கூட்டமைப்பின் பங்காளிகள் யாழில் அவசர சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இன்று (31) யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி, சமகால அரசயல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன.

வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பை கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களில் மேற்படி கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதெனவும் பங்காளிக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன.

யாழிலுள்ள தமிழரசுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் உட்பட கட்சிகளின் பிரதிநிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

‘சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வடக்கு மக்களை பாராட்டுகின்றோம்’

” வடக்கு மக்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றி வருகின்றனர். அவர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.” – என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு இன்று (31) விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலையின் பணிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே
மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சமூகப் பரவலா இல்லையா என்பதை வைத்தியர்கள்தான் தீர்மானிப்பார்கள். நாங்கள் படைத்தரப்பினர். தீர்மானிப்பவர்கள் அல்லர். வைத்தியர்கள் இதுவரை அவ்வாறு கூறவில்லை.

சமூகப்பரவல் என்பது ‘தொற்றானது எவரிடமிருந்து ஒருவருக்குத் தொற்றியது என்பது தெரியாத நிலையாகும்’. இதுவரையில் நோயாளியாக இனங்காணப்படும் ஒவ்வொருவரும் இன்னொரு நோயாளியுடன் ஏதோவகையில் தொடர்புபட்டவர்களாகவே உள்ளனர். இதனால்தான் வைத்தியர்கள் இதுவரை சமூகப்பரவல் இல்லை என்று கூறுகிறார்கள். அதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமூகப்பரவலா அல்லது தொடர்புகள் உள்ளதா இல்லையா என்பது இங்கு முக்கியம் அல்ல. எமது நாட்டில் தற்போது கொரனா தொற்று உள்ளதால் நாம் அனைவரும் மிகஅவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். நாட்டுமக்கள் அனைவரும் சுகாதார பிரிவினரது அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதன் மூலம் (கொரொனாவை கட்டுப்படுத்துவதற்குத் தமது பாரிய பங்களிப்பினை வழங்கவேண்டும்.

சுகாதார அறிவுறுத்தல்கள் மிகவும் இலகுவானவை. அதாவது முகக் கவசம் அணிதல், கைகளை நன்கு கழுவுதல், மற்றும் சமூக இடைவெளி யினை கடைப்பிடித்தல்ஆகியனவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும்.அத்துடன் பெருமளவு மக்கள் கூடும்
இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதும் முக்கியமாகும். பொதுமக்கள் இதனை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள் என நான் நம்புகிறேன்.

வடமாகாண மக்கள் இந்த சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து செயற்படுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகிறோம்.” – என்றார்.

68 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு நீடிப்பு

நாட்டில் தற்போது 117 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. திங்கட்கிழமை (02) காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை காலை 5 மணிக்கு 49 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் ஏனைய 68 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

” மேல் மாகாணம் உட்பட நாட்டில் 117 பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே 68 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த நிலையில் புதிதாக 49 பிரிவுகள் இணைக்கப்பட்டன.

கம்பஹா மாவட்டத்தில் 37 பொலிஸ் பிரிவுகளிலும் கொழும்பு மாவட்டத்தில் 21 பொலிஸ் பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும், குருணாகலை மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும். திங்கட்கிழமை இப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படாது.

புதிதாக இணைக்கப்பட்ட 49 பிரிவுகளில் நீக்கப்படும். அதுவும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இறுதி தீர்மானம் தங்கியுள்ளது. எது எப்படியிருந்தாலும் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் தீர்மானம் தற்போதைக்கு இல்லை.” – என்றார்.

’20’ ஐ ஆதரித்த அரவிந்தகுமாருக்கு இராஜாங்க அமைச்சு பதவி?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு விரைவில் இராஜாங்க அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

இராஜாங்க அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே அவர் வகிக்கும் இராஜாங்க அமைச்சு பதவி அரவிந்தகுமாருக்கு வழங்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்குவதற்கு விமல்வீரவன்ஸ், உதய கம்மன்பில போன்றவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும், அரவிந்தகுமாருக்கு வழங்குவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

‘யாழ். மாவட்டத்தில் 956 பேர் சுயதனிமையில்’

யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

” யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இந்நிலையில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அதன்படி தற்போது யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்திக் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

26 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அவர் சென்ற இடங்கள் தற்பொழுது முடக்க நிலமைக்கு உள்ளாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அதே நேரம் அவருடன் தொடர்பு கொண்டவர்களும் இனங்கான கநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
யாழ் நகரப் பகுதியில் அவர் சென்று வந்த கடைகள் 4 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது அதேபோல அவர் சென்ற உணவகம் சிகை அலங்கார நிலையம் போன்றனவும் மூடப்பட்டுள்ளன.” – என்றும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

யாழில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப் பொருள்கள் விற்பனை நிலையங்கள் சில மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் பல வர்த்தக நிலையங்கள் தொடர்பில் பொலிஸார், சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர், மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும் என நால்வர் NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் மறுநாள் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அங்கிருந்து உணவக உரிமையாளர் முச்சக்கர வண்டியில் நல்லூர் பருத்தித்துறை வீதியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். பணியாளர்களும் முச்சக்கர வண்டியில் வேலணை, புங்குடுதீவுக்கு புறப்பட்டுள்ளனர்.

அத்துடன், உணவக உரிமையாளர் யாழ்ப்பாணம் நகரில் இரண்டு தினங்கள் நடமாடியுள்ளார். அத்துடன், வைமன் வீதியில் உள்ள சிகையலங்கரிப்பு நிலையம், கோயில் வீதியில் உள்ள உணவகம் என்பவற்றுக்கும் சென்றுள்ளார்.

அதனால் சிகையலங்கரிப்பு நிலையம், உணவகம் என்பன மூடப்பட்டுள்ளன. அவற்றைச் சேர்ந்தோர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளரின் அயலவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் நூற்றுக் கணக்கானோர் சுயதனிமைப்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் நகரில் சில வர்த்தக நிலையங்கள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் புறப்பட்ட NCG என்ற பெயர்கொண்ட WP NC 8760 என்ற இலக்கமுடைய பேருந்தில் பயணித்தவர்கள் சமூக அக்கறையுடன் உடனடியாக சுகாதார அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அகதியாக சென்றவர் எம்.பியான கதை

ஐந்து ஆண்டுகளாக அகதிகள் முகாமில் இருந்த ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த இப்ராகிம் ஒமர் என்பவர் இன்று நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தின் தொழிற்கட்சி வேட்பாளராக களமிறங்கிய அவர், வெற்றிவாகைசூடி – அந்நாட்டின் முதல் ஆபிரிக்க தேச நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார்.

எரித்திரியா நாட்டில் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலையால் புலம்பெயர்ந்து, சூடானில் இருக்கும் அகதிகள் முகாமுக்கு 2003 ஆம் ஆண்டு ஒமர் வந்தடைந்தார். அங்கிருந்த ஒமருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு அடைக்கலம் கொடுத்தது.

தனது வாழ்க்கை குறித்து sbs செய்தி சேவைக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு,

” அரசியல்வாதியாகவேண்டும் என்பதே சிறுவயது முதல் எனது இலட்சியமாக இருந்தது. எனினும், அதற்காய வாய்ப்புகள் எதிரித்தியாவில் இருக்கவில்லை.

2000ம் ஆண்டு காலவரையறையற்ற இராணுவ சேவையில் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்டேன். பயிற்சிகளை முடித்த பின்னர் 2003 ஆம் ஆண்டு – அதாவது அகதி முகாம் வரும் வரை எதியோப்பிய எல்லையில் கட்டயப்படுத்தலின் பேரில் காவல் நின்றேன்.

சூடான் அகதி முகாமில் இருந்தவேளை அந்நாட்டு அதிகாரிகள், என்னை எதித்திரியாவின் உளவாளியெனக் கருதி மீண்டும் எதித்திரியாக்கு அனுப்ப முயற்சித்தனர். அதற்குள் ஐக்கிய நானுகளுக்கான அகதிகள் அமைப்பு தலையிட்டு என்னை நியூசிலாந்தில் குடியேற்றம் செய்தது.

நியூசிலாந்து வந்த பின்னர் எனக்கு கல்விக்கற்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எதித்திரியாவில் எனது குடும்பம் இருந்தது. அவர்கள் வறுமையில் இருந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும். ஆகையால் முதன் முதலில் குறைந்த வேதனத்துக்கு துப்பரவு பணியாளரானேன்.

அதன் பின்னர் 2014 ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தல் பிரச்சார மேடையில் பேச வாய்ப்பு கிடைத்தது. அதில், “ உங்களை போலவே கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் இந்த நாட்டில் புதிதாக ஒன்றை தொடங்குவதால் பல தடைகள் உள்ளன. கற்றுக்கொள்ளவோ நல்ல எதிர்காலத்தை உருவாக்கவோ கடினமாக உள்ளது.” என்றவாறு உரையாற்றியிருந்தேன்.

இந்த பிரச்சாரத்தில் பல அரசியல் வாதிகள் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எனது உரை பிடித்திருந்தது.
அவர்கள் எனக்கு ஊக்கமளித்தனர். “Power built training “ பாடத்தில் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த பயிற்சி நெறியை முடித்த பின்னர் வாழ்க்கை நடைமுறை மாற்றம் பெற்றது. ” – என்றார்.

60 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் இதுவரை 60 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன், 300 பொலிஸார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். சில பொலிஸ் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும் தொற்று நீக்கத்தின் பின்னர் அவை மீள திறக்கப்பட்டன. புதிய அதிகாரிகளும் சேவைக்கு அமர்த்தப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஒருவர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு 12 ஐ சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

24 மாவட்டங்களில் 2ஆம் அலை – தப்பியது கிளிநொச்சி

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவிவருகின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 2ஆவது அலைமூலம் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

வடக்கில் கிளிநொச்சி மாவட்டம் மாத்திரமே வைரஸ் தொற்றிலிருந்து தப்பியுள்ளது என சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

‘தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அவதானம் முக்கியம்’

” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது. எனவே, அடுத்துவரும் நாட்கள் அவதானம்மிக்க காலப்பகுதியாகும். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டு மக்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும்.” – என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்திய நிபுணர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமக்கு முன்னால் பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது, அது இன்னும் குறையவே இல்லை. நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே செல்கின்றது. இதனால் எதிர்காலம் என்பது அவதானம்மிக்க காலப்பகுதியாகும்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினரும், பாதுகாப்பு துறையினரும் முழுவீச்சுடன் செயற்பட்டுவரும் நிலையில் அதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தமக்கு கொரோனா தொற்றாத வகையில் சுகாதார பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதுடன், மற்றையவருக்கு எம்மூலம் தொற்றாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

தற்போது நாளாந்தம் 7 ஆயிரம்வரையில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செயலிழந்துள்ள இந்திரமும் சரிசெய்யப்படும். சீனாவில் இருந்து துறைசார் நிபுணர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தனிமைப்படுத்தல் நடவடிக்கை என்பது சிறைப்பிடிப்பு – சிறைவைப்பு அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். உங்களினதும், உங்கள் உறவினரது நலன்கருதியுமே தனிமைப்படுத்தல் நடவடிக்கை இடம்பெறுகின்றது. மக்கள் பாதுகாப்புக்காகவே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தல் முகாமில் அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே ,தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்வதற்கு எவரும் அச்சம் கொள்ளவேண்டியதில்லை.” – என்றார்.

வடக்கில் இன்று 9 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அறுவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 9 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் உடுவிலில் தாய் மற்றும் 10 வயதுடைய மகளுக்கும் கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டன. அவை பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இன்றிரவு அவர்கள் இருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர் என்று அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள் மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளவத்தையில் இயங்கும் யாழ்.ஹோட்டல் உரிமையாளருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கி கணவன், மனைவி பலி! அம்பாறையில் சோகம்!!

அம்பாறை, திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா(வயது46) ஆகிய தம்பதிகளே இவ்வாறு மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

குறித்த தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை (கச்சான்) செய்கையிலீடுபட்டுக் கொண்டிருந்தபோது இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப்பயந்து ஓடிவருகையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்க 10 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் மேலும் 314 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஐ தாண்டியுள்ளது.

மனோவின் கருத்துக்கு சுமந்திரன் பதிலடி!

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்காக, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மனுவையும் கையளிப்போமா என்று கேட்டது தவறான செயல் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வதிவிடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஓரிரு தினங்களுக்கு முன்னர், துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது.ஆனால், அது தற்போது நான் எதிர்பாராத விதமாக வெளிவந்துவிட்டது என்றும் மனோகணேசன் தொலைபேசியில் தெரிவித்தார்.

அந்த விடயம் வெளிவந்ததனால், சில நெருக்கடிகளும், சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார். அதை சமாளிப்பதற்கு, தமிழ் அரசியல் கட்சிகளின் விடுதலை தொடர்பான ஒரு மனுவை நாங்கள் சேர்ந்து கொடுத்தால் என்ன என என்னிடம் மனோ கணேசன் கேட்டார்.

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் கைச்சாத்திட்டத்திற்கான உண்மையான காரணத்தையும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.தனிப்பட்ட உரையாடலின் போது, அவர் அந்த காரணத்தை என்னிடம் சொன்னதனால், அதை பகிரங்கமாக சொல்ல விரும்பவில்லை. அரசியல் நாகரீகத்தை அவர் பேணாவிட்டாலும், அதனை நான் பேண விரும்புகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் கூறியது. துமிந்த சில்வாவின் மனுவில் கையொப்பமிட்டதில் இருந்து தப்புவதற்கு, தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான மனுவை முன்வைத்தால் என்ன என்று கேட்டார். அதற்கு நான் மறுத்துவிட்டேன். மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணத்தையும் நான் கூறியிருந்தேன். அவர் சொல்வதைப் போன்று, இந்த நேரத்தில் அது தேவையில்லை என நான் கூறவில்லை. ஆனால் அது தவறான முன்மாதிரியாகிவிடும்.

தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம்.எ னவே, நிறைவேற்ற முடியாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடாகும்.

சுனில் ரத்னாயக்காவிற்கு மன்னிப்பு கொடுக்கப்பட்ட போது கூட, அப்படியானால், தமிழ் அரசியல்கைதிகளையும் விடுதலை செய்யலாம் தானே என்றதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன்.இந்த இரண்டு விடயங்களையும் ஒன்று சேர்க்க கூடாது. சுனில் ரத்னாயக்க விடுவிக்கப்பட்டது தவறான செயல். தவறான செயலை வைத்து, சரியான செயலை செய்வது, தவறான செயலையும், சரியானதென சொல்வதாக ஆகிவிடும்.

எனவே, சுனில் ரத்னாயக்காவின் விடுதலை தொடர்பாக, நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம்.தமிழ் அரசியல்கைதிகளின் விடயத்தை, இந்த தவறான செயலுடன் சேர்க்க கூடாது. அவர்கள் கட்டாயமாக விடுவிக்கப்பட வேண்டியவர்கள்” என்று எம்.ஏ.சுமந்திரன் தனது உரையின் போது தெரிவித்தார்.

யாழ். மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் PCR பரிசோதனை!

வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ் . பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வெள்ளிக் கிழமை காலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ். கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ். குமாரவேல், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ், சமுதாய மருத்துத் துறைத் தலைவரும், பல்கலைக் கழக கோவிட் 19 செயலணியன் இணைப்பாளருமான மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வ நடவடிக்களுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும், உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட விருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ். பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 லட்சம் பெறுமதியான புதிய பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார்.

மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

‘நீதி கிடைக்கும்வரை ஓயமாட்டோம்’

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினர், இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ‘ஒம்.எம்.பி.’ அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுத்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவரி யோகராசா கனகரஞ்சினி ,

” நீதிக்காக நாம் காத்திருக்கின்றோம். பல போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். நீதி கிடைக்கும்வரை எமது போராட்டம் தொடரும்.

அத்துடன், சர்வதேச நாடுகளில் இருப்பவர்கள், எங்களுக்காக குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றோம். சென்ற வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக்
பொம்மியோவை சந்திப்பதற்கு முயற்சித்தோம். கொரோனா தாக்கத்தால் அது முடியாமல் போனது. எனினும், அவரிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது. அவர் நீதியை பெற்றுத்தருவார் என நம்புகின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழி பஸ்கள் இடைநிறுத்தம்!

பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கரவெட்டி – ராஜ கிராமத்தைச் சேர்ந்த பலர் தனியார் புஸ் சாரதிகள், நடத்துநர்களாகப் பணியாற்றும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் கண்டறியப்பட்ட நிலையில் ராஜ கிராமத்தில் 60 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தொற்றாளருடன் நேரடித் தொடர்பிலிருந்த ஏவராவது தனியார் பஸ் சேவையில் கடமையாற்றினால் பயணிகளுக்குச் தொற்று ஏற்படலாம்.
அதனால், தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையோரைக் கண்டறியும் வகையில் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கிணங்க இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பொதுமன்னிப்பு மனுவில் ஏன் கைச்சாத்திடவில்லை? ஜீவன் விளக்கம்

(க.கிஷாந்தன்)

” நாடு  மற்றும் மலையக மக்களின் நலனை முன்னிலைப்படுத்தியே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முடிவுகளை எடுக்கும். தனி நபர்களுக்காக ஒருபோதும் தீர்மானங்களை எடுத்தில்லை. இனி எடுக்கப்போவதும் இல்லை.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை நகரசபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பாரதிதாசன் நேற்று (29.10.2020) தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வு ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஜீவன் தொண்டமான் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு

” மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் வரவு – செலவுத்திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என நம்புகின்றேன். இந்தியாவும் உதவிகளை செய்ய உள்ளது.” – என்று பதிலளித்தார் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

அத்துடன், துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட வினாவுக்கு பதிலளித்த அவர்,

” பொதுமன்னிப்பு வழங்கக்கோரும் மனுவில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை. ஏனெனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலம் முதலே தனி நபர்கள் தொடர்பில் காங்கிரஸ் முடிவுகளை எடுப்பதில்லை. நாடு மற்றும் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சட்டம் உள்ளது. எனவே, சட்டத்திற்கு புறம்பாக என்னால் எதையும் செய்ய முடியாது.” – என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தொடர்பில் கருத்து வெளியிட்ட இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான  ஜீவன் தொண்டமான்,

“கொரோனா வைரஸ் தாக்கத்தில் சந்திப்புகளை நடத்த முடியவில்லை. இருந்தாலும் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். நேற்று கூட தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் கதைத்தேன். விரைவில் தீர்வு கிட்டும்.” – என்று கூறினார்.

‘இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்’ – வைத்தியர்கள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றின் உப கொத்தணிகள் ஏற்படும் பாரிய அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொண்டுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மினுவங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர் அதன் உப கொத்தணிகள் பல இடங்களில் கண்டறியப்பட்டன என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலார் விசேட வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

” நாட்டின் பல பகுதிகளின் 20 முதல் 30 நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இந்த உப கொத்தணிகள் சுகாதார துறையின் கட்டுப்பாட்டை மீறி செல்லாத வகையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியில் செல்ல முயற்சிக்க வேண்டாம் என கோரினோம். எனினும், சிலர் வென்றுள்ளனர் . அவ்வாறு சென்றவர்கள் சுகாதார பாதுகாப்புடன் இருக்கவேண்டும். பிற நகர்களுக்கு வைரஸ் பரப்பக்கூடும். சிலவேளை, வைரஸை காவிச்சென்றவராககூட அவர்கள் இருக்கலாம்.” – எனவும் கூறினார்.