இலங்கை இனி எவ்வாறு இயங்கும்?

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,

⭕ அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்

⭕ அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்காக தினமும் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 04 மணி வரை அனுமதி வழங்கப்பட மாட்டாது

⭕ பொது போக்குவரத்து சேவைகளின் போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்ற முடியும்

⭕ பொது போக்குவரத்தின் போது வாகனங்களின் குளிரூட்டியை பயன்படுத்தாமல் வாகனங்களின் ஜன்னல்களை திறக்க வேண்டும்

⭕ அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக்கவசத்தை அணிந்திருந்தல் வேண்டும்

⭕ வைபவங்கள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் விதத்திலான நிகழ்வுகளுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை அனுமதியில்லை

⭕ வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் உள்ளே ஐவர் மாத்திரமே இருக்க முடியுமென்பதுடன் ஏனைய வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்கு வௌியே 01 மீட்ட இடைவௌியை பேணி வரிசையில் நிற்க வேண்டும்

⭕ விவசாயத்துறைக்கு அனுமதி

⭕ சிகையலங்கார நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கான நேரத்தை முற்கூட்டியே ஒதுக்கிக் கொள்ள வேண்டும்

⭕ கல்வியமைச்சின் தீர்மானத்தின்படி, 200 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறப்பதற்கு முதலில் சந்தர்ப்பம் வழங்கப்படும்

⭕ பாலர் பாடசாலைகளில் 50 வீதமான மாணவர்களை ஒரு தடவையில் இணைத்துக் கொள்ள முடியும்

⭕ சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க முடியும்

⭕ திரையரங்குகளை திறக்க அனுமதியில்லை

⭕ உடற்பயிற்சி நிலையங்களில் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை ஒரு தடவையில் ஐவருக்கு அனுமதி

⭕ திருமண பதிவிற்காக ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 50 பேருக்கும் அனுமதி

⭕ மரணச் சடங்குகளில் 15 ஆம் திகதி வரை 10 பேருக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை 15 பேருக்கும் அனுமதி

⭕ மதவழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூட அனுமதியில்லை

⭕ பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுமதி இல்லை

மாகாணத்தடை தொடரும்!

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை கட்டாயமாக தொடர்ந்தும் பின்பற்ற வேண்டியேற்படுவதாக இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நாளை (01) அதிகாலை 04 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

அவசரமாக கொழும்பில் களமிறங்கும் இந்தியாவின் முக்கிய புள்ளி

இந்திய வெளிவிவகாரச் செயலாளர், ஒக்டோபர் முதல்வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஒக்டோபர் 2 ஆம் திகதி கொழும்பு வரும் அவர், 5 ஆம் திகதிவரை முக்கியத்துவமிக்க சந்திப்புகளை நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது.

ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டோருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையில் முக்கியத்துவமிக்க சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

‘கொரோனா’ – பருத்தித்துறையில் ஒரு மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் தாயாருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவரது ஒரு மாத குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.

தாய்க்கு கடந்த 22ஆம் திகதி கொரோனோ தொற்று உறுதியான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இந்நிலையில் வீட்டிலிருந்த அவரது குழந்தை உயிரிழந்த நிலையில் நேற்று புதன்கிழமை வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குழந்தையின் சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குழந்தைக்கு தொற்று கண்டறியப்படவில்லை. இந்நிலையில் பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ளார்.

யாழ். இளைஞர்கள் ஐவர் ஆயுதங்கள் சகிதம் தெற்கில் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூர்மையான ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்போது நான்கு, ஏழு அங்குல மற்றும் எட்டு அங்குல கத்திகளையும் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தனகல்ல பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் இருப்பதாக மேல் மாகாணத்தின் பொறுப்பான மூத்த டிஐஜி தேசபந்து தென்னக்கோனுக்கு கிடைத்த தகவலின் படி, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது அவர்களுடைய தனிப்பட்ட பெட்டகத்தில் மேற்கொண்ட சோதனையின் போது கூர்மையான ஆயுதங்கள் மற்றும் முகக் கவசங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில், சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர்கள் நிறுவனத்தில் ஒருவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழா நடத்தியதாக கூறியுள்ளார்.

மேலும், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அவர்கள் யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 20 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சஹ்ரானின் தொலைபேசிக்கு என்ன நடந்தது? வெளியான திடுக்கிடும் தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வழிநடத்தினார் எனக் கூறப்படும் தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை வெளிநாட்டுக்கு உளவு பிரிவொன்று எடுத்துச்சென்றுள்ளமை தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த பிரதான பாகத்தை யார் எடுத்தது என்பது குறித்து எவரும் கதைப்பதில்லை. இந்த விடயத்தைத்தான் முதலில் கண்டறியவேண்டும். ஏனெனில் குண்டு தாக்குதலை நடத்தியவரின் தொலைபேசியில்தான் சகல விடயங்களும் இருந்திருக்கும்.

இந்நிலையில் அந்த தொலைபேசியின் பிரதான பாகத்தை உளவு பிரிவொன்று, வெளிநாட்டுக்கு எடுத்துசென்றுள்ளது எனக் கூறப்படுகின்றது. இதற்கு பொலிஸாரும், நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளதெனில், அந்த பாகத்தை யார் எடுத்தது என்பது தொடர்பில் ஆராய்ந்தால், பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்கலாம். இதற்கு கட்டளையிட்ட அரசியல்வாதிகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதனைவிடுத்து முன்னாள் ஜனாதிபதியையும், அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மட்டும் விமர்சித்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒடுக்குவதற்கான நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.” – என்றார்.

அரசின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தும் ஶ்ரீதரன் எம்.பி.

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் ) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மன்றம் வரை சென்று இலங்கையினுடைய ஜனாதிபதி சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் இலங்கையினுடைய தமிழ் மக்களின் குரலாக இருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை, நீங்கள் வாருங்கள் நாங்கள் பேசுவோமென அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதே ஜனாதிபதி தான் தனது தேர்தல் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை பெற்று விடுவார்கள். எம்மை மின்சார கதிரையில் ஏற்றி விடுவார்கள் என்றும் சர்வதேச சமூகத்திற்கு பிழையான கருத்தை கொடுத்து நாட்டை பிளவுபடுத்துகிறார்களென சிங்கள மக்களிடையே புலம்பெயர் தமிழர்கள் பற்றிய இனவாதக் கருத்துக்களை தெரிவித்து ஆட்சிக்கு வந்தார்.

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனர். சிங்கள மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களின் பொருளாதார நிலையை அழித்து நாசமாக்கி சிங்கள இளைஞர்களை இனவாத ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பிய இந்த அரசாங்கம் இன்று அரேபிய நாடுகளுக்கு சென்று கெஞ்சுகின்றனர். அரசாங்கம் ஏன் இரண்டு முகத்தை கொண்டு இதனை செய்கிறது.

புலம்பெயர்ந்தவர்களை பேச அழைப்பது தொடர்பாக, மக்களின் ஆணையை அதிகமாக பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் இதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால் இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் அதனை செய்ய முன் வரவேண்டும் என்றார்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நாளை முக்கிய சந்திப்பு

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிசுடன் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இதன்போது மனித உரிமை விவகாரம் மற்றும் பொறுப்புகூறல் தொடர்பிலும், ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது என தெரியவருகின்றது.

அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் – திருவாய் மலர்ந்தார் பிள்ளையான்

” அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது, சர்வதேசத்திடம் முறையிடுவது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடல்ல. சிதைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புகின்ற மிகப் பிரதானமான பொறுப்புக்காகவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளர்.”

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற செழுமைமிக்க 100 நகரங்கள் செயற்திட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை வைத்து பெரிதாகப் பேசப்படுகின்றது. உண்மையில் நானும் சிறைச்சாலையில் இருந்தவன் என்ற அடிப்படையில் அவர்களின் உள்ளக் குழுறலை அறிவேன்.

சிறைச்சாலைக்குரிய ஒரு அமைச்சர் சென்று அவ்வாறான அசம்பாவிதத்தை நடத்தியிருந்தால் அது மிகப் பெரிய பிழை. கண்டிக்கப்பட வேண்டிய விடயம். நாங்களும் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஆனால் எங்களில் சிலரின் நிலைப்பாடு என்னவென்றால் நாங்கள் இவற்றைக் கண்டு வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றோமென்று நினைக்கிறார்கள்.
நிச்சயமாக அரசாங்கம் அவ்வாறு இராது. அதற்கான விசாரணை நடக்கின்றது. அமைச்சர் தன் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். நிச்சயமாக அந்த விசாரணை சரியாக நடைபெறும். இந்த விடயத்தை நாங்களும் வன்மையாக எதிர்க்கின்றோம். அரசாங்கத்துக்குள்ளிருந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டுவோம்.

ஆகையால் அந்த ஒரு விடயத்தை வைத்து இந்த நாட்டில் சிந்தனை ரீதியில் குழப்பம் விளைவிக்க எண்ணுபவர்கள் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதும், சர்வதேசத்திடம் முறையிடுவதுமாக இருக்கின்றார்கள். அது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடல்ல.” – என்றார்.

மாகாணம்தாண்ட தொடர்ந்தும் தடை?

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்திடம், கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே குறித்த மருத்துவர் சங்கம் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், ரெஸ்டூரன்கள் ஆகியன ஒரு மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய அங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, மாகாணங்களுக்கிடையில் இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் மற்றும் பஸ் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும், மாகாணத்துக்குள்தான் சேவைகள் இடம்பெறும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

மண்டியிட்டதா அரசு? விவசாயத்துறை அமைச்சர் விளக்கம்

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாலேயே கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டி ஏற்பட்டது. வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் குறைந்த விலைக்கு அரிசி விநியோகிக்க கூடியதாக இருக்கும் – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” விவசாய அமைச்சர் என்ற வகையில் வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் விடயத்துடன் நான் உடன்படவில்லை. அமைச்சரவையில் இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வந்தேன். அதேபோல சந்தைக்கு நெல் வழங்குவதை நிறுத்தாது, தொடர்ச்சியாக வழங்குமாறும், அரிசி தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க வேண்டாம் எனவும் விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தும் வந்தேன். நெல்லுக்கு கட்டுப்பாட்டு விலையையும் அறிவித்தேன். ஆனால் அது போதாது என்று விவசாயிகள் நெல் வழங்குவதை நிறுத்தினர்.

இதனால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடும் விமர்சனங்களும் எழுந்தன. விவசாயிகள் நெல்லை வழங்கவில்லை எனில், சந்தையில் அரிசி தட்டுப்பாடு உள்ளதெனில் முன்னெடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கை என்ன? அதனால்தான் விருப்பம் இல்லாவிட்டால்கூட அரிசி இறக்குமதி செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடக சந்திப்புகளை நடத்தி, விலைகளை அறிவிக்கலாம். ஆனால் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் அந்த விலை மாறும். நாட்டரிசிக்கு 120 ரூபாவை நிர்ணயித்துள்ளனர். அரிசி இறக்குமதி செய்யப்பட்டதும் அதனை 95 ரூபாவுக்கு வழங்கலாம். அரிசி விலை அதிகரிப்பை தடுப்பதும் இறக்குமதியின் மற்றுமொரு நோக்கமாகும். ” – என்றார்.

ஜி.எஸ்.பி. பிளஸை பெறுவதற்கு சஜித் களத்தில்

ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்ட நிர்வாகம் அடாவடி – தொழிலாளர்கள் போராட்டம்

போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலைமை ஏற்பட்டது. அது கைகலப்பாகவும் மாறியது. இத்தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தோட்ட அதிகாரிகள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் 9 தொழிலாளர்கள் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகமே அடாவடியில் ஈடுபட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனை சுட்டிக்காட்டியே இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.

” மலசலகூடம் அமைப்பதற்கு கூட தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை. ஆயிரம் ரூபா சம்பள விடயத்திலும் ஏமாற்றம் இடம்பெறுகின்றது. 6 மாதங்களுக்கு மேலாக நிர்வாகம் அடக்கி ஆள முற்படுகின்றது. இந்நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்டுள்ளனர்.” -எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று (28), கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை இன்று (29) ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழாமினர் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்று (29) இடம்பெறவிருந்த நிலையிலேயே,  இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது.

இதற்கான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளார் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதன்படி புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கி அறிக்கை நாளை வெளியிடப்படும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

பதவி துறப்பாரா விவசாயத்துறை அமைச்சர்?

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பதவி துறக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு நடைபெற்றால் அமைச்சு பதவியை துறப்பேன் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சவால் விடுத்திருந்தார்.

எனினும், தற்போது அரிசி இறக்குமதி செய்வதற் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையிலேயே தோல்வியை பொறுப்பேற்று பதவி விலகுமாறு மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

‘இரண்டாவது பரிசோதனையிலும் ஆபத்து உறுதி’

சீனாவிலிருந்து நாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சேதனப் பசளை தொகையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுவதாக இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

அந்த பரிசோதனையில் குறித்த சேதனை பசளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

எனவே, குறித்த சேதனப் பசளை தொகையை நாட்டிற்கு கொண்டுவருவதை தவிர்க்குமாறு தாம் சிபார்சு செய்தவாக அவர் குறிப்பிட்டார்.

விசாரணைக்கு மறுப்பு

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று விசாரணைக்கு அழைத்திருந்தது.

எனினும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரியவருகிறது.

பிறிதொரு தினத்தை தனக்கு அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்று ஈனும் நிலையில் இருந்த பசுவை வெட்டி குளத்தில் வீசிய விஷமிகள்

வவுனியா தவசிகுளம் பகுதியில் கன்று ஈனும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றினை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள குளத்தில் எறிந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியா தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் நல்லின வளர்ப்பு மாடு கடந்த இருதினங்களாக காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து அவர் தேடுதல் மேற்கொண்டபோது அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.

குறித்த பசுமாட்டின் தலை மற்றும் உடல் பகுதிகள் கூரிய ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சஜித்தின் யோசனையை நிராகரித்த ரணில்

“கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள்வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது.” -என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு பதவி விலகி, மக்கள் ஆணையை பெறுவதற்காக தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் பரவல் உள்ள சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது பொருத்தமா என சிந்திக்க வேண்டும். கொரோவுக்கு மத்தியில் கனடா பிரதமர் தேர்தலுக்கு சென்றார். அவர் சிறப்பாக பொருளாதாரத்தை நெறிப்படுத்தினார். வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தினார். இதனால் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் தேர்தலுக்கு சென்றார். ஆனால் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுவதற்கு அந்நாட்டு மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். எனவே, கொரோனா முமையாக கட்டுக்குள் வரவில்லை. மீண்டுமொரு சுற்று வரலாம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீட்பதற்குமே நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்விரு விடயங்களையும் சீர்செய்த பின்னர் தேர்தலுக்கு செல்லலாம்.” -என்றார் ரணில் விக்கிரமசிங்க.