புதிய சட்டமா அதிபர் பிரதமருக்கு வழங்கிய முதல் உறுதிமொழி

நாட்டின் 48 ஆவது சட்டமா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், பிரதமர் மஹிந்த ராஜபசவை இன்று (31) அலரி மாளிகையில் சந்தித்தார்.

சட்டமாதிபர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணத்துக்கு இதன்போது பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலும், தீ பரவலினால் சமுத்திர வள சுற்று சூழல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.

அதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் என தெரிவித்த சட்டமா அதிபர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டிடத் தொகுதியை வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சட்டமா அதிபர், பழைய சட்டமா அதிபர் திணைக்கள கட்டிடத் தொகுதி தொல்பொருள் பழமையினை கொண்டுள்ளது. ஆகையால் அக்கட்டிடத் தொகுதியை புனரமைக்க அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொலை வழக்கு தொடர்பில் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் போது ஆரம்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான தன்மை காணப்படாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர் இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ச, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர, மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கனேஷ் தர்மவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

‘சட்டத்தைகூட மதிக்காமல் அரசியல் வாதிக்காக பொலிஸார் செய்த செயல்’

” குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிச்செயற்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் உள்ளது. அச்சட்டத்தைமீறும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களை கைது செய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது. நேற்றைய தினம்கூட தனிமைப்படுத்தல் விதிமுறைகளைமீறிய 755 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மரண சடங்குகள்கூட கடும் கட்டுப்பாட்டுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவேண்டும். இதற்கான சுகாதார வழிகாட்டல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் வரவேண்டும், நாடும் மக்களும் தொற்று அபாயத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக குருணாகல் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பிரித் ஓதும்’ ஆன்மீக வழிபாட்டு நிகழ்வு பொலிஸ் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நேற்றைய தினமும் ஆன்மீக நிகழ்வு நடைபெற்றது. இதில் குருணாகல் மாநகர மேயர் துஷார சஞ்சீவ விதாரணவும் பங்கேற்றார். நேற்று மேயரின் பிறந்தநாள் என்பதால், பொலிஸாரால் ‘கேக்’ வெட்டுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. சுகாதார விதிமுறைகளைமீறியே ‘கேக்’ வெட்டப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் கடும் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. சட்டத்தை சரிவர அமுல்படுத்த வேண்டிய தரப்பே, சட்டத்தைமீறும் வகையில் செயற்படுவதை அனுமதிக்கலாமா என்ற தொனியிலும் கருத்தாடல் இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ஹோரன இச்சம்பவம் தொடர்பில் இன்று நடைபெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடலொன்றின்போது கருத்து வெளியிடுகையில்,

” இத்தகைய நடவடிக்கையை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கொண்டாட்டம் குறித்த காணொளியும் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடினேன்.

விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னர் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரால் இப்படியான நிகழ்வை (பிறந்தநாள்) ஏற்பாடு செய்யமுடியாது.” – என்றார்.

ரணகளத்திலும் கிளுகிளுப்பு – சிக்கினர் இருவர்

அழகுக்கலை நிபுணரான சந்திக ஜயசிங்கவும், நடிகை பியூமி ஹன்சமாலியும் கொழும்பு, கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் பிறந்தநாள் நிகழ்வை நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளது. அனைத்துவிதமான களியாட்ட நிகழ்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைதூக்கும் டெங்கு – விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

2021 ஜனவரி முதல் மே மாதம் 30 ஆம் திகதிவரை நாட்டில் 7 ஆயிரத்து 674 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் 766 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் எதிர்காலத்தில் டெங்கு நோய் வேகமாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, பொதுமுடக்கம் அமுலில் உள்ள இக்காலப்பகுதியில் வீட்டையும், வீட்டு சுழலையும் டெங்கு நோய் பரவாத விதத்தில் சுத்தமாக வைத்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கர்ப்பிணி பெண்கள், ஒரு வயதுக்கும் குறைந்த குழந்தைகள், நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டெங்கு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடன் வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கில் 6 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை

வடக்கு மாகாணத்தில் 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை 6 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். மாவட்டத்தில் 3 ஆயிரத்து 305 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 997 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 888 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் 812 பேரும், மன்னார் மாவட்டத்தில் 575 பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆபத்தை அறிந்தும் உள்நுழைந்ததா கப்பல்’ – பலகோணங்களில் விசாரணை

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பில் கப்பலின் கெப்டன் , தலைமை பொறியிலாளர் ஆகியோரிடம் இன்று (31) வாக்குமூலம் பதிவுசெய்யப்படவுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்தே இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக 10 அதிகாரிகள் கொண்ட சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கப்பல் தீபிடிப்புக்கான காரணம், ஏனைய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்பது உட்பட அனைத்து விவரங்களையும் இக்குழு திரட்டவுள்ளது.

21/4 தாக்குதல் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

21/4 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் சட்டமா அதிபரால் வழக்கு தொடுக்கக்கூடியதாக இருக்கும் – என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தேக்கமடைந்துள்ளனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவிதத்திலும் ஸ்தம்பிதமடையவில்லை. அத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல்செய்யக்கூடியதாக இருக்கும்.

அமெரிக்காவின் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சூத்திரதாரிக்கு எதிராக 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழக்கு தொடுக்கப்படவில்லை. லக்‌ஷ்மன் படுகொலையுடன் தொடர்புபட்டவருக்கு வழக்கு தொடுப்பதற்கு மூன்று ஆண்டுகள் சென்றன.

21/4 தாக்குதல் நடைபெற்று ஈராண்டுளே கடந்துள்ளன. எனினும், இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைபாடுகளில் 75 வீததத்தை நிவர்த்தி செய்து அனுப்பியுள்ளோம். இது விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் பணியாற்றுவதற்காக சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியைச் சேர்ந்த 54 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.” – என்றார்.

கொவிஷீல்ட் கிடைக்குமா? 579,453 பேர் காத்திருப்பு!

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை 16 லட்சத்து 8 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 789 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 5 லட்சத்து 79 ஆயிரத்து 453 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றவேண்டியுள்ளது.

2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 6 லட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.

ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. மே 30 வரை 16 ஆயிரத்து 664 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.

மலையகத்தின் நுழைவாயிலும் முடக்கம்

கேகாலை மாவட்டம், எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட எட்டியாந்தோட்டை கிராம சேவகர் பிரிவு, கரா கோட்டை கிராம சேவகர் பிரிவு ஆகியன இன்று (29.05.2021) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று எட்டியாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேற்படி பகுதியில் கடந்த 26 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்தே இரு கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பலரிடமும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

மலையகத்தின் நுழைவாயிலாக எட்டியாந்தோட்ட பகுதியே காணப்படுகின்றது.

க.கிசாந்தன்

இரு வாரங்களுக்கு பின்னர் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்

” பயணக்கட்டுப்பாட்டு விதிமுறை மற்றும் சுகாதார நடைமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றினால் இன்னும் இரு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடும்.” – என்று அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.

” கடுமையான பயணக்கட்டுப்பாடுகள்மூலம் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியும் என்பதை அவதானித்துள்ளோம்.இதன்பிரகாரம் இன்னும் 10 நாட்களில், நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே, பயணக்கப்பட்டுப்பாட்டு நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு பின்பற்றினால் இன்னும் இரு வாரங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படும்.” – என்றும் வைத்தியர் கூறினார்.

புத்தாண்டு கொத்தணியால் பலியானவர்களின் எண்ணிக்கை….

கொரோனா வைரஸ் தொற்றால் 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்று வரை 751 பேர் உயிரிழந்துள்ளனர் – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

434 ஆண்களும், 317 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதலாவது அலையில் 13 பேர் மட்டுமே பலியாகினர். எனினும், 2ஆம் மற்றும் 3ஆம் அலைகளிலேயே அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கிளிநொச்சியில் திடீரென அதிகரித்த தொற்றாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 94 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 84 பேருக்கும், முழங்காவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், தர்மபுரம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜுன் 07 இற்கு பிறகும் நாடு முடக்கப்படுமா?

ஜுன் 07 ஆம் திகதிக்கு பின்னரும் பயணத்தடையை நீடிப்பது குறித்து உரிய மீளாய்வின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரும் பயணக்கட்டுப்பாடுகள் தொடருமான என்பது குறித்து இன்னும் எவுதும் அறிவிக்கப்படவில்லை.

இது தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. கடுமையான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளின் விளைவாகவே இந்த பெறுபேறு கிடைத்துள்ளது. தற்போது தொடர் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பெறுபேறுகளை 14 நாட்களுக்கு பின்னரே அறியக்கூடியதாக இருக்கும். அதற்காக நாம் தற்போது சும்மா இருக்கவில்லை. நிலைமை நாளாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய நிலை, அடுத்து சில நாட்களில் ஏற்படும் நிலை, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் வீதம், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்த பிறகே, 07 ஆம் திகதிக்கு பின்னரான காலம் குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.” – என்றார்.

ஊழல்களை அம்பலப்படுத்திய ஊடகருக்கு கிளிநெர்சசியில் நடந்த சம்பவம் இதோ…

கிளிநொச்சியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்றுநோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்களை கணக்காய்வு அறிக்கையினை அடிப்படையாக கொண்டு வெளிப்படுத்திய கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது கிளிநொச்சி பொலிஸ்
நிலையத்தில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந.சரவணபவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 23.05.2021 அன்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக, ஊடகவியலாளர் முருகையாக தமிழ்ச்செல்வன் இன்று பொலிஸ் நிலையத்திற்கு
அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

வடக்கு மாகாண தொற்று நோயியல் மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து கணக்காய்வு திணைக்களம் விசாரணை செய்து அறிக்கை சமர்பித்திருந்தது. இந்த
அறிக்கையின் பிரதியை தனது செய்தி மூலம் ஒன்றுக்கு ஊடாக பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர் அதனை அடிப்படையாக கொண்டு செய்தி அறிக்கையினை எழுதியிருந்தார்.

குறித்த செய்தி பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்திருந்தது. இதற்கு எதிராகவே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டு ஊடகவியலாளாரிடம் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை தவிர குறித்த ஊடகவியலாளர் இந்த ஊழல்கள் குறித்து தனது முகநூல்களில் பதிவுகளை இட்டிருந்தார் அதற்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டமை ஒரு முதிர்ச்சியற்ற தன்மை எனவும், கடந்த காலங்களிலும் ஊடகவியலாளர்களால் இவ்வாறு பல்வேறு ஊழல்கள் முறைகேடுகள் தொடர்பில்
செய்திகள் ஊடாக வெளிப்படுத்திய போது ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் எவரும் நடந்துகொள்ளவில்லை என்வும் ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன், ஊழல்களை வெளிப்படுத்துவர்களை அடக்க முற்படுவது அதிகாரிகளுக்குரிய செயற்பாடாக
இருக்காது என தெரிவித்துள்ள கிளிநொச்சி சமூக செயற்பாட்டாளர்கள், கிளிநொச்சியில் இது முதல் முறையாக இடம்பெற்ற புதிய அனுபவம் என்றும்
தெரிவித்துள்ளனர்.

‘சிங்கள அரசியல்வாதிகளிடம் மனோ விடுத்துள்ள அவசர கோரிக்கை’

” இந்த நாட்டில், சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம்.” என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

தனது டுவீடர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ எம்பி இதுபற்றி மேலும் கூரியுள்ளதாவது,

” உங்கள் நண்பர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கூட நீங்கள் பிரதமர் பதவியை தர மறுத்தீர்கள். ஜேவிபி மட்டுமே அவருக்கு பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

இலங்கை, இயற்கை வளமில்லாத வள-ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவ பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான “இல்லை”களின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.

இப்போது இந்நாடு, இலங்கை தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது என தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

இன்று இந்நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950 களில், இந்நாட்டின் வெளிநாட்டு செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்க கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கிறோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருந்தமைதான்.

தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிபைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா வியட்னாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டி பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாக கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவை பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972ல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்தி போகிறது. இது உங்களுக்கு தெரியுமா?

இன முரண்பாடுகள், யுத்தம், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டு செலவாணி பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகிறேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலி தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது.” – என்றார்.

பயணத்தடை குறித்து வெளியானது விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை மே 31 மற்றும் ஜுன் 4 ஆம் திகதிகளில் தளர்த்தப்படமாட்டாது – என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார்.

இதன்படி ஜுன் 7 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இக்காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை, அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விநியோகிப்பதற்கான நடமாடும் சேவை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பின்கீழ் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

‘தடுப்பூசி தகராறு’ – மொரட்டுவ நகரபிதா கைது!

மொரட்டுவ மேயர் சமன் லால் பெர்ணான்டோ, கல்கிசை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணியின்போது வைத்தியர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

தன்னால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் உள்ளவர்களுக்கே தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை மேயர் விடுத்திருந்தார்.

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 15,595 பேர் இதுவரை கைது’

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 829 பேர் கடந்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின்பேரில் நாளொன்றில் கைது செய்யப்பட்ட அதிகளவானவர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை அச்சட்டத்தைமீறும் வகையில் செயற்பட்ட 15 ஆயிரத்து 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘கொரோனா’ – இலங்கையில் பலி எண்ணிக்கை 1,325 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 27 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்றைய தினம் நால்வரும், மே 22 முதல் மே 26 ஆம் திகதிவரை 26 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

ஜேர்மன் நாடுகடத்தலின் பின்னணி என்ன? அதிர்ச்சியில் இறந்த தமிழ் இளைஞன்!!

மனித உரிமைகளைக் கடைப்பிடிக்க மறுக்கும் நாடுகளுக்கு எதிராக பொங்கியெழுந்து, தங்களை மனித உரிமைக் காவலர்களாக காட்டிக்கொள்ளும் அமெரிக்கா – ஐரோப்பா – ஆஸ்திரேலிய நாடுகள், தங்களது நாடுகளில் தஞ்சமடைந்துள்ள அகதிக்கோரிக்கையாளர்கள் மீது காட்டும் மனிதாபிமானம் என்ன சீத்துவத்திலிருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை.
கொரோனாவின் கோரப்பிடிக்குள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜேர்மனிய தேசம், அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்களை பிடித்து, அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அண்மையில் இறங்கியிருந்தது. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 26 பேர் ஈழத்தமிழர்கள். கணவன் – மனைவி, தாய் – பிள்ளை என குடும்பங்கள் பிரித்து நாடு கடத்தப்பட்டவர்களும் இவர்களில் அடக்கம்.
அகதிகளைப் பிடித்து அனுப்பும் செயற்பாட்டில் ஜேர்மன் இறங்கிவிட்ட நிலையில், அங்குள்ள அகதிக்கோரிக்கையளர்கள் பலரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆள்பிடியில் சிக்கிவிடக்கூடாது என, தனது அறையை விட்டு வெளியே வராது உள்ளேயே முடங்கியிருந்த ஈழ அகதிக்கோரிக்கையாளர் ஒருவர் சடலமாக மீட்டப்பட்ட சம்பவமும் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கண்ணதிட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கொத்தாக அகதிகளை நாடுகடத்தும் இந்தச் செயற்பாட்டை உடனடியாக நிறுத்தக்கோரி, ஜேர்மனியில் தமிழர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். ஆனால், அகதிகளுக்கான போராட்டங்கள் வெற்றி கண்ட வரலாறுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன.
இவ்வாறு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் கொரோனா தனிமைப்படுத்தலின் பின்னர் விடுவிக்கப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டபோதிலும், அவர்களுக்கான விசாரணைகளை சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர் என்று தெரியவருகிறது.
ஜேர்மன் அகதிகள் விசாவும் நிராகரிப்பும்
ஆஸ்திரேலியாவுக்குள் அகதிகளாக வருவோர் கடல் மார்க்கத்தினைப் பிரதானமாக கொண்டுள்ளனர். ஆனால், அகதிகளை அங்கிகரிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வோர், பல ஆபத்தான வழிகளை நாடுகின்றனர். கருங்கடல் படகு பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்கள் போன்ற வழிகளை ஆட்கடத்துவோரை நம்பிப்போகிறார்கள். நீண்டதூர பயணங்களின்போது வனங்களையும் சதுப்பு நிலங்கள் மற்றும் அகழிகளையும் உறைபனி மலைகளையும் கடந்து செல்லவேண்டிய நிலையிலுள்ளனர்.
இவ்வாறான நடை பயணங்களில்போது சகதிக்குள் சிக்குண்டது மட்டுமின்றி, நடக்க முடியாதவர்களை இடைவெளியே விட்டுச்சென்ற சம்பவங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். இவர்களிர் பல ஈழத்தமிழர்களும் அடங்குவர்.
இப்பேற்பட்ட பயணங்களின் ஊடாகச் சென்று, தங்களை அகதி என நிரூபிக்கத்தவறி, மீண்டும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுதல் என்பது எவ்வளவு கொடுமை என்பது இதனை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்.
அகதியாக அங்கீகரித்தல்- நாடுகடத்தும் முறை
ஜேர்மன் நாட்டுக்குள் விமான நிலையத்தின் ஊடாக உள்நுழைபவர்கள், விமான நிலைய குடிவரவு திணைக்களத்தின் ஊடாகவும், எல்லை நாடுகள் ஊடாக ஜேர்மனிக்குள் பிரவேசிப்பவர்கள் அந்தந்த பிராந்தியங்களில் அமைந்துள்ள அகதிக்கோரிக்கைக்கான பிரதான அலுவலகங்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்த பின்னர், அவர்களை அகதிகளுக்கான முகாமுக்கு அனுப்புவர். அப்போதிருந்து, அந்த அலுவலகம் ஒவ்வொரு ஆறுமாத காலத்துக்கான விசாவை வழங்கும். இந்த முகாம்கள் அடைக்கப்பட்டவை இல்லை. அகதிகள் வெளியே செல்ல முடியும்.
ஆனால், அவர்கள் அந்த முகாம்களிலேயே 18 மாதங்கள் தங்கியிருக்கவேண்டும். இது கட்டாயம். முகாம்களில் இருக்கும்போதே அகதிக்கான முதற்கட்ட விசாரணைகள் நடைபெறும். இந்த முதற்கட்ட விசாரணை முடிவுற்ற பின்னர் – அதற்கான பதில் வருவதற்கு முன்னர் – குறித்த அகதிகளை ஒவ்வொரு நகரப்பகுதியில் அமைந்துள்ள முகாம்களுக்கு மாற்றம் செய்யப்படுவர். இதன்போது அவர்கள் வேலை செய்ய முடியும், படிக்க முடியும். ஆனால், அவர்கள் அந்த முகாம்களிலேயே காலம் தள்ளவேண்டும்.
முதற்கட்ட விசாரணையில், அகதியாக அங்கிகரிக்கப்படத் தவறும் பட்சத்தில், அவர் நீதிமன்றம் செல்ல வேண்டும். அந்த நீதிமன்ற நடவடிக்கைக்கான தனக்குரிய சட்டத்தரணிகளை குறித்த அகதிகளே ஒழுங்கு செய்ய வேண்டும். நீதிமன்றமும் அகதியென ஏற்றுக்கொள்ளத்தவறும் பட்சத்தில் உயர் நீதிமன்றம் செல்லவேண்டும்.
உயர் நீதிமன்றில்தான் ஒரு சிக்கல் உள்ளது, எவ்வளவு ஆதாரங்களை திரட்டிக்கொடுத்தாலும் உயர் நீதிமன்றம் நேரடியாக அகதிகளை அழைத்து விளக்கம் கோராது. குறிப்பிட்ட அகதி, ஏற்கனவே வழங்கிய ஆதாரங்கள் மற்றும் அகதிக்கோரிக்கை, பிரதான அலுவலகத்தால் வழங்கப்பட்ட மற்றும் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டுதான் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும்.
உயர் நீதிமன்றமும் பாதகமாக மாறும் பட்சத்தில் ஆறுமாதகாலத்துக்கு ஒருதடவை வழங்கப்படும் விசா மூன்று மாதங்களாக குறைக்கபட்டு, சிவப்பு நிற கோடிடப்பட்ட விசாவாக வழங்கப்படும்.
ஆனால், இத்துடன் அகதிக்கோரிக்கைக்கான வாய்ப்பு முடிந்துவிடுவதில்லை. எல்லாவித நடைமுறையிலும் தோற்றுப்போன அகதிகோரிக்கையாளர், மீண்டும் – அதாவது இரண்டாவது தடைவையாகவும் – அகதிக்கோரிக்கை விண்ணப்பத்தை விண்ணப்பிக்க முடியும். இருந்தாலும், குறித்த அகதியிடம் சிவப்பு கோடிட்ட விசாவே நடைமுறையில் இருக்கும்.
சிவப்பு நிற கோடிடப்பட்ட விசாவைக் கையளிக்கும்போதே, குறித்த விசாவை வைத்திருப்போரை நாடுகடத்தும் செயற்பாட்டினைக் கையாளும் திணைக்களத்துக்கும் தகவல் பறந்துவிடும். குறிப்பிட்ட நபர் எப்போது வேண்டுமானலும் நாடுகடத்தப்படலாம் என்பதை அந்த “சிவப்பு கோடு” அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கும்.
இதுதான் நாடு கடத்தபடுவதில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறையின் ஊடாக வந்தவர்களில் 26 பேரே அண்மையில் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
மேற்குறித்த விசாரணைகளில், ஏதாவது ஒரு படிமுறையின்போது அகதியாக அங்கிகரிக்கப்பட்டாலும் அவருக்கு “பிரயாண ஆவணம்” (Travel Document) ஒன்றில் மூன்று வருடங்களுக்கான விசா வழங்கப்பட்டு சுதந்திர மனிதாக கருதப்படுவார்.
இப்போது – கொரோனா கட்டுப்பாடுகளின் மத்தியில் – அவசர அவசரமாக – அகதிகளை நாடுகடத்தவேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
அகதிகளை அங்கிகரிக்கும் தேசங்களெல்லாம் வாக்கு அரசியலுக்காக அகதி எதிர்ப்பு அரசியலைக் கையில் வைத்துக்கொண்டு “அகதிகளாலேயே எமது தேசம் முடங்கபோகிறது” – என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து, வாக்குச் சேர்க்கும் முறை ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா முதல் ஐரோப்பாவரை நடைமுறையில் உள்ளது.
ஜேர்மன் நாடு எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி தனது அடுத்த தேர்தலை சந்திக்கவுள்ளது. ஜேர்மனியின் கிறிஸ்தவ கட்சி தொடர்ந்து பல தேர்தல்களில் வென்று அதிபர் மெல்கலின் தலைமையில் ஆண்டு வருகின்றது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு அதிபர் மெல்கலின் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சிரிய அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்திருந்தார் என்று, இதன் விளைவாக எழுந்த எதிர்ப்புகளை, அகதிகளுக்கு எதிரான கொள்கையாக உருமாற்றி, “ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சி” (Alternative for German) 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தன்னை எதிர்கட்சியாக நிலை நிறுத்திக்கொண்டது.
தீவிர வலதுசாரிக்கட்சியான “ஜேர்மனிக்கான மாற்றீட்டுக் கட்சி” எதிர்வரும் செப்ரம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தல் வாக்குறுதிகளில், அகதிகள் மீதான வன்மத்தைக் கொட்டியுள்ளது. அந்த வகையில், “அகதிகள் குடும்பத்தை சேர்க்க தடை விதிப்போம்” – என்ற அஸ்திரத்தை தூக்கியுள்ளது.
இந்தப்பின்னணியில்தான், ஜேர்மனியின் தற்போதைய ஆளும் மெல்கலின் அரசு நூற்றுக்கும் அதிகமான அகதிகளை பிடித்து நாடு கடத்தத் தொடங்கியுள்ளது.
இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில், குடும்பத்தை பிரித்து அனுப்பபட்டவரின் மனைவி ஒருவர், தனது கணவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்துக் கூறும்போது –
“எனது கணவருக்கு விசா புதுப்பிப்பதற்கு வருமாறு அழைப்பு வந்தது. சகல ஆவணங்களையும் கொண்டுவருமாறு அதிகாரிகள் கூறியிருந்தார்கள். கூப்பிட்டபடி எனது கணவர் காலையிலேயே சென்றார். அந்த அலுவலகத்துக்குள் காத்திருந்த பொலிஸார் திருடர்களை பிடிப்பதைப்போல, எனது கணவரைக் கைதுசெய்தனர். அதன்பின்னர், எனக்குத் தெரியப்படுத்தவே இல்லை. கணவருக்கு தொலைபேசி எடுத்தேன். தொடர்புகொள்ள முடியவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டு இறுதியில், நாடுகடத்தப்படுவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னர்தான் இணைப்பை ஏற்படுத்த முடிந்தது.
“அவரை இறுதியாக எனது மகனுடன் பேச அனுமதிக்குமாறு கோரினேன். அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.
“தற்போது நாட்டில் உள்ளார்.
“நானும் எனது பிள்ளைகளும் இங்கு. எமது குடும்பம் இரண்டாக பிளவுபட்டிருக்கின்றது. இனி எப்போது சேர முடியும் என்ற கேள்வி மட்டுமே என்னிடம் எஞ்சியுள்ளது”
இவ்வாறு  தெரிவித்த நாடுகடத்தபட்ட குடும்பஸ்தரின் மனைவி, இந்தக் கைதை நாம் ஏற்கனவே இலங்கையில் அனுபவித்திருக்கின்றோம் என்றும் கூறினார்.

ஜேர்மனிலிருந்து நாடுகடத்த இருந்த நிலையில், அவரது அறையிலேயே உயிரிழந்த பிரபாகரன் என்ற அகதியின் – இலங்கையில் இருக்கும் – தாயாருடனும் ஜேர்மனில் உள்ள அவரது நண்பர்களிடமும் பேசியபோது கிடைக்கப்பெற்ற தகவல்கள் வருமாறு –
“தம்பி….அவன் நாடு கடத்தப்போறாங்கள் என்று பயந்திட்டான் போல” – என்று தளுதளுத்த குரலில்  பேச ஆரம்பித்தார் பிரபாகரனின் தாயார். 
“பிரபா 2018 ஆம் ஆண்டு நாட்டை விட்டு சென்றார். கடன்பட்டு அனுப்பிவச்சன். இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றுதான் அவனை அங்கு அனுப்பி வச்சன். அவனுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என நினைக்கவில்லை” – என வயோதிபமும் புத்திரனின் இழப்பும் குழைந்த குரலில் பிரபாவின் தாயார் விவரித்தார்.
“நான் ஒரு நோயாளி. எனக்கான மருத்துவ செலவு மட்டுமல்ல, வாழ்வாதர செலவுக்கும் அவன்தான் பணம் அனுப்புவான். அண்மைக்காலமாக அவனின் விசாவில் ஏதோ பிரச்சினை. வேலைக்கும் போறதில்லை. அது தொடர்பாகதான் அடிக்கடி கதைப்பான். ஆனால், அவனின் உயிரையே பறிக்குமளவுக்கு பிரச்சினை இருக்கும் எண்டு எங்களுக்கு தெரியாது” – என கூறியபடியே கதறி அழுதார்.
அதற்குப்பிறகு அவரால் பேசமுடியவில்லை. இலங்கையிலிருந்துகொண்டு தன்மகன் எப்படி இறந்திருப்பான் என்பதுகூட தெரியாது கதறியழும் தாயரின் குரலுக்கு யாரிடமும் பதில் இல்லை.
பிரபாவின் கடைசி நாட்கள் தொடர்பில் ஜேர்மனில் அவருடன் வசித்த நண்பர்களிடம் தொடர்பு கொண்டு வினவினோம்.
“நாங்கள் அனைவரும் 2018 ஆம் ஆண்டிலிருந்தே நண்பர்கள். நாடு கடத்தப்பட்டவர்களைப் போன்ற விசாவே பிரபாவிடமும் இருந்தது. அதனால் எங்களுடன் பேசும் போதெல்லாம் எப்போது நாடுகடத்துவார்களோ தெரியாது, தப்பித்து வேறுநாட்டுக்கு செல்லும் வழியை தேடவேண்டும் என்பதே பிரபாவின் பேச்சாக இருக்கும்.
“இங்கிருந்து சிலர் நாடு கடத்தப்பட்ட தகவலை அறிந்த நாள்முதல் – பல இடங்களில் – மறைந்தே இருந்தார். கடந்த எட்டாம் திகதி வியாக்கிழமை இறுதியாக கதைத்தார். ஆனால், எங்கிருக்கிறார் என்று சொல்வதில்லை. நாமும் கேட்பதில்லை. ஏனெனில், அது அவருக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதால். அதன்பின்னர் – அடுத்தநாட்கள் வெள்ளி, சனி போன்ற நாட்களிலும் – வழக்கம்போல தொடர்பெடுத்தோம். அவர் எடுக்கவில்லை. சக நண்பர்களிடமும் விசாரித்தோம். அவர்களும் தொடர்பு கொள்ளவில்லை என்றே சொன்னார்கள். 
“ஆக, அவரை நாடுகடத்திவிட்டார்கள் என்றே நினைத்தோம். 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு தொடர்பு கொண்டு, அவரைக் காணவில்லை என அறிவித்தோம். பின்னர், அவர் இருந்த அறைக்கு சென்ற பொலிஸார், அவரை சடலமாக கண்டதாக எமக்கு அறிவித்தார்கள். அவர் எட்டாம் திகதி வியாழக்கிழமை இரவே உயிரிழந்திருக்கவேண்டும். ஏனெனில், சடலம் மீட்கப்படும்போது அவ்வாறே காணப்பட்டது. 
“நாம் பார்த்து – பேசி – நித்தமும் பழகிய பிரபா உருகுலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது எமக்கு மரண வேதனையாக இருந்தது. ஊயிரைக் காக்க வந்தவனின் உயிர், இன்று பிறந்துவிட்டது. நண்பர்கள் இருந்தும் அவன் அநாதையாகவே இறந்துபோனான். அவனின் சடலத்தை மீட்க எமக்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டன. அவனுடைய சடலத்தை நாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறோம்” – என்ற வலியோடு உரையாற்றி முடித்துகொண்டனர் அவரது நண்பர்கள்.