அரசியல் போர் ஆரம்பம் – விமலுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

” முதுகெலும்பிருந்தால் அமைச்சு பதவியை துறக்கவும்.” – இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு சவால் விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி.

” பங்காளிக்கட்சிகள் அரசுடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அரசின் வேலைத்திட்டங்களை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். முதுகெலும்பிருந்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு விமல் வீரவன்சவுக்கு சவால் விடுக்கின்றோம்.

உள்ளே இருந்து பொங்கியெழுவதைவிட வெளியே சென்று விமர்சிப்பதே மேல். ” – என்றும் திஸ்ஸ குட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, அமைச்சரவையில் பேச வேண்டிய விடயங்களை வெளியில் வந்து விமர்சிப்பது பொருத்தமற்ற நடவடிக்கை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. சபைக்குள் புகுந்த டைனோசர்

” அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்”(‘don’t choose extinction’) என்று ஐ. நா.சபையில் கேட்கிறது இந்த டைனோசர். அதன் குரலைத் தலைவர்கள் செவிமடுப்பார்களா?

ஏற்கனவே அழியுண்டுபோன உயிரினமாகிய டைனோசர் ஒன்று -ராஜதந்திர விதி முறைகளை மீறி – உலகத் தலைவர்களுக்கு உரையாற்றுகின்ற வீடியோப் படம் ஒன்று வெளியாகி உள்ளது.

கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான மிகப் பெரிய உலக மாநாடு தொடங்கும் வேளையில் இந்த வீடியோக்
“கிளிப்” வெளியிடப்பட்டுள்ளது.

ஐ. நா. பொதுச் சபையிலும் உலகெங்கும் உள்ள ஐ. நா. அலுவலகங்களிலும் கடந்த ஓரிரு நாட்களாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்ற இந்த வீடியோவை ஐ. நா.அபி விருத்தித் திட்டம் அமைப்பு (UN Developm ent Programme – UNDP) தயாரித்துள்ளது.

“Jurassic World” திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உதவியுடன் கணனி முப்பரிமாணக் காட்சிப் படங்களாக (CGI creature) உருவாக்கப்பட்ட அந்த டைனோசர் நியூயோர்கில் உள்ள ஐ. நா. பொதுச்சபை மண்டபத்துக்குள் பிரதிநிதிகளை ஆச்சரியப்படுத்தும் விதமாகத் திடுதிப்பென உள்ளே நுழைகிறது.முதலில் பாதுகாவலர் ஒருவருடன் நகைச்சுவையாக உரையாடிவிட்டு சபையின் முன்பாக வந்து ஒலிவாங்கியைப் பிடித்து உரையாற்றத் தொடங்குகிறது.

டைனோசரின் உரைக்கு உலகப் பிரபலங்கள் சிலர் பல மொழிகளில் பின்னணிக் குரல் வழங்கி உள்ளனர். பிரபல நடிகரும் பாடகருமாகிய Jack Blackஆங்கில மொழியில் குரல் வழங்கியுள் ளார்.

எங்களிடம் ஒரேயொரு சிறு பூமிக் கோள்தான் இருக்கிறது.தவறுகளுக்கு இனியும்என்ன காரணத்தைச் சொல்லப்போகிறீர்கள்?காரணங்களையும் மன்னிப்புகளையும் சொல்வதை நிறுத்திவிட்டு மாற்றங்களைத் தொடங்க வேண்டிய தருணம் இது.

பணத்தின் மூலம் நீங்கள் செய்கின்றஎல்லாக் காரியங்களையும் ஒரு தடவையோசித்துப் பாருங்கள்.உலகம் முழுவதும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

முழு இனத்தையும் அழிப்பதற்குப் பணத்தைச் செலவிடுவதை விட அவர்களைக்காப்பாற்றுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கவில்லையா?

-இவ்வாறு தலைவர்களைப் பார்த்துக் கேள்வி கேட்கிறது “பிராங்கி”(Frankie) என்ற பெயர் கொண்ட அந்த டைனோசர்.

பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ. நா. உச்சி மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் தொடங்கியுள்ளது. புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த தத்தமது பங்குக்கு எடுக்கவுள்ள காபன் குறைப்புத் திட்டமுன்மொழிவுகளுடன் சுமார் 200 நாடுகளது தலைவர்களும் பிரதிநிதிகளும் கிளாஸ்கோ நகரில் கூடியுள்ளனர்.

குமாரதாஸன், பாரிஸ்.

இலங்கை – பிரான்ஸ் நேரடி விமான சேவை ஆரம்பம்

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான நேரடி விமான சேவை 6 வருடங்களின் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை 1 மணிக்கு பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸின் பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பித்து வைப்பதற்கான விழா பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பண்டாராயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து Paris Charles De Gaulle விமான நிலையத்திற்கு செல்லும் என்றும் அதே நாளில் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு மற்றொரு ஸ்ரீலங்கன் விமானம் வரவுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

1980களில் இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையிலான முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 2015 இல், இந்த நேரடி விமானங்கள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

யாசகர்களுக்கான ‘தேடுதல் வேட்டை’

மேல் மாகாணத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாத யாசகர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்றிரவு (30) 7 மணித்தியாலத்திற்கும் அதிக காலம் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறாத 77 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களில் 22 பேருக்கு நேற்று (30) முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது மேல் மாகாணத்தில் வசிக்கும் 541 யாசகர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 464 பேர் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மனோவின் அழைப்பை நிராகரித்த ஜே.வி.பி.

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் நேற்று நடைபெற்ற சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளும்படி ஜேவீபி தலைவர் நண்பர் அனுர திசாநாயக்காவை ஏற்பாட்டாளர்களின் சார்பாக நான் நேரடியாக அழைத்திருந்தேன். அதேபோல் நண்பர் விஜித ஹேரதுக்கும் நான் நேரடியாக அழைப்பு விடுத்திருந்தேன். நிகழ்வில் கலந்துக்கொள்வதாகவே இருவரும் என்னிடம் கூறினார்கள். ஆனால், ஜேவீபி சார்பாக எவரும் கலந்துக்கொள்ளவில்லை. இதையிட்டு நான் கவலையடைகிறேன்.

சிறுகட்சி என்றால் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகள் மட்டுமல்ல. ஜேவீபி போன்ற அரசியல் சிறுகட்சிகளினதும் இருப்புகளை இந்த அரசாங்கம் இன்று கேள்விக்குறிக்கு உள்ளாக்கியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

கண்டி சமூக அபிவிருத்தி மன்றம் நடத்திய இந்த கலந்துரையாடல் இந்த தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல், தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு மட்டும் வரையறையானதல்ல. இதுபற்றி நான் நேற்று எனது உரையில் மிக தெளிவாக கூறினேன்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ம் திருத்தத்தின் மூலம் மேலும் பலமாக்கப்பட்ட பின்னணியில், பாராளுமன்றத்தையும் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வரையறை செய்ய இந்த அரசாங்கம் முயல்கிறது. தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளை போலவே, ஜேவீபி போன்ற மாற்று அரசியல் கொள்கைகளை முன்னெடுக்கும் கட்சிகளின் இருப்பையும் இது இல்லாதொழிக்க முயல்கிறது.

பல கட்சி பிரதிநிதித்துவங்களுக்கு பாராளுமன்றமும், மாகாணசபைகளும் இன்றைய விகிதாசார முறையில் கீழேயே சாத்தியம். எனவே இத்தகைய பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலமேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணிக்க முடியும். இது இந்நாட்டு ஜனநாயகத்துக்கு அடிப்படை அவசியமாகும்.

எனவே இந்த ஜனநாயகத்தை பாதுகாக்கும் பல கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் விகிதாசார தேர்தல் முறைமையை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஜேவீபி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என நான் விரும்பியிருந்தேன். ஆகவே இதை விளக்கி கூறி, நண்பர்கள் அனுர, விஜித ஆகியோரை நான் ஏற்பாட்டாளர்களின் சார்பில் அழைத்திருந்தேன். ஆனால், அவர்கள் வரவில்லை. அவர்கள் எங்களுடன் இது தொடர்பில் கரங்கோர்க்க வேண்டும் என விரும்புகிறோம். எனினும் இதுபற்றி அவர்கள்தான் இனி முடிவு செய்ய வேண்டும்.

நண்பர் ரிசாத் பதுர்தீன் கொழும்பில் இல்லாததால் கலந்துக்கொள்ளவில்லை. அவரது கட்சி உறுப்பினர்கள் கலந்துக்கொண்டார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து எம்பீக்களுக்கும் களுத்துறையில் பாதீடு தொடர்பில் செயலமர்வு நடைபெறுவதால் எவரும் கலந்துகொள்ளவில்லை. எனினும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தொலைபேசியில் அழைத்து எமது கலந்துரையாடல் தீர்மானங்களுக்கு தனது முழுமையான ஆதரவை என்னிடம் தெரிவித்தார்.

தடுப்பூசிகளுக்கு சவால் விடுக்கும் ‘A30’ வைரஸ்

பைசர் மற்றும் அஸ்ராஸெனகா உட்பட அனைத்து முக்கிய தடுப்பூசிகளின் பாதுகாப்பையும் தகர்க்கக் கூடிய கொவிட் வைரஸ் வகையான A30 வைரஸ் தொடர்பில், இலங்கையும் கவனம் செலுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த மாறுபாடு பரவினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எல்லாம் முடிந்து விட்டது என மக்கள் நடந்து கொண்டால் இன்னும் நான்கு வாரங்களில் மோசமான விளைவுகள் தென்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் சுகாதார ஆலோசனைகளை மக்கள் புறக்கணித்தால், கொவிட் நோய் பரவுவது வேகமெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘யுகதனவி’யை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது பேராபத்து

போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தும் அமெரிக்காவுக்கு, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்குவது பாரதூரமான விடயமாகும் – என்று அமைச்சர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எரிவாயு விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கவே கூடாது. அதிலும் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவது பாரதூரமான விடயமாகும். இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயமும்கூட.

இராணுவத்துக்கு தண்டனை வழங்காவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும், சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவராவிட்டால் பொருளாதாரத்தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவிப்புகளை விடுத்துவருகின்றது.

இந்நிலையில் நாட்டின் மின் கட்டமைப்புக்கு கேஸ் விநியோகிக்கும் அதிகாரம் அந்நாட்டு நிறுவனத்தின் கைகளுக்கு சென்றால் என்ன நடக்கும்? நாட்டை இருளில் மூழ்கடித்துவிட்டு சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவருமாறு வலியுறுத்தினால் என்ன செய்வது?

தேசிய பாதுகாப்பு, தாய் நாடு உள்ளிட்ட விடயங்களுக்கு இந்த உடன்படிக்கை அச்சுறுத்தலானது. அதனை தோற்கடிக்க வேண்டும். அதனை செய்வதற்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு நாம் தயார்.” – என்றார்.

‘உச்ச கட்ட மோதல்’ – பங்காளிகளுக்கு மொட்டு கட்சி கடும் எச்சரிக்கை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களை இலக்குவைத்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்தும் சொற்போர் தொடுத்தால், பங்காளிகளின் கன்னத்தில் அறைவதற்குகூட நாம் தயார் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசுக்குள் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்து விமர்சனங்களை முன்வைப்பதைவிட, வெளியில் சென்று முதுகெலும்புடன் விமர்சனங்களை முன்வைப்பதே மேல்.

எங்கள் கட்சி தலைவர்களை தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை எம்.பிக்களாகிய நாம் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.

முல்லைத்தீவுக்குள் புகுந்தார் ரிஷாட்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று காலை (30) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனை ஆரத்தழுவி, அங்குள்ள மக்கள் ஆறுதலளித்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி மற்றும் முள்ளியவளை ஆகிய பிரதேசங்களுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் விஜயம் செய்து, அங்கு வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது வயோதிபர்கள், தாய்மார்கள் அவரை வரவேற்று சுகம் விசாரித்ததுடன், அவரின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, தான் சிறையில் இருந்தபோது, தனக்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தனது நன்றிகளை தெரிவித்தார்.

ஹெரோயின் கடத்தல் – ரூ. 180 கோடி சொத்து

தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமிலவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம, இன்று (30) உத்தரவிட்டார்.

ஹெரோயின் கடத்தல் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமைக்காக இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் கொழும்பு தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த சிறிநாயக்க பத்திரனாலகே ருவன் சமில பிரசன்ன எனப்படும் தெமட்டகொட ருவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரின் சொத்துக்களின் மொத்த பெறுமதி 180 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் பூரணமான மற்றும் தொழில்நுட்ப விசாரணை தேவைப்படுவதால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரியதையடுத்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் இவர் தெமட்டகொட சமிந்தவின் சகோதரன் என்றும், இவரது வீட்டில் 4 அதி சொகுசு வாகனங்களும் கிலோ கணக்கில் தங்கமும் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சு.கவை பலப்படுத்துவோம் – நிமல் அறைகூவல்

தொழில் அமைச்சர் என்ற வகையில் தாமே பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இன்று (30) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாட்டை ஆட்சி செய்த பலமான ஒரு கட்சியாகும். எனினும் இப்போது சிறிய பின்னடைவை சந்தித்துள்ளது. நாம் எமது மத்திய செயற்குழுவின் அனுமதிக்கமையவே,கடந்த நல்லாட்சியில் இணைந்தது செயற்பட்டோம். மாறாக தனிப்பட்ட முடிவுக்கமைய செல்லவில்லை.

நல்லாட்சியில் ரணிலுக்கும். மைத்திரிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதனால் பிளவுகள் ஏற்பட்டன. முன்பு இருந்ததை விட எமது கட்சியின் வாக்கு வங்கி குறைந்துள்ளது உண்மை.

அதேபோல் பொதுஜன முன்னணியடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டதால் எமக்க 14 ஆசனங்கள் கிடைத்தன. விருப்பு வாக்கு பிரச்சினை அனைத்து கட்சிகளில் உள்ளது . அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் என கூறி வருகின்றோம்.

எமது கட்சி சார்பில் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமை கட்சி ஆதரவாளர்களிடையே ஒரு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் மறைப்பதில்லை. இதுவே கூட்டணி அரசியலின் சுபாவம்.

எமது ஆதரவாளர்களையும் கட்சியையும் வென்றால் மாத்திரமே குறுகிய காலத்தில் சுத்திர கட்சி தீர்மானமிக்கதாய் மாறும்.ஆகவே எமது கொள்ளைகளையும், வேலைத் திட்டங்களையும் கொண்டுச் செல்ல வேண்டும். இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தம் விவாதித்தக் கொண்டிருந்தால் எம்மால் இலக்கை அடைய முடியாது.

பெருந்தோட்ட மக்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்தது நாமே. எதிர்காலத்தில் தேசிய கொள்கை ஒன்றை வகுத்து செயற்படுவது அவசியம். எவரும் வரலாம். நாம் ஒருவரையம் வெட்டுவதில்லை. ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.” – என்றார்.

பாடசாலைகளை திறப்பது குறித்து வெளியான மற்றுமொரு தகவல்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களை 50 வீத மாணவர்களுடன், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘நீர்மூழ்கி விடயம் விகாரமாகிவிட்டது’ – மக்ரோனிடம் பைடன் நேரில் கவலை

ஆஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கி ஒப்பந்த விவகாரத்தை அமெரிக்கா “விகாரமாகக்” கையாண்டுவிட்டது என்று கூறியிருக்கிறார் அதிபர் ஜோ பைடன். அதற்காக பிரான்ஸின் அதிபர் மக்ரோனிடம் அவர் தனது கவலையை நேரில் தெரிவித்திருக்கிறார்.

ஐ. நா. பருவநிலை உச்சி மாநாட்டிலும் (COP26), ஜீ-20 நாடுகளது தலைவர்களின் மாநாட்டிலும் கலந்துகொள்வதற்காக ஐரோப்பாவுக்கு வருகை தந்துள்ளார்.

ஜோ பைடன்.அந்த விஜயத்தின் இடை யே நேற்று இத்தாலியில் வத்திக்கானில் உள்ள பிரான்ஸின் தூதரகத்தில் வைத்து அவர் அதிபர் மக்ரோனைச் சந்தித்துப் பேசினார்.

நேருக்கு நேரான இந்தச் சந்திப்பின் போது மக்ரோனும் பைடனும் ஒருவருக் கொருவர் கைலாகு கொடுத்து தோள் பட்டைகளைப் பற்றிக் கொண்டனர்.

பிரான்ஸுக்குப் பாதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்திய”Aukus” எனப்படும் நீர்மூழ்கிப் பாதுகாப்பு உடன்படிக்கை விவகாரத்தால் இரு நாட்டு உறவுகளில் பெரும் வெடிப்பு ஏற்பட்ட பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசியிருப்பது இதுவே முதல்முறை ஆகும். அதனால் அந்தச் சந்திப்புத் தொடர்பான செய்திகள் இரு நாடுகளினதும் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்தன.

நீர்மூழ்கி விவகாரத்தை அமெரிக்கா கையாண்ட செயலை பைடன் ஆங்கி லத்தில் “விகாரமானது” (“clumsy”) என்ற வார்த்தையில் குறிப்பிட்டார். அதற்காக மக்ரோனிடம் கவலையைப் பகிர்ந்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த ஒப்பந்தம் குறித்து பிரான்ஸுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது எனத் தான் தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தார் என்ற தகவலையும் பைடன் அங்கு வெளியிட்டார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களி டம் பேசிய மக்ரோன்”நம்பிக்கை என்பது காதலைப் போன்றது. அதை வெளிப்படு த்துவது நல்லது. அதை நிரூபிப்பது அதைவிடச்சிறந்தது” – என்று தெரிவித்தார்.

அண்மையில் ஆஸ்திரேலியா, ஜக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா ஆகியன இணைந்து Aukus எனப்படும் நீர்மூழ்கிப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்தன.

பிரான்ஸுடன் ஏற்கனவே உடன்பட்டிருந்த நீர்மூழ்கித் தயாரிப்பு இணக்கப்பாட்டை இடையில் முறித்துக் கொண்ட ஆஸ்திரே லியா அதுபற்றிப் பாரிஸுக்குத் தகவல் எதனையும் தெரிவிக்காமல் அமெரிக்காவுடன் ரகசியமாகப் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

தனது நீண்ட காலக் கூட்டாளியாகியபிரான்ஸைப் புறக்கணித்துவிட்டு ஆஸ்திரேலியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட அந்த ஒப்பந்தம் பாரிஸ் – நியூயோர்க் இடையிலான இருதரப்பு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருந்தது. அமெரிக்காவுக்கான தனது தூதரைத் திருப்பி அழைக்கும் அளவுக்கு பிரான்ஸின் பதில் நடவடிக்கை அமைந்தது. 

முதல்வர் வேட்பாளராக துடிக்கும் அரசியல் பிரமுகர்கள்

” வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிஷன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

‘ யுகதனவி’ விவகாரத்தால் அரசுக்குள் மோதல் ஆரம்பமாகியுள்ளது. பங்காளிக்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மக்களும் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். தேர்தலொன்று நடத்தப்படுமானால் இது தெரியவரும்.

வடமத்திய மாகாண முதல்வர் வேட்பாளராக களமிறங்க நானும் தயார். மக்கள் யார் பக்கம் என்பதை நிரூபித்துக்காட்டுவேன்.”- என்றார்.

‘ஜனாதிபதியின் தீர்மானம் தமிழர்களுக்கு எதிராக அமையாது’

தமிழ் பேசும் மக்களை பாதிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் இறுதித் தீர்மானங்கள் அமையாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியில் தமிழர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. எனினும் இதுதொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி, மூன்று தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயலணிகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

ஏனெனில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் மேற்கொள்ளப்படுகின்ற இறுதித் தீர்மானங்கள் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

நுனிப் புல் மேய்கின்றவர்களும் குறுகிய அரசியல் நோக்கங் கொண்டவர்களுகளுமே இவ்வாறான விடயங்களை தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக பூதாகரமாக்க முயற்சிக்கின்றனர்” என்று தெரிவித்தார்

தமிழக மீனவர்களை யாழ். சிறைக்கு மாற்றுமாறு உத்தரவு

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை, யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி இரண்டு படகுகளில், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள தமிழக மீனவர்கள் 23 பேரையும், யாழ்ப்பாண சிறைக்கு மாற்றுமாறு, யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிவான், கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாண சிறையில் வைக்க உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழில் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால், யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும்,இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோஷங்கள் எழுப்பியவாறு கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 5 இந்தோனேசிய பெண்கள் கைது

கல்கிஸை சேரம் மாவத்தை பிரதேசத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசிய பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலான மோசடி ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51, 35, 31 மற்றும் 28 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபரான விடுதி முகாமையாளர், குருநாகலை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் இந்தோனேசிய பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சியை தக்கவைக்க ‘இனவாதம்’ கையிலெடுப்பு

” இனவாதம் மற்றும் மதவாதத்தைக் கக்கி, மக்களை பிளவுபடுத்தி ஆட்சியைப்பிடித்த இந்த அரசு, தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் அதே பாணியைக் கையாள்கின்றது. இதற்காகவே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு,

” இனவாதம் பேசி, மதவாதத்தைக் கையில் எடுத்து, மக்களை பிளவுபடுத்தி, மோதல்களை ஏற்படுத்தியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக அன்று கையாண்ட யுக்திகளை கையாள முயற்சிக்கின்றார்.

ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் இந்த அரசை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ஞானசார தேரர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஊடகவியலாளர் என்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தினார். நீதிமன்றத்தை அவமதித்தார். இனங்களை இலக்கு வைத்து பிரச்சாரம் முன்னெடுத்தார். இப்படியான ஒருவர் தலைமையில் ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி ஏன் அமைக்கப்பட வேண்டும்? இதன் நோக்கம் தெளிவாகின்றது.

இனவாதம், மதவாம் உள்ளிட்ட விடயங்களை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு நீதிகோரிய அருட்தந்தையர்கள் தற்போது சி.ஐ.டிக்கு அழைக்கப்படுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

நுவரெலியாவில் வரலாறுகாணாத வெள்ளம்

நுவரெலியா, கந்தப்பளை , ராகலை ஆகிய பிரதேசங்களில் முன்தினம் ( 29.10.2021) வெள்ளிக்கிழமை மாலை பெய்த கடும் மழையினால் மேற்படி பகுதிகளில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டது.

இதனால் நுவரெலியா, பொரலந்த, கந்தப்பளை, கல்பாலம், ராகலை நடுகணக்கு, ஐபொரஸ்ட் , கோணபிடிய , டயகம உட்பட பல பிரதேசங்களில் காணப்படும் விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணியில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி உற்பதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் பல இடங்களில் வீடுகளும் பாதிப்புக் குள்ளாகியுள்ளன.