அரசியல் வாதிகளை ஓரங்கட்ட மகாசங்கத்தினர் முடிவு!

சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மகா சங்கத்தினர் இன்று (30) ஓரணியில் திரண்டு தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன், மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று, சர்வக்கட்சி அரசமைப்பதற்கு அரசியல் பிரமுகர்கள் முன்வராவிட்டால், அனைத்து அரசியல் வாதிகளையும் நிராகரிக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் அனுமதியுடன் கூட்டு சங்க ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் மகா சங்கத்தினர்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மகா சங்கத்தினரின் விசேட சங்க சம்மேளனம் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இன்று (30) நடைபெற்றது. பேராசிரியர் ஓமல்பே சோபித தேரர், பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர் உட்பட பௌத்த பீடங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தேரர்கள் பங்கேற்றிருந்தனர்.

சங்க சம்மேளனத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வண. ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் வெளியிட்டார்.

“ நாட்டில் அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டு, அவற்றை செயற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு தேவையான வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்காக ,பிரதமர் உள்ளடங்கலான தற்போதைய அமைச்சரவை பதவி விலக வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அனைத்து அரசியல் வாதிகளையும் நிராகரிக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் அனுமதியுடன் ஒன்றிணைந்த சங்க ஆணை பிறப்பிக்கப்படும்.” – என்று கலாநிதி வண. ஒலகன்வத்தே சந்திரசிறி தேரர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், மகாசங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது. சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு கட்சிகளின் இணக்கப்பாட்டை பெறும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

‘113’ யாருக்கு? மே 4 இல் பலப்பரீட்சை

“எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது எதிரணி பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும்.”

இவ்வாறு எதிரணி பிரதம கொறடாவான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“19 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயற்படுத்துமாறு மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், 20 ஐ நீக்குவதற்கு ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். இப்படியானவர்களுடன் எப்படி இடைக்கால அரசை முன்னெடுப்பது?

எதிரணிக்குரிய பொறுப்பை நிறைவேற்றவே மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர். எனவே, இடைக்கால அரசில் இணைய வேண்டிய தேவை எமக்கு கிடையாது.

நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்துவிட்டது. எதிரணிப் பக்கம்தான் பெரும்பான்மைப் பலம் உள்ளது. எதிர்வரும் 4ஆம் திகதி அதனை நிரூபிப்போம்” – என்றார்.

உலகிலேயே உயரமான இயேசு சிலை பிரேசிலில் அமைப்பு!

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் 125 அடி உயர இயேசு சிலை அங்குள்ள கொர்கொவாடோ மலை மீது அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை ரியோ நகரம் மற்றும் பிரேசில் நாட்டு சின்னமாக கருதப்படுகிறது.

ரியோவில் உள்ள இயேசு சிலை 1922 ஆம் ஆண்டில் இருந்து 1931ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாகும். சிலையை காண ஆண்டுதோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் ரியோவில் உள்ள இயேசு சிலையைவிட உயரமான சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது.

கிறிஸ்ட் தி ப்ரொடெக்டர் (கிறிஸ்து பாதுகாவலர்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயேசு சிலையின் உயரம் 141 அடியாகும். அங்குள்ள மலை மீது அமைந்துள்ள சிலை உலோக கட்டமைப்பின் மீது கான்கிரீட் மூலம் கட்டப்பட்டுள்ளது.

சிலையின் நெஞ்சு பகுதியில் இதய வடிவ ஜன்னல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து நகரை பார்க்க முடியும்.

இதுகுறித்து சிலைக்கு நிதியுதவி செய்த சங்கத்தின் துணை தலைவர் ராபிசன் சோன்சாட்டி கூறும்போது, இது உலகின் மிகப்பெரிய கிறிஸ்து சிலை. என்காண்ட்டோ நகரில் உள்ள மோரோதாஸ் ஆண்டனாஸ் மலையில் அமைக்கப்பட்டு இச்சிலை அடுத்த ஆண்டே பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்றார்.

ஜனாதிபதிக்கு ‘பொறி’ வைக்கிறது கூட்டமைப்பு

இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக முதன்முறையாக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

இதற்கான பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தயார்படுத்திவருகின்றார்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணையை வழமையாக முன்வைக்கப்படும். எனினும், அதனை நிறைவேற்றிக்கொள்வது சவாலுக்குரிய விடயம்.

எனவேதான், ஜனாதிபதிமீது நாடாளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக இப்பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று (30), சனிக்கிழமை காலை, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அவற்றின் படி, மருத்துவ பீடாதிபதியும், சமுதாய மருத்துவ மற்றும் குடும்ப மருத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளருமான மருத்துவர் இ. சுரேந்திரகுமாரன் சமுதாய மருத்துவத் துறையில் பேராசிரியராகவும், வணிக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பி. பிரதீப்காந் கணக்கியலில் பேராசிரியராகவும் , மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜே.றொபின்சன் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் கைது!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள் , 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 13 பேரையும் கடற்படையினர் கடற்படை முகாமில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசியலில் பெரும் புயலை உருவாக்கவுள்ள மே – 03

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும், முக்கிய சில அரசியல் பிரமுகர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வருமெனவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

‘சம்பந்தப்பட்டவர்களும், கேட்டவர்களும் மே 3 ஆம் திகதி விழிப்பாக இருக்கவும். ‘ என தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அநுர பதிவிட்டுள்ளார். இப்பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஊழல்களையே’ அநுர உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவாரென வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.

11 இளைஞர்கள் கடத்தல் – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட சார்பாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

எனவே, வழக்கை வேறு திகதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாற அரச தரப்பு சட்டத்தரணி கோரிய நிலையில், வழக்கை செப்டம்பர் 6ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

குறித்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைத் தவிர குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் மீது, குற்றவியல் சட்டத்தின் கீழ் 667 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு அரசியலில் பரபரப்பு – நாடாளுமன்றம் கலைப்பு

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனை அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

சர்வக்கட்சி இடைக்கால அரசமைக்கும் யோசனை தோல்வியை நோக்கி நகரும் நிலையிலேயே, மாற்று நடவடிக்கை பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் ஓர் அங்கமாகவே நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான யோசனை பற்றியும் ஆராயப்பட்டுவருகின்றது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆதரவை வெளியிட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.

மஹிந்தவை அகற்ற 1000 பிக்குகள் இன்று களத்தில்

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் மகாசங்கத்தின் அணி நேரடியாகக் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது.

மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் இன்று கொழும்புக்கு வருகின்றனர். மகா சங்கத்தினருக்கும், சர்வகட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு நகர்வாகவே இது கருதப்படுகின்றது.

இது தொடர்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர்,

“புதிய பிரதமரின் கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர்.

மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் நாளை (இன்று) கொழும்புக்கு வருகின்றனர். இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும்.

மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்படும்” – என்றார்.

“மகாசங்கத்தினரின் சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமரின் கீழ்தான் இடைக்கால அரசு என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெறும். இதன்போது கட்சித் தலைவர்களுக்கு மகாசங்கத்தினர் ஆலோசனை வழங்குவார்கள்” என்று ஓமல்பே சோபித தேரர் அறிவித்தார்.

மகா சங்கத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு நகர்வாகவே இது கருதப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், பங்கேற்பது குறித்து அக்கட்சி முடிவு எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

இலங்கை மே தின நிகழ்வில் பா.ஜ.கவின் தமிழக தலைவர்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இடம்பெறவுள்ள மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, இலங்கை வந்துள்ளார். இந்திய பிரதமர் மோடியின் பிரதிநியாக தாம் இலங்கை வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அண்டை நாடான இலங்கையோடு, இந்தியா என்றைக்குமே இணக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இலங்கைக்கு இந்தியா ஏகப்பட்ட உதவிகளை செய்து வருகிறது.

பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில் இந்த உதவிகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, இலங்கை மக்களுக்கு தேவையான பல உதவிகளை பிரதமர் மோடி செய்துள்ளார். அங்கிருக்கும் மக்களின் மீள் வாழ்க்கைக்காக, 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இதற்கு நன்றி சொல்லும் விதமாக, அங்கிருக்கும் இந்திய வம்சாவளி மக்கள், தங்களின் தொழிலாளர் காங்கிரஸ் வாயிலாக, மே 1ல் நடத்தப்படும் மே தின விழாவுக்கு வரும்படி, மோடியின் பிரதிநிதியாக என்னை அழைத்துள்ளனர். நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றவும் பணித்துள்ளனர்.

அதை ஏற்று, இலங்கை செல்லும் நான், பொருளாதார சிக்கலை மேம்படுத்துவதற்காக, இலங்கை அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் இந்திய அரசு தொடர்ந்து செய்ய வேண்டிய உதவிகள் குறித்து, அந்நாட்டு தலைவர்கள் எதிர்பார்ப்பை அறிந்து கொள்ள இருக்கிறேன்.

பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், பயனடைந்துள்ள பயனாளிகளையும் சந்திக்க இருக்கிறேன். இந்திய – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

சஜித்துக்கு மிரட்டல்!

” சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு எனக்கு 24 மணிநேரமும் தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு இணையாவிட்டால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லாது செய்யப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்படுகின்றது.”

இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” ஆளுங்கட்சிக்குள் தற்போது நாடகம் அரங்கேறிவருகின்றது. மோதலும் உக்கிரமடைந்துள்ளது. இதனால் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.

சர்வக்கட்சி அரசில் இணையாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இல்லாது செய்யும் திட்டம் இருப்பதாக எனக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். எனக்கு பதவி முக்கியம் அல்ல. மக்கள் என்னுடன் நிற்கின்றனர்.” – என்றார்.

இடைக்கால அரசுக்கு எதிர்ப்பு – சஜித் அணி மீண்டும் திட்டவட்டம்

ஜனாதிபதி பதவி விலகாமல், அமையும் அரச கட்டமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன,

“ ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அவரை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை திரட்டிவருகின்றோம். ஆதரவு வழங்க மறுப்பவர்களின் பெயர் விவரம் அம்பலப்படுத்தப்படும்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவருவது பற்றி ஆராயப்படுகின்றது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்படும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக அரசமைப்பு ரீதியில் பாவிக்கக்கூடிய அத்தனை அஸ்திரங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தும்.” – என்று திட்டவட்டமாக அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால அரசுக்கு போர்க்கொடி தூக்கினார்.

பிரதமர் கட்டாயம் பதவி விலக வேண்டும் – மகாசங்கத்தினர் நாளை தீர்மானம்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை என மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துவரும் நிலையில், புதிய பிரதரின்கீழ்  இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  (29.04.2022) பச்சைக்கொடி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமது அணியுடன் இன்று (29) நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதற்கான  இணக்கப்பாட்டை வெளியிட்டார் என இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  

அத்துடன்,  “ நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கும் சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டது.

பிரதம  அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்படி தேசிய சபையின் வழிகாட்டலுடன்தான் நியமிக்கப்பட வேண்டும், அமைச்சுகளின் செயலாளர்கள், சட்டமா அதிபர்,  பொலிஸ்மா அதிபர் உட்பட அரச நிர்வாகக் கட்டமைப்பின் உயர் பதவிகளுக்கான நியமனங்களும் தேசிய சபை ஊடாகவே இடம்பெறவேண்டும் என கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.” எனவும் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டார்.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு, நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (29)  முற்பகல், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை,  சர்வக்கட்சி இடைக்கால அரசு,   உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளன.    

அவ்வேளையிலேயே தற்போதைய பிரதமர் அல்லாமல்,  புதிய ஒருவரின்கீழ் இடைக்கால அரசை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளார் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

✍️ பிரதமர் பதவி குறித்த இழுபறி தொடர்கிறது

எனினும், ஜனாதிபதி ஊடகப்பிரிவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசொன்றை அமைக்க ஜனாதிபதி அழைப்பு  விடுத்துள்ளார் எனக் கூறப்பட்டிருந்தாலும், புதிய பிரதமரின் கீழ் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை.

“ அரசின் செயற்பாடுகளைத் தொடர்ந்தும்  முன்னெடுப்பதற்காக, தேசிய ஒருமித்த அரசொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதன் முதற்கட்டமாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்களிப்புடன் தேசிய சபையொன்றை நியமிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டது.

கட்சிப் பிரதிநிதிகள் முன்வைக்கும் பொதுத் தீர்மானத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளித்தால் தாம் அதற்கு இணங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசை அமைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக கலந்துரையாடலில் கலந்துகொண்ட பிரதிநிதிகளில் ஐந்து பேரை பெயரிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.” – என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சந்திப்பு இறுதியானது அல்ல, எனவே, அடுத்துவரும் நாட்களிலும் பேச்சுகள் தொடரவுள்ளன.

“ அரசை பாதுகாப்பதற்கு நாம் இந்த முயற்சியில் இறங்கவில்லை. நாட்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொருளாதாரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல்  ஸ்தீரத்தன்மையொன்று அவசியம். அதற்காகவே சர்வக்கட்சி இடைக்கால அரசு யோசனையை சுதந்திரக்கட்சி முன்வைத்தது.” – என்று சுதந்திரக்கட்சியின் அரசியல் நகர்வையும் மைத்திரிபால சிறிசேன நியாயப்படுத்தியுள்ளார்.

✍️பிரதான எதிர்க்கட்சி எதிர்ப்பு

ஜனாதிபதி பதவி விலகாமல், அமையும் அரச கட்டமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, 

“ ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அவரை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை திரட்டிவருகின்றோம். ஆதரவு வழங்க மறுப்பவர்களின் பெயர் விவரம் அம்பலப்படுத்தப்படும்.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டுவருவது பற்றி ஆராயப்படுகின்றது. அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்படும். ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக அரசமைப்பு ரீதியில் பாவிக்கக்கூடிய அத்தனை அஸ்திரங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்தும்.”  – என்று திட்டவட்டமாக அறிவித்தார்.  எதிர்க்கட்சித் தலைவரும் இடைக்கால அரசுக்கு போர்க்கொடி தூக்கினார்.

அதேபோல பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ச நீடிக்க வேண்டும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். பிரதமருக்கான பெரும்பான்மை உள்ளதாகவும் அவர்கள் இடித்துரைத்துவருகின்றனர். இதனால் ‘புதிய பிரதமர்’ என்ற விடயம் இன்னும் இழுபறி நிலையிலேயே உள்ளது.

✍️ மகா சங்கத்தினர் களத்தில்

இந்நிலையில் புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு, எதிரணிகளை ஒன்றினைக்கும் முயற்சியில் மகா சங்கத்தினர் இறங்கியுள்ளனர். புதிய பிரமரின்கீழ்தான் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட பேராசிரியர் அகலகட சிறிசுமண தேரர்,

“ புதிய பிரதமரின்கீழ் மட்டுப்படுத்தப்பட்ட அமைச்சரவையின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசையே மகாநாயக்க தேரர்கள் எதிர்பார்த்தனர். தேசிய சபை ஊடாக நடவடிக்கை இடம்பெற வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். மக்களும் இதனையே கோருகின்றனர்.

மகாசங்கத்தினர் ஆயிரம் பேர் நாளை (30)  கொழும்புக்கு வருகின்றனர். இதன்போது காத்திரமான முடிவுகள் எடுக்கப்படும். மகாசங்கத்தினரின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் ஏற்காவிட்டால், மகாநாயக்க தேரர்களின் ஆசியுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிக்கும் முடிவு எடுக்கப்படும்.” – என்று குறிப்பிட்டார்.  

” மகாசங்கத்தினரின் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது புதிய பிரதமரின்கீழ்தான் இடைக்கால அரசு என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன்பின்னர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெறும். இதன்போது கட்சி தலைவர்களுக்கு மகா சங்கத்தினர் ஆலோசனை வழங்குவார்கள்.” – என்று ஓமல்பே சோபித தேரர் இன்று அறிவித்தார்.

மகா சங்கத்தினருக்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது. சர்வக்கட்சி இடைக்கால அரசுக்கு கட்சித் தலைவர்களை ஒன்றிணைப்பதற்கான ஓர் நகர்வாகவே இது கருதப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும்,  பங்கேற்பது குறித்து அக்கட்சி முடிவு எடுக்கவில்லை என தெரியவருகின்றது.

ஆர்.சனத்

‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்தை திசை திருப்புகிறது இ.தொ.கா.

நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின நிகழ்வுகள் இம்முறை தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இடம்பெறும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதி செயலாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஶ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டனிலுள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (29.04.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மே தினம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாபெரும் தொழிற்சங்கத் தலைவர் அமரர் வெள்ளையனால், 1965 மே முதலாம் திகதி தொழிலாளர் தேசிய சங்கம் நிறுவப்பட்டது. தொழிலாளர்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், தொழிலாளர்களின் நலன்புரி விடயங்களுக்காகவும் சங்கம் தீவிரமாக செயற்பட்டது. தற்போதும் அதே வழியில் செயற்படுகின்றது.
தற்போதைய தலைவர் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், மலையகத்தில் தனி வீட்டு திட்டத்தை ஏற்படுத்தி, புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்.

எமது 57 ஆவது மே தின நிகழ்வுகள் தோட்டவாரியாகவும், பிரதேச வாரியாகவும் இம்முறை நடைபெறும்.

அதேவேளை, ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியே மக்கள் போராடிவருகின்றனர். ஆனால் மலையகத்தில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டத்தை இ.தொ.கா. தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தது. மக்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதற்கு பதிலாக, பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தே போராட்டம் என மக்கள் திசை திருப்பினர். இ.தொ.கா. அரசுக்கான ஆதரவை இன்னும் முழுமையாக விலக்கிக்கொள்ளவில்லை.” – என்றார்.

மே 02 அரச விடுமுறை!

மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு உதவி – தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா இலங்கையில் பொருளாதார அடித்தளத்தையே அசைத்து விட்டது. இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையை சார்ந்தே இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத்துறை முடங்கியதால் இலங்கையின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இலங்கை ரூபாயின் மதிப்பும் வேகமாக சரிந்து விட்டது.

அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதில் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதனால் அங்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அங்கு மக்கள் கடந்த 21 நாட்களாக தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர் பதவி விலக கோரி முற்றுகை போராட்டமும் நடந்து வருகிறது.

ஆனாலும் இலங்கை அரசு பதவி விலகாமல் போராட்டக்காரர்களை சமாளித்து வருகிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்தும் ஐ.எம்.எப். போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் இலங்கை கடன் உதவி கேட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகிறது. பெட்ரோல், டீசல், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதுடன் சென்ற மாதம் இந்தியா 100 கோடி டாலர் கடன் உதவியும் செய்துள்ளது. தற்போது கூடுதலாக 50 கோடி டாலர் கடன் உதவி வழங்குகிறது.

மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்யும் அதே நேரத்தில் அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

இது குறித்து மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார். ஆனால் அதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

இதனால் இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் உதவுவதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து முன்மொழிந்த அந்த தீர்மானம் வருமாறு:

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, பால் பொருட்கள் முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது.

இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசிற்கு ஏற்கனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும் இது குறித்து மத்திய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் பேசினார்கள். அதன் பிறகு அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமரை பதவி நீக்க ஜனாதிபதி இணக்கம்!

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்தார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் பொறுப்பு, சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையிலான தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதிக்கு, 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

பஸில், நாமல், மஹிந்தானந்த வெளிநாடு பறக்க தடை!

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் வெளிநாடு செல்ல தடை வதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சுனில் வட்டகல உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று சட்டமா அதிபரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

ஏப்ரல் 26 ஆம் திகதி சட்டமா அதிபருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள மேற்படி முன்னாள் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இம் மூவர் மீதும் தற்போது ஊழல் வழக்குகள் விசாரணையில் இருப்பதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அலரிமாளிகைக்கு முன்பாக பதற்றம் (காணொளி)

அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையிலேயே இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதிக்கு போராட்டக்காரர்கள் ‘மைனா கோ கம’ என பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.