‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 191 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

‘கொரோனா’ – மேலும் 706 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 706 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 174 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 199 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘மாகாணசபை சட்டத்தை அரசு கிழித்தெறிய வேண்டும்’

” எந்தவொரு காரணத்துக்காகவும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை  நடத்துவதற்கும் இடமளிக்கமாட்டோம். எனவே, மாகாணசபை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் வலியுறுத்தினார்.

மாகாணசபை முறைமையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே தேரர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” மாகாணசபை முறைமை என்பது ஜே.ஆர். ஜயவர்தனவால் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொற்று நோயாகும். இதன்மூலம் மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. பிரதேச அபிவிருததிகள் முடங்கின. நிர்வாகப் பணிகளும் குழம்பின.

மறுபுறத்தில் கட்டடம், ஆளனி பலம் உட்பட மாகாணசபைகளை நிர்வகிப்பதற்கும் பெருமளவு நிதி செலவிடப்படுகின்றது. இவ்வாறு வீண்விரயமாகும் நிதியை அபிவிருத்திக்கு பயன்படுத்தலாம். எனவேதான் மாகாணசபை முறைமை அவசியமில்லை என வலியுறுத்துகின்றோம்.

எக்காரணம் கொண்டும் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை நடத்துவதற்கு நாம் உடன்படவும் மாட்டோம். மாகாணசபைகள் தொடர்பான சட்டங்களை இல்லாதொழிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையவேண்டும். ” – என்றார்.

சம்பிக்கவின் அரசியல் வியூகத்தால் சஜித்துக்கு பாதிப்பா?

” 43 ஆம் படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவது குறித்து எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கமும் எமது அணியுடன் இணைந்தே செயற்படும். எது எப்படி இருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரே ஜனாதிபதி வேட்பாளர். இதனை வேறு எவருக்கும் வழங்க மாட்டோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, 43 ஆவது படையணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு சம்பிக்க ரணவக்கவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனநாயக அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் கட்சி பலப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஐக்கிய கூட்டணி அமைக்கப்படும். இக்கூட்டணியில் எமது கொள்கையுடன் ஒத்துபோகக்கூடியவர்கள் இணையலாம். அதற்கான அழைப்பை விடுக்கின்றோம்.

சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளார். 43 என்ற அரசியல் இயக்கம் பற்றி எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக பல வழிகளிலும் தாக்குதல்களை தொடுக்கவேண்டும். அதற்காக அணிகள் இருப்பது சிறப்பு.

யாழில் 5,731 பேர் சுய தனிமையில்

யாழ் மாவட்டத்தில் 5,731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகிய 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகிய சுமார் 2 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 5731 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கு தொடர்ச்சியாக 10 ஆயிரம் ரூபாபெறுமதியான உணவு பொதிகள் இரண்டு தடவைகளில் அந்தந்த பிரதேச செயலகத்தினூடாக வழங்கி வருகின்றோம்.

அரசாங்கத்தின் ஊடாக குறித்த நிதியினை பெற்று அதற்குரிய வேலைத்திட்டத்திளை முன்னெடுத்து வருகின்றோம்.

எனினும் பொதுமக்கள் இந்த நிலைமையில் தொற்று மேலும் பரவாது இருப்பதற்கு மக்களின் அவதானமான செயற்பாடு மிகவும் முக்கியமானது. அத்தோடு மக்கள் குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். இந்த நிலைமை மேலும் தீவிரமடையாது இருப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கியமானது.

அத்தோடு சுகாதார பிரிவு, மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களைப் பின்பற்றி பொதுமக்கள் செயற்பட வேண்டியது முக்கியமானது.

போக்குவரத்தில் அநாவசியமான போக்குவரத்தை தவிர்த்து தேவையான விடயங்களுக்குமட்டும் பயணங்களை மேற்கொண்டு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்றார்

கொரோனா தொற்றாளர்கள் ஐவர் தப்பியோட்டம்

பொலன்னறுவை கல்லேல பகுதியில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் ஐவர் இன்று தப்பியோடியுள்ளனர்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த கைதிகளில் ஐவர் சிகிச்சைகளுக்காக இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே இவ்வாறு தப்பியோடியுள்ளனர்.

இவர்கள் ஐவரும் போதைப்பொருளுக்கு அடிடையானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கண்டுபிடித்து, கைது செய்வதற்கான தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

’13’ குறித்து கோட்டா ,மஹிந்தவுக்கிடையில் மோதல்

மாகாணசபை முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா அல்லது இல்லாதொழிக்கப்படுமா என்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, மாகாணசபை முறைமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இனப்பிரச்சினை காரணமாகவே நாட்டில் போர்கூட ஏற்பட்டது. அவ்வாறானதொரு இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. அதற்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவரும்போது அன்று அதற்கு எதிராக செயற்பட்டவர்கள் அதன்பின்னர் தேர்தல்களில் போட்டியிட்டனர். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி காலப்போக்கில் மாகாணசபைகளின் ஆட்சி அதிகாரத்தைக்கூட கைப்பற்றியிருந்தது.

மஹிந்த ராஜபக்ச 13 பிளஸ் பற்றிகூட கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால் 13 ஐ நிராகரிக்கும் வகையிலெயே கோட்டாபய ராஜபக்ச செயற்படுகின்றார். 13 விடயத்தில் மஹிந்தவின் நிலைப்பாட்டில் கோட்டாபய இல்லை. ஆளுங்கட்சிக்குள் குழப்பநிலை உருவாகியுள்ளது. எனவே, மாகாணசபை முறைமை தொடருமா அல்லது இல்லையா என்பது குறித்து நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். வேட்பாளர்களுக்கான விண்ணப்பபடிவங்களும் கோரப்பட்டுள்ளன. ஆனால் மூன்றிலிரண்டு பலம் இருக்கும் அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகின்றது. ” – என்றார்.

கொரோனாவால் இலங்கையில் மேலும் நால்வர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 186 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

யாழ். மாநகரை கூட்டமைப்பு கோட்டைவிட்டது எப்படி? மாவையைச் சாடி சுமந்திரன் கடிதம்!

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாகவே யாழ். மாநகர சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழக்க நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாவை சேனாதிராசா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இன்று அவசர கடிதமொன்றை மாவை சேனாதிராஜாவிற்கு சுமந்திரன் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு-

இன்று யாழ் மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்துள்ளது. 

வரவு-செலவு திட்ட முன்மொழிவில் இரண்டு தடவைகள் தோல்வியுற்ற காரணத்தால் எமது மேயர் பதவி இழந்ததை அடுத்து நடந்த நிகழ்வுகளை இங்கே வரிசைப்படுத்த விரும்புகிறேன்:

19/12/20 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இல்லத்தில் சந்தித்ததை அடுத்து, வீட்டுவாசலில் வைத்து யாழ். மாநகரசபைக்கு புதிய மேயர் வேட்பாளராக வேறொருவரை நியமிப்பதே உசிதம் என்றும் அதற்குப்  பொருத்தமானவர் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் என்பது என்னுடைய கருத்து என்பதையும் கூறினேன்.

21/12/20 அன்று நீங்கள் எனக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்து, நான் சொன்ன கருத்தோடு நீங்கள் உடன்படுவதாகவும் இது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கருத்தும் சொலமன் சிறில் என்பதே என்றும் சொன்னீர்கள். நீங்கள் யாழ்ப்பாணம் செல்வதாகவும் அங்கே உறுப்பினர்களோடு நடாத்தும் கூட்டத்திற்கு என்னை வரமுடியுமா என்றும் கேட்டீர்கள்.

கட்சியின் அரசியல் அமைப்பு யோசனைகள் நிறைவு செய்யும் வரை என்னால் வரமுடியாது என்றும் திருசொலமன் சிறில் வேட்பாளராக வருவதில் எனக்கு உடன்பாடு உள்ளது என்றும் கூறினேன். எப்படியாயினும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பதாக என்னோடு திரும்பவும் பேசுவதாக கூறியிருந்தீர்கள்.

எட்டு நாட்களுக்குப் பிறகு நேற்றைய தினம் 29/12/2020 காலையில் நீங்கள் எனக்குத்தொலைபேசிஅழைப்பெடுத்து மாநகரசபை உறுப்பினர்களில் அநேகமானவர்கள் திரு ஆர்னோல்டையே திரும்பவும் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று விரும்புவதாகவும், இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக காலை 10.30 மணிக்கு கூட்டம் ஒன்று நடத்தப்போவதாகவும் சொன்னீர்கள்.

நான் கொழும்பில் இருந்து பிரயாணமாகி வந்துகொண்டிருக்கின்றேன் என்றும் மதியம் 1 மணிக்குப் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு வந்தடைவேன் என்றும் அதற்குப் பின்னர் கூட்டத்தை நடாத்தினால் நான் கலந்து கொள்வேன் என்றும் உங்களுக்கு நான் அறியத்தந்தேன்.

அதே தொலைபேசி உரையாடலில், புதிய மேயர் வேட்பாளர் சம்பந்தமாக எனது நிலைப்பாட்டைத் தெளிவாக திரும்பவும் கூறினேன். வரவு செலவுத்திட்டம் தோல்வியுற்றால் இராஜிநாமா செய்ய வேண்டியது ஒரு ஜனநாயக விழுமியம் மட்டும்அல்ல, அது ஒரு ஜனநாயக மரபாகவும் இருந்திருக்கின்றது. இந்த மரபு பின்பற்றப்படாத காரணத்தால்தான் சட்டத்தில் திருத்தங்கள்  செய்யப்பட்டு “இராஜிநாமா செய்தவராக கருத வேண்டும்” என்று அது ஒருசட்டத்தின் தேவைப்பாடாகவும் ஏற்படுத்தப்பட்டது.

சட்டத்தின் செயற்பாட்டினால் இராஜிநாமா செய்தவர் மீண்டும் அப்பதவிக்குப்போட்டியிடுவது சட்டத்திற்கு முரணானது மட்டும் அல்லாமல் ஜனநாயக விழுமியங்களையும் மீறுகின்ற செயலாகும். ஆகையால் இராஜிநாமா செய்தவரான ஆர்னோல்ட்டைத் தவிர வேறொருவரைத்தான் எமது வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்பதை திட்டவட்டமாக சொன்னேன்.

வரவு – செலவுத் திட்டத்தின் தோல்வியின் காரணமாக இராஜிநாமா செய்தவர்களை மீளவும் வேட்பாளர்களாக நிறுத்தினால் தமது கட்சி அதை எதிர்க்கும் என்றும், அப்படி அல்லாது வேறு எவரையேனும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால், தாம் ஆதரவு கொடுப்போம் என்றும் சில நாட்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இவ்வறிவிப்பு எமது கட்சி வேட்பாளரை வேறு கட்சியினர் தெரிவு செய்யும் செயற்பாடு அல்ல. நான் மேற்சொன்ன ஜனநாயக விழுமியத்தின் அடிப்படையிலான அறிவிப்பே அது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கருத்துக்கு மாறாகவும், நீங்கள் எனக்குச் சொன்ன தங்களது சொந்தக் கருத்துக்கே மாறாகவும், தன்னிச்சையாக நேற்று காலை 10.30 மணிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யாழ். மாநகர சபை மேயர் பதவிக்கு, ஏற்கனவே இராஜநாமா  செய்தவரான ஆர்னோல்ட்டையே வேட்பாளராக அறிவித்திருந்தீர்கள். 

உங்களுடைய மேற்சொன்ன, தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டினால் போட்டியின்றி வென்றிருக்க வேண்டிய யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை நாம் இழந்திருக்கின்றோம். தமிழ்த்தேசிய அரசியல்  களத்தில் மிக முக்கிய அடையாளமான யாழ். மாநகர சபை தலைமையை எமது கட்சி இழந்தமைக்கு மேற்சொல்லப்பட்ட தங்களது  நடவடிக்கைகளே காரணமாகும் என்பதையும், இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவுக்கும் தாங்களே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்பதையும் இத்தால் பதிவு செய்கின்றேன். என்றுள்ளது.

மருதனார்மடம் கொத்தணி – மேலும் 9 பேருக்கு கொரோனா

மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று (டிசெ. 30) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 9 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 20ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரி நேரடித் தொடர்புடைய 8 பேருக்கு தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் 9 பேரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தபட்டவர்கள் என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று 240பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இலங்கையில் மேலும் 354 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 623 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 697 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நல்லூரிலும் கூட்டமைப்புக்கு ‘அடி’! முன்னணி வசமானது தவிசாளர் பதவி!!

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

தவிசாளர் வேட்பாளர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கு.மதுசுதனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் ப.மயூரனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

20 உப்பினர்கள் அங்கம் வகிக்கும் நல்லூர் பிரதேச சபையின் 8 உறுப்பினர்கள் கு.மதுசுதனுக்கு ஆதரலாகவும், 10 உறுப்பினகள் ப.மயூரனும் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர்.

இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 5 உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்கள், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினர் என 8 உறுப்பினர்கள் கு.மதுசுதனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள் , சுயேட்சை குழு குழு 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணியின் தல ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ப.மயூரனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திர உறுப்பினர்கள் இரண்டுபேர் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை

இதனால் 2 மேலதிக வாக்குகளால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ப.மயூரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 15 ஆம் திகதி நல்லூர் சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு
தோற்கடிக்கப்பட்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவிசாளர் த.தியாகமூர்த்தி தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய தவிசாளரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே ப.மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மேயராக மணிவண்ணன் தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

முதல்வர் வேட்பாளர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமைக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு
தோற்கடிக்கப்பட்டதால் மாநக முதல்வர் இ.அஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசமைப்பு வந்த பிறகே மாகாண தேர்தல்

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறந்த முடிவாக அமையும் – என்று இராஜங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த ஆட்சியின்போது மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்பட்டன. இதற்கு எதிராக எமது அணியினர் விமர்சனங்களை முன்வைத்தனர் என்பதுடன் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் பிற்போடப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டினர்.

அப்படியானால் தற்போது தேர்தலை நடத்தும் பொறுப்பு எமது அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இது பற்றியே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம்.

அத்துடன் மாகாணசபை முறைமை தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.குறிப்பாக எமது அணிக்கு ஆதரவு வழங்கியவர்களில் சிலர், மாகாணசபைகள் வெள்ளை யானை எனவும், அவை இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டவை எனவும் வாதிட்டுவருகின்றனர்.

தற்போது புதியதொரு அரசியலமைப்பை இயற்றும் பணி இடம்பெற்றுவருகின்றது. தேர்தல் முறைமை குறித்து அதில் முடிவு எடுக்கப்படும். நிர்வாக முறைமையும் தீர்மானிக்கப்படும். எனவே, புதிய அரசியலமைப்பு இயற்றப்படும்வரை தேர்தலை நடத்தாமல் இருப்பதே சிறப்பு.” – என்றார்.

‘அமைச்சு பதவியை துறக்கவில்லை’

தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

நீதியமைச்சர் அலி சப்ரி அமைச்சுப் பதவியில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்யவுள்ளார் எனவும், இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவியபோதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் 182 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையில் மேலும் 453 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 453 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 800 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 925 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 38 ஆயிரத்து 343 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சஜித் அணியுடன் சங்கமிக்க தயாரில்லை – சு.க.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியில் இணையமாட்டார்கள் என்று சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர நம்பிக்கை வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள்மீது அதிருப்தியில் இருக்கும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளனர் எனவும் அதற்கான பேச்சுகள் நடைபெற்றுவருகின்றன எனவும் நாளை நடைபெறவுள்ள சு.கவின் மத்தியகுழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வினவியபோதே தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கூறினார்.

” கூட்டணிக்குள் பிரச்சினைகள் இருப்பது உண்மைதான். இவை தொடர்பில் பேச்சுகள் நடத்தப்பட்டு முடிவுகள் எட்டப்படும். எனினும் ,சஜித் அணியுடன் இணையும் எண்ணம் இல்லை. அதற்கு நாம் என்றும் தயாரில்லை.” என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.

‘அரசியலுக்கு வரமுடியாது – என்னை மன்னித்துவிடுங்கள்’ – ரஜினி

தான் கட்சி தொடங்கப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

” என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சி தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன்.

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக் குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக் கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம்.

இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோணா பரிசோதனை செய்வித்தார்.

எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது, மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும்.

ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது,

என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார் இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம்.

இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை, இதை ஆண்டவன் பார்க்கிறேன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.

இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

120 பேர் கொண்ட குழுவிலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நான் மூன்று நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க நேர்ந்தது, இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது.

தடுப்பூசி வந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் Immuno Suppressant மருந்துகளை சாப்பிடும் நான், இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்.

மக்கள் மன்றத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும் கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள், அது வீண் போகாது.

அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும், கடந்த நவம்பர் 30 – ம் தேதி நான் உங்களை சந்தித்த போது, நீங்கள் எல்லோரும் ஒரு மனதாக ‘உங்கள் உடல் நலம் தான் எங்களுக்கு முக்கியம், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதமே’ என்று சொன்ன வார்த்தைகளை என் வாழ்நாளில் மறக்கமாட்டேன்.

நீங்கள் என்மேல் வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் தலை வணங்குகிறேன். ரஜினி மக்கள் மன்றம் என்றும் போல செயல்படும்.

மூன்று ஆண்டுகளாக எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்க உடல் நலத்தை கவனியுங்க, அதுதான் எங்களுக்கு முக்கியம் என்று அன்புடன் கூறிய மதிப்பிற்குரிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்தி அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன். நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழ்நாடு. ஜெய் ஹிந்த்” – என்றுள்ளது.

மேயர் பதவி யாருக்கு? முடிவை அறிவித்தது கூட்டமைப்பு

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆனல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிரா தெரிவித்துள்ளார்.

இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்ததால் மாநகர சபை முதல்வர் தனது பதவியை இழந்துள்ளார்.

இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதல்வர் தெரிவுக்கு யாரை நிறுத்துவது என இறுதித் தீர்மானம் எடுக்கும் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஜானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கூட்டத்தின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு நாளை காலை ஒன்பது மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.