ரஷ்யாவுக்கு இராஜதந்திர மட்டத்திலும் மேற்குலகம் ‘அடி’

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைகூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா செல்லவிருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் பயணம் தடைப் பட்டுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov ஐ.நா. மனித உரிமைகள் பேரவைகூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை ஜெனீவா செல்லவிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது வான்பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன. இதனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைகூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனீவா செல்லவிருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் பயணம் தடைப் பட்டுள்ளது.

ஐ.நா. ஆணையரின் அறிக்கைக்கு கூட்டமைப்பு வரவேற்பு

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. இந்நிலையில் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் இலங்கை பற்றிய, ‘இலங்கையில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பிலான அறிக்கையின் முதற்பிரதி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விபரீதம் உள்ளிட்ட தமிழர் நலன்சார் பல விடயங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நாம் அறிக்கையூடாக வெளியிடவுள்ளோம்” – என்றார்.

சமரச பேச்சில் உக்ரைன் வலியுறுத்திய விடயம்…

பெலாரசின் கோமல் நகரில் நடைபெற்று வரும் பேச்சின்போது, ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று இன்று பேச்சில் உக்ரைன் பங்கேற்றுள்ளது. முதலில் பேச்சுக்கு வர மறுத்த உக்ரைன், வேறு சில இடங்களை பரிந்துரைத்து இருந்த நிலையில், தனது முடிவில் இருந்து சற்று பின் வாங்கி பேச்சுக்கு சம்மதம் தெரிவித்தது.

இதன்படி, பெலாரசில் உள்ள கோமல் நகரில் ரஷியா – உக்ரைன் பிரதிநிதிகள் இடையே பிற்பகல் 3.50 மணிக்கு பேச்சு தொடங்கியது. இந்த பேச்சின்போது, ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். ரஷிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.

‘நிர்வாணப்பட விவகாரம்’ – இருவர் கைது!

பெண்ணொருவரின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தி அந்தப் பெண்ணிடம் பணம் பறித்து வந்த விமானப்படை சிப்பாயும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிந்தொட்ட, ஹிக்கடுவ வத்த என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயதான இந்த விமானப்படை சிப்பாய், முல்லைத்தீவு விமானப்படை முகாமில் கடமையாற்றி வந்துள்ளார். இவரும் இவரது 30 வயதான மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனது நிர்வாண புகைப்படமொன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக அச்சுறுத்தி பல சந்தர்ப்பங்களில் தன்னிடமிருந்து 20 லட்ச ரூபா வரை பெற்றுக்கொண்டதாக திஹகொட கப்புதுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திஹகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இன்றும் 12 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் மீனவர்கள் இன்று(28) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

07 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் 12 மீனவர்களும் இன்று(28) விடுதலை செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கா. மோகனகுமார் தெரிவித்தார்.

விடுதலை செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை சிறைச்சாலைகள் அத்தியட்சகரூடாக மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அங்கிருந்து மீனவர்களை தமிழகத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

7 நாட்களுக்குள் 44 பேரின் உயிரை பறித்த விபத்துகள்

கடந்த வாரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 43 கோர விபத்து சம்பவங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

‘பஸில் விடுதலை’

அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடுவ​ளை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறையற்ற வகையில் கையாண்டமை தொடர்பிலேயே பஸிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கரும்புலி படகு மீட்பு – விசாரணை வேட்டை தீவிரம்

மருதங்கேணிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுண்டிக்குளம் பகுதியில் கடலில் மறைத்து வைக்கப்பட்ட , தமிழீழ விடுதலை புலிகளின் கடற்புலிகளுடைய தற்கொலை தாக்குதல் படகு ஒன்று நேற்று திங்கட்கிழமை இராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த படகு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட படகு சோதனையிடப்பட்டபோது படகில் தற்கொலை தாக்குதலுக்கான வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

‘சமரச பேச்சுக்கான களம் தயார்’

சமரசத்துக்கான பேச்சு மேசை தயாராக உள்ளது என பெலாரஸ் அறிவித்துள்ளது.

ரஷ்யாவும் உக்ரேனும், பெலாரஸ்ஸில் சந்தித்து சமாதான பேச்சுகளை நடத்துவதற்கு நேற்று இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே பெலாரஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

இரு தரப்பு (ரஷ்யா-உக்ரேன்) கொடிகளுடன் பேச்சுக்கான மேசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இரு தரப்பு பிரதிநிதிகளும் வந்து இறங்கியதும் பேச்சு ஆரம்பமாகும் என வும் பெலாரஸ் தெரிவித்துள்ளது.

” பேச்சு மூலம் ஒரு தீர்வு கிடைக்குமென நாங்கள் நம்பவில்லை. எனினும் பேச்சுகளில் கலந்து கொள்கிறோம் என உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தீர்க்கமான கட்டம் நெருங்கிவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி

அடுத்த 24 மணித்தியாலங்களும் மிகவும் கடினமானவை என உக்ரேன் ஜனாதிபதி Zelensky தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுடன் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே உக்ரேன் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.உக்ரைன் மக்கள் , அந்நாட்டு ஜனாதிபதிக்கு கடந்த டிசம்பர் மாதம் இருந்ததை விட இவ்வாரம் மும்மடங்கு அதிகரித்த ஆதரவை வழங்கியுள்ளனர்.

90% மக்கள் உக்ரேன் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். சமூக நிறுவனமொன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 91% மக்கள் உக்ரேன் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். 6% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

3% மக்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் உட்பட 2000 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்ய தாக்குதலை முறியடிக்கும் வாய்ப்புகள் பற்றி கேட்டபோது, 70% பேர் அது சாத்தியம் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

உக்ரேன் படைகளுக்கான ஆதரவு ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுப்பதற்கு முன்பு இருந்ததை விட தற்போது அதிகரித்து வருகிறது.

‘அன்று புலிகளை வழிநடத்தியவர்களே இன்று கூட்டமைப்பையும் வழிநடத்துகின்றனர்’

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு துளியும் அக்கறை இல்லை. புலிகளை அன்று வழிநடத்தியவர்களின் தேவைக்கேற்பவே இவர்கள் செயற்படுகின்றனர் – என்று இராஜாங்க அமைச்சர் செயான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது, இவர்கள் (தமிழ் எம்.பிக்கள்) சர்வதேசத்துக்காக எதையாவது கதைக்க முற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களே நல்லாட்சி அரசை வழிப்படுத்தினர். கூட்டமைப்பினரை திருப்திப்படுத்தவே தேர்தல் தொடர்பான சட்டமூலம்கூட வாபஸ்பெறப்பட்டது. எனவே, நல்லாட்சியின்போது இவர்களால் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியாமல்போனதற்கு தற்போது நாம் பொறுப்புக்கூற முடியாது.

கூட்டமைப்பினரைபோல சும்மா இருப்பவர்கள் அல்ல எமது ஆளுங்கட்சி உறுப்பினர்கள். எனவே, ஜனாதிபதியை சந்திக்க செல்வதாக இருந்தால் முன்கூட்டியே நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பது இவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். நினைத்த நேரத்தில் ஜனாதிபதியை சந்திக்க முடியாது.

அன்று பயங்கரவாத குழுவை (புலிகளை) வழிநடத்திய குழுக்களின் தேவையையே இவர்கள் நிறைவேற்ற முற்படுகின்றனர். மாறாக தமிழ் மக்கள் தொடர்பில் கூட்டமைப்பினருக்கு துளியளவேனும் அக்கறை இல்லை. இவர்களுக்கு அவ்வாறு அக்கறைப்பட வேண்டியதும் இல்லை. ஏனெனில் தீவிரவாதிகளை வழிநடத்தும் குழுவினர் இவர்களை சிறப்பாக பாதுகாத்துக்கொள்கின்றனர். அதனால்தான் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள இனவாதம், மதவாம் கதைக்கின்றனர்.” – என்றார்.

புடினுக்கு எதிராக ரஷ்யாவில் தீவிரமடையும் போராட்டம்

உக்ரைனில் நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ரஷ்யாவில் மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாஸ்கோ உட்பட மொத்தம் 48 நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. அப்போது உக்ரைன் மீதான அத்துமீறலை புடின் அரசு நிறுத்த வேண்டும் என உக்ரைனை சேர்ந்தவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் உள்ளிட்ட பல பகுதிகளில் அப்படி முழக்கமிட்ட போராட்டக்காரர்களை பாதுகாப்புப்படையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இப்படியாக நேற்று ஒரு நாள் மட்டும் 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் புடின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 4 நாட்களில் மட்டும் மொத்தம் 5,500 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

‘ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் அவசியம்’

இலங்கை தொடர்பிலான விசாரணைகளை இனியும் தாமதப்படுத்தாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காக ஐ.நா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமை பிரதிநிதிகளுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற, அத்துமீறல்கள் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக ஐ.நா-வின் விசேட அறிக்கையாளர் ஒருவரை நியமிப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி, 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட மக்கள் பேரணியையும் கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்பு, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட மேலும் வல விடயங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது

ஜெனிவா சமர் ஆரம்பம் – 03 ஆம் திகதி விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.

இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அன்றைய தினம் மனித உரிமை ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது.

ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கையின் சார்பில் ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர்ஜீ. எல். பீரிஸ், நீதியமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அது தொடர்பில் தெரிவிக்கையில்:

” ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கைக்கு உரிய பதில் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் இலங்கையின் நிலைப்பாட்டினை ஆணித்தரமாக முன்வைப்பதற்கும் தயார் நிலையில் உள்ளோம்.” – என்றனர்.

அதேவேளை, இலங்கையிலிருந்து சென்றுள்ள இராஜதந்திர தூதுக்குழுவினருக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 49வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் அமர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளன.

உலகின் மிகப்பெரிய விமானத்தை தாக்கி அழித்தது ரஷ்யா

கொரானா நேரத்தில் நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உலகின் “மிகப்பெரிய” விமானம் ரஷியாவால் அழிக்கப்பட்டது.

இன்று 5-வது நாளாக உக்ரைன் மீதான ரஷியாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தலை நகர் கீவ்வில் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகின. கீவ் நகரை பிடிக்க ரஷிய படையினர் தீவிரமாக உள்ளனர்.

உக்ரைன்- ரஷிய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷிய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தியது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கொரானா தொற்றின் நெருக்கடியான காலங்களில் உலகம் முழுவதும் உயிர்காக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகளை எடுத்து சென்ற நம்பிக்கையின் சின்னமாக பார்க்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானம் “மிரியா”, இந்த விமானம் நடைபெற்று வரும் போரில் கியேவுக்கு வெளியே ரஷ்ய படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டது.

இதுகுறித்து உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டுவிட்டரில், “ரஷியா நமது ‘மிரியா’வை அழித்திருக்கலாம். ஆனால் வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக ஐரோப்பிய அரசு என்ற நமது கனவை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது. நாம் வெல்வோம்” என பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கு FIFAவும் தடை!

சர்வதேச உதைபந்தாட்ட சங்கங்களின் சம்மேளனமான (FIFA), தங்களது ( ரஷ்ய) கொடியின் கீழ் ரஷ்யா விளையாட முடியாது என தெரிவித்துள்ளது.

இனிவரும் காலங்களில் ரஷ்ய உதைபந்தாட்ட சங்கம் ரஷ்ய கொடி, ரஷ்ய தேசிய கீதம் என்பற்றின் கீழ் சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கு பற்ற முடியாது என வும் FIFA தெரிவித்துள்ளது.

உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையிலேயே FIFA வின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து,வேல்ஸ்,போலந்து,சுவீடன்,செக் உட்பட பல நாடுகள் ரஷ்யாவுடன் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளன .
வன்முறை ஒரு போதும் தீர்வாகாது என தெரிவித்துள்ள FIFA உக்ரேனில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.

இதேவேளை பெண்களுக்கான உதைபந்தாட்ட சங்கங்களும் ரஷ்யாவுக்கு எதிரான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
FIFA ரஷ்யாவுக்கு எதிராக மேலதிக தடைகளை விதிப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஐரோப்பிய உதைபந்தாட்ட சங்கங்களின் சம்மேளனம் என்பவற்றுடன் தொடர்ச்சியான பேச்சுகளில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யா விமானங்களுக்கு ஐரோப்பிய வான்பரப்பில் கதவடைப்பு! புடின் சீற்றம்

ரஷ்யாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள் பொருளாதாரத்தடைகளை விதித்துள்ள நிலையில், அது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.

ஜெர்மனி மூன்று மாதங்களுக்கு ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

பிரான்ஸ், டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் தமது வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்துள்ளன.

பின்லாந்து, ரஷ்ய பின்லாந்து எல்லையில் 120 கிலோமீற்றர் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பது பற்றி ஆலோசித்து வருவதாக பின்லாந்து போக்கு வரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெல்ஜிய பிரதமர் ஐரோப்பிய வான்பரப்பு பொதுமக்களுக்காக திறந்திருக்கும், கொடூரமான ஆக்கிரமிப்பாளர்களுக்கு அல்ல என கூறியுள்ளார்.

அயர்லாந்து, ஒஸ்திரியா என்பனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையில் இணைந்துள்ளன.

தற்போதைய நிலையில் பின்லாந்து மார்க்கமாக தடை செய்யாத நாடுகளுக்கு செல்வதே ரஷ்ய விமானங்களுக்கு உள்ள ஒரேயொரு வழி.(பின்லாந்து இன்னமும் தடை செய்யவில்லை)
ரஷ்ய விமானசேவை நிறுவனமானS7 மார்ச் 13 வரை தனது சேவைகளை இரத்துசெய்துள்ளது. மற்றொரு விமானசேவை நிறுவனமான Aeroflot ரூமேனியா,லட்வியா போன்ற நாடுகளுக்கான தனது சேவைகளை மார்ச் 26 வரை இரத்துசெய்துள்ளது.

Prague Warsaw பாதையில் பயணிக்கும் சேவைகளை மார்ச் 28 வரை இரத்துசெய்துள்ளது. பிரிட்டன் ஏற்கனவே ரஷ்ய தனியார் விமானங்கள் உட்பட.செக் குடியரசு,போலந்து,ரூமேனிய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

‘உஷாராக இருங்கள்’ – அணு ஆயுதப்படைக்கு புடின் உத்தரவு

ரஷ்ய அணு ஆயுதப்படையை உஷாராக இருக்குமாறு அந்நாட்டின் ஜனதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக விதித்துள்ள தடைகள் பற்றி கடுமையாக விமர்சித்த புடின் , பாதுகாப்பு அமைச்சருக்கும் இராணுவ தளபதிக்கும் அணு ஆயுதப்படையை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதே வேளை பெலாரஸ் எல்லையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
பேச்சு மேசையில் தம்மை பணிய வைக்கும் நோக்குடன் தான் புடின் இந்த உத்தரவை விடுத்துள்ளார் என உக்ரேன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா என்ன தான் அணு ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தினாலும் தாங்கள் எதற்கும் அடிபணிய மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளும் பட்சத்தில் அதனால் உலகம் பாதிப்படையும். எனினும் நாங்கள் ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு அடி பணியப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இராணுவத்தில் ஐரோப்பியர்கள் இணையலாம் – ஜனாதிபதி அழைப்பு

ரஷ்யாவுடனான போரில் ஜனநாயகம் மற்றும் ஐரோப்பாவை பாதுகாத்துக்கொள்வதற்கு வெளிநாட்டவர்களும் , உக்ரேன் இராணுவத்துடன் இணைந்து கொள்ளலாம் என உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்ய படைகளுக்கு எதிரான யுத்தத்தில் பங்கு பற்ற விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக உக்ரைன் தொண்டர் படையை அமைத்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

“ இது உக்ரைனுக்கு எதிரான யுத்தம் அல்ல, இது ஐரோப்பாவுக்கு எதிரான யுத்தம். ஐரோப்பாவின் ஒற்றுமைக்கு எதிரான யுத்தம்.” என அவர் தனது உத்தியோகபூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரஷ்யாவுக்கு எதிரான யுத்தத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக தனது படைகளை அனுப்பப்போவதில்லை என பிரிட்டன் தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைனுக்கு ஆதரவாக அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து கொள்ள விரும்புவோர் இணையலாம் என்று பிரிட்டிஷ் வெளிவிவகார செயலர் Liz Truss தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவால்தான் போர் மூண்டது – வடகொரியா

அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக வட கொரியா குற்றம்சாட்டி உள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இப்போது இல்லை. இரு நாடுகளும் அவர்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக வடகொரியா முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக தனது கருத்தை வெளியிட்டுள்ளது. அதில், ரஷியா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம் என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து வட கொரியா வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை வடகொரிய ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்கா, ரஷியாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து ராணுவ மேலாதிக்கத்தை பின்பற்றுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி, மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது.

அது மட்டுமின்றி மற்ற நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகளை எந்த காரணமும் இல்லாமல் கண்டிக்கிறது. அமெரிக்கா உலகத்தை ஆட்சி செய்த காலம் போய்விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.