலையங்களே மூடப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினை நிர்வகிப்பதென்பது சவாலான விடயமாகும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2ஆயிரம் ஊழியர்களும் 11 ஆயிரம் மாணவர்களும் காணப்படுகின்றனர். நாம் அனைவரும் ஒரு குழுவாக இயங்க வேண்டும். இக் குழுவின் தலைமைத்துவம் எனக்கு தரப்பட்டுள்ளது. அதனை சரிவர மேற்கொள்வேன்.

யாழ். பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபட்டு எனது கடைமைகளைப் பொறுப்பேற்றுள்ளேன். இந்தப் பல்கலைக்கழகமானது மக்களின் சொத்து. யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யார் என்பதனை அறிய மக்கள் ஆர்வம் காட்டினர். அந்தளவிற்கு எமது பல்கலைக்கழகம் சமூகத்துடன் இணைந்துள்ளது.

ஆதி காலத்தில் இருந்து தமிழர்களின் சொத்தாக கல்வி காணப்படுகின்றது. கல்விப் பாரம்பரியமிக்க கலைக் கோவிலாக யாழ் பல்கலைக்கழகம் விளங்குகின்றது. இந்தப் பல்கலைக்கழகத்தினுள் மாணவனாக 1979ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தேன். 31 வருடங்களுக்கு பின் துணைவேந்தராக நிலைநிறுத்தியிருக்கிறது.

பொதுமக்கள், ஆர்வலர்கள், ஊடக நண்பர்களின் ஆதரவுடன் பணியினைத் திறம்பட மேற்கொள்ள ஆர்வமாக உள்ளேன். பல்கலைக்கழகத்தில் வேறுபட்ட சிந்தனைகள், பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்வாங்கப்படும். இங்கு ஒவ்வொரு முடிவுகளும் தனிப்பட்ட நபர்களுக்காக அல்லாமல், எமது பல்கலைக்கழகத்தை நிலைநிறுத்தி அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும்.
.எமது யாழ்பாணப் பல்கலைக்கழகம் செழிப்புற வளர்ந்து எதிர்காலச் சந்ததியினருடைய சிந்தனைக்கூடமாக மாற அனைவரும் சேர்ந்து உழைப்போம்” என்றார்.

பங்காளிகளுக்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டமைப்பை விட்டு வெளியேறார்கள்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பினருக்கு சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், கூட்டமைப்பிலிருந்து  அவர்கள் வெளியேறுவார்கள் என நான் நம்பவில்லை. கூட்டமைப்புக்குள்  பிரிவினை ஏற்படாவண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து   நட்புறவோடு பயணிக்கும்” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சிகள் தனித்து செயற்படவுள்ளன எனத் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவருமான சி.வி.கே.  சிவஞானம் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், கடந்த 15 ஆம் திகதி அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல நாளை (29) வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

 பல ஊடகங்களில் நாளைய கூட்டத்தில் பிரளயங்கள், குளறுபடிகள் இடம்பெறும் – முரண்பாடுகள் ஏற்படும் எனச் சொல்கிறார்கள். அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை. சில விடயங்களை நாங்கள் பேசப் போகின்றோம் – பேசுவோம்.
   
 அதாவது தமிழரசுக்கட்சி  கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சி,  முதன்மையான கட்சியும் கூட. ஏனைய கட்சிகளை அரவணைத்து அவர்களோடு கலந்து பேசி கருத்துப் பகிர்வுடன் செயற்படவேண்டிய தேவை எங்களுக்குள்ளது. அந்தப் பொறுப்பும் இருக்கின்றது. 

ஆகவே, அந்த பொறுப்போடுதான் தமிழரசுக்கட்சி செயற்படும். என்னைப் பொறுத்தவரைக்கும் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் அமைப்பினருக்கு சில கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால், கூட்டமைப்பிலிருந்து  அவர்கள் வெளியேறுவார்கள் என நான் நம்பவில்லை.

அதேவேளை, அவர்களுடைய கருத்துக்களை நாங்கள் அனுசரித்துப் பேசித் தீர்க்கக் கூடிய வழி வகைகள் இருக்கின்றன. அதை பேச்சு மூலம் நாங்கள் செய்து கொள்வோம். எனவே, எங்களுடைய மத்திய செயற்குழுவாக இருந்தாலும் சரி, எந்த எந்தக் குழுவாக இருந்தாலும் அது இணக்கப்பாட்டை நோக்கமாக கொண்டு இருக்குமே தவிர, பிளவுகளை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டமாக இருக்காது. அவ்வாறான செயற்பாடுகளையே எங்களுடைய தமிழரசுக்  கட்சியின்  எதிர்பார்ப்பாகும்.

எனவே, தொடர்ந்து எமது கட்சி ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளுடன்  நட்புறவோடும் உரிமையோடும் செயற்படும்”  என்றார்