இலங்கையில் நாளை 12 மணிநேர மின்வெட்டு

இலங்கையில் நாளைய தினமும் சுழற்சி முறையில் 12 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்கான அஸ்திரம் மேயில் ஏவப்படும்!

மேதின பேரணியையும், கூட்டத்தையும் கூட்டாக நடத்துவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

அரசுக்கு எதிராக தமது அணியின் பலத்தை காட்டுவதற்காகவும், நாடாளுமன்றத்தில் அரசுக்கான சாதாரண பெரும்பான்மையை இல்லாது செய்வதற்கு மக்கள் ஆதரவையும் திரட்டும் நோக்கிலுமே மேதின பேரணியையும், கூட்டத்தையும் கொழும்பில் பிரமாண்டமாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச, உதயகம்மன்பில உட்பட 11 கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் இரவு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கு – இன்னும் காலம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் அரசின் சாதாரண பெரும்பான்மையை சவாலுக்குட்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நகர்வில் 11 கட்சிகளின் கூட்டணி ஈடுபட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்துக்கான நகர்வுகளை மே மாதத்தில் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என மக்கள் மத்தியில் அலையை உருவாக்குவதற்கான நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் , கோவளம் கடற்பகுதியில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

சந்தேகநபர்களிடமிருந்து 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

20 முதல் 24 வயதிற்கு இடைப்பட்ட முல்லைத்தீவு மற்றும் மாதகல் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புலிகளுக்கு நிதி திரட்டல் – அறுவருக்கு எதிராக குற்றபத்திரிகை தாக்கல்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 06 பேர் மீது, தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

போலிக் கடவுச்சீட்டு வைத்திருந்த இலங்கையைச் சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோஎன்பவர்சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இவரைக் கைது செய்தனர். இதையடுத்து, இவருக்கு உடந்தையாக இருந்த இலங்கையைச் சேர்ந்த கென்னிஸ்டன் பெர்னாண்டோ, தர்மேந்திரன், ஜான்சன் சாமுவேல் மற்றும் சென்னையைச் சேர்ந்த மோகன் ஆகியோர் தமிழக கியூ பிரிவு பொலிஸால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டி பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பி வந்ததும், கடந்த 2018 இல், போலி கடவுச்சீட்டு மூலமாக சென்னைக்கு வந்து அண்ணா நகரில் வாடகை வீட்டில் தங்கியும் உள்ளார்.

பின்னர், சட்டவிரோதமாக இந்திய கடவுச்சீட்டைப் பெற்றமையும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

வடக்கில் 5 வருடங்களில் 50 யானைகள் உயிரிழப்பு

வடமாகாணத்தில் கடந்த 5 வருடங்களில் 50 இற்கு மேற்பட்ட யானைகள் இறந்துள்ளதாக வடமாகாண வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்திய அதிகாரி பாலச்சந்திரன் கிரிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 6 வயது யானை ஒன்று இறந்தமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

காடழிப்பு, மரம் வெட்டுதல், கருங்கல் அகழ்தல் கிரவல் அகழ்தல், மணல் அகழ்தல் என்பன காரணமாக காடுகள் அழிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக காட்டு விலங்குகள் வெளியில் வருகின்றன. வடமாகாணத்தில் ஐந்து வருடத்தில் 50 இற்கு மேற்பட்ட யானைகள் வெங்காய வெடி காரணமாக இறந்துள்ளன. வெங்காய வெடி காரணமாக பாதிக்கப்பட்ட யானைகளுக்கு தேவையான மருந்துகள் வழங்கியுள்ளோம். மனிதர்கள் சிலர் வேட்டைக்காக வைக்கும் வெங்காய வெடி காரணமாகவே பல யானைகள் இறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நெருக்கடி – ஐஓசியை நாடுகிறது இலங்கை

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக,எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனைதெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு டீசல் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், டீசலுடன் வருகை தரும் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும் வரை மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்த டீசல் தொகை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் நெருக்கடி – தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

மின்வெட்டு , டீசல் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக இன்று 31 ஆம் திகதி முதல் தேயிலைத் தோட்டங்களில் நாளாந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மின்வெட்டு காரணமாக தேயிலை தொழிற்சாலையில் தேயிலைத் தூள் உற்பத்தி செய்வதற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் பாவிக்கப்படுவதாகவும் அந்த இயந்திரத்திற்காக நாளாந்தம் பெருந்தொகை டீசல் தேவைப்படுவதாகவும் டீசல் பற்றாக்குறை காரணமாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேயிலை கொழுந்தை ஏற்றி வருவதற்காகவும் தேயிலைத் தூளை உற்பத்தி செய்வதற்காகவும் மின்சாரம்,டீசல் கட்டாயம் தேவை எனவும் குறித்த நேரத்துக்குள் தேயிலை கொழுந்தை தேயிலைத்தூளாக்கவேண்டும். அந்த நேரத்துக்குள் தேயிலை தூளை உற்பத்தி செய்ய முடியாவிட்டால் தேயிலை தொழிற்சாலையில் உள்ள தேயிலைக் கொழுந்து முழுமையாக பழுதடைந்து விடும் எனவும் தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேயிலை கொழுந்தை உரிய நேரத்தில் பறிக்காவிட்டால் தேயிலைக் கொழுந்து அளவுக்கு அதிகமாக வளர்ந்துவிட்டது எனவும் அதன் பின்னர் அதை வெட்டி சீர்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அந்த அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு முறையாக மின்சாரத்தை வழங்க அரசு வழிசெய்யவேணடுமெனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரபாகரனை ஆயுதம் ஏந்த வைத்தது யார்? யாழில் தென்னிலங்கை வாசி போராட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுப்பிரமணிய பூங்கா முன்றலில் இன்று காலை முதல் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் பயங்கரவாதி ஆக்கப்பட்டார், என்ன காரணத்திற்காக அவர் குற்றவாளி ஆக்கப்பட்டார், அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்திருப்பார் ஆனால் இலங்கையில் இருந்த அரசியல் பின்னணி மற்றும் ஏதோ ஒரு சூழ்ச்சியின் காரணமாகவே அவர் பயங்கரவாதி என பெயர் குறிப்பிடப்படும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் இனியும் வடக்கிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாகும் நிலைமையினை நாங்கள் ஏற்படுத்தக்கூடாது இனி பிறக்கும் குழந்தைக்கு நாங்கள் சயனைட் குப்பியை கொடுக்காது வடக்கு-தெற்கு மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு பிரபாகரன் போன்றவர்களை நாங்கள் உருவாக்காது தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் மோசடி – உடனடி விசாரணைக்கு பணிப்பு

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது.

வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் கண்காணிப்பில் இந்த கொரோனா இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவந்தன.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையில் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பரீட்சைகள் பிற்போடப்படுமா?

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. எனவே, திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை. மேலதிக கடதாசிகளை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பரீட்சைகள் பிற்போடப்படும் என வெளியாகும் தகவல்கள் ஏற்புடையவை அல்ல. திட்டமிட்ட அடிப்படையில் பரீட்சைகள் நடத்தப்படும்.” – என்றார்.

தந்தை செல்வாவின் 124 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எஸ்.ஜெ.வி செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘உள்ளக விசாரணையை நாம் ஏற்கவில்லை’

” ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாம் உள்ளக விசாரணையை கோரவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தின் பிரகாரம் சர்வதேச ஒத்துழைப்பை பெறலாம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

” உள்ளக விசாரணை என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுகளில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நீங்கள் பார்த்தீர்களாக இருந்தால், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாக வேண்டும் என்று தான் சொல்லியிருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கே நடத்தப்படுகின்ற விசாரணைகளில் சர்வதேச நிபுணர்களும் பங்குபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே அந்த அலுவலகத்தினூடாக நடத்தப்படுகின்ற விசாரணையாக இருக்கலாம் அல்லது வேறு ஒரு பொறிமுறையாக இருக்கலாம் அல்லது இந்த விசாரணை சம்மந்தமாக அவர்களுக்குள்ளேயே இரு நிலைப்பாடு வந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினூடாக விசாரணைகளை மேற்கொள்ளலாம் என்று அமைச்சர் பீரிஸ் கூறினார். தென்னாப்பிரிக்காவின் உதவியோடு நாங்கள் உண்மை கண்டறியும் பொறிமுறையொன்றை உருவாக்குகின்றோம், அதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று சொன்னார்கள்.

இந்த இரண்டிலும் சர்வதேச ஈடுபாடு இருக்கின்றது. ஆகையினால் விசாரணை வேண்டும் என்று நாங்கள் கோரியதற்கு அரசு இணங்கியமையை வைத்துக் கொண்டு உள்ளக விசாரணைக்காக நாங்கள் கோரிக்கை வைத்தோம் என்று சொல்வது எந்தவிதத்திலும் நியாயமான கூற்று அல்ல. ” – என்றும் அவர் கூறினார்.

13 மணிநேர மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும்? வெளியானது தகவல்

” ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்.” – என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே , 2ஆம் திகதிக்கு பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்கு சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.” – என்றார்.

கொதித்தெழுந்த மக்கள் – மன்னிப்பு கோரினார் நாமல்

பொது மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் மன்னிப்பு கோருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர்
நாமல் ராஜபக்ச அறிவித்தார்.

வெலிமடையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்றிருந்த சிலர், அமைச்சரின் வருகை காரணமாக
கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியதாக இணையத்தில் பகிரப்பட்ட காணொளிக்கு பதிலளிக்கும்போதே
அமைச்சர் இவ்வாறு மன்னிப்பு கோரினார்.

வெலிமடையில் எந்த நிகழ்விலும் தான் கலந்துகொள்ள திட்டமிடவில்லை என்றும் இது ஒரு தவறான புரிதல்
மற்றும் தனது பெயரில் பரவிய வதந்தி என்றும் தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சர் அப்பகுதிக்கு வருவதாக தகவல் வெளியானதையடுத்து, வாகனங்கள் உட்பட வரிசையில்
நின்ற பொதுமக்கள் வேறு வீதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, அமைச்சர் நாமலுக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள், நாட்டில் தற்போது நிலவும்
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசைக் கண்டித்துள்ளனர். இதனையடுத்தே, பாதிக்கப்பட்ட மக்களிடம்
மன்னிப்புக் கோருவதாகவும் இந்த கடினமான காலத்திலிருந்து மீண்டு வருவோம் எனவும் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் கருத்து பதிவிட கோட்டா தடைவிதித்தது ஏன்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ‘கருத்து ‘ ) comment) பகுதியில் கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘லைக்’ மற்றும் ‘செயார்’ ஆகிய இரு தேர்வுகள் மட்டுமே தற்போது உள்ளன. நேற்று இரவு முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட followers உள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தற்போதைய சூழ்நிலையில் கடும் எதிர்ப்பு வலுத்துவருகின்றது. ‘கோ ஹோம் கோட்டா’ என்ற பரப்புரையும் ஆரம்பமாகியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, ஜனாதிபதி பதவியை வகித்த எவரும், இவ்வாறு தடைவிதிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

’13’ ஐ ஆதரித்த முன்னாள் அமைச்சர் காலமானார்

இலங்கையில் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன இன்று தனது 90 ஆவது வயதில் காலமானார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தீவிர செயற்பாட்டாளராக இருந்த அவர், சுதந்திரக்கட்சியில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிங்கள அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

முகநூல் காதல் – சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த எழுவர் கைது

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ் வர்த்தகர் ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 16ம் திகதி அம்பலவன் பொக்கணை பகுதிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற 14, மற்றும் 15 வயது சிறுமிகள் இருவர் வீடு திரும்பாத நிலையில், பெற்றோார் சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து காணாமல்போன இரு சிறுமிகளும் இரு நாட்கள் கழித்து புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிறுமிகளில் ஒருவருடன் பேஸ்புக் ஊடாக பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை சந்திப்பதற்காக சிறுமிகள் இருவரும் பேருந்தில் மட்டக்களப்பு – செங்கலடிக்கு சென்றமை விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில் சிறுமிகள் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் வெவ்வேறு நபர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மட்டக்களப்பை சேர்ந்த 17 வயதான இருவரை கைது செய்துள்ளதுடன், சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் வந்த சிறுமிகளை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் யாழ்.நகர்பகுதி வர்த்தகர் ஒருவரும் அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சிறுமிகளில் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 17 சிறுவன் ஒருவனும், சிறுமியின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், விசாரணைகளை துரிதமாக இடம்பெற்றுவருவதாகவும் கூறியுள்ளனர்.

அரசிலிருந்து காங்கிரஸ் வெளியேறுமா? புதிய தலைவர் வெளியிட்ட தகவல்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், அரசில் இருந்து வெளியேறுவது தொடர்பில் தேசியசபைக் கூட்டத்தில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்டது. எமது மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் நாம் தொடர்ந்து தீவிரமாக செயற்படுவோம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத சங்கமாக மாறவேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியமும்கூட. அதனை நாம் நிறைவேற்றுவோம். தற்போது சந்தா பெற்றாலும் கணக்கு விவரம் உரியவகையில் காண்பிக்கப்படுகின்றது.

அரசில் இருந்து வெளியேறுவது சம்பந்தமாக கலந்துரையாடப்படவில்லை. ” – என்றார்.

புத்தாண்டில் நாடு இருளில் மூழ்கும் அபாயம்

எரிபொருள் கிடைக்காவிட்டால், மழை பெய்யாவிட்டால் புத்தாண்டில் மக்களுக்கு இருட்டில்வாழ வேண்டிய நிலைமையே ஏற்படும் – என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், நாட்டில் தற்போது அமுலில் உள்ள 10 மணிநேர மின்வெட்டு 12 முதல் 15 மணிமணிநேரம்வரை அதிகரிக்கப்படக்கூடும் எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இனிவரும் காலப்பகுதியில் மின்வெட்டு நேரத்தை அறிவிப்பதற்கு பதிலாக மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை அறிவிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

எனவே, எரிபொருளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் மின்வெட்டு அமுலாகும் நேரத்தை குறைக்க முடியும் எனவும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தினம் இன்றாகும்

தமிழ் இனத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடிய தந்தை செல்வாவின் 123 ஆவது ஜனன தினம் இன்றாகும்.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமல்ல மலையகத் தமிழர்களுக்காகவும் ஒட்டுமொத்தமாக தமிழ்பேசும் மக்களுக்காகவும் இறுதிமூச்சு இறுக்கும்வரை குரல் கொடுத்த இவர் அக்காலகட்டத்தில் மீட்பராகவே பார்க்கப்பட்டார்.

தந்தை செல்வாவின் வாழ்க்கை குறிப்பு…….

✍️பிறப்பு – 1898 மார்ச் 31. (மலேசியா)

✍️தாய் – அன்னம்மா கணபதிப்பிள்ளை.

✍️தந்தை – சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை.

✍️இரு தம்பிமார். ஒரு தங்கை.

✍️ 4 வயதில் மலேசியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தார்.

கல்வி……

✍️ ஆரம்பக்கல்வி – அமெரிக்க மிஷன் பாடசாலை, தெல்லிப்பழை.

✍️உயர்கல்வி – சென். தோமஸ் கல்லூரி, கொழும்பு,

✍️1917 இல் ஆசிரியராக பணியை ஆரம்பித்தார்.அதன்பின்னர் விஞ்ஞானப் பட்டதாரிக்குரிய பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

✍️ஆசிரியராக இருந்தபோதே சட்டக்கல்லூரிக்கும்சென்று பரீட்சையில் சித்தியடைந்து 26 வயதில்சட்டத்தரணியானார்.(1924)

அரசியல்……..

✍️அமரர். ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையில் 1944 ஆகஸ்ட் 29 ஆம் திகதி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உதயமானது. அதன் ஊடாகவே தந்தை செல்வா செயற்பாட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

✍️1947 இல் இலங்கையில் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் காங்கேசன்துறை தொகுதியில் போட்டியிட்ட தந்தை செல்வா வெற்றிபெற்றார்.அத்தேர்தலில் காங்கிரஸ் 7 ஆசனங்களைக் கைப்பற்றியது.

✍️1948 ஆம் ஆண்டில் குடியுரிமை சட்டத்தின் ஊடாக மலையகத் தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது.( அப்போது மலையக தமிழர்களின் சார்பில் எழுவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தனர்.

டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் இந்த துரோக- அடாவடிச் செயலுக்கு அரசின் பங்காளிக்கட்சியாக இருந்த தமிழ் காங்கிரசும் துணைநின்றது.

எனினும் தந்தை செல்வா இதனை கடுமையாக எதிர்த்தார் – வன்மையாக கண்டித்தார் – மலையகத் தமிழர்களுக்காக துணிகரமாக குரல் கொடுத்தார்.இறுதியில் தமிழ் காங்கிரசுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்திலிருந்தும் வெளியேறினார். தந்தை செல்வாவுக்கு ஆதரவாக மேலும் சிலர் அவர் பின்னால் அணி திரண்டனர்.

சமஷ்டிக்கட்சி உதயம்…..

✍️1949 டிசம்பர் 18 ஆம் திகதி தந்தை செல்வா தலைமையில் ‘சமஷ்டி கட்சி’ உதயமானது.காலப்போக்கில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியாக பெயர் மாற்றம் பெற்றது. தற்போது அதன் தலைவராக மாவை சேனாதிராஜா செயற்பட்டுவருகிறார்.

✍️1952 நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தந்தை செல்வா வெற்றிபெறமுடியவில்லை. 11 ஆயிரத்து 571வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். எனினும், 1956 இல் அவர் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.

✍️எஸ்.டபிள்யூ.ஆ.டி. பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக்கட்சியின் சிங்கள மொழி திணிப்புக்கு எதிராக அறவழியில் தந்தை செல்வா போராடினார். மலையக அரசியல் பிரதிநிதிகளும் ஆதரவு தெரிவித்தன.

✍️தமிழ்க் கட்சிகளின் ஐக்கியத்தை உணர்ந்து 1972 இல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இக்கூட்டணியில் அங்கம் வகித்தன.

தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் கூட்டணியின் இணைத்தலைவர்களாக செயற்பட்டனர்.

✍️தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு 1976 மே மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நடைபெற்றது.

✍️இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனமே வட்டுக்கோட்டை தீர்மானம் என அழைக்கப்படுகின்றது.

✍️இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும் என இந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வட்டுக்கோட்டை பிரகடனத்தில் முஸ்லிம் மக்களும் சுயாட்சி உரிமையுடன் வாழ முடியும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தது.

✍️இம்மாநாடு நடைபெறும்போது தொண்டமான் இந்தியா சென்றிருந்தார் என்றும், நாடு திரும்பிய பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் தனக்கு தொடர்பில்லை என அறிக்கை விட்டார் எனவும் கூறப்படுகின்றது.

✍️1976 ஏப்ரல் 26 இல் தந்தை செல்வா காலமானார்.

✍️1977 ஜீலை 21 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி 18 ஆசனங்களைக் கைப்பற்றியது. பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் பெற்றது.

ஆர்.சனத்