யாழ். அராலியில் வீடு வீடாக சென்று இராணுவம் தேடுதல்!

யாழ்.அராலி மேற்கு ஜே -160 கிராமசேவகர் பிரிவில் இன்று (30) அதிகாலை இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றினை நடத்தியிருக்கின்றனர்.

சுற்றிவளைப்புக்கான காரணம் தொடர்பாக எதுவும் கூறப்படாத நிலையில், வீடு வீடாக நுழைந்த இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குறித்த பகுதி மக்கள் சிலர் கூறுகையில்,

“காலையில் வழக்கமான செயற்பாடுகளை ஆரம்பித்தபோது பெருமளவு இராணுவத்தினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது. பின்னர் அவர்கள் எமது பிரதேசத்திலுள்ள சகல வீடுகளையும் சல்லடையிட்டு தேடுதல் நடத்தினார்கள்.

குறிப்பாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மக்களுடைய வீடுகளுக்குள் சப்பாத்து கால்களுடன் நுழைந்தனர் என்றனர்.

எனினும் குறித்த சோதனை நடவடிக்கை வன்செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை தேடியதாகவோ, சட்டவிரோத பொருட்கள் தொடர்பானதாகவோ இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபர் திடீர் இடமாற்றம்; மாணவர்களின் பெற்றோர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி ஒருவரை மதத்தலைவர் ஒருவரின் தலையீடு காரணமாக வேறு பாடசாலைக்கு மன்னார் வலயகல்வி பணிப்பாளர் இடமாற்றம் செய்துள்ளார் எனக் கூறி, குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (30) காலை பாடசாலைக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பாடசாலையின் அதிபரான அருட்சகோதரி பாடசாலையில் கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில்    திடீரென வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றியுள்ளமையினால் குறித்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 1 5 வருட கடூழிய சிறை! திருமலையில் இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு!

திருகோணமலை- நிலாவெளி பிரதேசத்தில் 53 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 15 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பு இன்று (30) திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 53 வயதுடைய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த எதிரி தீர்ப்பு வழங்கப்படவிருந்த நிலையில் வழக்குத் தவணைக்கு சமூகம் அளிக்காத நிலையில் அவர் குற்றவாளி என இனங்காணப்பட்டார்.

இந்நிலையில் குறித்த எதிரிக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  அவருடைய தீர்ப்பினை திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டினார்.

குறித்த எதிரி சம்சுதீன் ஷாஜஹான் அல்லது சம்சுதீன் பைரூஸ்  என இரண்டு பெயர்களில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த எதிரியை குற்றவாளி என இனங்காணப்பட்ட நிலையில் தீர்ப்பு வழங்கப்படும் நாளான இன்று வழக்கிற்கு சமூகம் தராத நிலையில் அவருக்கு 15 வருட கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் அந்தப் பணத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் குறித்த குற்றவாளியான சம்சுதீன் ஷாஜஹான் அல்லது சம்சுதீன் பைரோஸ் என்பவருக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் தீர்ப்பளித்தார்.

 அத்துடன் 25,000 ரூபா தண்டம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறுமாத கால கடூழிய சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

 (அப்துல்சலாம் யாசீம்)

யாழில் மினி சூறாவளி!

இன்று (30) அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், வீடு ஒன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில் சுவர்கள் பாறி வீழ்ந்து நாசமாகியுள்ளன.

வடமராட்சி கிழக்கு- செம்பியன்பற்றிலேயே மினி சூறாவளி தாக்கியுள்ளது.

இதனால் வீட்டின் சுற்று மதில் 450 அடி பாறி வீழ்ந்துள்ளதுடன், பயன் தரு மரங்களான தென்னை, வாளை என்பன முறிந்து வீழ்ந்துள்ளன.

இன்று யாழ். குடா நாட்டில் காலை பலத்த மழை பெய்ய ஆரம்பித்திருந்த நிலையில், இதற்கு முன்னர் அதிகாலை 4:15 மணியளவில் மினி சூளாவளி தாக்கியுள்ளது.

துண்டாடப்பட்ட கையை ஒட்டி யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை!

வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23ஆம் திகதியன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளார்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி,

“யாழ். போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர் முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் குறித்த பிளாஸ்டி சத்திரசிகிச்சை மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (30) யாழ். போதனாவைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் கைகள், கால்கள் துண்டாகுதல் தொடர்பாக விழிப்புணர்வு அடையவேண்டும். மேலும் அளவுக்கு மேலாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றாலும் இவ்வாறான சிகிச்சைகள் வழங்கமுடியாது போகக்கூடும். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜப்பான் தூதர் மட்டு. மாநகர சபைக்கு விஜயம்!

இலங்கைக்கான ஜப்பான் உயர் ஸ்தானிகர் அகிரா சுகியாமா இன்று (29) மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாராஜா சரவணபவன் உயர் ஸ்தானிகரை வரவேற்றார். பின்னர், மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார நிலமைகள் தொடர்பிலும், மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மாநகர சபையினால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் அவற்றை முன்னெடுப்பதற்கான நிதி அனுசரணைகள் இல்லாமை தொடர்பிலும் மாநகர முதல்வரால் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் நிர்மாணத்துறை சார்ந்து மட்டக்களப்பு நகரிலிருந்து பெரியகளம் தீவுக்கான பாலம் அமைப்பதற்கும், இலங்கைத் தமிழர்களின் வரலாறுகளையும், தொல்லியல் உண்மைகளையும் எதிர்காலச் சந்ததியினருக்கு கற்பிக்கும் வகையில் ஒரு முப்பரிமாண கலையரங்கம் ஒன்றை அமைப்பதற்குமான திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன், மாநகர தீயணைப்பு சேவையினை விஸ்தரித்து வினைத்திறனான முறையில் மேற்கொள்வதற்கும், கழிவகற்றல் வசதிகளுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கும் ஜப்பான் நாட்டின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையுடனான தமது உறவினை புத்தாக்கம் செய்து கொள்வதற்குரிய நல்ல வாய்ப்பாக இதனை கருதுவதோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார அபிவிருத்திக்கும், உட்கட்டுமாணம் உள்ளிட்ட நிர்மாணத்துறை சார் பணிகளுக்கும் ஜப்பான் தயாராக உள்ளது எனவும் எதிர்காலத்தில் இத்திட்டங்களை மேற்கொள்ள சகல நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாகவும் ஜப்பானின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா மற்றும் ஜப்பான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 

அதிகாலையில் கிளிநொச்சியில் சரிந்த மாமரம்; கடையும் வீடும் சேதம்! காற்றுடன் கூடிய மழையால் விபரீதம்!!

கிளிநொச்சி ஜெந்திநகர் பகுதியில் இன்று (29) அதிகாலை அடித்த பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பாரிய மாமரம் சரிந்து விழுந்ததால்  கடைஒன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவு சேதமாகியுள்ளது.

இதன்போது அருகில் இருந்த தச்சுப் பட்டறையே முற்றாக சேதமடைந்துள்ளது. அதேவேளை, அதன் அருகிலிருந்த வீட்டுத் திட்டத்தினூடாக அமைக்கப்பட்டிருந்த வீட்டின் கூரையின் மேல், மரம் விழுந்ததனால் அவ்வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.

மரம் சரிந்து விழுந்த கடையையும் வீட்டையும் கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன்  மற்றும் கிராம அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டுள்ளார்.

இரவு படித்துக் கொண்டிருந்த மாணவி காலையில் சடலமாக மீட்பு!

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற –  டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

” மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரைபடித்துக்கொண்டிருந்தார். நாம் நித்திரையாகிவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” என யசோதாவின் தாயார் நானுஓயா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஊர் மக்களுடன் இணைந்து தேடிய நிலையில் இன்று (29) காலை தோட்டத்தொழிலாளர்கள் சிலர் கொழுந்து கொய்வதற்கு சென்றுக்கொண்டிருக்கையிலேயே வீட்டுக்கு அருகில் உள்ள ஆற்றில் யசோதா சடலமாகக் கிடப்பதை கண்டுள்ளனர்.

இதையடுத்து நுவரெலியா மாவட்ட நீதிபதி மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் கடலாமைகளுடன் ஒருவர் கைது! கொழும்புத்துறையில் சம்பவம்!

தடை செய்யப்பட்ட 5 கடலாமைகளுடன் கொழும்புத்துறையில் வைத்து ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட கடல் ஆமைகள் கொழும்புத்துறைப் பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது எனப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றை இன்று (29) அதிகாலை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், ஐந்து கடலாமைகளை உயிருடன் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கடலாமைகள் மற்றும் கைது செய்யப்பட்டவரை நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

அண்மைக்காலத்தில் தடை செய்யப்பட்டுள்ள கடல் ஆமைகள் யாழ்ப்பாண குடாநாட்டில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தால் வெற்றி; இதை அரசு ஏற்கவேண்டும்! வற்புறுத்துகிறது தமிழரசு !!

“வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று (28) முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். ” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளது.

இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தின் நிறைவில் இன்று மாலை தமிழரசுக் கட்சி சார்வில் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-

“இலங்கையில் தமிழர் தேசத்தின் தமிழின விடுதலை வரலாறு 70 ஆண்டுகளுக்கும் மேலானது. பல இலட்சம் தமிழ் மக்கள் இனக் கலவரங்களினாலும், போரிலும், போர்க் காலத்திலும், போராட்டங்களிலும் தம் உயிநீத்துள்ளனர். இன்னும் நாம் விடுதலை பெறவில்லை.

இவ் வரலாற்றுக் காலத்திலும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தும் ஈமக்கடனியற்றியும் கண்ணீர்விட்டழுதும் ஆறுதல் பெறுவது தமிழ் உறவுகள், தமிழ் மக்களின் பாரம்பரியம். இவை தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகமாகும்.

உலகில் இத்தகைய மனிதாபிமானக் கடமைகள் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் மனித குலத்தினாலும் ஐ.நா.சாசனத்தினாலும் உடன்படிக்கைகளினாலும் அங்கீகரிக்கப்பட்ட கடப்பாடாகும்.

உலகம் முழுவதும் இக்கடப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் இறந்தவர்களை நினைவு கூரும் கடப்பாடுகள் அரசுகளினால் மறுக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வரும் நிலமை தான் இருக்கின்றது.

மனித குலம், தமிழ் உறவுகள் தம் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டழுது சாந்தி பெறும் இயல் உணர்வுகளைக் கூட, மனிதாபிமானக் கடமைகளைக் கூட இன்றைய கோத்தபாய அரசு மறுத்து வருகிறது.

இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நீதிமன்றங்களில் எல்லாம் உறவுகளை நினைவு கூருவோருக்கு எமக்கும் பெயரிட்டு எதிராக முறையற்ற வழக்குகளைப் பதிவு செய்து தடையுத்தரவுகளை பொலிஸார் வழங்குகின்றனர். 

வடக்கு, கிழக்கு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் தலைவர்கள், வழக்கறிஞர்களுட்பட நூற்றுக்கணக்கானவர்கள் தடையுத்தரவின் பேரில் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட்டு வருகின்றனர். அரசின், இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அடிப்படையுரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும், மனிதாபிமான கடமைகளுக்கும் ஒட்டுமொத்தமாக ஐ.நா. சாசன உடன்படிக்கைகளுக்கும் எதிரானதாகும். 

இதனை நாம் எதிர்க்க வேண்டும். எதிர்த்துப் போராட வேண்டும். மனிதகுலத்திற்குரித்தான, தமிழ் மக்;களுக்குரித்தான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க நாம் ஒன்று திரண்டு ஜனநாயக வழிகளில் போராட வேண்டும். 

இந்நிலமைகள் தான் 1987 செப்டம்பரில் காந்திய வழியில் உண்ணா நோன்பிருந்து 26ஆம் திகதி உயிரிழந்த திலீபனை நினைவு கூருவதிலும் இடம்பெற்றுள்ளது. அவன் தியாகம் மகத்தானது. 1987 செப்ரெம்பர் 26இல் உயிரிழந்த திலீபன் நினைவு கூருவதற்கு அப்பால் இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து அர்ப்பணித்த தமிழ் மக்களையும் நினைவு கூர நீதிமன்றத் தடைகளும் ஏற்படுத்தப்படுகின்றன.

இதுவே தமிழின அழிவிலிருந்து எஞ்சியுள்ள எம் தமிழ்க் குலம் எதிர்காலத்திலும் எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சனையாகும். சவாலாகும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இப்பொழுது 20ஆவது திருத்தச் சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்றும் தீவிரத்தில் உள்ளார். புதிய அரசியலமைப்பில் 20ஆம் திருத்தத்தை உட்படுத்த எண்ணுகிறார். 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகம் ஓரளவுக்கிருந்ததையும் அதனை நீக்கும் போது நாடாளுமன்ற ஜனநாயகம் பலவீனப்படுத்தப்படும் சர்வாதிகார பலத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் நாட்டில் இராணுவ மயமான பொலிஸ் அதிகாரமுமான ஆட்சி ஏற்படும்.
 
தமிழ்த் தேசத்து மக்களின் அரசியல் ஆளும் உரிமை, ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், மனிதாபிமானக் கடமைகளை இத்தகைய அரசொன்றில் எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்கமுடியாது. பெரும் அடக்குமுறைக்கும் ஒடுக்கு முறைக்கும் தமிழ்த் தேச மக்கள் மூச்சு விடவோ கண்ணீர் விடுவதற்கக் கூட உரிமையற்றவர்களாகி விடுவோம். தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழினம் அழிந்து விடும் அபாயத்தையே எடுத்துச் சொல்கிறோம்.

இந்த அபாயத்தை எதிர்கொண்டதால் தமிழ்த் தேசியத்தைக் கொண்டியங்கும் பத்து அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் கடந்த 18ஆம் திகதியன்று ஒன்று கூடி இழந்து போகும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்கும் படி ஒரு வேண்டுகோளில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அனுப்பினோம். இதுவரை பதிலில்லை. 

அரசின் பொலிஸார் வடக்கு, கிழக்கு முழுவதும் பல நீதிமன்றத் தடைகளையும், நடவடிக்கைகளையும் எடுத்தபோது அவற்றைத் தாண்டி கடந்த 26ஆம் திகதி  காலை 8 மணியளவில் உணவு தவிர்ப்புப் போரட்டத்தை எங்கே நடத்துவது என்பதைத் தீர்மானித்தோம்.

நேற்றுமுன்தினம் சாவகச்சேரியில் கைது செய்யப்படுவோம் என்ற நிலையிலும் முழுநாளும் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடத்தினோம். ஒற்றுமையினால் புதிய நம்பிக்கையைப் பெற்றோம். வெற்றியடைந்தோம். ஒரு குறுகிய இடைவேளையில் எல்லோரையும் அழைக்க முடியவில்லை.

இருப்பினும் அந்த உத்வேகத்தோடு அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும் ஜனநாயக அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகள் மற்றும் இறந்தோரை நினைவுகூரும் உரிமையை சட்ட உரித்தை நிலை நாட்டவும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் இன்று முழுக்கடையடைப்பு ஒன்றை அறிவித்தோம். அதற்கு வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பெரும் வெற்றியடைந்துள்ளது.

பத்துத் தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த 19ஆம் திகதியன்று அரசிடம் எழுத்து மூலம் முன்வைத்த கோரிக்கைகளை, இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். இலங்கை ஜனநாயக சக்திகளிடமும் மக்களும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் எங்கள் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

ஒரு குறுகியகால ஒழுங்கில் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப்  போராட்டத்தையும் முழுக் கடையடைப்பு நிகழ்வுகளையும் மக்களிடம், உலகம் முழுவதும் செய்திகளிலும், காணொளி மூலமும்  கொண்டு சென்ற பத்திரிகையாளர், ஊடகத்துறையினருக்கு நிச்சயம் எங்கள் நன்றிகள் உண்டு.

இந்தப் போராட்டங்களின் வெற்றிக்காக உழைத்த, பங்களித்த அத்தனை அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்க அமைப்புக்கள், பல நீதிமன்றங்களில் வழக்குகளே இடம்பெறாதளவுக்கு வழக்கறிஞர்கள் பங்களிக்கவில்லை, ஆசிரியர்கள் குறிப்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமான அறிவிப்பு, மேலாக பல்கலைக்கழக மாணவர் சமூகத்தின் அறிவிப்பும் பங்களிப்பும்,  பலதுறைகளின் கல்விச் சமூகம், இன்னும் தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகள், முஸ்லிம், மலையக அரசியல் தலைவர்கள், முஸ்லிம் வர்த்தக சமூகத்தினர், வேளாண் துறையினர், கடற்தொழில்துறையினர், போக்குவரத்துத் துறையினர், தனியார் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள்  அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த நன்றியை சமர்ப்பித்து நிற்கின்றோம். இப் போராட்டங்களின் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியே. தமிழ் மக்கள் நிச்சயம் எழுச்சி கொள்வர் என நம்புகின்றோம்.. ” என்றுள்ளது.

யாழ். வட்டுக்கோட்டையில் வீட்டுக்குத் தீ வைப்பு!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் காளி கோவிலடிப் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (28) மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்ப தகராறு காரணமாகவே குறித்த தகர வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தொரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். – கிளிநொச்சி முடக்கம்! முஸ்லிம்களும் ஆதரவு!

ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக்  கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று (28) வடக்கு, கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மக்கள் பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இன்று ஹர்த்தாலினாள் யாழ். நகரம் முற்றாக முடங்கியது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. இதனால், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இன்றைய ஹர்த்தாலுக்கு யாழில் உள்ள முஸ்லிம் வர்த்தகர்களும் முழுக்கதவடைப்புச் செய்து தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அதன்படி யாழ். ஐந்து சந்தியடிப் பகுதியும் வெறிச்சோடிக்காணப்பட்டது.

அதேவேளை, பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இதேபோல கிளிநொச்சியிலும் தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையை அரசு தடுத்தமைக்கு எதிர்ப்புத்
தெரிவித்து வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு, நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழர் தேசம் முழுவதும் இன்று முடக்கம்!

அரச இயந்திரத்தின் தமிழர் அடக்குமுறைக்கு எதிராக இன்று தமிழர் தேசம் முழுவதும் முழுமையாக முடங்கவுள்ளது.

தியாக தீபம் திலீபனை அஞ்சலிக்க விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்து, தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு, நேற்றுமுன்தினம் (26) உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் இன்று (28) வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதன்படி, இன்று வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்துகள் என அனைத்து சேவைகளையும் முடக்கி தமிழரின் ஒற்றுமையை வெளிக்காட்டுவதோடு மரணித்த புனித ஆத்மாக்களை அஞ்சலிக்கும் எமது உரிமையை எவராலும் நசுக்கிவிட முடியாது என்ற குரலையும் இலங்கை அரசிற்கு உணர்த்தவுள்ளனர்.

இதனிடையே வடக்கு, கிழக்கு எங்கும் இன்று நடைபெறும் முழு அடைப்பினைக் குழப்பும் வகையில் அரசும் அரசோடு இணைந்த சில குழுக்களும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு முயற்சியாக நேற்று (27) யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் இவற்றினை முறியடித்து அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களும் வடக்கு கிழக்கை இன்று முற்றாக முடக்கவேண்டும் என பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

தமிழர் விடயத்தில் இலங்கையை மோடி அழைத்தமைக்கு கூட்டமைப்பு வரவேற்பு!

தமிழரை சம உரிமையுடன் நடத்தும்படி இலங்கை அரசை வற்புறுத்தக்கூடிய வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், அரசியலமைப்பு விதிகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்வது உட்பட ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய பிரதமர் மோடி இலங்கைக்கு அழைப்பு விடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம். “என்று பதிவிட்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் நேற்றுமுன்தினம் இணையவழி மூலமாக கலந்துரையாடல் ஒன்றை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடத்தியிருந்தார். அதன்போது, அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தினார்.

மோடியின் இந்த அழைப்பையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த சுரேஷ் தெரிவு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கட்சியின் மத்திய குழுவால் அவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த சட்டத்தரணி வி.மணிவண்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மத்தியகுழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் விழிபுணர்வு நடைபயிற்சி!

 உடற்பயிற்சி  மனித ஆரோக்கியத்திற்கு முதன்மைக் காரணி என்ற தொனிப் பொருளில்
கிளிநொச்சியில் இன்று (27) விழிப்புணர்வு நடைப் பயிற்சி ஒன்று
மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் முகமாக குறித்த நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று
காலை 6.30 மணிக்கு கிளிநொச்சி  கரடிப்போக்குச் சந்தியில் ஆரம்பித்த
குறித்த நடைபயிற்சி  கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நிறைவுற்றது.

இன்றைய இந்த  விழிப்புணர்வு நடைபயிற்சியில் யாழ். போதனா வைத்தியசாலையின்
பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை
ரி.யோசுவா, கிளிநொச்சி மாவட்ட மனநல மருத்துவர் ம. ஜெயராசா, மருத்துவர்
தவராசா, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆனந்தராஜா உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.

அரச அராஜகத்துக்கு எதிராக நாளை ஒன்றிணையுங்கள்! முழுக்கடையடைப்புக்கு அழைப்பு!!

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை (28) நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் – முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளரான சுரேஸ் பிறேமச்சந்திரன்ன் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு-

தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

இந்த அஞ்சலி என்பது ஐ.நா. சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது.

எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கள் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கு கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர். ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் நேற்று (26) சாவகச்சேரியில் ஓர் உண்ணா நோன்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ – பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த உண்ணா நோன்பு நடைபெற்றது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களினுடைய விடியலுக்காக போராடி மரணித்துப் போன அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது உரிமையை நிலைநாட்டும் பொருட்டு வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஹர்த்தாலினூடாக எமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

நாம் அனைவரும் இணைந்து இதனை வலியுறுத்தாவிட்டால், இலங்கை அரசாங்கம் வட – கிழக்கை தனது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரும். அதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இந்த சூழலில்தான் இந்த உண்ணாநேன்பைத் தொடர்ந்து வட – கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுக்கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தைச் செய்து ஒரு முழுமையான ஹர்த்தாலை அனுஸ்டிக்கும்படி வேண்டுகின்றோம். “என்றுள்ளது.

கிணற்றடியில் முகம் கழுவச் சென்றவர் மயங்கி விழுந்து சாவு!

கிணற்றடியில் முகம் கழுவச் சென்ற போது, மயங்கிச் விழுந்த குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொண்டைமனாறில் இன்று (27) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அன்ரன் ஜோர்ஜ் (வயது-35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரை உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

போராட்ட களத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்! பொலிஸ் சிறிது நேரம் தடுப்பு!!

தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று கோரி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில், யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டனர்.

போராட்ட இடத்தில் கண்காணிப்புக் கடமையிலிருக்கும் பொலிஸார், மாணவர்களை போராட்ட இடத்துக்கு அனுமதியளிக்க மறுத்தனர். எனினும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பொலிஸாருக்கு விடயத்தை எடுத்துக்  கூறியதன் அடிப்படையில் பின்னர் பின்னர் அனுமதித்தனர்.

குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திலீபனின் உயிர் பிரிந்த நேரத்தில் எழுந்து நின்று அஞ்சலி!

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உணவு ஒறுப்பிருந்து உயிர் துறந்த தியாக தீபம்  திலீபனின் 33ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

நல்லூர் கந்தன் ஆலய வடக்கு வீதியில் 12 நாட்கள் உணவு ஒறுப்பிலிருந்த தியாக தீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை தழுவினார்.

அவரது உயிர் பிரிந்த 10.48 மணிக்கு அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

சாவகச்சேரி சிவன் கோவில் முன்றலில் இடம்பெறும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்திலே இவ்வாறு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.