மாகாணசபைத் தேர்தல் முறைமையில் மாற்றம்

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

 ” மாகாணசபைத் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஸ்தீரமானதொரு மாகாணசபையை உருவாக்கும் நோக்கில் போனஸ் ஆசனங்களை அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. தற்போது மாகாணமொன்றில் அதிகூடிய வாக்குகளைப்பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனம் வழங்கப்படுகின்றது. மேற்படி யோசனையின் பிரகாரம் மாவட்ட ரீதியில் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.

அந்தவகையில் மேல் மாகாணத்தில் 3 மாவட்டங்கள் உள்ளன. இதுவரை 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதேபோல வடமத்திய மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. அங்கு போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பிரதேசத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதால் 70 வீதம் தொகுதி அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன், தொகுதியொன்றில் ஒரு கட்சி மூன்று வேட்பாளர்களை நிறுத்த முடியும் என்ற திட்டமும் முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர்களும் கருத்துகளை முன்வைத்தனர். இதனையடுத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தைக்கூட்டி, இறுதி முடிவொன்றை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எனவே, அக்கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ” என்றார்.

இந்தியா தனது பொறுப்பை ஐ.நாவில் சரியாக நிறைவேற்றியுள்ளது

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்நியா நடுநிலையாக இருந்த போதிலும், பிரேரணை வெற்றி பெறுவதற்கு இந்தியாவின் பொறுப்பு மிக முக்கியத்துவமானது, என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் , நாங்கள் முழுமையாக எதிர்பார்த்த அவ்வளவும் ஒரு பிரேரணையாக வரவில்லையே தவிர அதை நோக்கிச் செல்வதற்கான நகர்வுகள் பல அத் தீர்மானத்தில் இருக்கின்றன. இந்தியாவின் செல்வாக்கும் அந்தப் பிரேரணையில் இருக்கின்றது.

அவர்கள் மிக நுட்பமாக சீனாவின் கைபிடிக்குள் இந்த அரசாங்கம் முழுமையாகச் சென்றுவிடாமல் இந்து சமுத்திரத்தினுள்ளே இந்தியாவின் வல்லாண்மைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இலங்கையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவும் மிகக் கவனமாக தமிழர்களுடைய இனப்பிரச்சினை உட்பட சொல்ல வேண்டிய கருத்துக்களை பேசி நடுநிலைமை வகித்திருக்கின்றார்கன்.

அது மிகத் தந்திரோபாயமானது. இதனை நாங்கள் நினைத்தவாறு திட்டித்தீர்ப்பதால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

எனவே இந்தப் பிரேரணையினால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள், என்ன நலன்கள் ஏற்பட இருக்கின்றன என்பதைப் பொறுமையுடன் எதிர்பார்த்திருக்க வேண்டும். சில வேளைகளிலே அடுத்த தடவைகளில் இந்தியாக ஐ.நா பாதுகாப்புச் சபைக்குத் தெரிவு செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. பாதுகாப்புச் சபையில் இருந்து விலகிய அமெரிக்காவும் அடுத்த தடவைகளில் திரும்பி வரவும் முடியும்.

13வது திருத்தமானது தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை தேடுவதற்கான திறவுகோலே தவிர அது தீர்வு அல்ல. எனவே நாம் ஒற்றுமைப்பட வேண்டும். இதனையே சர்வதேசமும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான த.கலையரசன், இராசமாணிக்கம் சாணக்கியன், அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் , கட்சியின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜெனிவா விவகாரம் – அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க எதிரணி தயார்!

” ஜெனிவா தீர்மானத்தை வைத்து எதிரணி அரசியல் பிழைப்பு நடத்தவில்லை. ஜெனிவா நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம். அதற்காக சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்லும் வகையில் உள்ளக பொறிமுறை நிறுவப்படவேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது,

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கையிலேயே கலாநிதி கலாநிதி ஹர்ஷ டி சில்வா எம்.பி. மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஜெனிவா தீர்மானத்தை அடிப்படையாக வைத்து எதிரணியினர் மாயையை தோற்றுவித்துவருகின்றனர் என ஜீ.எல். பீரிஸ்  அறிவிப்பு விடுத்துள்ளார். நாம் மாயையை தோற்றுவிக்கவில்லை. உண்மை நிலைவரம் என்னவென்பது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை முன்வைத்து வருகின்றோம். எனவே, யாதார்த்தம் என்னவென்பதை புரிந்துக்கொண்டு இப்பிரச்சினையில் இருந்து வெளியே வருவதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நாம் தயார். இது தொடர்பில் எமது தலைவர் நாடாளுமன்றத்திலும் அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்காலம் குறித்து மட்டும் குறிப்பிடப்படவில்லை. அது தொடர்பில் ஒரிரு பக்கங்களே உள்ளன. நடப்பு அரசின் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களே பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், இனவாதம், சுயாதீன நிறுவனங்கள் அரசியல் மயப்படுத்தப்படுகின்றமை, இராணுவ மயக்காமல், கருத்து சுதந்திரம் மறுப்பு, அரசை விமர்சிக்கின்றனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு .மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, போர் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ,சர்வதேச நம்பிக்கையை வெல்லும் விதத்திலான சுயாதீன பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கவேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினையில் இருந்து மீள முடியும். அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால்கூட சர்ச்சைகள் உருவாகாது.

அதேபோல ஒற்றையாட்சிக்குள் இறைமை, சுயாதீனம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதிகாரப்பகிர்வும் இடம்பெறவேண்டும்.” – என்றார்.

சுதந்திரக்கட்சி ஆட்சி மலரும் – மொட்டு அணிக்கு மைத்திரி எச்சரிக்கை

எதிர்காலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பதே எங்களின் எதிர்ப்பார்ப்பு. அதற்கேற்ற வகையில் கட்சி கட்டியெழுப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கண்டியில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சவால்களுக்கு மத்தியில் பயணித்த கட்சியாகும். மீண்டெழுவதற்கான சக்தி இந்த கட்சிக்கு இருக்கின்றது. 14 பேர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்னர் 8 எம்.பிக்கள் அங்கம் வகித்த சந்தர்ப்பமும் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைப்பதே எமது எதிர்ப்பார்ப்பு.

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

கண்டி தலதாமாளிகைக்கு சென்ற மைத்திரி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார்.

புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் புதையல் தோண்டிய ஐவர் கைது

கிளிநொச்சி, வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் அமைந்திருந்த காட்டுப் பகுதிக்கருகில் புதைய தோண்ட முற்பட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாயவனூர் காட்டுப் பகுதியில் நவீன ஸ்கானிங் இயந்திரத்துடன் மாத்தளை, கண்டி மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து வருகை வருகை தந்திருந்த ஐவர் நேற்று புதையல் தோண்டுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் தகவல் இராணுவப்
புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பூஜை
வழிபாடுகளுக்காக அழைத்து வரப்பட்ட முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடமிருந்த புதையல் தோண்டுவதற்காக
பயன்படுத்தப்படும் நவீன ஸ்கானிங் கருவி மற்றும் ஏனைய பொருட்கள், அவர்கள் பயணித்த வாகனம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள் இன்று(30) கிளிநொச்சி நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஐவரையும் வருகின்ற ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
நீதிமன்று கட்டளையிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதியா?

இலங்கையின் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும்இ அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எமது கடல் எல்லை பகுதிக்குள் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான பேச்சுவார்ததை நடைபெறுவதாகவும் இதுதொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்க முடியுமா? அனுமதிக்க முடியமாயின்இ அது எமக்கு பாதகமாக அமையும் அல்லவா? என்று ஊடகவியலாளர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் என்ற ரீதியில் கொள்கை ரீதியில் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. அமைச்சரவையிலேயே இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ள முடியும். இதுவரையில் அமைச்சர் இதுதொடர்பாக எந்த விடயத்தையும் அமைச்சரவையில் தெரிவிக்கவில்லை. ஆவணமும் முன்வைக்கவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 54 பேரின் விடுதலை தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்இ இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படுவது போன்று இந்திய மீனவர்கள் இலங்கையிலும் கைது செய்யப்படுகின்றனர். இராஜதந்திர முறையின் கீழ் நீண்ட காலமாக இவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் கைது செய்யப்படும் மீனவர்கள் தொடர்பில் வழக்கு தொடரப்படுவதும் உண்டு என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவர்களின் சேமநலம் குறித்தும் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

“பொலிஸ் அதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை”

” சாரதியொருவர்மீது தாக்குதல் நடத்தும் பொலிஸ் அதிகாரியின் செயலை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. “- என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரியால் சாரதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அரசின் நிலைப்பாடு என்னவென்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” சொல்லில் அல்ல தனது நிலைப்பாடு என்னவென்பதை அரசாங்கம் செயல் ஊடாக காட்டியுள்ளது. பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் நடவடிக்கை எடுப்பார்.” – என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கையைக் காக்க சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக்கொண்டு இலங்கை படையினரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முன்னிலையில் கொண்டுசெல்லமுடியாது. பாதுகாப்புசபை ஊடாக முயற்சி எடுக்கப்பட்டால்கூட அதனை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தும் – என்று இலங்கை அரசு நேற்று அறிவித்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (29) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி அறிவிப்பை விடுத்தார் சட்டத்துறை நிபுணரான அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாயையொன்றை உருவாக்கிஅச்சத்தை ஏற்படுத்துவதற்கு எதிரணி முயற்சிக்கின்றது. இது தொடர்பில் எவரும் அச்சப்படவேண்டியதில்லை.  அத்துடன், எமது நாட்டு முப்படையினரையும், அரசியல் தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கான சூழல் குறித்த தீர்மானத்தின் ஊடாக உருவாகியுள்ளது எனவும் குறிப்படுகின்றனர். இது தவறான கருத்தாகும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதற்கு இரு வழிகள் உள்ளன.  இதில் ஒன்றுதான் ரோம் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. அடுத்ததாக ஐ.நா. பாதுகாப்பு சபை கட்டளையிட்டால் சர்வதேச நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும். இதன்படி யோசனையொன்று முன்வைக்கப்பட்டால்கூட சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கும். எனவே, இலங்கை படையினரையோ, அரசியல் தலைவர்களையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லமுடியாது.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்பது கலந்துரையாடல் களமாகும். அங்கு தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் மனித உரிமைகள் பேரவைக்கு கிடையாது. அதற்கான அதிகாரம் பாதுகாப்பு சபைக்கு மட்டுமே இருக்கின்றது.” –

புலம்பெயர் அமைப்புகளுக்கு எச்சரிக்கை விடுப்பு

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளமை, இஸ்லாமிய பயங்கரவாத கொள்கையை பரப்புகின்றமை மற்றும் அவர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றமைபோன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என அரசு தெரிவித்துள்ளது.

நீண்டகாலமாக இலங்கை விவகாரங்களில் கண்காணித்து செயற்பட்டு வருகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் தனிப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் உட்பட 400 இற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசு தடை செய்துள்ளது. இந்தத் தடைக்கான காரணம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளனர்.

தனிவழி செல்கிறது சு.க. – இன்று மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறார் மைத்திரி

இவ்வருடத்துக்குள் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு உத்தேசித்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதற்கான நகர்வுகளை தற்போது திரைமறைவில் முன்னெடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்நிலையில் இன்று (30) வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெறவுள்ளார்.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட அரசியல் வேலைத்திட்டங்களிலும் பங்கேற்கவுள்ளார். மறுநாள் (31) மாத்தளை மாவட்டத்திலும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் பங்காளியாக அங்கம் வகித்தாலும் சுதந்திரக்கட்சிக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். மொட்டு அரசால் முன்னெடுக்கப்பட்ட சில திட்டங்களுக்கும் சுதந்திரக்கட்சி போர்க்கொடி தூக்கியிருந்தது.

இதனால் இரு தரப்புக்கும் இடையிலான உறவு நல்லதாக இல்லை. எனவேதான் மாகாணசபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டு, பலத்தைக்காட்ட முற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகர்

யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், ஊடகவியலாளருமான புலேந்திரன் சுலக்சன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டது.

குறித்த ஊடகவியலாளரை இன்றைய தினம் கொழும்பிற்கு அழைத்து வாக்குமூலம் பெற்ற பின்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர்.

புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபருடன் ஊடகவியலாளர் முக புத்தகத்தில் நட்பில் இருந்தமை தொடர்பில்லையே விசாரணைக்கு அழைக்கப்பட்டு சுமார் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அசாத் சாலியை விடுவிக்குமாறு ரிஷாட் வலியுறுத்து

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு, மட்டக்குளியில் நேற்று (28) இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த பகிரங்க வேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“அசாத் சாலியை விசாரணை செய்து, அவர் தவறிழைக்காவிட்டால் உடனடியாக விடுதலை செய்யுங்கள். சமூகத்துக்காக கருத்து தெரிவித்தார் என்பதற்காக, அவரின் குரல்வளையை நசுக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அவரை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்திருப்பது தருமமும் நீதியும் அல்ல. சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்காக ஓயாது குரல் கொடுத்தவர். குறிப்பாக, ஜனாஸா அடக்கும் முயற்சிகளுக்கும் அவர் எங்களுடன் இணைந்து போராடினார்.

அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் ஆளுநரும் கூட. எனவே அவரை அநியாயமாக பழிவாங்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கையை கட்டியெழுப்ப முடியாது

இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு சிங்கள மொழியில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.

இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில் நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல. எழுபத்தி ஐந்து என்பது நூறு அல்ல. தொண்ணூற்று ஒன்பது கூட நூறு அல்ல. எழுபத்தி ஐந்துடன் இன்னொரு இருபத்து ஐந்து சேர வேண்டும். அதுதான் நூறு. அதுதான் இலங்கை.

ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை.

தமிழர்களுக்கு அதிகாரம் பிரித்து கொடுத்தால், அவர்கள் தனியொரு நாட்டை அமைத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. தமிழர் மத்தியில் ஆயுத போராட்டம் மீண்டும் தலையெடுக்கும் என்ற பயமும் இருக்கிறது. மிக நியாயமான பயங்கள் இவை. சிங்களவர் ஏன் இப்படி நினைக்கிறார்களே என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. நான் அவர்களிடம், இல்லை, அவர்களின் இந்த பயம் நியாயமானது. அதை நாம் நிவர்த்திப்போம் என்று கூறுகிறேன்.

அதேபோல் தமிழர் மத்தியிலும் பயங்கள் உண்டு. இந்த நாட்டை சிங்கள மட்டும், பெளத்தம் மட்டும் என படிப்படியாக மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள், என்று தமிழர்கள் நினைக்கிறார்கள். தமிழரை, முஸ்லிம்களை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நடத்த சிங்கள அரசியல் தலைமை முயல்கிறது என்ற அச்சம் தமிழர் மத்தியில் உள்ளது. இதுவும் மிக, மிக நியாயமான பயம். இதை சிங்கள மக்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.

அப்புறம் இந்த அதிகார பகிர்வு என்ற விடயத்தை பாருங்கள். அதிகார பகிர்வு என்றால், சிங்கள மக்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளிடம் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது அப்பட்டமான பிழை. அதிகார பகிர்வு என்றால் சிங்கள அதிகாரத்தை தமிழ், முஸ்லிம்களிடம் கையளிப்பது என்பதல்ல. அது ஒரு ஜனநாயக சித்தாந்தம். கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்றால், அவை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, மஹியங்கனை, மொனராகலை, காலி, மாத்தறை, எம்பிலிபிடிய ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? கொழும்பு தலைநகரில் ஒரு கும்பல் இருக்கிறது. அது ஒரு வகுப்பு. கொழும்பில் எந்த அரசாங்கம் நிலைபெற்றாலும், அந்த கும்பல் அந்த அரசாங்கத்தை பிடித்து கொள்கிறது. வாக்களித்து அரசாங்கங்களை உருவாக்கும் மக்களை விட இந்த கும்பல் அரசாங்கங்களுக்கு உள்ளே செல்வாக்கு மிக்கது.

இது எல்லா அரசாங்கங்களையும் பிடிக்கும். இப்போதைய அரசாங்கத்தையும் இது பிடித்து வைத்துள்ளது. சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசுகள் மட்டுமல்ல, நாளை சஜித் ஆட்சி வந்தாலும், அந்த அரசாங்கத்தை இது பிடிக்கும். அந்தளவு செல்வாக்கு இந்த கும்பலுக்கு உள்ளது. இதற்கு இன, மத அடையாளங்கள் இல்லை. ஆகவேதான், அதிகாரங்களை பிரித்து எல்லா மாகாணங்களுக்கும் அனுப்ப வேண்டும் என நான் கூறுகிறேன். ஆகவே அதிகார பகிர்வை இந்த அடிப்படையில் பாருங்கள்.

மேலும் இது என்ன, மன்னராட்சியா? இங்கு அரண்மனை உள்ளதா? கொழும்பில் ராஜா, ராணி, யுவராஜா, யுவராணி இருக்கிறார்களா? ராஜகுடும்பம் உள்ளதா? ஆகவே கொழும்பில் குவிந்துள்ள அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள். இலங்கை தேசத்தை கட்டியெழுப்பலாம். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தருகிறேன்.

யாழில் 7 நாட்களில் 314 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்துள்ள 7 நாட்களில் மாத்திரம் 314 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மார்ச் 22 முதல் 29 வரையான காலப்பகுதியிலேயே தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, யாழ்.நகரிலும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்குகூட ஒருவாரம் மூடப்பட்டுள்ளது.

நல்லூர் கிட்டுப் பூங்காவின் கொட்டகைக்கு விசமிகள் தீ வைப்பு

நல்லூர் கிட்டுப் பூங்காவின் முகப்பின் அடையாளமாகக் காணப்பட்ட கொட்டகைக்கு விசமிகளால் தீவைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதி ஏரிந்து நாசமாகியுள்ளது.

ஏப்ரலில் 5 நாட்கள் சபை கூடுகிறது

ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைய ஏப்ரல் 5ஆம் திகதி திங்கட்கிழமை விசேட தினமாக நாடாளுமன்றம் கூடவுள்ளது. அன்று முற்பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநாளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றம் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

அன்றையதினம் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுமை அமைப்பதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அத்துடன், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை ஐந்தாவது நாளாக ஏப்ரல் 7ஆம் திகதி நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அரசியல் பழிவாங்கள் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை ஏப்ரல் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6ஆம் திகதி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகள், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான தீர்மானம் உள்ளிட்ட 8 விடயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை இவை குறித்த விவாதம் நடைபெறவிருப்பதுடன், மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

7 தமிழ் அமைப்புகளுக்கு கோட்டா அரசு தடை

வெளிநாடுகளில் இயங்கும் 7 தமிழ் அமைப்புகளையும், தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உள்ளிட்ட 300ற்கும் அதிகமானவர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதுடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் 25ம் திகதியிடப்பட்ட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம், பெயர் குறிப்பிட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னணியிலேயே இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை,அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்களே மீண்டும் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

A9 வீதியில் விபத்து – இரு பெண்கள் பலி

யாழ் – கண்டி A9 வீதியின் அனுராதபுரம், திறப்பனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

பக்கமூன பகுதியிலிருந்து அநுராதபுரத்திற்கு யாத்திரை சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

பலிகடாவாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும்

21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு நீதி நிவாரணத்துக்காக ஏங்குத் தவிக்கும் கத்தோலிக்க சமூகத்துக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதேபோல குறித்த தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர வழிகளில் வேட்டையாடப்பட்ட – பலிக்கடாக்களாக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி கிடைக்கவேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி அலுவலகத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருடன் இன்று (27.03.2021) நடைபெற்ற “சமூக நீதி” தொடர்பான கலந்துரையாடலின்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையானது முழுமையற்றதொன்றாகவே இருக்கின்றது. அதுமட்டுமல்ல அவ்வறிக்கையின் இணைப்புகள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. எனவே, ஒரு பகுதியை வைத்துக்கொண்டுதான் தற்போது விவாதம்கூட நடைபெறுகின்றது.

குறித்த தாக்குதலின் பின்புலம் என்ன , பிரதான சூத்திரதாரிகள் யார் , திட்டமிட்டது யார் என்பன உட்பட தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதுதான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட அனைவரினதும் கோரிக்கையாக இருந்தது.  இந்நிலையில் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு தவறியவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாலும், அடி, முடி தொடர்பில் உரிய வகையில் ஆராயவில்லை என்பதுதான் பொதுக்கருத்தாக இருக்கின்றது.

எனவே, 21/4 தாக்குதல் தொடர்பில் அனைத்து வழிகளிலும் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சூத்திரதாரிகள் யார் என்பது தொடர்பிலும், தாக்குதலின் உண்மையான நோக்கமும் உரிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவேண்டும். இதன் பின்னணியில் செயற்பட்டுள்ள வெளி சக்திகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிச்சத்துக்கு வரவேண்டும். அவ்வாறு செய்தவதன் ஊடாகவே பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகத்துக்கு நீதியை பெற்றுக்கொடுக்ககூடியதாக இருக்கும்.

ஆனால் நாட்டில் எதாவது நடைபெற்றால் அதனை தனக்கு சாதகமான வகையில் அரசியல் மயப்படுத்தி , அரசியல் பிழைப்பு நடத்தும் தற்போதைய அரசு, நீதி நிவாரணத்தை வழங்குமா என்பது சந்தேகமே. எது எப்படி இருந்தாலும் பேராயர் கூறியதுபோல சர்வதேசம் சென்றாவது அம்மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.
அதேபோல 21/4 தாக்குதலை நடத்தியவர்கள் முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம்மீதும் பேரினவாதிகள் பயங்கரவாத முத்திரை குத்தினர். இஸ்லாம் மதத்தையும் அவதூறு படுத்தினர். அப்பாவி முஸ்லிம் மக்கள் பலிக்கடாக்களாக்கப்பட்டனர். அவர்கள் வேட்டையாடப்பட்டனர்.

முஸ்லிம் வியாபாரிகளின் வர்த்தகமும் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டது. எனவே, 21/4 தாக்குதலையடுத்து பல வழிகளிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்துக்கும் நீதி வேண்டும். அவர்கள் தொடர்பான களங்கம் நீக்கப்படவேண்டும். தமக்கான கலை, கலாசார, பண்பாட்டு, மத உரிமைகளை பின்பற்றி சுதந்திரமாக வாழும் நிலை உருவாக வேண்டும். ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சமூகத்தை குறிவைப்பது குரோதத்தின் உச்சமாகும்.  ” -என்றார்.

ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்கும் – ஐ.தே.க. எச்சரிக்கை

இலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐ.நா. பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிவர்த்தி செய்ய ஒரு வருடம் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்காலப்பகுதியில் அரசாங்கம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்றும் அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பிரேரணைக்கு ஆதரவளித்த பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள கடந்த ஆட்சியில் ரணில் விக்ரமசிங்க சிறந்த இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தில் ஐரோப்பாவினால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொள்வதற்கும் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்றும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.