சஹ்ரானை இயக்கிய பொஸ் யார்?

21/4 தாக்குதலின் பின்னணி மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உட்பட அனைத்து விடயங்களும் முழுமையாக கண்டறியப்படவேண்டும். இதனைவிடுத்து சஹ்ரானின் மரணத்துடன் விசாரணை அறிக்கையையும் மூடிமறைக்க முற்படக்கூடாது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆரம்பம் முதல் இறுதிவரை முழுமையாக விசாரிக்கப்படவேண்டும். தாக்குதலை தடுக்க தவறியதை மட்டும் அடிப்படையாகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை ஏற்கமுடியாது.
இத்தாக்குதலின் பின்னணியில் அரசியல் கரம் இருந்ததா, தாக்குதலுடன் வெளிநாடுகளுக்கு உள்ள தொடர்பு என்ன என்பவையும் விசேட விசாரணை ஊடாக கண்டறியப்படவேண்டும்.

அதேபோல அடிப்படைவாதக் குழுவொன்றின் தலைவன் முதல் தாக்குதலிலேயே உயிரிழந்திருக்கமாட்டார். எனவே, சஹ்ரானின் பின்புலம் பற்றியும் விசாரிக்க வேண்டும். சஹ்ரானின் ‘பொஸ்’ யார், பொஸ்ஸா அல்லது பொஸ்களா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் இதனை மையப்படுத்தியதாக விசாரணை அமையவில்லை.

வெளிநாட்டு தொடர்பு குறித்து மேலதிக விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. எனவே, உரிய தரப்புகள் அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் விசாரணைகளை மூடிமறைக்கும் நடவடிக்கையே இங்கு நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.

அதேவேளை, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை மௌனிக்க வைக்கும் நோக்கில் அவர்மீது விமர்சனங்களைத் தொடுப்பதற்கு ஆரம்பித்துள்ளனர். உள்நாட்டில் உரிய வகையில் நீதி கிடைக்காவிட்டால், சர்வதேசத்தை நாடுவது உறுதி. நாடாளுமன்றத்தில் நடைபெறும் 3 நாட்கள் விவாதத்தின்போது ஏனைய தகவல்களை வெளியிடுவோம்.” – என்றார்.

முஸ்லிம் நாடுகளை வளைத்துப் போடவே ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி

ஜெனீவாவில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே, அரசாங்கம் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அதன்படி .வடக்கு கிழக்கு சிவில் சமூக பிரதிநிகள், மதகுருமார்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து, வவுனியாவில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தன.

இதன்படி, ஜெனீவா விவகாரம் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவா தீர்மானம் – விவாதம் கோரும் சஜித் அணி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, வெளிவிவகார அமைச்சரின் உரை உட்பட ஜெனிவா விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும், இதற்கு அரச தரப்பில் ஒரு நாள் மட்டுமே வழங்கப்படக்கூடும் எனவும், இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் எனவும் தெரியவருகின்றது.

அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது இவ்விவாதத்துக்கான நேரம் ஒதுக்கப்படும்.

அதேவேளை, 21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பிலும் எதிர்க்கட்சிகள் விவாதம் கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கையை நிராகரித்தது சு.க.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை நிராகரிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை கூடியது. இதன்போதே குறித்த அறிக்கையை நிராகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.

குறித்த அறிக்கையில் 21/4 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார்.

இந்நிலையிலேயே அறிக்கையை நிராகரிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிரணி தலைவர்களை கிலிகொள்ள வைக்கும் ‘ஜனாதிபதி ஆணைக்குழு ஒப்பரேஷ்ன்’!

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மண்கவ்விய ஐக்கிய தேசியக்கட்சி, அதன்பின்னர் 1977 இல் நடைபெற்ற தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பலமானதொரு அரசு அமைக்கப்பட்டதுடன், அதிரடியான முடிவுகளும் எடுக்கப்பட்டன.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சவாலாக அமைந்த சுதந்திரக்கட்சியின் தலைவர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறிப்பதற்கு ஜே.ஆர். அரசு நடவடிக்கை எடுத்தது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை சட்டவிரோதமாக ஈராண்டுகள்வரை நீடித்தமை உட்பட மேலும் சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டடே அரசியல் ரீதியில் ஶ்ரீமா வேட்டையாடப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புகள் வலுத்தன. போராட்டங்கள் வெடித்தன. ஆனாலும் 10 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு சிவில் உரிமைகள் கிடைக்கப்பெற்றன. இதனால் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீமாவோ அம்மையாரால் களமிறங்கமுடியாமல்போனது. ஹெக்டர் சுதந்திரக்கட்சியின் சார்பில் ஹெக்டர் கொப்பேகடுவ போட்டியிட்டார்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறித்து சிறையில் அடைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இராணுவ நீதிமன்றமும் பயன்படுத்தப்பட்டது. அனைத்துலக மட்டத்திலிருந்து எதிர்ப்புகள் வலுத்ததால் பொன்சேகாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, விடுதலைசெய்யவேண்டிய நிலை மஹிந்தவுக்கு ஏற்பட்டது.

தற்போதைய ஆட்சியின்கீழும் குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளன. இதற்கு முன்னைய சந்தர்ப்பங்களில் தனி நபர்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தாலும் இம்முறை எதிரணியிலுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களின் தலைவகள் குறிவைக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சிகள் பதறுகின்றன.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 2021 ஜனவரி இறுதியில் கையளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் இக்குழுவில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல் வேட்டைக்காகவே இவ்வாறான குழு அமைக்கப்பட்டுள்ளது என எதிரணி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

நல்லாட்சியின்போது உயர்மட்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது. இக்குழுவில் எதிரணி உறுப்பினர்களும் இடம்பெற்றிருந்தனர். அந்தவகையில் சம்பந்தன், சம்பிக்க ரணவக்க, அநுரகுமார திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம் உட்பட மேலும் சில எதிரணி உறுப்பினர்களே தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களே தம்மை அரசியல் ரீதியில் பழிவாங்கலுக்கு உட்படுத்தினர் என ராஜபக்ச படையணி கருதுகின்றது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தவர்களை தண்டிப்பதற்கும், குற்றவாளிகளுக்கு வெள்ளையடிப்பு செய்வதற்குமே கோட்டா அரசு ஆணைக்குழுக்களை அமைத்து, அரசியல் செய்வதாக எதிரணி தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இறுதியில் 7 ஆண்டுகளுக்கு தமது குடியுரிமை உட்பட சிவில் உரிமைகளை அரசாங்கம் பறிக்கக்கூடும் எனவும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் விசேட ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் சம்பிக்க ரணவக்க அச்சம் வெளியிட்டுள்ளார். அவ்வாறு நடந்தால் சர்வதேச அழுத்தம் குவியும் எனவும் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசின் இந்த நகர்வுக்கு எதிராக ஜே.வி.பி. தற்போதே போராட்டங்களை நடத்திவருகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியும் அடுத்துவரும் நாட்களில் நடவடிக்கையில் இறங்கக்கூடும். விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளிவரவுள்ளது. அதன்பின்னரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிரடிக்காட்டக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

எனினும், குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை எனவும், விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்காது எனவும் அரசாங்க தரப்பு அறிவித்துள்ளது.

21/4 தாக்குதல் அறிக்கை – நாடாளுமன்றத்தில் முன்வைப்பு

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை சற்று நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் முன்வைக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூல பிரதிகள் சமர்ப்பிக்கப்பட்டன.

அறிக்கைமீது பிரிதொரு நாளில் விவாதம் நடத்தப்படவுள்ளது.

‘எசல பெரஹெராவைத் தாக்குவதே சஹ்ரானின் பிரதான திட்டமாக இருந்தது’

கண்டி நடைபெறும் எசல பெரஹெராவைத் தாக்குவதே 21/4 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரா ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்தது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019 ஜனவரி 16 ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்திவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4, 2019 அன்று, சஹரான் மற்றும் பிற உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும், பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தாக்குதலை தடுக்க சட்டத்தை அமுலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர், சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஏப்ரல் 20, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர்.

இதனிடையே, மட்டக்களப்புக்கு தெற்கே 4 கி.மீ தொலைவில் உள்ள காத்தான்குடி நாட்டின் தனித்துவமான ஒரு முஸ்லிம் நகரம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

முஸ்லிமல்லாதவர்கள் காத்தான்குடியில் வாழவோ, சொத்து வாங்கவோ அல்லது ஒரு வணிகத்தை நடத்தவோ முடியாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின்படி, காத்தான்குடியில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 65 மசூதிகள் உள்ளன, மேலும் இப்பகுதியில் சுமார் 50,000 முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்த நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மற்ற நகரங்களிலிருந்து வேறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

மைத்திரிக்கு நெருக்கடி – கட்சி சகாக்களுடன் ஆலோசனை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன கொழும்பில் முகாமிட்டு கட்சி சகாக்களுடன் முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளது.

குறித்த அறிக்கையில் 21/4 பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு தவறியமை, கடமையை நிறைவேற்றத் தவறியமை மற்றும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய அரசியல்வாதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டபோது பாதுகாப்பு அமைச்சராகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அடங்குகின்றார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சு.கவின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தை மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கூட்டினார். 21/4 தாக்குதல் தொடர்பான அறிக்கை மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேபோல சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தையும் மைத்திரிபால சிறிசேன இன்று (25) கூட்டியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும், சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் (Dr. Deshani Herath) தெரிவித்தார்.

கொவிட் – 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தடுப்பூசியை பெற்றதும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது என நினைக்ககூடாது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அதேவேளை இதுவரை கடைபிடித்த சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை செய்யவேண்டும்.

கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றினால் எதிர்காலத்தில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாது என்பது இன்னும் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்படவில்லை. நடவடிக்கைகள் ஆய்வு மட்டத்திலேயே உள்ளன. ஆனாலும் வைரஸ் தொற்றினால்கூட பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம். எனவே, இதனை சாதகமானதாக பார்க்கவேண்டும்.” – என்றார்.

கொரோனாவால் இலங்கையில் மேலும் நால்வர் பலி

கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சைபெற்று வந்தவர்களில் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

ஆண்கள் இருவரும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க தூதுவருடன், தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் , இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் இன்று காலை 7.00 மணியளவில் தனியார் விடுதி ஒன்றில் சந்திப்பு நடைபெற்றது.அக்கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா ,சிறிதரன், சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறிதரன் எம்.பி.,

” ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் தொடர்பில் மற்றும் அந்த தீர்மானத்திற்கு இருக்கின்ற சவால்கள் அந்த சாவல்களை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகள் எவ்வாறான விடயங்களை எதிர்கொள்கின்றன, அந்த சாவால்களை அவர்கள் எவ்வாறு சாமாளிக்க போகிறார்கள், அதற்கு தமிழர்தரப்பான எங்களுடைய பங்களிப்பு என்ன மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும் இன்று உள்ள களசூழல்கள் தமிழ் மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் மற்றும் இந்த அரசாங்கம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,தவிசாளர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற போர்வயில் அச்சுறுத்தி வருவதையும் நாங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளோம்.

அத்துடன் அண்மையில் அம்பாறையில் உகுண பிரதெசத்தில் பிரபாகரனை நான் கொன்றேன் என்று ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் இடம் வலியுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தேயிலை மலைக்குள் இருந்து சிறுத்தையின் சடலம் மீட்பு

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை எல பொஜின் தேசிய உணவகத்திற்கு முன்னால் உள்ள மேபீல்ட் தேயிலை மலையில் 24.02.2021 இன்று சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உடலில் காயங்களும் காணப்படுகின்றது. குறித்த சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அரசியல் நெருக்கடி – ஜனாதிபதி கோட்டா அவசர கூட்டத்துக்கு அழைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட அரசியல் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளுங்கட்சியில் உள்ள பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை 6.30 மணிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி சந்திப்பு நடைபெறவுள்ளது.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு இதன்போது முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

வடக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம், மாந்தை மேற்கில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உட்பட வடக்கில் நேற்று மாத்திம் 42 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 443 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையில் 29 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் மன்னார் மாந்தை மேற்கைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் கடந்த வாரம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அந்த திருமண நிகழ்வில் மன்னார் ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையோரும் பூநகரி வலைப்பாடு கிராமத்தில் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அவ்வாறு திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களிலேயே ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மன்னார் மடு பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்குத் கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர், தாதிய உத்தியோகத்தர் மற்றும் நோயாளி ஒருவருக்கும் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு மன்னாரில் உள்ள உறவினர்கள் வந்து திரும்பிய நிலையில் தொற்று அறிகுறியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனைவிட, யாழ்ப்பாணம் பல்கலைகழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த 13 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

பருத்தித்துறையில் 13 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நேரடித் தொடர்புடைய 12 பேருக்கு தொற்று உள்ளதாக இன்றைய பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மிருசுவிலில் வங்கி உத்தியோகத்தருடன் தொடர்புடைய குடும்பத்துக்கு தொற்று உள்ளமை கடந்த வாரம் கண்டறிப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்புடைய பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் துரித நடவடிக்கையால் இந்த 13 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். 
இவர்களுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்

அமைதியை விரும்பும் ஒரு சமூகத்துக்கு தொடர்ச்சியாக அநியாயம் செய்வதை நிறுத்தி, ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வர்த்தமானியை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கொவிட்19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் பலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்தக்கோரி, கட்டாய தகனத்துக்கு எதிரான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில், இன்று (23) ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

“இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்கள், கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறு கட்சிகள், இஸ்லாமிய அமைப்புக்கள், சமூக நல இயக்கங்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டமை, எங்களின் மத உரிமையை பெற்றுக்கொள்வதற்காகவே. அதிகாரத்தை பயன்படுத்தி, தொடர்ந்தும் இந்த அரசாங்கம் எமது சமூகத்துக்கு இழைத்து வரும் அநியாயங்களால் மக்கள் வேதனையில் வாழ்கின்றனர்.

நாங்கள் இந்த அரசாங்கத்திடம் எதுவுமே கேட்கவில்லை. கொவிட்19 தொற்றினால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யுமாறு மட்டுமே வேண்டி நிற்கின்றோம். ஆனால், நீங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்தில் கல்லாகவே நிற்கின்றீர்கள். ஒரு சமூகத்தின் மத உரிமையை நசுக்கும் இந்த இழி செயலை இனியாவது கைவிடுங்கள். எங்கள் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதி தந்து, எங்களை நிம்மதியுடன் வாழ விடுங்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியை கண்ணியமாக மதித்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். பல்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய வைத்தியர் ஜெனிபர் பெரேரா தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவின் அறிக்கையை இரண்டு மாதங்களாக ஏன் முடக்கி வைத்திருக்கின்றீர்கள்? அந்த அறிக்கையில் கூறப்பட்டவாறு அதனை நடைமுறைப்படுத்த ஆவன செய்யுங்கள்.

இனவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக இந்தக் கொடூரத்தை நீங்கள் தொடர்ந்தேர்ச்சியாக நிகழ்த்தினால், இந்த நாட்டில் நல்லிணக்கம் என்பது எந்தக் காலத்திலும் சாத்தியப்படாது என்பதை மட்டும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குளவிக்கொட்டு – 18 தொழிலாளர்கள் பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற குளவிக்கொட்டு தாக்குதல்களில் 10 பெண் தொழிலாளர்கள் உட்பட 18 தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா பிரிவில், தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை இன்று குளவிகள் கொட்டியுள்ளன. இதனால் 12 பேர் பாதிக்கப்பட்டனர். அறுவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அறுவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியெறியுள்ளனர்.

இதேவேளை, மஸ்கெலியா மொக்கா தோட்டம் கீழ்பிரிவில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த ஆண் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 6 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

க.கிசாந்தன்

‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு கிடையாது’

எவரது குடியுரிமையையும் இரத்து செய்வதற்கோ அல்லது அதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தலையீடுகளை மேற்கொள்ளாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் பெருந்தொட்ட தொழிற்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட சிலரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கூற்று குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் மேலும் பதிலளிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

700 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கு 3 வார காலம் சென்றது.

இதன் பின்னரே நேற்றை தினம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஊடா நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று இது தொடர்பில் எந்தவித அரசியல் அழுத்தத்தையும் சம கால அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

21/4 தாக்குதல் – விசாரணை அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

21/4 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாசிகசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. பிரதிகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை எம்.பிக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

பிரபாகரனின் காணொளியை பதிவிட்ட இளைஞன் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில், இணையதளங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் நேற்று வத்தளை பிரதேசத்தில் வைத்து, 25 வயதுடையை இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

டிக்டொக் செயலி மூலமாக, பல்வேறு ஒளிப்படங்களையும், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செய்திகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நபர் முல்லைதீவை பிறப்பிடமாகவும், ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவ்வாறே அவரது கைப்பேசியை சோதனையிட்டபோது, பயங்கரவாதத்தை தூண்டும்வகையிலான செய்திகளை அவர் உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.