விமலின் அமைச்சு இழுத்து மூடப்பட்டது

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச வகிக்கும் கைத்தொழில் அமைச்சு அமைந்துள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டிடம் உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.

ஆளுநர் பதவிகளில் மாற்றம்

ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அரச உயர்மட்டம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதமளவில் இம்மாற்றம் ஏற்படும் எனவும், சில ஆளுநர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆளுநர் பதவியொன்றை அரச உயர்பீடத்திடம் கோரிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐயகோ…. ரிஷாட்டின் வீட்டில் இப்படியும் நடந்துள்ளதா?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிலுள்ள மலசலக்கூடத்தை சரியாக சுத்தம் செய்யாத பட்சத்தில், அவரது மனைவி தமது முகத்தை மலசலக்கூட கொமட்டிற்குள் வைத்து, அசுத்தமான நீரை தம்மீது திறந்து விடுவார் என பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரே, பொலிஸாருக்கு இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த 11 பெண்களில் ஒருவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ரிஷாட் பதியூதீனின் மனைவி மாத்திரமன்றி, அவரது உறவினர்களும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு பாரிய துன்புறுத்தல்களை வழங்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில் வீட்டிலுள்ள தும்புத்தடி உடையும் வரை, பணிப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்புரிந்த 11 பேரில், 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.

ஒரு யுவதி பம்பலபிட்டி ரயில் தண்டவாளத்தில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதுடன், மற்றைய யுவதி நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஹிஷாலினி தீ காயங்களுடன் மர்மமான முறையில் கடந்த 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.

ஏற்கனவே உயிரிழந்த யுவதிகளின் மரணங்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த அனைத்து பெண்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஒருதலை காதலால் யாழில் அரங்கேறிய கொடூரம்

ஒருதலை காதல் விவகாரத்தால் சக பெண் உத்தியோகஸ்தரை கத்தியால் குத்திய நபர், தானும் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் உத்தியோகஸ்தர், அங்கு கடமை புரியும் சக பெண் உத்தியோகஸ்தர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் உத்தியோகஸ்தர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆண் உத்தியோகஸ்தரை அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அலுவலகத்தில் இருவரும் கடமையில் இருந்துள்ளனர். திடீரென ஆண் உத்தியோகஸ்தர், பெண் உத்தியோகஸ்தர் மீது சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு, அலுவலக மலசல கூடத்திற்குள் சென்று தாழிட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் உத்தியோகஸ்தரை, அங்கு கடமையில் இருந்த சக உத்தியோகஸ்தர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலைக்குக் கொண்டுச் சென்றனர்.

அதேவேளை, அப்பகுதியால் சிவில் உடையில் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பில் அறிந்து அலுவலகத்திற்குள் சென்று இருந்தபோது, கத்தியால் வெட்டிய நபர் மலசல கூடத்திற்குள் தாழிட்டு இருப்பதனை அறிந்து, அவரை வெளியே வருமாறு அழைத்துள்ளனர்.

எந்த சத்தமும் இல்லாத நிலையில் கதவினை உடைத்து திறந்தபோது, அந்நபர் தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை அங்கிருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை, கத்தியால் குத்திய நபரின் அலுவலக மேசை “லாச்சியினுள்” வேறொரு கத்தியும் , மற்றுமொரு கூரிய ஆயுதமும் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘கொரோனா’ பஸ் விபத்து – இரு பெண்கள் பலி

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் இரு பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இராணுவ பஸ்ஸொன்று ஜீப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இறந்தவர்கள் ஒரு துப்புரவு நிறுவனத்தின் ஊழியர்கள் ஆவார்.

பொலன்னறுவையிலிருந்து மன்னம்பிட்டிய தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை ஏற்றிச் சென்ற இராணுவ பஸ்ஸும், பொலன்னறுவை வைத்தியசாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய ஜூப் ஒன்றுமே விபத்தில் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூன்று பெண்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் விபத்து நடந்த நேரத்தில் ஜீப்பில் 13 பேர் பயணம் செய்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

மைத்திரியின் இரு வழி பயணம் அம்பலம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இதற்கான பணியை மேற்கொள்வதற்காக நான் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 1951 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து தலைமைப்பதவியை வகித்தவர்கள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அமைச்சர்கள், கட்சி அதிகாரிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
அந்தவகையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தேசிய மட்டத்தில் பலப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் அவசியம். அதனை நாம் செயற்படுத்தியுள்ளோம். இவ்வாரம் முதல் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். எமது கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் செல்வார்கள். கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை அவர்கள் முன்னெடுப்பார்கள்.

இன்னும் தேர்தலொன்று அறிவிக்கப்படவில்லை. எனவே, அது பற்றி குறிப்பிடமுடியாது. புதிய அரசு ஆட்சிக்குவந்து இரு ஆண்டுகள்கூட செல்லவில்லை. எனவே, அரசுக்கு ஆதரவு வழங்கும் அதேவேளை கட்சியை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கையும் இடம்பெறும்.

இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாடு அவசியம். அப்போதுதான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். ஏனெனில் ஒரு அரசு முன்னெடுத்த திட்டங்களை, ஆட்சிமாற்றத்தின் பின்னர் மற்றைய அரசு நிறுத்திவிடுகின்றது. அமைச்சர்களும் அவ்வாறுதான் செய்கின்றனர். எனவே, தேசிய விடயங்களின்போது ஐக்கியம் அவசியம். இல்லையேல் திட்டங்கள் வெற்றியளிக்காது.” – என்றார்.

600 கோடி வைத்திருந்த பெண் சிக்கினார்

போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக உழைத்ததாக கூறப்படும் பணத்தை, 5 வங்கி கணக்குகளில் வைப்பிலிட்டிருந்த பெண்ணொருவர், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிச் சலவை சட்டத்தின் கீழ், குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

குறித்த பெண்ணுக்கு சொந்தமான வங்கி கணக்கில் 600 கோடி ரூபா காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த தொகையானது, கடந்த 4 வருட காலப் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி விசாரணை பிரிவினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்ட நபர்கள் தொடர்பிலும் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வங்கி கணக்குகளுக்கு பணத்தை வைப்பிலிட்ட நபர்கள் பிரதேச ரீதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் அல்லது போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

என்ன… 2 ஆயிரம் கோடியா? இரத்தினக்கல் குறித்து விழிபிதுங்கும் வர்த்தகர்கள் (காணாலி)

இரத்திபுரியில் அண்மையில் 510 கிலோ எடையுடைய பாரியதொரு இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் இதுவே மிகப்பெரிய இரத்தினக்கல் எனவும், அதன் பெறுமதி 2 ஆயிரம் கோடி ரூபா எனவும் கூறப்பட்டது.

இது விலைமதிப்பற்ற இரத்தினக்கல்தான் என்பதை மாணிக்கக் கல் மற்றும் தங்காபரண அதிகார சபையும் ஏற்றுக்கொண்டிருந்தது.

ஆனால் குறித்த இரத்தினக்கல் மதிப்பற்றதெனவும், அருங்காட்சியகத்துக்கு (மியூசியம்) வேண்டுமானால் 10 லட்சம் ரூபாவுக்கு வழங்கலாம் என இரத்தினக்கல் வியாபாரிகள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

” நான் 40 வருடங்களாக இரத்தினக்கல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றேன். இது மாபளொன்று. இதனை வைத்து இலங்கையின் பெயரை அவமதிக்கின்றனர். சுமார் 3 அல்லது நான்கு லட்சம் ரூபா பெறும்.” – என்று நந்தன என்ற இரத்தினக்கல் வர்த்தகர் கருத்து வெளியிட்டார்.

யாழ். மக்களுக்கான விசேட அறிவித்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம், காரைநகர், கரவெட்டி, ஊர்காவற்துறை, கோப்பாய், மருதங்கேணி, நல்லூர், பருத்தித்துறை, தெல்லிப்பளை, உடுவில் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 3 லட்சத்தை தாண்டியது கொவிட்

நாட்டில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 1,380 கொவிட் தொற்றாளர்களுடன், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை 301,272 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர்.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195 என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

ரிஷாட்டை வெளியேற்றினார் சஜித் (காணொலி)

ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பின்னர் கூட்டணியில் இருந்து அவர்களின் கட்சியை நீக்கிவிட்டோம். இனி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் கூட்டணியும் அமைக்கப்படாது. தூய அணிகளுடனேயே எமது பயணம் தொடரும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

https://www.youtube.com/watch?v=n7IPhT3JgwU

வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்கு தடுப்பூசி

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பூசி ஏற்றப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இன்று முதல் தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, மேல் மாகாணத்திலிருந்து வௌிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணியாளர்கள் தொழிலுக்காக செல்லும் அநேகமான நாடுகளில் Pfizer தடுபூசி ஏற்றுக்கொள்ளப்படுவதால், பணியாளர்களுக்கு அந்த தடுப்பூசியை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்ருக்கும் , துறைசார் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் தொடர்ந்தும் Pfizer தடுபூசியை ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று 1200 பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரினிடம் 5 மணிநேரம் சி.ஐ.டி. விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

2019ம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று முற்பகல் 10 மணிக்கு சென்ற ஹரின் பெர்ணான்டோவிடம், பிற்பகல் 3:15 வரை வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் சடலம் தோண்டப்படும் திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் சடலம் நாளை மறுதினம் (30.07.2021) நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்படும் என்று டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார்.

டயகம தோட்டத்தில் வசித்த ஹிஷாலினி ஜூட் குமார் (16), கொழும்பில் உள்ள முன்னாள் அமைச்சர் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பலத்த தீக்காயங்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சிறுமியின் உடல் டயகம தோட்டத்தின் மூன்றாம் பகுதியில் உள்ள பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி தொடர்பான விசாரணையில் பல சிக்கல்கள் உள்ளதால், சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், சிறுமி அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம பொது மயானத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக மேலும் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல்லும் சீனா செல்கிறது

இரத்தினபுரியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தினக்கல்லை, உரிமையாளரின் விருப்பத்துடன் சர்வதேச ஏலத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் சார்ந்த தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல்லுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த இரத்தினக்கல்லை விற்பனை செய்வதற்கு முன்னர் அதன் பெறுமதியை கணிப்பிட வேண்டியுள்ளது.

குறிப்பாக சீனாவின் இரத்தினக்கல் ஏலம் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த இரத்தினக்கல்லை அந்த ஏலத்தில் விற்பனை செய்ய எதிர்ப்பார்க்கின்றோம்.

இரத்தினக்கல் விற்பனை செய்யப்படும் தொகையில், 10 வீதம் அரசாங்கத்திற்கு உரித்தாகும்.

நாட்டில் நிதி தொடர்பிலான பிரச்சினை காணப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கல் ஒன்று கிடைக்கின்றமை அதிஷ்டமானது.

புலிகளுக்கு சார்பாகவே நோர்வே செயற்பட்டது

அமைதிப் பேச்சுவார்த்தையின் போது சமாதான தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் சமாதானத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்த போதும் நோர்வேயினதும் எரிக் சொல்ஹெய்மினதும் செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிரானதாகவுமே அமைந்திருந்தன என முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநருமான ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்ற போர்வையில் தனியானதொரு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அவர்கள் செயற்பட்டனர்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அவர், கடந்த யுத்த காலங்களின் போதும் அதன் பின்னரும் அரசாங்கம் திறந்த மனப்பான்மையுடன் வெளிப்படையாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் தொடர்ந்தும் அதே வகையில் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மனித உரிமையைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் திடமாக செயற்பட்டு வருவதாகவும் பயங்கரவாதம் யுத்தம் என நாடுகடந்து வந்துள்ள நிலையில் தற்போது சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.

கடந்தகால ஆணைக்குழுக்களின் தீர்மானங்கள் தொடர்பான பரிந்துரை மற்றும் எதிர்கால செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் போது ரோஹித்த போகொல்லாகம இதனைத் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.எம். எச். டீ. நவாஸ் தலைமையிலான மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் ரோஹித்த போகொல்லாகம சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்:

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதனைத் தொடர்ந்து நல்லிணக்க செயற்பாடுகளின் போதும் அரசாங்கம் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் வெளிப்படையாகச் செயற்பட்டு வருகிறது.

சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் செயற்டுத்தப்பட்டு வருகின்றன.

யுத்தநிறுத்த ஒப்பந்த காலங்களில் பல்வேறு நாடுகள் புலிகளுக்கு வாகனங்களை வழங்கியிருந்தன. அந்த வாகனங்களை புலிகள் இராணுவத்தினரின் வாகனங்களைப் போல் தயார் செய்து அதன்மூலம் அரசாங்கத்தின் மீது சர்வதேசம் குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையில் செயற்பட்டனர்.

மனித உரிமைகள் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில் யுத்த காலங்களில் மூதூர், கிண்ணியா போன்ற பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் வெளிநாட்டு மனித உரிமை பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை தொடர்பான அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்கள் எந்தவித குற்றச்சாட்டையும் அரசாங்கத்தின் மீது சுமத்தியிருக்கவில்லை என்பதை குறிப்பிட வேண்டும்.

அந்த வகையில் மனித உரிமை மீறல் தொடர்பில் அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு இது சிறந்த சான்றாகும் என்றும் ரோஹித்த போகொல்லாகம மேலும் தெரிவித்தார்.

உள்ளாட்சி சபைகளை குறிவைக்கும் பஸில்

பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில் பெருமெடுப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் ‘விசில் மட்டும்தான் பல்டி இல்லை’ என்பதுபோல எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சிமன்றங்களின் கஜானாவிலும் கையடிப்பதற்கு முயற்சிக்கின்றார் – என்று ராஜபக்ச ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை வகித்தவரும், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று முக்கிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்கள் ராஜபக்ச குடும்ப வசம்தான் உள்ளன. பட்ஜட்டில் ஒதுக்கப்படும் நிதியில் 80 வீதம் இவர்களுக்கே ஒதுக்கப்படக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையால்தான் அன்று நாம் வெளியேறினோம். இன்று சுதந்திரமாக அரசியல் செய்கின்றோம். ஆனால் எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தவர்கள் இன்று ஓப்பாரி வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

ஜனாதிபதிக்கும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு வெற்றி என சுதந்திரக்கட்சி கூறும் நிலையில், ஆளுங்கட்சியின் பிரதான பங்காளி சுதந்திரக்கட்சி அல்ல என்று மொட்டு கட்சி செயலாளர் குறிப்பிடுகின்றார். ஆக ஜனாதிபதி ஒரு வழியிலும், பஸில் இன்னுமொரு வழியிலுமே பயணிக்கின்றனர். சுதந்திரக்கட்சி விவகாரம் இதற்கு சான்றாகும்.

மஹிந்த ஆட்சிகாலத்தில் பஸிலே பொருளாதாரத்தை நிர்வகித்தார். எல்லா அமைச்சுகளிலும் கையடித்தார். ஆனால் மஹிந்த தோல்வியடைந்த பின்னர் வெளிநாடு ஓடினார். தற்போது மீண்டும் வீரனாக வந்துள்ளார். அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து இதனை கொண்டாடுகின்றனர். ஆனால் அவரின் வருகையால் எதுவும் நடக்கவில்லை. மாறாக உள்ளாட்சி மன்றங்களின் நிதியையும் பெறுவதற்கு முயற்சிக்கின்றனர்.

தண்டப்பணம் மற்றும் முத்திரை உள்ளிட்ட கட்டணங்கள் ஊடாகவே மாகாண நிதியத்துக்கு பணம் கிடைக்கும். அதனை முதல்வர் உள்ளாட்சிமன்றங்களுக்கு பிரித்துகொடுப்பார். அதன்மூலமே பாலம் அமைப்பு உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இன்று மாகாணசபைகள் இயங்கவில்லை. அரச விசுவாசிகளான ஆளுநர்கள்தான் உள்ளனர். எனவே, மத்தியில் திறைசேரியை வெற்றி பாத்திரமாக்கியவர்கள், குட்டி திறைசேரிகளிலும் கையடிக்க பார்க்கின்றனர். இந்த அரசு எல்லா வழிகளிலும் பெயில்.

உலகின் மிகப் பாரிய நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினங்களின் நகரமான இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் வீடொன்றின் கொல்லைப்புறத்தில் எதேச்சையாக இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

கூலித் தொழிலாளி ஒருவர் மூலம் தனது வீட்டில் கிணறு ஒன்றிற்காக தோண்டியபோது, இக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது முழுப் பெயரை வெளியிடாத கமகே என அழைக்கப்படும் குறித்த கல்லின் உரிமையாளர் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மிக மெல்லிய இளம் நீல நிறத்தில் காணப்படும் இக்கல், சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் (ரூ. 2,000 கோடி) வரையான பெறுமதியை கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எடை 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்செயலாக கண்டுபிடிக்உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீல மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினங்களின் நகரமான இலங்கையின் இரத்தினபுரி நகரத்தில் வீடொன்றின் கொல்லைப்புறத்தில் எதேச்சையாக இக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

கூலித் தொழிலாளி ஒருவர் மூலம் தனது வீட்டில் கிணறு ஒன்றிற்காக தோண்டியபோது, இக்கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தனது முழுப் பெயரை வெளியிடாத கமகே என அழைக்கப்படும் குறித்த கல்லின் உரிமையாளர் பிபிசி செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

மிக மெல்லிய இளம் நீல நிறத்தில் காணப்படும் இக்கல், சர்வதேச சந்தையில் 100 மில்லியன் டொலர் (ரூ. 2,000 கோடி) வரையான பெறுமதியை கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எடை 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட நீல மாணிக்கம் எனும் பொருள்பட “Serendipity Sapphire” (“செரண்டிபிட்டி சபையர்”) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

கப்பட்ட நீல மாணிக்கம் எனும் பொருள்பட “Serendipity Sapphire” (“செரண்டிபிட்டி சபையர்”) என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்குக்கு 16 லட்சம் தடுப்பூசிகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதனையடுத்து, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான குறித்த தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தத் தடுப்பூசிகள் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை எப்போது முழுமையாக திறக்கப்படும்? வெளியானது தகவல்

நாடு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் முழுமையாக திறக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 80 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாட்டை முழுமையாக திறக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.