‘அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் ஆட்டம் தொடர்கிறது’

மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியே இப்போராட்டம் இடம்பெற்றது.

” கொரோனாப்பிரச்சினை, பயணக்கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்களால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரத்தில் இருந்து விழுந்தனை மாடுமுட்டுவதுபோல எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மென்மேலும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படவேண்டும்.

அதேபோல எவ்வித மாற்று ஏற்பாடுகளும் இன்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விளைச்சல்களும் அழிவடைந்துவருகின்றன. எனவே, உரத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.” – என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

ஜே.வி.பியன் செயற்பாட்டாளர்களும், மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

‘நாட்டு வளங்களைக் காக்க தமிழர்களும் அணிதிரள வேண்டும்’

வடக்கிலுள்ள வளங்களும் தற்போது விற்கப்பட்டுவருகின்றன. எனவே, இவற்றை தடுத்து நாட்டை மீட்பதற்கான சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்களும் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – என்று அழைப்பு விடுத்துள்ளார் தேசத்தை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராகவும், அதனை தடுத்து நிறுத்தும் நோக்கிலும் தற்போதைய அரசுக்கு எதிராக இவ்வாரம் நீதிமன்றத்தை நாடுவதற்கும் தேரர் உத்தேசித்துள்ளார்.இதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே நாட்டு வளங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற அறைகூவலை அவர் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தேரர் மேலும் கூறியவை வருமாறு,

“காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்கு இன, மத , மொழி பேதங்களுக்கு அப்பால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் அன்று ஒன்றிணைந்து போராடினார்கள். டி.பி. ஜாயா, சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், டி.எஸ். சேனாநாயக்க ஆகியோர் இணைந்து போராடினர்.நாட்டு மக்களும் இனங்களைச் சேர்ந்த மக்களும் ஓரணியில் திரண்டு செயற்பட்டனர்.

தற்போது எமது நாட்டுக்கு மீண்டுமொருமுறை சுதந்திரம்பெற்றுக்கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்கள் ஒன்றுபடவேண்டும். நாட்டு வளங்கள் தொடர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டால் அவற்றை தடுத்து நிறுத்து, நாட்டை மீட்பதற்கான 2ஆம் சுதந்திர போராட்டத்தை மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதற்கு தமிழ் மக்களின் முழுமையான ஒத்துழைப்பும் அவசியம்.

யாழ்ப்பாணம் உட்பட வடக்கிலுள்ள வளங்களும் இன்று விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. எனவே, எமது நாட்டு வளங்களை பாதுகாப்பதற்கு இலங்கை தாயின் பிள்ளைகளாக தமிழ் இளைஞர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பை விடுக்கின்றேன்.” – என்றார்.

‘மொரிஷை வரவேற்று தோசை வாங்கிக்கொடுப்பேன்’

” இனியும் வைராக்கியத்துடன் வாழவேண்டியதில்லை. எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அதற்கான நடவடிக்கையை என்னை கொலை செய்வதற்காக தற்கொலை குண்டுதாரியை இராணுவ தலைமையகத்துக்கு அழைத்துவந்த மொரிஷ் என்பவரிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிப்பது தவறான செயல் கிடையாது. இளைஞர் காலத்தில் கைதான பலர் நீண்டகாலம் சிறைச்சாலைகளுக்குள் இருந்துவிட்டனர். இளமைக்காலம் தொலைந்துவிட்டது. வெளியில் இருந்திருந்தால் திருமணமாகி அவர்களுக்கு பிள்ளைகளும் இருந்திருக்ககூடும். குறிப்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குகூட 15 வருடங்களில் விடுதலை கிடைக்ககூடும். எனவே, இனியும் வைராக்கியத்துடன் வாழவேண்டியதில்லை. அவர்களை விடுதலை செய்யப்படவேண்டும். புனர்வாழ்வு தேவைப்படுவோருக்கு குறுகிய கால புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கலாம்.

என்னை கொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியை இராணுவ தலைமையகத்துக்கு அழைத்து வந்த மொரிஷ் என்பவரை விடுவித்து இதற்கான செயலை அரசு ஆரம்பிக்க வேண்டும். மொரிஷ் விடுவிக்கப்பட்டால் வெலிக்கடை சிறைக்கே சென்று அவரை வரவேற்று, ஆனந்த பவனில் தோசையும் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவைப்பேன்.

விடுவிக்கப்படுபவர்களின் பாதுகாப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.” – என்றார்.

இலங்கையில் பலி எண்ணிக்கை 3000 தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.

241 ஆண்களும், 24 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது.

துமிந்தவின் அடுத்தகட்ட நகர்வு – கசிந்தது தகவல்

ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, குறுகியதொரு ஓய்வு காலத்தின் பின்னர் மீண்டும் செயற்பாட்டு அரசியல் நடவடிக்கையில் இறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் சிறைக்குச்சென்று சுமார் நான்கரை வருடங்களுக்குள் ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் கடந்த 24 ஆம் திகதி விடுதலையானார்.

தற்போது அவர் சுயதனிமையில் இருக்கின்றார். தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பிறகும் அவர் சிறிது காலம் ஓய்வில் இருப்பார் எனவும், அதன்பின்னரே அரசியலில் இறங்குவார் எனவும் தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊடாகவே, சிறைக்குச்செல்ல முன்னர் துமிந்த சில்வா அரசியல் செயற்பாட்டில் பங்கேற்றிருந்தார். தற்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளது. எனவே, மொட்டு கட்சி ஊடாகவே அவரின் அரசியல் செயற்பாடு இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெறும் பட்சத்தில் முக்கிய பதவியில் துமிந்த சில்வா போட்டியிடக்கூடும் எனவும் சில சிங்கள இணையத்தங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கம்மன்பிலவின் தலை தப்புமா? பதுங்கும் பஸில் அணி!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஓரணியில் திரள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ் கட்சி, சமசமாஜக்கட்சி, தேசிய காங்கிரஸ் ஆகியன அமைச்சர் கம்பன்பிலவுக்கு ஏற்கனவே நேசக்கரம் நீட்டியுள்ள நிலையில், தற்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க அக்கட்சியின் உயர்மட்டகுழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் ஆளுங்கட்சியின் உயர்மட்ட பிரமுகர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர். பஸில் ஆதரவு அணி உறுப்பினர்களின் நிலைப்பாடு இன்னும் வெளியாகவில்லை.

அதேவேளை, எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை அரசு மீளப்பெற்றால், நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி வாபஸ் பெறும் என அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பை மீளப்பெறுதல் அல்லது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதல் ஆகியவற்றை இலக்காக வைத்தே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமது கட்சி கொண்டுவந்தது. எனவே, இது நடந்தால் பிரேரணையை மீளப்பெறுவதில் சிக்கல் இல்லை என அக்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை உயர்வு திட்டம் மீளப்பெறப்படாதபட்சத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை வருவது உறுதி எனவும் அவர் கூறினார்.

ஐந்தாண்டு திட்டம் இல்லையேல் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

” உரியமாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உரப்பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரசாயன உரம் மற்றும் மருந்துகளுக்கே எமது நாட்டிலுள்ள விளைச்சல் நிலம் பல தசாப்தங்களாக பழக்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்துவதால்தான் சிறந்த விளைச்சல் கிடைக்கும் என்ற நிலை காணப்படுகின்றது. குறிப்பாக தேயிலை உற்பத்திக்கு ஆரம்பம் முதலே இரசாயன உரமும், மருந்தும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அத்துறையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமானால் இரசாயன உரம் அவசியமென உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் அடுத்தாண்டில் தேயிலை உற்பத்தி 50 சதவீதத்தால் குறைவடையும் எனவும் குறிப்பிடுகின்றனர்.

சேதனப் பசளைமூலம் விவசாய நடவடிக்கையை மேற்கொள்வது தவறென நாம் குறிப்பிடவில்லை. ஆனால் இதற்காக கால அட்டவணையொன்று வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஐந்து அல்லது பந்தாண்டு திட்டம் வகுக்கப்பட்டு மெல்லெனவே நகரவேண்டும். அப்போதுதான் மண்ணும் பழக்கப்படும். விவசாயிகளுக்கும் போதிய அனுபவத்தை பெறக்கூடியதாக இருக்கும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு வருடாந்தம் 20 வீதமென பயணித்தால் உரிய இலக்கை அடையலாம்.

இரசாயன உர இறக்குமதிக்கான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக பணம் செலுத்தப்படுவதை தடுப்பதும் உர தடைக்கான காரணங்களுள் ஒன்றாகும். ஆனால் இலங்கையில் போதுமானளவு சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படுகின்றதா? இல்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கே திட்டமிட்டுள்ளனர். இது தவறான செயலாகும்.

போதுமானளவு சேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்கான பொறிமுறை இல்லாமல் இரசாயன உர பயன்பாட்டையும் தடை செய்வதன்மூலம் உற்பத்தி வீழ்ச்சியடையும். நெல் உற்பத்தியும் பாதிக்கப்படும். இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.” – என்றார்.

‘ஹிருணிக்காவின் குடும்பத்துக்கு ஆபத்து’

ஹிருணிக்கா பிரேமசந்திர மற்றும் அவரின் தயாருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

” துமிந்த சில்வா ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் வெளியில் வந்துள்ளார். இது தொடர்பில் எனக்கு பிரச்சினை கிடையாது. ஆனால் நீதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. நீதி உரிய வகையில் செயற்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஹிருணிக்காவின் உயிர் பாதுகாப்புக்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கவேண்டும். தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும்.” – என்றும் பொன்சேகா வலியுறுத்தினார்.

‘வேலைக்காக வெளிநாடு சென்றோரின் உயிரை பறித்த கொரோனா’

வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களில் 142 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர்களில் 4 ஆயிரத்து 800 இற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியதாகவும் அவர்களில் 4 ஆயிரத்து 600 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் ​பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 16 நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றவர்கள் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் ​பேச்சாளர் மங்கல ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் பாதம் வைக்க பஸில் மறுப்பா?

” பாராளுமன்றம் வருமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல தரப்பினரும் பஸில் ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அக்கோரிக்கையை அவர் நிராகரிக்கவில்லை. எனவே, சாதகமான அறிவிப்பை விரைவில் விடுப்பார்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை தொடர்பில் இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பஸில் ராஜபக்ச அரசியல் ரீதியாகவும் பலம்பொருந்திய நபர். பழமையான ஐந்து கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு மொட்டு கட்சியை முதலிடத்துக்கு கொண்டுவந்தார். குறுகிய காலப்பகுதியில் ஆட்சியை பிடித்ததுடன், எமது கட்சியிலிருந்து ஜனாதிபதியும் உருவாகினார். எனவே, அவ்வாறானதொரு நபர் பாராளுமன்றம் வருவதற்கு பிரத்தியேக பிரச்சாரம் தேவையில்லை. அவர் நிச்சயம் வரவேண்டும்.” – என்றார்.

கொரோனா நோயாளர்களை குறிவைத்த நாயால் பரபரப்பு

கொரோனா சிகிச்சை நிலையத்துக்குள் திடீரென நுழைந்த விசர் நாயொன்று அங்கு சிகிச்சைப்பெற்றவர்களில் மூன்று பெண்களை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று மொறவக்க, கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சைப்பிரிவில் வெளிநாடுகளில் இருந்து வந்த 18 பெண்கள் உட்பட 38 பேர் சம்பவத்தின்போது இருந்துள்ளனர்.

விசர் நாய் திடீரென உள்ளே புகுந்து, கடிக்க ஆரம்பித்த பின்னர் சிகிச்சை நிலையத்துக்குள் இருந்தவர்கள் கட்டில்மீது ஏறியுள்ளனர். அத்துடன், கூச்சலிட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடும் சிரமத்துக்கு மத்தியில் வைத்தியசாலை ஊழியர்களை நாயை விரட்டியடித்துள்ளனர். எனினும், வெளியே இருந்த சிலரால் நாய் அடித்துக்கொல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை வெளியானது

இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 26 லட்சத்து 5 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.

இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 72 ஆயிரத்து 899 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் ஜுன் 27 ஆம் திகதிவரை 15 லட்சத்து 65 ஆயிரத்து 521 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 5 லட்சத்து 13 ஆயிரத்து 195 பேர் பெற்றுள்ளனர்.

ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. ஜுன் 27 வரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 795 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரத்து 425 பேர் இரண்டாம் டோஸை பெற்றுள்ளனர்.

அதேவேளை, அடுத்துவரும் நாட்களிலும் இலங்கைக்கு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன. செப்டம்பர் மாதம் முடியும்வரை சுமார் 13 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் நேற்றும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது. இன்றும் தொடர்கின்றது.

பேஸ்புக் பதிவால் ஆணி அடித்து சித்திரவதை – கண்டியில் கொடூரம்

முகநூலில் கருத்து பதிவிட்ட இருவர் கடத்திச்செல்லப்பட்டு, காட்டுக்குள் வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கொடூரச் சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த 38 மற்றும் 44 வயதுடைய நபர்கள் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

இவர்களை கடத்திச்சென்று, சித்திரவதைக்கு உட்படுத்தியவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கண்டி பல்லேகல, பலகொல்ல பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நபரொருவரே இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படுகின்றார் எனவும், அவரால் நடத்திச்செல்லப்படும் ஆன்மீக நிலையத்துக்கு எதிராக முகநூலில் தகவல் வெளியிட்டனர் எனக் கருதப்படும் இருவரே இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

முதலில் இவ்விருவரையும் பிரதான சந்தேக நபர் வீட்டுக்கு அழைத்துச்சென்று, அதன் பின்னர் அம்பிட்டிய பகுதியிலுள்ள காட்டுக்குள் கடத்திச்சென்று சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர் எனவும், சிலுவையில் வைத்து ஆணி அடிப்பதுபோல், பலகையொன்றில் வைத்து அவர்களுக்கு ஆணி அடிக்கப்பட்டுள்ளது என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

ஆன்மீக நிலையத்தை நடத்தி சென்ற பிரதான சந்தேக நபரும், கடத்துவதற்கும், சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த 25 ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பில் பலகொல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

விவாதம் எப்போது? நாள் குறிக்க விசேட கூட்டம்

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் ஜுலை 1 அல்லது 2ஆம் திகதியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சித் தலைவர்களும், கட்சிகளின் சிறப்பு பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

ஜுலை மாதத்துக்கான முதல்வார நாடாளுமன்ற அமர்வு ஜுலை 06 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அவ்வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கயைில்லாப் பிரேரணையை அவசர விடயமா கருதி, விவாதத்துக்கு உட்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், விவாத திகதி தொடர்பில் மேற்படி கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்படும்.

அதேவேளை, அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருட்களின் விலை மீள குறைக்கப்படுமானால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மீளப்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது என அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய், தந்தை, மகனின் உயிரை பறித்த கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

72 வயதுடைய தந்தையும், 70 வயதுடைய தாயும், 38 வயதுடைய மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

கொரோனா தொற்றிய இவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது. எவ்வாறு இவ்வாறு நடைபெற்றது, எந்த பக்கத்தில் தவறு உள்ளது, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவம் பதிவாவதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என சுகாதார தரப்பு தெரிவித்தது.

பஸிலுக்காக பதவி துறப்பவருக்கு காத்திருக்கும் அதிஷ்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக தேசிய பட்டியல் எம்.பி.பதவியை துறப்பவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

பஸிலுக்காக தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு மொட்டு கட்சியின் நான்கு உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர் எனவும், இதில் பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவே பெரும்பாலும் பதவி துறக்ககூடும் எனவும் தெரியவருகின்றது.

அவ்வாறு பதவி துறக்கும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கியின் ஆளுநர் பதவி அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கப்படக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜுலையில் அமைச்சரவை மாற்றம்

ஜுலை மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி முக்கிய சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், விடயதானங்களும் கைமாற்றப்படவுள்ளன என்று அறியமுடிகின்றது.

குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போதே நீதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு பதவி பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளது.

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் மாற்றப்படலாம் அல்லது அவர்கள் வகிக்கும் அமைச்சுகளில்கீழுள்ள சில அரச நிறுவனங்கள் ஏனையோருக்கு மாற்றப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.

அதேவேளை, அரச நிறுவனங்களின் பிரதானிகள் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் என தெரியவருகின்றது.

புதிய கொத்தணி – இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தாலும், புதிய கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இன்னும் குறையவே இல்லை – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தவந்த நிலையில் நேற்று 2 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு அடுத்துவரும் நாட்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையக்கூடும் என்ற முடிவுக்கு வந்துவிடமுடியாது.

புதிய கொத்தணிகள் உருவாவதற்கான அபாயம் முன்னர் இருந்ததுபோலவே தற்போதும் இருக்கின்றது. குறிப்பாக வர்த்தக நிலையம், பொதுபோக்குவரத்து ஊடாக தொற்று பரவக்கூடும். எனவே, தமக்கான சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்வதுடன், பொதுநலன் கருதியும் மக்கள் செயற்படவேண்டும்.

கொரோனா என்பது பொது எதிரி. அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைக்கு பெருந்தொகை செலவாகின்றது. போர் காலத்தில் செலவிடுவதுபோல் பெருந்தொகை இதற்காக செலவிடப்படுகின்றது. எனவே, கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” – என்றார்.

விபத்து – இரு இராணுவத்தினர் பலி! நால்வர் காயம்!!

மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள கறுத்தப்பாலத்தின் கீழே நீரோடையில் வீழ்ந்து இராணுவ ரக் வாகனமொன்று, இன்று விபத்துக்குள்ளானதில் இரு இராணுவத்தினர் பலியாகினர். அத்துடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை மீறிய நிலையிலேயே ரக் விபத்துக்குள்ளாகியுள்ளது. நீரோடையில் இருந்து இராணுவ ரக்கை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மற்றுமொரு கொள்கலன் கப்பலிலும் திடீர் தீ பரவல்

இலங்கை கடற்பரப்புக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மற்றுமொரு கொள்கலன் கப்பலிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எம்.எஸ்.ஸி. மெஸினா என்ற கப்பலிலேயே இயந்திர கோளாறு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

லிபேரியா நாட்டு கொடியுடன் சென்ற குறித்த கப்பல், இலங்கையை அண்மித்த இந்து சமுத்திரத்தில் இவ்வாறு திடீர் அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.

கிரிந்தை – மஹா இராவணன் கலங்கரைவிளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால் கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் தீப்பற்றி உள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.