வடக்கு முதல்வர் வேட்பாளராக மாவை!

மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறும் பட்சத்தில் வடக்கில் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் 37,825 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது

இலங்கையில் இன்று 32 ஆயிரத்து 539 சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொவிட் -19 தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று கொழும்பில் ஆரம்பமானது. முதல் நாளில் 5 ஆயிரத்து 286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று 32 ஆயிரத்து 539 பேருக்கு போடப்பட்டுள்ளது.
இதன்படி இரு நாட்களில் 37 ஆயிரத்து 825 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் 62,851 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 58 ஆயிரத்து 895 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சாராவை இந்தியா பாதுகாக்கின்றதா?

உயிர்த்த ஞாயிறு தக்குதல் சம்பவத்தில் இன்றும் உயிரோடு இருக்கும் பிரதான சந்தேக நபர் சாரா என்பவர் மாத்திரமே. இவரை இந்தியாவிலிருந்து ஏன் அழைத்துவரப்படவில்லையென எவரும் கேட்கவில்லை. இவர் இந்தியாவுக்குச் செல்ல மன்னார் வரை அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் களுவாஞ்சிக்குடி பொலிஸ் அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் சாராவை வைத்துக் கொண்டு இந்தியா – இலங்கைக்கு ஆதிக்கம் செலுத்துகின்றதா? என்ற ஓர் சந்தேகம் எழுகிறது. இலங்கை அரசாங்கம் இன்னும் உத்தியோகபூர்வமாக அழைத்து வர இந்தியாவிடம் ஏன் கேட்க வில்லை. இந்திய வெளிவிவகார ஆலோசகர்,செயலாளர் என பலர் வந்துசென்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் எவரும் பேசவே இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கொவிட் 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டை கையாலும் திறனை அரசாங்கம் இழந்து விட்டது.தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூக பரவலை இன்னும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் பெயர் கூறி கொத்தணிகள் உருவாகின,இன்று பெயர் கூற முடியுமான கொத்தணிகள் இல்லை. ஏனெனில் நாட்டின் சகல இடங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.மக்கள் தொடர்பில் எந்த உணர்வுமற்றவர்கள் போன்று இந்த அரசாங்கம் செயற்படுகிறது.

இந்தியா வழங்கிய தடுப்பூசிகள் மூன்று இலட்சம் மக்களுக்கு தான் போதுமானது.மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முயற்சிப்பதற்கான எந்த விடயமும் நடைபெறுவதாக தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

‘வடக்கில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்’

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்து தமக்கான கொவிட் -19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் இந்தப் பணியில் தவறவிடுவோர் தடுப்பூசி ஏற்றும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 820 மருத்துவ சேவையாளர்கள், சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அத்தியட்சகர் மருத்துவர் கமலநாதனுக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டு பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் – இலங்கை சூளுரை

புலம்பெயர்ந்தோரின் செல்வாக்கின் கீழ் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எந்தவொரு தீர்மானங்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ள தாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான போராட்டம் ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதே தவிர, ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் கூறுகின்ற உண்மைக்கிடையிலும் தற்பொழுது பனிப்போரொன்று உருவாகி வருகின்றது. அதில் உண்மை வெற்றிபெறுமெனவும் அமைச்சர் கூறினார்.

கண்டி ஹந்தான பிரதேசத்திலுள்ள விஹாரையொன்றில் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர்,

பயங்கரவாதிகளுடன் போராடும்போது மரணங்கள் ஏற்படாது என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் முட்டாள்களல்ல. துரதிர்ஷ்டவசமாக, அத்தகைய போரைத் தொடங்கி நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்ற குழுவைப் பற்றி எதுவும் பேசப்படவில்லை. ஆனால் வெளியுறவு அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, எங்கள் தவறுகளுக்கு நாங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். ஆனால் உலகில் எந்த நாடும் தமது சொந்த நாட்டுக்கு எதிராக இதுபோன்ற திட்டங்களை முன்வைத்ததில்லை எனவும் குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்காக ஒன்றிணையுமா மலையக கட்சிகள்?

கம்பனிகளால் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை ஏற்கமுடியாது. அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கம்பனிகளுக்கு பலத்தைக்காட்டுவோம் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தொழில் அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்ற சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு கூறினார்.

” இன்றைய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் தென்பட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலத்தை 4 வருடங்களாக்க வேண்டும் என கம்பனிகள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், மேலதிகமாக இரண்டு கிலோ கொழுந்து பறிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டது. இவற்றை ஏற்கமுடியாது.

எனவே, சம்பள நிர்ணயச் சபை சம்பளத்தை நிர்ணயிக்கட்டும் என அறிவித்தோம். 6 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு சம்பள நிர்ணயச்சபை கூடவுள்ளது.

மக்கள் ஒற்றுமையாக இல்லை என நினைத்தே கம்பனிகள் ஆடுகின்றன. எதிர்தரப்பையும் இணைத்து இது விடயத்தில் பலத்தைக்காட்டி, கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.” – என்றார்.

யாழில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 2 ஆயிரத்து 300 கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக அதனை இன்று பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கோவிட்-19 தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

அந்த தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருமலையில் இன்றும் சிலருக்கு தொற்று!

திருகோணமலையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை – லிங்கநகர் பாலர் பாடசாலை ஆசிரியர், அவரது கணவர் மற்றும் பாலர் பாடசாலையில் பிள்ளைகளை பராமரிப்பவர் என மூவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் இன்று திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் திருக்கடலூர் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது மகள் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேச பூம்புகார் பிரதேசத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என உப்புவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கொவிட்-19 தொற்று உறுதியானவர்களில் பெண்கள் அனைவரையும் குச்சவெளி கொரோனா மத்திய நிலையத்துக்கும் ஆண்கள் அனைவரையும் ஈச்சிலம்பற்று கொரோனா மத்திய நிலையத்துக்கும் இன்று மாலை அனுப்பி வைக்கப்படுவர் எனவும் திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ எம் கீத் – திருகோணமலை

கள்ளத்தொடர்பால் வந்த வினை – இளம் பெண் படுகொலை

ஹட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுக்கு மற்றுமொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அடிப்படையாக வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மாலையே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மறுநாள் 27 ஆம் திகதி மாலை குறித்த பெண்ணின் கணவர், தாமாகவே முன்வந்து கினிகத்தேனை பொலிஸில் சரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஸ்தல விசாரணையை மேற்கொண்டனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸாரும், மற்றும் அட்டன் கைரேகை பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சசிகலா உடல்நிலை சீர்!

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உளளது என விக்டோரியா வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நேற்றுமுன்தினம் (27) நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் தொடர்ந்து கொரோனாவுக்கு அதே வைத்தியசாலைல் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று (29) விக்டோரியா வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில் ,

* அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.

* சசிகலா 4ஆவது நாளாக ஒக்சிசன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார்.

* சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளது.

எனக் கூறப்பட்டுள்ளது.

நன்றி – மாலைமலர்

‘தேசிய பாடசாலை திட்டம் அதிகாரப்பகிர்வுக்கு முரணானது’

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என்று தரமுயர்த்துவதாகக் கூறி அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும் என்று வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு எடுத்துரைத்துள்ளார்.

தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாது. இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல என்றும் அவர், ஆளுநருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாணா ஆளுநருக்கு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாண மாவட்டத்தின் பத்து பிரதான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன எனவும் அவை வடக்கு மாகாண சபை நிர்வாகத்தில் இருந்து மத்திய கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுவதாகவும் கடந்த வாரம் ஊடகச் செய்திகளின் மூலமாக அறிய வந்துள்ளது.

குறித்துரைக்கப்பட்ட பாடசாலைகள் அல்லாத அரச பாடசாலைகள் அரசியலமைப்பு ரீதியாக மாகாண சபைகளுக்கு கையளிக்கப்பட்ட விடயம் என்ற ரீதியில் இந்தப் பத்துப் பாடசாலைகளும் இதுவரை மாகாண கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வந்தவையாகும். அவற்றை மத்திய அரசு கையகப்படுத்துவது அதிகாரப்பகிர்வுக்கு முரணானதாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபை இயங்கிய காலத்தில் இவ்வாறான முயற்சிகள் யாவும் இங்கே மறுதலிக்கப்பட்டமை சுட்டிக்காட்டப்பட வேண்டும். இந்த நிர்வாக அதிகார மாற்றத்தின் தர்க்கவியல் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை. அதாவது நிர்வாக குறைபாடுகள் காரணமாக இருப்பினும் அவை மாகாண சபையினால் சீர்திருத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வது ஒரு பிரச்சினை அல்ல.

அவற்றை விட தேசியப் பாடசாலைகளுக்கு ஏதாவது மேலதிக வசதி வாய்ப்புக்கள் வழங்கப்படுவதாயின் அவற்றை மாகாண நிர்வாகத்தின் மூலம் வழங்க முடியும். அவற்றுக்காக ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாகாண சபை அதிகாரத்தை பிடுங்கி மத்திக்கு கொண்டு செல்லுதல் அதிகாரப்பகிர்வை முழுமையாக மீறும் செயற்பாடாகும்.

இந்நச் செயற்பாடு சமூகத்தில் தேசியப் பாடசாலைகள் ஏதோ தரமுயர்ந்தவை எனவும் ஏனையவை தரம் குறைந்தவை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தேசியப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாணவர்களிடையே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்பது மறுக்க முடியாது. இவ்வாறான பாகுபாடு ஆரோக்கியமானதல்ல.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு சபை இல்லாத சூழ் நிலையில் இவ்வாறு செய்வது ஜனநாயக விரோதமானது என்பதையும் இச் செயற்பாடு நிறுத்தப்படவேண்டும் என்பதையும் எமது தீர்க்கமான வேண்டுகோளாக பதிவு செய்து கொள்கிறேன்.

தற்போது வடக்கு மாகாண சபையின் சட்டரீதியான நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இந்த விடயத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்படி தங்களை வேண்டிக்கொள்கின்றேன்.

ரணிலுக்கு எதிராக நவீன் போர்க்கொடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் உட்பட கட்சியில் எதிர்பார்க்கப்பட்ட மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படாமையினாலேயே தேசிய அமைப்பாளர் பதவியை நிராகரித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

” நான் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராகும். கட்சியில் இருந்து விலக மாட்டேன். கட்சி மறுசீரமைப்பின் போது ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக என்னை நியமித்த போதும் நான் அதை ஏற்கவில்லை. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் இடம்பெறாமையே அதற்கு காரணமாகும்.

ஐ.தே.கவின் தலைமைத்துவம் உட்பட பல முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பதுடன், எனது அரசியல் பயணம் இவ்வாறு அமையுமென எதிர்காலத்தில் கூறுவேன். என்றாலும் கட்சியை விட்டு நான் ஒருபோதும் விலக மாட்டேன். பதவிகளுக்கு ஆசைப்பட்டு நான் அரசியல் செய்யவில்லை.” – என்றார்.

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாளை மறுதினம் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி வரை மேற்படி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் ஒரு வருடத்திற்கு மேலாக மேற்கொண்ட விசாரணைகளில் 440 பேரிடம் ஆணைக்குழு வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் செயற்பாட்டு காலம் கடந்த 27ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் 26ஆம் திகதி இறுதி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குமூலம் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விடம் இறுதியாக அந்த வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறெனினும் கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக மேற்படி ஆணைக்குழு செயற்பட்டு வந்ததுடன் 440 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு கடந்த 27ஆம் திகதியுடன் அதன் செயற்பாட்டுக் காலம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

‘பவித்ராவும் பெயில், பாணியும் பெயில்’

உலக நாடுகளையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் கோரத்தாண்டவமாடிவருகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் சிறப்பாக கட்டுப்படுத்தியது. சுகாதார, பாதுகாப்பு மற்றும் அரச நிர்வாகப் பொறிமுறைகள் உரிய வகையில் செயற்பட்டன. இதற்கு தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் பாராட்டுகள் குவிந்தன.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை. அவசர அவசரமாக வெளிநாட்டவர்களும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அரச பொறிமுறை என்பது பொறுப்பை மறந்து செயற்பட்டது. இதன்விளைவாக கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையும் இலங்கையைத் தாக்கியது.  அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசியை தருவிப்பதற்கு முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கப்படவேண்டிய நேரத்தில் சுகாதார அமைச்சு, பாணிகளுக்கு முன்னுரிமையளித்தது.

இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறைமையை நாம் கொச்சைப்படுத்தவில்லை. அதற்கென பதிவுசெய்யப்பட்ட ஆயுர்தேவ வைத்தியர்கள் இருக்கின்றனர். அவர்கள்கூட ‘பாணி’யை ஏற்கவில்லை. ஆனால் காளியம்மன் வந்து கனவில் கூறினார் எனவும், ராவணன் பாணியெனலும் பிரச்சாரம் செய்யப்படும் பாணிகளுக்கு பொறுப்புமிக்க அமைச்சர் முக்கியத்துவம் வழங்கியமைதான் வேதனைக்குரிய விடயமாகும்.

நாளை எவராவது நஞ்சு வழங்கினால்கூட அதனையும் சுகாதார அமைச்சர் பருகுவார் என அநுரகுமார திஸாநாயக்க கடந்தவாரம்கூட விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தாடல் எதிரணி மட்டத்தில் இடம்பெற்றுவருகின்றது. சுகாதார அமைச்சர் மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசாங்கமும் ‘பெயில்’ என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

பிரேரணையை வெற்றிபெறவைப்பதற்கான பெரும்பான்மை இல்லாதபோதும், குறைந்தபட்ச எதிர்ப்பை வெளியிடுவதற்காகவேனும் இதனை செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும்,  அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவரும் நிலையில் இப்படியொரு பிரேரணையை முன்வைத்தால் அது அரசாங்கத்துக்கு ஏதோவொரு விதத்தில் சாதகமாக அமைந்துவிடும் என்பதால் குறித்த பிரேரணையை கொண்டுவருவதற்கான சூழழ் இதுவல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் இன்று சுகாதார அமைச்சருக்கே கொரோனா தொற்றியுள்ளது. பாணி விவகாரத்தில் அவர் தோல்வி கண்டுள்ளார். ஆக மொத்தத்தில் பவித்ராவும் பெயில், பாணியும் பெயில் என்றே கூறவேண்டும்.

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட பீரங்குக் குண்டுகள்!

முல்லைத்தீவில் பெருமளவிலான பீரங்கிக் குண்டுகள் மீட்கப்பட்டள்ளன என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத் தீவு முள்ளியவளைப் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே, 146 பீரங்கிக் குண்டுகளும், 78 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டுகள் பாவனைக்கு ஏற்றவை அல்ல எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழர் தேசம் எங்கும் போராட்டத்துக்கு அழைப்பு! அரச அடக்குமுறைக்கு எதிராக!!

தமிழர் தேசத்தில் அதிகரித்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக “பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று திரளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதுதொடர்பில் அவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான நாம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக எங்களது தன்னாட்சி உரிமைகளுக்காக போராடி வருகின்றோம்.

ஆனால் தமிழர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காத இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை யாவரும் அறிவோம்.

போர் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசு, தமிழ் மக்களின் கலாசார – பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு, கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் , வனப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்த மயமாக்கல் திட்டங்களை இலங்கை அரசு முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன்மூலம் வடக்கில் குருந்தூர் மலை ஐயனார் கோயில், வெடுக்குநாறி மலை சிவன் கோயில், நிலாவரை, கிழக்கில் கண்ணியா பிள்ளையார் கோயில், குசனார் முருகன் ஆலயம், வேற்றுச்சேனை சித்திவிநாயகர் ஆலயம் உட்பட்ட பல ஆலயங்களில் தமது பாரம்பரிய, கலாசார, சமய, வழிபாடுகளை செய்ய முடியாதவாறு ஆலயங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதோடு அங்கு பௌத்த ஆலயங்களை நிறுவுவதற்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.

மேலும் வடக்கு, கிழக்கில் உள்ள சுமார் 200இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களை கையகப் படுத்துவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர். இது அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

அத்தோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றம் ஒன்றை உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

மட்டக்களப்பில் உள்ள பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்குடன் பால் தரும் பசுக்களை திட்டமிட்ட வகையில் படுகொலை செய்யும் நடவடிக்கைகளும் நடந்தேறி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக காடுகள் அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாசாக்களை புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாசாகளை எரியூட்டி வருகின்றனர். இதற்கு எதிராக போராடும் முஸ்லீம் சமூகத்தையும் அடக்கி ஆள முனைகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்ன பலதரப்பட்ட இஸ்லாமிய மக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி தடுத்து வைத்துள்ளனர்.

இதே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் பலரையும் கைது செய்து பல வருடங்களாக தடுத்து வைத்துள்ளனர்.
இதேபோன்று சிறைகளில் விசாரணைகள் இன்றி தமிழ் அரசியல் கைதிகளாக பலர் உள்ளனர். ஆனால் பல குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள அரசு இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி வருடக் கணக்கில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கான நீதியை வழங்காது அரசு ஏமாற்றி வருகிறது.

அத்துடன் மலையக தமிழ் மக்கள் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்திற்காக 1,000 ரூபா சம்பள உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாது அரசு இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

இவ்வாறு தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த கோரியும் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் தமிழ் பேசும் மக்களாகிய எமது அவலக் குரல்கள் சர்வதேசத்தின் மனசாட்சிகளை தட்டும் அளவுக்கு எமது போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுக்க வேண்டி உள்ளதால் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இப்போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சர்வதேசம் நீதியை பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு வடக்கு, கிழக்கு தமிழ் அமைப்புகள் ஓரணியில் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்ற கோரியும் அந்த கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் எதிர்வரும் 03.02.2021 தொடக்கம் 06.02.2021 வரை மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளமையால் மேற்படி போராட்டத்திற்கு வடகிழக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள், பல்சமய ஒன்றியங்கள், அரசியல் கட்சிகள் என அனைவரது ஆதரவையும் கோரி நிற்கின்றோம்.

மேற்படி போராட்டத்திற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
எனவே அரசியல் கட்சிகள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைவரும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கலந்து கொள்ளுமாறு வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் ஒன்றிணைந்து வேண்டுகோள் விடுக்கின்றோம் – என்றுள்ளது.

நெல்லியடி விபத்தில் ஒருவர் பலி

வேகக்கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நெல்லியடி நகர் மக்கள் வங்கிக்கு முன்பாக நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கரெவெட்டி – வதிரியைச் சேர்ந்த பேர்னாட் கரன் (வயது-41) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ராஜபக்சக்கள்மீது மைத்திரி மீண்டும் தாக்குதல்

ஆளுங்கூட்டணியிலுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய கவனிப்பு இல்லை. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படவில்லை – என்று சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால், தமது கட்சிக்கு அநீதி இழைக்கப்படுவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

” ஆம். அப்படியான பிரச்சினை இருக்கின்றது. அவர் கூறிய கருத்தில் பிழை இல்லை. எமக்கான கவனிப்பில் குறை உள்ளது. ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் பிரகாரம் எதுவும் நடைபெறுவதில்லை. உரிய வகையில் செயற்பட்டிருந்தால் இப்படியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

எது எப்படி இருந்தாலும் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது பற்றியே அதிகம் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தரப்புகளில் இருந்து எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. மற்றுமொரு தரப்பாலேயே பிரச்சினைகள் எழுந்துள்ளன.” – என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

‘குட்டிப்புலி’ குழுவை சேர்ந்த ஐவர் கைது!

திருகோணமலை – தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியில் செயற்படுவதாக கூறப்படும் ‘குட்டிப்புலி’ என்ற வன்முறை குழுவின் 05 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்களுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

01 வாள், 12 கையடக்க தொலைபேசிகள், 05 சிம் அட்டைகள், கமரா, பலவந்தமாக பெற்றுக் கொண்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்கு குட்டிப்புலி என்ற குழுவின் உறுப்பினர்கள் முயற்சித்த போது மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவநகர் மற்றும் ஆனந்தபுரி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பல குற்றச்செயல்கள் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பீ.எம்.விஜயகாந்த் என்பவரின் தலைமையில் இக் குழு செயற்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது. அவர் சி.ஐ.டி. விஜி மற்றும் நேவி விஜி என்ற பெயரிலும் அழைக்கப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் குறிப்பிடுகின்றனர்.