மன்னார் பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் ஒரு மேலதிக வாக்கினால் இன்று தோல்வியடைந்தது.

சபை அமர்வு தவிசாளர் சாகுல் ஹமீட் முகமட் முஜஹிர் தலைமையில் இன்று நடைபெற்றது.

அமர்வில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நகல் பிரதேச சபையின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜஸ்டின் கொன்சால் குலாஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு வௌியிட்டார். இதனை தொடர்ந்து மேலும் சில உறுப்பினர்களும் தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமுள்ள மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 7 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும்
தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் ஒருவரும் அடங்கலாக 10 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 2 உறுப்பினர்களும்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு ஒரு வாக்கினால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கோர விபத்து – ஐவர் படுகாயம்!

பதுளை – பசறை பிரதான வீதியில் 10 ஆம் கட்டைப் பகுதியில் ஆட்டோவொன்றும், பஸ்சும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆட்டோவில் பயணித்த ஐவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுளளனர்.

பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உலகில் முதல் நாடாக புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து

பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதன் அடிப்படையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பும் அமைகிறது.

இலங்கையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், நியூசிலாந்தில் இலங்கை நேரப்படி இன்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

‘கொரோனா’ – பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 17 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

11 ஆண்களும், 6 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,979 ஆக அதிகரித்துள்ளது.

‘மூன்றிலிரண்டு முக்கியமில்லை – காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும்’

” பங்காளிக்கட்சிகளின் அழுத்தத்தால் சில தீர்மானங்களை மீளப்பெற வேண்டிய நிலைமை கடந்த காலத்தில் அரசுக்கு ஏற்பட்டது. இனி அவ்வாறு நடக்காது. 2022 முதல் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும்.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசு எதிர்ப்பார்த்த இலக்கை நோக்கி கடந்த இரண்டு வருடங்களில் பயணிக்க முடியாமல்போனது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள  வேண்டும். 2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் உரிய வகையில் நிறைவேற்றப்படும். அதற்காக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். ஜனாதிபதி தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) இது சம்பந்தமாக தீர்க்கமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெறுமானால் வேலையை நிறுத்தியாவது, அந்த திட்டத்தை நாம் நிச்சயம் செயற்படுத்துவோம்.  

எமது தோழமைக்கட்சிகள் மற்றும் சில குழுக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் சில தீர்மானங்களை நாம் மீளபெற்றோம். இது பாரிய தவறாகும். கிழக்கு முனையத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டனர். இன்று என்ன நடக்கின்றது? கிழக்கு முனையம் மேம்படுத்தப்படவில்லை. முதலீட்டாளர்களும் வரவில்லை. இதனால் நாட்டுக்குதான் பாதிப்பு.

எனவே, இனிவரும் காலங்களில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும். கூட்டு பொறுப்பை ஏற்காதவர்கள் அவர்களின் வழியில் பயணிக்கலாம். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பது எமக்கு பிரச்சினை கிடையாது.” – என்றார். 

’12 மாதங்களில் 2,000 மேற்பட்டோரின் உயிரை பலியெடுத்த விபத்துகள்’

2021 ஜனவரி முதல் டிசம்பர் 27 ஆம் திகதிவரை நாடு முழுவதும் நடந்த வாகன விபத்துக்கள் காரணமாக 2 ஆயிரத்து 419 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 697 பேர் பாதசாரிகள். 901 பேர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்கள் என்பதுடன் 152 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாகன விபத்துக்களில் 13 ஆயிரத்து 469 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 263 பேர் படுகாயமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 216 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

‘பெருந்தொகை மஞ்சளுடன் மன்னாரில் சிக்கிய இருவர்’

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 41 கிலோ கிராம் மஞ்சளுடன் இருவர், மன்னார்-நருவிழிக்குளம் பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான இருவரையும் மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பதவி விலகி தேர்தலுக்கு செல்லுமா கோட்டா அரசு?

” நாட்டை உரிய வகையில் நிர்வகிக்க முடியாவிட்டால், இந்த அரசு பதவி விலகி – பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்.” – என்று இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,

” தற்போதைய சூழ்நிலையில் எமக்கு தலைவர்கள் அல்ல, வேலைத்திட்டங்களே அவசியமாக உள்ளன. மக்களை தியாகம் செய்யுமாறு கூறிவிட்டு, ஆட்சியாளர்கள் சுகம் அனுபவித்தால் அதனை அனுமதிக்க முடியாது.

தற்போதைய அமைச்சரவை தோல்வி கண்டுள்ளது. அமைச்சரவை தோல்வியெனில் முழு நாடும் தோல்விதான். எனவே, துறைசார் அனுபவம் உள்ளவர்களை அந்தந்த அமைச்சு பதவிக்கு நியமிக்குமாறு வலியுறுத்துகின்றேன்.

அவ்வாறானவர்களை நியமித்து, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு புதிய வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அரசுக்கு இந்த நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால், பதவி விலகி – தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். அப்போது நாட்டை நிர்வகிக்கக்கூடியவர்கள் ஆட்சியைப் பொறுப்பேற்பார்கள்.” – என்றார்.

2025 இல் முன்னெடுக்கவுள்ள திட்டத்தை வெளியிட்டது சீனா

ந. பரமேஸ்வரன்

2025 ஆம் ஆண்டு மின் வர்த்தகம் (e commerce) தொடர்பான காப்புரிமைச் சட்டங்களை இறுக்கமாக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இதன் மூலம் நேரடி அஞ்சல்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஊடாக வருமானத்தை ஈட்ட முடியுமென சீனா தெரிவித்துள்ளது.

காப்புரிமை பாதுகாப்பானது புதிய தொழில் துறைகளையும் புதிய வர்த்தகத்துறைகளையும் உருவாக்கும் என சீனா எதிர்பார்க்கிறது.

இது புதிய தொழில் நுட்பங்களையும், பாரிய தகவல் சேமிப்பையும்,செயற்கை ( Artificial intelligence)நுண்ணறிவையும் உருவாக்கும் என சீனா தெரிவித்துள்ளது. இதன் மூலம் நேரடி அஞ்சல்கள் மற்றும் விளையாட்டுத்துறை என்பன மேலும் வளர்ச்சியடையும் என சீனா தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிகாமம் வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு போன்ற கோஷங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர்.

கொட்டும் மழையிலும் கடற் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிரடி அரசியல் ஆட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க.!

நான்கு முக்கிய துறைகளை உள்ளடக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் ஒரே தடவையில் அரசியல் நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

நான்கு முக்கிய துறைகளான இளைஞர்அமைப்புகள், மகளிர் அமைப்புகள், உள்ளுராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்திப்பது மற்றும் கீழ்மட்ட மக்களுக்கான வேலைத் திட்டம் ஆகியன அதில் உள்ளடங்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கு அமைய கட்சியின் கொள்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அதனையடுத்து அடுத்தவாரம் முதல் முழுமையான அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரதித் தலைவரான ருவன் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் புதிய வருடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
 

’12 மாதங்களுக்குள் ரூ. 825 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது’

202 பில்லியன் ரூபாவை அச்சிடுவதற்கு இலங்கை மத்திய வங்கி நேற்று முன்தினம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதியின் பின்னர் பணம் அச்சிடப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 825 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் இலங்கை மத்திய வங்கி 48.5 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்த போதிலும் அதில் 33.5 பில்லியன் பெறுமதியான முறிகளையே விற்பனை செய்ய முடிந்துள்ளது.

வட்டி விகிதம் மற்றும் ​நாணய மாற்று விகிதத்தை தொடர்ந்தும் கட்டுப்படுத்துவதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி W.A.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

‘ பிரபாகரன் இருந்திருந்தால் இன்று வடக்கு, கிழக்கு கையளிக்கப்பட்டிருக்கும்’

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை கையளித்துவிட்டு, அதற்கு பதிலாக இந்த அரசு டொலர்களைக் கோரியிருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. அவரால் சுயமாக சிந்தித்து செயற்பட முடியவில்லை. இந்நிலையில் ஜனாதிபதி செயலாளர் பதவியை மாற்றினால் சரியா? பிரச்சினைகள் தீருமா? பல்வேறு வழக்குகளுடன் தொடர்புடைய ஒருவரை புதிய செயலாளராக நியமிப்பதன்மூலம் நெருக்கடி தீர்ந்துவிடுவா?

நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மக்களுக்கு கடும் நெருக்கடி. உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஊழல், மோசடிகளும், முறையற்ற அபிவிருத்திகளும் நெருக்கடி நிலைமைக்கு காரணம்.

தற்போது பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் டொலரை வழங்குமாறு அவரிடமும் இந்த அரசு கோரியிருக்கும். அதற்கு பதிலீடாக வடக்கு, கிழக்கு கையளித்திருக்கும். ஏனெனில் இன்று நாட்டிலுள்ள பெறுமதியான வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்க்பட்டுவருகின்றன ” – என்றார்.

பதில் பிரதமராக பஸில்! மொட்டு கட்சி ஆதரவு!!

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை பதில் பிரதமராக நியமிப்பது தொடர்பில் அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாகவும், சிகிச்சைகளின் பின்னர் சுமார் ஒருமாதம்வரை அவருக்கு கட்டாய ஓய்வு தேவைப்படுவதாலும், பதில் பிரதமர் நியமனம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது.

இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை கொண்டவர். எனவே, அவருக்கு பதில் பிரதமர் பதவியை வழங்குவதில் உள்ள சட்டரீதியிலான சிக்கல்கள் குறித்தும், அரசியல் ரீதியில் எழும் எதிர்ப்புகள் பற்றியும் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.

‘ஆட்சியை கலைக்கவும் முடியாது – கவிழ்க்கவும் முடியாது’

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இலங்கை பிரதமராகவும் மஹிந்த ராஜபக்‌ஷவே உள்ளார். அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும் முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

” ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை ஆரம்பிக்கும்போது நாம் பல சவால்களை எதிர்கொண்டோம். இருப்பினும், அந்தச் சவால்களை முறியடித்து தனிப் பெரும் கட்சியாக பொதுஜன முன்னணியை வளர்த்தெடுத்துள்ளோம். இதற்கு மக்களின் அமோக ஆதரவே முக்கிய காரணம். இப்போது எவராலும் அசைக்க முடியாத மாபெரும் கட்சியாக, கூட்டணியாக பொதுஜன முன்னணி திகழ்கின்றது.

சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியினர் நினைப்பது போல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லை. இங்கு கருத்துச் சுதந்திரத்துக்கு இடமுண்டு. எவரும் கருத்துக்களைப் பகிரங்கமாகத் தெரிவிக்க முழுச் சுதந்திரம் உண்டு. ஒரு சிலரின் உணர்ச்சி மிகுந்த கருத்துக்களை வைத்துக்கொண்டு எதிரணியினர் அரசியல் நடத்துகின்றனர்.

இதேவேளை, எதிரணியினரின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான அரசியல் பரப்புரைக்கு மக்கள் எவரும் செவிசாய்க்கக்கூடாது. 2022ஆம் ஆண்டில் எமது அரசின் வேலைத்திட்டங்களை நாடெங்கும் விஸ்தரிக்கவுள்ளோம். பொருளாதாரப் பாதிப்பிலிருந்து நாம் மீண்டெழுவோம். இந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை” என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றத்துக்கான திகதி அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் அமைச்சரவை 2022 ஜனவரி 08 ஆம் திகதி மறுசீரமைக்கப்படவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பிரதமரும் இணக்கம் வெளியிட்டுள்ளார். அந்த மாற்றத்தை ஜனவரி 08 ஆம் திகதி நிகழ்த்துவதா அல்லது 18 ஆம் திகதி நிகழ்த்துவதா என்பது தொடர்பில் தற்போது ஆராயப்பட்டுவருகின்றது.

முக்கியமான சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், புதிய சிலருக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

‘விலை குறைந்த பிரேதப்பெட்டியில் டுட்டுவின் பூதவுடல்’

ந. பரமேஸ்வரன்

விலை குறைந்த பிரேதப்பெட்டியில் தென்னாபிரிக்க விடுதலைப்போராளி நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டது.

டெஸ்மண்ட் டுட்டுவின் வேண்டுகோளுக்கிணங்கவே (தனது உடலை விலை குறைந்த பிரேதப்பெட்டியில் ஆடம்பரமின்றி எடுத்துச்செல்ல வேண்டும் என்ற) இந்த ஏற்பாடு என ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்காவின் தலைநகர் கேப் டவுணில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் டெஸ்மண்ட் டுட்டுவின் பூதவுடல் இரு நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிச்சடங்குகள் ஜனவரி முதலாம் திகதி நடைபெறவுள்ளன.

சனிக்கிழமை டுட்டுவின் பூதவுடல் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர் அவரது சாம்பல் (அஸ்தி) தேவாலயத்தில் பாதுகாக்கப்படும். டுட்டுவின் சேவைக்கு நன்றி செலுத்தும் முகமாக தேவாலய மணி நண்பகல் 12.00 மணிக்கு தொடர்ந்து பத்து நிமிடங்கள் தினமும் ஒலிக்கவுள்ளது.

கூட்டு ஆவணத்தில் கைச்சாத்திட மலையக கட்சி மறுப்பு

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால்சென்று, சுயநிர்ணய உரிமைகோரும் முயற்சிக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அது தொடர்பான ஆவணத்தில் கையொப்பம் இடவும்மாட்டோம்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை நாம் ஏற்கின்றோம். அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதனை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதற்கு அப்பால் சென்று, சுயநிர்ணய உரிமை கோரப்பட்டால் அதற்கு வழங்க முடியாது. கையொப்பம் இடவும் மாட்டேன். ஏனெனில் அவ்வாறு செய்தால் அது நாமும் தனி நாடு கோருகின்றோம் என்ற எதிர்ப்பை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கிவிடும். அது எமது மக்களுக்கும் பாதிப்பாக அமையும். எமது மக்களுக்கு உரிமை, அபிவிருத்தி என இரண்டுமே அவசியம்” – என்றார்.

‘ விமானத்தில் வைத்து முதியவரை சரமாரியாக தாக்கிய பெண் கைது

ந. பரமேஸ்வரன்

விமானத்தில் உணவருந்தியவேளை மாஸ்க் அணியவில்லை என்ற காரணத்திற்காக முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநில தலைநகர் அட்லாண்டா நோக்கி பயணம் செய்த டெல்டா எயர்லைன்ஸ் விமானதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் உணவருந்திக்கொண்டிருந்த முதியவரை அருகிலிருந்த சக பெண் பிரயாணி ஏன் மாஸ்க் அணியவில்லை என கேட்டதற்கு தான் சாப்பிடுவதால் அணியவில்லை மாஸ்க் என முதியவர் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து உன்னை யார் இங்கு வந்து அமரச்சொன்னது என பெண் பிரயாணி கேட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களில் ஈடுபட்டனர். இருவரும் மோசமான வார்த்தைப்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் விமான சிப்பந்திகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றதுடன் எழுந்து நின்ற பெண்ணை ஆசனத்தில் அமர்த்தவும் முயசித்தனர்.

முதியவரை கண்டபடி ஏசிக்கொண்டிருந்த பெண் தனது மாஸ்க்கை உரிய முறையில் அணியவில்லை. இதனை அவதானித்த விமான சிப்பந்தி ஒருவர் அவரை உரிய முறையில் மாஸ்க்கை அணியமாறு கூறியுள்ளார். சிப்பந்தி சொன்னதை பொருட்படுத்தாத பெண் தொடர்ந்தும் முதியவரை மாஸ்க்கை அணியுமாறு உத்தரவிட்டுக்கொண்டிருந்தார்.

பொறுமையிழந்த முதியவர் மோசமான வார்த்தையால் பெண்ணை ஏசியுள்ளார்; உடனே அந்தப்பெண் என்னையா அவ்வாறு கூறுகிறாய் என கூறி முதியவரின் சேர்ட் கொலரை பிடித்துள்ளார் நீ எனக்கு அடிக்கிறாய் சிறைக்குபோகப்போகிறாய் என முதியவர் கூறியுள்ளார்; உடனே அருகிலிருந்த சிப்பந்தி முதியவரின் தோளைப்பற்றியிருந்த பெண்ணின் கையை விடுத்துள்ளார். விமானம் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘தமிழ்க் கட்சிகளின் கூட்டு’ – ரஜினியின் பாஷையில் பதிலடி கொடுத்த டக்ளஸ்

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவால் அரசுக்கு எவ்வித நெருக்கடியும் ஏற்படப்போவதில்லை – என்று ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

” ரஜினியின் பாஷையில் கூறுவதாக இருந்தால் ஜுஜுபி. அதாவது எவ்வித நெருக்கடியும் இல்லை. அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் சேர்வதும், பிரிவதும் வழமை. மாகாணசபை முறைமை பற்றி நாம் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றோம். ஆனால் 13 விவகாரத்தில்கூட இவர்கள் மத்தியில் இணக்கப்பாடு இல்லை.” – என்றார் அமைச்சர் டக்ளஸ்.