தடுப்பூசி அட்டை இல்லை: விரட்டப்பட்ட ஆஸி எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் பொப் கற்றர், கொவிட் தடுப்பூசி
பெற்றுக்கொண்ட அட்டை இல்லையென்ற காரணத்தால் ட்மவெர்த்
ஹோட்டல் பப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம் வசம் வைத்திருக்க வேண்டுமென நியூ சவுத்வேல்ஸ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
“ என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லை.நீங்கள் வேண்டுமானால் நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கேட்டுதெரிந்து கொள்ளுங்கள். நான் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொணடுவிட்டேன்”- என்று கற்றர் கூறியுள்ளார்.
இதற்கு ஹோட்டல் ஊழியர் , “வெளியே போ” என கடுமையான தொனியில்உத்தரவிட்டுள்ளார். தமது
ஊழியர் கடமையைசரிவரச்செய்துள்ளார் என ஹோட்டல் நிர்வாகம் ABC செய்தி சேவையிடம்
தெரிவித்துள்ளது. இதனையடுத்து கற்றர் உள்ளூர் ஊடகவியலாளர்களை அழைத்து ஊடக மகாநாடு நடத்தி தன்னிலை விளக்கத்தையளித்திருந்தார்.

‘யாழ். மாநகரசபையில் வரலாற்று நிகழ்வு’

வரலாற்றில் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு, செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய, அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

வல்வெட்டித்துறை நகரசபையின் பாதீடு மீண்டும் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 உறுப்பினர்களும் எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அதற்கமைய, ஒரு மேலதிக வாக்கினால் வல்வெட்டித்துறை நகரசபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை குழுவினால் முதலாவது தடவையாக பிரேரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது தடவையும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டமையால், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவர் ச.செல்வேந்திரா பதவி விலக்கப்படுவதுடன், புதிய தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு திகதி இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படவுள்ளது.

மாதகலில் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டுள்ள கடற்படை !

யாழ்ப்பாணம், மாதகல் – குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டான்களுடன் குவிக்கப்பட்டு , மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மாதகல் குசுமந்துறை கிராம சேவையாளர் பிரிவு – 150 , பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணியை சுவீகரிப்பதற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவுள்ளது.

அந்நிலையில் குறித்த காணியை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அரசியல்வாதிகள் , அப்பகுதி மக்கள் என பலரும் குறித்த காணிக்கு முன்பாக கூடிய வேளை , கொட்டான்களுடன் கடற்படையினர் அவர்களை சூழ்ந்து கொண்டு , அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

அச்சுறுத்தல்களை மீறியும் அப்பகுதியில் மக்கள் கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

‘இலங்கை முடக்கப்படாது’ – அமைச்சர் அறிவிப்பு

” நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு , அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது, ” நத்தார் பண்டிகை காலத்தில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, நாட்டை முடக்கும் திட்டம் உள்ளதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அத்துடன், புதிய பிறழ்வு தொடர்பிலும் நாம் விழிப்பாகவே இருக்க வேண்டும். சுகாதார தரப்பினர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானங்கள் எடுக்கப்படும்.

மார்ச்சில் வலுசக்தி தட்டுப்பாடு ஏற்படும் – ரணில் எச்சரிக்கை

அன்னிய செலாவணி குறைவடைந்தால் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படலாம். எனவே நாட்டின் தற்போதைய வெளிநாட்டு செலாவணியின் கையிருப்பு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்

வெளிநாட்டு செலாவணியின் அளவு வெகுவாக குறைவடையுமானால் நாட்டில் மின் துண்டிப்பு ஏற்படக்கூடிய நிலை உருவாகும் என்றும் தெரிவித்த அவர், மார்ச் மாதமளவில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் வலுசக்தி தட்டுப்பாடும் ஏற்படலாம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்: கடந்த வெள்ளிக்கிழமை வரையான நாட்டின் அன்னிய செலாவணிகளின் தற்போதைய நிலை மற்றும் நாட்டின் நிதி டொலர் ஊடாகவும் கையில் இருக்கும் தங்கங்களையும் டொலர் மூலமாக சபைக்கு தெரிவிக்க வேண்டும்.

அது தொடர்பான அறிக்கையை மத்திய வங்கி சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வலுசக்தி தீர்மானிக்கப்படுகின்றது.

அன்னிய செலாவணி குறைவடைந்தால் நாட்டில் மின்துண்டிப்பு ஏற்படலாம். அவ்வாறான நிலைமை ஏற்படுமானால் அதற்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் நாம் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கிணங்க வெளிநாட்டு செலாவணி தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும். எமக்கு கிடைத்துள்ள தகவலின் படி எம்மிடமிருக்கும் வெளிநாட்டு செலாவணியின் அளவு 1.5 டொலர் பில்லியனாகும். அதில் 300 தங்கம். அப்படியானால் எமது கையிருப்பு 1.2பில்லியனாகும்.

இந்த தகவல்களை கடந்த வெளிக்கிழமை மத்திய வங்கியானது சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையையே நாம் சபையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருமலை எண்ணெய் குதங்களை அரசு மீள பெற்றுக்கொள்ளுமா?

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் சபையில் கேள்வி எழுப்பினார்.

” இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள மேற்படி எண்ணெய்க் குதங்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்துள்ளது.

எனவே, எண்ணெய்க் குதங்கள் மீளப் பெற்றுக் கொள்ளாததேன் என்பது தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தனின் கோட்டையில் கூட்டமைப்பின் ‘பட்ஜட்’ தோற்கடிப்பு

திருகோணமலை, வெருகல் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் க. சுந்தரலிங்கத்தினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மொத்த உறுப்பினர்கள் 13 பேரில் 06 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் 07 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

இதற்கமைய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த வெருகல் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகளை திறப்பது தாமதமாகும் – ஆஸி.பிரதமர்

ந. பரமேஸ்வரன்

Omicron வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச எல்லைகளை திறந்து விடுவது தாமதமாகும் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் இது பற்றி தெரிவிக்கையில்,

2020 மார்ச்சில் இருந்த நிலைமைக்கு மீண்டும் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லையெனவும் மக்களை அமைதியாக இருக்குமாறும் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்டலினா அன்டர்சன் சுவீடன் பிரதமராக பதவியேற்பு

ந. பரமேஸ்வரன்

மக்டலினா அன்டர்சன் சுவீடனின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். இதன் மூலம் சுவீடனின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்.

அடுத்த செப்டெம்பர் மாதம் சுவீடனில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரை மக்டலினா அன்டர்சன் பிரதமராக பதவி வகிப்பார்.

இன்று சுவீடிஷ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மக்டலினா அன்டர்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கூட்டு கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் கடந்த வியாழக்கிழமை மக்டலினா அன்டர்சன் பதவி விலக நேர்ந்தது இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மக்டலினா அன்டர்சன் தனிக்கட்சியாக ஆட்சி அமைத்துள்ளார்.

ரணிலை கைவிட்டார் ரணதுங்க – அடுத்து என்ன?

ஐக்கிய தேசியக்கட்சியின் அனைத்துவிதமான அரசியல் செயற்பாடுகளில் இருந்தும் தான் ஒதுங்குவதாக முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அறிவித்தார்.

ஐ.தே.கவின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும் விலகியுள்ள அவர், இந்த முடிவுக்கான காரணங்களை பட்டியலிட்டு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசியக்கட்சியின்கீழ் போட்டியிட்டார். எனினும், வெற்றி கிடைக்கவில்லை.

தேர்தலின் பின்னர் கட்சியில் மறுசீரமைப்பு வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான சாதகமான பணிகள் இடம்பெறாத நிலையிலேயே ரணதுங்க் ஐகேவில் இருந்து வெளியேறியுள்ளார்.

சம்பிக்க ரணவக்கவின் 43 என்ற அரசியல் இயக்கம் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தாய்வானுக்கு 7 நாடுகள் நேசக்கரம் – சீனா கடும் சீற்றம்

ந. பரமேஸ்வரன்

சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிக்கும் பட்சத்தில் தாய்வானுக்கு நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்குவதற்கு 7 நாடுகள்
முன்வந்துள்ளன.

இதற்கான தொழிநுட்ப ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கவுள்ளது. பிரிட்டிஷ் கடற்படையின் நீர்மூழ்கி அணியைச்சேர்ந்த ஒய்வு பெற்ற அயன் மக்கீ இந்த நீர்மூழ்கி கட்டுமானங்களுக்காக நியமிக்கப்படவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் புலனாய்வுச்சேவை தெரிவித்துள்ளது.

தாய்வான் நீர்மூழ்கி தயாரிப்பு தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்தியா, அவுஸ்திரேலியா,தென்
கொரியா, கனடா. ஸ்பெயின் போன்ற நாடுகளில் இருந்து முன்னாள் கடற்படை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில்
வரவழைத்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் இது பற்றி கூறுகையில் இந்த நாடுகள் நெருப்புடன் விளையாடுகின்றன . அவர்கள் தங்களைத்தாங்களே சுட்டுக்கொள்ளப்போகிறார்கள் என தெரிவித்தார்.

வடக்கில் 3,000 ஏக்கர் காணி விடுவிப்பு

வடக்கில் மேலும் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் மேய்ச்சல் நிலத்திற்கான பற்றாக்குறை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இன்று சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்நிலைமை காரணமாக மாவட்டத்தில் பண்ணையாளர்களுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கில் மாத்திரமின்றி நாட்டின் பல பகுதிகளில் இந்தப் பிரச்சினை காணப்படுவதாக தெரிவித்தார்.

அத்துடன் வடக்கில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

5ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

நுவரெலியாவில் சுற்றுலா விடுதியொன்றில் ஐந்தாவது மாடியிலிருந்து தவறிகீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த (47 வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தையான தரங்க பியதர்ஷன ஹெட்டியாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் மேற்படி சுற்றுலா விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்துள்ளார்.

அவர் தங்கியிருந்த ஐந்தாவது மாடியில் உள்ள அறையின் ஜன்னல் வழியே தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

‘கேஸ்’ வெடிப்புச் சம்பவங்கள் – அறிக்கை பெற நடவடிக்கை

சயைமல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் வெளி மாவட்டங்களிலிருந்து 20 மாதிரிகள் நேற்று (28) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைசச்ர் தெரிவித்தார்.

இதனிடையே நேற்றைய தினமும் (28) சில பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

தாய்வான் எல்லைக்குள் ஊடுருவிய சீன விமானங்கள் விரட்டியடிப்பு

ந. பரமேஸ்வரன்

தாய்வான் எல்லைக்குள் நுழைந்த 27 சீன விமானங்களை தாய்வான் விமானப்படை துரதியடித்துள்ளது.

18 fighter விமானங்களும், ஐந்து அணு வல்லமை கொண்ட குண்டுவீச்சு விமாமனங்களும் ஒரு Y20 விமானமும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக தாய்வான் தெரிவித்துள்ளது.

சீனாவின் சுதந்திரதின நிகழ்வுகளின் போது சீனாவின் பலத்தை பரீட்சித்துப்பார்க்கும் நோக்குடன் இடம்பெற்ற
ஒரு நிகழ்வே இது என் சீனா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தாய்வானின் பதில் நடவடிக்கையை சீனா பரீட்சித்துப்பார்ப்பதாகவும் தாய்வான் தெரிவித்துள்ளது.

தாய்வான் எதற்கும் தயாராகவே உள்ளது என தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தாய்வானும் ஐரோப்பாவும் இணைந்து செயற்பட வேண்டுமென தாய்வான் ஜனாதிதிபதி தசை லெங் வென் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிக்கு ரிஐடி வலை!

வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரை, பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு, பயங்கரவாத விசாரணை பிரிவினரால், (டி.ஐ.டி) இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் என்பவருக்கே, இவ்வாறு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 1ஆம் திகதி, கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக, விசாரணையை மேற்கொள்வதற்கு 2021ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 01ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவு, கெப்பிட்டல் கட்டிடம், நாரன்பிட்ட முகவரியில் அமைந்துள்ள 3ஆம் மாடிக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வைரஸ் – உஷார் நிலையில் இலங்கை

ஒமிக்ரோன் என்ற வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் திரிபு நாட்டுக்கு பரவுவதை தடுக்க அரசாங்கம் என்ற வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆறு நாடுகள் தொடர்பாக கடுமையாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மூன்று நாட்களுக்கு முன்னரே இது தொடர்பான தீர்மானத்தை எடுத்தது.

சுகாதார அமைச்சும் இது குறித்து விசேட கவனத்தை செலுத்தியுள்ளது. உலகம் வீரியம் கொண்ட கொரோனா திரிபை கண்டறியும் முன்னரே இலங்கை பூஸ்டர் தடுப்பூசியை வழங்கியது.

ஜனாதிதி கோட்டாபய ராஜபக்சவும் அரசாங்கம் இந்த விடயத்தில் விசேட அக்கறையும் செயற்பட்டு வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதார கண்காணிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வருகை தரும் சகல விமான பயணிகளின் சுகாதார நிலைமைகள் தொடர்ந்தும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறையினர் விசேட மென் பொருள் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஊடகரை தாக்கிய இராணுவத்துக்கு சபையில் கண்டனம்

” முல்லைத்தீவில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு- செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படமெடுத்த ஊடகவியலாளர் கடந்த 27 ஆம் திகதி இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளார். முற்கம்பி சுற்றப்பட்டிருந்த பச்சை மட்டையாலேயே அவர் தாக்கப்பட்டுள்ளார். அந்த மட்டையை பார்க்கும்போது முன்கூட்டியே தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கண்துடைப்புக்கு இராணுவத்தினர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது நீதிமன்றம் செல்லாத வகையில் பொலிஸ் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.”- என்றார்.

ஓயாத விலை உயர்வு – தொழிலாளர்கள் போராட்டம்

நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலை குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தியும் ஆயிரம் ரூபாவை முறையாக வழங்குமாறு அழுத்தம் கொடுத்தும் அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றதோடு, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதாகவும், தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுவதுடன், தொழிற் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள் அரசாங்கத்தால் தற்போது பொருட்களின் விலை அதிகரிப்பால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.

அத்தோடு, தேயிலை செடிகளில் கொழுந்தின் விலைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்துள்ளதோடு, குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.