‘எரிபொருள் நெருக்கடி’ – யாழில் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்நிலை

எரிபொருள் நெருக்கடி காரணமாக, யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார்.

திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

” தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்ப்பாண மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. இதனால யாழ் மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய திண்மக் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்கப்பட்டது. இதற்கமைய யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட 27 வட்டாரங்களுக்கும் ஒரு உழவு இயந்திரம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு கழிவகற்றப்பட்ட போதும், தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் 9 உழவு இயந்திரங்களே திண்மக் கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

இது இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவத்தினை உருவாக்கியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு வீட்டிற்கு செல்லவேண்டும் என்கிற மாநகர முதல்வரின் கோரிக்கைக்கேற்ப புதிய நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியால் திண்மக் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

கழிவுகளை அகற்ற முடியாத நேரங்களில் யாழ் மாநகர சபைக்குட்பட்ட 9 இடங்களில் மக்கள் கழிவுகளை தரம் பிரித்துக் கொண்டு ஒப்படைக்கின்ற இடங்களாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். ஏதோவொரு வகையில் தங்களுக்கு அருகில் உள்ள இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் கழிவுகளை கொடுக்கமுடியும்.

இதனை சில நாட்களில் பத்திரிகை வாயிலாக பகிரங்கப்படுத்துவோம். காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செயற்படுத்தப்படவுள்ளது. எனவே இந்த இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவதற்காக மக்கள் பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும். அத்துடன் இயலுமான அளவிற்கு கழிவுகளை குறையுங்கள்.

மேலும் எமது ஊழியர்கள் ”பணம் தந்தால் தான் கழிவகற்றுவோம்” என அழுத்தம் கொடுத்தால் அதனை யாழ்.மாநகரசபைக்கு அறிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அவ்வாறு பணம் வாங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றார்.

0716390000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு இவை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றார்.

மேலும் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையை சேர்ந்த மேலும் நால்வர் படகு மூலம் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

6 வயது சிறுவன் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் மற்றும் ஒருவரும் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை சேர்ந்தவர்களே படகில் இன்று அதிகாலை நான்காம் மணல் திட்டை சென்றடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம், இராமேஸ்வரம் கரையோரப் பிரிவினர் அவர்களை மீட்டு விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் 96 பேர் கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தென்னிலங்கையில் பயங்கரம் – இன்றும் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்றைய தினமும் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொலன்னாவைச் சந்தியில் வைத்தே 38 வயதான நபரொருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், சந்தியில் நின்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு மொரட்டுவ பகுதியில் நேற்றைய தினமும் இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மே 30 திகதி முதல் இன்றுவரை இலங்கையில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

‘கோ ஹோம் கோட்டா’ – ஆட்டத்தை ஆரம்பித்தது சஜித் அணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி, ஜனாதிபதி மாளிகை வளாகம்வரை சென்றது.

ஜனாதிபதி மாளிகையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதித்தடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனால் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதிக்கு முன்பாகவே போராட்டம் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.

தற்போதைய அரசு பதவி விலக வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியருக்கு மறியல் நீடிப்பு

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியல் உத்தரவு தொடந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவ பரிசோதனையில், இரண்டு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

13 மற்றும் 17 வயதான மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதவானிடம் அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக மேலும் இரண்டு வழக்குகள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முல்லைத்தீவை சேர்ந்த 28 வயதான ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியருக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த மாணவர் ஒருவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளிடம் மேலும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதால், சந்தேகநபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் மேலதிக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் ஒருவர், திட்டமிட்ட வகையில் பாடசாலை மாணவிகளை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

மாணவர்கள், மாணவிகள் மத்தியில் காதல் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையிலான சூழலை ஆசிரியர் உருவாக்கியமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை ஆறு மாணவர்கள் ஊடாக சந்தேகநபரான ஆசிரியர் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மாணவிகளிடம் காண்பித்து அவர்களை சந்தேகநபர் அச்சுறுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தலுக்கு இலக்கான மாணவிகளை சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள நிலையில், அவர்களில் ஒரு மாணவி கடந்த வாரம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வௌிக்கொணரப்பட்டன.

குறித்த ஆசிரியர் மூன்று வருடங்களாக மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மீண்டெழும் – அமெரிக்கா நம்பிக்கை

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் (Julie Chung) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் திருமதி ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் இருந்து வருகை தந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்காகவும் மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வழங்கி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு வழங்கும் ஆதரவிற்காக ஜனாதிபதி தமது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் மீண்டு வருமென நம்புவதாகவும் திருமதி ஜூலி சன்ங் ,ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அநுர திஸாநாயக்கவும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

72 வயது முதாட்டியை வன்புணர்ந்த இளைஞருக்கு வலை!

சிலாபம் பகுதியில்  72 வயதான திருமணமாகாத வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞனை தேடி,  சி. சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் பொலிஸார்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி அதிகாலை இந்த பெண் தனியாக குடியிருந்த வீட்டுக்குள் நுழைந்த நபரொருவர், அவர்  நித்திரையில் இருக்கும் போதே முகத்தில் ஏதோ ஒரு பொருள் ஒன்றை பிடித்துள்ளார். 

இதனால் தான் மயங்கியதாகவும்,  அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என தெரியாதெனவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார். 

நித்திரையில் இருந்து எழுந்து பார்த்தபோது உடம்பில் வலி காணப்பட்டதாகவும்,  கட்டிலிலும் நிலத்திலும் இரத்தக்கறை காணப்பட்டதாகவும் அந்தப் பெண் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் குறித்த வயோதிபப் பெண்ணை சிலாபம் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

வைத்திய பரிசோதனையில் இந்தப் பெண் முதல் முறையாக வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என  வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்ததில் சந்தேக நபர் 20 இற்கும் 25 வயதுக்குமிடைப்பட்டவர் என பொலிஸார் இனம் கண்டுள்ளனர்.  

‘விரட்டும்வரை ஓயமாட்டோம்’

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும். அதுவரை நாம் ஓயபோவதில்லை. எமது ஆட்டம் தொடரும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க சூளுரைத்தார்.

” மக்களால் வீடு செல்லுமாறு வலியுறுத்தப்படுபவர்தான் கோட்டா, மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர்தான் ரணில், இவர்கள் இருவராலும் நாட்டை ஆள முடியாது, மக்களுக்கு நல்லதை செய்ய முடியாது.” – எனவும் அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

சர்வதேசம் எமது நாட்டுக்கு உதவும், ஆனால் எம்மை தூக்கிவிடாது. நாம்தான் எழ வேண்டும். அதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தேசிய மக்கள் சக்தி தயார். தேர்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை பொறுப்பேற்கவும் தயார்.” எனவும் அவர் அறிவிப்பு விடுத்தார்.

எரிபொருளை பதுக்கி வைத்தவர் மடக்கிப் பிடிப்பு!

கிராந்துரு கோட்டேயிலுள்ள வீடொன்றில் சுமார் ஒன்பது லட்ச ரூபா  பெருமதியான எரிபொருள், விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  

ஆயிரத்து 900 லீற்றர்  டீசல் , 19 லீற்றர்  பெட்ரோல் ஆகியன இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன், அவற்றை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர்,  கிராந்துருகோட்டே பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினரின் அரந்தலாவ முகாமுக்கு கிடைத்த தகவலொன்றை  அடுத்து இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எம்.பிக்களின் முகவரி திடீரென நீக்கம் – பாதுகாப்பு ஏற்பாடாம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களதும் விலாசம் மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்கள் நாடாளுமன்ற இணைய தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின்படி அவற்றை நீக்கியதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, நாடாளுமன்ற இணையதளத்தில் காணப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு கடந்த சில மாதங்களில் பல்வேறு நபர்கள் தொடர்பு கொண்டு அவர்களை சிரமப்படுத்தும் வகையில் பேசியதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மஹிந்த குறித்து வெளியான தகவல்!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என வெளியான தகவலை மஹிந்தவின் இணைப்பு செயலாளர் ஜி. காசிலிங்கம் நிராகரித்துள்ளார்.

அது உண்மைக்கு புறம்பான தகவல் என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது என இன்று காலை தகவல்கள் வெளியாகியிருந்தன.

‘எங்களுக்கு எதிராக பொருளாதார போரும் தொடுப்பு’

” இந்த அரசு எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு, பொருளாதார ரீதியிலும் எம்மை நசுக்குகின்றது.” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கான சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்டது.

1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையு்ம, கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குறிப்பிடுகையில், இந்த அரசு எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது. யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால் இன்று எரிபொருள், பசளை, உணவு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம்.

எமது பிள்ளைகளை காணாமல் செய்த கோட்டாவின் அரசு இன்று எமக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசம் தலையீடு செய்து எம்மையும், எமது பிள்ளைகளையும் மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று 1932 நாட்களாக தீர்வின்றி போராடி வருகின்றோம். இந்த நிலையில் எமது தாய்மார் அன்றாட உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை தொடராது எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும்.” என அவர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண் சபாநாயகர் தெரிவு!

பிரான்ஸின் வரலாற்றில் முதல் முறையாக நாட்டின் சட்டமன்றமாகிய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபைக்குத் தலைவராக-சபாநாயகராகப்- பெண் ஒருவர் தெரிவாகியிருக்கிறார்.

பிரான்ஸில் தேசிய சட்டமன்றத்தின் தலைவர்(National Assembly president) பதவி என்பது சிறிலங்கா போன்ற ஆசிய நாடுகளின் சபாநாயகர்(Speaker) பதவியை ஒத்ததாகும்.

தேர்தலுக்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று நடைபெற்றது. அச்சமயம் அவையின் தலைவர் தெரிவுக்கான ரகசிய வாக்கெடுப்பில் அதிபர் மக்ரோனின் கட்சியின் (Ensemble) உறுப்பினராகிய ஜாயல் புறுன் பிவே (Yaël Braun-Pivet) புதிய நாடாளுமன்றத்தின் பல கட்சி உறுப்பினர்களால் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 238 வாக்குகளைப்
வென்று தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

51 வயதுடைய ஜாயல் புறுன் பிவே (Yaël Braun-Pivet) பிரான்ஸின் பெண் பிரதமர் எலிசபெத் போர்னின் அமைச்சரவையில் கடல்கடந்த நிர்வாகப் பிராந்தியங்களுக்கான அமைச்சுப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.

பிரான்ஸின் Nancy இல் 1970 இல் பிறந்த அவர், 1930 இல் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து புலம் பெயர்ந்து பிரான்ஸில் குடியேறிய யூத இனப் பூர்வீகம் கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.
திருமணமாகிய அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

ஒரு குற்றவியல் சட்டவாளராக விளங்கிய போதிலும் அவர் தன்னார்வ அடிப்படையில் வறியவர்களுக்கு உணவூட்டும்”Resto du Coeur” என்ற தொண்டு உணவக நிறுவனத்தில் இணைந்துசேவையாற்றிவந்தார். சோசலிஸக் கட்சியின் நீண்டகால ஆதரவாளரான அவர் பின்னர் 2017 இல் மக்ரோனின் En Marché இயக்கத்தில் இணைந்து அரசியலில் பிரவேசித்திருந்தார்.

அரசியலில் எவ்வித அனுபவமும்
இல்லாதவராக 2017 தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்ட அவர் பாரிஸின் புறநகராகிய Yvelines தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். மக்ரோனின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட நாடாளுமன்றத்தில் சட்டக் குழுவின் தலைமைப் பதவி உட்படப்
பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த அவர், மிகக் குறுகிய காலத்திலேயே சபாநாயகர் ஸ்தானத்துக்கு உயர்ந்துள்ளார்.

“நாடாளுமன்றம் நாட்டின் முகம் போன்றது. அது விவாதங்கள் புரியும் இடம். சண்டை செய்யும் களம் அல்ல. ஒன்றிணைந்து செயற்படவே நாட்டுமக்கள் எங்களை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்” என்று
நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜாயல் புறுன் பிவே அவையில் கூறியிருக்கிறார்.

-பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

”மரண பீதியுடன் தினமும் பயணம்’ – என்றுதான் தீர்வு கிட்டும்?

கொக்கிளாய் கடல்நீரேரிக்கான பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளமையால் இரண்டு மாவட்டங்களின் எல்லைக்கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தையும் – கிழக்கு மாகாணத்தையும் பிரித்து நிற்கும் கொக்கிளாய் கடல் நீரேரி ஊடாக பாலம் நிர்மாணிக்கும் செயற்திட்டம் பல ஆண்டுகளாக பேச்சளவிலேயே உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியையும் ஊடறுத்துள்ள கொக்கிளாய் கடல்நீரேரியை இணைத்து பாலமொன்றினை அமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தையும், திருகோணமலை மாவட்டத்தையும் இணைக்கும் முகமாக முல்லைத்தீவு – கொக்கிளாய் வீதியையும் (டீ 297), புல்மோட்டை – திருகோணமலை வீதியையும் (டீ 424) இணைத்து கொக்கிளாய் கடல்நீரேரி ஊடாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் இரண்டு மாவட்டத்திற்கும் இடையிலான பிரயாண தூரம் சுமார் 60 கிலோமீற்றர் வரை குறைவடையும்.

கடந்த 2017.09.04 ஆண்டு அப்போதைய தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னுரிமையளிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அதில் முல்லைத்தீவையும் திருகோணமலையையும் இணைக்கும் கொக்கிளாய் களப்பு பாலமும் புனரமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் கடந்த 2018.07.-10 ஆம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதும் கூட பாலம் அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கு 2016ஆம் ஆண்டில் மேற்கொண்ட தீர்மானத்தை அமைச்சரவை அங்கீகரித்திருந்தது.

செக் குடியரசு. . Bilfingrmceslanysto என்ற நிறுவனத்திடம் 48 மில்லியன் யூரோக்களுக்கு வழங்குவதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் அன்றைய பிரதமரும் தற்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் சமர்ப்பித்த கூட்டு பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது

பின்னர் மீண்டும் 2019. -02. -12 அன்று அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சு, கொக்கிளாய் பாலம் அமைப்பதற்கு 09 பில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் , அதேவேளை 41.5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தது.

எனினும் இதுவரையில் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் ஒரு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து செல்ல வேண்டிய மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் சுமார் 60 கிலோ மீற்றர் தூரத்தை சுற்றிச் சென்று கடந்து செல்ல வேண்டிய நிலையிலும் ஆபத்தான கடற்பயணத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்

குறிப்பாக கொக்கிளாய் கொக்கு, தொடுவாய் கருநாட்டுக் கேணி போன்ற பகுதிகளிலுள்ள மக்கள் மீனவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் பாடசாலை மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பஸ் கட்டணம் உயர்வு!

நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணம் 20 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 32 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வருடாந்த பஸ் கட்டண மறுசீரமைப்புக்கு அமையவே தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

கடந்த 7 மாதங்களுக்குள் 5 தடவைகள் பஸ் கட்டணம் அதிகரித்துள்ளது.

அரசுமீது மக்கள் கொதிப்பு – கோட்டா பதவி விலகாவிட்டால் ஆபத்து!

நாட்டு மக்கள் அரசுமீது கடும் கோபம் கொண்டுள்ளனர். பொறுமையிழந்துள்ள மக்கள் எடுக்கும் தீர்மானங்களால் மீண்டுமொரு கறுப்பு ஜூலை பதிவாகக் கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசைவலியுறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் மாத்திரமே நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ள சாபம் நீங்கும். தற்போது கிணற்றுக்குள் வசிப்பது எவ்வாறு என்பதை அரசு கூறிக் கொண்டிருக்கிறது.
ஆனால் மக்களின் தேவை அதுவல்ல. கிணற்றுக்குள்ளிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

அதற்கு கோட்டாபய தலைமையிலான அரசுபதவி விலகி தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் சர்வகட்சி அரசை அமைக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் , எவ்வித சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை. மக்கள் பொறுமையிழந்துள்ளனர். மதத் தலைவர்களுக்கு கூட கட்டுப்படும் நிலைமையில் அவர்கள் இல்லை. ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்திலுள்ளனர்.

மக்கள் அடுத்து என்ன தீர்மானத்தை எடுப்பார்கள் என்று கூற முடியாது. அடுத்த மாதம் கறுப்பு ஜூலையாக பதிவாகக் கூடிய நிலைமையே காணப்படுகிறது. இதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று அரசை வலியுறுத்துகின்றோம்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களிலிருந்தும் கூட இந்த அரசு பாடத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆட்சியாளர்களை பதவி விலக்குவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையுடனான நட்புறவில் இல்லை. அதனை மீண்டும் புதுபிக்க வேண்டும். அதற்கான இயலுமை இந்த அரசிடம் இல்லை – என்றார்.

மத்திய வங்கி ஆளுநருக்கு ரணில் பச்சைக்கொடி!

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நந்தலால் வீரசிங்கவை நியமிக்குமாறு பரிந்துரை செய்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக பணிபுரிந்த நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இன்று ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதையடுத்து மீண்டும் அவரை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு பிரதமர் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் வீரசிங்கவை மீண்டும் நியமிப்பதற்கு நிதியமைச்சரின் பரிந்துரை தேவைப்படுவதால் நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நந்தலால் வீரசிங்கவை மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

எரிபொருள் வரிசை மோசடிகளும் தொடர்கின்றன

பெற்றோல் தருவதாக கூறி 10 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த நபரை, எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனெல்ல மாஜிஸ்திரேட் நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.

கொரியாவில் வருடக்கணக்காக தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய நபரொருவர், கடந்த 24ஆம் திஙதி மாவனெல்ல நகரில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார்.

அங்கு நின்ற நபரொ ருவர் தம்மிடம் 10 லீற்றர் பெற்றோல் இருப்பதாகவும் விரும்பினால் பத்தாயிரம் ரூபாவுக்கு அதை விற்பனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வரிசையில் நிற்பதை விட அதிகவிளனலைக்கேனும் எரிபொருளை கொள்வனவு செய்ய தீர்மானித்த கொரியாவிலிருந்து திரும்பி நபர் ,சந்தேக நபரின் வழிகாட்டலுடன் மாவ னெல்ல, நாதெனிய பிரதேசத்துக்கு பிளாஸ்டிக் கொள்கலன் ஒன்றுடன் சென்றுள்ளார்.

அங்கு சந்தேகநபர் கொரிய நபரிடமிருந்து பத்தாயிரம் ரூபாவையும் பிளாஸ்டிக் கொள்கலனையும் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்தும் அந்த நபர் திரும்பி வராததால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக அறிந்து கொண்டு மாவனெல்ல பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இனம் கண்ட அந்த நபரை கைது செய்தனர்.

இனியும் பொறுமை காக்க மாட்டேன் – வடக்கு ஆளுநர் எச்சரிக்கை

.”பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களத் தலைவர்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கை தொடர்பில் இதுவரை தீர்வுகள் முன்வைக்காத அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இனியும் பொறுமை காக்க மாட்டேன்.”

இவ்வாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ் அறிவித்துள்ளார். ஆளுநரால் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” வடக்கு மாகாணத்தில் பொதுமக்கள் சேவையை அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் பொதுமக்கள் தமது தேவையை திருப்திகரமாக பெற்றுக் கொள்ளாமை மற்றும் அமைச்சுக்கள் திணைக்களங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தான்றோன்றித்தனமான செயற்பாடுகள் தொடர்பிலும் பல முறைப்பாடுகள் எனக்கு நேரடியாக கிடைக்கப்பெற்றன.

அவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சிலவற்றுக்கு இதுவரை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்காமை தொடரில் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அரச சுற்று நிருபங்களுக்கு அமைவாக முறைப்பாடு வழங்கும் நபர் ஒருவருக்கு உரிய காலப் பகுதியில் தீர்வை முன்வைக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும்.

அரச நிர்வாகம் பொது மக்களின் தேவைகளை இலகுபடுத்துவதற்காக கட்டியமைக்கப்பட்ட ஸ்தாபன அமைப்பாக காணப்படுகின்ற நிலையில் அதன் ஊடாக பொதுமக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் போதே குறித்த ஸ்தாபனம் மக்களின் நம்பிக்கையை வென்றதாக அமையும்.

வட மாகாணத்தில் செயற்பாடின்றி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் எந்த ஒரு நிர்வாக கட்டமைப்பையும் ஆளுநர் என்ற நீதியில் அனுமதிக்கப் போவதில்லை. ஆகவே தான் வடக்கு மாகாணத்தில் இதுவரை அமைச்சுகள் திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு முன் வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.” என்றுள்ளது.

எமனானது பெற்றோல் – விளக்கேற்றிய பெண் உடல் கருகி பலி! திருமலையில் சோகம்!!

திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சிளை வீசியுள்ளார். அது சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலன்மீது விழுந்ததையடுத்து தீப்பற்றியுள்ளது.

இதனால் அவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி, உடல் கருகி பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.