அட்டுலுகம சிறுமி கொலை – சந்தேக நபருக்கு மறியல்!

பண்டாரகம, அட்டுலுகம சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அட்டுலுகமயை சேர்ந்த 29 வயதான சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை விசேட பாதுகாப்பின் கீழ் விளக்கமறியலில் வைப்பதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் வாக்குமூலம் வழங்க சந்தேகநபரால் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், நாளைய தினம் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

21 ஐ குழப்ப சதி!

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதன் ஓர் அங்கமாகவே, தற்போதைய சூழ்நிலையில் உணவுதான் முக்கியம், அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியமில்லை என்ற பரப்புரை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.

‘நெருக்கடி உச்சம்’ – கொழும்பு வரும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு விமானங்கள் திரும்பிச் செல்வதற்கான போதிய எரிபொருளை நிரப்பி வருமாறுகேட்கப்பட்டுள்ளன. அல்லது அயல்நாடு ஒன்றில் அதனை நிரப்பிக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் விமான எரிபொருள் (aviation fuel) கையிருப்பைப் பேணுகின்ற முன்ஏற்பாடாக இந்த ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகார சபைப் பணிப்பாளர்களில் ஒருவர் வெளிநாட்டு செய்தி
ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

கொழும்பு விமான நிலையத்தில் வைத்து எரிபொருள் நிரப்புவது இன்னமும் நிறுத்தப்படாவிட்டாலும் விமானப் பயண சேவைகள் தடைப்படாது தொடர்ந்து நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற் காகவே இவ்வாறு போதிய எரிபொருளை நிரப்பி வருமாறு விமான சேவை நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

டுபாய்க்குச் சொந்தமான எமிரேட்ஸ்(Emirates Airline) உட்படக் கொழும்பு செல்கின்ற சில வெளிநாட்டு விமானங்கள் வழமையை விட அதிகளவுஎரிபொருளை நிரப்பியவாறு பறக்கின்றன என்றும் சிறிலங்கா விமான சேவை
யின் நீண்ட தூர விமானங்கள் தென்னிந்தியாவின் விமான நிலையங்களில் இடையில் தரித்து எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு செல்லும் சிங்கப்பூர் விமானங்கள் மேலதிக எரிபொருளை நிரப்பிக்கொண்டு அங்கு பறக்கின்றன என்பதை
சிங்கப்பூர் விமான சேவை நிறுவன அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு சென்று திரும்பும் சர்வதேச விமானங்கள் கடந்த சில நாட்களாக தென்னிந்தியாவில் உள்ள விமான
நிலையங்களில் இறங்கி எரிபொருள் நிரப்பிச் செல்கின்றன என்ற தகவலை இந்திய எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. நாளாந்த தேவைக்கான எரிபொருள்கள் உட்பட
அத்தியாவசியப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு நீடித்து வருகிறது.வரும் நாட்களில் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பும் முற்றாகத் தீர்ந்துவிடலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

       -பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

மின்வெட்டு குறித்து வெளியான புதிய தகவல்!

ஜூன் 2 ஆம் திகதி முதல் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாளாந்த மின்சாரத் தேவை குறைவடைந்துள்ளதாலும், நீர் மின் உற்பத்தி அதிகரிப்பதாலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜூன் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜூன் 4 ஆம் திகதி மின்வெட்டு ஒரு மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது, ஜூன் 5 ஆம் திகதி மின்வெட்டு இருக்காது.

குடும்ப பிரச்சினை! இருவர் படுகொலை!!

நீண்ட நாட்களாக நிலவிவந்த குடும்ப பிரச்சினையின் விளைவாக, கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவியும், அவரின் சகோதரரும் பலியாகியுள்ளனர்.

நவகத்தேகம, முல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த அனுஷா குமுதினி (25) மற்றும் அனுர சம்பத் (32) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணும் அவரது கணவனும் தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கணவர் திடீரென தனது வீட்டின் கூரை மீது இருப்பதைக்கண்டு மனைவி கூச்சலிட்டு ள்ளார். இந்த சத்தத்துக்கு அருகிலு ள்ள வீட்டில் வசித்து வந்த கொல்லப்பட்ட பெண்ணின் சகோதரரும் அந்த இடத்துக்கு வந்துள்ளார்

இதனையடுத்து ஏற்பட்ட மோதலின்போது கத்திக்குத்துக்கு இலக்காகி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

புலிகளுக்கு எதிரான சமரில் முக்கிய பங்கை வகித்தவருக்கு இராணுவ தளபதி பதவி

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதியால் விக்கும் லியனகேவிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே , நாளை (ஜூன் 01) இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம், லுதினன் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி கற்ற விக்கும் லியனகே , 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்தார்.

விக்கும் லியனகே , தியத்தலாவ இலங்கை இராணுவ கல்விக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ அகாடமி ஆகியவற்றிலிருந்து தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்று, இரண்டாவது லுதினனாக கஜபா படைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

விக்கும் லியனகே , தனது 35 வருட இராணுவப் பணியின் போது, 4ஆவது கஜபா படைப்பிரிவின் ​​கட்டளை அதிகாரி, படையணி கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, பலசேனா, சேனாங்க, பாதுகாப்புப் படை கட்டளை பதவி உள்ளிட்ட பதவி நிலை பதவிகள் மற்றும் பல்வேறு ஆலோசகர் பதவிகளையும் வகித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் பயிற்சி பாடநெறிகளைத் தொடர்ந்துள்ளார்.

லியனகே மனிதாபிமான நடவடிக்கையின் போது 57 மற்றும் 56ஆவது படையணிகளின் 8ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததோடு, புலிகளுக்கு எதிரான சமரில் பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். ரணவிக்ரம, ரணசூர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

பதவி துறந்த சவேந்திர சில்வாவுக்கு உயர் பதவியை வழங்கிய கோட்டா

பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று, (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா , இன்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துமிந்தவுக்கான பொதுமன்னிப்பை இடைநிறுத்தியது நீதிமன்றம்

வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவொன்றை இன்று (31) பிறப்பித்துள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக, ஹிருணிக்கா பிரேமசந்திர மற்றும் அவரின் தயாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணைகளைகளை அடுத்து இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் துமிந்த சில்வாவுக்கு உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதியால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடை மழை – 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் சீரற்ற வானிலை நிலவி வருவதன் காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமலின் மனைவி பிணையில் விடுவிப்பு!

இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்ச, சிறை அதிகாரிகளினால் இன்று(31) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து, முறையற்ற வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சஷி வீரவன்சவிற்கு 02 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த 27 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது.

21 ஆதரவு திரட்டுகிறார் டலஸ்!

உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு அனைத்துக் கட்சிகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்தகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் மக்கள் நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதற்கும் அத்துடன் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டும் அதற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ள அவர், 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அதற்கு சிறந்த ஆரம்பமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, தனிநபர் மற்றும் அரசியல் தேவைகளை முன்னிறுத்தி கடந்தகாலங்களில் அரசியலமைப்புகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு இது சிறந்த வாய்ப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘பணம் அச்சிட வேண்டாம்’

நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை இலக்கு வைத்து சமூக பாதுகாப்பு திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் அனைத்து அத்தியாவசியமற்ற செயற்திட்டங்களும் நிறுத்தப்பட்டு, அதற்கென செலவிடப்படும் பணத்தை குறுகிய காலத்தில் சமூக பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. வறுமையில் இருந்து விடுபடாமல் வாழ முடியுமா என்பதுதான் முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாழ முடியாத நிலையில் உள்ளனர். எரிபொருள் விலையுடன் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மாத சம்பளம் பெறுவோரின் கொடுப்பனவு அதிகரிக்கப்படாத நிலையில் அவர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.இலக்குசார்ந்த சமூக பாதுகாப்பு திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். உதவி வழங்க வேண்டிய குழுக்களை தெரிவு செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரச துறையில் குறைந்த வருமானம் பெறுவோர் உள்ளனர். தனியார் துறையிலும் அத்தகையவர்கள் உள்ளனர்.தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் தான் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.

பணம் அச்சிட்டதால் நெருக்கடி நிலை உயர்ந்தது. ஒன்றரை ரில்லியனுக்கு ​மேல் பணம் அச்சிடப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் மோசமான நிலையில் உள்ளனர். பணம் அச்சிடாது தேவையற்ற செலவுகளை குறைத்து அந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார்.

மாயமான மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு!

வவுனியா, கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து 16 வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.

குறித்த சிறுமி நேற்று மாலை காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதையடுத்து குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக கிண்ண போட்டிக்கு தெரிவாகிய வடக்கு வீரர்கள்!

இந்தியாவில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண மிக்ஸ் பொக்சிங் போட்டிக்கான தெரிவுப்போட்டியில் வவுனியா, கிளிநொச்சி [கிளி/மத்திய கல்லூரி மாணவி] மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த வீர வீராங்கனைகள், வெற்றிபெற்று உலகக் கிண்ண போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

சிறிலங்கா மிக்ஸ் பொக்சிங் அமைப்பின் ஊடாக இந்தியாவில் இடம்பெற்ற உலக கிண்ண மிக்ஸ் பொக்சிங் தெரிவுப் போட்டியில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள்.

இம் மாதம் 27ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமான தெரிவு போட்டிகள் 30 ஆம் திகதி நேற்றுடன் முடிவுற்றது. குறித்த போட்டியில் இலங்கை, இந்தியா, இத்தாலி நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தார்கள்.

இவர்கள் இப்போட்டியில் கிக்பொக்சிங் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளிப் பதக்கமும், மல்யுத்த போட்டியில் 2 வெள்ளி பதக்கங்களும் பெற்று மொத்தமாக 7 பதக்கங்களை பெற்று வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளனர்.

இப்போட்டியில் தங்க பதக்கத்தினை பெற்ற வீர, வீராங்கனைகள் உலக மிக்ஸ் பொக்சிங் சங்கத்தினூடாக 3 மாத பயிற்சியை இந்தியாவில் இருந்து பெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அங்கு இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர் .

ஆசிய மிக்ஸ் பொக்சிங் சங்கத்தின் தலைவரும் பயிற்றுனருமாகிய செல்வரத்தினம் நந்தகுமார் தலைமையில் குறித்த மாணவர்கள் போட்டிக்கு சென்று பதக்கங்களை பெற்றிருந்தனர்.

’21’ ஐ வைத்து மொட்டு கட்சியையும் இரண்டாக உடைக்கிறார் ரணில்!

அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தால் ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் வெவ்வேறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ச, பஸில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச உட்பட மொட்டு கட்சியின் பல எம்.பிக்களும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் உணவு பஞ்சம் என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

அவ்வேளையில் 21 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு முன்னர், பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும், அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

பொருளாதார பிரச்சினை தீர வேண்டுமெனில், அரசியல் உறுதிப்பாடும் அவசியம். எனவே, இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்கலாம் என மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனினும், உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. எதிர்வரும் வியாழன் அன்று, மொட்டு கட்சி எம்.பிக்கள், நிதி அமைச்சருடன், 21 தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளனர். அதன்பின்னரே கட்சியின் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என தெரியவருகின்றது.

21 ஊடாக பஸிலுக்கு முடிவு கட்டுவோம்!

” கப்புடா பஸில் நிதி அமைச்சராக இருந்தபோதுகூட நாம் அஞ்சவில்லை. தற்போது அவர் சாதாரண பஸில். நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை பலம் இருந்தாலும் ,21 ஊடாக அவரை வெளியேற்றுவோம்.”

இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

” 21 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பஸில் ராஜபக்சவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றி, நாட்டையும் நாடாளுமன்றத்தையும் பஸிலிடமிருந்து பாதுகாப்போம்.

நாடாளுமன்ற அதிகாரம் பஸிலிடம் இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், 21ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, இரட்டைக் குடியுரிமை
கொண்ட பஸில் ராஜபக்‌ஷவை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவோம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்கிற நம்பிக்கை எமக்கில்லை. ஆனாலும் நாடு குழியில் விழுந்துள்ளது. எனவே இப்போது கட்சி அரசியலை ஒருபுறம் வைத்துவிட்டு நாட்டைக் குழியிலிருந்து மீட்க வேண்டும்.

‘கோட்டா கோ கம’, ‘ரணில் கோ கம’ என்பற்றை ஒருபுறம் வைத்துவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் விரைவாக தேர்தலுக்கு செல்ல வேண்டும். தேர்தல் ஒன்று நடந்தால் யார் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

700 மில்லியன் டொலர் குறித்த இலங்கையின் அறிவிப்புக்கு உலக வங்கி மறுப்பு!

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளதாக சில அறிக்கைகள் வெளியாகியுள்ள நிலையில் அதனை மறுத்துள்ள உலக வங்கி, முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்கத் திட்டமிடவில்லை என நேற்று (30) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வௌயிட்டுள்ள மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் இயக்குநர் , உலக வங்கி குறிப்பிட்ட தொகை நிதி உதவியை வழங்குவதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

“குறிப்பாக அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக கொழும்பில் உள்ள உலக வங்கியின் முகாமையாளர் சியோ கண்டா கூறியதாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை
குறிப்பிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளஅவர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உடனடி நிவாரணங்களை உலக வங்கி வழங்கவுள்ளதாக அண்மைய அறிக்கைகளில் அவதானிக்க முடிகின்ற போதிலும் இது துல்லியமான அறிக்கை அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

” நாங்கள் இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். அத்துடன், அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். தற்போதுள்ள திட்டங்களில் இருந்து சில ஆதாரங்களை நாங்கள் மீண்டும் உருவாக்குகிறோம். மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறோம். கடந்த கால கொள்கைகளை மாற்றியமைக்க உதவுகிறோம். எனினும் போதுமான முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை” என்று அவர் கூறினார்.

இலங்கையை உலுக்கிய அட்டுலுகம கொலை – நடந்தது என்ன?

” பாலியல் தேவைக்காகவே சிறுமியை, மறைவான இடத்துக்கு இழுத்துச்சென்றேன். அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டார். விடயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால்தான் – சதுப்பு நீரில் அமுக்கி கொலை செய்தேன்.”

இவ்வாறு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் பண்டாரகம, அட்டலுகம பகுதியில் 9 வயது சிறுமியை கொலைசெய்த கொலையாளி.

29 வயதான இந்த சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மனைவி தற்போதும் கர்ப்பம் தரித்துள்ளார்.

மே 27 திகதி காலை முதல் காணாமல்போயிருந்த பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் சடலம் மறுநாள் சனிக்கிழமை (28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.

ஆயிஷா பாத்திமா எனும் குறித்த சிறுமி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவார்.

இவர் அட்டலுகம அல்கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார்.

சம்பவ தினத்தன்று கோழி இறைச்சி வாங்குவதற்காகவே, அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.

சிறுமி கடைக்கு வருவதை அவதானித்துள்ள கொலையாளி, அவர் வீடு செல்லும்போது மறைவான பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ளார்.

தனது தேவையை பூர்த்தி செய்ய இடமளிக்காது, சிறுமி தப்பிக்க முற்பட்டுள்ளார். இந்த விடயம் வெளியில் தெரியவந்துவிடும் என்ற அச்சத்தாலேயே சிறுமியை கொலை செய்தேன் என பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவரை இரு நாட்கள் தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவத்தின்போது தான் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியை கொலை செய்த சந்தேக நபருக்காக எவரும் முன்னிலையாவதில்லை என களுத்துறை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

காணாமல்போன சிறுமியை குறித்த சந்தேக நபரும் இணைந்து தேடியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.

ரயில் மோதி யாழில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அரியாலை, நாவலடியில் வசித்துவரும் 30 வயதுடைய மரியதாஸ் அரவிந்தன் என்ற நபரே இதன்போது பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.

அதேவேளை, குறித்த பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவை உள்ளது எனவும், அதனால் அப்பகுதியில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் இடம்பெறுகின்றன எனவும், தமக்குப் பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஊரவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

‘உணவு பாதுகாப்பு’ – ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச – தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

உரத் தேவையைப் பூர்த்தி செய்ய பல நாடுகளுடன் நடத்திய பேச்சு வெற்றியடைந்துள்ளது. எனவே உரத் தட்டுப்பாடு அல்லது வேறு எக்காரணம் கொண்டும் சிறுபோகத்தில் பயிர்ச் செய்கையை கைவிட வேண்டாம் என அனைத்து விவசாயிகளிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

இன்று (30) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உர இறக்குமதி, விநியோகம், முறையான முகாமைத்துவம், விழிப்புணர்வு, விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையில் ஒருங்கிணைப்பு என்பனவற்றிற்காக தேசிய உரக் கொள்கையொன்று உடனடியாக வகுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இரசாயன அல்லது சேதனப் பசளையைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விவசாய அமைச்சின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறுபோகத்தில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத வயல் நிலங்களைக் கண்டறிந்து, பயறு, கௌபி, சோயா உள்ளிட்ட அத்தியாவசியப் பயிர்களைப் பயிரிட ஊக்குவிப்பதன் மூலம், விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்கான வாய்ப்பை வழங்க முடியும். சோளம், சோயா மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக தேசிய கால்நடை வளங்கள் அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கந்தகாடு விவசாய நிலத்தை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

பயிரிடப்படாத நிலங்களில் பெரும் பகுதி அரசுக்குச் சொந்தமானது. அந்த நிலங்களை கண்டறிந்து இளம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது.

வீட்டுத்தோட்டம் மற்றும் அரச அலுவலக நிலங்களில் பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் முதல் அனைத்து அரச ஊழியர்களும் பங்களிப்புச் செய்து முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பயிரிடப்பட வேண்டிய பயிர்களை இனங்கண்டு, அனைத்து மாகாண ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு வாரம் ஒன்றை ஆரம்பிப்பதற்கும் விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில்களுக்கு மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை குறைபாடின்றி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

உரத் தேவையை இலக்காகக்கொண்டு எதிர்வரும் பெரும் போகத்திற்கு பொஸ்பரஸ் அடங்கிய உரங்களை உற்பத்தி செய்வதற்கு எப்பாவல பொஸ்பேட் வைப்புகளை உகந்த முறையில் பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்த கால்நடை தீவனம் வழங்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அறுவடைக்குப் பிந்திய சேதத்தைக் குறைத்தல், உணவைச் சிக்கனப்படுத்தல், உணவைச் சேமித்து வைத்தல், உணவைப் பதப்படுத்தல் மற்றும் விவசாய உற்பத்திகளின் பெறுமதியை உயர்த்தல், மாற்று உணவு வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் பிரபல்யப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, பயிர்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் களைகள், பூச்சி சேதங்களை தடுப்பதற்கு பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றும் விவசாய உற்பத்தி சார்ந்த சுயதொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் திரு.எம்.பி.ஆர். புஷ்பகுமார தெரிவித்தார்.