இலங்கையில் இன்று 1,636 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 714 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி இன்று மாத்திரம் ஆயிரத்து 636 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது. 11 ஆயிரத்து 504 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 95 ஆயிரத்து 975 பேர் குணமடைந்துள்ளனர்.

‘சகல வைபவங்களையும் ஒத்திவைத்து உயிர் காக்க ஒத்துழையுங்கள்’ – நல்லை ஆதினம் கோரிக்கை

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என நல்லை ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளது.

நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் சுப்பிரமணிய கோட்டத்தின் தலைவர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள் இணைந்து வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா என்னும் கொடிய தொற்றுநோய் தாண்டவமாடுகின்றது. பாரத தேசத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து வீழ்ந்து இறப்தை நான் காண்கின்றோம்.

பாரத தேசத்திலும் எங்கள் மண்ணிலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலன் பெற நாளை முதல் நண்பகல் 12 மணிக்கு மணி ஓசையை ஒலிக்கச் செய்து பிராத்தனை செய்யுங்கள்.

ஆலயங்களில் நாளாந்த பூசை, நித்திய நைமித்திய வழிபாடுகளைச் செய்யுங்கள். அடியவர்கள் ஆலயங்களில் கூடுவதைத் தவிருங்கள்.

பொதுமக்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதை இயன்றவரை கட்டுப்படுத்துங்கள்.

சுகாதார மருத்துவ சமூகத்தின் வேண்டுதலுக்கு அனைவரும் மதிப்பளித்து பாதுகாப்பாகச் செயற்படுங்கள்.

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள்.

பாரத தேசத்தில் மக்கள்படும் அவலம் ஓயவேண்டும்படி அனைவரும் வீடுகளில் பிராத்தனை செய்யுங்கள்.

தெருக்களில் கூடுவதையோ தெருவோர வியாபாரம் செய்வதையோ சுகாதாரத்துக்கு இடையூறாக நடப்பதையோ அனைவரும் தவிருங்கள் – என்றுள்ளது.

ரிஷாட்டை விடுவிக்குமாறு வலியுறுத்தி கொழும்பிலும் போராட்டம்

மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து, அரசியல் நாடகத்தை, அரங்கேற்றிக்கொண்டிருக்காமல், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இன்று (30) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸின் ஏற்பாட்டில் கொழும்பு, தெவட்டகஹ பள்ளிக்கு அருகாமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொழும்பின் பலபாகங்களிலும் இருந்து வருகை தந்த மக்கள் பங்கேற்றனர்.

“ரிஷாட் பதியுதீனை விடுதலை செய். அநீதியான முறையில் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருக்காதே. நள்ளிரவில் கைது செய்ததன் பின்னணி என்ன?. யாரை திருப்திப்படுத்த இந்தக் கைது?” போன்ற சுலோக அட்டைகளையும், நீளமான பதாதைகளையும் தாங்கியவாறு, சமூக இடைவேளிகளை பேணி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற வேளை பொலிசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரத்ன, முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த அர்ஷத் நிசாம்தீன், மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான், உயர்பீட உறுப்பினர்களான பாயிஸ், தாஹிர், அன்சில், நௌபர் மற்றும் முக்கியஸ்தர்களான ரம்சி, நிஜாம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், சகோதர சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ராஜித்த சேனாரத்ன எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அநியாயமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். அவரின் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. அவர் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவர். கட்சித் தலைவராக இருக்கும் அவரை பின்கதவால் வந்து கைது செய்வதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? அவர் என்ன பயங்கரவாதியா? குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்த போதெல்லாம் அவர் தவறாமல் சென்று விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கின்றார். இது ஒரு பிழையான நடைமுறை. ஜனநாயகத்தை மீறும் செயல். எனவே, அவரை விடுதலை செய்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார்? என்பதை உடனடியாக அறிவியுங்கள்” என்றார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட முஜிபுர் ரஹ்மான் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

“இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தேர்ச்சியாக ரிஷாட் பதியுதீனை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்து, போதியளவு விசாரணை செய்தது. எனினும், அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுக்களையும் நிரூபிக்க முடியாமல் போனது. ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் அவர் விசாரிக்கப்பட்டார். ஆனால், இறுதி அறிக்கையிலும் அவர் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. இது முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை பழிவாங்கும், அவர்களை அச்சப்பட வைக்கும் நடவடிக்கை. இதன்மூலம் இந்த அரசு தொடர்பில், எவரும் கேள்வி எழுப்பக் கூடாது என்ற ஒரு மறைமுகமான அச்சுறுத்தலே விடுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் ஹரின் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அச்சுறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யுங்கள் அல்லது அவர் மீது குற்றச்சாட்டு இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துங்கள். உங்கள் அதிகார பலத்தை பாவித்து பலாத்காரமான முறையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அவரை தடுத்து வைத்திருக்க வேண்டாம்” என்றார்.

அனைத்து நிகழ்வுகளும் இரு வாரங்களுக்கு இரத்து

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு திருமணம் மற்றும் பொது வைபவங்களை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் இன்று கூறினார்.

யாழில் கடற்படையினர் துப்பாக்கி சூடு – மணல் கடத்தல்காரர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த “கன்ரர்” ரக வாகனத்தை மறுத்துள்ளனர்.

வாகனம் கடற்படையினரின் கட்டளையை மீறி சென்ற போது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர். அதன் போது வாகனத்தில் பயணித்தவர்களும் , வாகனத்திற்கு வழி காட்டியாக சென்றதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒட்டி ஒருவரும் தமது வாகனங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

அதனை அடுத்து கன்ரர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடற்படையினர் மீட்டதுடன் , பருத்தித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினார்கள்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாகனங்களை பொறுப்பேற்றதுடன் , விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

தப்பி சென்றவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கொழும்பில் நேற்று மாத்திரம் 533 பேருக்கு கொரோனா

மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் 823 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 533 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 145 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 145 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, குருணாகல் மாவட்டத்தில் 107 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கனடிய பல்கலைக்கழகத்து தமிழ் இருக்கை, புலம் பெயர் தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம்

கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக செம்மொழியாம் எங்கள் தமிழை கற்கவும், ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் உலக தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம்.

“நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற எழுச்சிகர செய்தி இதன் மூலம் அறிவிக்கப்படுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

கனடிய டொரோன்டோ பல்கலைக்கழகத்தில், உலக மொழியாம் எங்கள் தமிழை கற்கவும்,ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் அடையாளம். நல்ல பரிணாமம் (Evolution). நல்ல பரிமாணம்.

“நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற அரசியல், சமூக, கலாச்சார செய்தியையும் இந்த தமிழ் இருக்கை அறிவிக்கின்றதாக நான் நம்புகிறேன்.

டொரோன்டோ மத்திய எம்பி திருமதி மார்சி இயன், இதுபற்றி கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றி கனடாவில் வாழும் மூன்று இலட்சம் புலம் பெயர் தமிழர்களையும், இதற்காக முன்னின்று உழைத்த கனடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளையும் பாராட்டியுள்ளார்.

அதேபோல், காலமறிந்து இந்திய ரூபாயில் ஒரு கோடி நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின், அஇஅதிமுக அரசுக்கும், இந்திய ரூபாயில் பத்து இலட்சம் நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி திமுகவுக்கும், இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

இந்த காரியத்தை கருப்பொருளாக, முன்வைத்து, வளர்தெடுத்து, நிதி சேகரித்து, சாத்தியமாக்கியுள்ள அனைத்து புலம் பெயர் தமிழ் நெஞ்சங்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும், ஒட்டுமொத்த கனடிய தமிழர்களுக்கும் எனது பாராட்டுகள்.

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? ஞாயிறு இறுதி முடிவு

நாட்டிலுள்ள பாடசாலைகளை மீள எப்போது திறப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.04.2021) உறுதியான முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாணவர்களுக்கு தங்குதடையின்றி கல்வி வழங்கப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். அதேபோல மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அந்தவகையில்தான் 30 ஆம் திகதிவரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவனாக்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நிலைமை நாளாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. நாட்டில் மாகாண கல்விப்பணிப்பாளர்கள் 9 பேர் இருக்கின்றனர். 100 வலய கல்விப்பணிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடமும் கருத்துகள் பெறப்படுகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட சுகாதார தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்படும்.

இதன்படி மே 2 ஆம் திகதி அதாவது ஞாயிற்றுக்கிழமை, மே 3 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை திறக்கமுடியுமா என்பது தொடர்பில் உறுதியான முடிவு எடுக்கப்படும்.” – என்றார்.

கொரோனாவால் மேலும் அறுவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐந்து பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.

பொரலஸ்கமுவ, கண்டி, நாலவப்பிட்டிய, வெலிமடை, வத்தளை மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்களாவர்.

இலங்கையில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் ஆயிரத்து 77 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி 952 பேருக்கும், 27 ஆம் திகதி 1,096 பேருக்கும், 28 ஆம் திகதி 1,451 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் இன்று 3ஆவது நாளாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, கொரோனாவிலிருந்து 95 ஆயிரத்து 445 பேர் குணமடைந்துள்ளனர். 641 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்து 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவராம், ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகி என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2005 ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளம் ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 200 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

ரிஷாட்டை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று (29) மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக இடைவெளிகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த, போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபிஹான் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராக, நேற்று வவுனியாலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் விபத்து – 20 பேர் காயம்

நுவரெலியா, ஹெபோரஸ்ட் பகுதியில் இருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த பஸ் இன்று நண்பகல் மாகுடுகல தோட்டப் பகுதியில் வைத்து சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர்வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் ஹைபோரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஐ.தே.க. தலைவர் பதவியில் ரணிலே நீடிப்பார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் தற்போதைக்கு மாற்றம் வராது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.  எனவே, ரணில் விக்கிரமசிங்க விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வார் என தெரியவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர்  6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அம்மாநாட்டின்போது கட்சியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
பிரதித் தலைவராக செயற்படும் ருவான் விஜேவர்தனவின் செயற்பாடுகளில் திருப்தி இருக்கின்றதென கட்சி உறுப்பினர்கள் கருதும் பட்சத்தில் 2022 ஆம் ஆண்டு மாநாட்டின்போது அவரிடம் கட்சித் தலைவர் பதவி ஒப்படைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் பிரிதொரு நபரிடம் தலைமைப்பதவி கையளிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் பதவிகளை பறித்து, புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையில் ஐ.தே.க. சட்டக்குழு ஈடுபட்டுவருகின்றது.

யாழில் இதுவரை 1,161 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை 1,161 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

3 நாட்களில் 3,499 பேருக்கு கொரோனா

நாட்டில் கடந்த 3 நாட்களில் 3 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி 952 பேருக்கும், 27 ஆம் திகதி 1,096 பேருக்கும், 28 ஆம் திகதி 1,451 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

மேல் மாகாணத்திலேயே அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 7 ஆவது நாளாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இந்தியாவில் 7 ஆவது நாளாகவும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 3 ஆயிரத்து 293 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாடசாலைகள் மீள எப்போது திறக்கப்படும்?

சுகாதார தரப்பினர் மற்றும் அதிபர்களுடன் கலந்துரையாடிய பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் – என்று கல்வி அமைச்சர் அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது. வார இறுதியில் சுகாதார தரப்பினர், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போதே மே 3 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே தீர்மானங்கள் எடுக்கப்படும்.” – என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி திருவிழா நடத்தியவர்கள் கைது!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள், ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும், செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது. அதனால் இருவருக்கும் நேற்று இரவு பொலிஸ் பிணை வழங்கப்படவுள்ளது.

நாட்டில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய 50 பக்தர்களுக்கு மட்டுமே ஆலயத்தில் ஒரே நேரத்தில் வழிபட அனுமதிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 100 இற்கும் மேற்பட்ட பகுதிகள் முடக்கம்

நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் வருமாறு,

வெல்லவாய நகர சபை எல்லை

வெஹரயாய

கொட்டம்பபொக்க கிராம சேவகர் பிரிவு

புத்தள ரத்னமக கிராம சேவகர் பிரிவு

உகன குமாரிகம கிராம சேவகர் பிரிவு

மாத்தளை, அளுகொல்ல கிராம சேவகர் பிரிவு

அதேவேளை, கொரோனாவால் நாட்டில் இதுவரையில் 110 வரையான கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன