மேலும் 194 பேரின் உயிரை பறித்த கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 194 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

100 ஆண்களும், 94 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான மூவரும் உள்ளடங்குகின்றனர்.

80 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் அபூர்வ சம்பவம்

பின்னவல யானைகள் சரணாலயத்திலுள்ள ‘சுரங்கி’ என்றழைக்கப்படும் யானையொன்று இன்று இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.

முதலாவது குட்டியை இன்று அதிகாலை 4 மணிக்கு ஈன்றெடுத்ததுடன், இரண்டாவது குட்டியை மதியம் 12 மணிக்கு ஈன்றெடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த இரண்டு குட்டிகளும் ஆண் குட்டிகள் என அறிய முடிகின்றது.

இதற்கு முன்னர் 1941 ஆம் ஆண்டளவிலேயே இலங்கையில் இவ்வாறானதொரு சம்பவம் பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் – கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, முதியோர் இல்லத்தின் 2 பணியாளர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோட்டா அரசை விளாசித்தள்ளும் சம்பிக்க

கொரோனா வைரஸ் தாக்கத்தின் நான்கு அலைகள் உருவாகுவதற்கு அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளே பிரதான காரணம். எனவே, போலியான முறையில் நாட்டை மூடாமல், விஞ்ஞானப்பூர்வமான ‘லொக்டவுனை’ செய்யுங்கள். இல்லையேல் நிலைமை மோசமாகும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ நாடு தற்போது எச்சரிக்கை மட்டத்திலேயே இருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இந்நிலையில் விஞ்ஞானப்பூர்வமாக நாட்டை முடக்குமாறு துறைசார் நிபுணர்கள் உட்பட பல தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் நாடு முறையாக முடக்கப்படவில்லை. தமக்கு தேவையான இடங்களை அரசு திறந்தே வைத்துள்ளது. இவ்வாறு பகுதியளவு நாட்டை முடக்குவதால் உரிய பயன் கிட்டாது. தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண எண்ணிக்கையை குறைக்க முடியாது.

நாட்டை முடக்கும் தீர்மானம் ஜுன் மாதமளவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இழுத்தடிப்புகள் செய்யப்பட்டு இறுதி நொடியிலேயே பெயருக்கு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை இவ்வாறு போலியான முறையில் முடக்குவதால் உரிய பயன் கிட்டாது. பொருளாதார பாதிப்புகள் மட்டுமே ஏற்படும் என்பதை ஆளுந்தரப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்.

அத்துடன், தமது இயலாமையாலும், முறையற்ற முகாமைத்துவத்தாலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு முடக்கவே காரணம் என்ற கருத்தை உருவாக்கும் முயற்சியிலும் இந்த அரசு ஈடுபட்டுள்ளது.

இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தொற்று வேகமாக பரவிவருகின்றது. அங்கிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்துவந்து புதிய திரிபுகளை உருவாக்குவதற்கும் அரசு முற்படுகின்றது. எமது நாட்டு மக்களை ஆய்வுக்கூட எலிகளாக்குவதற்கான முயற்சியா இது?

நாம் ஆட்சியை கவிழ்க்க முற்படவில்லை. மாறாக சுகாதார துறை நிபுணர்கள் உட்பட துறைசார் நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுமாறே அரசை கோரிவருகின்றோம். ஆனால் அவர்கள் எதிரணியில் இருக்கும்போது போலிகளை பரப்பி, ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டனர்.

இந்நாட்டில் நான்கு அலைகள் ஏற்படுவதற்கும் இந்த அரசுதான் காரணம். மரணங்களுக்கு அரசு பொறுப்புகூறவேண்டும். தடுப்பூசிகளை வாங்க சொன்னபோது, பாணிக்கு பின்னால் ஓடி காலத்தை இழுத்தடித்தனர்.

டொலர் பிரச்சினையால் மீண்டும் கூப்படம், வரிசை யுகம் உருவாகும் அபாயமும் உள்ளது.” – என்றார் சம்பிக்க. ” – என்றார்.

தெற்கில் சிக்கிய ரூ. 232 கோடி பெறுமதியான ஹெரோயின்

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமான சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த 290 கிலோ 200 கிரேம் ஹெரோயின் இலங்கையின் தெற்கு கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பிடிப்பட்ட பெறுமதியுடைய மற்றும் அதிக அளவிலான போதைப்பொருள் இதுவாகும்.

இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்த பெருமளவிலான போதைப்பொருள் பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் 05 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய படகும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இலங்கைப் பெறுமதி 2,321 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31 தொடக்கம் 37 வயதுடையவர்கள் என்பதோடு, தென்னிலங்கையின் அஹுங்கல்ல, பலப்பிட்டிய ஹபராதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப். 06 இற்கு பிறகும் ஊரடங்கு தொடருமா?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை செப்டம்பர் 06 ஆம் திகதிக்கு பிறகும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவில்லை – என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இதன்போது செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், சுகாதார தரப்பினரின் பரிந்துரைகளின் பிரகாரமே முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார்.

காபூல் ட்ரோன் தாக்குதலில் ஆறு குழந்தைகள் மரணம்!

காபூல் நகரில் அமெரிக்கப் படைகளின் ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் விமானம் நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தவர் கள் பத்துப் பேர் உயிரிழந்தனர் என்று
அறிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர் கள் தெரிவித்த தகவல்கள் மற்றும் படங்களை காபூலில் உள்ள பிபிசி செய்தியாளர் வெளியிட்டிருக்கிறார்.

இஸ்லாமிய தேசத் தீவிரவாதிகளின் ஆப்கான் அணியைச் சேர்ந்த ஒருவர் பயணித்த வாகனம் ஒன்றின் மீது தனது ட்ரோன் விமானம் ஒன்று துல்லியமாகத்தாக்குதல் நடத்தியது என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் வீடு ஒன்றில் தரித்து நின்ற வாகனம் ஒன்றே தாக்குத லுக்கு இலக்கானது என்றும், அந்த வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட பத்து பேரே உயிரிழந்தனர் என்றும் சுயாதீனசெய்தி வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.

உயிரிழந்த குழந்தைகள் இரண்டு வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதை பிபிசி செய்
தியாளர் உறுதிப்படுத்தி உள்ளார்.

முகங்களையும் உருவங்களையும் அடையாளம் காணமுடியாதவாறு சடலங்கள்கருகிக்கிடந்தன என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

ட்ரோன் தாக்குதல் நடத் தப்பட்ட கையோடு தொடராக பல குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. வாகனத்தில் இருந்து வெடித்த குண்டுகளே அப்பகுதியில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று அமெரிக்கப் படைக
களது மத்திய கட்டளைப்பீடம் முன்னர் தெரிவித்திருந்தது.

காபூல் விமான நிலை யம் மீது தாக்குதல் நடத்துவதற்காக குண்டுகள் ஏற்றப்பட்டிருந்த வாகனத்தின் மீதேட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் அது கூறியிருந்தது.

ஆனால் தற்போது சிவிலியன் இழப்புகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல் களை அடுத்துச்சம்பவம் குறித்து வெளிப் படையான விசாரணைகள் நடத்தப்படும் என்று பென்ரகன் அதிகாரி ஒருவர் தெரி
வித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படை களை விலக்கியுள்ள அமெரிக்கா அங்கு வான் வழியாக ட்ரோன் மூலமான புதிய போரைத் தொடுத்துள்ளது என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இஸ்லாமியத்தீவிரவாதிகள் மீதான இந்தப் புதிய போர் சிவிலியன்களது பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடலாம் என்று அஞ்சப்படுகிறது.

குமாரதாஸன் – பாரிஸ்

அடுத்து என்ன? அதிரடிக்கு தயாராகும் மைத்திரி

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன விஷேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70 அவது ஆண்டுவிழா செப்டம்பர் 2 ஆம் திகதி கட்சி தலைமையில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

கொரோனா நெருக்கடியால் சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் ஒரு சிலர் மட்டுமே நிகழ்வில் பங்கேற்பார்கள் என தெரியவருகின்றது.

இதன்போதே மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுப்பார் என தெரியவருகின்றது.

சுதந்திரக்கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகின்றது.

ஆபத்தான வைரஸ் இலங்கைக்குள் நுழைவா?

தென் ஆபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு இனங்காணப்பட்டுள்ள நிலையில், அது இலங்கையிலும் பரவியுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை இடம்பெறும் – என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டவற்றில் பிறழ்வுகளில் இது மிகவும் திரிபுடையது என ‘த ஜெருசலேம் போஸ்ட்’ பத்திரிகையின் இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய கற்கை மற்றும் குவாசுலு நட்டால் ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வில் புதிய பிறழ்வு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது .

இந்த தொற்று வேகமாக பரவுவதுடன், இதற்கான தடுப்பூசியின் பெறுபேறு மந்தமாகவே உள்ளதாகவும் குறித்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

C.1.2 என புதிய பிறழ்வு விஞ்ஞான ரீதியில் பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் புதிய திரிபு கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஜெனிவா சமருக்கு தயார்’ – மார்தட்டுகிறார் பீரிஸ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. எனவே எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை மற்றும் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன. எமது நிலைப்பாடு பற்றி நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த நாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவர்களான மொஹான் பீரிஸ் மற்றும் சி.ஏ சந்திரபிரேம ஆகியோர் மூலமாக இந்தத் தெளிவுபடுத்தலை செய்துள்ளோம். இதற்கு மேலதிகமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதவர்களை தனித்தனியாக சந்தித்து ஜெனீவா கூட்டத்தொடருக்குத் தொடர்புடையவிடயங்களையும், தெளிவுபடுத்தலையும் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் செய்துள்ளேன்.

செப்டம்பர் 12ஆம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவை ஜெனீவா நகரில் கூடுகின்றது. செப்டம்பர் 21ஆம் திகதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க் நகரில் கூடுகின்றது. இவ்விரண்டு மாநாடுகளிலும் நாம் எமது நாட்டிற்கான அனைத்து பயனையும் பெற எதிர்பார்க்கின்றோம்.

இதுகுறித்து நாம் நிச்சயம் கேட்கவேண்டிய கேள்விகள் சில உள்ளன. இன்று உலகில், குறிப்பாக தெற்காசிய வலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்த நிலைமை ஊடாக உலக மக்களுக்கு மேலதிகமான பாரதூரப் பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. மனிதப்படுகொலை, குண்டு வெடிப்புகள், நிலையற்ற தன்மை, துப்பாக்கி, ஆயுதப் பிரச்சினைகள், அகதிகள், தீவிரவாதம் என பிரச்சினைகளும் இந்த வலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் ஏற்படுகின்றன.

இலங்கை என்பது அனைத்து நாடுகளுடனும் சிறந்த தொடர்பை வைத்துக்கொண்டு அமைதியாகஇருக்கின்ற நாடாகும். எமது நாட்டினால் ஏனைய நாடுகளுக்கோ, எவருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எனினும் ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவில் இலங்கை பற்றி விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையிட்டு அதிர்ச்சியடைகின்றோம். இதற்கு உண்மையான காரணம் என்ன என்கின்ற பிரச்சினை எழுகின்றது. இதில் நீதி உள்ளதா? எடுகோள்கள் என்ன? பேச்சு நடத்தபல பிரச்சினைகள் உள்ள நிலையிலும் இலங்கையை தெரிவுசெய்து ஏன் இவ்வாறு பேச்சு நடத்துகின்றார்கள் என்கின்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும் .

உண்மையில் இது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதா? அல்லதுஅதற்கு அப்பாலான அரசியல் நிகழ்ச்சி நிரலா? ஐ.நா ஜெனீவா பேரவை கடந்த மார்ச் மாதத்தில் கூடியது.

இந்த 06 மாத இடைவெளியில் கொரோனா தொற்றின் கடுமையான நெருக்கடியை இலங்கை சந்தித்தது. அந்த காலகட்டத்திலும் அனைத்து துறைகளிலும் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தினால் முடிந்த நிலையில் மிகவும் திறந்த மனதில் அதன் தெளிவுகளையும் முன்வைப்பதே எமது அபிப்பிராயமாகவும் உள்ளது. எனவே எமது மக்கள் இந்த நிலைமையில் பாதுகாத்து முன்நோக்கிப் பயணிக்கச் செய்வதற்கு நாம் எடுக்கின்ற இந்த முயற்சிகளுக்கு உதவியளிக்கும்படி அனைத்து நாடுகளிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

மகா சங்கத்தினர் உட்பட சர்வ மத்தலைவர்களினதும் ஆலோசனைகளை நாங்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முக்கியத்துவமாகவே அவதானித்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

‘ஆசிரியர்களின் பிரச்சினைக்கு அரசு முன்வைத்துள்ள தீர்வு’

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கும் வரை, அவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த 5000 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வழங்க, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு இணைய வழியிலான கல்வியை மீள ஆரம்பிக்குமாறு, ஆசிரியர்களிடம் அமைச்சரவை கோர எதிர்பார்த்துள்ளது.

அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை நேற்று (30) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, அதிபர் – ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை இணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை, அடுத்த வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கட்டம் கட்டமாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, அதிபர், ஆசிரியர்கள் கடந்த 50 நாட்களாக போராட்டங்களை நடத்தியிருந்த பின்னணியிலேயே, அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

‘இலங்கையில் அவசரகால விதிமுறைகள் அமுல்’

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை நேற்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

இதன்படி பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், று நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிகவிலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தைமுறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக் கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்புநிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

‘தடுப்பூசி இராணுவம் வசம் – முக்கிய மருத்துவ சங்கம் போர்க்கொடி’

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைசர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

” பைசர் தடுப்பூசியை ஏற்றும் பொறுப்பை இராணுவத்துக்கு வழங்கும் முடிவை யார் எடுத்தது, இதில் உள்ள விஞ்ஞானப்பூர்வமான தன்மை என்ன?” என்று வைத்தியர் நவீந்த டி சொய்சா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

இனிவரும் காலங்களில் பைசர் தடுப்பூசி இராணுவ தலைமையகத்தில், உரிய தரப்பிற்கு செலுத்தப்படும் என இராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘கழுத்தில் கத்தியை வைத்து 3 பவுண் தங்க சங்கிலி கொள்ளை’

மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து அவரின் கழுத்தில் இருந்த 3 பவுண் தங்க சங்கிலியை நபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் இன்று திங்கட்கிழமை (30) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் உரிமையாளர் தனது வீட்டை இடித்து புனரமைத்து வருகின்ற நிலையில் அதே காணியில் தற்காலிகமாக வீடு ஒன்றை அமைத்து வசித்துவருகின்ற நிலையில் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் வயதான மாமரியர் உட்பட 3 பேர் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்த நிலையில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டின் தகர கதவை திறந்து வீட்டிற்குள் புதுந்த கொள்ளையர் ஒருவர் உறக்கத்தில் இருந்த 45 வயதுடைய பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றிதருமாறும் இல்லாவிட்டால் கத்தியால் வெட்டி கொலை செய்வதாக மிரட்டியதையடுத்து கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்த நிலையில் அதனை
பறித்தெடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸ் தடயவியல் பகுப்பாய்வு பிரிவினர் சென்று கொள்ளை தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் கொரோனா சடலங்கள்’

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 11 பேரின் சடலங்கள், தகனம் செய்யப்படாமல் வைத்தியசாலையின் பிணவறையிலேயே தேங்கிக்கிடக்கின்றன என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியவை வருமாறு,

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச செயலக பிரதேசங்களில் இயங்கும் 13 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் இருந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு அங்கு பரிசோதணை மூலம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு இவ் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த (28) ஆம் திகதி திகதி முதல் (30) வரை 11 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள், அடையாளம் கண்டு உறுதிப்படுத்தாததால் அவற்றை தகனம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் தொடர்பில் பிரதேச பொது சுகாதார பிரிவினருக்கு தெரிவித்து, அவர்கள் ஊடாக, வீட்டாருக்கு தகவல் வழங்கப்படுகின்றபோதிலும் சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக வைத்தியசாலைக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர். இதனால்தான் குறித்த சடலங்கள் தேங்கிக்கிடக்கின்றன.

அதேவேளை, இது தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் அடங்கிய குழுவினருடன் கலந்துரையாடிய பின்னர், சடலங்களை தகனம் செய்வதற்கும்,வீட்டார்களை வரவழைத்து சடலத்தை அடையாளம் காண்பிக்கவும் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சடலமொன்றை முழுமையாக தகனம் செய்வதற்கு சுமார் இரண்டரை மணிநேரம் தேவைப்படுகின்றது. இதனால் இரவு நேரங்களிலும் சடலங்களை தகனம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நாட்டில் ஏனைய பகுதிகளிலுள்ள சில வைத்தியசாலைகளிலும் இதே நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

‘மக்களை தாக்கும் ஆயுதமாக மாறியுள்ள ரூ. 2,000’

” கொரோனா தொற்று மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, உள ரீதியிலும் தாக்கி பலவீனப்படுத்துவதற்கான ஆயுதமாக 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.” – ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் வலியுறுத்தினார்.

கண்டியில் இன்று (30.08.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு கைகொடுக்கின்றோம் என பெரும் பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு பெறுபவர்கள் நிவாரணம் பெறுவதற்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எப்படியெல்லாம் வெட்ட முடியுமோ, அந்தளவுக்கு வெட்டு, குத்துகளை செய்து சொற்பளவானவர்களுக்கே 2 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலர் இருக்கின்றனர். அவர்களிலும் குறிப்பிட்ட சிலருக்கே கொடுப்பனவு கிடைக்கும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்குமிடையில் முறுகல் நிலைமை ஏற்படுவதை காணமுடிகின்றது. அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் இன்மையால் இன்று அரசாங்க ஊழியர்களும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

சொற்பளவானோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகூட அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுவதில்லை. பொது இடங்களில் வைத்து வழங்கப்படுவதால் உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயமும் இருக்கின்றது.

மறுபுறத்தில் தற்போதைய நிலைமையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனியுடன் பால் தேநீர் குடிப்பதற்கான சுதந்திரம்கூட பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2 ஆயிரம் ரூபாவிலும் புறக்கணிப்பு இடம்பெற்றால் அவர்கள் உள ரீதியிலும் பாதிக்கப்படுவார்கள். விரக்தி நிலைமை உருவாகும். எனவே, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த கொடுப்பனவை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

இனி ‘லொக்டவுன்’ வேண்டாம் என்பதற்காகவே இலங்கையில் ‘பயனற்ற ஊரடங்கு’ அமுலில்

“ நாட்டை முடக்குவதால் பயன் இல்லை. தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறையவில்லை. எனவே, இனி பொது முடக்கம் வேண்டாம் என்ற விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காகவே பொறுப்பற்ற – பெயரளவிலான ‘லொக்டவுன்’ தற்போது அமுலில் உள்ளது.” – என்று ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், வைத்தியருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியவை வருமாறு,

“ நாட்டில் கொரோனா மரண எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது. நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 5 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது என சுகாதார அமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. கொவிட் நிமோனியாவால் உயிரிழப்பவர்கள் மட்டுமே கொவிட் மரண எண்ணிக்கைக்குள் உள்வாங்கப்படுகின்றனர். சிறுநீரகம், இருதயம் உட்பட நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்தால் அந்த எண்ணிக்கை பெரும்பாலும் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை.

வைத்தியசாலை கட்டமைப்புக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காகவே விஞ்ஞானப்பூர்வமான லொக்டவுனுக்கு செல்லுமாறு வலியுறுத்தினோம். வைத்தியர்களின் சங்கங்கள் உட்பட இந்நாட்டிலுள்ள அனைத்து சுகாதார சங்கங்களும் இதனையே வலியுறுத்தியுள்ளன.

ஆனால் நாட்டில் இன்று என்ன நடக்கின்றது? கப்பல், விமானங்களைத்தவிர ஏனைய அனைத்து வாகனங்களும் வீதியில் பயணிக்கின்றன. கொரோனா முதலாவது அலையின்போது ‘லொக்டவுன்’ என்பது முறையாக செயற்படுத்தப்பட்டது. பாதுகாப்பு தரப்பு உட்பட அரச இயந்திரம் உரிய வகையில் இயங்கியது. எனினும், தற்போது அவ்வாறானதொரு நிலைமை இல்லை. பெயரளவிலான ‘லொக்டவுனே’ அமுலில் உள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர் அரச தரப்பில் இருந்து அறிவிப்பொன்று வெளியாகும். அதாவது, ‘லொக்டவுன்’ செய்து பயன் இல்லை, தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கை குறையவில்லை. எனவே, ‘லொக்டவுன்’ இனி அவசியமில்லை என்ற மாயையை உருவாக்குவதற்காகவே இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நாடு முடக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாகவே எஸ்.பி. திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். ‘லொக்டவுன்’ அவசியமில்லை என்ற விம்பத்தை உருவாக்குவதே அரசின் நோக்கம். பொருளாதாரத்தை முடக்குவதற்காக நாம் விஞ்ஞானப்பூர்வமான முடக்கத்தை கோரவில்லை. மக்களின் உயிரைக்காக்கவே அதனை வலியுறுத்துகின்றோம்.” – என்றார்.

அடை மழையிலும் தோட்டத் தொழிலாளர்கள் பணியில்

மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது.

தொடர் மழையால் மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான,கா சல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது.

நீரேந்தும் பிரதேசங்களில் நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகள் பெறுக்கெடுத்துள்ளன.

சில பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்கள் முறிந்து வீழ்ந்து, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பகுதியில் சில இடங்களில் நேற்றிரவு முதல் இன்று காலைவரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அத்துடன், மழை தொடர்வதால் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா வீதிகளில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீரக்க காலநிலையிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். சில தோட்டங்களில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக தொழிலாளர்களின் வருகை மிக குறைவாக காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டா அரசின் தவறுகளை பட்டியலிட்டார் ரணில்

கொவிட் பரவல் மாத்திரமே அன்றி, அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையே, இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு முன்பிருந்தே, இந்த அரசாங்கத்தின் கீழ் வருமானம் குறைவடைந்திருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

நாட்டின் பிரபல வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைய, வருமான சேர் வரியை குறைத்தமையின் ஊடாக, அரசாங்கத்தின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

நல்லாட்சி நிலவிய காலப் பகுதியில் கடனை செலுத்தும் தொகையை தவிர, நாட்டின் ஏனைய செலவீனங்களுக்கான வருமானம் உள்நாட்டிலேயே உழைக்கக்கூடியதாக இருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.

‘அரசு கைவிரிப்பு – கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் தவிப்பு’

கிளிநொச்சி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள. இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசினால் 10 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கப்படும்.

ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத்தை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்டத்திலுள்ள கூட்டுவுறவுச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அதிகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கு எமக்கு நிதி கிடைக்கவில்லை. ஆனால் உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கான பட்டியல்கள் மாத்திரம் கிடைக்கப்பெற்று வருகின்றன.

மேலும் பொருட்களை வழங்குவதற்கான கூறுவிலை கோரல் எம்மிடம் பெறப்பட்ட போது காணப்பட்ட பொருட்களில் விலைகளில் தற்போது இல்லை. அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. இந்த நிலையில் நாம்தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்குவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம் எனக் கூட்டுறவுச்
சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனவே இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு வினவிய போது, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்குவதற்கான நிதியினை நாம்
திறைசேரியிடம் கோரியுள்ளோம். எனவே நிதி கிடைத்ததும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.