இன்று இருவர் பலி! 496 பேருக்கு கொரோனா தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 20  ஆயிரத்து 442 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று இதுவரை 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விளையாட்டாக கழுத்தில் சுருக்கிட்ட சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்; யாழ். புலோலியில் சம்பவம்!

யன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியைக் கட்டி, கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி விளையாட்டாகத் தனது அண்ணனின் கழுத்துப் பட்டியை யன்னில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இசசம்பவம் இன்று (30) முற்பகல் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை, புலோலி- சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு தவறான முடிவை எடுத்து சுருக்கிட்டுள்ளார்.

தாயாரும் அண்ணனும் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த குறித்த சிறுமி, அண்ணனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார். அப்போது சுருக்கு இறுகியதால் சிறுமி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவராஜா விசாரணைகளை முன்னெடுத்தார். உடற்கூற்றுப் பரிசோதனையை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி சுதேவா முன்னெடுத்தார். கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதால் சிறுமி உயிரிழந்தார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் கொரோனா நோயாளியுடன் தொடர்புடைய 373 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன்  தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு-

வடமாகாணத்தில் தற்போதைய நிலையில் நவம்பர் மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 8 பேரும் மன்னார் மாவட்டத்தில் 4 பேரும் முல்லைத்தீவில் 2 பேருமாக மொத்தமாக நவம்பர் மாதத்தில் 27 பேர் நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்.

நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் 7 ஆயிரத்து 682 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன்  தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர், காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல்  மேற்கொள்ளப்படவுள்ளன.  கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.” என்றார்.

‘மஹர சிறைச்சாலைக் கலவரம்’ – ஒரு மாதத்துக்குள் விசாரணை அறிக்கை

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலிசப்ரியால் இக்குழு இன்று நியமிக்கப்பட்டது என்று நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, பரிந்துரைகளுடனான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் இக்குழு முன்வைக்க வேண்டும்.

மேல் நீதிமன்றத்தின் ஓய்வூப் பெற்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான இக்குழுவில், நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹண ஹபுகஸ்வத்த, பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண , முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

‘மஹர கலவரம்’ – காயமடைந்த கைதிகளுள் 26 பேருக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் காயமடைந்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 26 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளில், 48 கைதிகளுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 26 கைதிகளுக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சரத் பிரேமசிறி தெரிவிக்கின்றார்.

இதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மாஅதிபருக்கு, பாதுகாப்பு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

‘இலங்கையில் அசுர வேகமெடுக்கும் 2ஆவது அலை’

நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 20 ஆயிரத்து 124 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் மரணம்’

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

“நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார்.

தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார்.  3 செம்பு  குடிதண்ணீரை  அருந்திய அவர், நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்

எனினும் அவர் பருத்தித்துறை – மந்திக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது” என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.-

‘கடலில் மூழ்கிய 2ஆவது நபரின் சடலமும் மீட்பு’

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். 

 காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி தவச்செல்வம் (வயது -19) என்ற இருவருமே கடலலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிவச்சந்திரன் நிரோஜன் என்பவரது சடலம் நேற்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டது. மற்றையவரான மாசிலாமணி தவச்செல்வமிம் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இருவரது சடலமும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், ரணில் விரைவில் சந்திப்பு

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது முக்கியமான சந்திப்புகளில் ஈடுபட்டுவருகின்றார்.

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் சிறிதுகாலம் ஓய்வில் இருந்த அவர் புத்தகம் எழுதும் பணியில் முழுவீச்சுடன் இறங்கினார். இந்நிலையில் தற்போது ஆன்மீகத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்று, அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டுவருகின்றார்.

இதன்படி ராஜபக்சக்களுக்கு மிகவும் நெருக்கமான தேரர்களுள் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரரை அண்மையில் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க, மனம்விட்டு பல விடயங்கள் பற்றி கலந்துரையாடியதாகவும், தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து விளக்கமளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்மீக தலைவர்களை சந்தித்த பின்னர் வெளிநாட்டு தூதுவர்களையும், முக்கியமான சில அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.

இதற்கமையவே ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவை சந்திக்கவுள்ளதாக சிறிகொத்த வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

‘சிறைச்சாலை கலவரத்துக்கு அரசே பொறுப்பு’

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய அவர், “மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவரை 8 பேர்  உயிரிழந்துள்ளனர். 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்று  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்டனைப் பெறுபவர்கள் சிறைச்சாலைகளில் இருந்தாலும், அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பதாகவே கருதப்படும். எனவே, இந்தச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இது உடனடியாக எழுந்த சர்ச்சை அல்ல. ஏற்கனவே மஹர உள்ளிட்ட சிறைச்சாலையில் உள்ளவர்களை கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள்.

மஹர சிறைச்சாலையில் கொரோனாவினால் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிறைச்சாலைகளில் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் 8 பேரளவில் இருக்கிறார்கள்.

இதனால்தான் வைரஸ் அங்கு வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில், தங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் அவர்கள் கோரியிருந்தார்கள்.இது நியாயமானதொரு கோரிக்கையாகும். இதனை நிராகரித்தமையால்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்துக்கு கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் உரிய பதிலை வழங்க வேண்டும்.” என கூறினார்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது. 

39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 30 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் ஒருவர் உள்பட 4 பேர் சபைக்கு சமூகமில்லை. இரண்டு உறுப்பினர்கள் கட்சிகளால் நியமிக்கப்படவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4  உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அகில தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.

இந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.

மஹர சிறைச்சாலை கலவரம் – உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 50 கைதிகள் காயமடைந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ,உயிரிழந்தவர்களின் சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவம் காரணமாக நேற்று(29) அமைதியின்மை ஏற்பட்டது.

எவ்வாறாயினும் சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறைச்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

‘திவிநெகும வழக்கு’ – பஸில் ராஜபக்ச விடுதலை

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச உட்பட பிரதிவாதிகள் 4 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் நிரபராதியென தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,992 மில்லியன் நிதியை செலவிட்டு திவிநெகும பயனாளிகளுக்கு வீட்டு உதவி வழங்கியதன் ஊடாக அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இலங்கைக்கு எதிராக மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை?

” ஜெனிவா தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியுள்ளதால் எதிர்வரும் மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளரிடம் உள்ளக விசாரணைக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடன்பட்டிருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், பொருளாதார தடைக்கும் சர்வதேச தயாராகின.

இந்நிலையில்தான் நாம் உள்ளக விசாரணைக்கு உட்பட்டோம். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையில் இருந்து இந்த அரசு விலகியுள்ளது. இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என நான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

உள்ளக விசாரணைக்கான உறுதிமொழியில் இருந்து விலகியுள்ளதால் அடுத்த மார்ச்சில் யோசனையொன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் 2015 இற்கு முன்னர் இருந்த நிலை தெரியும்தானே? ” என்றார்.

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 28 நாட்களில் மாத்திரம் 96 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) நேற்று வரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர்.

2 ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றியவர்களில் நேற்றுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 23 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து இருவர் காயமடைந்துள்ளனர். 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

போர்க்களமானது மஹர சிறைச்சாலை! 6 பேரின் சடலங்கள் மீட்பு!!

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என்று ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மாலை அமைதியின்மை ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் களனி மற்றும் ராகம பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் குழுக்களும் அழைக்கப்பட்டிருந்தன. சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர். கைதிகளுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தொழில் நிமித்தம் வடக்குக்கு வந்திருந்த ஐவருக்கு கொரோனா தொற்று!

தொழில் நிமித்தம் வடக்கு மாகாணத்தில் தங்கியிருந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 186 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை இன்று (29) செய்யப்பட்டது.

இவர்களில், வட மாகாணத்துக்கு வெளி மாகாணத்திலிருந்து தொழில் நிமித்தம் வந்தவர்களில் 5  பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 21 ஆம் திகதி வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவரோடு சாரதியாக கடமையாற்றியவர்  தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தென்பகுதியில் இருந்து வீதி திருத்த வேலைக்காக வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் ஒருவருக்கு இன்றைய பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென் பகுதியிலிருந்து தொழில் நிமிர்த்தம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு வந்திருந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் மேலும் 3 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளார்கள்.

கார்த்திகை தீபம் ஏற்றிய யாழ். பல்கலை மாணவன் கைதாகி விடுதலை!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ. பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் அமைந்து பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேர் முன்பாக அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் இன்று மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். 

பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்லும் வாயில்கள் மூடப்பட்டதால் பரமேஸ்வரன் ஆலயத்தில் தீபம் ஏற்ற முடியாத நிலையில் மாணவர்கள் இவ்வாறு பண்பாட்டு வாயிலின் வெளியே தீபங்களை ஏற்ற முற்பட்டனர்.

அதனை அறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

எனினும், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.

இந்த நிலையில் 7.45 மணியளவில் தீபம் ஏற்றிய விஞ்ஞான பீட மாணவன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் ஆகியோர் மாணவனை விடுவிக்க பொறுப்பதிகாரியுடன் பேச்சு நடத்தினர்.

மாணவனிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் பொலிஸார் அவரை பொலிஸ்  விடுவித்தனர்.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்,

“மாணவன் கைது விடயம் தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். இந்துக்களின் நிகழ்வை நடத்த முடியாது தடுத்ததுடன், மாணவனைக் கைது செய்தமை தவறு என்று சுட்டிகாட்டினேன். 

மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று இந்துக்களின் கார்த்திகை தீபத்திருநாள் என்பதைத் தான் அறிந்திருக்கவில்லை என்றும் மாணவன் உடனடியாக விடுவிக்கப்படுவார் எனவும் உறுதியளித்தார்” என்றார்.

இதேவேளை, மாணவன் கைது பற்றி அறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொடர்புகொண்டு மாணவனின் விடுதலையை வலியுறுத்தினார் எனத் தெரிவித்துள்ளார்.-

கார்த்திகைத் தீப வாழைத்தண்டுகளை காலால் உதைத்த பொலிஸ்; தீபம் ஏற்றக் கூடாதென யாழில் அடாவடி!

மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகன் ஆலயத்துக்குச் சென்ற சுன்னாகம் பொலிஸார், கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன், அங்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு அழைப்பை ஏற்படுத்தி மாவீரர் நாள் தீபம் ஏற்றப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே நிகழ்வுக்குத் தடை விக்கப்பட்டது என சுன்னாகம் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தீபம் ஏற்ற அலங்கரிக்கப்பட்ட வாழைத்தண்டுகளை காலால் உதைத்து அநாகரியமாக நடந்துகொண்டார். 

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற சட்டத்தரணி வி.மணிவண்ணன், அந்த ஆலய இளைஞர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் உறுப்பினர் இ.வி.எஸ் செந்தூரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் உரையாடிய அமைச்சர், இந்துக்களின் பாரம்பரிய வழிபாடான கார்த்திகை தீபத்திருநாளில் கார்த்திகை தீபங்கள் ஏற்றுவதற்கும் சொர்க்கைப்பானை எரிப்பதற்கும் அனுமதியளிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்த வழிபாட்டை சிலர் பிழையாக அர்த்தப்படுத்தி முறைப்பாடுகளை வழங்குவார்கள் என்றும் அமைச்சர், பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைப்பை ஏற்படுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தீபங்களை ஏற்றுவதும் சொர்க்கப்பானை எரிப்பதும் கார்த்திகைத் திருநாளில் இந்துக்களின் மரபு, இதனை பிழையாக அர்த்தப்படுத்தி தடை விதிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்தார்.-

10 நாட்களுக்கு முன் திருமணமானவரும் நண்பரும் கடலில் குளித்தபோது மாயம்! காங்கேசன்துறைக் கடலில் அனர்த்தம்!!

வலி வடக்கு தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் காங்கேசன்துறைக் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர். இதையடுத்து அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, தையிட்டியைச் சேர்ந்த 24 மற்றும் 32 வயதுடைய இளைஞர்கள் இருவர் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இவ்வனர்த்தத்தில் தையிட்டி தெற்கு, தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோசன் மற்றும் மாசிலாமணி தவச்செல்வம் ஆகியோரோ அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர் என பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அலையில் சிக்கி காணாமல் போயுள்ள மாசிலாமணி-தவச்செல்வம் என்ற இளைஞருக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளது எனத் தெரியவருகின்றது.